Tuesday, July 31, 2012

எல்லோரும் கவிஞர்களே (2)

சீர்மிகு கவிகள் யாக்க
சிந்தனை அதிகம் வேண்டாம்
கூர்மதி அதுவும் வேண்டாம்
குழப்பமும் சிறிதும் வேண்டாம்
யாரெது சொன்ன போதும்
அசந்து நீ போக வேண்டாம்
நேர்வழி அதற்கு உண்டு
புரிந்திடச் சொல்வேன் கேளாய்

உயிரது இல்லா தேகம்
பிணமென பெயரைப் பூணும்
அரிசியே இல்லா நெல்லோ
பதரென இழிசொல் காணும்
குயிலதன் குரலில் தேனாய்
குழைந்திடும் இனிமை போல
கவிதனை சிறக்கச் செய்ய
கருவதே உயிர்போல் வேண்டும்

மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்
நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும்

தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக க் கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்

மீள்பதிவு

Monday, July 30, 2012

எல்லோரும் கவிஞர்களே

சின்னப் பொண்ணு செல்லப் பொண்ணு
உன்னைத் தாண்டிப் போனா
உன்னைத் தாண்டும் கன்னிப் பொண்ணும்
கண்ண டிச்சுப் போனா
மண்ணை விட்டு விண்ணில் நீயும்
தாவி ஏற மாட்டியா-அந்த
கம்ப னோட மகனைப் போல
மாறிப் போக மாட்டியா

இனிய நினைவில் தனித்து இரவில்
மகிழ்ந்து நிற்கும் போது
குளிந்த நிலவும் மனதைத் தடவி
கொஞ்சிச்செல்லும் போது
உலகை மறந்து உன்னை மறந்து
உயரப் பறக்க மாட்டியா-அந்த
உணர்வை கவியாய் சொல்ல நீயும்
முட்டி மோத மாட்டியா

வலிமை இருக்கும் திமிரில் ஒருவன்
எல்லை மீறும் போது
எளியோன் தன்னை எட்டி உதைத்து
பலத்தை காட்டும் போது
உதிரம் கொதிக்க கண்கள் சிவக்க
புலியாய் சீற மாட்டியா-அந்த
வலியைச் சொல்ல நாலு வரிகள்
நீயும் எழுத  மாட்டியா

கண்ணில் காணும் காட்சி எல்லாம்
கனவு போலத் தானே
தண்ணீர் மேலே போட்ட கோலம்
தானே வாழ்வு தானே
உண்மை இதனை உணர்ந்து கொண்டால்
முதிர்ச்சி கொள்ள மாட்டியா-அந்த
ராமா நுஜர் போல  நீயும்
உரத்துக்  கதற மாட்டியா

விதையாய் கவிதை அனை வரி டத்தும்
வீணே  கொட்டிக் கிடக்குது
விரைந்து வெளியே  விளைந்து வரவே
நாளும் ஏங்கித் தவிக்குது
உணர்வைச் சொல்லில்  குழைத்துப் பார்க்கும்
நுட்பம் புரியத் துவங்கிடில்  -உனது
உதடு உதிர்க்கும் எல்லா சொல்லும்
கவிதை என்றே ஆகுமே


மீள்பதிவு

Saturday, July 28, 2012

ஆண்டவன் பிரச்சனை

இருக்கிறது என்பதுவும் பிரச்சனையில்லை
இல்லையென்பதுவும் பிரச்சனையில்லை
இருக்கிறது என்ச் சொல்லிப் பிழைப்பதுவும்
இல்லையெனச் சொல்லிப் பிழைப்பதுவும்தான்
இப்போது இங்கே பிரச்சனை

நம்புவதும் ஒன்றும் பிரச்சனையில்லை
நம்பாததும் ஒன்றும் பிரச்சனையில்லை
நம்புபவன் நம்பாதவனை முட்டாள் என்பதுவும்
நம்பாதவன் நம்புபவனை முட்டாள் என்பதுவும்தான்
இப்போது இங்கே பிரச்சனை

கோவில் சன்னதி பக்தி முதலான
நம்பிக்கைகள் கூட பிரச்சனையில்லை
நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருக்கவேண்டியவனே
சன்னதிக்குள் லீலைபுரிவதே பிரச்சனை

பகுத்தறிவு மூட நம்பிக்கை ஒழிப்பு முதலான
பிரச்சாரங்கள் கூட பிரச்சனையில்லை
பிரச்சாரம் செய்பவனே த்ன் வீட்டிற்கு அது
பொருந்தாது என்பதுதான் பிரச்சனை

போற்றிப் புகழ்ந்தால் அள்ளி வழங்கவோ
தூற்றித் திரிந்தால் தீமை புரியவோ
ஆண்டவன் மனிதன் இல்லை
அவன் கதிரவனைப் போல் பொதுவானவன்

நோயுள்ளவனை நடுங்கச் செய்தும்
பலசாலியை மகிழச் செய்தும்  போகும்
தென்றல் இரண்டாக இல்லை
அதுவும்  நிலவைப் போல் பொதுவானதே

மொத்தத்தில்
பிரச்சனைகள் எதுவும்
ஆண்டவனால் சிறிதும் இல்லை
சித்தத்தில்
இதனைக் கொண்டால் இங்கே
இத்தனை பிரச்சனை இல்லை

Wednesday, July 25, 2012

வயதும் அனுபவமும்

படித்தவன் எல்லாம் புத்திசாலி இல்லை
கருத்தூன்றி கவனமாய்
பாடத்துடலில் ஒளிந்திருக்கும் ஜீவனை
உணர்ந்து தெளிந்தவனே புத்திசாலி

வயிறு முட்டவிழுங்கி
முழு ஏப்பம் விடுபவனெல்லாம்
உண்ணத் தெரிந்தவன் இல்லை
ஒவ்வொரு கவளத்தையும்
சுவைத்து ரசித்துச்  சிலிர்ப்பவனே
நிஜமான ரசிகன்

இருபதாண்டுக் காலம்
செக்கினைச் சுற்றுகிற மாட்டுக்கு
எத்தனைபடி எள்ளுக்கு
எத்தனைபடி எண்ணையென
தெரியவா செய்யும் ?

கங்கைக் கரையோரம்
பல்லாண்டு  நனைந்து கிடக்கும் பாறைக்கு
கங்கையின் புனிதம்
புரியவா செய்யும்?

நெடுங்காலம் வாழ்ந்தவனெல்லாம்
அனுபவஸ்தன் இல்லை
காற்றோ மழையோ
பாலையோ சோலையோ
அந்த அந்த நொடியில்
எதையும்அனுபவித்துத் தெளிபவனே
அனுபவஸ்தன்

ஏனையோரெல்லாம்
வெ ற்று எண்ணிக்கையைத்
தகுதியாய்ச் சுமந்து திரிந்து
பெருமிதம் கொள்பவர்களே
நடமாடும் பெருஞசுமைகளே

Tuesday, July 24, 2012

பிர சவ சங்கல்பங்கள்


த ன்னைப் பாதிக்கிற
ஒவவொரு நிகழ்வும்
ஒவவொரு உணர்வும்
கருவாகி
அவனுள் வளர்ந்து
கவியாக வரும் வரை
கவிஞன் படும் பிரவச அவஸ்தை
அவன் மட்டுமே அறிந்தது
ஆயினும்
கருவானது கவியாகி
கால் கொண்டு நடக்கையில்
அது தரும் அவஸ்தை
அது கூட அவன் மட்டுமே அறிந்தது

இளைஞர்களை கொள்ளை கொண்ட
'இழந்த காதலை'
இயற்றிய அவனே
மறந்து போன நிலையில்
கவிஞனின் மனைவி ஒரு நாள் கேட்டாள்
'யார் அந்த அழகு சுந்தரி
இப்பொது கூட விலகி கொள்கிறேன்
இடைஞ்சலாக இருக்க மாட்டேன்' என
கண் கசக்கிப் போனாள்
இந்தப் பிரச்சனை ஒயவே
ஆறு மாதங்கள் ஆகிப்போனது

'நண்பனின் நயவஞ்சகம்'
கவிதை வெளிவந்த பின்னே
கவிஞனின் நெருங்கிய நண்பன்
தொடர்பு எல்லையை விட்டு
தொலைந்தே போனான்
அதற்கான காரணம்
இதுவரை
கவிஞனுக்கு விளங்கவே இல்லை

'சம்பந்திகளின் தர்பார்'
கவிதைக்கு பின்னே
மாப்பிள்ளை முகம் கொடுதது பேசுவதே இல்லை
'தவறினை நேரடியாகச் சொல்லியிருக்கலாம்
கவிதையாக்கி அசிங்கப் படுத்தியிருக்க வெண்டாம்' என
சொல்லி போன சம்பந்தி
கவிஞனின் வீட்டுப் பக்கம்
இன்று வரை வரவே இல்லை

முத்தைக் கொண்டு
கடற் பரப்பைக் கூட
அளந்து அறியக் கூடும்
படைப்பைக் கொண்டு
படைப்பாளியை அறியக் கூடுமோ?

கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
கவிதைகள் நீர்த்துப் போகும்
கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்

ஆனாலும் என்ன
கவிஞனை பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன

Sunday, July 22, 2012

கற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு-(7)

தனது மனம் கவர்ந்தவர்களுக்கு
ஒரு வலிமைமிக்க குதிரையினைக் கொடுத்து
மாலைக்குள் உன்னால் எவ்வளவு தூரம்
சவாரி செய்து போக முடியுமோ
அவ்வளவு தூரம் போய் அந்தப் பகுதி
முழுவதையும்எனது கொடையாக
உனக்கு எடுத்துக் கொள் என
பண்டை மன்னர்கள் சொல்வார்கள் என
கேள்விப்பட்டிருக்கிறேன்

அதைப்போல

தமிழ் மண நிர்வாகிகள் என்னையும்
ஒரு பொருட்டாக மதித்து ஒரு வாரம்
நட்சத்திரப் பதிவராக இருக்கப் பணித்ததையும்
அதன் காரணமாக எனக்குக் கிடைத்த
நான்கு முத்தான நண்பர்களையும்
600 புதிய பார்வையாளர்களையும்
ஏறக்குறைய 3500 பக்கப் பார்வைகளைப்
பெற்றதையும் நான் பெரும் பேறாகக்
கருதுகிறேன் அதற்குக் காரணமாக இருந்த
.தமிழ்மண நிர்வாகிகளுக்கு எனது
மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கிறேன்

நட்சத்திரப் பதிவராகத் தேர்ந்தெடுக்கப்
-பட்டவுடன் எப்படிச் செய்தால் சரியாக
சிறப்பாகச் செய்யமுடியும் என மூத்த பதிவர்
திரு.கோவி. கண்ணன் அவர்களைத் தொடர்பு
கொண்டபோது ஒரு சரியான வழியைச் சொன்னார்
அது எனக்கு மிக்க பயனுள்ளதாய் இருந்தது
அவருக்கும் எனது பணிவான நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறேன்

தொடர்ந்து எனக்கு பின்னூட்டமிட்டும்
வாக்களித்தும் என்னை உற்சாகப்படுத்திக்-
-கொண்டிருக்கும் சக பதிவர்கள் அனைவருக்கும்
என மனமார்ந்த நன்/றியைத் தெரிவித்து
எனது நட்சத்திர வாரத்தை நிறைவு
செய்கிறேன்

தொடர்ந்து  வழக்கம்போல் பதிவில்
நம்  அனபான உறவினைத் தொடர்வோம்

பதிவர்களாகிய நாம் 


இலக்குகளை....

எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்
நமக்கு
தேங்கி நிற்கவோ
சோர்ந்து சாயவோ
தோன்றுவதில்லை எப்போதும்.

சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்
நமக்கு 
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை எப்போதும்.

விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
ந ம் 
வெற்றிக்கு தடையேதும்
வருவ  தில்லை எப்போதும்.

Saturday, July 21, 2012

கற்றுக் கொண்டவைகள்- பிரதானப் பதிவு 6 (தொடர்ச்சி )

இதில்  இவ்வளவு இருக்கா (2)

தனது இயக்கத்தில் வெளிவந்த ஆண்டவன் கட்டளைத்
திரைப்படத்தில்   தனது பெயரை
போக்குவரத்து போலீசின் கையில் இருக்கும்
ஸ்டாப் என்கிற காட்டியில் போட்ட காரணம்
எதுவாக இருக்கும் என இயக்குனர் சங்கர் அவர்கள்
 கேட்ட கேள்விக்கு நானும் பல நிமிடங்கள்
யோசித்துப் பார்த்தேன்.உண்மையில்காரணம்
விளங்கவே இல்லை
பின் அவரே விளக்கத் துவங்கினார்

"இந்தப் படத்தில் ஒவ்வொரு துறையிலும்
சிறந்து விளங்கும் ஜாம்பவான்களுடன் நான்
இயக்கு நராகப் பணியாற்றினேன்

ஒரு ப்ரொஃபஸரின் நடை உடை பாவனைகள்
எப்படி இருக்கும் என நடிகர் திலகம் அவர்களுக்கு
நான்  விளக்கவேண்டியதில்லை
அவருக்கு என்னைவிட நிறையத் தெரியும்
ஆனால் என் கதாபாத்திரத்திற்கு எவ்வளவு வேண்டும்
எவ்வளவு போதும் எனபது எனக்குத்தான் தெரியும்

அதேபோலத்தான் இசை பாடல் குறித்தும்
விஸ்வனாதன் அவர்களைப் போல எனக்கு
இசை அறிவும் கிடையாது
கண்ணதாசன் அவர்களைப் போல
தமிழறிவும் கிடையாது
ஆனாலும் இந்தப் படத்திற்கு இந்த மாதிரி
பாடல் இருந்தால் இந்த உணர்வைக் கூட்டிச்
சொல்லும்படியாக இசை இருந்தால்
சரியாக இருக்கும்என்பது எனக்குத் தான் தெரியும்
இப்படித்தான் கேமராமென்,எடிட்டிங் என
எல்லா துறைக்கும்.

எப்படிச் சாலையைக் கடந்து செல்லுகிற
எத்தனையோ வகையான வண்டிகளில்
ஒரு போக்குவரத்துப் போலீஸுக்கு
எதையுமே ஓட்டத் தெரியாது போனாலும் கூட
சுகமாய்ப் போய்ச் சேர எல்லோரும்
எப்படிப் போகவேண்டும் எப்படிப் போகக் கூடாது
என்பதை மிகச் சரியாகச் சொல்லத் தெரியுமோ
அப்படித்தான் இயக்கு நர் பணியும்

எப்படிப்பட்ட ஜாம்பவன்களாக இருந்தாலும்
அவர்களின் திறமைகளில் சிறிதும்
நம்மிடம் இல்லையென்றாலும் கூட
அவர்களது திறமையை எப்படி சில
இடங்களில் கூடுதலாக பயன்படுத்த வேண்டும்
சில இடங்க்களில் குறைவாகப்
பயன்படுத்த வேண்டும் என்பது
இயக்கு நருக்குத்தான் தெரியும்

அதை ஒரு குறியீடாகச் சொல்லத்தான்
அப்படி அந்த போக்குவரத்துப் போலீஸின்
ஸ்டாப் காட்டியில் குறிப்பிட்டேன் "என்றார்

உண்மையில்  படத்தில் ஒரு நிமிடத்தில்
கடந்து போகும் ஒரு சாதாரண காட்சிக்குள்
இத்தனை அர்த்தம் இருப்பதை அவர்
சொல்லிப் போனதும் உண்மையில்
நான் மிரண்டுதான் போனேன்

இவ்வளவுக்குள் இவ்வளவா  என்கிற மலைப்பு
இன்றுவரை என்னைவிட்டு நீங்கவே இல்லை