Wednesday, October 31, 2012

வரம் வேண்டா தவம்

என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும் 
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணியும்
என்னைவிட்டு  நகர்வதில்லை

வரம்வேண்டா தவமாக
தினமெழுத்தில் கரைவதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

Sunday, October 28, 2012

நாம் ஏன் பதிவர்களாய்த் தொடர்கிறோம் ?

கோழையை வென்று
வீரனெனப் பெயர் பெறுவதைவிட
வீரனிடம் தோற்றுக் கோழையெனப்
பெயர் பெறுவது சிறந்ததாகப் படுகிறது

கஞ்சன் தரும்
வள்ளல் பட்டத்தை விட
வள்ளல் தரும் கஞ்சன் பட்டம்
கொஞ்சம் உயர்ந்ததாகத்தான் படுகிறது

முட்டாளிடம் பெறும்
அறிஞன் பட்டத்தை விட
அறிஞன் தரும் முட்டாள் பட்டம்
கூடுதல் மகிழ்வளிக்கத்தான் செய்கிறது

நல்லவன் என
அயோக்கியன் தரும்.சான்றிதழை விட
அயோக்கியன் என நல்லவன் தரும் சான்று
கொஞ்சம் பெருமைகொள்ளத்தான் செய்கிறது

சராசரி வாசகன் தரும்
கவியரசுப் பட்டத்தை விட
பதிவர்கள் தரும் மொக்கைப் பட்டம்-=நமக்கு
அதிகப் பரவசம் தந்துதான் போகிறது
 

Friday, October 26, 2012

அந்தப்புரங்களில் கிரீடம் தவிர்த்தல்....

 எதிர்படும் பெரும்பாலோரின் தலைகளிலும்
அவரவர் தகுதிக்குத் தக்கபடி
தகரம் முதல் தங்கம் வரையிலான
நீண்டு உயர்ந்த கிரீடங்கள்

பிறர் செய்து தராது
அவரவர்களாக செய்து கொண்டதால்
அனைத்துக் கிரீடங்களும்
தலைக்குச் சிறிதும் பொருத்தமின்றி
மிகப் பெரியதாகவே ....

கண்களை மறைப்பதை தவிர்ப்பதற்காகவும்
கழுத்தில் விழுவதை தடுப்பதற்காகவும்
இரு கைகளாலும் கிரீடத்தை இறுகப் பற்றியபடி
வாழ்வின் சுமை குறைக்கும் சூத்திரம் தேடி
எல்லோரும் செக்குமாடாய்த் திரிகின்றனர்
சுமை அந்தக் கிரீடமே என அறியாமலேயே...

கிரீடத்தில் கொண்ட அதீத கவனத்தில்
இடுப்பு வேட்டி அவிழ்ந்ததும் தெரியாது
அடுத்தவர்களின் அம்மணம் கண்டு
முகம் சுழித்தபடி மிகச் சலித்தபடி
வாழ்வின் சுகம் தேடி 
எப்போதும் பந்தயக் குதிரையாய்  பறக்கின்றனர்
சுகம் என்பது கிரீடம் தவிர்தலே எனப் புரியாமலே

தர்பார் மண்டபங்களில் கிரீடம் தரித்தலும்
அந்தப் புரங்களில் கிரீடம் தவிர்தலுமே
சுமையின்றி சுகம்பெறும் ரகசியம் என்பதை
புரிந்த சிலர் மட்டுமே உலகில்
வாழத் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள்
வாழ்வைப் புரிந்தவர்களாயும் இருக்கிறார்கள்

Thursday, October 25, 2012

பெண்ணே நீ புதிராகவே இரு

காலங்காலமாய்
இப்போதிருப்பதைப் போலவே
பெண்ணே நீ
எப்போதும்
புதிராகவே இரு
ஒப்பிட முடியாத
உன்னதமாகவே இரு

உணர்வின் வெளிப்பாடு ஒலியிலிருந்து
மொழியாகிய காலம் முதல்

எண்ணத்தின் விரிவு கனவாகி
கற்பனையாகிய நாள் முதல

உன்னை அடைதலே வெற்றியின்
அடையாளமெனக் கொண்ட கணம் முதல்

வாள்வீச்சு சாதிக்காததை சொல்வீச்சு
சாதிக்குமென்பதைக் கண்ட நொடி முதல்

முகமது நிலவென இதழது மலரென
கார்மேகம் குழலென சங்கதே கழுத்தென

இயற்கையில் துவங்கி

டெலிபோன் மணியென மெல்போர்ன் மலரென
ஃபிஃப்டி கேஜ் தாஜ்மகாலென நடமாடும் சாக்லேட் என

இன்று எதிர்படும் உன்னதங்களுடனெல்லாம்
 
சலியாது ஒப்பிட முயன்றும்
எதனுள்ளும் அடங்காது திமிறும்
உன்னதமே,எழிலே,அற்புதமே,ஆனந்தமே

எப்படி முயன்றபோதும்
ஏன்   விரும்புகிறாய்
எதற்காக வெறுக்கிறாய்
ஏன்  அரவணைக்கிராய்
எதற்காக  கழுத்தறுக்கிறாய்

 என   எவராலும்  எப்போதும்

புரிந்து கொள்ள இயலாத
ஆழ்கடல் அதிசயமே
பூவுலக ரகசியமே
சூட்சுமப் பெட்டகமே

நீ புரிந்து போனால்
வாழ்வின் சுவை குன்றிப் போகும்
உன்னை மிகச் சரியாக ஒப்பிட முடிந்தால்
எங்கள் கற்பனைகள் வறண்டு போகும்

எனவே
என்றும் போல
எப்போதும்போல
பெண்ணே நீ
புதிராகவே இரு
மனிதர்கள் எல்லாம் உன்னைப் புரிய முயன்று
வாழ்வை சுவாரஸ்யப்படுத்திக் போகிறோம்
தனித்துவமாகவே இரு
உன்னை ஒப்பிட முயன்று என்போல்
சராசரிகள் கூட கவிஞராகிக் போகிறோம்

Tuesday, October 23, 2012

மங்கையரைக் கௌரவிக்கும் திரு நாள்


மரத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும்
ஆணிவேர்தான் காரணம்
என்பதை விவசாயிக்கு விளக்க வேண்டியதில்லை

மாளிகையின் நிலைப்புக்கும் உறுதிக்கும்
அஸ்திவாரம்தான் முழுக்காரணம் என்பதை
எந்த பொறியாளருக்கும  
விளக்க வேண்டியதில்லை
இச்சமூகத்தின் வளச்சிக்கும் மேன்மைக்கும்
பெண்கள்தான் காரணம் என்பதை
இந்தியாவில் எவருக்கும் யாரும்
விளக்கவேண்டிய அவசியமே இல்லை

ஏனெனில் இதனை ஆதியிலேயே
 மிகத் தெளிவாக அறிந்திருந்தனால்தான்,

படைக்கும் பிரம்மனுக்குத் துணையாக
கலைக்கும் கல்விக்குமான கலைமகளை
துணையாக்கி மகிழ்ந்திருக்கிறான்

காக்கும் திருமாலுக்கு இணையாக
கருணையும் செல்வத்திற்குமான திருமகளை
துணைவியாக்கி குதூகலித்திருக்கிறான்

அழிக்கும் ருத்திரனுக்கு இணையாக
ஆக்ரோஷமும் சக்தி மிக்கவளுமான மலைமகளை
இணையாக்கி இன்பம் கொண்டிருக்கிறான்

கலைமகள் துணையற்று படைத்தலும்
திருமகள் கருணையற்று காத்தலும்
சக்தியின் அருளற்று அழித்தலும்
ஆகாத ஒன்று என அறிந்ததால்தான்
முப்பெரும் தேவியரை பிரதானப் படுத்தி
ஒன்பது இரவுகளை தேர்ந்தெடுத்து
 நவராத்திரியாக கொண்டாடியும்  மகிழ்ந்திருக்கிறான்
நாமும் தொடர்ந்து கொண்டாடி மகிழ்கிறோம்

அதைப் போன்றே  குழந்தையாய் முழுமையாக
அவளைச்  சார்ந்திருக்கும் நாளில்
அன்பின் மொத்த வடிவாக  அன்னையாக

கணவனாக அவளுக்கு இணையாக
சேர்ந்திருக்கும் நாளில் பின்னிருந்து இயக்கும்
 சக்தியாக தாரமாக

வயதாகி சக்தியிழந்து ஓய்ந்துச் சாய்கிற நாளில்
அனைத்துமாய்  தாங்கும் அன்புமிக்க மகளாக

 மண்ணகத்தில் மங்கையர் எல்லாம்
கண்கண்ட முப்பெரும் தேவியராய்த்
திகழ்வதாலேயே மங்கையரைக் கௌரவிக்கும்
நாளாகவே இந்த நவராத்திரித் திரு நாளைக் கொண்டாடி
 நாமும் மகிழ்கின்றோம்

அவர்களது தியாக உள்ளங்களை
இந் நாளில் சிறிதேனும்
 நாமும் கொள்ள முயல்வோம்

அவர்களோடு இணந்து இந்தச்
சீர்கெட்ட சமூகம் சிறக்க
 நாமும்  நம்மாலானதைச் செய்வோம்

Monday, October 22, 2012

பதினாறு வயது உளறல்கள் அல்லது ! விஞ்ஞானக் காதல்!

அவன் அவசரமாய் அல்லது
அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்

"இப்போது வேதியல்  வகுப்பில்
உன்னைக் குறித்துத்தான்
பாடம் எடுக்கிறார்கள் "

" என்னைக் குறித்தா?
வேதியல்  வகுப்பிலா ?"
அவள் பதில் செய்தி அனுப்பினாள்

"ஆம்.
தான் எவ்வித மாறுதலையும் அடையாமல்
பக்கத்தில் இருக்கும் பொருளை
மாறுதலடைச் செய்யும் பொருளை
டீச்சர் கிரியா ஊக்கி என்கிறார்
நான் அது நீ என்கிறேன் சரியா ?
அவன் அழகாய்ப் பிதற்றினான்

"இங்கு கூட இயற்பியல்  வகுப்பில்
உன் எதிர்காலம் குறித்துத்தான்
பாடம் எடுக்கிறார்கள் " என்றாள்

"இயற்பியல் வகுப்பிலா ?என எதிர்காலம் குறித்தா "
அவன் அதிசமாய்க் கேட்டான்

அவள் இப்படி செய்தி அனுப்பினாள்
"எந்த ஒரு செயலுக்கும்
எதிர் விளைவுகள் உண்டு என்கிறார் சார்
இப்படி படிக்கிற நேரத்தில்
செய்தி அனுப்பிக் கொண்டிருந்தால்
 நாளை  நீ
நடு ரோட்டில்தானே நிற்கவேண்டும் ? "

அவன் பதில் செய்தி அனுப்பவில்லை

Saturday, October 20, 2012

படைப்பாளி (?)

உணவுக்கான மூலப் பொருட்களில்
சுவையையும் மணத்தையும்
இயற்கை மிக நேர்த்தியாகச்
சேர்த்து வைத்திருக்க
அதனை மிகச் சரியாகச் சேர்மானம்
செய்தலதை மட்டுமே செய்தவன்
சமையல் சக்கரவர்த்தியாகிப் போகிறான்

அடுப்படியில்
வெக்கையிலும் புழுக்கத்திலும்
வெந்தபடி நளபாகம் செய்தவன்
வெறுமனே இருக்க
அதனை பணிவாகத்
தருதலைச்  செய்வபவன் தான்
அன்பளிப்புப் பெற்றுப் போகிறான்

காட்டை மேட்டைத்
தன்  கடின உழைப்பால்
நிலமாக்கித் தோட்டமாக்கி
உலகுக்கு உயிரளிப்பவன்
வறுமையில் வெந்து சாக
இடையில் இருப்பவனே
கொள்ளை லாபம் கொள்கிறான்

குடும்பத்தின் ஒவ்வொரு அசைவிலும்
ஒவ்வொரு சிறு நிகழ்விலும் உயர்விலும்
தன்னை முற்றாக இணைத்துக் கொண்டவள்
துணைவியாய்  மட்டுமே
அங்கீகரிக்கப் பட்டிருக்க
பொருளீட்டிக் கொடுத்தலை மட்டுமே செய்தவன்
குடும்பத் தலைவனாகிப் போகிறான்

வார்த்தைகளுக்கான
அர்த்தங்களும் உணர்வுகளும்
மிக நேர்த்தியாய் ஏற்கெனவே
நிர்மானம் செய்யப்பட்டிருக்க
அதனைக் கோர்வையாய்
அடுக்கிக் கொடுத்தலை மட்டுமே செய்பவன்
"படைப்பாளி "யாகிப் போகிறான்