Wednesday, November 28, 2012

சாணக்கியத் தனத்தை தொடருங்கள்


அரசியல் வித்தகரே
தமிழகத்துச் சாணக்கியரே
எந்தச் சோதனையையும் சொந்தச் சாதனையாக்கி
மக்களை முட்டாளாக்குவதை
கைவந்தக் கலையாகக் கொண்ட
தமிழகத்தின் மூத்தத் தலவரே

இப்போதும் எங்களை மண்ணைக் கவ்வ விட்டு
நீங்கள்  வெற்றி வாகை சூடியதை எண்ணி எண்ணி
எத்தனை மகிழ்வு கொள்கிறோம் தெரியுமா ?

அன்னிய முதலீடு ஆபத்தானதுதான்
பல லட்சம் பேர் வாழ்வாதாரம்
பாதிக்கப்படக் கூடும்தான்
அதற்காக மந்திரியாயிருக்கிற மகனை
விட்டுக் கொடுக்கமுடியுமா ?
சட்டத்தின் கோரக்கைகள் தேடுகிற
பேரனைக் காக்க வேண்டாமா?
இன்னும் மகள் பிரச்சனை
நில ஆக்கிரமிப்புப் பிரச்சனை என
பூதாகாரமாய் ஆயிரம் பிரச்சனை இருக்க
மக்கள் பாதிப்புக்காக
இருக்கிற பதவியையும் விட்டு விட
நீங்கள் என்ன உள்ளூர் அரசியல்வாதியா ?

கடலில் தூக்கிப்போட்டாலும்
எங்களை கஷ்டப்படுத்தாமல் இருக்கமாட்டீர்கள்
என எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும்
எப்படி அடித்தாலும் தாங்கிக் கொள்ளும்படியான
தடித்த தோள்களைப் பெற்ற நாங்கள்
இதையும் எளிதாகவே எடுத்துக் கொள்கிறோம்

மருமகன் இறந்த பின்புதான்
வாஜ்பாயீ தலைமையிலான அரசு
ஒரு மதசார்புள்ள கட்சியின் அரசு என்பதை
எத்தனைத்  தெளிவாகப் புரிந்து கொண்டு
எங்களுக்கும் புரிய வைத்தீர்கள்
அதைப் போன்றே
கடைசி ஆறு மாதத்தில்
இவர்களுக்கு எதிரான ஒன்றை
கண்டுபிடிக்காமலா போய்விடுவீர்கள் ?
நீங்கள் சொல்வதை
நாங்களும் நம்பாமலா போய்விடுவோம்

சில ஆண்டுகளாக உங்களை
குடும்பத் தலைவராக பார்த்துப் பழகிய நாங்கள்
இந்த  முடிவுக்கு குழம்பவில்லை
தங்களை அரசியல் தலைவராக
பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான்
தங்கள் முடிவால் குழம்பித் தவிக்கிறார்கள்
அவர்களை அப்போது
சரிபண்ணிக் கொள்வோம் தலைவரே
இப்போது தங்கள்
சாணக்கியத் தனத்தை தொடருங்கள்
முத்தமிழ் வித்தகரே


Tuesday, November 27, 2012

முக நக அக நக


ஒவ்வொரு முறை
அவனைச் சந்திக்கையிலும்
மகிழ்ச்சியினை புன்னைகையாய்
வெளிப்படுத்த முயல்வேன்  நான்

நான் புன்னகைத்ததை
உறுதி செய்து கொண்டபின்
மிக மிக யோசித்து
மெல்ல இதழ் விரிப்பான் அவன்

ஒவ்வொருமுறை
அவனை நெருங்குகையிலும்
ஆர்வமாய் அழுத்தமாய்
கை குலுக்க முயல்வேன் நான்

எனது ஆர்வத்தை
தவிர்க்க முடியாதவன் போல்
செய்யக் கூடாததைச் செய்பவன்போல்
சோர்வாய் கை நீட்டுவான்

ஒவ்வொருமுறை சிந்திக்கையிலும்
அவனை சந்தித்தது முதல்
அதுவரை நடந்தவைகளை
விஸ்தாரமாய்ச் சொல்லி
மனம் கவர முயல்வேன் நான்

தவிர்க்கமுடியாதவன்போல்
ஒரு சிறிய நிகழ்வை
பதிலுக்குச் சொல்லவேண்டுமே என்பது போல்
சுருக்கமாய் சொல்லி முடிப்பான் அவன்

சிலநாளாய் எனக்குள்ளும்
மிக லேசாய்  இவன் நமக்கு நண்பன்தானா
இவன் தொடர்பு தேவைதானா எனும் நினைவு
மனத்தைத் தொட்டுத் தொட்டு விலகிப் போக
குழம்பிக் கிடந்தேன் நான்

திடுமென்று எதிர்பாராது தேடிவந்த அவன்
தன்னை பாதித்த ஒரு நிகழ்வினை
மிக மிக  விஸ்தாரமாய்
தொடர்ந்து பேசி முடித்தான்

திரும்பிப் போகையில்
"ஏதோ உன்னிடம் மட்டும்
சொல்லவேண்டும் போல இருந்தது "என்று
கண் கலங்கிப் போனான்

முக நக என்பதற்கும் அக நக என்பதற்கும்
உண்மையான அர்த்தம் மெல்லப் புரிய
நன்பர்களைப் பெறுவதும் வெல்லுவதும் குறித்து
புத்தகத்தில் கற்றுத் தெரிந்து கொண்டதற்கு
வெட்கித்தலை கவிழ்ந்து போனேன்


Monday, November 26, 2012

நாங்கள் யாரெனத் தெரிகிறதா ?

ஈட்டி எறியவும்
வாள் சுழற்றவும்
பயிற்சியளிக்காது
கவசங்கள் அணியவும்
கேடயங்கள் தாங்கவுமே
பயிற்றுவிக்கப் பட்டதால்
எங்கள் கனவுகளில் கூட
கிரீடங்கள் வருவதே இல்லை

அன்றாடப் போர்களில்
அடிபடாது திரும்புதலையும்
உயிரோடு இருத்தலையுமே
நாங்கள் வெற்றியாகக் கொள்கிறோம்

நாங்கள்  யாரென உங்களுக்குத் தெரிகிறதா ?

ஆற்று விசைக்கு எதிராக முயலாது
இலக்கை நோக்கி நீந்த அறியாது
ஆற்றின் போக்கோடு
அமிழ்ந்துவிடாது போதலையே
நீச்சலெனப் பயிற்றுவிக்கப் பட்டதால்
நாங்கள் விரும்பிய இடம்
போய்ச் சேர்ந்ததே இல்லை

புதையாது ஏதோ ஒரு கரையினை
எட்டிப் பிடித்தலையே
நாங்கள் சாதனையாகக் கருதுகிறோம்

உங்கள் வழிகளில் எங்களைப் பார்த்திருக்கிறீர்களா ?

தன் பலம் அறியாது
தும்பிக்கையில் நம்பிக்கை கொள்ளாது
அங்குசத்திற் கடங்குதலையே
தர்மமெனக் கொள்கிற
முட்டாள் யானையாயிருக்கப்
பயிற்றுவிக்கப் பட்டிருப்பதால்
நாங்கள் தவறியும்
மதம் கொள்வதே இல்லை

கொடுத்ததைப் பெறுதலையும்
கிடைத்ததை தருதலையுமே
எமக்கான சுய தர்மமாய்க் கொள்கிறோம்

எங்களை  உங்களுக்குப் புரிகிறதா ?

எங்களை மிதித்து ஏறி
சிகரம் தொட்டவர்களே
எங்களை இகழ்ந்த போதும்
எங்கள் மேல் பயணித்து
கரை கடந்தவர்களே
எங்களை மறந்த போதும்
நாங்கள் என்றும்  எப்போதும்
துளியும் மாறாதே இருக்கிறோம்

மாறாததொன்றே மாறாத விதி என்பதுதான்
மிகச் சரியான விதி என்பதற்கு
சாட்சியாகவும் இருக்கிறோம்

நாங்கள் யாரென உங்களால்
ஊகிக்க முடிகிறதா ?

Friday, November 23, 2012

என்னை விட்டு விடுங்களேன் பிளீஸ்


வானம் பார்த்து மண்ணில் நடந்து
இன்னும் எத்தனை நாள்
பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்

ஞானம் தேடி காடு மலை ஓடி
இன்னும் எத்தனை யுகம்
வாழ்வை இழந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்

நான் இருப்பதும் இல்லாதிருப்பதும்
உலகுக்கு பிரச்சனையே இல்லை

என்னை வைத்துப் பிழைப்பவனும்
என்னை  "வைதுப் " பிழைப்பவனும் தான்
உலகில் பெரும் பிரச்சனை

வேண்டுதல் நிறைவேற்ற அள்ளிக் கொடுக்கவோ
செருப்படி கொடுத்தால் சீரழித்துப் போகவோ
நான் அற்ப  மனிதனில்லை

ஒலியாக ஒளியாக பொதுவாக இருந்தவனை
மொழியானதும் விளக்கானதும் நீங்கள்தான்
பிரித்துத் தொலைத்தீர்கள்

வெளியாக புரியாது தெளிவாக இருந்தவனை
கோவிலாக்கி சிலையாக்கி என்னைப்
சின்னாபின்னப்படுத்திவிட்டீர்கள்

நான் ஒருவனே என்று சிலரும்
நானே எல்லாம் என்று சிலரும்
என்னை நீங்களாகவே உருவகப் படுத்திக்கொண்டீர்கள்

மிகப் பெரியவனான எனக்கு
ஊடகமும் ஏஜேண்டுகளும் தேவையென முடிவு செய்து
என்னை மகா சிறியவனாக்கிவிட்டீர்கள்

உறுதியாகவும் சொல்கிறேன்
இறுதியாகவும் சொல்கிறேன்
எல்லோருக்குமாகவும் சொல்கிறேன்

என்னைப் படைத்து என்னைப் புகழ்ந்து
நீங்கள் எதுவும் அடையப் போவதுமில்லை
என்னை நீங்கள் அடையப் போவதும் இல்லை

உங்கள் நிம்மதிக்காக இல்லையென்றாலும்
என் நிம்மதிக்காக வேணும் என்னை சிலகாலம்
கண்டு கொள்ளாது விட்டு விடுங்களேன்
பிளீஸ்

Thursday, November 22, 2012

முரண்


கூந்தலைச் சரியாக முடியாது
பொட்டுவைக்கக் கூட மறந்து
அழுக்கேரிய மஞ்சள் சரடுடன்
மிகச் சாதாரணமான நூல் சேலையணிந்து
ரேசன் கடையில் புகை படிந்த ஓவியமாய்
அந்தப் பெண்ணைப் பார்க்க
அவள் வறுமை தெரிந்தது
ஆயினும் அவள் மேல் ஒரு
மரியாதை இருந்தது

கூந்தலை நாகரீகமாகப் பின்னி
மிகப் பெரிய பொட்டுவைத்து
அன்றுதான் கட்டியது போன்ற புதிய சரடுடன்
மிக நவ நாகரீமாய் உடையணிந்து
பஜார் வீதியில் அலங்கார விளக்காய்
அவளைப் பார்க்கையில்
கவர்ச்சி இருந்தது
ஆயினும் அவள் மேல் அதீத
வெறுப்பே படர்ந்தது

இப்போதெல்லாம் ஏனோ
பட்டங்களையும் பட்டயங்களையும்
சாட்சிகளையும் விரித்து வைப்பதிலேயும்
அடுத்தவர்களை முற்றாக கவர்வதிலேயும்
அதிக கவனம் கொள்கிறவர்களைவிட
இயல்பாய் எளிமையாய் பாசாங்கின்றி
தொடர்பவர்களுடன்தான் பயணிக்கவும் பிடிக்கிறது
அவர்களுடைய தொடர்பில்தான்
தொடர்ந்து எப்போதுமிருக்கவும் பிடிக்கிறது


Wednesday, November 21, 2012

வஸந்த வாழ்வு எளிதாய்ப் பெற


உனக்கு பேசவும் எழுதவும்
கொடுத்துள்ள உரிமையின் எல்லையை
சோதிக்க முயலாதே
அந்த எல்லை மிகச் சிறியது என உனக்கு
புரிந்தும் போகலாம்
அதனால் நீ நொந்தும் போகலாம்
எனவே அந்த வழி வேண்டாம் நமக்கு

உண்மையைத்தானே சொல்கிறேன் என
சிறுபிள்ளைத்தனமாய்
உளறித் தொலைக்காதே
நீ கைது செய்யவும் படலாம்
உன் வீடும் தாக்கப் படலாம்
ஊமையாய் இருக்கப் பழகு
காசு கொடுத்து கருமாந்திரம் நமக்கெதுக்கு

எழுதுபவன் வாசிப்பவன் எல்லாம்
சராசரியைத் தாண்டியவன் என
தப்புக் கணக்குப் போடாதே
நீ ஏமாந்துத் தொலைக்கலாம்
எழுத்தையே வெறுக்கலாம்
தெரிந்ததைப் பதுக்கப் பழகு
அதுதான் என்றும் சுகம் நமக்கு

மதம்" பிடித்தவனாயினும்
"மதம்" பிடிக்காதவனாயினும்
அவனவன் நிலையில் "மதம் 'பிடித்தவனே
நியாயம் பேசி ஏமாறாதே
நிம்மதி இழந்துத் திரியாதே
சராசரியாய் இருக்கப் பழகு
சங்கடங்களை விலக்கப் பழகு

பயனற்றதை சுவாரஸ்யமாகச் சொல்லிப்போ
ஆடிக்காற்றுப் போல எதன் மீதும்
மிகச் சரியாகப் படாது புழுதிக் கிளப்பிப் போ
மகுடங்களும் மலர் மாலைகளும் நிச்சயம் கிட்டும்
யானைவைத்து பிச்சை எடுப்பது போல்
அறிவைக் கொண்டு பிழைக்கப் பழகு
நிச்சயம் வஸந்த காலம் உன் வாசல் கதவைத் தட்டும்

Sunday, November 18, 2012

பரிணாமம்


அவனை அவர்கள் முதன் முதலாகப்
பார்த்தபோது.....

பிறரை விட நிஜமாக வளராது
வளர்ந்ததாகக் காட்ட
கட்டைக் கால்களை
இணைத்துக் கொண்டிருந்தான்

எல்லோரும் கலைக்கூத்தாடி என
இகழ்ச்சியாய்ப் பார்த்தார்கள்

பின்னர் சில நாட்களில்
பிறர் பார்வையைக் கவர்வதற்காக
வண்ண வண்ண ஆடைகள்
அணிந்து திரிந்தான்

எல்லோரும் கோமாளியோ என
குழம்பியபடி ஒதுங்கினார்கள்

அடுத்து வந்த நாட்களில்
பிறர் கவனத்தை ஈர்ப்பதற்காக
சப்தமெழுப்பியபடியே
சுற்றிச் சுற்றி வந்தேன்

ஒருவேளை பைத்தியமோ என
பயந்தபடி விலகினார்கள்

முடிவாக

கவருதலுக்காக மட்டுமே
செய்கிற எல்லாமே
அதீத அற்பத்தனம் எனப்
புரியத் துவங்கியதால்
கும்பலைவிட்டு
கவனமாக ஒதுங்கத் துவங்கினான்

எட்ட நின்று அவனைக்
கவனித்தவர்கள் இப்போது
அவனருகில் வரத் துவங்கினார்கள்

நெருங்கியவர்களை
ஒரு பொருட்டாகவே  கருதாது
சூழல் மறந்து சுயம் இழந்து
அவனுள் கரையத் துவங்கினான்

கவனிக்கத் துவங்கியவர்கள்
இப்போது அவன் காலடியில் அமரத் துவங்கினர்

பூரண விழிப்பைக் கண்டவன்
இமைகளைத் திறக்க
எதிர் நின்ற கூட்டம் கண்டு
அதிர்ந்துதான் போனான்

காலடியில் அமர்ந்தவர்கள்
எதையெதையோக் கொடுத்து அவனிடம்
எதையேனும் பெறுவதற்காக
கண்விழித்தபடி தவித்துக் கொண்டிருந்தார்கள்

முதன் முதலாக
அவனது இருப்பிடம் அது இல்லை என்றும்
தவிப்பவர்களுக்காக கொடுப்பதற்கு
தான் இன்னும் அதிகம்
பெற வேண்டியதைப் புரிந்து கொண்டான்

ஒரு நாள் அதிகாலையில்
சுபவேளையில்
மக்கள் கூட்டம் அவனைத்
தரிசிக்கக் கூடுகையில்;;

அவன் அங்கு இல்லாது இருந்தான்