Tuesday, February 19, 2013

துன்புறுத்தும் இடைவெளி


கடந்த ஒரு மாத காலமாக வட  இந்தியா சுற்றுலா
சென்று விட்ட காரணத்தாலும் இந்த மாதக்
கடைசி வரைகொஞ்சம் அதிகப் பணிகள் இருப்பதாலும்
தொடர்ந்து பதிவுகள் எழுதவோ
பிற பதிவுகள் பார்த்துப் படித்து தெளிவுறவோ
பின்னூட்டமிடவோ முடியாமல் தவிக்கிறேன்


தொடர்ந்து என்னைத் தொடர்பு கொண்டு அக்கறையுடன்
என் நலம் விசாரித்த பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்
 என் மனமார்ந்த நன்றி


மார்ச் முதல்    தொடர்ந்து உங்களைச் சந்தித்து என்னைச்
சரி செய்து கொள்ள முயல்கிறேன்


நன்றியுடனும் வாழ்த்துக்களுடனும்






Friday, February 15, 2013

சலிப்பில் விளையும் விழிப்பு

எல்லாமே எழுதியாகிவிட்டது
எழுதுவதற்கு இனி
என்ன இருக்கிறது என்கிற எண்ணம்
உங்களுக்குள் இப்போதெல்லாம்
அடிக்கடி வந்து போகிறதா ?

சொல்லவேண்டியதெல்லாம்
விதம் விதமாய்
சொல்லியாகிவிட்டது
வித்தியாசமாய்ச் சொல்லஇனி
என்ன இருக்கிறதுஎன்கிற கவலை
உங்களுக்குள் இப்போதெல்லாம்
அடிக்கடி தோன்றத் துவங்குகிறதா ?

எழுதுவதால்
என்னமாறுதல் ஏற்பட்டுவிடப்போகிறது ?
இதுவரை எழுதியதில்
என்னதான் பெரிய விளைவுகளைக் கண்டோம் ?
இனியும் எழுதுவதில்
என்ன பயன்தான் இருக்கப் போகிறது
என்கிற ஆதங்கம் உங்களுக்குள்
விஸ்வரூபமெடுத்து உங்களைத்
தூங்கவிடாது செய்கிறதா ?

இனி கவலையை விடுங்கள்
இப்போது முதல்
அதிக சந்தோஷம் கொள்ளுங்கள்

ஏனெனில் இத்தகைய
எண்ணமும்
 கவலையும்
ஆதங்கமும்
ஊற்றெடுத்த பின்புதான்
படைப்பாளிகள் பலர்

தாங்கள் சராசரிகள் இல்லைஎன்பதை
நிரூபிக்க அதிகம் முயன்று இருக்கிறார்கள்

தங்கள் படைப்பும்
சராசரித்தனமானதில்லை என நிரூபிக்க
அதிகத் திறன் பெற உழைத்திருக்கிறார்கள்

அதன் விளைவாய்
காலம் கடக்கும்  பல அரியபடைப்புகளை
உலகுக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள்

என்வே
இனி கவலைப் படுவதை விடுங்கள்
இப்போது முதல்
அதிகச் சந்தோஷம் கொள்ளத் துவங்குங்கள்







Friday, February 1, 2013

என்னை நானே அறிய விடு

நண்பகலையும் நடு நிசியாய் காட்டும்
அடர்ந்த காட்டினுள்
வழிகாட்டும் தடங்கள்
ஏதும ற்ற வெளிதனில்
என்னை விட்டுப் போ
நான் சிறு பிள்ளையில்லை
திசை காட்டும் கருவியின்
வரைபடங்களின் துணையும்
எனக்குப் போதும்
உன் விரல் பிடித்து நடந்துவர
எனக்கு இஷ்டமில்லை
என்னைப் புரிந்து கொள்

இப்போதெல்லாம் எனக்கு
பாதுகாப்பான பயணங்கள் உடன்பாடில்லை
வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
விழுந்தே தெரிந்து கொள்கிறேன்
உடலெங்கும் உன்னைபோல் எனக்கும்
காயம்பட்டு தழும்பாகட்டும்
விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை
விழாதிரு என எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி
என்னை வளரவிடு

எத்தகைய சுவையான பழமாயினும்
உரித்துக் கொடுத்தவை யெல்லாம்
கசக்கவே செய்கின்றன
என்னைப் புரிந்து கொள்
என்னைப் பசி அறியவிடு
குறியீடுகளின் படிமங்களின் தோல்கள்
கடினமானவையே
என்னைக் கடித்து உண்ணவிடு
என் பற்களும் நகங்களும்
சிறிதேனும் பலம் பெறட்டும்
நகர்ந்து எனக்கு வழிவிடு

என்னை இனியேனும்
அலைய விடு
தேட விடு
அறியவிடு
பூசாரியாய் புத்த பிட்சுவாய்
வாழ்வைத் தொடராது
ஒரு சித்தனாய்
ஒரு புத்தனாய்
என்னை மலரவிடு
என்னை நானே அறிய விடு

மீள்பதிவு 

Thursday, January 31, 2013

பொருள் என்பதற்கான பொருள்

பொருட்களின்
 பயன்பொறு த்து
அதன் பயன்பாடுபொறு த்து
 புனிதம் பொறு த்து
அதனதன் இடத்தில்
அந்த  அந்தப் பொருட்களை
தன் செயல்களுக்கு  உதவும்படி
வைப்பதுவும்
தன் வளர்ச்சிக்கு  அதனை
முறையாகப் பயன்படுத்துவதுவே
புத்திசாலித்தனம்

 மாறாக
 இடம் மாற்றிவைப்பது
குழப்பத்தை மட்டுமல்ல
கால விரயத்தை மட்டுமல்ல
பொருட்களின் பயன்பாட்டை மட்டுமல்ல
அந்தப் பொருளையே கூட
அதிகம் பாதிக்கக் கூடும்
அதன் மதிப்பையே கூட
முற்றாக அழிக்கக் கூடும்

ஆயினும்
பொருட்களுக்கு
கூடுதல்  இடத்தையும்
 எல்லா  இடத்தையும்
கொடுத்துவிட்டு
இடமின்றித் திரிவதும்
தடுமாறித்  தவிப்பதுவும்
நிச்சயம் புத்திசாலித்தனமில்லை

பொருள் என்பதற்கான பொருள்
கார் சாவி, செருப்பு ,பேனா எனத்தான்
இருக்கவேண்டுமா என்ன ?
அது ஜாதி மதம் அரசியல்
எனக் கூட
இருக்கலாம்தானே !

Wednesday, January 30, 2013

ஆணவமும் காற்றிடைப்பட்ட கற்பூரமும்

அதீத உடல் பலமும்
அனைத்தையும் அழிக்கும்
ஆதிக்கவெறியும் கொண்டு திரியும்
சிங்க இனமும் புலி இனமும்
தொடர்ந்து சிறுத்துக் கொண்டே போக

காற்றிடைப்பட்ட கற்பூரமாய்
தானே கரைந்து போக

காட்சிபொருளாக வேணும்
காத்துவைக்க வேணும்  என்கிற
அவல நிலைக்குப் போக

பயமொன்றே
பதுங்குதல் ஒன்றே அறிந்த
பலமற்ற
பாவப்பட்ட
அணில்களும் மான்களும்
பல்கிப் பெருகுவது கூட

வன்முறை குறித்த
அதீத பலம் குறித்த
ஆணவம் குறித்த
ஏதோ ஒரு செய்தியை
சொல்லித்தான் போகிறது

நல்லவர்களுக்கு புதியநம்பிக்கையைக்
கொடுத்துத்தான் போகிறது


சுயம்

குளங்களில் கண்மாயில்
விளைந்து கிடக்கிற
வளமான களிமண்ணெடுத்து
கையில் இருக்கிற அச்சினில்
திணித்துத் திணித்து எடுக்கிறேன்
கண்ணனும் சிவனும்
தொந்திப் பிள்ளையாரும்
 மிக மிக அழகான
பொம்மைகளாய்
என் எதிரில் சிரிக்கிறார்கள்

ஆயினும் வீட்டில்
எப்போதும் பூசைக்கு
என் பேரன் கைகளால் பிசைந்து
அரை நாள் செலவ்ழித்து
மீண்டும் மீண்டும் திருத்திப்
பிள்ளையாரைப் போலச  செய்திருக்கிற
விக்ரகத்தைத்தான் பயன்படுத்துகிறேன்

பிள்ளையர்ர் கூட
அதில் கு டியிருக்கத்தான்
விருப்பப்படுவார்ப்  போலப் படுகிறது
 எனக்கு


 மீள்பதிவு 

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் எடுக்கும் "விஸ்வரூபம் "

கோரிக்கை விளக்கக் கூட்டங்கள்
பெருந்த் திரள் ஆர்ப்பாட்டங்கள்
பேரணி வேலை நிறுத்தங்கள்
தராத பலனை
ஒரு வன்முறை மிரட்டல்
சாதித்துவிடுமோ . என்கிற எண்ணத்தையும்

மத நல்லிணக்கம் என்பது
பெரும்பான்மையினரின் சிறுமைகளை
எப்படி வேண்டுமாலும் தாக்கலாம என்பதுவும்
சிறுபான்மையினரின் சிறுகுறையினையும்
எந்த வகையிலும்  எந்த நிலையிலும்
சொல்லக் கூடாதோ என்கிற கருத்தினையும்

சகிப்புத்தனமை சகோதரத்துவம்
சமதர்மம் என்பதெல்லாம்
பொதுவானது என்பது
பொய்யானது போலியானது என்பதுவும்
ஒரு சார்பானது என்பதே
உண்மையானதுஎன்னும் நம்பிக்கையையும்

வனத்தோடு  வெறிபிடித்து வாழும்
விலங்குகள் மட்டுமல்ல
நாகரீகம் பேசி
நாட்டில் வாழ்வோரும்
இனத்தோடு இணைந்திருத்தலே
பாதுகாப்பனது என்கிற உணர்வையும்

இப்படி அல்லது அப்படி
இருப்பதே இனி சரியெனவும்
இப்படியும் அப்படியும் என்பதெல்லாம்
இனி கதைக்காகாது என
"மதவாதிகளின்" கூற்று இனி
எடுபட்டுவிடுமோ என்கிற கவலையையும்

கண்டு கொள்ளாது மழுங்கச் செய்யவேண்டிய
 "விஸ்வரூபத்தை "
அதன் வீரியம் அறியாது
விஸ்வரூபமெடுக்கவிட்டு
 நாமே உண்டாக்குகிறோமோ?
துவங்கத் தெரியாது துவங்கி
முடிக்கத் தெரியாது திணருகிறோமோ ?

சகித்துக் கொள்ளக் கூடிய
லேசான அரிப்புக்கு
கொள்ளிக் கட்டையை எடுத்து
சொறிந்து கொண்டு சுகம் காண்கின்றோமோ
பூத்துக் குலுங்கும் சமதர்மப் பூங்காவை
நாமே தீயிடத் துணிகிறோமோ

சிந்திக்கச் சிந்திக்க
 பூதாகாரமாய்விஸ்வரூபமெடுக்கிறது
வாமன விஸ்வரூபமே
இனியும்  எதிர்ப்பென்னும் போர்வையில்
அதனை விஸ்வரூபமெடுக்கவிடுவது
நிச்சயம் அறிவீனமே