காட்டுக்குள்
வேட்டையாடச் செல்பவர்கள்உல்லாசச் சுற்றுலா செல்பவர்கள்
முதலில் காடு குறித்த அறிவும்
மிருகங்களின் தடமறியும் தெளிவும்
பாதுகாப்புப் பயிற்சியும்
காட்டுக்கென பிரத்யேக உடைகளும்
கூடுமானவரையில் இரவுப் பயணம் தவிர்த்தலும்
மிக மிக அவசியம்
ஏனெனில்
மிருகங்கள் பசி ஒன்றையே
பிரதானமாகக் கொண்டவை
கலை கலாசாரம் பண்பாடு என்கிற
பாசாங்கெல்லாம் அவைகளுக்கில்லை
அதைப் போலவே
நாட்டுக்குள்ளும்
பணி நிமித்தம் செல்லும் பெண்களாயினும்
பள்ளி செல்லும் பிள்ளைகளாயினும்
ஏன் பச்சிளம் பெண் குழந்தைகளாயினும்
முதலில் காடாகிப்போன நாடு குறித்த அறிவும்
இரண்டு கால் மிருகங்களின் வெறியறியும் தெளிவும்
பாதுகாப்புப் பயிற்சியும்
ஒட்டுமொத்தமாய் மூடிய உடலுடனும்
கூடுமானவரையில் பகலில் பயணித்தலுமே
மிக மிக நல்லது
எனெனில்
பசியெடுத்தபுலியும் வெறி பிடித்தசிங்கமும்
பயமின்றி உல்லாசமாய் உலவித் திரிய
பாவப்பட்டஅணிகளும் பரிதாபக்குருவிகளும்
பதுங்கித் திரிகிற "புண்ணிய பூமியில் "
பெண்களுக்கான சுதந்திரமும் உரிமையும்
வேறெப்படி இருக்கச் சாத்தியம் ?
இரவும் இருளும் தனிமையும்
ஆண்களின் ஆளுகைக்குட்டதாக்கிப் போன
தரங்கெட்ட பூமியில் பெண்களின் நிலை
வேறெப்படி இருக்கச் சாத்தியம் ?