Wednesday, December 31, 2014

உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்  
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே 

Thursday, December 25, 2014

இன்கவி பெறலாம் யாரும்

விளமதும் மாவும் தேமா
வகையென அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
இலகுவாய்ப் புரியு மாறு
இயற்றிட நானும் நாளும்
பலமுறை முயன்றுப் பார்த்தேன்
பயனிலை தோற்றே வீழ்ந்தேன்

தினம்தினம் இதுபோல் நானும்
தவித்திடும் நிலையைக் கண்டு
மனக்குறைப் போக்கும் வண்ணம்
மகிழ்வது கொள்ளும் வண்ணம்
எனதுயிர் நண்பன் ஓர்நாள்
ஒருவழி எனக்குச் சொன்னான்
வினவிடக் கேட்டு நானே
வியப்பினில் உச்சம் போனேன்

"கரையது உயர்ந்து நன்றாய்
இருபுறம் இருக்க நீரும்
சிறையது பட்டாற் போல
அடங்கியே நடத்தல் போல
வரையரை ஒன்றை நீயும்
வகுத்தபின் வார்த்தை தன்னை
சிறையிட நினைத்தால் போதும்
சிலநொடி கவிக்குப் போதும்

"இதந்தரு மனையின் நீங்கி"
எனவளர் கவிதை தன்னை
சுதந்திரத் தாபம் கூட்டும்
சுடர்கவி பாடல் தன்னை
நிதமொரு முறையே நீயே
நயம்பட படித்தால் போதும்
மதகதைக் கடக்கும் நீராய்
கவியது பாயும் " என்றான்

தினம்தினம் காலை மாலை
திருத்தமாய் பாடல் தன்னை
மனனமே செய்தல் போல
மகிழ்வுடன் சொல்லச் சொல்ல
தனத்தனத் தான தான
எனுமொலி இயல்பாய் என்னுள்
இணக்கமாய் இணைந்து கொள்ள
உடன்கவி பிறக்க லாச்சு

இங்கணம் இப்போ தெல்லாம்
எப்பொருள் குறித்தும் பாட
சங்கடம் கொள்வ தில்லை
சந்தமே முதன்மை யென்னும்
சங்கதி அறிந்த தாலே
சஞ்சல மேதும் இல்லை
இம்முறை முயன்றால் நாளும்
இன்கவி பெறலாம் யாரும்

Wednesday, December 24, 2014

ஒரு டவுட்டு

ஏன் எல்லா  இறைத் தூதர்களும்
ஞானமடைதலுக்கு முன்னால்
மனிதர்களை விட்டு
முற்றிலுமாக விலகிப் போனார்கள் ?

காடு மலை
விலங்குகளை அண்டிப் போனார்கள் ?

மனிதன் மேல் கொண்ட
அவ நம்பிக்கையினாலா ?

இயற்கை  மற்றும்
விலங்குகளின் மேல் கொண்ட
அதீத நம்பிக்கையினாலா ?

ஆட்டுடன் கூடிய ஏசுவும்
மாடு கன்றுகளுடன் கூடிய கண்ணனும்
மலை அடிவாரங்களில் திரிந்த முகமதுவும்
இருப்பிடமே அறியாதிருந்த புத்தனும்

எதையோ  சூட்சுமமாய்
சொல்லிப் போகிறார்கள்

என் மட மண்டைக்குத்தான்
ஏதும் புரியவில்லை

உங்களுக்கேதும் புரிகிறதா  ?

புரிந்தவர்கள் சொல்லுங்களேன் பிளீஸ் 

Tuesday, December 23, 2014

"பிஸாசைப் "பார்த்தேன்- விமர்சனம் போலவும்

தீவீர எம்.ஜிஆர் ரசிகன் என்றால்
கொஞ்சம் மட்டமாகவும் சிவாஜி ரசிகன் என்றால்
கொஞ்சம் உயர்வாகவும் பார்க்கப் பட்ட அந்தக்
காலத்திலேயே நான் தீவீர எம்.ஜி,ஆர் ரசிகன்

போலீஸ் கெடுபிடி அடிதடி இத்தனையயும் மீறி
முதல் நாள்  முதல் ஷோ எப்படியும்
பார்த்துவிடுவேன்.

எப்படித்தான் சுதாரிப்பாக இருந்தாலும்
கூட்ட இடிபாடுகளில் சிக்கியதில் கவுண்டர் அருகில்
ஏற்படும் அதீதத் தள்ளுமுள்ளில் தோள்பட்டை
இடுப்பில் எப்படியும் ஊமைக் காயம் ஏற்பட்டுவிடும்

அதனால் ஏற்படும் வலி இரண்டு மூன்று நாள்
நிச்சயமிருக்கும் என்றாலும் தெரு மற்றும்
நண்பர்கள் வட்டத்தில் "டேய் இவன் இந்தப்
படம் பார்த்துபுட்டாண்டா " என்கிற அந்தப்
பெருமைப் பேச்சைக் கேட்பதிலும் அந்தப்
படத்தின் கதையைக் கேட்பதற்காக ஒரு சிறு குழு
என்னையே சுற்றுக் கொண்டிருப்பதிலும், உள்ள
அந்த அற்புதச் சுகம் அனுபவித்தவர்களுக்குத் தான்
மிகச் சரியாகத் தெரியும்

இப்படிப்பட்ட குணாதியம் மிக்க நான்
வெகு நாட்களுக்குப்பின் அதிக எதிர்பார்ப்பில்
(போஸ்டர் மற்றும் ஓ நாயும் ஆட்டுக் குட்டியும்
தந்த திருப்தியில் தூண்டப்பட்டு )
முதல் நாள் முதல் ஷோ எவ்வித சிரமமுமின்றி
"பிஸாசு " சினிமாவைப் பார்த்தேன்

என்னைப் போலவே ஓ நாயும் ஆட்டுக் குட்டியும்
ஏற்படுத்தியிருந்த பாதிப்பினாலோ கொஞ்சம்
ஜனரஞ்சகம் தாண்டிய சினிமா பார்க்கவேண்டும்
என்கிற எதிர்பார்ப்பினாலோ நானே எதிர்பார்க்காதபடி
இளைஞர் கூட்டம் அதிகம் இருந்தது
(ஜோடி இளைஞர்கள் இல்லை )

முதலில் ஒரு டைட் குளோஸப்பில் துவங்கிய
படம் இடைவேளைவரை மிக நேர்த்தியாய்
செதுக்கப் பட்டச் சிற்பம்போல் சின்னச் சின்னக் காட்சி
அமைப்புகளின் மூலமும் அற்புதமான இசை
மற்றும் காமிராவின் அதி உன்னதப் பதிவுகளின்
மூலமும் நம்மை ஒரு வித்தியாசமான அற்புதமான
படத்தைப் பார்க்கின்ற ஒரு திருப்தியை ஏற்படுத்திப்
போகிறது

இடையில் வருகிற சிலச் சில எதிர்பாராத்
திருப்பங்களும் நமக்கு உற்சாகம் கொடுத்துப் போகிறது

எந்த ஒரு படம் இடைவேளையில் நம்மை
அதிக உச்சத்திலும் அதிக எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தி
படம் முடிகையில் ஒரு திருப்தியை
ஏற்படுத்திப் போகிறதோ அதுவே ஒரு
வெற்றிப்படமாகவும் ஒரு நிறைவைத் தருகிற
படமாகவும் இருக்கும்

இப்படத்தில் முதல் பாதி மிகச் சரியாக அமைந்த அளவு
பின் பாதி நம் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை

காரணம் பேய் பிஸாசு எனில் ஒரு இருளின் திரட்டு
அல்லது ஒளி உருவம் என நாம் கொண்டிருக்கிற
நம்பிக்கைக்கைக்கு மாறாக ஒரு உருவமாகவே காட்டப்
படுவதாலா ?

பேயும் ஆண்டவனும் சுயமாக நேரடியாக இயங்க
முடியாது ஏதோ ஒன்றில் ஏறியோ அல்லது அதன்
உதவியுடந்தான் நன்மையோ
தீமையோ செய்ய இயலும் என நாம் கொண்டிருக்கிற
 ஒரு அபிப்பிராயத்துக்கு எதிராக
பிஸாசே தன் உடலைத் தானே தூக்கி எரிக்கும்
நம்ப முடியாத காட்சி அமைப்பாலா ?

மிகச் சரியாகத் தெரியவில்லை

ஆயினும்
நன்மை செய்யும் பேய் பிஸாசு மற்றும்
தீமை செய்யும்பிஸாசு இவைகளைப்
பற்றியேப் பார்த்தும்
காமம் கொள்ளும் பிஸாசு பழி வாங்கும் பிஸாசு
எனப் பார்த்தே பழகிவிட்ட நமக்கு
காதல் உணர்வில் வரும் பிஸாசுக் கதை ஒரு
வித்தியாசமான அனுபவம்தான்

கண்ட குப்பைகளைப் பார்ப்பதற்கு ஒரு
வித்தியாசமானமிக நேர்த்தியாக எடுக்கப் பட்ட
 இப்படத்தைஅவசியம் பார்த்து வைக்கலாம்

மிஷ்கின் அவர்களே ஓ நாயும் ஆட்டுக் குட்டியும்
ஏற்படுத்தியிருந்த அருமையான பாதிப்பில்
மற்றும் பிஸாசின் மேல் அனைவருக்குமிருக்கும்
ஒரு சுவாரஸ்யத்தில் விளம்பர யுக்தியில்
இந்தப் படத்திற்கு ஓபெனிங் காட்சியில்
கூட்டம்  இருந்தது

இந்தப் படம் அடுத்த படத்திற்கு அதைச் செய்வது
சந்தேகமே...

Monday, December 22, 2014

சூட்சுமம் வெளியில் இல்லை

புன்னகை முகத்தில் என்றும்
பொங்கியே ஜொலிக்கக் கூடின்
பொன்நகை ஜொலிப்பு கொஞ்சம்
மங்கிடத் தானே செய்யும் ?

நன்மனை வாய்க்கப் பெற்று
நலமுடன் வாழ்ந்து வந்தால்
அரண்மனை சுகங்கள் கூட
அலுப்பினைத் தானே கூட்டும் ?

இருப்பதைக் கொண்டு வாழும்
இலக்கணம் அறிந்து கொண்டால்
பறப்பதைப் பிடிக்கும் மோகம்
மறைந்திடத் தானே செய்யும் ?

ஆசையது போடும் ஆட்டம்
அடங்கிடக்  கூடும் ஆயின்
தேவையின் சுமைகள் கூட
குறைந்திடத் தானே வேண்டும் ?

சுகமதை நிலைக்கச் செய்யும்
சூட்சுமம் வெளியில் இல்லை
நிதமிதை உணர்ந்தால் வாழ்வே
சொர்க்கமாய் தானே ஆகும் ?

Sunday, December 21, 2014

விந்தையிலும் விந்தைதான்

யானைகளைக் கட்டி
பலசமயம்
இழுக்க இயலாதுப்  போனக்
கவிதைத் தேரது

ஒரு சிறு எறும்பிழுக்க
வேகமாய்
வலம் வருவது விந்தை

குடம் குடமாய்
நீரூற்ற
வளராது வாடும்
கவிதைச் செடியது

ஒரு சிறு சாரலில்
முதுகு நிமிர்த்தி
ஓங்கி வளர்வது  விந்தை

படித்து
அளவுகோலில் நிறுத்து
முயன்று செய்ய ருசிக்காதக்
கவிதைக் குழம்பு

மனமளக்க
கை நிறுக்க
அதிகம் ருசிப்பது விந்தை

விதம் விதமாய்
வேடிக்கைகள் காட்டியும்
வித்தைகள் செய்தும் வரமறுக்கும்
கவிதைக் குழந்தை

எதையோ நினைத்திருக்கையில்
சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது

நிச்சயம் ........

 அதிசயமே அசந்து போகும்
அதிசயம் போலவே
 விந்தையதே வியக்கும் விந்தைதான்

Saturday, December 20, 2014

ஆண்டவனே நீ அருள் புரி

மிக நெருங்கி வந்து
"அப்பா " என அன்புடன் அழைத்து
சொல்லவேண்டியதை
மிகப் பணிவாய்ச் சொல்லிப் போகிறாள்
முன்பின் நானறியா
அழகிய யுவதி

எனக்கு முன்வரை
கடுகடுத்தும்
வெறுப்பேற்றியுமே
பேசிவந்த நடத்துநர்
"ஐயா நீங்கள் எங்கு செல்ல வேண்டும் " என
அன்புடன் வினவி நிற்கிறார்

நேரில் பார்த்தறியாது
எழுத்தின் மூலம் அறிந்த
முகமறியா பதிவுலக நட்புகள் எல்லாம்
தவறாது பெயருக்குப் பின்
"ஐயாவை" இணைத்துவிடுகின்றனர்

இளமை கொடுத்த
வலுவும் திமுறும்
கொடுத்த மதிப்பினும்
நரையும் முதிர்ச்சிகொடுக்கும் மதிப்புத்தான்
எத்தனை உயர்வானது !

அதனை அனுபவிக்கவேண்டியேனும்
அனைவரும் நிச்சயம்
நீடுழி வாழ்வதோடு
முதிர்ச்சி அடைந்தும் வாழவேண்டும்
எனப் பிரார்த்திக்கிறேன்
ஆண்டவனே நீ அருள் புரி