Friday, July 31, 2015

எண்ணங்களின் வலிமையறிவோம்

மனவெளி அரங்குகளில்
கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே

நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ  எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே

நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
 மறக்க வைத்து
இழக்கவைத்து
நம் உயர்வைத் தடுப்பது எண்ணமே

தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு

வேரைப்  பொருத்தே
செடியின் செழிப்பு

எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு

மனத்தைப் பொருத்தே
செயலின் போக்கு

செயலைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

என்றும்
 எப்போதும்
 இதனை
மறவாது மனதில் கொள்வோம்-

வாழ்வில்
எதிர்படும் தடைகள்  எதையும்
 மிக மிக எளிதாய் வென்று உயர்வோம் 

கலைகளின் தெய்வமே சரஸ்வதி

ஒருநொடி உனதிரு அருள் விழி
எந்தனைக் கண்டிட அருள்புரி
அருவியும் மருகிடும் வகையினில்
கவியது பெருகிடத் தினமினி

ஒருமொழி திருமொழி எனும்படி
முதலடி தொடுத்தெனை நடத்துநீ
கருவது ஊற்றெனப் பெருகிட
கவியென உலகிதே போற்றிட

தினமொரு கணமது உன்வழி
நினைவுகள் கடந்திட துணைபுரி
மனமது மலரென மலர்ந்திட
கவியது மழையெனப் பொழிந்திட

உனதொரு அருளினை அண்டியே
பிதற்றுமென் கவிமன நிலையறி
உனதடி சரணமே சரணமே
கலைகளின் தெய்வமே சரஸ்வதி

Thursday, July 30, 2015

புகழுடம்பு

தேடிநித்தம் சேர்த்ததெல்லாம்
தெருக்குப்பை ஆகிவிடும்
தேடியோடிப் படித்ததெல்லாம்
தொலைந்தெங்கோ  ஓடிவிடும்
கூடியாடிக் களித்ததெல்லாம்
வெறுங்கனவாய் மாறிவிடும்
தேடிவந்து காலனவன்
மூச்சடைக்க நடந்துவிடும்

வெளியோடி உள்ளோடி
உயிரதற்கு ஆதரவாய்
ஒலியதனைத் தினம்கடத்தும்
ஒப்பற்றச் சாதனமாய்
நொடிதோரும் உழைத்திட்ட
வளியதுவும் திசைமாறும்
வெளியோடு நின்றுடலை
பிணமாக்கி சுகம்காணும்

தினமுலவி வாழ்வதற்கும்
நிம்மதியாய் சாய்வதற்கும்
தினந்தோரும் வகைவகையாய்
தின்றுவுயிர் வளர்ப்பதற்கும்
மனமிளகித் தாய்போலத்
தனைத்தந்த நிலமகளும்
மனங்கெட்டு அரக்கியாகி
உடல்தின்னத் துணிந்துவிடும்

நதியாகித் தினமோடி
நாடெல்லாம் செழிப்பாக்கி
தவிப்பெடுத்த உயிரனைத்தின்
தாகமதை தினம்தீர்த்த
அதிமதுர நீரதுவும்
நிலைமாறும் முகம்மாறும்
பொதியான பிணம்கழுவும்
புழக்கடைநீர் போலாகும்

உடல்நலத்தைத் தினம்காக்கும்
உணவாக்க உறுதுணையாய்
கசடுயெனத் தினம்சேரும்
கழிவழிக்கப் பெருந்துணையாய்
உடனிருந்த பெருந்தீயும்
கொண்டகுணம் விட்டுவிடும்
உடலெரித்துப் பசியடக்கப்
பேராசைக் கொண்டுவிடும்

நான்கினையும் உள்ளடக்கி
ஏதுமில்லை என்பதுபோல்
காண்பதற்குத் தெரிந்தாலும்
கடவுள்போல் யாதுமாகி
ஆண்டுவரும் வெளியதுவும்
அரக்ககுணம் கொண்டுவுடல்
தாண்டிவரும் உயிரதனை
விழுங்கிடவே தினமலையும்

உடலோடு உயிரிருக்க
உள்ளன்பின் துணையோடு
உலகத்தார் மேன்மையுற
உழைக்கின்ற உழைப்பொன்றே
உடல்விட்டு உயிர்பிரிந்தும்
உலகுவிட்டு மறையாது
புகழுடம்பு எடுத்திங்கு
எந்நாளும் நிலைத்திருக்கும்

Wednesday, July 29, 2015

புரியாத சில புதிர்கள்

கடவுள் மீதும்
சாஸ்திரங்கள் மீதும்
நம்பிக்கையற்றவனுக்கு வாரீசுகள்
டஜன் கணக்கில் இருக்க

பூர்வ புண்ணிய  பாக்கிய ஸ்தானங்களின்
தோஷ ங்களை
புண்ணிய ஷேத்திரங்களிருந்து
 சீர் செய்யும் பண்டிதருக்கு
ஏனோ குழந்தை பாக்கியம் இல்லை

இலக்கண அறிவு
மருந்துக்கும் இன்றி
இட்டுக் கட்டிப் பாடும்
சுந்தர பாகவதரின் பாடல்களில்
இலக்கணச செறிவு
 பூரணமாய் அமைய

 இருபதாண்டு அனுபவமிக்க
தமிழ் பேராசிரியருக்கு
எத்தனை முயன்றும்  ஏனோ
 கவிதை  ஒருவரி எழுத வரவில்லை

வரப்பு வாய்க்கால் தகராறில்
பங்காளியின் தலையெடுத்தவனின் வாரீசு
படித்து முடித்து முதல் நிலை அலுவலராய்
முன்னேறிச் சிறக்க

சமூகத்தின் மேன்மை குறித்து
அன்றாடம் மேடையில் முழங்கும்
தலைவரின் வாரீசுகள்  எல்லாம்
தறுதலையாய்த் திரியவதை
ஏனோ தடுத்திட முடியவில்லை

கீழான உணர்வுகளைத் தூண்டிவிட்டு
ஒரு தலைமுறையையே
தடம் மாற ச் செய்பவனின்
படைப்புகள் எல்லாம்
பட்டி தொட்டியெல்லாம் பவனி வர


அடுத்த தலை முறை குறித்து
அக்கறை கொண்டவனின்
 படைப்புகள் எல்லாம்
கரையானுக்கு விருந்தாவதை
ஏனோ தடுத்திட முடியவில்லை

விளக்கங்கள்
ஆயிரம் சொன்ன போதும்
சில விஷயங்கள் புரியத்தான் இல்லை

எப்படித்தான் முயன்றபோதும்
சில புதிருக்கான விடை
கடைசிவரை புரியத்தான் இல்லை

Tuesday, July 28, 2015

கவிதையும் குழம்பும்

கவிதைகள் குறித்து
நானும் மனைவியும்
விவாதித்துக் கொண்டிருந்தோம்

"அனுபவங்களை மட்டுமே
மூலதனமாக்கிச் செய்த கவிதைகள்
வெற்றுப் புலம்பலையும்

கருவின் விளக்கத்தையே
இலக்காகக்  கொண்டவை
மழைக்காலத் தவளைகளையும்

வார்த்தை ஜாலங்களை மட்டுமே
நம்பிச் செய்தவைகள்
கழைக் கூத்தாடிகளையுமே
 நினைவூட்டிப்போகின்றன

மூன்றின் சம அளவுச் சேர்மானமே
நல்ல கவிதைகளாகின்றன  " என்றேன்

"அப்படியானால் கவிதைகள் கூட
குழம்பு போலத்தானோ  ? "
என்றாள் துணைவி

"குழம்பு எப்படிக்  கவிதையாகும் ? "
என்றேன் குழப்பத்துடன்

அவள் பொறுமையாய் விளக்கினாள்
" புளி உப்பு மிளகாய்
குழம்புக்கு அவசியத் தேவை
அவை இல்லாது ருசியில்லை
ஆயினும் அவைகளின் இருப்பு தெரியாத
மிகச் சரியான சேர்மானமே
ருசியான குழம்பு " என்றாள்

"அப்படியானால் நன்கு  சமைக்கிற
பெண்கள் எல்லோரும்
கவிதாயினிகள் தானா ? "என்றேன்

" நிச்சயமாக
நீங்கள் பிறர் ரசிக்கப்
படைக்கும் குழம்பு - கவிதை

நாங்கள் பிறர்
ருசிக்கச் செய்யும்
கவிதை- குழம்பு" என்றாள்

Monday, July 27, 2015

எங்கள் அப்துல் "கலாமே '


தமிழில்
இருக் "கலாம் "
வந்திருக் "கலாம் "
போயிருக் "கலாம் "
செய்திருக் "கலாம் "
முடித்திருக் "கலாம் "
நினைத்திருக் "கலாம் "

இப்படி நூறு வார்த்தைகள் உண்டு
ஆயினும்
இவைகள் அனைத்தும்
தெளிவற்றவை
உறுதியற்றவை
நேர்மறைத் தன்மையற்றவை

ஆயினும்
தமிழுக்கு
தமிழனுக்கு
இந்தியனுக்கு

உறுதியை உறுதி செய்வதாய்
நேர்மறைத்தன்மை ஊட்டுவதாய்
இளைஞர்கள் நரம்புகளை முறுக்கேற்றுவதாய்
ஒளிகூட்டுவதாய்
வழிகாட்டுவதாய்

ஒரே ஒரு "கலாமாய் " வந்தவரே
அப்துல் "கலாமாய் " ஒளிர்ந்தவரே

இந்த நூற்றாண்டில்
இந்தியனின்  உன்னத உயர்வுக்கு
காரணமாய இருந்தவரே
தொடர்ந்து இருப்பவரே

இன்னும் சிலகாலம்
இருந்து வழிகாட்டியாய்
இருந்திருக் "கலாம் "என
இந்தியரெல்லாம்
கண்ணீர்விடவைத்து....

அந்தப் பொறாமைப் பிடித்த காலன்
தன் கோரமுகத்தை
அழிக்கும் புத்தியை
உங்கள் விசயத்திலும்
காட்டிவிட்டானே  "பாவி "

அந்தக் காலனை
முன்னே வரவைத்து
காலால் எட்டி உதைத்து
காலம் வென்றவர்கள் பட்டியலில்
முண்டாசுக் கவிஞர் வரிசையில்
எங்கள் அப்துல் "கலாமே '
நீங்களும் சேர்ந்துவிட்ட இரகசியம்
அறிய மாட்டான் அந்த அப் "பாவி "

விழித்து இருக்க
வருவதே கனவென
புதிய வேதம் சொன்னவரே

நீங்கள் ஒளிகூட்டிக் கொடுத்த
தீபமதைக் கையிலேந்தி
புதிய உலகை நிச்சயம் படைப்போம்

இறுதி மூச்சு வரை
ஓயாது உழைத்த பெருந்தகையே

இனியேனும் கொஞ்சம் ஓய்வெடுப்பீர்

நீங்கள் காட்டிய வழியில்
வீறு போடத் துடித்திருக்கும்
இளைஞர் படைதனைக் கண்டு

இனியேனும் இரசித்து மகிழ்ந்திருப்பீர்

எதுகை மோனைத் தேடி நித்தம்

எதுகை மோனைத் தேடி நித்தம்
மொகட்டைப் பாக்கும் மாமா-தாடித்
தடவி நோகும் மாமா

ஒதுங்கி ஓடும் வார்த்தைத் தேடி
அலஞ்சு திரியும் மாமா-மனசு
கலங்கித் திரியும் மாமா

அச்சு ஒண்ணு செஞ்சு வச்சு
வெல்லம் செய்தல் போல-அச்சு
வெல்லம் செய்தல் போல

குட்ட குழியை கணக்கா வைச்சு
மாவு இடுதல் போல-இட்லி
சுளுவா சுடுதல் போல

சந்தம் ஒண்ணு நெஞ்சில் வைச்சு
எழுதிப் பாரு மாமா-நீயும்
பழகிப் பாரு மாமா

பெஞ்ச மழையில் காட்டு ஆறு
ஓடி வருதல் போல-அடப்பைத்
தாவி வருதல் போல

கவிதை நூறு உனக்குள் ஊறித்
திமிறி வருமே மாமா-தானா
பெருகி வருமே மாமா

எளிதா கவிதை வசத்தில் வந்தா
என்னப் பாடு மாமா-அதுக்கே
இந்தக் கவிதை மாமா