Wednesday, September 30, 2015

ஆலையில்லா ஊரில்...

அவசரத்தில் போகிற போக்கில்
எதிர்படும் நண்பனை
விசாரித்துப்போகும் "மினிச் சுகத்தை "
"டுவீட்டுகளிலும்

அவசியமாக தவிர்க்க முடியாது
காத்திருக்கும் தருணங்களில்
சந்தித்த நண்பனுடன்
உரையாடும் "தனிச் சுகத்தை "
"முக நூலிலும் "

விடுமுறை நாட்களில்
ஊர்க்கோடி பாலத்தில் அமர்ந்து
சாவகாசமாகப் பேசும் "அற்புதச் சுகத்தை"
"பதிவுப் பக்கங்களிலும் "

அனுபவித்தபடி என்னை நான்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்

என்ன செய்வது
கடமைச் சுமை அழுத்த
கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக்  காட்டுக்குள் வசிப்பவன்
முழு நிலவின் அழகையும்
மனதைக் குளிர் விக்கும்
அந்தப் பனிப் பொழிவையும்
குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில்
கண்டு  தானே
" மெய்மறக்க  " முடியும் ?

Monday, September 28, 2015

மண் சட்டியில் ஃப்ளுடா

" குறிப்பிட்டுச் சொல்லும்படியாக
உன் படைப்புகளில் ஏதும் இல்லை

ஆனாலும் ஏதோ இருப்பது போல
பாவனை காட்டி மயக்குகிறது

அது எப்படி ?  "என்றேன்
எனைக் கவர்ந்த கவிஞனிடம்

"அது பெரிய விஷயமே இல்லை
யாரிடமும் சொல்லாவிட்டால்
உனக்கும் அந்த சூட்சுமம் சொல்கிறேன்"என்றான்
சத்தியம் வாங்காத குறையாய்

எதற்கும் ஆகட்டும் என
தலையாட்டி வைக்க அவனே தொடர்ந்தான்

"எதனை எழுதத் துவங்கும் முன்பும்
அறிஞர் சபையில்
அரங்கேற்றப்படும் கவிதைக்குரிய
கரு தேடி மெனக் கெடுகிறேன்

கரு கிடைத்ததும்
பாமரன் சபையில்
அரங்கேற்றப்படும் கவிதைக்குரிய
எளிய சொற்களால் பகிர்கிறேன்
அவ்வளவே" என்றான்

நான் குழம்பி நின்றேன்
அவனே தொடர்ந்தான்

"சில சமயம்
எதை எழுதத் துவங்கும் முன்பும்
பாமரர் முன் அரங்கேற்றப்படும்
கவிதைக்குரிய கரு தேடி மெனக்கெடுகிறேன்

அது கிடைத்ததும்
அறிஞர் சபையில் அரங்கேற்றப்படும்
கவிதைக்குரிய கனத்த சொற்களை அடுக்கி
படைப்பாக்கிக் கொடுக்கிறேன்

மொத்தத்தில்
மண் சட்டியில் ஃபளூடாவையும்
வெள்ளிக் கிண்ணத்தில் கூழையும்.."
எனச் சொல்லிக் கண் சிமிட்டுகிறான்

கண் சிமிட்டலுக்கான அர்த்தம் புரியவில்லை
குழப்பம் எனக்குள் கூடித்தான் போகிறது

அவன் படைப்புகளை மீண்டும் படித்துத்தான்
தெளிவு கொள்ள வேண்டும்

Sunday, September 27, 2015

பயிற்சியும் வளர்ச்சியும்

எந்த ஒரு ஸ்தாபனமோ, அமைப்போ ,தொடர்ந்து
தேங்குதல் இன்றி தொடர் வளர்ச்சி பெற
வேண்டுமாயின்அதன் உறுப்பினர்களுக்கு
தலைவர்கள் மூலமும்,தலைவர்களுக்கு
சிறந்த பயிறுனர்களைக் கொண்டும்
அவரவர்கள் நிலைகளுக்குத் தக்கவாறு தொடர்
பயிற்சிகள் அளித்தவண்ணம் இருக்கவேண்டும்

அந்த வகையில் எங்கள் 324  பி3 அரிமா மாவட்ட
(மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ரெவென்யூ
மாவட்டங்கள் உள்ளடக்கிய )
ஆளுநர் எம்.ராமசுப்பு பி எம் ஜே ஃப்அவர்கள்
இந்தவருடம் தேர்வு செய்யப்பட்ட சங்கத்
தலைவர் செயலாளர்பொருளாளர்களுக்கு
இந்தியாவின் சிறந்த தலைமைப் பண்புப்
பயிற்றுநர்களை கொண்டு,
மண்டலத் தலைவர் ,வட்டாரத் தலைவர்
அவர்களின் ஒத்துழைப்புடன் அருமையான ஒரு
தலைமைப் பண்புப் பயிற்சிப்பட்டறைக்கு
ஏற்பாடு செய்திருந்தார்கள்

காலை துவங்கி முன்னிரவு வரை மிகச் சிறப்பாக
நடைபெற்ற அந்தப் பயிற்சிப்பட்டறையில் எனது
பொறுப்பில் இருக்கும் சங்கத் தலைவர்கள்
பயன்படும்படியாக அவர்கள் அனைவரையும்
கலந்து கொள்ளச் செய்துபயன்பெறச் செய்தமைக்காக
வட்டாரத் தலைவர் என்கிற முறையில் நானும்
ஆளுநரால் கௌரவிக்கப்ப்ட்டேன்

அந்த புகைப்படங்களில் சிலவற்றை பகிர்வதில்
பெரும் மகிழ்வு கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்...

Saturday, September 26, 2015

புதுகைப்பதிவர் திருவிழா ( 9 )) கால இயந்திரத்தின் தயவில் ( 3 )

நான் பதிவர் திரு விழாவுக்கு வருகிற
போதெல்லாம்நமது பதிவர்களின் நூல்களை
வாங்குவதற்கென்றேஒரு தொகையை
ஒதுக்கி வருவேன்

இம்முறை வெளியிடப்படுகிற நூல்கள் அல்லாது
பதிவுலகப் பிதாமகரின் சிறுகதைத் தொகுதிகளும்
கீத மஞ்சரி , கவிஞர் ரூபன் ,
வாத்தியாரின் ஜோதிட நூல்அவசியம் அனைவரின்
வீட்டுலும் இருக்கவேண்டிய  டாலர் தேசம் ,
தென்றல் சசிகலாவின் கவிதைகள்
புலவர் ராமானுஜம் அவர்களின் கவிதை நூல்
மற்றும் பல பதிவர்களின் புத்தகம் இருந்தது
 மகிழ்வளித்தது

கூடுமானவரையில் அனைத்துப் பதிவர்களின்
நூலிலும்ஒவ்வொன்றை வாங்கிக் கொண்டு
அந்த பிரமாண்டமானஅரங்கினுள் நுழைந்தேன்

அரங்கினுள் நுழைந்ததுமே அந்த
மேடை அமைப்பும்மேடையின் பின்புறம்
அமைக்கப்பட்டிருந்த
நமது லோகோ தாங்கிய ஃபிளக்ஸும்
ஒரு பிரமாண்டமான நிகழ்வுக்குத் தான்
வந்திருக்கிறோம் என்கிற உணர்வினை
உறுதி செய்தன

மேடை ஒலி வாங்கியின் முன் அழகாக
தொங்கவிடப்பட்டிருந்த போடியம்
பேனர் அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது

ஒலிம்பிக் கொடியை எப்படி அடுத்து
எந்த நாட்டில் நடக்கப் போகிறதோ
அந்த நாட்டினரிடம் ஒப்படைத்தல் போல்
இந்த பேனரையும்அடுத்து பதிவர் சந்திப்பு
நடக்க இருக்கிற மாவட்டத்துக்காரரிடம்
ஒப்படைக்க இருப்பதாக அறிந்து மகிழ்வுற்றேன்

நான் ஏற்கெனவே வந்து அமர்ந்திருந்த
நான அறிந்தபதிவர்கள் அனைவரிடமும்
உரையாடிவிட்டு( வயதுக்கு ஏற்றார்ப்போல)
அரங்கின் முன் வரிசையில்அமர்ந்திருந்த
மூத்த பதிவர்களுடன் அமர்ந்து கொண்டேன்

பதிவர்கள் சந்திப்பின் நிர்வாகக் குழு
உறுப்பினர்களுடன் முத்து நிலவன் ஐயா அவர்கள்
மேடைக்கு முக்கியஸ்தர்களை
அழைக்கத் துவங்க விழா அற்புதமாய்த்  துவங்கியது

( தொடரும் )

Friday, September 25, 2015

புதுகைப் பதிவர் திருவிழா ( 8 ) கால இயந்திர தயவில் ( 2 )

சிற்றுண்டிச் சாலை மிக விஸ்தாரமாக
குறைந்த பட்சம்300 பேர் தாராளமாக அமர்ந்து
உணவருந்துப் படியாக சிறப்பாக இருந்தது

காலைச் சிற்றுண்டியை பஃபே முறையில்
 உண்ணும்படியாகஏற்பாடு செய்திருந்தார்கள்.
இது போன்ற நிகழ்வுகளில் பிறருடனானத்
தொடர்புக்குஇந்த பஃபே முறைதானே  சிறந்தது

ஏனெனில் நிகழ்ச்சித் துவங்கிவிட்டால் அனைவரும்
 தம்ஒட்டு மொத்த கவனத்தை அதில்தானே
செலுத்த இயலும்

இடையில் இருப்பது மதிய உணவு நேரம்.
அது எப்படியும்வாழை இலை போட்டு நம்
பாரம்பரிய முறையில் இருந்தால்தானே
சிறப்பாக இருக்கச் சாத்தியம்.

அப்போது ஒருவரை ஒருவர்சந்தித்துப் பேச
சாத்தியம் இல்லை எனவே இந்த ஏற்பாடு
எனக்கு மிகவும் பிடித்திருந்தது

காலை உணவுக்கு எப்படியும் 150 பேருக்குக்
குறையாமல் இருப்பார்கள்.அவர்கள் ஒரே வரிசையில்
இருந்து உணவு பெற வேண்டுமானால தேவையற்ற
தாமதம்  ஏற்படுத்தும் என்ற நோக்கில் இருபக்கமும்
உணவு தரும்படி ஏற்பாடு செய்திருந்தது
சிறப்பாக இருந்தது

குறிப்பிட்ட உணவை அளவு அதிகம்
உண்ணும்படியாகச் செய்யாமல் பல வகைப்பட்ட
 உணவை அளவு குறைவாக இரசித்து உண்ணும்படியான
நோக்கில் ஆறு ஐயிட்டங்களாக வைத்திருந்தார்கள்.
இனிப்பு மற்றும் காரப் பணியாரம்
இட்டிலி பொங்கல் வடை பூரி என வைத்திருந்தது
வசதியாக இருந்தது.

அவரவர்களுக்குத் தேவையானதை
 பிடித்ததை கூடுதலாகப் பெற்றுக் கொள்ளவும்
பிடிக்காததை தவிர்க்கவும்
இந்த ஏற்பாடு வசதியாக இருந்தது

தண்ணீர் பாட்டிலை வைக்காது ஹாலின்
 மையப் பகுதியில் சில்வர் டம்ளர்களில் ஒருவர்
நீர் நிரப்பியபடி இருந்தார்

ஹாலின் ஒவ்வொரு மூலையிலும் குடி நீர்
பிடித்துக்குடிக்கும்படியாக ஏற்பாடுகளையும்
செய்திருந்தார்கள்

அதைப் போல சிற்றுண்டி பெருவதற்காக
ஒரு புறம்100 எவர்சில்வர் தட்டும் மறுபுறம்
100 பாக்குத் தட்டும் பேப்பர் போட்டு அழகாக
அடுக்கி வைத்திருந்தார்கள்

இரண்டு வகையாக எதற்கு  ?
தண்ணிர் பாட்டில் வைக்காது
 சில்வர் டம்ளர் எதற்கு " என்றேன்

பிளாஸ்டிக் தட்டு மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்
உபயோகித்துநாமே பிளாஸ்டிக் கழிவுகளை
உண்டாக்கவேண்டாம என்கிற நோக்கத் தோடும்,
விழா நிகழ்வு முடிந்ததும் சில்வர் ஜக்
டம்ப்ளர் மற்றும் சில்வர் தட்டுகளை ஏதாவது
 ஒரு ஆதரவற்றோர்இல்லத்திற்கு அளித்து விடலாமே ."
என்றார்கள்

அவர்கள் சொல்வதும் மிகச் சரியாகத்தான் இருந்தது
இரண்டு வேளை தண்ணீர்  பாட்டில் செலவும் டம்ளர்
விலையும் ஒன்றாகத்தான் வரும்.தண்ணீர் மட்டும்
வாங்க வேண்டி இருக்கும்.அவ்வளவுதானே

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பல வகைகளில்
மாற்றி யோசித்துச் செய்யும் புதுகைப் பதிவர்களை
நினைக்க நினைக்க மனம் மிகப் பூரிப்படைத்தது

அத்துடன் அருமையான சிற்றுண்டி
கொடுத்த திருப்தியிலும் மெல்ல முன்  அரங்கில்
வைத்திருந்த புத்தக ஸ்டாலை நோக்கி
என்  நடையைக் கட்டினேன்


(தொடரும் )

Thursday, September 24, 2015

புதுகை பதிவர் திருவிழா ( 7 ) கால இயந்திர தயவில்

சனிக்கிழமை காலையிலேயே கிளம்புதலே
சரியாக இருக்கும்எனக் கருதி இரண்டு நாட்களுக்குள்ள
ஏற்பாடுகளோடுநான் மாலை புதுகை வந்து சேர்ந்தேன்

ஏற்கெனவே பதிவில் விழா நடக்கும் இடத்திற்கான
வழியினைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததால்
இடத்தைக் கண்டுபிடிப்பது அத்தனை சிரமாக இல்லை

உள்ளே மண்டபத்தில் புதுகை விழாக் குழுவினர்
அனைவரும்பம்பரமாக சுழன்றுப் பணியாற்றிக்
கொண்டிருந்தபோதிலும்முக மலர்ச்சியோடு
என்னை அன்புடன் வரவேற்பதில்
குறைவைக்கவில்லை

சென்னை  கோவை மற்றும் திருச்சிப் பதிவர்கள்
பெரும்பாலானவர்கள்முன்னமே வந்திருந்ததும்
உடன் விழாக் குழுவினருடன் இணைந்து
பணியாற்றிக் கொண்டிருந்தது ரம்மியமான
காட்சியாக இருந்தது

சிறிது நேரம் அவர்களுடன் உரையாடிக்
கொண்டிருந்துவிட்டுஅவர்கள் இரவு தங்குவதற்கு
ஏற்பாடு செய்திருந்த இடத்தில்
நன்றாக ஓய்வெடுத்தேன்

காலையில் மிகச் சரியாக எட்டு மணிக்கெல்லாம்
 விழா மண்டபத்திற்கு வந்து சேர்ந்தேன்.
பொய்கையில் பூத்திருக்கும் தாமரைபோல
 அல்லிபோலவிழாக் குழுவினர் ஒத்த உடையில்
இருந்ததுஅவர்களை வெளியூர் பதிவர்கள்
குழப்பமின்றித் தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது

மண்டபத்தின் முன்புறம் பதிவுக்கான ஏற்பாடுகளை
மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.

இதற்கு முந்தைய சந்திப்பில்
செய்திருந்ததைப் போல ஒட்டு மொத்தமாக இல்லாது
ஐந்து மாவட்டங்களுக்கு ஒருவர் எனத் தனித் தனியாக
பதிவுக்கு ஏற்பாடு செய்திருந்ததும்,
அதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கென தனித் தனியாக
பக்கம் ஒதுக்கி பதிவு செய்ததும் மிகச் சிறப்பாக இருந்தது

அதற்கான காரணம் கேட்டபோது
இதன் மூலம் சட்டென ஒவ்வொரு மாவட்டத்திலும்
எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என அறியவும்
மேடையில் விடுதல் இன்றி அறிமுகப் படுத்தவும்
வசதியாக இருக்கும் என்றார்கள்

இப்படி ஒவ்வொரு விசயத்திலும் வித்தியாசமாகவும்
அருமையாகவும்அவர்கள் செய்திருக்கிற ஏற்பாடுகள்
என்னை மலைக்க வைத்தது

அவர்களிடம் எனக்கான அருமையான அடையாள
அட்டையைப் பெற்றுக்கொண்டு சிற்றுண்டிச்
சாலை நோக்கி நடக்கத் துவங்கினேன்

தொடரும்---

Wednesday, September 23, 2015

புதுகை பதிவர் சந்திப்பு, ( 6 )

தாமரைப் பூத்த தடாகம்
பார்க்கையில் கொள்ளை அழகுதான்
ஆயினும் அது தேக்கிவைத்திருக்கும் குளுமை
அதனினும் மிக அருமையானது
அது பார்வைக்குப் பிடிபடாதது
அந்தச்  சொல்லுக்கு அடங்கா இனிமை
குளத்தினுள்  இறங்கிடத் துணிபவருக்குமட்டுமே
நிறைவாய் கிடைத்திடச்  சாத்தியம்

தத்தித் தவழும் குழந்தை
பார்க்கப் பார்க்க  அழகுதான்
ஆயினும் அது தன்னுள் கொண்டிருக்கும்
தெய்வீக மகிழ்வுப் பிரவாகம்
பார்வைக்குப் பிடிபடாதது
அதன் அருமை பெருமை
அதனை அள்ளிக் கொஞ்சத் தெரிந்தவர்கள் மட்டுமே
முழுதாய் அனுபவத்தறியச் சாத்தியம்

சன்னதிக்குள் காட்சிதரும் தெய்வம்
கண்கொள்ளா அருமைக் காட்சிதான்
அதனினும் அதன் அளவிடமுடியா அருட்திறம்
அறிவிற்குப் பிடிபடாததது
நிரூபிக்க இயலாதது
ஆயினும் அதன் அருளும் சக்தி
மாசற்ற நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே
அறிந்து உணர்ந்து பெறச் சாத்தியம்

பதிவர்களின்  பரந்துபட்ட திறத்தினை
பொது நல நோக்கப்    பண்பினை
எழுத்தில்  காணுதல் மகிழ்வுதான்
அதனினும் அவர்தம் பண்பு நலம்
நட்புக்கென உயிர்தரும் உயர்குணம்
பதிவில் அறிய முடியாததே
விளக்கியும் புரிய முடியாததே
ஆயினும் அவர்தம் அருமை பெருமைதனை
சந்திப்பில் சந்தித்து  மகிழ்ந்திருப்போர் மட்டுமே
தெளிவாய்  முழுதாய் புரியச் சாத்தியம்

எனவே
பதிவர் அனைவரும் அவசியம் வருவீர்
சந்திப்பின் சக்தியை முழுதாய் உணர்வீர்