Wednesday, March 30, 2016

கவிக்கு அதுதான் உயிர்ச்சேர்க்கும்..

உப்பும் உரப்பும்
சரியா இருந்தாலும்
சத்தும் இருக்கணும் தம்பி-உடம்புக்கு
அதுதான் உரம் சேர்க்கும் தம்பி

நிறமும் அழகும்
நிறைஞ்சு இருந்தாலும்
மணமும் அவசியம் தம்பி-பூவை
அதுதான் சிறப்பாக்கும் தம்பி

தாளமும் இராகமும்
ஒத்து இருந்தாலும்
பாவமும் சேரணும் தம்பி-பாட்டை
அதுதான் அமுதாக்கும் தம்பி

எடுப்பும் தொடுப்பும்
இதமா இருந்தாலும்
முடிப்பதும்  அமையணும்  தம்பி-எதையும்
அதுதான்  நிறைவாக்கும் தம்பி 

எதுகையும் மோனையும்
அழகா இணைஞ்சாலும்
கருவும் அவசியம் தம்பி-கவிக்கு
அதுதான் உயிர்ச்சேர்க்கும் தம்பி

Monday, March 28, 2016

தலைவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்..

தலைவர்களைத்
தொந்தரவு செய்யாதீர்கள்

அவர்கள்
நமக்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

கொள்கைப்படி
இணைவது எனில்
முரண்பட வாய்ப்புண்டு என்பதால்

கொள்கைகளை ஓரம் வைத்து விட்டுத்தான்
நமக்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

அவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள்

மிகக் குறைந்த செயல்திட்டம் எனில்
பதவி பிடிப்பதுதான்

அதற்கும் மிகக் குறைவாக
செயல்திட்டம் வகுத்துச் சேர
வாய்ப்பே இல்லை
அது கூட நமக்காகத்தான்

அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள்

திருமணம்  அனைவரும் அறியச் செய்யலாம்
சீர் செனத்தி எல்லாம்
தனியாகப் பேசினால்தான் சரியாய் வரும்
மாறிச் செய்தல் மரபில்லை

பேசி முடியட்டும்
திருமணம் நம் முன்னால்தானே
கொஞ்சம் பொறுமையாய் இருங்கள்

இன உணர்வு
மத உணர்வு
மொழி உணர்வு
ஜாதி உணர்வு
பண உணர்வு
அனைத்தும் நமக்குண்டு என்பதுவும்

இந்தத் தேர்தலில்
எதைத் தூக்கி
எதை அமுக்கினால்
எல்லாம்  சரியாய் வரும் என்பது
அவர்களுக்கு நன்றாகத் தெரியும்

நாம் அவசரப் படாமல் இருப்போம்

கூட்டணி முடிவானபின்
ஒரே மேடையில்
ஒருவர் கையை ஒருவர் பிடித்து
உயரத்  தூக்கி
கொள்கைப் பிரகடனம் செய்வார்கள்

அது நமக்கும்
உடன்பாடாகத்தான் தெரியும்
அல்லது
தெரியவைப்பார்கள்

மதுக் கடையை
மூடச் சொல்லிக்  கோரும்
எந்தக் கட்சியும்
தொண்டர்களை குடிக்காதே எனத்
தொந்தரவு செய்வதில்லை அல்லவா

அது நமக்கு உடன்பாடுதானே

அப்படித்தான்

அவர்கள் கூட்டணித் தர்மத்தை
கொள்கை கோட்பாட்டை
நமக்கு உடன்பாடாக மட்டுமல்ல
நாம் இரசிக்கும்படியாகவே
மிக அருமையாகச் சொல்வார்கள்

எனவே தலைவர்களை
இப்போது
தொந்தரவு செய்யாதீர்கள்

அவர்கள் நமக்காகத்தான்
பேசிக் கொண்டிருப்பதாக
நடித்துக் கொண்டிருக்கிறார்கள்

நாமும் அவர்களை
நம்புவது போலவே
 நடித்துக் கொண்டிருப்போம்  

Sunday, March 27, 2016

கவிதையைப் போலவும்...

"இப்படி
விழுந்து விழுந்து ரசிப்பதற்கும்
தொடர்ந்து விடாது ரசிப்பதற்கும்
இதில் அப்படி என்னதான் இருக்கு ? "
என விலகி நின்றும்
விலகியும்  போயினர் சிலர்

"இதில் இறங்க விருப்பமில்லை
தேவையுமில்லை "என
அதனால் விரிந்த முன்பரப்பில்
அமர்ந்து எழுந்து
மனம் ஒட்டாதே  போயினர்  பலர்

"இதனில்
முழுதும் நனைந்திடாது
பட்டும்படாமலும் ரசிப்பதே சுகம் "என
கால் மட்டும் நனைத்துப்
உற்சாகம் கொண்டு  நகர்ந்தனர் சிலர்

"இதனுள்
வீழ்ந்துக் கிடப்பதும்
நீந்திக் களிப்பதும்தான் பேரானந்தம் "என
செயற்கை அணிகலன்கள்
அனைத்தையும் அகற்றி
மூழ்கிச் சுகித்தனர் வெகு சிலர்

"இந்த
விரிந்து பரந்த
பிரமாண்டம்தான் எத்தனைப் பேரின்பம் "என
வியந்தும் விக்கித்தும்
தனைமறந்தும் சூழல் மறந்தும்
தவசியாய்க் கிடந்தனர் வெகு வெகு சிலர்

தன்னிலை மாறாது
எப்போதும்போல்
அதுவாகவே அது இருப்பினும்
எல்லோரின் நினைப்புக்கும்
ஏற்றதாகவும் இருந்தது
விரிந்து பரந்துக் கிடந்த அந்த நீலக்கடல்

கவிதையைப் போலவும்... 

Friday, March 25, 2016

ஓட்டுக்குத் துட்டு

ஓட்டுக்குத் துட்டு
துட்டுக்கு ஓட்டு
நாட்டுக்குக்கும் வீட்டுக்கும் கேடு-நம்ம
வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு

வேரறுத்து வென்னீ
ஊத்திவிட்ட மரமா
ஊருலகு ஆகவேணாம் மச்சான்-காரணமா
நாமளுமே ஆகவேணாம் மச்சான்

ஆண்டப்ப கோடி
அடிச்சவன் எல்லாம்
மீண்டுமதைச் செய்யவே தாரான்-நம்மை
முட்டாளா நினைச்சே தாரான்

புதுசா தேர்தலில்
புகுர்ரவன் கூட
விதைப்பதா நினைச்சே தாரான்-நாளய
விளைச்சல  நினைச்சே தாரான்

கொம்பின விட்டு
வாலினைப் பிடிச்சா
நொந்துதான் போகணும் மச்சான்-நாளும்
வெந்துதான் சாகணும் மச்சான்

காசெடெத்து  எவனும்
வாசப்படி வந்தா
பூசபோட ரெடியாகு மச்சான்-நானும்
புகுந்து ரெண்டு போடறேனே மச்சான்

Tuesday, March 22, 2016

கணியனும் கணினியும்....

அப்துல் காதருக்கும்
அமாவாசைக்கும்
முதல் எழுத்துச் சம்பந்தமன்றி
வேறேதும் சம்பந்தமில்லை என்பது
எனக்கும் உடன்பாடுதான்

ஆயினும்
கணியன் பூங்குன்றனாருக்கும்
கணினிக்கும்
முதல் இரண்டெழுத்து மட்டுமே சம்பந்தம்
என ஏனோ ஏற்றுக் கொள்ளமுடியவில்லை

ஏனெனில்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
எனக் கவிதையாக
கணியன்
அன்று சொல்லிப் போனதை

கணினி தானே
மிக எளிதாய்
இன்று சாத்தியமாக்கிப் போகிறது ?


ஆத்திக நாத்திக வாதம்.

சுவையது குறித்தும்
சுகமது  குறித்தும்
காராசாரமாக
விவாதித்துக் கொண்டிருந்தார்கள்
"அவர்கள் "

வாயிலிருந்த
மைசூர் பாகின்
சுவையில்
அது தந்த சுகத்தில்
மெய்மறந்துக் கிடந்தேன் நான்

விவாதம் விட்டு நான்
ஒதுங்கி இருந்த  எரிச்சலில்
"இரசனை கெட்ட ஜென்மமா நீ
உனக்கு சுகம் குறித்தும்
சுவை குறித்தும்
கருத்தே கிடையாதா " என்றனர்
எரிச்சலுடன்

நான் சிரித்தப்படிச் சொன்னேன்
"சுவையும் சுகமும்
விவாதப் பொருளாகப் படவில்லை"
எனச் சொல்லி
மற்றொரு விள்ளலை
எடுத்து வாயில் போட்டுக் கொண்டு
மெல்ல இமை மூடத் துவங்கினேன்

அவர்கள் விழிகளில்
கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

Monday, March 21, 2016

வள்ளுவன் சொன்ன ராஜ ரகசியம்

சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
ராஜ ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்