Showing posts with label அவல். Show all posts
Showing posts with label அவல். Show all posts

Sunday, December 18, 2016

சின்னம்மா அவர்கள் பொதுச் செயலாளராக....


சின்னம்மா அவர்கள் பொதுச் செயலாளராக
பதவி ஏற்பதால் அ. இ அ.தி.மு.க கட்சிக்கு
உண்டாகும் சாதக பாதக விஷயங்களை
அலசும் முன்பு ...

அண்ணா அவர்களின்
மறைவுக்குப் பின் நேர்ந்த அரசியல் சூழலை
ஆராய்ந்ததைப் போல..

http://yaathoramani.blogspot.in/2016/12/blog-post_13.html.http://

.htmlhttp://yaathoramani.blogspot.in/2016/12/2.html

புரட்சித்தலைவர்
அவர்களின் மறைவுக்குப்பின் ஏற்பட்ட
அரசியல் சூழலை ஆராய்வது இன்னும்
சரியாகப் புரிந்து கொள்ள உதவும்
என நினைக்கிறேன்

1967க்குப்பின் முதலமைச்சர் பதவி வகிக்கையில்
காலமான மூன்று முதலமைச்சர்களுக்கும்
உள்ள ஒற்றுமை, மூன்று முதலமைச்சர்களும்
அவர்கள் காலமான காலத்தில் சட்டமன்றத்தில்
முழு மெஜாரிட்டியுடனேயே பதவியில் இருந்தார்கள்

எனவே அவர்கள் காலமானதால் உடனடியாக
ஒரு ஆட்சி மாற்றத்திற்கான சூழல்
எப்போதும்( இப்போதும் போல ) ஏற்படவில்லை

ஆனால் கட்சியில்தான் அவர்கள் காலமானச் சூழலில்
அவர்கள் நினைத்தது போல் இல்லாமல்
மாறுபாடாக வேறு ஒருவர் தொடர்ந்து
தலைமைப் பதவி ஏற்கும்படியாய் அமைந்தது

அண்ணாவுக்குப் பின் அவர் சொல்லிக் கொண்டிருந்த
நாவலருக்குப் பதில் தன்
அரசியல் சாணக்கியத் தனத்தால்
கலைஞர் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்

தன் சாதுர்யத்தால் இன்றுவரை தொடர்ந்து கொண்டும்
வருகிறார்

ஆனால் புரட்சித் தலைவர் விஷயத்தில்
அவர் அவர் மறைவுக்குப் பின் ஒரு பெரும்
குழப்பம் ஏற்பட்ட பின்பே ஒரு தெளிவும் கிடைத்தது

அதற்குக் காரணம் ஒருவகையில் புரட்சித் தலைவர்
என்று கூடச் சொல்லலாம்

புரட்சித் தலைவர் முதல்வராயிருக்கையில்
மத்திய அரசுடன் ஏதாவது மனக் கசப்பெனில்
அதை தான் பொது வெளியில் பேசாது
காளிமுத்து அவர்களை காங்கிரஸைத் தாக்கிப் பேசும்
ஒரு உசுப்பேத்தி விடுவார்

அவரும் அவர் பங்குக்கு அன்றையத் தினசரிகளில்
தலைப்புச் செய்தி பிடிக்கும்படியாக
ஒரு அருமையான வசனமாக  பேசி வைப்பார்

("கருவாடு மீனாகாது, கறந்த பால் மடிபுகாது "

முணியாண்டி விலாஸுக்குக் கூட அதிக
பிராஞ்ச் தமிழகத்தில்  உண்டு ஆனால் காங்கிரஸுக்கு.."

என்பன போன்ற வசனங்கள் எல்லாம் அப்போது
மிகப் பிரபலம் )

காங்கிரஸுடன் ஏற்படுகிற மனக் கசப்பை
காளிமுத்து அவர்களை வைத்துப் பேசவைத்து
அவ்வப்போது அதைச் சரிசெய்து கொண்டதைப் போல
தனக்குக் கட்சி நடவடிக்கைகளில் ஆர். எம் வீரப்பன்
அவர்கள் பாலும் புரட்சித்தலைவியின் பாலும்
ஏற்படும் அதிருப்தியை அவர்களில் ஒருவருக்கு
முக்கியத்துவம் கொடுத்தும் ஒருவரை ஒதுக்கியும்
என மாற்றி மாற்றி வைத்து அரசியல் சதுரங்கம்
ஆடுவார்

அதுவேஅவர் மறைந்து அவரது பூத உடல்
அன்று இராஜாஜி ஹாலில் மக்கள் அஞ்சலி
செலுத்த வைக்கப் பட்டபோது உலகமே
பார்க்கும்படியாய் வெட்டவெளிச்சமாக்கியது

அன்று ஆரம்பம் முதல் கடைசியில் வரை
புரட்சித் தலைவி அவர்கள் தலைவரின்
பூத உடலுக்கு அருகிலேயே சோகவடிவமாய்
இருந்ததும்

உலக மக்கள் அனைவரும் பார்க்கும்படியாய்
புரட்சித் தலையின் மீது இரக்கம் கொள்ளும்படியாய்
அது இருந்ததும்

அதற்கு ஈடு கொடுக்கும்வகையில்
ஜானகி அவர்களையும் புரட்சித் தலைவரின்
அருகில் இறுதி வரை இருக்கும்படியாகச் செய்ததும்

இராணுவ ஊர்தியில் புரட்சித் தலைவரின் உடல்
ஏற்றப்பட்டதும் புரட்சித் தலைவியும் அதில்
ஏறமுற்பட்டதும்..

அவர் கே.பி.ராமலிங்கம் அவர்களால் பிடித்துக்
புரட்சித் தலைவி கீழே தள்ளப்பட்டதும்...

அது அன்று தொலைக்காட்சி மூலம்
உலக மக்கள் அனைவராலும் நேரடிக் காட்சியாய்
பார்க்கப்பட்டதும்...

அது பெரும் அதிர்ச்சித் தரும் நிகழ்வாய்
மக்களுக்கு இருந்ததும்,அதன் காரணமாய்
புரட்சித் தலைவியின்பால் கூடுதல் இரக்கம்
மக்களுக்கு வந்ததும்...

அந்த நிகழ்வே பின்னால் அவர் கட்சித் தொண்டர்களையும்
பொது மக்களையும் ஈர்ப்பதற்கு ஒரு
மிகப் பெரும்காரணமாய் இருந்தது என்றால்
அது மிகையில்லை

ஆனால் இன்று...அதே போல

புரட்சித் தலைவி அவர்களின்
பூத உடல் அதே இராஜாஜி ஹாலில் மக்களின்
அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருக்கும்போது

சின்னம்மா அவர்களும்
புரட்சித் தலைவி இருக்கிறவரையில் ஊடகங்கள்
கண்ணில் பட்டுவிடாது,மறைமுக அரசியல் செய்து
கொண்டிருந்த, புரட்சித் தலைவி அவர்களால்தனக்கு
துரோகம் செய்கிறவர்கள் என அடையாளம்
காட்டப்பட்டவர்கள் எல்லாம் சுற்றி நின்றதும்..

ஒரு பெரும் அதிர்ச்சிசி தரும் நிகழ்வாய்
மக்களுக்கு இருந்ததும்,அதன் காரணமாய்
சின்னம்மா அவர்களின் பால் கூடுதல் வெறுப்பும்
வந்திருக்கிறது என்றால் அதுவும் மிகையில்லை

அன்று ஆர்.எம் வீரப்பன் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில்
இருந்த பலத்தில் ஜானகி அவர்களை முதல்வராக்கி
புரட்சித் தலைவியை அவர்களை ஒதுக்கிச் செய்ததெல்லாம்
சில காலங்களுக்குத் தான் செல்லுபடியானது

பின் ஆட்சிக் கலைக்கப்பட்டதும் மக்களைச்
சந்திக்க நேர்கையில்தான் மக்கள் யார்ப்பக்கம்
என்பது புரிந்தது

அந்த வகையில் இப்போது மெஜாரிட்டி
இருக்கும் நிலையில் ஆட்சிப் பொறுப்பில்
இருக்கும் நிலையில், சின்னம்மாவை
இடைத்தேர்தலில் நிற்கவைத்து முதல்வராக்குவதோ
கட்சியின் பொது குழுக் கூடி
பொதுச் செயலாளராக்குவதோ

சித்தப்பா அவர்களுக்கும் முக்கிய பொறுப்புக்
கொடுப்பதோ இப்போது மிக எளிதானப் பணிதான்

ஆனால் அதையும் தாண்டி மக்களைச்
சந்திக்க நேர்கையில்.....

மந்திரி முதல் மாவட்டச் செயலாளர்,
வட்டம் சதுரம் என பதவியில் இருக்கிற
கட்சித் தலைவர்களைத்
தாண்டித் தொண்டர்களைச் சந்திக்க நேருகையில்..

என்ன நடக்கும்....
..போஸ்டர்கள் மீது சாணம் வீச்சு


(நீளம் கருதி அடுத்த பதிவில் )

Tuesday, December 13, 2016

கலைஞர் பாணியில்......சின்னம்மா

அண்ணா அவர்கள் மறைந்து அடுத்த
சட்டசபைத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய
காலச் சூழல்

ஏற்கெனவே அண்ணா அவர்களால் எனக்குப் பின்
நாவலர் நெடுஞ்செழியன் எனப் பகிங்கிரமாகவே
அறிவிக்கப்பட்டிருந்த நிலைமை

ஆயினும் கூட சட்டசபை உறுப்பினர்கள் மற்றும்
கட்சித் தொண்டர்கள் மத்தியில் நாவலரை விட
கலைஞருக்கு நெருக்கமும் செல்வாக்கும்
இருக்கும் நிலைமை

சட்டமன்றத் தலைவர் தேர்வில் நெடுஞ்செழியன்
கலைஞர் மற்றும் மதியழகன் ஆகிய மூவரும்
போட்டியிடப் போவதாக பரவலானத் தகவல்

பரபரப்பாக இருக்கிறது தமிழகம்

நாவலர் பெயர் முதலாவதாக முன்மொழியப்பட
பின்  எதிர்பார்த்தபடி கலைஞர் அவர்களது
பெயரும் முன் மொழியப்பட அடுத்து மதியழகன்
பெயரும் முன்மொழியப்படும் ,

அந்த மும்முனைப்
போட்டியில் தான் எளிதாக வெல்ல முடியும்
என நாவலர் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும்
வேளையில்,

எதிர்பாராத விதமாக

மதியழகன் அவர்கள் போட்டியிடாது கலைஞர்
அவர்கள் பெயரை முன்மொழியப் புரட்சித் தலைவரும்
கலைஞரை ஆதரிக்க யாரும் எதிர்பாராத வகையில்
கலைஞர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்

பின் நெடுஞ்செழியன் அவர்கள் விலகியதும்
தொடர்ந்து அவர் இடம் காலியாகவே இருப்பதாக
சொல்லிச் சொல்லிச் அவரைச் சேர்ந்ததும் ,
போட்டியிடத் தக்க செல்வாக்கு மிக்கத்
தலைவராக இருந்த மதியழகன் அவர்களை
கட்சித் தொடர்பில் இருந்து விலகி இருக்கும்படியான
சபா நாயகர் ஆக்கியதும், இவையெல்லாம்
கலைஞரின் சாணக்கியத் தனத்திற்கு எடுத்துக் காட்டு

(கட்டுரையின் நோக்கம் அது குறித்து இல்லாத
காரணத்தால்,அது குறித்து விரிவாக எழுத வில்லை )

அன்று கலைஞர் அவர்களின் செல்வாக்கு
சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்
கட்சித் தொண்டர்களிடம் இருந்த அளவு
பொதுமக்களிடமில்லை

பொதுமக்களின் எண்ணத்தில் அண்ணாவுக்குப் பின்
நெடுஞ்செழியன், பேராசிரியர் அவர்களுக்குப் பின் தான்
கலைஞர் என்கிற வரிசையே இருந்தது

கலைஞர் முதல்வர் ஆனதும் பொது மக்களிடம்
தனது இம்மேஜை இவர்களையும் மீறி முன்னெடுத்துச்
செல்லவேண்டிய கட்டாயம்

அப்போதுதான்  அரசின் சேம நலத் திட்டங்களை
மக்களிடம் கொண்டு செல்வது என்கிற நோக்கில்
மக்கள் தொடர்பு அதிகாரிகள் 59 பேர் நியமிக்கப்பட்டது
(அந்தப் பதவியில் உள் நுழைந்தவர்தான்
சசிகலா நடராஜன் அவர்கள் )

அப்போது கலைஞர் அவர்களின் புகைப்படம்
மிக அதிகமாக இருக்கும்படியாக
அதிக அரசு விளம்பரங்கள் வெளியிடப்பட்டன

( மிகக் குறிப்பாக சமூக நலத் துறை சார்பில்
வெளியிடப்பட்ட நாம் இருவர் நமக்கு இருவர்
என்கிற விளம்பரம் கலைஞர் அவர்களின்
உருவம் தாங்க அதிகம் வெளியிடப்பட்ட ஞாபகம்

அப்போது பழைய காங்கிரஸில் முன்னணிப்
பேச்சாளராக இருந்த தீப்பொறி ஆறுமுகம் அவர்கள்
"இந்தப் படத்தைப் பார்த்து விளம்பரத்தைப்
படிக்கிற பெண்களையெல்லாம்
இது கேவலப்படுத்துவதாக்இருக்கிறது.
காரணம் கலைஞர் அந்தப் பெண்களைப்
பார்த்து நாம் இருவர் நமக்கு இருவர் எனக்
கேவலப்படுத்துவதுப் போல இருக்கிறது என
பேசிய ஞாபகம் இன்னமும் என் போன்றோரிடம் உள்ளது )

இத்தனை ஆண்டு காலம் கழித்து...

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியில்
பதவியில் இருப்பவர்களிடம்
(எல்லோரும் பின்புலத்தில்சின்னம்மா அவர்களிடன்
 ஆதரவுடன் அல்லது அவரைப் பகைக்காது
பதவியைப் பெற்றவர்கள் என்பதால்)
சின்னம்மா அவர்களின் செல்வாக்கு உள்ளது
வெகு ஜன மக்களிடம் இல்லை
கலைஞருக்கு  அப்போதிருந்த
நிலைமையைப் போலவே

ஆனாலும் அன்று கலைஞருக்கு இருந்த
சில எதிர்மறையான விஷயங்களைக் காட்டிலும்
அதிகமாக பல நேர்மறையான விஷயங்கள்
இருந்ததைப் போல இன்று சின்னம்மாவுக்கு இல்லை

மாறாக சில நேர்மறையான விஷயங்களை விட
பல எதிர்மறையான விஷயங்களே அதிகம் உள்ளது

(பதிவின் நீளம் கருதி,
அது என்ன கலைஞரின் பாணி  என்பது
   அடுத்த பதிவில் )

தொடரும்

Friday, August 5, 2016

அபுரிக் கவிதைகள்

"அந்த ஜோல்னாக் கவிஞன்
 கூப்பிட்டான்.பூங்காவில் ஒரு கூட்டமாம்
 போகலாமா ? " என்றான் நண்பன்

"எனக்கு இந்த ஜோல்னா,குறுந்தாடி
ஜிப்பா,கவிஞ்ர்களைக் கண்டாலே அலர்ஜி
கொள்கையை நிலை நாட்ட
எப்போதுசட்டையைக் கிழிப்பார்கள்
எனச் சொல்ல முடியாதே "என்றேன்

"இப்போது கொஞ்சம் மாறி இருக்கிறார்கள்
பயப்படாமல் வா " என
இழுத்துப்போனான் நண்பன்

கூட்டம் கூடி இருந்தது
வட்ட வடிவில்
பத்து பேர் அமர்ந்திருந்தார்கள்

நாளை மறு நாள்
உலகம் அழியப்போவது போலவும்
அது இவர்களுக்கு மட்டும் தான்
தெரியும் போலவும்
ஏதாவது செய்தாகவேண்டுமே என்கிற
அதீதக் கவலையில் இருப்பது போல்
அனைவரின் முகங்களும் இறுகிக் கிடந்தன

நாங்கள் இருவரும் அமர
வட்டம் கொஞ்சம் நெகிழ்ந்து
எங்களையும் சேர்த்துக் கொண்டது

நாங்களும் முகத்தை இறுக்கிக் கொண்டோம்

ஓய்வுப் பெற்ற அரசு அதிகாரியைப் போலிருந்தவர்
பேசத் துவங்கினார்

"இது பதினெட்டாவது வாசிப்புக் கூட்டம்
இம்முறையும் ஐம்பது பேருக்கு  கடிதம் போட்டேன்
பதினைந்து பேருடன் போனில் பேசினேன்
பத்து  பேருக்குக் குறையாமல் வந்திருப்பது
நம்பிக்கையூட்டுகிறது

நம் அமைப்புக்குத் தலைவர் எல்லாம் கிடையாது
எல்லோரும் தலைவர்கள்தான்..."
இன்னும் என்ன என்னவோ எல்லாம் சொல்லித்
தலைமை உரை ஆற்றியப் பின்

"கவிதை வாசிப்பைத்   துவங்கலாமா " எனக்கேட்டு
ஜோல்னாவில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப்
பிரித்து உரக்கப் படிக்கத் துவங்கினார்.

சிறுவன் மிட்டாயை இரசித்துச் சாப்பிடுவது போல
ஒவ்வொரு வார்த்தையும் இரசித்துப் படித்தார்

கூட்டம் சப்புக் கொட்டியது

எங்களுக்கு இது தமிழ் என்பது புரிந்தது
வார்த்தைகளும் புரிந்தது
அதற்கு மேல் ஒன்றும் புரியவில்லை

எதற்கு வம்பு என்று நாங்களும்
சப்புக் கொட்டி வைத்தோம்

படித்து முடித்ததும் " இக்கவிதை ஒவ்வொருவருக்கும்
அவரவர் அனுபவம் பொறுத்து
புதுப் புதுப் பொருள் கொடுத்திருக்கும்
எனக்கானதைச் சொல்லி கவிதையை
நீர்த்துப் போகச் செய்ய விருப்பமில்லை "என்றார்

கூட்டமும் கனத்த (" ன "வுக்கு முடிந்தால்
 ஐந்து சுழி கூடப்போட்டுக் கொள்ளலாம் )
மனத்தோடு மௌனமாய் அங்கீகரிக்க
அடுத்தவர் அடுத்தக் கவிதையைப்
 படிக்கத் துவங்கினார்

இப்படியே பத்துப்  பேரும் அர்த்தமே சொல்லாது
படித்து முடிக்கிற நேரத்தில்
முதலில் படித்தவருக்குஅலைபேசியில்
யாரோ பேச,

"நண்பர்களே !மனைவிக்கு இரண்டு நாளாய்
கடும் காய்ச்சல்.நான் கிளம்புகையில்
வயிற்றுப் போக்கும் சேர்ந்து விட்டது
மருத்துவரிடம் அழைத்துச் செல்ல
எட்டுக்குள் வருவதாகச் சொல்லி இருந்தேன்
இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும் "
எனச் சொல்லியபடி அனைவரிடமும்
விடைபெற்றுக் கொண்டுக் கிளம்பினார்

கவிதைக்குச் செய்ய வேண்டிய கடமையை
மிகச் சரியாகச் செய்து விட்டதைப் போலவும்
இனி கவிதைப் பிழைத்துக் கொள்ளும்
என்பதைப் போலவும் அவர் திருப்தியுடன்
சிரித்துச் சென்றார்

கவிதை இவர்களைக் கஷடப்படுத்துகிறதா
அல்லது இவர்கள்  கவிதையை
கஷ் டப்படுத்துகிறார்களா என  எனக்குக்
குழப்பமாக இருந்தது

"இது எந்த மாதிரியான கவிதையில் சேரும்
மரபு தெரியும்  வசன கவிதை,புதுக்கவிதை
ஹைக்கூ மற்றும் சென்ட்ரியூ  கூடத்  தெரியும்
இந்தப் புரியாத கவிதைகள் எதில் சேர்த்தி"
என்றான்  குழப்பத்துடன் நண்பன்

வட்டம் இரண்டாக மூன்றாக ஐந்தாக
உடைந்து தனித்தனியாய்ப் பிரியத் துவங்கியது

"இதன் பேர் அபுரி "என்றேன்

"இப்படி ஒன்றைக் கேள்விப்பட்டதே இல்லையே"

"இது காரணப் பெயர் .புரிய முயற்சி செய்
புரிந்தால் இந்தக் கவிதைகள் போல
சுகம்  தரும்.புரியவில்லையா  ஒன்றும்
பிரச்சனை இல்லை .புரிகிறதா "என்றேன்

நாங்களும் கிளம்பினோம்

(புதிய வார்த்தைத் தந்த  பதிவர்
ஸ்ரீராம் அவர்களுக்கு  நன்றி )


  

Sunday, June 5, 2016

"இறைவி "

"இது என்ன கேள்விப்படாத
தமிழ்ச் சொல்லாய் இருக்கிறதே ?
இதற்கு என்ன பொருள்  "
என்றான் என் நண்பன்

"இறைவன்" என்கிற சொல்லைக்
கேள்விபட்டிருக்கிறாய் இல்லையா
அதைப் போல்தான் இது " என்றேன்

" ஓ அப்படியா
இது இறைவன் என்கிறச் சொல்லுக்கு
எதிர்ச் சொல்லா ?" என்றான்

நான் மிரண்டு போனேன்

"அடப்பாவி
இறைவனுக்கு எதிர்ச் சொல்
சைத்தான்

இது  இணைச் சொல்
இறைவனுக்குப் பெண்பால்"
என்றேன்

ஆணுக்குக்குப் பெண்ணும்
கணவனுக்கு மனைவியும்
முதலாளிக்குத் தொழிலாளியும்
எதிர்ச்சொல்லனெவே
பயிற்றுவிக்கப் பட்டவர்களுக்கு
சட்டெனப் புரிவது கொஞ்சம் சிரமம்தான்

Thursday, May 19, 2016

தேர்தல்--ஒரு நுணுக்கப்பார்வை

செத்தவனுக்கு ஜாதகம் பார்ப்பதும்
தோற்றதற்குக் காரணம் பார்ப்பதும்
எந்தப் பலனையும் தரப்போவதில்லை என்பது
நிஜம்தான் ஆயினும் கூட.

சில சந்தேக மரணங்களுக்கு உடல் பரிசோதனை
பல சந்தேகங்களை தீர்க்கும் என்கிற வகையிலும்
அடுத்து அதுபோல் நேராமல் இருக்க வழிவகுக்கும்
என்கிற வகையிலும் இந்த தேர்தல் முடிவுகள்
குறித்து கொஞ்சம் நுணுக்கமாகப் பார்க்கையில்
ஒரு விஷயம் புரிந்தது

குழந்தைக்கு வான வேடிக்கை காட்டுவது போல்
காட்டி நைஸாக சங்கிலியை லவட்டுகிற
மாதிரி, பீ டீம் என மக்கள் நலக் கூட்டணியைச்
சொல்லி அது ஓட்டைப் பிரிப்பதற்காகவே
ஏற்படுத்தப்பட்டக் கூட்டணி என எல்லோரும்
பிரச்சாரம் செய்து கொண்டிருக்க , நாமும்
அனைவரும் நம்பிக் கொண்டிருக்க,

உண்மையாகவே  புதிதாகச் சேர்க்கப்பட்ட
வாக்காளர்கள் மத்தியில் அவர்களைக்
குழப்பும் நோக்கில், அந்த  வாக்காளர்களே
மிகச் சிறிய எண்ணிக்கையாயினும்
முடிவு மாறக்  காரணமாய் இருப்பார்கள்
என்கிற வகையில்

எல்லா கட்சிகளும் மோசம்
புதிய சிந்தனை புதிய பாதை
என்கிற சாக்கில் மிகச் சாதுர்யமாக
சீமான் அவர்களை வைத்து ஆளும் கட்சி
செய்த திருவிளையாடலே  திராவிட
முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை பெறாமல்
போனதற்குக் காரணம் என்றால் அது மிகையில்லை

ஏனெனில் புதிதாக இணைக்கப்பட்ட
இளம் வயதினர் நிச்சயமாக அ.இ.அ.தி.மு.க விற்கு
ஓட்டளிக்க வாய்ப்பே இல்லை

விஜயகாந்தும்.வை.கோ அவர்களும் மீம்சில்
பட்டபாடு அவர்கள் மீது அவர்களுக்கு
பூரண நம்பிக்கையில்லை என்பதையே
தெளிவாக்க காட்டியது

அதை விடுத்தால் அவர்களுக்கு
ஸ்டாலின் அவர்களே நம்பிக்கையூட்டக் கூடியவாராய்
இருந்தார் ( கலைஞர் நிச்சயம்  இல்லை
அன்புமணி அவர்கள் அந்த ஓட்டைக் கவரவே
நடை உடை பாவனைகளில் அதிகம் முயன்றாலும்
பா.மா.க மீது பூசப்பட்டிருக்கும் ஜாதிச் சாயம்
அவர்களை ஒட்ட விடவில்லை )

யாரும் மிகக் கவனம் கொள்ளாத அந்தப்
பகுதியை மிகக் கவனமாகக் கையாளும் விதமாக
ஆளும் கட்சி செய்த திருவிளையாடலே
நாம்தமிழர் கட்சியின் தனித்த போட்டி

அவர்கள் கணக்கு சரியாக வந்தது
என்பதற்கு கீழ்க்குறித்த தேர்தல் முடிவுகளே
அத்தாட்சி )

மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில்
திராவிட முன்னேற்றக் கழகம் வாய்ப்பிழந்த
கீழ்க்குறித்த தொகுதிகளில் நான் தமிழர் கட்சிப்
பெற்ற வாக்குகள் இருந்தாலே தி. மு. க
வென்றிருக்கும்

1 ) ஆவடி 2 )பெரம்பூர் 3 )விருகம்பக்கம்

4 )திருப்போரூர் 5)கிணத்துக்கடவு 6 )கரூர்

7 )காட்டுமன்னார் கோவில் 8 )பேராவூரணி

9 )கோவில்பட்டி 10 )ஒட்ட்டப்பிடாரம்

11 )தென்காசி  (காங் ) 12 )ராதாபுரம் 13 ) சிவகாசி

இன்னும் கொஞ்சம் கவனமாகக் கணித்தால்

13 )மதுரவாயல்  14 )மொடக்குறிச்சி

15 ) சிதம்பரம்

உண்மையாக பழம் தின்னவர் தமிழரின்
தன்மான வுணர்வினைத் தட்டி எழுப்புவதாக
நாடகம் போட்ட சீமான் தான்

கொட்டையைத் தின்னவர்கள் தான்
பாவம் மக்கள் நலக் கூட்டணியினர்

(அலசல் தொடரும் )

தேர்தல் அலசல்-- முடிவுக்குப் பின்

ஜெயித்தால் மக்கள் அரசியல்    
தெளிவு பெற்றுவிட்டார்கள்
தோற்றால் மதுவுக்கும் பணத்திற்கும்
அடிமையாகி விட்டார்கள் எனப் பேசுவது
ஒருவகையில் போதையில் பிதற்றுவதைப்
போலத்தான்

ஓட்டுப்போடாதவர்களுக்கு முதல்வராக
அவர்களது சர்வ அதிகாரப்போக்கு
மிகத் துரிதமாக செயல்படவேண்டிய நேரத்தில்
செயலின்மை,எதிர்காலம் குறித்த நீண்ட நோக்கில்
திட்டமிடாது ஓட்டுக்கான குறுகிய நோக்கில்
திட்டமிடுதல் செயல்படுதல்,அரசு நிர்வாகத்தில்
வெளிப்படைத்தன்மை இன்மை,
மது விற்பனைப் பெருக்கதின் மூலமே அரசை
நிர்வகிக்க முயல்வது போன்ற பல
காரணங்கள் இருந்தாலும்

இதையும் மீறி கலைஞருக்குப் பதில்
இவரே தேவலாம எனச் சொல்லும்படியாக
பெரும்பாலான மக்களுக்கு ஒரு எண்ணம்
இருப்பதே இந்தத் தேர்தலின் முடிவாக
எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது

ம. ந. கூட்டணி  சோதனை முயற்சியாக
மாற்று அரசியலுக்கு முயன்றது கூட
நல்ல முயற்சிதான்

ஆனாலும் கூட கூட்டணியின் ஒருங்கிணப்பாளராக
வை. கோ செயல்பட்டவிதம், முதல்வர் வேட்பாளரான்
விஜயகாந்த அவர்கள் நடந்து கொண்ட விதம்
மக்களுக்கு அந்த அணியின் மீது நம்பிக்கை
ஏற்படுத்தவில்லை என்பதையே
இந்தத் தேர்தல்  முடிவுகள்
திட்டவட்டமாகக் காட்டிவிட்டது

சீமான் தன் பலம் அறியாது
கொஞ்சம் ஓவராகக் கூவி விட்டார்

மருத்துவர் அன்புமணி அவர்களின் தேர்தல்
அறிக்கைகளும்  பிரச்சாரங்களும்
கொஞ்சம் கவனிக்கும்படியாக இருந்தது
என்றாலும் அவர் கட்சியின் மீது
விழுந்துள்ள ஜாதிப் பூச்சைக் கடக்க
இன்னும் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்

நிச்சயமாக தி. மு. க பொறுப்பான
எதிர்க்கட்சியாகத் திகழும்

அதற்காகத்தானே மக்கள் இத்தனை
அதிக இடங்களைக் கொடுத்துள்ளார்கள்

வென்றவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

Tuesday, May 10, 2016

தேர்தல்-----சில உண்மைகள்

 1 )ஆட்சியில் இருந்த கட்சிகள் மீதுதான் ஊழலும்
     ஊழல் குற்றச்சாட்டுகளும் இருக்கச் சாத்தியம்

   எனவே ஆட்சியில் இல்லாதவர்கள் புனிதமானவர்கள்
   எனக் கொள்ளச் சாத்தியம் இல்லை

2 ) எந்தக் கட்சியும் செலவழிக்க வசதி அற்றவரையோ
   தொகுதியில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள
   ஜாதிக்காரர்களையோ போட்டியில் நிறுத்துவதில்லை

   எனவே எந்தக் கட்சியும் ஜாதி மத உணர்வு அற்றது
   என எண்ண வேண்டியதில்லை

3 ) வீட்டிற்கு வெளியில் அரசு செய்ய வேண்டியது
   நிறைய இருக்க, அதற்குத்தான் அரசு என்பதே இருக்க
   வீட்டிற்குத் தேவையான இலவசங்கள்
   தருகிற சொல்கிற எந்தக் கட்சியும் மதிக்கத் தக்கதல்ல

   எனவே ஓட்டளிக்க அதை ஒரு காரணமாகக் கொள்ள
   வேண்டியதில்லை

4 ) மக்களின் எண்ணத்தையும்,தேவைகளையும் மிகச்
   சரியாக எந்தக் கட்சியும் பிரதிபலிக்காமல்
   போவதற்கான காரணமே
   குடும்ப அரசியிலும்,வாரீசு அரசியலுமே

   எனவே எந்தக் கட்சி ஆயினும்,
   குடும்ப உறுப்பினர் எனில்
   வாரீசுகள் எனில் தேர்ந்தெடுக்கத் தயங்குவோம்

5 ) ஏற்கென்வே வென்று தொகுதிக்கு நன்மை
    ஏதும் செய்யாதவர் மீண்டும் வென்று திருந்தி
    நனமைச் செய்யச் சாத்தியமே இல்லை

   எனவே அப்படிப்பட்டவர் எவருமிருப்பின் நிச்சயம்
   அவரைப் புறக்கணிப்போம்

6 ) ஜெயிக்க வாய்ப்பு இருக்கிற கட்சிக்கு
     ஓட்டளிக்க வேண்டும் இல்லையெனில்
     நம் ஓட்டு வீண் என்பதெல்லாம் பம்மாத்துப்
    பிரச்சாரம்

   அதற்காகத்தான் கருத்துக் கணிப்பு
   மாய்மாலம் எல்லாம்

   இந்தத் தேர்தலில் அதிகச் சதவீதம் பெறுகிறக் கட்சி
   நிச்சயம் அடுத்த முறை பிற கட்சிகளால்
   கவனிக்கவும் படும்

   மிகச் சரியாக தன் அரசியல் நடவடிக் கையைத்
  தொடருமாயின் நிச்சயம் அடுத்த முறை
  வெல்லவும் வாய்ப்பு இருக்கும்

   அரசியலே மோசம், போட்டி இடுபவர்கள் எல்லாம்
   மோசம் என ஓட்டளிக்காது இருந்து விட்டுப்
   பின்  வியாக்கியானங்கள் செய்பவர்கள்
  கொஞ்சம் அதிகம் படித்தவர்களும் நடுத்தர ,மற்றும்
   உயர்தர மக்களுமே.

   அந்த இருபது சதவீதம் நிச்சயம் முடிவைத்
   தலைகீழாக்கும் சாத்தியம் அதிகமே.
  அதற்கு டெல்லியே  நல்ல உதாரணம்

  மேலும் இம்முறை புதிய இளைஞர்களின்
 வாக்குகள் நிச்சயம் ஊழல் அரசியல் வாதிகளுக்கோ
.ஜாதி மத அரசியல் வாதிகளுக்கோ
  போக நிச்சயம் சாத்தியமில்லை

  கட்சி வாக்களர்களை மீறி, நடு நிலையாளர்களின்
 வாக்குகள் இந்தத் தேர்தலில் முடிவினைத்
  தீர்மானிக்கும்படியாக 100 % வாக்களிக்க முயல்வோம்

  நல்லதே நிச்சயம் நடக்கும்.

 நம்பிக்கையுடன் வாக்களிப்போம்

Monday, March 28, 2016

தலைவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்..

தலைவர்களைத்
தொந்தரவு செய்யாதீர்கள்

அவர்கள்
நமக்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

கொள்கைப்படி
இணைவது எனில்
முரண்பட வாய்ப்புண்டு என்பதால்

கொள்கைகளை ஓரம் வைத்து விட்டுத்தான்
நமக்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

அவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள்

மிகக் குறைந்த செயல்திட்டம் எனில்
பதவி பிடிப்பதுதான்

அதற்கும் மிகக் குறைவாக
செயல்திட்டம் வகுத்துச் சேர
வாய்ப்பே இல்லை
அது கூட நமக்காகத்தான்

அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள்

திருமணம்  அனைவரும் அறியச் செய்யலாம்
சீர் செனத்தி எல்லாம்
தனியாகப் பேசினால்தான் சரியாய் வரும்
மாறிச் செய்தல் மரபில்லை

பேசி முடியட்டும்
திருமணம் நம் முன்னால்தானே
கொஞ்சம் பொறுமையாய் இருங்கள்

இன உணர்வு
மத உணர்வு
மொழி உணர்வு
ஜாதி உணர்வு
பண உணர்வு
அனைத்தும் நமக்குண்டு என்பதுவும்

இந்தத் தேர்தலில்
எதைத் தூக்கி
எதை அமுக்கினால்
எல்லாம்  சரியாய் வரும் என்பது
அவர்களுக்கு நன்றாகத் தெரியும்

நாம் அவசரப் படாமல் இருப்போம்

கூட்டணி முடிவானபின்
ஒரே மேடையில்
ஒருவர் கையை ஒருவர் பிடித்து
உயரத்  தூக்கி
கொள்கைப் பிரகடனம் செய்வார்கள்

அது நமக்கும்
உடன்பாடாகத்தான் தெரியும்
அல்லது
தெரியவைப்பார்கள்

மதுக் கடையை
மூடச் சொல்லிக்  கோரும்
எந்தக் கட்சியும்
தொண்டர்களை குடிக்காதே எனத்
தொந்தரவு செய்வதில்லை அல்லவா

அது நமக்கு உடன்பாடுதானே

அப்படித்தான்

அவர்கள் கூட்டணித் தர்மத்தை
கொள்கை கோட்பாட்டை
நமக்கு உடன்பாடாக மட்டுமல்ல
நாம் இரசிக்கும்படியாகவே
மிக அருமையாகச் சொல்வார்கள்

எனவே தலைவர்களை
இப்போது
தொந்தரவு செய்யாதீர்கள்

அவர்கள் நமக்காகத்தான்
பேசிக் கொண்டிருப்பதாக
நடித்துக் கொண்டிருக்கிறார்கள்

நாமும் அவர்களை
நம்புவது போலவே
 நடித்துக் கொண்டிருப்போம்  

Monday, February 8, 2016

சில உணர்வுப்பூர்வமான விஷயங்கள்

(ஆன்மீகப் பயணமாகப் புறப்பட்டிருக்கிற
மதிப்பிற்குரிய ஜி எம்.பி அவர்கள் மதம், கோவில் ,
அரசியல் தொடர்பாக சில விஷயங்களை
 பதிவிட்டிருப்பதைப் படித்தேன்
அதைத் தொட ர்ந்து என்னுள் எழுந்த
சில சிந்தனைகளை இங்கே பதிவு செய்துள்ளேன்
ஜி.எம். சி சாருக்கு   நன்றி )

என்னைப் பொருத்தவரை தமிழகத்தில்
மதப் பிரச்சனைக்குக் காரணமே நாத்திக வாதிகள்
ஆத்திகம் குறித்து அதிகம் பேசுவதும்
ஆத்திக வாதிகள் நாத்திக வாதிகள் குறித்து
அதிகம் கவலைப்படுவதும்தான்

அரசியலில் மதம் கூடாது  என்பது இங்கு
மதவாதிகளுக்கு மட்டும் சொல்லப்படுகிறதே ஒழிய
மத எதிர்பாளர்களைக் கணக்கில்
எடுத்துக் கொள்வதில்லை

அரசியலில் மதம் கூடாது என்பது
இருவருக்கும் பொருந்தும் தானே

அதைப் போலவே  கட்சிக் கொள்கையாக
மத எதிர்ப்பை வைத்துக் கொண்டு
 கோவில் கோவிலாக
குடும்பத்தினரை அனுப்பிவைப்பதை யாரும்
பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

குடும்பத்தினரைக் கூட மாற்ற இயலாத இவர்கள்
இது விஷயத்தில் சமூகத்தை மாற்ற போராடுவதைக்
கண்டும் காணாது இருக்கிற சமூகத்தை
என்ன சொல்வது ?

 மதத்தை எதிர்ப்பதன் மூலமே
தனது ஓட்டுவங்கியைக் காக்க முடியும் என சில
கட்சிகள் நினைக்கிறபோது....

மதத்தை  மிகவும் ஆதரிப்பதாக காட்டிக்
கொள்வதன் மூலமே தனது ஓட்டுவங்கித்
தக்கவைத்துக் கொள்ள முடியும்
என சில கட்சிகள் நினைக்கின்றன

அது சரி என்றால் இதுவும் சரி
அது தவறென்றால் இதுவும் தவறு

நமக்கு மத அரசியலும் வேண்டாம்
அரசியல் மதமும் வேண்டாம்

நம்பிக்கை இருக்கிறவர்கள் தொடரட்டும்
இல்லாதவர்கள் விலகட்டும்

மாற்ற முயற்சிப்பதே அவர் சரி
அடுத்தவர் சரியில்லை எனச் சொல்வது
போலத்தானே

கடவுள் ஒருவரே என அனைத்து மதத்தினரும்
சொல்லிக் கொள்வது சரி
அவர் இவர் மட்டுமே என்பதில் எனக்கும்
உடன்பாடில்லை

சில உணர்வுப்பூர்வமான   விஷயங்களில்
அறிவுப் பூர்வமாகவும்
அறிவுப் பூர்வமான விஷயங்களில்
உணர்வுப்பூர்வமாகவும்  யோசிப்பது
குழப்பமே விளைவிக்கும்

(ஆகையால்

ஜி.எம் பி சார் ஆன்மீகப் பயணத்தை
மிகச் சரியாக அனுபவிக்கவேண்டுமெனில்
ஆன்மீக வாதியாகவே பயணத்தைத் தொடருங்கள்

பயணத்தில் நெருடுகிற விஷயத்தை
வந்து விமர்சித்துக் கொள்ளலாம்

வாழ்த்துக்களுடன்...... )