Sunday, July 5, 2020

..மனித்த பிறவியும் வேண்டுவதே....

சிலிர்க்கச் செய்து
மனச் சொடெக்கெடுத்துப் போகும்
ஒரு அற்புதப் படைப்பு...

நம் பின்னடைவுத் தூரத்தை
மிகத் தெளிவாய்ச் சுட்டிக்காட்டி
நம்முள் ஒரு வெறுமையை
விதைத்துப் போக...

நாம் இனியும்
எழுதத்தான் வேண்டுமா எனும்
எதிர்மறை எண்ணத்தை
விளைவித்துப் போக...

படித்ததும் சட்டென
முகம் சுழிக்கச் செய்வதோடு
மனக் கசப்பையும் கூட்டிப் போகும்
ஒரு மோசமான படைப்போ

நம் கருத்தேர்வை
நம் மொழிப் பாண்டித்தியத்தை
நாம் உணரும்படியாய்
நமக்கே விளக்கிப் போக

நாம் இனிதான்
அவசியம் எழுதுதல் வேண்டுமெனும்
நேர்மறை உணர்வினை
உசுப்பேற்றிப் போகிறது

அதற்காக வேணும் இனி
மோசமான படைப்புகளும்
நிச்சயம் வேண்டியதே...

மனித்த பிறவியும்
வேண்டுவதே இந்த மாநிலத்தே
என்பதைப் போலவே...

Saturday, July 4, 2020

முள்ளும் கொரோனாவும்

சாலையோரம்
எப்படி கிடத்தப்பட்டேனோ அப்படியே
துளியும் நகரமுடியாதபடி
எப்போதும் கிடக்கிறேன் நான்.

ஏதோ ஒரு சிந்தனையில்
வழி மீது விழியின்றி
என் மீது மிகச் சரியாய்
மிதித்து "உச்" கொட்டுகிறீர்கள் நீங்கள்

பின் எவ்வித
கூச்சமின்றி குற்றவிணர்வின்றி
"நான் " குத்திவிட்டதாக
"என் மீதே " பழிசுமத்துகிறீர்கள்...

தவறு செய்வது  நீங்கள்
பின் ஏன் காலங்காலமாய்
"என்னைப்" பழிக்கிறீர்கள்...

சீனச் சந்தையில்
இயற்கைக்கு நேர்ந்த
புத்திப் பேதலிப்பில்
எப்படியோ பிறந்து விட்டேன் நான்

தூக்கி நகர்த்தாது
இம்மியும் நகர இயலாத என்னை
உலகமெலாம் கணந்தோரும்
தூக்கித் திரிகிறீர்கள் நீங்கள்

பின் இப்போது
எவ்வித பொறுப்புமின்றி தெளிவின்றி
"நான் " பரவுவதாக
"என் மீதே " பழிபோடுகிறீர்கள்

பரப்புவது நீங்கள் 
பின் ஏன் உலகோரேல்லாம்
"என்னைப்" பலியாக்குகிறீர்கள்

Thursday, July 2, 2020

கொரோனாவும் நீதி நூல்களும்.

அரசும்
வலைத்தளங்களும்
முக நூலும்
இன்னபிறவும்
கொரோனா குறித்து
விரிவாக விளக்கியும்

நம் மக்கள்
முகக்கவசம் அணியாதும்
சமூக இடைவெளிக் கடைப்பிடிக்காதும்
கொரோனாத் தொற்றை
அசுர வேகத்தில்
பரவச் செய்வது ஏன் ?

கொரோனா குறித்து
அறிந்தது எல்லாம்
அறிந்ததாகக் கொள்ளமட்டுமே
பிறருக்கு பகிர்ந்து கொள்ளமட்டுமே
தாம் கடைபிடிப்பதற்கு அல்ல என்பதில்
தெளிவாய் இருப்பதால்தானோ ?

ஒரு வகையில்
இந்தத் தெளிதல் கூட...

நீதி நூல்களும்
நீதியை எளிதாய்ப் போதிக்க வந்த
இதிகாசங்களும் புராணங்களும்
காலம் காலமாய் இருந்தும்
ஆயிரமாயிரமாய் இருந்தும்
..
அநீதியும்
அக்கிரமங்களும்
வன்மமும் துரோகங்களும்
புற்றீசல் போல்
பல்கிப்பெருகுவது தெரிந்தும்
பாடாய்ப்படுத்துவது புரிந்தும்

அவையெல்லாம்
காலம் காலமாய்
போற்றத் தக்கதாய்
பாதுகாக்கத் தக்கதாய்
வைத்திருக்கவேண்டியவையன்றி
கடைபிடிக்க வேண்டியவையல்ல என்பது
நம் இரத்தத்தில் கலந்துவிட்டதால் தானோ ?

Tuesday, June 30, 2020

கொரோனா கூட முகவுரையே

சில வரன்முறைகளுக்கு உட்பட்டே
நம் உடல் நம்மை
ஆரோக்கியமாய் உலவவிடுகிறது

நாவின் போக்கில்
மனதின் இழுப்புக்கு
நாம் அந்த வரன்முறைகளை மீறுகையில்..

தன் எதிர்ப்பை அது
சிறு சிறு நோயாக வெளிப்படுத்தி
எதிர்ப்பைப் பதிவு செய்கிறது.

பதிவுகளை அலட்சியப்படுத்தி
நாம் நம்போக்கில் தொடர்கையில்
பெரும் எரிச்சல் கொள்கிறது

அது நம்மை முடக்கி வைத்து
தன்னை சில நாட்களில்
தானே சரி செய்து கொள்கிறது..

சில வரன்முறைகளுக்கு உட்பட்டே
இப் பிரபஞ்சமும்
வாழத்தக்கதாய் விரிந்துக் கிடக்கிறது

ஆசையின் போக்கில்
ஆணவத்திற்கு அடிபணிந்து
நாம் அந்த வரன்மு\றைகளை மீறுகையில்..

தன் எதிர்ப்பை அது
சிறு சிறு பருவ மாறுதல்களால
பதிவு செய்து காட்டுகிறது

பதிவுகளை அலட்சியப்படுத்தி
நாம் நம் போக்கில் தொடர்கையில்
அது மெல்லத் தன் தன்மை மாறுகிறது

அது நம்மை முற்றிலுமாக
முடக்கி வைத்து
தன்னைத் தானே சரி செய்து கொள்கிறது

மனச் சாட்சியை மீறி
தர்ம எல்லைகளைக் கடக்கையில்
சட்டத்தின் தலையீட்டைத் தவிர்க்க இயலாது

இயற்கை நியதிகளை மீறி
பொதுவெளி அறம் கடக்கையில்
பேரிடர்களை நிச்சயம் தவிர்க்க இயலாது

இந்தப்  பாலபாடம் அறிந்து
தெளியாத வரையில்
அழிவு என்பது தொடர்கதையே..

கொரோனா தொற்றுக் கூட
இந்தப்  பாலபாட நூலுக்கான
சுருக்கமான முகவுரையே

பீலிபெய் சாகாடும் அச்சிறும்..

  • அவர்கள் பேச்சை கொஞ்சம்
கவனமாகக் கேளுங்கள்
நெருங்கிய நண்பர்களின் நயவஞ்சகத்தால்
நைந்து போனவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்கள் கண்களைக் கொஞ்சம்
கருணையோடு பாருங்கள்
உரிமை என்கிற பெயரில்
உறவுகளால் அடிமையாக்கப்பட்டு
அவதிப் படுவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்களுக்கு மனதுக்குஆறுதலாய்
இரண்டு வார்த்தைகள் கூறுங்கள்
தோல்வி தவிர ஏதுமறியாது
துவண்டு போனவர்களாய்
அவர்கள் இருக்கலாம்

நம்முடையை சிறு கவனம்
நம்முடைய  லேசான கருணைப் பார்வை
நம்முடைய  ஒரே ஒரு ஆறுதல் பேச்சு
என்ன செய்துவிடப் போகிறது என
அசட்டையாக மட்டும் இருந்துவிடாதீர்கள்

அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு
இறுதியாக உங்களிடம்
அடைக்கலமென வருவோருக்கு
உங்களது சிறு அலட்சியம்
உங்களது சிறு முகச் சுழிப்பு
அவர்களுக்குள் ஒரு பெரும்
பிரளயத்தைஉண்டாக்கிவிடக் கூடும்

பீலிபெய் சாகாடும் அச்சிறும்  அப்பண்டஞ 
சால மிகுத்துப்பெயின் நேரும் அவலம்
உங்கள் சிறு அசிரத்தையால் கூட
அவருக்குள் நேர்ந்து விட வாய்ப்புண்டு
அந்தப் பாவம் நிச்சயம் நமக்கு வேண்டாம்
அதுவும் இந்தக் கொரோனா காலத்தில்
எனவே....yaathoramani.blogspot.com

Sunday, June 28, 2020

கொரோனா நல்லது

ஞானம் தேடிப் போகப்
புத்தனுக்குக் கூட
மூன்று
வருத்தம் தரும் நிகழ்வுகள் தேவைப்பட்டது

நான்..
எனது...
எனக்கு...
என்பதனைக் கடந்து

எனக்குப் பின்.....
நான் இல்லையெனில்...
தடுக்கமுடியாததை
ஏற்றுத்தானே ஆகணும்..
எனவெல்லாம்

அனுபவங்களும்
நீதிபோதனைகளும்
தராத மாற்றத்தைத் தர  

சுய நலம் கடந்துத்
தெளிவாய் யோசிக்கும்
புதிய ஞானத்தைப்  பெற
....

உயிரற்ற
கடத்துபவரின்றி
நகரக் கூட முடியாத

கண்ணுக்குத் தெரியாத
இந்தக் கொரோனாக் கிருமியே
போதுமானதாய் இருக்கிறது..

அந்த வகையில்
கறை நல்லது என வரும்
விளம்பர வாசகம் போல்

இந்தக் கொரோனா கூட
நல்லது தானோ எனத் தோணுகிறது
சில நாட்களாய் எனக்கும்...

Friday, June 26, 2020

கட்டுப்பட்டதைக் கொண்டு...

இரண்டும் ஒன்றை ஒன்று
சார்ந்தே இருப்பதெனினும்
இரண்டில் ஏதோ ஒன்றே
எப்போதும் நம் கட்டுப்பாட்டில்..

கட்டுப்பட்டதைக் கொண்டு
கட்டுப்படாததை சமாளித்தலே
ஆகக் கூடியது மட்டுமல்ல
அதுவே புத்திசாலித்தனமும் கூட

கட்டுப்பட்டது வரவெனில்
கட்டுப்படாத செலவதனை ..

கட்டுப்பட்டது கிடைப்பதெனில்
கட்டுப்படாத எதிர்பார்ப்பினை ...

கட்டுப்பட்டது உடலெனில்
கட்டுப்பட்டாத மனதினை...

கட்டுப்பட்டது வேகமெனில்
கட்டுப்படாத தூரத்தினை

கட்டுப்பட்டது யோகமெனில்
கட்டுப்படாத காமமதை

இப்படி உதாரணங்கள்  நூறு எதற்கு
மிகச் சுருக்கமாகவும்
நமக்கு மிகவும் நெருக்கமாகவும்
                                                                        கட்டுப்பட்ட சமூக இடைவெளியைக் கொண்டு                                                                   கட்டுப்படாத கொரோனாவை கட்டுப்படுத்துதல் போலவும்                                     
கட்டுப்பட்ட கீழ்த்தாடையினைக்  கொண்டு
கட்டுப்படாத மேல்தாடையை
தினமும் சமாளித்தல் போலவும்...