Tuesday, February 19, 2013

துன்புறுத்தும் இடைவெளி


கடந்த ஒரு மாத காலமாக வட  இந்தியா சுற்றுலா
சென்று விட்ட காரணத்தாலும் இந்த மாதக்
கடைசி வரைகொஞ்சம் அதிகப் பணிகள் இருப்பதாலும்
தொடர்ந்து பதிவுகள் எழுதவோ
பிற பதிவுகள் பார்த்துப் படித்து தெளிவுறவோ
பின்னூட்டமிடவோ முடியாமல் தவிக்கிறேன்


தொடர்ந்து என்னைத் தொடர்பு கொண்டு அக்கறையுடன்
என் நலம் விசாரித்த பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்
 என் மனமார்ந்த நன்றி


மார்ச் முதல்    தொடர்ந்து உங்களைச் சந்தித்து என்னைச்
சரி செய்து கொள்ள முயல்கிறேன்


நன்றியுடனும் வாழ்த்துக்களுடனும்






Friday, February 15, 2013

சலிப்பில் விளையும் விழிப்பு

எல்லாமே எழுதியாகிவிட்டது
எழுதுவதற்கு இனி
என்ன இருக்கிறது என்கிற எண்ணம்
உங்களுக்குள் இப்போதெல்லாம்
அடிக்கடி வந்து போகிறதா ?

சொல்லவேண்டியதெல்லாம்
விதம் விதமாய்
சொல்லியாகிவிட்டது
வித்தியாசமாய்ச் சொல்லஇனி
என்ன இருக்கிறதுஎன்கிற கவலை
உங்களுக்குள் இப்போதெல்லாம்
அடிக்கடி தோன்றத் துவங்குகிறதா ?

எழுதுவதால்
என்னமாறுதல் ஏற்பட்டுவிடப்போகிறது ?
இதுவரை எழுதியதில்
என்னதான் பெரிய விளைவுகளைக் கண்டோம் ?
இனியும் எழுதுவதில்
என்ன பயன்தான் இருக்கப் போகிறது
என்கிற ஆதங்கம் உங்களுக்குள்
விஸ்வரூபமெடுத்து உங்களைத்
தூங்கவிடாது செய்கிறதா ?

இனி கவலையை விடுங்கள்
இப்போது முதல்
அதிக சந்தோஷம் கொள்ளுங்கள்

ஏனெனில் இத்தகைய
எண்ணமும்
 கவலையும்
ஆதங்கமும்
ஊற்றெடுத்த பின்புதான்
படைப்பாளிகள் பலர்

தாங்கள் சராசரிகள் இல்லைஎன்பதை
நிரூபிக்க அதிகம் முயன்று இருக்கிறார்கள்

தங்கள் படைப்பும்
சராசரித்தனமானதில்லை என நிரூபிக்க
அதிகத் திறன் பெற உழைத்திருக்கிறார்கள்

அதன் விளைவாய்
காலம் கடக்கும்  பல அரியபடைப்புகளை
உலகுக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள்

என்வே
இனி கவலைப் படுவதை விடுங்கள்
இப்போது முதல்
அதிகச் சந்தோஷம் கொள்ளத் துவங்குங்கள்







Friday, February 1, 2013

என்னை நானே அறிய விடு

நண்பகலையும் நடு நிசியாய் காட்டும்
அடர்ந்த காட்டினுள்
வழிகாட்டும் தடங்கள்
ஏதும ற்ற வெளிதனில்
என்னை விட்டுப் போ
நான் சிறு பிள்ளையில்லை
திசை காட்டும் கருவியின்
வரைபடங்களின் துணையும்
எனக்குப் போதும்
உன் விரல் பிடித்து நடந்துவர
எனக்கு இஷ்டமில்லை
என்னைப் புரிந்து கொள்

இப்போதெல்லாம் எனக்கு
பாதுகாப்பான பயணங்கள் உடன்பாடில்லை
வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
விழுந்தே தெரிந்து கொள்கிறேன்
உடலெங்கும் உன்னைபோல் எனக்கும்
காயம்பட்டு தழும்பாகட்டும்
விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை
விழாதிரு என எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி
என்னை வளரவிடு

எத்தகைய சுவையான பழமாயினும்
உரித்துக் கொடுத்தவை யெல்லாம்
கசக்கவே செய்கின்றன
என்னைப் புரிந்து கொள்
என்னைப் பசி அறியவிடு
குறியீடுகளின் படிமங்களின் தோல்கள்
கடினமானவையே
என்னைக் கடித்து உண்ணவிடு
என் பற்களும் நகங்களும்
சிறிதேனும் பலம் பெறட்டும்
நகர்ந்து எனக்கு வழிவிடு

என்னை இனியேனும்
அலைய விடு
தேட விடு
அறியவிடு
பூசாரியாய் புத்த பிட்சுவாய்
வாழ்வைத் தொடராது
ஒரு சித்தனாய்
ஒரு புத்தனாய்
என்னை மலரவிடு
என்னை நானே அறிய விடு

மீள்பதிவு