Sunday, April 29, 2012

ஏணியாக எப்போதுமிருந்து..

பிழைக்கத் தெரிந்தவர்கள் எல்லாம்
கெட்டிக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள்
நியாயஸ்தர்கள் நாம் தான்
குழம்பிப் போய் இருக்கிறோம்

கண்ணைத் திறந்து பார்க்கச் சொல்லி
கருணைகாட்டச் சொல்லி நாமெல்லாம்
கண்ணை மூடி வேண்டிக்கொண்டிருக்கையில்

சன்னதிக்குள் ஒரு கயவன்
காம லீலைகள் புரிந்து கொண்டிருக்கிறான்

அம்பாள்கண் திறந்து பார்க்கமாட்டாள் என்பதில்
அவன் தெளிவாய் இருக்கிறான்
நாம்தான் குழம்பிப்போய்த் தவிக்கிறோம்

கோவில்கள் கொடியோரின் கூடாரம்
என்கிற அதிரடி வசனங்களால்
நம்மை மெய்சிலிர்க்கச் செய்து
ஆட்சியைப்பிடித்தவர்களின்
வாரீசுகள் எல்லாம்

கோவில் கோவிலாய் போய்
குடும்பத்தோடு நேர்த்திக்கடன்
செலுத்திக் கொண்டிருக்க

நாம் தான் குழம்பிக் கிடக்கிறோம்
அவர்கள் ஊருக்கெது நமக்கெது என்பதில்
எப்போதும் தெளிவாய் இருக்கிறார்கள்

இரண்டு எல்லைகளில்
இருப்பவர்கள் எல்லாம்
பிழைக்கத் தெரிந்தவர்களாய் இருக்க

இடையில் இருக்கும் நாமதான்
குழப்பத்தில் இருக்கிறோம்

இவர்களுக்கெல்லாம்
ஏணியாக எப்போதுமிருந்து
எதை எதையோ இழக்கிறோம்

Thursday, April 26, 2012

சனி பிடித்தல்

சனி பிடித்தல் குறித்து கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?
அது யாரையும் நேரடியாக இஷ்டப்படியெல்லாம்
பிடிக்க முடியாதாம்

பிடிக்கவேண்டிய காலமானலும் கூட
ஆசார அனுஷ்டான பிசகை எதிர்பார்த்து
அப்படிப் பிசகிய இடம் மூலம்தான்
பிடிக்க வேண்டியவரைப் மிகச் சரியாகப்பிடிக்குமாம்

நீங்கள் கூட கேள்விப் பட்டிருக்கலாம் தன்
புறங்காலைமிகச் சரியாக கழுவாத ராஜாவை அந்த
முழங்கால் மூலம் சனிபிடித்த  கதையை

எனக்கும் தங்களைப் போலவே இதிலெல்லாம்
சுத்தமாக நம்பிக்கை இல்லை ஆனாலும்
என் கண் முன்னால் நடந்த ஒரு விஷயம்
இதனை நம்பித் தொலைக்கும்படி செய்துவிட்டது

மதுரையில் எங்கள் வீடு அந்தக் காலனியில்
பஸ் ஸ்டாப்பை ஒட்டி அமைந்திருந்தது
எங்கள் வீட்டின் முன் அமைந்திருந்த வேம்பும்
நான் அடுத்தவர்கள் அமரட்டும் என வாசலில்
போட்டிருந்த சிமெண்ட் பெஞ்சும்
அந்தக் காலனியில் வெகு பிரசித்தம்

காலையில் கல்லூரி மற்றும் அலுவலகத்திற்குச்
செல்லும் பெண்கள் எப்போதும் குறைந்தது
அரை மணிநேரத்திற்குமுன்பாக வருவதும்
எங்கள் வீட்டு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து
ஹோம் ஒர்க் செய்வது அல்லது அரட்டை அடிப்பது
என்பது எல்லோருக்கும் பழகிப் போன ஒன்று

என் மனைவியும் எல்லோரிட்மும்
அனுசரனையாக பேசுவதும்
நான் தேவையில்லாமல் பெரிய மனிதப் போர்வையில்
அவர்களது பேச்சில் கலந்து குழப்பாமலும் இருப்பதும்
அவர்களுக்கும் பிடித்துப் போனதால்
எங்கள் வீட்டு வாசல் எப்போதும் கலகலப்பாய் இருக்கும்

என் மனைவிக்கு கல்லூரி   மற்றும் அலுவலகம்
செல்கிற எல்லோரையும் தனிப்பட்ட முறையில்
மிக நன்றாகத் தெரியும்
யார் யார் எந்த பஸ்ஸுக்குப் போவார்கள்
 யார் யார்இன்று விடுமுறை என்பதெல்லாம் கூட
என் மனைவிக்கு அத்துப் படி
என் மனைவி மூலம் எனக்கும் அத்துப் படி

இப்படித்தான் ஒரு நாள் நான் வீட்டுத் தோட்டத்தில்
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க
என் மனைவி வாசலில் கல்லூரிக்குச் செல்லும்
பெண்களுடன் பேசிக் கொண்டிருக்கையில்
பஸ் வருகிற சப்தம் கேட்டது
அவசரம் அவசரமாக எல்லோரும் எழுந்து ஓடினார்கள்
.பி.ஏ,எகனாமிக்ஸ் புவனாவும் எழுந்து வேகமாக ஓடினாள்

அவள் போகிற அவசரத்தில் கையில் இருந்த
கைக் குட்டையை தவறவிட்டுப் போனதை
நான் பார்த்தேன் .சரி எடுத்து வைத்துக் கொடுக்கலாம்
என நினைத்து நான் வாளியை வைத்துவிட்டு
வாசலுக்கு வரும் முன்
காலை எட்டு மணிக்கே பஸ் பிடித்துப் போகும்
பொறியியல் கல்லூரி மாணவன் பிரபாகரன்
அதைக் கையில் எடுத்துவிட்டான்,
அதை எடுத்தவன்எங்களைக் கவனிக்காமல்
சுற்று முற்றும் பார்த்துவிட்டு
சட்டைக்குள் போட்டுக் கொண்டான்.
அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது

அவன் டென்த் படிக்கிற காலங்க்ளில் இருந்து
இந்த ஸ்டாப்பில்தான் பஸ் ஏறுகிறான்.
அவனுடைய பேச்சு நடவடிக்கை எல்லாமே
 மிக நாகரீகமாக இருக்கும்
ஒரு சாயலில் என் மகன் வயிற்றுப் பேரனின்
சாயலில் இருப்பதால் என மனைவிக்கு அவன் மீது
தனியான அக்கறை.விஷேச நாட்களில் ஏதேனும்
தின்பண்டங்கள் இருந்தாலும் வாங்க மறுப்பான்
என்பதால் நாசூக்காக பிரசாதம் எனச் சொல்லிக்
கொடுக்க முனைவாள்
அப்படிப்பட்டவனின் இந்தச் செய்கை
எனக்கு ஒருமாதிரி வித்தியாசமாகப் பட்டது.
சரி பருவக் கோளாறு என
அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டேன்

மறு நாள் காலையில் எப்போதும் எட்டு மணி
பஸ்ஸுக்கே போகும் பிரபாகரன் இன்றும் தாமதமாக
ஒன்பது மணிக்கு வந்து வாசலில் நின்றிருந்தான்
பெண்கள் ஒவ்வொருவராக வர வர யாரையோ
எதிர்பார்ப்பவன் போல காலனிப் பக்கமே பார்த்தபடி
நின்று கொண்டிருந்தான். தூரத்தில் புவனா
வருவது தெரிந்ததும்மிக வேகமாக அவளை நோக்கி
நடக்க ஆரம்பித்தான்
எனக்குள் சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது

நானும் அவசரம் அவசரமாக மாடிக்குப் போய்
அவர்களைக் கவனிக்கத் துவங்கினேன்.
நேராக புவனாவிடம் சென்றவன்
கொஞ்சம் பணிவாகக் குனிந்து என்னவோ
 சொன்னபடிகைக்குட்டையைக் கொடுத்தான்.
அவளும் அதை மரியாதை நிமித்தம்
சிரித்தபடி வாங்கி நன்றி சொல்வதுபோல் பட்டது
பின் பஸ் ஸ்டாப் வரை பிரபாகரன் என்னவோ
பேசிக் கொண்டேவந்தான்.
 சுய அறிமுகமாக இருக்கலாம்
அவளும் மரியாதை நிமித்தம் தலையாட்டிக்
கொண்டே வருவதுதெரிந்தது.
பின் சிறிது நேரத்தில் பஸ் வரவும் புவனா பஸ்ஸில்
ஏறிக் கொண்டாள்.பிரபாகரனும் அதில் ஏறிக் கொண்டான்
அது பிரபாகரன் போக வேண்டிய பஸ் இல்லை

அப்புறம் பல நாட்கள் பிரபாகரன் அவன் போகவேண்டிய
எட்டரை மணி பஸ்ஸில் போகவே இல்லை
எப்போதும் இந்த ஒன்பது மணி பஸ்ஸுக்குத்தான் வந்தான்
மாலை கூட அவன் கல்லூரி மாணவர்கள் எல்லாம்
நாலு மணி பஸ்ஸில் வந்தால் இவன் தாமதமாக
அந்தக் கல்லூரிப் பெண்கள் வருகிற நேரத்தை
அனுசரித்து வரத் துவங்கினான்.சில சமயம்
சனிக்கிழமைகளில் புவனா மட்டும் கல்லூரி போவாள்
என் மனைவி கேட்டபோது ஸ்பெஷல் கிளாஸ் என்றாள்
சொல்லி வைத்த்தைப் போல பிரபாகரனும் அன்று
அதே பஸ்ஸில் கல்லூரி போய்க்கொண்டிருந்தான்
இப்படியே ஓராண்டு முடிந்தது

கோடை விடுமுறையில் ஒரு நாள் புவனா பெட்டி
படுக்கைககள் சகிதம் பஸ் ஸ்டாப் வந்திருந்தாள்
உடன் அவளுடைய அக்காவும் அவருடைய கணவனும்
நின்றிருந்தார்கள்.

என் மனைவி புவனவைப் பார்த்து
 "லீவுக்கு ஊருக்கா " என்றாள்

புவனா அருகில் வந்து "இல்லை ஆண்டி வீட்டில்
எல்லோரும் மாஸ்டா டிகிரியை சென்னையில் செய்யச்
சொல்கிறார்கள் அப்போதுதான் எக்ஸ்போஸர்
நன்றாக இருக்கும் என்கிறார்கள்.
எனக்கு இந்த ஊர் விட்டுப் போக
மனமே இல்லை " என்றாள்
அவள் முகம் வாட்டமாக இருந்தது

அப்புறம் பஸ் வந்ததும் அவர்கள் ஏறிப் போவிட்டார்கள்

அடுத்த ஆண்டு கல்லூரி திறந்த நாளில் இருந்து
எங்கள் பஸ் ஸ்டாப் மீண்டும்
களைகட்ட ஆரம்பித்துவிட்டது
பல புதிய முகங்களுடன் பழைய முகங்களும் சேர
பஸ் ஸ்டாப்பே ஒரு நந்தவனம் போல இருந்தது
எல்லோருடைய முகங்களிலும்
சந்தோஷச் சாயலைப் பார்க்க
எங்களுக்கும் மிக பூரிப்பாய் இருந்தது

அந்தக் கூட்டத்தில் பிரபாகரன் மட்டும்
வித்தியாசமாக இருந்தான்
பழைய கல கலப்பில்லை.
அவன் மெலிந்து வாடிப் போய் இருந்ததும்
தாடி மீசையும் அவனைத் தனித்துக் காட்டியது
உண்மையில் எனக்கும் என் மனைவிக்கும்
அவனைப் பார்க்கையில் மனம் என்னவோ செய்தது.
எப்படியாவது ஆறுதல் சொல்லி
அவனை பழைய நிலைக்குக் கொண்டுவரலாம்
என நினைத்தோம்.ஆனால் மிகச் சாமர்த்தியமாக
மறுபுறம் உள்ள மர நிழலில் நிற்பதைப் போல நின்று
அல்லது மிகச் சரியான நேரத்திற்கு வருவதைப்
போல வந்து பஸ் ஏறி எங்க்களை தவிர்த்தான்

எங்களுக்கு அவன் செயல்கள் மிகுந்த வேதனை அளித்தது
அவன் இவ்வாறு நடந்து கொள்வதன் சரியான காரணத்தைத்
தெரிந்து கொண்டு அவனுடன் பேச முயல்வோம்
 எனஅவன் இல்லாத நேரத்தில்
அவன் நண்பன் கார்த்திக்கிடம் விசாரித்தோம்
அவன் சுருக்கமாக "போன வருடத்தில் கொஞ்சம்
டைவர்ட் ஆகிவிட்டான் ஆண்டி.
யார் சொல்லியும் கேட்கவில்லை
முதல் இரண்டு வருடம் அவன்தான் எங்கள் வகுப்பில்
 முதல் மாணவன்போன வருடம் சரியாக
வகுப்புக்கு வரவில்லை.அரியஸ் விழுந்துவிட்டது
இந்த வருடமும் அப்படித்தான் இருக்கிறான்.
வருடம் முடிப்பான்
கோர்ஸ் முடிப்பது கஷ்டம் "என்றான்

இவன் உறுதியாக காதல் விவகாரத்தில்தான்
திசை தவறி இருப்பான்என நாங்கள் நினைத்துக் கொண்டோம்

.மகா நதி சினிமாவில்கமலும் அவரது குடும்பமும்
 கௌரவமாக மிக சந்தோஷமாக ஊரே மதிக்கும்படி இருக்கும்
ஒரு நாள் தங்கள் முன்னே செல்கின்ற காரைப் பார்த்து
"அது நம்முடைய பழைய காரைப் போல இருக்கிறது
அதை விரட்டிப் பிடிப்பா "என அவர் மகள் சொல்வாள்
கமலும் விரட்டிப் பிடிப்பார்.அவர்கள் மட்டும்
அந்தக் காரைத் தொடர வில்லையெனில் அவர்கள் வாழ்வில்
அத்தனை சீரழவு ஏற்ப்பட்டிருக்க சந்தர்ப்பமே இல்லை
சனி அந்த ஒரு வார்த்தையில்நுழைந்ததைப் போல்
பிரபாகரன் வாழ்க்கையில் அந்த தவறிய கைக்குட்டை
நுழைந்ததோ என எனக்குப் பட்டது

உண்மையில் புவனாவும் அவனைக் காதலித்தாளா
அல்லது இவனாக ஒருதலைப் பட்சமாக காதலை
வளர்த்துக் கொண்டு அவஸ்தைப் படுகிறானா
என குழப்பமாக இருந்தது முத்ல் ஒருமாதம்
 எங்கள் பஸ் ஸ்டாப்பில் வந்து பஸ் ஏறிக்
கொண்டிருந்தவன் அப்புறம் வரவேயில்லை

நண்பர்களிடம் விசாரித்த போது "இந்த ஸ்டாப் வரப்
பிடிக்கவில்லை எனச் சொல்லி அடுத்த ஸ்டாப்பில்
ஏறுகிறான் " என்றார்கள்
சில நாட்கள் கழித்து விசாரித்த போது
கல்லூரிக்கு சரியாக வருவதில்லை என்றார்கள்
ஊரில் இல்லை என்றார்கள்.
நாங்களும் அவனை மறந்து போனோம்

கதையும் இங்குமுடிந்து போனது

சினிமாவில் தவிர்க்க முடியாமல் சில
வருடங்களுக்கு பின்பு எனக் காட்டுவதைப் போல..

ஐந்து வருடங்க்களுக்கு பின்பு ஒரு நாள்
ஒரு வெள்ளிக்கிழமை நாங்கள் பூஜை வேலையாக
பிஸியாக இருக்கையில் வாசலில் யாரோ "ஆண்டி "
என அழைப்பது கேட்க வாசலை எட்டிப் பார்த்தேன்

புவனா கைக் குழந்தையுடன் கேட்    அருகே
நின்று கொண்டிருந்தாள்.அவசரமாக கதவைத் திறந்து
உள்ளே வரும்படி அழைத்தேன் வெளியில்
நின்றிருந்தவரைக் காட்டி என் கணவர்
என அறிமுகப் படுத்தினாள்

என மனைவிக்கு ரொம்ப சந்தோஷம்.
"வெள்ளிக்கிழமையும் அதுவுமா தம்பதிகள் வீட்டுக்கு
வந்தது ரொம்ப சந்தோஷம் " எனச் சொல்லி
தாம்பூலம் வைத்துக் கொடுத்து உபசரித்தாள்
 பின் குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு
குழந்தைக்கு என்ன பேரடி வைத்திருக்கிறாய் "என்றாள்

"பிரபா " என்றாள் புவனா

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்
கொள்வதைப் பார்த்து என்ன நினைத்தாளோ
"இவங்க அம்மா பேரு பிரபாவதி அதுதான் சுருக்கமாக
பிரபா " என்றாள்


Tuesday, April 24, 2012

சின்னச் சின்ன குறிப்புகள்..


மார்பினை மீறித் துருத்தாத வயிறு
அவன் ஆரோக்கியத்தை
பறைசாற்றிப் போனது

வரவினை மீறாதஅவன் செலவு
அவன் செல்வந்தனாவதை
உறுதி செய்துப் போனது

எல்லை மீறாத அவனது பரிச்சியங்கள்
அவனது வளர்ச்சியை
நிச்சயித்துப் போனது

அறிவினை மீறாத அவனது மனது
அவனது நடத்தைக்கு
வழி சமைத்துப் போனது

சமூக மனிதனுக்கு அடங்கிய அவனது
தனிமனித செயல்பாடுகள்
அவன் தரம் சொல்லிப் போனது

தகுதி மீறாது அவனடையும் பதவிகள்
அவன் வெற்றிகள் தொடருமென
பறைசாற்றிப் போனது

பொது நலம் மறக்காத  அவனது சிந்தனைகள்
அவன் சராசரி இல்லையென்பதை
நிரூபித்துப் போனது

இலக்கினுள் அடங்கிய அவன் படைப்புகள்
காலத்தை எளிதாய் கடக்கும் என்பதை
சூசகமாய்ச் சொல்லிப் போனதுSaturday, April 21, 2012

பெண் சிசுப் பிறப்பை இன்னும் சிறிது காலம் ஒத்திவைப்போமா ?

இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது நண்பனின்
மகள் திருமணத்திற்காக மணமகன் தேடி
அவர்கள் சமுதாயத்தின் சார்பாக நடைபெற்ற
சுயம்வரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்

அந்த நிகழ்ச்சிக்கு திருமணத்திற்கு மணமகள் தேடி
 மண மகன்கள் இரு நூறுக்கும் மேற்பட்டோர்
 பதிவு செய்திருந்தார்கள்
மணமகன் தேடி பெண்கள் இருபது பேர் மட்டுமே
பதிவு செய்திருந்தார்கள்.
இத்தனைக்கும் மணமகள் பதிவுக்கு
மிகக் குறைந்த கட்டணமே விதித்திருந்தார்கள்

நிகழ்ச்சித் தொகுப்பாளர் மேடையில்
இருபது மணமகனகள் விவரம் வாசித்து முடித்து
பின் இரு பெண்கள் குறித்த
விவரங்கள் மட்டும் வாசிப்பதும்
அடுத்து அதேபோல இருபது மணமகன்கள் பெயர்கள்
வாசிப்பதும் பின் இரண்டு மணமகள்கள் விவரம்
வாசிப்பதுமாகத் தொடர்ந்தார்கள்

விவரம் விசாரித்த போது பெண்கள் விவரம் முழுவதும்
படித்துவிட்டால் மண்டபம் உடன் காலியாகிவிடும்
கூட்டம் எல்லாம் பெண் தேடி வந்துள்ள கூட்டமே
என விளக்கினர்

மணமகள் விவரம் வாசிக்கத் துவங்கியதும்
மண மகனின் பெற்றோர் கொண்ட துடிப்பும்
மணமகள் தாய் தந்தையரை நோக்கி பரபரப்பாக
ஒட்டு மொத்தமாய் ஓடியதையும் நினைக்க
இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது

 தொடர்ந்து இது சம்பந்தமாக நான விசாரிக்கையில்
 நண்பனின் சமுதாயத்தில் மட்டும் இல்லை
அனைத்து சமுதாயத்திலும் இப்போது திருமணத்திற்கு
காத்து நிற்கும் பெண்களின் சதவீதம்
மிகக் குறைவாக இருப்பதையும் அதன் காரணமாக
முன்பு நிறைய முதிர் கன்னிகள்
காத்திருத்தலைப் போலஇப்போது நிறைய
முதிர் கண்ணன்கள் அதிகமாகக்
திருமணத்திற்கு காத்திருப்பதையும்
கண் கூடாக அறிந்தேன்

இதன் விளைவாக தற்போது பரவலாக
கீழ்குறித்த மாறுதல்கள்
தவிர்க்க முடியாமல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன

முன்பு போல பெண் வீட்டார் மாப்பிள்ளை
தேடி வரட்டும் என மப்பாக உட்கார்ந்திருப்பதில்லை
பெண் இருக்கிற விவரம் தெரிந்தால் போதும்
பெண் வீட்டைத் தேடி ஓடத் துவங்கிவிடுகிறார்கள்

 கறாராக வரதட்சனை  சீர் செனத்தி  பேசுவதை குறைக்கத்
துவங்கியுள்ளார்கள்

வெளி நாட்டு பையன் என்றாலே
பெண் வீட்டார் பெண் கொடுக்க மறுத்துவிடுவதால்
பையன் வீட்டார் வெளி நாட்டுச் ஜம்பப் பேச்சை
குறைத்துக் கொண்டு சார்ட் டெர்ம்தான் போய் உள்ளான்
இங்கேயேதான் இருப்பான என உறுதி தருகிறார்கள்

பையன் குறித்து நிச்சயதார்த்தத்திற்குப் பின் கூட
ஏதாவது தவறான தகவல்கள் தெரிந்தால் பெண்களே
துணிந்து திருமணத்தை நிறுத்தத் தயாராகிவிடுகிறார்கள்
பெண்ணுக்கு நிச்சயம் வேறு பையன் கிடைப்பான்
பையன் பாடுதான் கஷ்டம்

இப்படிபல நம்பிக்கையூட்டும் மாறுதல்கள் ஒருபக்கம்
நேர்ந்து கொண்டிருந்தாலும் கூட ......
.
அதிகத் தகுதியும் அதிக சம்பாத்தியமும்
 உள்ள பெண்ணைத் திருமணம் செய்ய
நேர்கிற நிலையிலு ம அடுத்த மாதம் முதல்
பெண்ணின் சம்பளம் அவர்கள் விட்டிற்குத்தான்
வரப் போகிறது என்கிற போதிலும்
பெண் வீட்டார்தான் முழுச் செலவையும் ஏற்கவேண்டும்
என்கிற பழைய பத்தாம் பசலித்தனம் மாறவில்லை
செலவினைப் பகிர்ந்து கொள்ளும் பக்குவம் வரவில்லை

பெண் வீ ட் டார் திருமணம் நடத்துபவர்கள் எனவும்
பையன் வீ ட்டாருக்கு ம் அதற்கும் சம்பந்தமில்லை 
என்பதுபோலவும் இவர்கள் வெறும்
கௌரவ விருந்தினர்கள் 
போலவுமே நடந்துகொள்கிறார்கள்  
அதனால் கல்யாணத்தில்
 மாப்பிள்ளை வீட்டாரின் பந்தா வழக்கம்போல்
எல்லாம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன

பையன்கள் மிகத் தெளிவாக திருமணம் முடியும்வரை
அம்மா முந்தானையில் ஒளிந்து கொண்டு
கல்யாணப் பேச்சுவார்த்தைகளில் தனக்கு
சம்பந்தம் இல்லாத விஷயம் போலஇருந்து கொண்டு
வேடிக்கைப் பார்க்கிறார்கள்

இவையெல்லாம் மாறவேணும்  இன்னும் சிறிது காலம்
பெண் சிசுப் பிறப்பை தள்ளிப் போட்டால்
எல்லாம் சரியாகிப் போகுமோ என்கிறஆதங்கம்
என்னுள் வளர்வதை ஏனோ  தவிர்க்க இயலவில்லை

Friday, April 20, 2012

இணையற்ற கவியாக சுருக்கு வழி

வாக்கியக் குச்சிகளை ஒடித்து
உன் மனோலயப்படி
சுள்ளிகளாக்கி பரப்பி வை
நீள ஒழுங்கு ஒரு பொருட்டில்லை

வார்த்தைகளை
ஊதி ஊதிப் பெரிதாக்கி உப்பவை
இரத்தசோகைப் பிடித்தவன் முகம் போலது
வாக்கியத்திற்கு பொருந்தாவிடினும்
அது ஒரு பொருட்டில்லை

உன் படைப்பை எப்போதும்
ஒரு புதர் போல்
ஒரு புதிர்போல் பராமரி
எதையும் விளங்கச் சொல்லி
சராசரியாகிப் போகாதே

புரிந்த படைப்பை விட
புரியாத படைப்பே
நிறையச் சொல்லிப் போகும்
புரியாதவன் நிறையப் புரிந்து கொள்வான்
விளங்காதவன் நிறைய விளங்கிக் கொள்வான்

எவனை மிதித்தோ
எவனை அணைத்தோ
வெளிச்ச மேடையில் ஒரு இடம் பிடி
சந்தேகமே இல்லை
தற்காலக் கவி உலகில்
இணையற்ற இறவாக் கவி நீதான் இனி


Wednesday, April 18, 2012

அது இருந்தா இது இல்லே


அது இருந்தா இது இல்லே
இது இருந்தா அது இல்லே
இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்து வந்தால்
இணைத்துப் பார்க்க நேரம் இல்லே

பசியில் துடிச்சா சோறு இல்லே
சோறு இருந்தா பசியே இல்லே
பசியும்  சோறும் சேர்ந்து இருந்தா
பிச்சுப் போட நேரம் இல்லே

குளிராய் இருந்தா போர்வை இல்லே
போர்வை இருந்தா குளிரே இல்லை
குளிரும் போர்வையும் சேர்ந்திருந்தா
புத்தி தூங்க விடுவ தில்லே

பணிவாய் இருந்தா பதவி இல்லே
பதவி வந்தா  பணிவு இல்லே
பணிவும் பதவியும் சேர்ந்து வந்தா
நேரம் நமக்கு நல்லா இல்லே

கரண்டு இருந்தா மூடு இல்லே
மூடு இருந்தா கரண்டு இல்லே
கரண்டும் மூடும் இணஞ்சிருந்தா
எழுத நமக்கு நேரம் இல்லே


Friday, April 13, 2012

விசித்திரப் பூதங்கள்

கோடிக் கண்களும்
கோடிக் காதுகளும்
பல கோடிக் கைகளும் கொண்டு
மூளையும் காதுகளும் அற்ற
 எந்த அரசும் விசித்திர பூதங்களே

அதனால்தான்..
குடிமக்களின் தலையைக் காக்க
தலைக் கவச ஆணையைக்
கட்டாயப் படுத்தும் அவை களுக்கு
மது பானம் மூலம்
குடல் கருகுவது தெரிவதே இல்லை

 மிக்ஸியும் கிரைண்டரும்
இலவசமாய் தரும் அவை களுக்கு
அதனைப் பயன்படுத்த
மின்சாரம் வேண்டும் என்கிற சிறுதகவல்
அதற்குப் புரிவதே இல்லை

மக்களின் பசித்துயர் தீர்க்க
விலையில்லா அரிசி தரும் அவை களுக்கு
எரி பொருள் விலையேற்றமோ
மளிகைப் பொருட்கள் விலை நிலவரமோ
அதற்கு பொருட்டாய் இல்லை

அனைத்துச் சீர்கேட்டுக்கும்
ஆண்டு முடித்த கட்சியையே
குறை சொல்லித் தப்பிக்கும் அவை களுக்கு
அதை சரிசெய்யத்தான்
இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்கிற
சிறு உணர்வு கூட இருக்கச் சாத்தியமே இல்லை

ஏனெனில்
எதிர்ப்பாளர்களை மிகச் சரியாக்க் கண்டறிய
கோடிக் கண்களும்
எதிர்ப்புகளை ஒரு நொடியில் நசுக்கி எறிய்
ஆயுதங்களுடன் கூடிய
கோடிக் கைகளும் கொண்ட
 இந்த விசித்திர பூதங்களுக்கு
மூளையும் காதுகளும் மட்டுமல்ல
இளகிய மனம் கூட
இருந்ததாக சரித்திரமே இல்லை

நாம் இப்படிப  பொறுமையாய்
எதையும் சகித்துக் கொண்டு
விட்டேத்தியாய்
வாழ்ந்துத் திரிகிற வரையில்
வந்த  பூதத்திற்காயினும்  சரி
இனி வர இருக்கிற  பூதத்திற்காயினும் சரி
அது வளர்ச்சி கொள்வதற்கான சாத்தியமும்
சத்தியமாய் இல்லவே இல்லை


Monday, April 9, 2012

ஒரு நிகழ்வு- சிறு பக்குவ்ம்


சில மாதங்களுக்கு முன்பு
ஒரு சனிக்கிழமை மதிய வேளை
சில அவசர வேலைகளை முடித்துவிட்டு
இரண்டு சக்கர வாகனத்தில்
வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்

பழங்கானத்தம் தாண்டி
ஜெய்கிந்த்புரம் மார்கெட் அருகில் வந்து
கொண்டிருக்கும்போது ரோட்டில் ஒரு சிறுகும்பல்
ரோட்டை மறைத்து எதையோ
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது

சாலை ஒரத்தில் கிடைத்த இடைவெளியில்
நான் வண்டியை உருட்டியபடி
என்ன நடந்து கொண்டிருக்கிறது
என எட்டிப் பார்த்தேன்

கூட்டத்தின் மத்தியில் இரண்டு பேர் கத்தியை
கையில் தூக்கியபடி ஒருவரைஒருவர் குத்த
ஆக்ரோஷமாய் முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்

நிச்சயம் இன்னும் சிறிது நேரத்தில் ஒரு
கொலை விழும் என உறுதியாய்த் தெரிந்தது
நமக்கு எதுக்கு வம்பு இடத்தைக் காலிசெய்வோம்
என முடிவு செய்து வண்டியை உருட்டியபடி
கூட்டத்தைவிட்டு மறுபுறம் வெளீயேறி
வண்டியை ஸ்டார்ட் செய்தேன்

வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பத் துவங்குகையில்
யாரோ வேகமாய் பின்னிருக்கையில் உட்கார
முயற்சிக்க , யாரெனஅறிந்து கொள்ளத் திரும்பினேன்
அதற்குள் என் கழுத்தில் கத்தியை வைத்தபடி
"வேகமாய் வண்டியை போலீஸ் ஸ்டேஸனுக்கு விடு
இல்லையேல் குத்திவிடுவேன் " எனக் கத்தினான்
சண்டையிட்ட இருவரில் ஒருவன்

நான் அதிர்ந்து போய் வண்டியைக் கிளப்பினேன்
அதற்குள் கைலி அவிழ்வதைக் கூட கவனியாது
கத்தியைத் தூக்கியபடி " வண்டியை நிறுத்து
இல்லையேல் குத்திப்புடுவேன் " எனக் கத்தியபடி
என்னை துரத்த ஆரம்பித்தான் அடுத்தவன்

அந்தச் சாலை அதிக போக்குவரத்து
நெருக்கடி உள்ள சாலை.மார்கெட் பகுதி ஆதலால்
ஜன நடமாட்டமும் அதிகம் இருக்கும்.
கழுத்தில் கத்திவைத்தபடி ஒருவன்
கத்தியுடன் வெறிபிடித்துத் துரத்தும் ஒருவன்
என்ன செய்கிறேன் என எனக்கேத் தெரியவில்லை
ஆனது ஆகட்டும் என நான் வாழ்வில் இதுவரை
ஓட்டியே அறியாதவேகத்தில் வண்டியை ஓட்டி
போலீஸ் ஸ்டேசன் வாசத்தில் நிறுத்தினேன்
அதுவரை என் உயிர் என்னுடலில்இல்லை
அவன் அவசரமாக இறங்கி ஸ்டேசனுக்குள்
தஞ்சம் புகுந்து கொண்டான்.
நானும் தப்பித்தேன் பிழைத்தேன் என்று வீடு
வந்து சேர்ந்தேன்.எனக்கு வெகு நேரம் வரை
பேச்சே வரவில்லை

வண்டியை எடுக்காவிட்டால் இவ்ன் குத்தி இருப்பான்
மக்கர் செய்திருந்தாலோ வேகமாக வராவிட்டாலோ
இவன் குத்தி இருப்பான்.அவசரத்தில்
வந்த வேகத்தில் எதன் மீதாவது மோதிப் போய்ச்
சேர்ந்திருக்கவும் அதிக வாய்ப்புள்ள
நெருக்கடியான சாலை
நினைக்க நினைக்க சம நிலை திரும்ப
 வெகு நேரம் ஆனது

நான் ஏன அந்தப் பக்கம் வந்தேன்
எல்லோரையும் போல நானும்
வேடிக்கைப் பார்க்காது
ஏன் கடந்து போக நினைத்தேன்
சிறிது தூரம் போய் வண்டியை
ஸ்டார்ட் செய்திருந்தால்
நிச்சயம் பிரச்சனை இல்லை
ஏன் அங்கே ஸ்டார்ட் செய்தேன்
எனக்கேதும் புரியவில்லை

நமக்கு நேரம் சரியில்லையெனில் அது
எந்த ரூபத்திலாவது வரும்
.நமக்கு நேரம் சரியாக இருந்தால் எந்தப்
பெரிய துயரையும் வெல்லும் சக்தி
நம்முள் இருந்து தானாகவே வரும்
இதுநமக்கு அறிவுக்கும் சக்திக்கும்
 அப்பாற்பட்டது எனமுடிவு செய்து கொண்டேன்

 அதற்குப் பின் இப்போதெல்லாம் அவ்வளவாக
எதற்கும் அலட்டிக் கொள்வதில்லை
அது மிக மிக நல்லதாயினும் சரி
மிக மிக மோசமானதாயினும் சரி

Friday, April 6, 2012

மாற்றான் தோட்டத்து மல்லிகை


அந்த ஜவுளிக் கடலில் நானும் என் மனைவியும்
பட்டுச் சேலைகளைஅலசியெடுத்துக் கொண்டிருந்தோம்
விற்பனையாளரும் சலைக்காமல்சேலைகளை
எடுத்துப் போட்டபடியே இருந்தார்.

எங்களுக்கு அடுத்தும் ஒரு தம்பதியினர்
எங்களைப் போலவே அலசி எடுத்துக் கொண்டிருந்தனர்

இடையிடையே என் மனைவிஅவர்களைப் பார்ப்பதும்
அந்தக் குவியலைப் பார்ப்பதுமாய் இருந்தார்

அதைப் போலவேஅந்தப் பெண்மணியும்துணிகளையும்
என் மனைவியை ப் பார்ப்பதுமாக இருந்தார்

"அவர்கள் தெரிந்தவர்களா " என்றேன்

" இல்லை " என்றார

முடிவாக நான்கு சேலைகளைத்
தேர்ந்தெடுத்து அதையே புரட்டிப் புரட்டிப் பார்த்து
ஒன்றை ஒதுக்கு வைத்தார்[

அதைப் போலவே அடுத்திருந்த பெண் மணியும்
மூன்று சேலைகளத் தேர்ந்தெடுத்து புரட்டி புரட்டிப்
பார்த்து ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்

பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச்
சிரித்துக் கொண்டனர்

என் மனைவி பின் அருகில் இருந்த பெண்மணியின்
பக்கம் போய் அவர் வேண்டாம் என
ஒதுக்கிவைத்திருந்தஇரண்டு சேலைகளில்
ஒன்றை எடுத்து "இது வேண்டாம் தானே ..
 நான் எடுத்துக் கொள்ளவா " என்றார்

அந்தப் பெண்மணியும் என் மனைவி
முடிவாக ஒதுக்கி இருந்த ஒரு பச்சை நிறச்
சேலையை எடுத்துக் கொண்டு
"எனக்கு பச்சை என்றால் ரொம்ப இஷ்டம்
இதை எடுத்துக் கொள்கிறேன் " என்றார்

உடன் வந்த கணவர்மார்கள் இருவரும்
சிரித்துக் கொண்டோம்
விற்பனையாளரும் எங்களைப் பார்த்து
லேசாகச் சிரித்தார்
அவர் அருகில் போய் " என்ன காரணம் "என்றேன்

"என் அனுபவத்தில் எல்லா பெண்களும்
தான் கலைத்துப் போட்ட சேலைகளில் இருந்து
தேர்ந்தெடுப்பதைவிட அருகில் இருப்பவர்கள்
தேர்ந்தெடுப்பதில் இருந்துஒன்றை எடுப்பதில்தான்
அதிகம் சந்தோஷம் கொள்கிறார்கள்"என்றார்

"நல்ல வேளை இத்தோடு முடிந்ததே " என்றேன்

விற்பனையாளர் " இது கிளைமாக்ஸ் இல்லை
கிளைமாக்ஸ் உங்கள் வீட்டில்தான் " என்றார்

எனக்கு காரணம் புரியவில்லை

வீட்டில் அனைவரிடமும் சேலையை பலமுறை
புரட்டிக் காண்பித்து அவர்கள் கருத்தில்
சந்தோஷம் கொண்டிருந்த மனைவி மெதுவாக
என்னருகில் வந்து " நாம் எடுத்து வைத்திருந்த
 பச்சைசேலை இதை விட நன்றாக இருந்ததாக
எனக்குப் படுகிறது.அந்த அம்மணி
அதை விடாப்பிடியாக்எடுக்கையிலேயே
 நான் யோசித்திருக்க வேண்டும் " என்றார்

" நான் இல்லையில்லை இதுதான்
உனக்கு மிக நன்றாக இருக்கிறது"என்றேன்

" நீங்கள் அந்த சேலைக்கும்
அப்படித்தான் சொன்னீர்கள்
இதற்கும் இப்படித்தான் சொல்கிறீர்கள்
அதற்குத்தான் சேலை எடுக்க
பெண்களாகப் போகவேண்டும் என்பது
என் தங்கை கூட வந்திருந்தால் நிச்சயம்
அந்தச் சேலையைத்தான்
 எ டுக்கச் சொல்லி இருப்பாள் "என்றார்

எனக்கு விற்பனையாளர் சொன்ன கிளைமாக்ஸ்
அர்த்தம் இப்போதுதான் புரிந்தது

பாவம் அந்தப் பெண்மணி கூட வந்திருந்த
அவருடைய கணவர் கூட இந்த சமயம்
 இதுபோன்றஅவஸ்தையை
அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடும்

அண்ணா அவர்கள் " மாற்றான் தோட்டத்து
 மல்லிகைக்கும்மணமுண்டு " எனச்
சொன்ன மொழி ஆண்களுக்கு
மட்டும்தான் எனப் புரிந்து கொண்டேன்

பெண்களுக்கு என்றால் நிச்சயம்
"மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கு மட்டுமே மணமுண்டு " எனச்
சொல்லி இருப்பார் எனப் பட்டது எனக்கு


Tuesday, April 3, 2012

எதிர்மறையே எப்போதும் முன்னே வா...

பசியே வா

ஊழிக்கால நெருப்பாய்
குடல் முழுதும் பரவி
முற்றாக என்னை எரி
எனக்கு ருசியின் அருமையை
முழுமையாய் ருசிக்க வேண்டும்

பிரிவே வா

இதயத்தோடு
இரண்டறக் கலந்தவைகளையெல்லாம்
கிழித்துத் தூர எறி
நான அன்பின் ஆழமதை
அணுஅணுவாய் ரசிக்க வேண்டும்

பகையே வா

உன் போர்த்தந்திரங்களையெல்லாம்
வெறியோடு பயன்படுத்தி
என்னை நிர்மூலமாக்க முயற்சி செய்
இருக்கும் பலம் போதாது
நான் இன்னும் பலம் பெற வேண்டும்

அஞ்ஞானமே வா

நீர் மறைத்த நிலமாய்
ஞானத்தை என்னிடமிருந்து
முற்றாக மறைத்துவை.
அசுர வெறியோடு தேடிப் போராடி
நானாக அதை அடைதல் வேண்டும்

எதிர்மறையே வா

பகலுக்கு முன்வரும் இரவாய்
சுகத்திற்கு முன் வரும் துயராய்
எப்போதும் நீயே முன்னே வா

நேர்மறையின்
அருமையையும் பெருமையையும்
 நான் முழுமையாய்உணர  வேண்டும்


Monday, April 2, 2012

ஒரே ஒரு சொற்றொடர்..

காவியம் படைக்க வேண்டாம்
கதையோ கவிதையோ கூட வேண்டாம்
ஒரே ஒரு வாக்கியத்தை
உலகுக்கு வழங்கிச் செல்ல முயல்வோமா ?

வாழ்ந்த வாழ்வை
அர்த்தப் படுத்தக் கூடியதாய்
ஒட்டு மொத்த  வாழ்வின்
அனுபவங்களை உள்ளடக்கியதாய்
வாழத் துவங்குவோருக்கு
நல் வழியைக் காட்டக் கூடியதாய்...

ஒரே ஒரு சொற்றொடரை
கொடுத்துச் செல்ல முயல்வோமா?

"உன்னையே நீயறிவாய் "என்பதாய்
"ஆசையே அழிவுக்கு காரணம் " என்பதாய்
'யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்பதாய்
"வியர்வை காயும் முன் கூலியைக் கொடு "என்பதாய்
"இதுவும் கடந்து போகும்" என்பதாய்
""எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல்
வேறொன்றும் அறியே பராபரமே " என்பதாய்...

இப்படி
ஒரே ஒரு நன்மொழியை
படைத்துக் கொடுக்க முயல்வோமா ?

வார்த்தை தேடும் முயற்சியில்
நமக்கு வாழ்வின் அர்த்தம் புரியவும்
வாழ்வின் அர்த்தம் புரிந்ததால்
வாக்கியமும் கைகூட வாய்ப்பதிகம் என்பதாலும்...

காவியம் படைக்க வேண்டாம்
கதையோ கவிதையோ கூட வேண்டாம்
ஒரே ஒரு சொற்றொடரை
உலகுக்கு வழ்ங்க முயல்வோமா ?