Wednesday, January 29, 2020

அரைப்பைத்தியமும் முழுப்பைத்தியமும்

சமீபமாக ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும் போது எனது இருக்கைக்கு அருகாமையில் இருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி மிகவும் பதட்டமாகவே இருந்தார்...முஹுர்த்த நேரம் நெருங்க நெருங்க இன்னும் பதட்டமாகி திருமண மேடையையும் மண்டப வாயிலையும் திரும்பத் திரும்பப் பார்த்தபடி   இன்னும் பதட்டமானார்...அவர் செய்கையைப் பார்க்கப் பார்க்க எனக்கும் நிச்சயம் ஏதோ நடக்கப் போகிறது..போலீஸோ இல்லை யாரோ வந்து எதற்காகவோ திருமணத்தை நிறுத்தப் போகிறார்கள்.அந்த விசயம் எப்படியோ இந்தப் பெண்மணிக்குத் தெரிந்திருக்கிறது..அதனால்தான் இத்தனைப் பதட்டமடைகிறார் எனப் புரிந்து கொண்டு நானும் பதட்டமாய் இருபக்கமாய் மாறி மாறி பார்க்கத் துவங்கினேன்.சிறிது நேரத்தில் கெட்டி மேளம் கெட்டி மேளம் எனச் சப்தம் வர மண மேடை பக்கம் திரும்பி தம்பதிகள் மீது அட்சதையைப் போட்டு ஆசீர்வதித்துவிட்டு அந்தப் பெண்மணியைப் பார்த்தேன்.அவரும் அது மாதிரியே செய்துவிட்டு நெஞ்சில் கைவைத்துப் பெருமூச்சு விட்டு விட்டு ஆண்டவனுக்கு நன்றி சொல்வது போல வானம் நோக்கி கைகளைக் குவித்து வணங்கினார்..எனக்கு இதற்கு மேலும் பொறுமையாய் இருக்க முடியவில்லை..என்ன விசயம் எனத் தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டைவெடித்துவிடும் போலாகிவிட்டது...பின் இயல்பாக நகர்ந்து அமர்வது போல் அவர் அருகில் அமர்ந்து அவர் யாருக்கு உறவு முறை என்பதையெல்லாம் விசாரித்து கொஞ்சம் இயல்பான நிலைக்கு அவர் வந்ததும் "என்னம்மா ரொம்ப நேரமா உங்களை கவனிச்சுக்கிட்டே வர்றேன்..ரொம்ப டென்ஸனாகவே இருத்தீங்க என்ன காரணம் " என்றேன்.. அவர் நிதானமாகவே பேச ஆரம்பித்தார்.." இப்ப எல்லாம் எந்தக் கல்யாணத்துக்குப் போனாலும் இப்படித்தான் டென்ஸனாயிடுது.தாலி கட்டுறதுக்குள்ளே யாரும் வந்து என்னவோ சொல்லி கல்யாணத்தை நிறுத்திடுவாங்களோன்னு மனசு பட படன்னு அடிச்சிக்கிறுது...அதைத் தடுக்க முடியலே " என்றார்..எனக்குத் தூக்கி வாரிப் போட்டது...அட...இது சீரியல் மெண்டல் எனப் புரிய முதலில் சிரிக்கத் தோன்றியது.பின் யோசித்துப் பார்த்து அடக்கிக் கொண்டேன்..காரணம் முழுப்பைத்தியத்தைப் பார்த்து அரைப்பைத்தியம் சிரிச்சா நல்லாவா இருக்கும்..

Wednesday, January 22, 2020

பார்க்க மட்டுமல்ல பகிரவும்

இதை அனைவருக்கும் பகிரலாமே..

Tuesday, January 21, 2020

சாத்வீகமாய்.....

எங்கள் வீட்டுத் தோட்ட மாமரத்தில்
கைக்கெட்டும் உயரத்தில்
நம்பிக்கையுடன்
கூடுகட்டி முட்டையிட்டு
அடைகாத்துக் கொண்டிருக்கிறது
சிறு பறவை ஒன்று

பறவையினங்களுக்கு எதிராக
நாம் எத்தனைக் கொடுமைகள்
இழைத்த போதும்..

அவைகள் இன்னமும்
நம்மையும் நம்பி  அண்டி வாழ முயல்வது
அதன் அன்பை மட்டும்
வெளிக்காட்டுவதாக  மட்டும் எனக்குப் படவில்லை

மாறாக நம் சுயநலத்தையும்
வேட்டையாடி உண்ணுதலையே
தருமமாகக் கருதும்
நம் மிருக குணமதனை
சாத்வீகமாய் நமக்குச்
சுட்டிக் காட்டுதலைப் போலவும் ....



மரணத்திலும் ஒரு ஆறுதல்...

மரணம்
எவ்வகையிலும் யாராலும்
தவிர்க்க இயலாததே.
.
இது மிகத் தெளிவாய்த் தெரிந்தும்
சிலரின் இழப்புகள்
தாங்க முடியாததாகவே
சங்கடப்படுத்திப் போகிறது

ஆனாலும் கூட...

"ஆறு மாதமாய்
மிகவும் அவதிப்பட்டார்
நல்ல வேளை போய்ச் சேர்ந்தார் "
எனக் கேட்பதை விட...

"போனவாரம் கூடப் பார்த்தேனே
மிக நன்றாகத் தானே இருந்தார்
திடீரென என்ன ஆச்சு "
எனக் கேட்க நேர்ந்த மரணங்கள்
கொஞ்சம் ஆறுதல் படுத்தியே போகிறது..

ஆம்
மரணம் எவ்வகையிலும்
யாராலும் தவிர்க்க முடியாததே...

ஆயினும் இனி எப்போதும்
ஆறுதலான மரணத் தகவலே
எல்லோருக்கும் கிடைக்கட்டும் என
வேண்டிக் கொள்வோமாக..

Monday, January 20, 2020

"வாழ்வாங்கு வாழ்பவன் "

ஒரு அபூர்வமான இடத்திற்கு
இன்பச் சுற்றுலா சென்று வந்த பின்...

இன்னும் சரியாய்த் திட்டமிட்டு
கூடுதல் இடங்களை
இரசித்துப் பார்த்திருக்கலாமோ..

ஓய்வெடுத்தலைக் குறைத்து
இன்னும் பயணத்தைப்
பயனுள்ளதாக ஆக்கி இருக்கலாமோ..

என எண்ணி எண்ணி
வருந்துபவனைப் போல் அல்லாது .

அபூர்வமாய் வாய்த்தப் பிறப்பின்
அந்திமக் காலத்தில்.

இன்னும் கூடுதலாய் உழைத்து
பிறருக்குக் கொடுத்து இரசித்திருக்கலாமோ

இன்னும் ஒவ்வொரு நொடியினையும்
நேர்த்தியாய் இரசித்துக் களித்திருக்கலாமோ

என்கிற எண்ணமே தோன்றாதபடி
அப்படியே வாழ்ந்து கொண்டிருப்பவன் எவனோ

அவனே "வாழ்வாங்கு வாழ்பவன் "
எனும் வார்த்தைக்குப் பொருளானவன்

மற்றவரெல்லாம் நிச்சயமாய்
சாகாததால் இங்கிருப்பவர்கள்  அவ்வளவே

Saturday, January 18, 2020

தலாக்......மறுமுகம்

என் பள்ளிக் காலங்களிலும்
கல்லூரிக் காலங்களிலும் மட்டுமல்ல
இப்போது நான் வாழும் பகுதியில் கூட எனக்கு
முஸ்லீம் நண்பர்கள் அதிகம்..

அப்படிப் பழகியவர்களில் பழகுபவர்களில்
என் அதிஷ்டமோ என்னவோ இதில் அதித்தீவிர
மதவாதிகள் அவ்வளவாக இருந்ததில்லை
இப்போதும் இல்லை

காரணம் அப்படி இருந்த ஒரு சிலர் கூட
இவன் அதுக்கு ஒத்து வரமாட்டான் என
ஒரு விலகிப் போய் இருக்கிறார்கள்...

காரணம் அப்படிப்பட்டவர்களிடம் நான்
மிகத் தெளிவான ஒன்றைச் சொல்லி விடுவதுண்டு
"நான் இதுவரை அல்லாவைத் தொழுததில்லை
நீங்கள் இதுவரை இராமரையோ கிருஷ்ணரையோ
கும்பிட்டதில்லை.இருவரும் கெட்டுப் போகவில்லை

அதைப் போலவே நீங்கள்
அல்லாவை நம்பித் தொழுகிறீர்கள்
நான் என் தெய்வங்களை நம்பிக் கும்பிடுகிறேன்
இருவரும் நன்றாக இருக்கிறோம்
இது அவரவர் நம்பிக்கை சம்பத்தப்பட்ட விஷயம்
நம்பிக்கையால் விளையும் விஷ்யம்

இதில் தெய்வங்கள் கூட இரண்டாம்பட்சம்தான்
எனத் தெளிவாகச் சொல்லிவிடுவதுண்டு

அவர்கள் இந்து கோவிலுக்கு வருவதில்லை
கும்பிடுவதில்லை பிரசாதம் சாப்பிட மாட்டேன்
என மறுப்பார்கள்
நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை

நான் அவர்கள் மசூதிக்கும் அழைப்பின் பேரில்
சென்றிருக்கிறேன்.கூடுமானவரையில் எல்லா
வருடமும் அவர்கள் அழைப்பின் பேரில்
நோன்பு திறக்கச் சென்றுகொண்டிருக்கிறேன்

சில குறிப்பிட்ட நண்பர்கள் ஒவ்வொரு வருடமும்
வீட்டிற்கே நோன்புக் கஞ்சியை வந்து
கொடுத்துப் போவார்கள்

இவ்வளவு விரிவான முன்னுரை கூட
உங்களுக்கு அவர்களைப் பற்றி என்ன தெரியும்
என எளிதாகச் சொல்லி விடக்கூடாது
என்பதற்காகத்தான்

இப்படிப் பட்ட சூழலில் எனக்கு மிகவும்
பழக்கமான ஜமாத் தலைவராக இருக்கிற நண்பர்
நான் நண்பர்களுடன் அமர்ந்திருந்த இடம் வந்தவர்
"மாமா மாப்பிள்ளை எல்லோரும் கொஞ்சம்
இதைக் கவனியுங்க.இன்னைக்கு நம்ப ஜமாத்துல
பெரிய கூத்து நடந்து போச்சு,,
சிரிப்பை அடக்க முடியவில்லை
நீங்கள் கேட்டாலும் அடக்க முடியாது "என
அவர் பாணியில் சபதம் போட்டுச் சிரிக்க
ஆரம்பித்து விட்டார்

நகைச்சுவையாய் பேசுவதில் பொதுக் காரியங்களுக்கு
எப்போதும் முன் நிற்பதில் பொது விஷயயங்களுக்காக
தனிப்பட்ட பணத்தைச் செலவு செய்வதில்
எப்போதும் அவர் முன்னணியிலேயே இருப்பார்
அதனாலேயே நாங்கள் எங்கள் பொது அமைப்பு
ஒன்றுக்கும் அவரையே தலைவராக வைத்திருந்தோம்
அந்த வகையில் அவர் எல்லோருக்கும் மிக நெருக்கம்

அவர் பேச ஆரம்பித்தார்....

"எங்கள் ஜமாத்தில் கணவன் மனைவிக்கு
சரிப்பட்டு வரவில்லை.நாங்களும்ஜமாத்தில் ஒன்று
சேர்க்க முயற்சித்து முடியாது போக தலாக்
சொல்லவைத்து பிரித்து வைத்துவிட்டோம்

இது நடந்து ஆறு மாத காலம் ஆகிவிட்டது
பிரிந்திருந்ததாலோ என்னவோ அல்லது
ஒருவரை ஒருவர்  தவறாகப்
புரிந்து கொண்டாதாக பிறர் மூலம் அறிந்ததாலோ
என்னவோ மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக
ஜமாத்துக்கு தகவல் தெரிவித்தார்கள்

எங்கள் வழக்கப்படி தலாக் சொல்லி விலக்கி
வைக்கப்பட்டவர்கள் மீண்டும் ஒன்றாக வாழ
விருப்பம் தெரிவித்தாலும் அந்தப் பெண்
வேறு ஒருவருடன் ஒரு நாள் இரவைத் தனியாகக்
கழிக்கவேண்டும்

அந்த வகையில் இந்தப் பெண்ணும் ஒரு ஆணுடன்
தனியாக இருக்கவேண்டும் என்பதற்காக
நானே தவறு ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக
கொஞ்சம் வயதானவரைத் தேர்ந்தெடுத்து
அவரிடம் பக்குவமாய் நாளை கணவன் மனைவியையும்
அவர்கள் விருப்பப்படி சேர்த்து வைக்க இருக்கிறோம்
நம் விதிமுறைப்படி ஒரு நாள் பிறருடன் இருக்கவேண்டும்
என்பதற்காக அனுப்பி வைக்கிறோம்.தப்பு தண்டா இல்லாம
இருந்துக்கோ என சொல்லி அனுப்பி வைத்தோம்"
எனச் சொல்லிவிட்டு மீண்டும் குலுங்கிக் குலுங்கி
சிரிக்கத் துவங்கிவிட்டார்....

"பாய்  சொல்லிட்டுச் சிரிங்க .நாங்களும் சேர்ந்து
சிரிப்போம் இல்ல " என நண்பன் சொல்ல
பாய் சிரித்தபடியே சொல்ல ஆரம்பித்தார்

"சொல்றேன் சொல்றேன்.மறுநாள் நாங்க
இவங்களைச் சேர்த்து வைக்கலாம் எனச் சொல்லி
எங்கள் வழக்கப்படி என்னம்மா நீ உன்
புருஷனோடு சேர்ந்திருக்கச் சம்மதமா எனக் கேட்க..
படுபாவிப்பய என்ன சொல்லி மனசை மாத்தினானோ
இல்லை என்ன செஞ்சி மனசை மாத்தினானோ
தெரியலை...நான் இவரோடயே இருந்துக்கறேன்
புருஷன் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்"
எனச் சொல்லிவிட்டு சப்தம் போட்டு
மீண்டும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்..

எனக்கும் என் நண்பர்களுக்கும் பெரும் அதிர்ச்சி
இதுவரை இப்படி ஒரு நடைமுறைப் பழக்கம்
அவர்களிடம் இருக்கும் என்பது சத்தியமாய்
தெரியாது

இப்படியொரு மோசமான விஷயம் அவர்களுக்குள்
இருந்ததானால் எத்தனை பேர் அதிகம்
பாதிக்கப்பட்டிருப்பார்கள் என எண்ணிப் பார்க்க
அதிர்ச்சியாய் இருந்தது...

இதன் காரணமாகவே முத்தலாக் குறித்து
பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில்
மௌனம் காக்க அதனால் பயன் அனுபவித்த
சிலரே (இவர்களைத்தான் அல்லக்கைகள்
எனச் சொல்வதுண்டு இவர்கள் தான் சில இயக்கங்கள்
மத ஸ்தாபனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில்
இருந்து கொண்டு பெருவாரியான மக்களை
பொய்ப்பிரச்சாரம் மூலம் திசைத் திருப்புவது )
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
சில நாள் போராடி ஓய்ந்தும் போனார்கள்
என நினைக்கிறேன்.

எந்த மதமாயினும் மதத்தை வைத்து
பிழைப்பவர்கள் அல்லது சுகத்தை அனுபவிப்பவர்களே
மதத்தின் பெயரால் ....இதுபோன்று
எந்த நோக்கத்திற்காக சில சம்பிரதாயங்கள்
ஏற்படுத்தப்பட்டதோ அதனைமிகச் சரியாகப்
புரிந்து கொள்ளாது
தங்கள் சுய நலத்திற்குப் பயன்படுத்துவதால்தான்
மதம் குறித்து ஒரு மோசமான அபிப்பிராயம்
ஏற்படக் காரணமாவதோடு பகுத்தறிவு வாதிகள்
எனச் சொல்லிக் கொள்வோர் அதைத் தங்களுக்கு
சாதகமாக பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக்
கொள்கிறார்கள் என்பதைச் சொல்லவும்...
.(மிகக் குறிப்பாக இந்து மதத்திற்கு எதிராக மட்டும்)

மூட நம்பிக்கை  என்பது ஒரு மதத்தில் தான் உண்டு
என்பதில்லை எல்லா மதத்திலும்
எதன் காரணமாகவோ உண்டு
என்பதைச் சொல்லவுமே இந்தப் பதிவு.. 

Tuesday, January 14, 2020

பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

விதைத்த  ஒன்றை
நூறாய் ஆயிரமாய்
பெருக்கித் தரும்
பூமித் தாய்க்கு
நன்றி சொல்லும் நாளிது

எதிர்பார்ப்பு ஏதுமின்றி
உடனுழைத்து
நம் உயிர்  வளர்க்க உதவும்
விலங்கினங்களுக்கு
நன்றி சொல்லும் நாளிது

இணைந்து இயைந்து
 இருப்பதாலேயே
வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும்
உறவுகளுக்கு
நன்றி சொல்லும் நாளிது

அனைத்து இயக்கங்களுக்கும்
 மூல காரணமாகி
உலகைக் காக்கும்
கதிரவனுக்கு
நன்றி சொல்லும் நாளிது

நம்மிருப்புக்கு காரணமான
அனைத்திற்கும்
நன்றிசொல்வதன் மூலமே
மனிதராக  நம்மை நாம்
நிலை நிறுத்திக் கொள்ளும் நாளிது

ஜாதி மதம் கடந்து
உழைப்பின் பெருமை  சாற்றும்
 தமிழர் திரு நாளிதன்
உட்பொருள் அறிந்து  மகிழ்வோம்
அதன் உன்னதம் காத்து உயர்வோம்

(  அனைவருக்கும்
பொங்கல்  திரு நாள்
நல்வாழ்த்துக்கள்  )

Sunday, January 12, 2020

மனித நேயம்...

தனித்திருந்தோர்கள் ஒன்று சேர
நாங்கள்  இப்போது ஒரு குடும்பம் என்றார்கள்

குடும்பங்கள் ஒன்று சேர
நாங்கள் எல்லாம் இப்போது உறவினர்கள் என்றார்கள்

உறவினர்கள் எல்லாம் ஒன்று சேர
இப்போது நாங்கள் இந்த ஜாதி என்றார்கள்

ஜாதிகள் எல்லாம் ஒன்று சேர
இப்போது நாங்கள் இந்த மதம் என்றார்கள்

மதங்கள் எல்லாம் ஒன்று சேர
இப்போது நாங்கள் இந்த நாட்டினர் என்றார்கள்

நாடுகள் எல்லாம் ஒன்று சேர
இப்போது நாங்கள் மனிதர்கள் என்றார்கள்

இப்படித் தனித்திருந்ததில் இருந்துத் துவங்கி
இப்படிப் பல நிலைகள் கடந்து
மனிதனாக உணரவும்
இணைந்திருக்கவும் காரணம் எது ? என்றேன்

எல்லோரும் எவ்வித முரணுமின்றி
முணுமுணுப்புமின்றி
ஒருமித்த குரலில்
மனித நேயம் என்றார்கள்

Friday, January 10, 2020

வலைத்தள வீதி

முகநூல் நகரத்தின் பளபளப்பா
டுவிட்டர் வீதிகள் தந்த குதூகலமா
வாட்ஸ்அப் வீடுகளின் வசதி வாய்ப்புகளா
எதுவென சரியாக அனுமானிக்க முடியவில்லை..

மந்தையைப் பிரிந்த ஆடாக
சுற்றித் திரிந்து
மீண்டும்
வளைத்தள வீதி நுழைகையில்...

கூத்தும் கும்மாளமாயும்
இருந்த வீதி
குண்டு வீழ்ந்த சிறு நகரமாய்
சிதிலமடைந்துக் கிடக்கிறது...

சிரிப்பின் சப்தமும்
சந்தோஷ சங்கீதமும்
பொங்கித் ததும்பிய வீடுகள் எல்லாம்..

வெறுமை வெக்கையும்
சோம்பல் தூசியும் மண்ட
உட்பக்கத் தாளிட்டுக் கிடக்கின்றன

கூடவைத்துக் களித்த
சேர்த்துவைத்து இரசித்த
வலைமண்டபங்கள். இருந்த இடம்
நினைவூட்டும் மண்மேடுகளாய்....

ஆண்டுக்கொருமுறை
சுளுக்கெடுத்து உணர்வேற்றும்
சந்திப்புத் திருவிழாக்கள் எல்லாம்
வெறும் கனவாய்...பொய் நினைவாய்...

வெறுமை தந்த வேதனையுடன்
மெல்ல மெல்ல என் வலைவீட்டினை
சீர் செய்வதன் மூலமும்
மீண்டும்
வலைவீதியை உயிர்ப்பிக்க முயல்கிறேன்...

வலையகச் "சித்தர்களின் "
எழுச்சியும் சீரிய முயற்சியும்
வலைத்தள வீதியினை
நிச்சயம்
உயிர்ப்பிக்கும் எனும் உன்னத நம்பிக்கையுடனும்......

Thursday, January 9, 2020

யானைக் கொரு காலம் வந்தா..

நான் மதுரை வாசி.பிறந்து வளர்ந்ததெல்லாம்
மதுரையை ஒட்டிய பழைமையில் ஊறிய
ஒரு சிறு கிராமத்தில்தான்.

பச்சைப் பசேலென வயல்வெளி. நீர் நிறைந்த குளம்
காலையும் மாலையும் ஒலிபெருக்கியை விட அதிகச்
சப்தமெழுப்பி விடியலுக்கும் மாலைக்கும்
கட்டியம் கூறும் பறவைகள்..
திண்ணையுள்ள எப்போதும் திற்ந்தே
இருக்கும் வீட்டு வாசல்கள்.
சாப்பாட்டு வேளையில் எங்கிருக்கிறோமே அங்கேயே
உணவு அருந்தித்தான் ஆகவேண்டும் எனக்
கட்டாயப் படுத்தும் உறவுகள்....

இப்படி இப்படியென சொல்லிச் சொல்லிப்
பெருமைப் பட்டுக் கொள்ளும்படியாக நிறைய
இருந்தாலும்.....

சினிமா விஷயத்தில் ஒரு பெரும் குறை உண்டு
ஊருக்கு வெளியே வயல் நடுவே
ஒரே ஒரு டூரிங் டாக்கிஸ் மட்டும் உண்டு.
அந்த டூரிங் டாக்கீஸ் ஓனரும் உள்ளூர் காரர்
என்பதால் சமூகத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பு
தனக்கும் உண்டு எனக் காட்டிக் கொள்ளவோ
என்னவோ அதிகமாகப் புராணப் படங்களையும்
அதிகப் பட்சம் குலுங்கிக் குலுங்கி அழும்படியான
படங்களையோ தான அதிகம் போடுவார்.
அதுமாதியான படங்கள்தான் எங்கள் ஊரிலும்
அதிகப் பட்சமாக நானகு நாட்கள் ஓடும்.

அதிலும் எங்கள் வீட்டுப் பெரியவர்கள்
ரொம்ப ரொம்பச் சுதாரிப்பானவர்கள்..
அந்த நாலு நாளில் படத்தைப் பார்த்தவர்கள்
கதை நல்லா இருக்கு கட் எதுவும் இல்லை என
சான்றிதழ் எல்லாம் கொடுத்தால் தான்
படம் போவது குறித்து யோசிப்பார்கள்.
அப்படி அவர்கள் விசாரித்து விசாரித்து
மாதம் ஒரு படம் போனாலும் படிக்கிற பையன்
அடிக்கடி படம் பார்க்கக் கூடாது எனச் சொல்லி
கால் பரிட்ச்சை அரைப்பரிட்ச்சை லீவில் ஒரு படமும்
கொஞ்சம் மனசு வந்தால் முழுப்பரிட்சை லீவில்
இரண்டு படமும் பார்க்க அனுப்புவார்கள்

எங்களுக்கு அதுவே போதும் எனத்தான் படும்
ஆனால் எங்கள் தெருவிலேயே ஊரில்
எட்டாம் வகுப்புக்கு மேல் இல்லாததால்
டவுனில் சென்று படிக்கும் பையன்கள்
வீட்டுக்குத் தெரியாமல் எப்படியோ
பணம் புரட்டி புதுப் படம் பார்த்து எங்களை
நாலு நாள் கெஞ்சவிட்டு இரண்டு மணி நேரப்
படத்தை நாளோன்றுக்கு ஒரு மணி நேரம்
என மூன்று நாள் சொல்லுகையில் தான்
வெறுத்துப் போவோம்

கதை கேட்கிற ஆர்வம் அதிகம் இருக்கிற
அதே வேளையில்
அவர்கள் மீதான பொறாமையும் என்று நாமும்
இப்படி ஒரு நாள் டவுனில் போய்
பக்கா தியேட்டரில் புதுப்படம் பார்ப்போம் என்கிற
ஏக்கமும் ஆதங்கமும் அதிகமாகவே பெருகும்

இப்படிப் பட்டச் சூழலில் ஒருநாள்....
எங்கள் நெருங்கிய  உறவினர் வீட்டில்
ஒரு அசுப காரியம் காரணமாக வெளியூர்
செல்ல நேர்ந்ததால் ஒரு நூறு ரூபாய்க்குக்
குறையாதபடி அறிவுரைகள் சொல்லி எதற்கும்
இதைக்கைக்காவலுக்கு வைத்துக் கொள் எனச் சொல்லி
ஒரு ரூபாயும் கொடுத்துப் போனார்கள்.

எப்போதுதான் விடியும் என பையில் இருந்த
அந்த ஒரு ரூபாயை ஆசையாய் தடவிப் பார்த்தபடி
இருந்த நான் விடிந்ததும் அந்த டவுனில் படிக்கும்
பையனைச் சந்தித்து என ஆசையைச் சொல்ல...
அவனும் "இன்று வெள்ளிக் கிழமை நான்கு காட்சிகள்
நிச்சயம் இருக்கும்.படம் வந்து முப்பது நாளும்
ஆகிப் போச்சு எனவே எழுபது பைசா டிக்கெட்
உறுதியாய் கிடைக்கும்.. போகையில் பஸ்ஸில்
போனாக் கூட வரும்போது கண்மாக்கரை
சுருக்கு வழியில் வந்து விடலாம் "எனச் சொல்லி
அழைத்து போனான்.

இவ்வளவு விளக்கமாக என கதையைச் சொல்லியபின்
என் ஆர்வம் குறித்து விரிவாக ஒரு பத்தி எழுத
வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

பஸ்சை விட்டு இறங்கும் முன்பாகவே வெளியே
எட்டிப் பார்க்க கூட்டம் இல்லாமல் இருந்ததும்
வாட்ச்மென் மட்டும் ஒற்றைக் கதவை மட்டும்
திறந்து வைத்து உட்கார்ந்திருந்ததும்
நிச்சயம் ஷோவும் இருக்கும் டிக்கெட்டும் கிடைக்கும்
என்கிற நம்பிக்கை வர குஷியாகிப் போனேன்

இருவரும் பஸ்ஸை விட்டு இறங்கி டிக்கெட்
கவுண்டர் அருகில் போய் நின்றோம்
கவுண்டர் இன்னும் திறக்கவில்லை நேரம்
இருக்கிறது போல நினைத்துக் கொண்டிருக்க
எங்களை பார்த்த வாட்ச்மென் " தம்பிங்களா
இன்னைக்கு காலைக் காட்சி இல்லை
மதியக் காட்சிதான் உண்டு அப்ப வாங்க "
எனச் சொல்லிக் கொண்டிருக்குக் போதே
நான்கு கார்கள் வாசல் பக்கம் வர வாட்ச்மென்
அவசரம் அவசரமாக ஓடி முழுக் கதவையும்
திறக்கத் துவங்கினார்.

அந்த நான்கு கார்களிலும் பெரியவர்களும்
சிறியவர்களும்  பெண்களும் இருந்தார்கள்.
அவர்கள் ஆடை அலங்காரங்களைப் பார்க்க
சினிமாவுக்கு வந்தவர்களைப் போலத்தான்
எனக்குப் பட்டது..

நான் மெல்ல வாட்ச்மெனை நெருங்கி
"படம் இல்லைன்னு சொல்றீங்க..
இவங்களைப் பார்த்தா சினிமாவுக்கு வந்தது
போலத் தானே தெரியுது " எனக் கேட்டே விட்டேன்

அவர் என்ன நினைத்தாரோ எங்களை
"இந்தப் பக்கம் வாங்க "என கிழக்குச் சுவரோரம்
கூட்டிப் போய் " தம்பிங்களா இவங்க முதலாளிக்குச்
சொந்தக் காரங்க.. ஊரில இருந்து வந்திருக்காங்க
இவங்களுக்காக மட்டும்தான் இன்னைக்கு
காலை ஷோ..வெள்ளிக் கிழமை நாலு ஷோவை
போனவாரமே எடுத்தாச்சு " என்றார்.

எனக்கு ஷோ இல்லாதது கூடப் பெரிதாகப்
படவில்லை. ஒரு இருபது பேருக்காக
ஒரு படத்தை ஓட்டுவதென்றால் எவ்வளவு செலவு
அவ்வளவு செலவு செய்கிற அளவுக்கு இவர்களுக்கு
அப்படியென்ன வசதி வாய்ப்பு என எண்ணி
மலைத்துப்ம்போனேன்

பின் வெகு நாட்களுக்கு ஒரு தியேட்டரில்
எத்தனை சீட்  இருக்கும் அதில் 40 பைசா
எவ்வளவு 70 பைசா 80 பைசா எவ்வளவு
மாடியில் ஒரு ரூபா சீட் எவ்வளவு
ஒரு ரூபா ஐம்பது பைசா எவ்வளவு
என எல்லாம் பெருக்கிப் பார்த்து நிச்சயம்
ஒரு நாள் நாமும் இப்படி முழு ஷோவையும்
நம் ஒரு குடும்பத்திற்கு என மட்டும் என
ஒதுக்கிப் பார்க்கவேண்டும் என தீர்மானிக்கத்
துவங்கிவிட்டேன்....

இந்தத் தீர்மானம் எத்தனை நாள் இருந்தது
கால வெள்ளத்தில் எப்படிக் கரைந்து போனது\
என்பது எல்லாம் என் நினைவில்
நேற்று வரை இல்லை.

நேற்று நண்பர்களுடன் டவுனில் இருக்கையில்
மாலையில் மீண்டும் டவுனில் வேலை இருப்பதால்
வீடு போய் திரும்புவது வெட்டி அலைச்சல்
அதற்குப் பதில் இங்கு பக்கம் உள்ள ஏ.சி தியேட்டரில்
ஏதாவது படம் பார்க்கலாம்.படம் எவ்வளவு
டப்பாவாக இருந்தாலும் பரவாயில்லை.
தியேட்டர் மட்டும் நல்லதாகப் பார்த்துப்
போவோம்..என முடிவெடுத்து ஒரு நல்ல தியேட்டர்
பார்த்துப் போனோம்..

நாங்கள் போவதற்குள் படம் போட்டிருந்தார்கள்
தட்டுத் தடுமாறி ஐந்து பேரும் சீட்டைத் தேடி
உட்கார்ந்துவிட்டோம்.படத்தையும் ஒருவழியாய்
இரசிக்கவும் துவங்கிவிட்டோம்.

இடைவேளைக்கு லைட்டைப் போட்டார்கள்
நான் மகிழ்ச்சியில் ஆஹா...ஹா என சப்தமாகக்
சிரிக்கத் துவங்கிவிட்டேன்
இவ்வளவு பெரிய சப்தம் என்னை
அறியாமல் வந்தது என எனக்கே ஆச்சரியமாக
இருந்தது..

வெளியில் ஸ்னாக்ஸ் விற்றுக் கொண்டிருந்த
பையன் கூட என்னவோ ஏதோ என
எட்டிப் பார்த்துப் போனான்.

அவனுக்கு எப்படித் தெரியும்
என ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய கனவு
மிக மிக எளிதாய் இப்படி எதிர்பாராத விதமாய்
நிறைவேறி இருக்கிறது என்று....

"என்ன விஷயம் இப்படித் திரும்பத் திரும்ப
இப்படி லூசுப் போல தொடர்ந்து
சிரிக்கிறாய் " என எரிச்சல்படத் துவங்கினர் நண்பர்கள்

"வாருங்கள்  காஃபி சாப்பிட்டபடிச் சொல்கிறேன்..
என அவர்கள் ஐவரையும் தியேட்டரை விட்டு
கேண்டீன் அழைத்து வந்தேன்

மொத்த தியேட்டரும் இப்போது காலியாக இருந்தது

Wednesday, January 8, 2020

முரண்....

தனியார்மயமாக்களுக்கு எதிரான
போராட்டத்திற்கு
ஆதரவு தேடும் நிமித்தம் அவர்கள்
முக நூல் டுவிட்டர்  பிளாக்கர் என
அத்தனை பிரச்சார வாய்ப்புகளையும்
பயன்படுத்த முயன்றார்கள்

ஆயினும்
தனியார் வசம் இருந்த
நெட் ஒர்க்குகள் பயன்பட்ட அளவு
விசுவாசமாக வைத்திருந்த
பி.எஸ் என் எல்.
கைகொடுக்கவில்லை..

ஆகவே பாவம்
தனியார் தயவினாலேயே அவர்கள்
தனியாரை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்

மாவட்டத் தலைவர்களை
முடிக்கிவிட பயணப்பட்ட
,மாநிலத்தலைவர்களுக்கு
வசதியான குளிரூட்டப்பட்ட
தனியார் பேருந்துகள்
கொடுத்த சுகப் பயணத்தை
அரசுப் பேருந்துகள் தர இயலாததால்
தலைவர்களால்  பாவம் அதையும்
பயன்படுத்த இயலவில்லை...

ஆகவே பாவம்
தனியார் உதவியுடனேயே
பொதுத் துறையை ஆதரித்துக் கொண்டுள்ளார்கள்

பொதுமக்களுக்கான
நல்வாழ்வுச் சட்டங்களுக்காக
பொதுமக்களை ஒன்றாகத் திரட்டும் பணிக்கு
தங்கள் கொள்கை முரண்பாடுகளும்
சுய நலங்களும் இடம் தரவில்லை
ஆகவே அவர்களால்
அரசுக்கு எதிரான பெருந்திரள்
போராட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை

ஆகவே பாவம்
பொதுத்துறை ஊழியர்களைத் தூண்டியே
அதைக் காப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள்

ஜன நாயகம் காக்க என இவர்கள்
போடுகிற வேஷமெல்லாம்
ஜன நாயகத்தை அழிக்கவும்
தொழிலாளி வர்க சர்வாதிகாரத்தை
வேரூன்ற வைக்கவுமே எனத் தெரிந்த பாமரனுக்கு
இவையெல்லாம் தெரியாமலிருக்க சாத்தியமே இல்லை

ஆகவே அவனும் எப்போதும் போல
தனக்குச் சம்பந்தே இல்லாததைப் போல
இவர்கள் ஆர்ப்பாட்டத்தை இரசித்துக் கொண்டிருக்கிறான்

Sunday, January 5, 2020

சின்ன விஷயந்தான் ...

பிளாஸ்டிக்  பையில் மீந்திருக்கிற உணவு இருக்கும்படியாக வெளியில் வீசி எரிய வேண்டாம் .இது போல சிறு உயிரினங்கள் உணவுடன் பிளாஸ்டிக்கையும் தின்று அதன் காரணமாகவே உயிரிழக்கின்றன
அனைவரின் மேலான கவனத்திற்காக

மீண்டும்..

மீண்டும் நான் ஓடத் துவங்குகிறேன்

என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் மீண்டும் எப்போதும் போல் ஓடத் துவங்குகிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடத் துவங்குகிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

மீண்டும் சீரான வேகத்தில்
முன்போலவேநான் என்னைக் கடக்கத் துவங்குகிறேன்