Friday, March 31, 2017

காலன் நடுவராக...

அதீத முயற்சியுடன்
பயிற்சியிலிருக்கிறான்
அந்தப் படைப்பாளி

பட்டுப் பட்டுப்
பெற்றஅனுபவ ஞானமும்
கற்றுக் கற்றுத்
தேர்ந்த மொழி அறிவும்
பயிற்சியாளர்களாக

அதீத அக்கறையுடன்
பயிற்சியிலிருக்கிறான்
அந்தப் படைப்பாளி

காலன் நடுவராக
காலம் போட்டியாளனாக
வாசகர்களே பார்வையாளர்களாக

நடைபெற இருக்கும்
அந்த இறுதிப் போட்டிக்கு

அதீத விழிப்புடன்
பயிற்சியிலிருக்கிறான்
அந்தப் படைப்பாளி

இறுதிப் போட்டிக்கான
நாளும் நேரமும்
தெளிவாகத் தெரியவில்லையாயினும்.....

அதனை முடிவுசெய்யும்
அதிகாரம்
தன்னிடம் இல்லையென்றாலும்

துளியும் சோர்வின்றி
தொடர்ந்து பயிற்சியிருக்கிறான்
அந்தப் படைப்பாளி


Thursday, March 30, 2017

முகமதியரான மனுஷ புத்திரரே

எப்போதும்
இருபுறமும் வெட்டத்தக்க
கத்தியாகவே இருங்கள்
அதுவே பிழைக்கும் வழி

எப்போதும்
இருவரும் ஏற்கத்தக்க
ஆசாமியாகவே இருங்கள்
அதுவே ஜெயிக்கும் வழி

பொதுவெளியில்
அனைவரும் ஏற்கவேண்டுமெனில்
"மனுஷ புத்திரனாய் "இருங்கள்
அதுவே நிலைக்கும் வழி

வீடுகிடைக்கவில்லையெனில்
சங்கடப்படாது உடனே
"முகமதியராய் "முகம் காட்டுங்கள்
அதுவே அரசியல் மொழி

"இந்து "வெனவே தனக்கு
பெயர்வைத்துக் கொண்டு
மதம் கடந்ததைப் போல்
காட்டிக் கொள்பவர்களுக்கு

உங்கள் நாடகம்
நிச்சயம் கைகொடுக்கும்
அதைப்போலவே
நிச்சயமா உங்களுக்கும்

என்வே....
மனுஷபுத்திரரான முகமதியரே
முகமதியரான மனுஷபுத்திரரே

எப்போதும் என்றேன்றும்
இருபுறமும் வெட்டத்தக்க
கத்தியாகவே தொடருங்கள்
அதுவே என்றும் பிழைக்கும் வழி

Wednesday, March 29, 2017

கவிதையின் சிறப்பு

விதையினைப் பொருத்து மட்டுமல்ல
அதன் வளர்ச்சி
அதுவீழும் நிலம் பொருத்தும்தான்

உயிரினைப் பொருத்து மட்டுமல்ல
அதன் இயக்கம்
அதைத்தாங்கும் உடல் பொருத்தும்தான்

அழகினைப் பொருத்து மட்டுமல்ல
அதன் பெருமை
அதனை ஆராதிப்போர் மனம் பொருத்தும்தான்

நதியினைப் பொருத்து மட்டுமல்ல
அதன் புனிதம்
அதுபாயும் ஸ்தலம் பொருத்தும்தான்

கடவுளைப் பொருத்து மட்டுமல்ல
அதன் கீர்த்தி
அது உறையும் கோவில் பொருத்தும்தான்

................................................
...............................
..................................................

கவிதையைப் பொருத்து மட்டுமல்ல
அதன் சிறப்பு
அதனை இரசிப்போர் நிலையினைப் பொருத்தும்தான்

திருமங்கலமும்..ஆர்.கே நகரும்

பிரியாணிக்குச் சரியாகி
துட்டுக்கு ஓட்டு என்றாக்கி
தமிழக தேர்தல் அகராதியில்
"திருமங்கலம் ஃபார்முலா"என ஓர்
அமங்கலச் சொல்லை
அரங்கேற்றிய அசிங்கம் இன்னும்
நாறிக்கொண்டே இருக்கிறது

எத்தகைய கொடிய சாபமெனினும்
விமோட்சனம் என ஒன்று
நிச்சயம் உண்டு

எத்தகைய கொடிய நோயாயினும்
அதனைத் தீர்க்க மருந்தொன்று
நிச்சயம் உண்டு

அதற்கொரு காலச் சூழலும்
கால அவகாசமும்
நிச்சயம் வேண்டும்

அது இப்போது
ஆர்.கே நகருக்கு வாய்த்திருக்கிறது

"செய்வீர்களா..செய்வீர்களா "
என புரட்சித் தலைவி
கேட்ட கேள்விக்கு நல்ல பதிலாக

"வைத்துச் செய்ய ஒரு
நல்ல வாய்ப்பை
தேர்தல் ஆர்.கே நகர மக்களுக்கு
அழகாய்த் தந்திருக்கிறது

ஆர். கே நகர்
அரசியல் முதிர்ச்சியில்
டி.கே என்றாகுமா ?

ஆர்.கே நகர்
தரும் தீர்ப்பினில் தமிழகம்
ஓ.கே என்றாகுமா ?

திருமங்கல்ம் ஃபார்முலா எனும்
ஒரு அவச் சொல்லுக்கு
மாற்றுச் சொல்லாக

ஆர்.கே நகர்ஃபார்முலா எனும்
ஒரு மங்கலச் சொல் ஒன்று
இனிதே அரங்கேறுமா ?

கேள்விகளுக்கு
நல்ல பதில் வேண்டி

ஆர்வமுடனும்
ஆசையுடனும்
உங்களைப்போலவே
நானும்.....

Tuesday, March 28, 2017

எனவே .....

சப்தம் செய்யாதிருங்கள்

குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது

பாதுகாவலனாகத்தான் இருக்கிறேன்
என்றாலும்
உரிமை கொண்டாடாது
ஒருபார்வையாளனாய்
அதன் விளையாட்டை
இரசித்துக் கொண்டிருக்கிறேன்

குழந்தையும்
இயல்பாய் அழகாய்
அதன் போக்கில்
அது விளையாடிக் கொண்டிருக்கிறது..


இடையூறு செய்யாதிருங்கள்

கவிதைஉருப்பெற்றுக் கொண்டிருக்கிறது

படைப்பாளியாகத்தான் இருக்கிறேன்
என்றாலும்
அதிக உரிமை கொள்ளாது
ஒருரசிகனைப்போல்
அதன் உருமாற்றத்தை
இரசித்துக் கொண்டிருக்கிறேன்

கவிதையும்
மிக இயல்பாய் அழகாய்
அதன் போக்கில்
தன்னை எழுதிக் கொண்டிருக்கிறது

எனவே........

பிரம்மப்பிரயத்தனமின்றி....

காதலின்  மோகத்தில்
காதலன் மட்டுமே
காதலியை மெல்ல மெல்ல
உரச முயல்கிறான் எனக்
காதலித்தறியாதவன் கறுவ

விலகுவதுபோல் நடித்து உரசி
காதலனை உசுப்பேற்றுவதே
காதலிதான் என உணர்ந்து
அக்காட்சியைக்கண்டு இரசிக்கிறான்
காதலை ஆராதிப்பவன்

பிரசவகால உச்சத்தில்
சக்தி அனைத்தையும் திரட்டி
சிசுவினைப் புறம் தர
தாயவள்  மட்டுமே
பிரயத்தனப்படுவதாய்
மகப்பேறற்றவள் விளம்பி வைக்க

இனியும் தங்க இயலாதென
வெளிக் கிளம்பும் சிசுவின்
அதீத முயற்சியுமின்றி
சுகப்பிரசவம் சாத்தியமில்லையென
சத்தியம் செய்கிறாள்
மக்களைப் பெற்ற மகராசி

மனச்சிப்பிக்குள் துளியாய்
மகிழ்ந்து விழுந்த கரு
அற்புதக் கவிதையாய்
உருகொண்டு வெளியேற
முழுமுதற்காரணம்
கவிஞனே என வாதிடுகிறான்
ஒரு மெத்தப் படித்தப் பண்டிதன்

பூரணமடைந்த கவிதை
இனி நம் இடம் இதுஇல்லையென
வெளியேறச் செய்யும்
பிரம்மப்பிரயத்தனமின்றி
கவிபிறக்கச் சாத்தியம்
சத்தியமாய் இல்லையென்கிறான்
ஒரு கவித்துவம் புரிந்த பாமரன்  

Sunday, March 26, 2017

எழுத்து மட்டுமே எதையும் சாதித்துவிடும் எனும்....

அழுந்தக் கீறிக் காயப்படுத்தி  
கவனம் திருப்புவதில்
எனக்கு உடன்பாடில்லை

இப்படிச் செய்வதில்
கவனம் காயத்தில் தொடரவே
சாத்தியம் அதிகம்

மெல்லத் தடவிச் சுகப்படுத்தி
கவனம் கவர்வதிலும்
எனக்கு உடன்பாடில்லை

இப்படிச் செய்வதில் சுகத்தில்
இன்னும் விழிமூடவே
சாத்தியம் அதிகம்

கவனம் திருப்பக்
கையோசை எழுப்பும்
ஒரு கிராமவாசியைப் போல

கரைகடக்க முயல்பவனுக்காய்
காத்திருக்கும்
ஒரு சிறு கலம்போல

அடர்காட்டில் அலைவோனுக்கு
வழிகாட்டும்
ஒருசிறு ஒளிக்கீற்றுப் போல

அலைவோனுக்கும்
முயல்வோனுக்கும் மட்டுமே
உதவும்படியாய்

என் எண்ணமிருக்கும்படியாய்
என் எழுத்திருக்கும்படியாய்
எழுதிடவே நாளும் முயல்கிறேன்

மிகத் திண்ணமாய்.....

மாற நினைப்பவனுக்கு மட்டுமே
எழுத்து ஒரு வழிகாட்டியாய்
இருக்கச் சாத்தியம் என்பதால்

மாறியவனுக்கு மட்டுமே
எழுத்து ஒரு உரமூட்டியாய்
இருக்கச் சாத்தியம் என்பதால்

எழுத்து மட்டுமே
எதையும் சாதித்துவிடும் எனும்
மூட நம்பிக்கை இல்லை என்பதால்...

அழுந்தக் கீறிக் காயப்படுத்தி
கவனம் திருப்புவதிலும்
எனக்கு   உடன்பாடில்லை

மெல்லத் தடவிச் சுகப்படுத்தி
கவனம் கவர்வதிலும்
எனக்கு  உடன்பாடில்லை

இந்த எழுத்து..

எப்போதும்சுவாரஸ்யம் தராது
என்றும்வெகுஜன மனம் கவராது
என்ற போதிலும் ...



தலைமுறையும் இடைவெளியும்

உரிமைகளின் எல்லைகள்
குறித்துச் சிந்தனைகொள்ளாது
உறவு கொண்டாடும்
ஒரு தலைமுறைக்கும்

உரிமைகளின் எல்லையிலேயே
கவனம் கொண்டு
உறவு கொள்கிற
ஒரு தலைமுறைக்கும்

இடையினில்

என்னசெய்வதென்று அறியாது
அன்றாடம்
பரிதவித்துத் திரிகிறது
பாசமும் நேசமும்....

வார்த்தைகளின் அர்த்தங்களில்
கவனம்  கொள்ளாது
ஒட்டி உறவாடும்
ஒரு தலைமுறைக்கும்

அனைத்து வார்த்தைகளுக்கும்
அர்த்தம் தேடி
அமைதி இழக்கும்
ஒரு தலைமுறைக்கும்

இடையினில்

என்னசெய்வதென்று அறியாது
அனுதினமும்
புலம்பித் திரிகிறது
உணர்வும் உறவும்...

Wednesday, March 22, 2017

அதிகாரமற்ற அதிகாரியின்.....



அதிகாரபலமற்ற அதிகாரியின்
ஆ ணைக்கு அடங்காது
நமட்டுச் சிரிப்புச் சிரிக்கும்
கடை நிலை ஊழியனாய்..

வெப்பமற்ற சூரியனின்            
வெளிச்சத்திற்கு அடங்காது
பளீரெனச் சிரிக்கிறது
வெண்பனி எங்கும்...

                                                   நிலைமை இப்படியே
                                                  நிச்சயம் தொடராது
                                                 என்னும் நம்பிக்கையுடன்
                                                 மெல்ல நகர்கிறான் கதிரவன்

"அப்போது பார்க்கலாம்"
என அசட்டுத் துணிச்சலுடன்
பரவிச் சிரிக்குது
வெண்பனி எங்கும்.    

                                             ஒருவகையில்
                                             மக்களின் ஆதரவற்று
                                             பதவியில் தொடரும்
                                             அமைச்சர்கள் போலவும்

ஆடும்வரை ஆடட்டும்
தேர்தல்வரட்டும்
 பார்க்கலாம்  என நினைக்கும்
தமிழக மக்கள் போலவும்



மறைவாய் நமக்குச் சொல்லிப் போன வாழ்க்கை ரகசியம்...

சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
 வாழ்க்கை ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்

Friday, March 17, 2017

அறியாமையில் விளைந்த குழப்பம்

சென்ற முறை அமெரிக்கப்பயணத்தின் போது
சென்னையில் கொஞ்சம் வேலை இருந்ததால்
சென்னை வரை காரிலேயே வந்துப் பின்
விமானம்பிடித்தோம்

இந்த முறை சென்னையில் வேலையில்லாததாலும்
கூடுதலாக ஆறு மணி நேரக் கார் பயணம் கூடுத்ல்
அலுப்பைச் சேர்க்கும் என்பதாலும் மதுரையிலிருந்தே
விமானம் மூலம் கிளம்பிவிடுவது என முடிவெடுத்து
டிக்கெட்டும் எடுத்து விட்டோம்

கிளம்புகிற தினத்திற்கு முதல் நாள் காலை திடுமென
உடனெடுத்துச் செல்லும் பெட்டி எண்ணிக்கை குறித்தும்எடை குறித்தும் ஒரு சிறு குழப்பம்

குழப்பதிற்குக் காரணமுமிருந்தது

சென்ற முறை அமெரிக்காவிலிருந்து திரும்பியதும்
விமானத்திலேயே மதுரை திரும்பிவிடலாம் என
டிக்கெட் புக் செய்ய முயல அவர்கள் உள்ளூர்
விமானத்தில் ஒருவருக்கு ஒரு பெட்டிதான் எனவும்
அதுவும் பதினைந்து கிலோவுக்கு மேல்
இருத்தல் கூடாது என்றும் அப்படி இருப்பின்
கூடுதல் எடைக்கு கிலோவுக்கு ஐநூறு ரூபாய்
கூடுதல் கட்டணம்செலுத்த வேண்டும் எனவும்
திட்டவட்டமாகச் சொல்லிவிட்டனர்

எங்களிடம்   வெளி நாட்டுப்பயணத்திற்கு
அனுமதிக்கிறபடி22 கிலோஎடையில்
இரண்டு பெட்டிகள்இருந்ததால் கார் பயணமாகவே
மதுரை வந்து சேர்ந்தோம்

இந்தமுறையும் அப்படி ஏதும் இருக்குமா என்கிற
குழப்பம் வர , முதல் நாளே அந்த
விமான அலுவலக்த்தில்பணிபுரிகிறவரிடம்
கேட்க முயல அவரைத் தொடர்பு
கொள்ள இயலவில்லை

நானும் அப்படி ஏதும் இருந்தால் தொடர்ந்து
பயணிக்கிற பெண்ணும் மாப்பிள்ளையும் ஞாபகப்
படுத்தி இருப்பார்களே என அலட்சியமாக
இருந்து விட்டேன்

மறு நாள் காலையில் எத்ற்கும் அந்த விமான
அலுவலக்த்தில்பணி புரிகிறவரிடம்
கேட்டு வைக்கலாமே என கேட்டு வைக்க
அவர் திட்டவட்டமாக" ஒருவருக்கு ஒரு பெட்டிதான்
அதுவும் பதினைந்து கிலோதான் கூடுதல்
எடைக்கு கிலோவுக்கு ஐ நூறு கட்டவேண்டி இருக்கும்
அந்த வகையில் உங்களிடம் இருக்கும் எடைக்கு
கூடுதலாக இருபத்தைந்தாயிரத்துக்குக் குறையாமல்
கட்டவேண்டி இருக்கும் " என ஒரு பெரிய
அணுகுண்டாகத் தூக்கிப் போட்டுவிட்டார்

நான் ஒருகணம் ஆடிப் போனேன்

(தொடரும் )

Wednesday, March 15, 2017

எல்லாம் சில வார ஆட்டம்தான்....





பகல் உச்சிப் பொழுது எனப் பெயர்.
அதனால் எந்தப் பலனும் இல்லை 
முழுமையாக உடல்முழுவதும் போர்த்திக்கொண்டு கூட வீ ட்டுப் பால்கனியில்  நின்று  ஒரு புகைப்படம்  எடுக்க இயலவில்லை
பனிப் பொழிவு  அத்தனைக்கடுமையாக  இ ருக்கிறது 

மக்களுக்கு நியாயமான கோபம் 
திருமதி சசிகலா அவர்கள் மீது இருந்தாலும் கூடச்  சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதால் 
ஏதும் செய்யமுடியாதுமக்கள்  தவிப்பதை போலவே 
இந்தப் பனிப்பொழிவின் அட்டகாசத்தில்  கதிரவனும் 
அடங்கியே  கிடக்கிறான்
  
எல்லாம் சில வார ஆட்டம்தான்  என்பது 
நம்மைப் போலவே அவனுக்கும் தெரியும்தானே 

Friday, March 10, 2017

"ஒரு பாமரப் பதிவரின் " அமெரிக்கப் பயணம் "

கடந்த பத்து நாட்களாக தேவையில்லாமல்
அலைவதில்லை
(தேவைக்காக அலைவதே அதிகம்
அதைத் தவிர்க்க இயலவில்லை )

அளவோடு சாப்பிட்டுக் கொள்கிறோம்

முழு உடல் பரிசோதனைச் செய்து கொண்டு
குறைபாடு உள்ளதற்கு மருந்து மாத்திரை
எடுத்துக் கொள்கிறோம்

மிக முக்கியமான தகவல்களை
நாட்குறிப்பில் குறித்துக் கொள்கிறோம்

சென்றமுறை போல அவ்வளவு
பதட்டமும் குழப்பமும் இல்லையென்றாலும்
கூட கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது

மொத்தம் 31மணி நேரப் பயணம்
மலைப்பை ஏற்படுத்துகிறது

வருகிற 13 இல் மீண்டும் மனைவியுடன்
அமெரிக்கா (நியூஜெர்ஸி ) செல்கிறோம்

சென்ற முறை பதட்டத்திலேயே
மிகச் சரியாக இரசித்துப் பார்க்க முடியாததை
இம்முறை பதட்டமின்றி பார்த்து இரசிக்க
உத்தேசித்துள்ளோம்

அவசியமெனில் "ஒரு பாமரப் பதிவரின் "
அமெரிக்கப் பயணம் என ஒரு கட்டுரைத் தொகுப்பு
எழுதலாம் என்கிற எண்ணமும் இருக்கிறது

சென்றமுறை எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு
அடிக்கடி ஞாபகமூட்டிப் போகிறது

அமைப்பு எப்படி இருக்கிறது எனத் தெரியவில்லை

பார்ப்போம்.....

Thursday, March 9, 2017

இளைஞர்களே நாமொரு புதிய பாதையை வகுப்போமா ?...

கொள்ளையர்கள்
கொள்ளையடித்த பணத்தோடு
இன்னும் கொள்ளையடிக்க
அதிகாரம் கேட்டு
வரும் நாள் முடிவாகிவிட்டது

என்ன செய்யப்போகிறோம் ?

சொல்லாத சொல்லுக்கு
மட்டுமல்ல
விற்பனைக்கல்லாத பொருளுக்கும்
நிச்சயம் விலையில்லை

இனியும் நம் தலையில்
நாமே மண்ணை அள்ளிப் போடாதிருப்போமா ?

ஒவ்வொர் வீட்டு வாசலிலும்
"நாங்கள் விற்பனைப் பண்டமல்ல
எங்கள் வாக்கும்
விற்பனைக்கில்லை" எனும்
வாக்கியத்தை
அச்சிட்டு வைப்போமா ?

திருமங்கலம் ஃபார்முலாவுக்கு
நேர் எதிராய்
ஆர் .கே நகர் ஃபார்முலாவை உருவாக்கி

தமிழகம் கொண்டக்
கறையினைத் துடைப்போமா ?

இளைஞர்களே

நாமொரு புதிய
பாதையை  வகுப்போமா  ?

Tuesday, March 7, 2017

மிக நிச்சயமாய் நாம் மனிதனே இல்லை....

கடலில்
சுட்டுக் கொல்லப்பட்டவன்
மீனவனா
தமிழனா
இந்தியனா

அந்தக் கொடும் செயலுக்கு எதிராக
கருத்துத் தெரிவிப்பதில் கூட
இதற்குள் அவன் எதில்
அடங்குகிறான் என அலசிக் கொண்டிருக்கிறோம் எனில்  ...

இந்தக் கொலைக்கு எதிராக
எதிர்ப்பைப் பதிவு செய்வதில்
நமக்கு என்ன லாபம் இருக்கிறது
எனக்  கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம் எனில்...

சந்தேகமே இல்லை
நாம் தமிழனும் இல்லை
நாம் இந்தியனும் இல்லை

காரணம்
நாம் தமிழனாகவோ
இந்தியனாகவோ
அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டுமெனில்

குறைந்த பட்சத் தகுதியாக
நாம்  அவசியம்
மனிதனாக

மிக  மிக முக்கியமாய்
மனிதத் தன்மை கொண்டவனாக
இருக்கவேண்டும் இல்லையா ?


Monday, March 6, 2017

பெண்ணெனும் ஆணெனும் சொல்லிரண்டும் எதிர்ச்சொல் இல்லை இணைச்சொல்லே

இராகம் என்பது ஆணினமே
தாளம் என்பது பெண்இனமே
இராகமும் தாளமும் இணைந்திருந்தால்
வாழ்வில் என்றும் இன்னிசையே

மேகம் என்பது ஆணினமே
குளிந்தக் காற்றுப் பெண்இனமே
மேகமும் காற்றும் இதையுணர்ந்தால்-
வாழ்வில் என்றும் சுகமழையே

வலிமை என்பதுஆணினமே
மென்மை என்பது பெண்இனமே
வலிமையும் மென்மையும் ஒருங்கிணைந்தால்
வாழ்வில் என்றும் சுகலயமே

பெண்ணெனும் ஆணெனும் சொல்லிரண்டும்
எதிர்ச்சொல் இல்லை இணைச்சொல்லே
திண்ணமாய் மனமிதை ஏற்றாலே
சொர்க்கமாய் மாறும் இவ்வுலகே

Sunday, March 5, 2017

ஒட்டக் காய்ச்சிய உரை நடையே

காதல் உணர்வதுப்   பூக்கையில்
சேர்ந்தே பிறந்துப்  பரவும்
மகரந்த மணமே

வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே

கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே

மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
 கூர்மிகுக்  கோடாலியே

தனிமைத் துயர்ப்  போக்கி
ஏகாந்தச்  சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே

குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு  பாணமே

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே

தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச்  தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவோ

கவிதைபெண்ணே உனக்கு ஈடாய்
உலகினில் மாற்று ஏது சொல்
எமக்கு  உன் அருளை
என்றும்போல்  வாரிவழங்கிச் செல்

Saturday, March 4, 2017

தோல்வியே அறியாது தொடர்ந்து பயணிப்போம்....

உணவே
உணர்வைத் தீர்மானிக்கிறது
உணர்வு
நிலைப்பெற்றபின் அதுவே
உணவைத் தீர்மானிக்கத் துவங்குகிறது

எண்ணமே
மனதைத் தீர்மானிக்கிறது
மனம்
நிலைபெற்றதும் அதுவே
எண்ணங்களைத் தீர்மானிக்கத் துவங்குகிறது

செயலே
பழக்கத்தைத் தீர்மானிக்கிறது
பழக்கம்
நிலைக்கொண்டதும் அதுவே
செயலைத் தீர்மானிக்கத் துவங்குகிறது

இலக்கே  
வழியைத் தீர்மானிக்கிறது
வழியில்
மனம் நிலைபெற்றதும் அதுவே
இலக்கைத் தீர்மானிக்கத் துவங்குகிறது

எனவே
என்றும்
எப்போதும்

ஒரு கவளம் தானே
சிறு எண்ணம் தானே
நொடிச் செயல்தானே
சிறு விலகல்தானே என

எதிலும்
அலட்சியம் கொள்ளாதிருப்போம்
என்றும்
தோல்வியே  அறியாது
தொடர்ந்து பயணிப்போம்

விந்தையதே வியக்கும் விந்தைதான்

சிந்தனை யானைகளைக் கட்டி
பலசமயம்
இழுக்க இயலாதுப்  போனக்
கவிதைத் தேரது

ஒரு எண்ணச்  சிறு எறும்பிழுக்க
வேகமாய்
வலம் வருவது விந்தை

குடம் குடமாய்ப்
பாண்டித்திய
நீரூற்ற
வளராது வாடும்
கவிதைச் செடியது

ஒரு சிறு வார்த்தைச்  சாரலில்
முதுகு நிமிர்த்தி
ஓங்கி வளர்வது  விந்தை

இலக்கண அளவுகோலில் நிறுத்து
முயன்று செய்ய ருசிக்காதக்
கவிதைக் குழம்பு

சந்தமெனும்
கை நிறுக்க
அதிகம் ருசிப்பது விந்தை

விதம் விதமாய்
அணிகள் பூட்டியும்
வித்தைகள் செய்தும் வரமறுக்கும்
கவிதைக் குழந்தை

ஏகாந்தமாய் வேறு
 எதையோ  நினைத்திருக்கையில்
சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது விந்தை

ஆம்  ....

 அதிசயமே அசந்து போகும்
அதிசயங்கள் பல  போலவே
 விந்தையதே வியக்கும்
விந்தை நிச்சயம் கவிதைதான் 

Friday, March 3, 2017

தாமிரபரணித் தண்ணீரும் நீதிபதிகளின் தீர்ப்பும்...

"இந்த வழக்குத் தொடர்ந்துள்ளவர்
குளிர்பான நிறுவனத்தில் 3ஆண்டுகளாகப்
பணியாற்றியுள்ளார்.அவர் நியாயமாக
நடந்து கொள்ளாததால் பணியில் இருந்து
விடுவிக்கப் பட்டுள்ளார்
இதனால் குளிர்பான நிறுவனத்திற்கு
எதிராகச் செயல்படுகிறார்

குளிர்பான நிறுவனத்திற்கும்
தனக்குமான தனிப்பட்டப் பிரச்சனையை
தீர்க்க பொது நலன் மனுத்தாக்கல் செய்துள்ளார்

தனிப்பட்ட நலன்களுக்காக
பொது நலவழக்குத் தொடர்வதை
ஏற்க முடியாது

எனவே இரண்டு மனுக்களும் தள்ளுபடி
செய்யப்படுகின்றன "
என நீதிபதிகள் உத்திரவில் கூறியுள்ளனர்

பொது நல வழக்கு என்பது வழக்கைப் பதிவு
செய்வோர் குறித்துத்தான்
விஷயம் குறித்து இல்லை என்பதுவும்

தாமிரபரணித் தண்ணீர் குறித்த
வழக்கு என்பது பொது நலன் குறித்த
வழக்கு இல்லை என்பதைப் படிக்கப் படிக்க
நீதியின் மீதும் நீதிமன்றத்தின் மீதும்
எனக்கு அளவிட முடியாத மதிப்பும்
மரியாதையும் பீறிட்டு எழுவதை ஏனோ
என்னால் தடுக்க முடியவில்லை

உங்களுக்கும் அப்படித்தானே 

Wednesday, March 1, 2017

"தெய்வத்தின் குரல் "

கடவுளின் உருவினை சக மனிதனின் உருவிலும்
அவன் குரலினை சகமனிதனின் குரலிலும்
கண்டுகொள்ளத்தெரிந்தவர்கள் எல்லாம் நிச்சயம்
பாக்கியசாலிகளே

அதற்குபெரும் ஞானம், தவம், வரம் எல்லாம்
நிச்சயம் வேண்டியதில்லை

மாறாக சக மனிதர்களிடம் அன்பும் நேசமும்
கொண்டால் போதும் என்பதுவே என்
அசைக்கமுடியாத அபிப்பிராயம்

இருபது வருடங்களுக்கு முன்னால் நான்
அரசுப்பணியில் இருந்த ஒரு மாலைப் பொழுது..

நான் எப்போதும் அலுவலகப் பணியில்
ஈடுபாடுகொண்டு பணியாற்றுவதைப் போலவே
சக ஊழியர்களிடம் மிகக் குறிப்பாக எனக்குக்
கட்டுப்பட்ட ஊழியர்களிடமும் மிக
ஈடுபாட்டுடன் நெருக்கமாகப் பழகுவேன்.
அவர்கள் அனைவரும் அவரது
சுக துக்கங்களை உடன் பிறந்தவனைப் போலவே
உரிமையுடன், ஒளிவு மறைவின்றி என்னுடன்
எப்போதும் பகிர்ந்து கொள்வார்கள்.
என்னைப் போலவே

அதை போலவே அன்றைய மாலை பொழுதில்
என் உதவியாளர் அவர் மகனுக்குப் பெண்
பார்த்து வந்த விஷயம் குறித்து என்னிடம்
பகிர்ந்து கொண்டார். அவர் இதுவரை பத்துக்கு
மேற்பட்ட இடங்களில் பெண் பார்த்து வந்தும்
எதுவும் சரியாக அமையவில்லை

காரணம் கேட்டால் ஏதாவது ஒரு குறை சொல்வார்
கடைசியாக முதல் நாள் மீண்டும் பெண்பார்க்கப்
போவதாக விடுமுறை கேட்டுப் போயிருந்தார்

அது என்ன ஆயிற்று என்று நானும் அவரும்
தனித்து இருக்கையில் கேட்க இப்படிச் சொன்னார்

"பெண் நன்றாக இருக்கிறாள். எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது.செய்முறையும் எதிர்பார்த்தப்படி
எல்லாம் செய்வதாகச் சொல்கிறார்கள்
ஆனால்..."

"ஆனால் என்ன ஆனால் எல்லாம் பிடித்திருந்தால்
முடித்து விடவேண்டியதுதானே
அது என்ன திரும்பவும் ஆனால் ..."என்றேன்

"அது வந்து எல்லாம் சரியாக இருக்கிறது
ஆனால் வாடகை வீட்டில் இருக்கிறார்கள்
சொந்த வீடு இல்லாத இடத்தில் எப்படிப்
பெண் எடுப்பது...எனத்தான் யோசிக்கிறோம்"
என்றார்

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. பெண்
பார்ப்பவர்கள் இதையெல்லாம் பார்ப்பார்களா
என அதிர்ச்சியாகவும் இருந்தது

காரணம் நான் அப்போது வாடகை வீட்டில்
குடி இருந்தேன்.வீடு கட்டும் அளவு
வசதியும் வாய்ப்பும் இருந்தபோதும்
வீடுகட்டத் தோதாக இரண்டு மூன்று இடங்கள்
வாங்கிப் போட்டிருந்தாலும், குழந்தைகள்
பள்ளிப் படிப்புக்குத் தோதாக பள்ளி அருகில்
வீடு பிடித்து இருந்தேன்.

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்
நாளை நல்ல சம்பந்தம் வாய்த்து அவர்களும்
இதைப் போல யோசிப்பவர்களாக இருந்தால்
என்ன செய்வது என்கின்ற பயம் மெல்ல
மெல்ல விஸவரூபம் எடுக்கத் துவங்கியது

மீண்டும் அதிர்ச்சியுடன்  "திரும்பச் சொல்
என்ன சொல்கிறாய்.." என்றேன்

அவரும் அசராது "சொந்த வீடு இல்லாத
இடத்தில் எப்படிப் பெண் எடுப்பது.." என்றார்

அந்த வார்த்தை ஏனோ என்னை இரண்டு நாளாக
தூங்கவிடாது இம்ஸித்துக் கொண்டே இருந்தது

அப்போதே தீர்மானம் செய்து விட்டேன்
அதுவரை நாம் நினைத்தால் எப்போது
வேண்டுமானலும் கட்டிக் கொள்ளலாமே என
என்னுள் இருந்த ஒரு அலட்சியத்தை
சட்டென ஒதுக்கி வைத்து உடன் வீடு கட்டுவது
குறித்து அதிகம் யோசிக்கத் துவங்கினேன்

உடன் ஆறு மாதத்தில் புது வீடு கட்டிமுடித்து
கிரஹப் பிரவேசமும் முடித்துவிட்டேன்

இப்போது நினைத்தால் கூட அவருடைய குரலும்
அதனால் எனக்குள் ஏற்பட்ட ஒரு உத்வேகமும்
சட சட வென எல்லா வேலைகளும்
தங்குத் தடையின்றி நடந்ததும்
பிரமிப்பூட்டும்படியாகத்தான் இருக்கிறது

இப்போதும் கூட ஒரு பாஸிட்டான விஷயத்தை
என்னுடன் பேசுபவர்கள் சொன்னால்
என்பது மட்டுமல்லாது, என்னக் கடந்துச் செல்வோர்
சொல்லிக் கொண்டு போனால் கூட,
பதிவுகளில் படித்தால் கூட
அதை மிகக் கவனாமாகக் கேட்டு அது
இறைவன் மனிதன் மூலமாக எனக்குச்
சொல்லும்செய்தியாகவே எடுத்துக் கொள்கிறேன்
அது எனக்குப் பலவகைகளில் வழிகாட்டியாக
உதவுவதாக உள்ளது

ஆம் கடவுளை மனித உருவிலும் அவனது
குறிப்புகளை மனிதனின் சொற்களிலும்
புரிந்து கொள்வதற்கு தவமோ,வரமோ, ஞானமோ
நிச்சயம் தேவையில்லை

மாறாக சக மனிதர்களிடம் அன்பும் நேசமும்
கொண்டால் போதும் என்பதுவே என்
அசைக்கமுடியாத அபிப்பிராயம்

உங்களுக்கு ..............