இருபது வருடங்களுக்கு முன்பு--
அப்போது எனக்கு இருபத்து எட்டு வயது இருக்கும்
நான் எட்டு வயதுச் சிறுவனாக இருக்கையிலேயே
எனது தந்தை இறந்துவிட்ட காரணத்தால் நான்
எனது சகோதரர் மற்றும் எனது சகோதரி அனைவரும்
தாத்தா வீட்டிற்கு வந்து விட்டோம்
(அம்மாவின் அப்பா )
தந்தை இறந்து கிடக்கையில் சுடுகாடு வந்து
பங்காளிகள் என்கிற முறையில் சடங்குகளைச்
செய்துவிட்டுப் போன எங்கள் பெரியப்பா
அதற்குப் பின் ஏனோ எங்களைப் பார்க்க
வரவே இல்லை
நாங்களும் ஏனோ எந்தவிதத்திலும் அவர்களுடன்
தொடர்பு கொள்ளவே இல்லை.அது எங்களுக்கு
அப்போது அவசியமாகவும் படவில்லை
எனது மூத்த சகோதரனுக்கு திருமண ஏற்பாடுகள்
செய்யத் துவங்குகையில் தான் எனது தாயார்
"நாம் எப்படித்தான் தாத்தா பாட்டி வீட்டில்
அனுசரணையாக இருந்தாலும் பங்காளிகள்
தொடர்பு முழுவதும் இல்லாது போனாலும்
திருமணம் என் வரும்போது உனது பெரியப்பா
அவர்கள் பெயரில்தான் திருமணப் பத்திரிக்கை
அடிக்கவேண்டும்,அவர்கள் மணவறையில்
இருந்துதான்தாரைவார்த்த்து தர வேண்டும்.
எனவே நீ உடன்பத்தமடைப் போய் பெரியப்பாவைப்
பார்த்துவிவரம் சொல்லித் திருமணப் பத்திரிக்கை
அவர் கைப்படஎழுதி வாங்கிக் கொண்டு,
திருமணத்தை வந்திருந்து நடத்திக் கொடுக்கவேண்டும்
எனச் சொல்லிஆசி பெற்று வா "என்றார்
எனக்கும் என் சகோதரனுக்கும் இதில்
உடன்பாடு இல்லை
"இத்தனை நாள் வந்து பார்க்காதவர்களை எதற்கு
அழைத்து வந்து மரியாதை செய்ய வேண்டும் " என
எதிர்ப்பினைக் காட்டிப் பார்த்தோம் .
அது எடுபடவில்லைதாத்தா பாட்டி கூட அதுதான் சரி
எனச் சொன்னதால்அண்ணனால் வர முடியாத
அளவு பணிச் சூழல் இருந்ததால்
நான் மட்டும் போய் வருவது என முடிவாகி
ஒரு நல்ல முஹூர்த்த நாளில் பெரியப்பாவைப்
பார்க்கக்பத்தமடை ஊர் நோக்கிக் கிளம்பினேன்
"ஊரில் பஸ்ஸை விட்டு இறங்கி அவர் பெயரைச்
சொன்னால்போதும்,அவர் வீட்டில் கொண்டு
விட்டு விடுவார்கள்
உங்கள் பெரியப்பா அவ்வளவு பிரபலம் "என
அந்த மாவட்டத்தில் இருந்து மாறுதலாகி எங்கள்
தெருவில் குடியிருந்த ஒரு உறவினர்
ஒருவர் சொன்னார்
அது மிகச் சரியாக இருந்தது..
அந்த ஊரின் வெளியில் பஸ்ஸை விட்டு இறங்கியதும்
அருகில் இருந்த பெட்டிக் கடைகாரரிடம் அவர் பெயர்
சொல்லி விசாரித்ததும் அவரைப் பார்க்க வந்தது
குறித்து அவர் விசாரிக்க அவர் எனக்குப் பெரியப்பா
எனச் சொன்னதும் அவர் சட்டெனக் காட்டிய கூடுதல்
மரியாதையும் உடன் அருகில் நின்றிருந்த பையனைக்
கூப்பிட்டு தன் சைக்கிளைக் கொடுத்து வீட்டில்
கொண்டுபோய் விட்டு விட்டு வரச் சொல்லிவிட்டு
மிகப் பணிவாகப் போட்டக் கும்பிடும் என்னை மிகவும்
ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
சைக்கிள் ஓட்டிவந்த பையன் "இந்த நேரம்
உங்கள் பெரியப்பா மடத்தில் இருப்பார்கள்
உங்களை மடத்தில் விடட்டுமா அல்லது வீட்டில்
விடட்டுமா ? " என்றான்
"மடத்திலேயே விடு,அவர்களுடன் சேர்ந்து
வீட்டிற்குப் போய்க் கொள்கிறேன் " என்றேன்
அந்த ஊர் தாமிரபரணியின் கருணையால் மிகச்
செழிப்பமான ஊராக மட்டுமல்லாது மிக
வித்தியாசமானஅமைப்புள்ள ஊராகவும் இருந்தது
தாமிரபரணியின் ஒரு வாய்க்கால் இரு
பிரிவாகப் பிரிந்து இருபுறமும் இணையாக இருந்த
வீடுகளின் பின் படிக்கட்டை ஒட்டி நிறைந்து ஓடியதும்
பின் கதவைத் திறந்ததும் சலசலத்து ஓடும்
ஆற்று நீரில் பெண்கள் துவைத்துக் கொண்டும்
குளித்துக்கொண்டும் இருந்தது வியப்பூட்டுவதாக இருந்தது
சைக்கிள் பையன் என்னை மடத்தின் முன்னே
இறக்கிவிட்டுமடத்தின் உள்ளே ஒரு
இருபது முப்பது பேர் சூழ்ந்திருக்க
கணக்குப்பிள்ளை சாய்வு மேஜையில் எதையோ
கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தவரைக் காட்டி
"அதோ உங்கள் பெரியப்பா உட்கார்ந்திருக்கிறார் "
எனச் சொல்ல சப்தம் கேட்டு என் பெரியப்பா
நிமிர்ந்து பார்க்கசுற்றி இருந்தவர்களும் என்னை
நோக்கிப் பார்க்கசற்றுக் கூச்சத்துடன்
அவரை நோக்கி நடந்து அவர் அருகில் சென்று
"பெரியப்பா "என்றேன்
பெரியப்பா தான் அணிந்திருந்த சாளேஸ்வரக்
கண்ணாடியைகழட்டி டேபிளில் வைத்தபடி
"வாடா உன்னைத்தான்
எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்," எனச் சொல்லிபடி
என் கையைப் பிடித்து அருகில் அமரவைத்து
சுற்றி இருந்தவர்களிடம் "உடையவன் வந்துவிட்டான்
இனி நான் விலகிக் கொள்ளவேண்டியதுதான் "
எதைவிட்டு அவர் விலகப் போகிறார்
நான் எதற்கு உடையவன் என்பது
எனக்கு விளங்கவில்லை
அங்கு அமர்ந்திருந்தவர்கள் அனைவரின் கையிலும்
ஜாதக நோட்டுப் புத்தகம் இருந்தது
(தொடரும் )