Showing posts with label சிறப்புப் பதிவு. Show all posts
Showing posts with label சிறப்புப் பதிவு. Show all posts

Sunday, June 18, 2017

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

Image may contain: drawing

முன்னறித்  தெய்வப்பட்டியலில்
இரண்டாவதாயிருப்பதுக்  குறித்து
அவர்கள் கவலைப்பட்டதே இல்லை

குழந்தைகளின்முன்னேற்றம் குறித்துச்
சிந்திப்பதில் அவர்கள் எப்போதும்
முதலாவதாகவே இருக்கிறார்கள்

மாதா எனத் துவங்கி தெய்வத்தில் முடியும்
அந்த நால்வர் பட்டியலில்
குருவுக்கு முன்னர் இடம்பெற்றது
வெறும் வார்த்தை ஜாலத்திற்காக இல்லை

உலகைப் புரிந்து கொள்ளக்
கற்றுக் கொடுப்பதில் அவர்கள்
அனைத்து விஷயத்திலும் என்றென்றும்
குருவுக்கு முன்னால்தான் இருக்கிறார்கள்

அன்னையர் தினம் அளவு
தந்தையர் தினம் கொண்டாடப்படாதது  குறித்து
அவர்கள் சஞ்சலப்படாதே இருக்கிறார்கள்

ஆணுக்கென இந்தச் சமூகம் விதித்திருக்கும்
சில விசித்திர விதிகளினால்
அவர்கள்  உணர்வுகளை எப்போதும்
உள்ளத்தில் அடக்கிவைத்தே அலைகிறார்கள்

நம்மை வயிற்றில் சுமக்காது போயினும்
காலமெல்லாம் நெஞ்சில் சுமந்தே  சுகங்காணும்

நமக்குப் பாலூட்டி வளர்க்காது போயினும்
காலமெல்லாம் சிகரத்தில் வைக்கத்  தினம்சாகும்

தந்தையரின் தியாகங்கள்
யாருக்கும் எந்த விதத்திலும்
என்றும் சளைத்ததல்லை

ஆம் ...நிச்சயமாக

 தந்தையராய் இருப்பது மாபெரும் தவமே

ஆணினத்திற்கு இறைவன் அருளிய ஆகப்பெரிய வரமே

அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

Wednesday, June 7, 2017

கலைஞரின் குணச் சிறப்பு ( 3 )

கலைஞர் என்று சொன்னாலே அவர்
மேடப் பேச்சுத் திறனும்,சாணக்கியத்தனமும்
சினிமாவும் மொத்தத்தில் முத்தமிழும்
உடன் ஞாபகம் வருகிற அளவு
அவரது தனிமனிதச் சிறப்புக்கள் அதிகமாக
பேசப்படவில்லை.அதனாலேயே என்னவோ
நடுத்தர மற்றும் அதற்கு மேல் நிலையில்
உள்ளவர்களைக் கவர்ந்த அளவு அவர்
பாமர மக்களைக் கவரவில்லை என்பதே
என் கருத்து

(இதற்கு நேரெதிரானவர் புரட்சித் தலைவர்
என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை )

அதற்காகவே எனக்குத்தெரிந்த ஒரு சிறு
தகவலைப் பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்

என்னுடைய நண்பரின் மாமனார் திரைப்படத்
தயாரிப்பாளராக இருந்தார். அவரும் அவருடைய
நன்பர்களும் சேர்ந்து உமையாள் ப்ரொடக்ஸனஸ்
என்கிற பெயரில் மூன்று தமிழ்ப் படங்களைத்
தயாரித்திருக்கிறார்கள்.அது அவன் பித்தனா,
தங்கத் தம்பி, உலகம் இவ்வளவுதான் என ஞாபகம்

இதில்  அவன் பித்தனா என்கிற திரைப்படத்திற்கு
திரைக்கதை வசனம் எழுதியவர் கலைஞர் அவர்கள்
இது அவர் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில்
சிறைப்படுத்தப் பட்டிருந்த நேரத்தில் எழுதப்பட்டது

தயாரிப்பாளார் என்கிற முறையில்
எனது நண்பரின் மாமனார் அவ்வப்போது
சிறைச்சாலைச் சென்று கலைஞர் அவர்களைச்
சந்தித்து வருவதுண்டு

அங்கு அப்போது சிறைகாவலாராய் இருந்த ஒருவர்
கலைஞர் மீது தனிப்பட்ட முறையில் கொண்டிருந்த
பற்றின் காரணமாக அவருக்குத் தேவையான
உதவிகளை மிகச் சிறப்பாகச்செய்து வருவாராம்.
அந்தச் சேவை அப்போதைய தனிமைச்சிறை
என்கிற நிலையில்  கலைஞருக்கு மனரீதியாக
அதிக உற்சாகம் தந்ததாகச் சொல்வாராம்.

இது நடந்து சில ஆண்டுகள்  கழிந்து
தேர்தல் வந்ததும், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும்
பின் அண்ணா அவர்கள் மறைந்ததும்
கலைஞர் அவர்கள் முதல்வர் பொறுப்பேற்ற
சமயம்...

மரியாதை நிமித்தமாக என் நண்பரின் மாமனார்
கலைஞர் அவர்களைச் சந்திக்க,அந்தச் சந்திப்பில்
அந்தப் படத் தயாரிப்புச் சம்பந்தமான
நினைவுகளையும்சிறைச்சாலை நினைவுகளையும்
 பகிர்ந்து கொண்டகலைஞர் மறக்காது
அந்த சிறைக்காவலர் குறித்தும்அதிகம்
விசாரித்திருக்கிறார்.முடிந்தால் அவரைச்
சந்திக்கச் சொல்லும்படியாகவும்
தகவல்தெரிவித்தாராம்.

கலைஞரின் விருப்பமறிந்த நண்பரின் மாமனாரும்
உடன் அவரைத் தேடிக் கண்டுபிடித்து
விவரம் சொல்லி கலைஞர் அவர்களைச்
சந்திக்கும்படியானஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்

இந்த நிலையில் இந்த விஷயங்களை அறிந்த
காவ்லரின் உறவினர், செல்வந்தர் ஒருவர்
அவருடைய மகனை மருத்துவக் கல்லூரியில்
சேர்ப்பதற்காக முயன்று கொண்டு இருந்திருக்கிறார்

அதன் காரணமாக முதலவரைச் சந்திக்கச்
செல்லும் காவலரிடம்,தன் மகனுக்கு
உறவினர் என்கிற முறையில் மருத்துவக்
கல்லூரியில் ஏதாவது சிறப்புஒதுக்கீட்டினபடி
சேர்க்க ஆவன செய்யக்
கேட்டுக் கொண்டிருக்கிறார்

வெறுமனே சந்தித்துத் திரும்புகையில்
இந்தக் கோரிக்கையையும் வைத்துப் பார்க்கலாமே
என்கிற எண்ணத்தில் உறவினரின்
வேண்டுகோளையும் ஒரு மனுவாகக் கொண்டு
கலைஞர் அவர்களைச் சந்தித்திருக்கிறார்

கலைஞர் அவர் வந்ததும் மிக உற்சாகமாக
எழுந்து வரவேற்று உடன் இருந்தவர்களிடம்
எந்த எதிர்பார்ப்பும் இன்றி,அரசின் கோபத்திற்கும்
அஞ்சாது அவர் செய்த பணிவிடைகளை
நினைவு கூர்ந்து மகிழ்ந்திருக்கிறார்

பின் குடும்ப விஷயம் அனைத்தையும் விசாரித்து
ஏதும் உதவி தேவை எனில் தவறாது
தன்னைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்த
உடன் காவலர் தான் கொண்டு வந்திருந்த
கோரிக்கை மனுவைக் கொடுத்திருக்கிறார்

அதை பரிசீலித்த கலைஞர் அவர்கள்
அவர்கள் எந்த வகையில் உறவு,அவருக்கு
உதவுவதால் அவருக்கு என்ன லாபம் என
மனம் திறந்து விசாரித்து, அன்றைய நிலவரப்படி
மருத்துவக் கல்லூரி இருக்கையின் மதிப்பு
குறித்துச் சொல்லி அந்த மதிப்பை  இழக்காமல்
ஆவன செய்து கொண்டுப்   பின் தனக்கு தகவல்
தெரிவிக்கும்படியும் பின் விதிகளுக்கு
உட்பட்டு சிறப்பு விதிகளின் கீழ்
ஆவன செய்வதாகக் கூறியதோடு
அப்படியே செய்தும் கொடுத்தாராம்

இதை முழுவதும் மிகச் சந்தோஷமாக
விவரித்த நண்பரின் மாமனார்,ஞாபக சக்தியில்
மட்டுமல்ல,தனக்குப் பொதுவாழ்வில் உதவிய
ஒவ்வொருவருக்கும் தேடித் தேடி உதவி செய்த
கலைஞரின் மாண்பை,குணச் சிறப்பை
இன்னும் சில உதாரணங்களுடன் விளக்கினார்.

எதனாலோ கலைஞர் அவர்களின்
சாணக்கியத்தனம், முத்தமிழ் பாண்டித்தியம்
மேடைப்பேச்சு முதலான பொதுச் சிறப்புக்கள்
குறித்தே அதிகம் பேசப்பட்டு
அவரது தனிப்பட்ட குண நலன்கள்
மிக அதிகமாக பகிரப்படாதது கூட
மாறாக எதிர்மறையான தனிக்குணங்களே
அதிகமாகப்  பகிரப்பட்டதாலேயே கூட
பின்னாளில் தனிப்பட்டகுண நலன்களால்
பெரும்பான்மையோரைக் கவர்ந்த
புரட்சித்தலைவருக்கு ஈடு கொடுக்க
முடியவைல்லையோ என்கிற எண்ணம் கூட
எனக்கு உண்டு

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

Saturday, June 3, 2017

கலைஞரும் சமயோசிதமும் ( 1 )...

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில்
ஒரு நிகழ்ச்சி.அது கவிதைப் போட்டியில்
வென்றவருக்கு பரிசு வழங்கிக் கௌரவிக்கும்
நிகழ்வாய் இருந்ததால் முதல்வராக
கலைஞர் அவர்களும்,
மற்ற அமைச்சர் பெருமக்களும்
தமிழ் அறிஞர்களும் பெருந்திரளாகக்
கலந்து கொண்ட ஒரு அருமையான நிகழ்வு

(அன்று இரவில் தான் ஆட்சிக் கலைக்கப்பட்டு
மிஸா அமலபடுத்தப்பட்டதாக ஞாபகம்)

மேடையில் ஒருபுறம் கலைஞர் உட்பட
அமைச்சர் பெருமக்கள் அனைவரும்
இருக்கையில் அமரவைக்கப்பட்டிருக்க
தமிழ் அறிஞர்கள் அனைவரும் அவர்களைக்
கௌரவிக்கும்விதமாக மிகச் சிறப்பாக
சம தளமாக படிக்கட்டு அமைப்பில்
அமைக்கப்பட்டிருந்த மேடையில்
அமர வைக்கிப்பட்டிருந்தார்கள்

அதன் காரணமாக அமைச்சர் பெருமக்கள்
அனைவரும்  கலைஞர் உட்பட  எழுந்து வந்து
 நின்றுஒலி வாங்கியின் முன் பேசும்படியாகவும்
அறிஞர்கள் அனைவரும் அமர்ந்த நிலையில்
தங்கள் இடத்திலிருந்தே பேசும்படியாகவும்
அமைந்தது

இந்த அமைப்பை மேடையில் இருந்த
அனைவரும் கீழே இருந்து இரசித்துக்
கோண்டிருந்த அனைவரும்தான்
 பார்த்துக் கொண்டிருந்தோம்
எங்களில் யாருக்கும் , ஏன் சிறப்புரையாற்றிய
அறிஞர் பெருமக்கள் யாருக்கும் கூட
அந்த அமைப்புக்கு குறித்து ஏதும்
தோன்றவில்லை  

ஆயினும் கலைஞர் தனது சிறப்புரையில்
"இந்த அரசு தமிழின் பால்  தமிழறிஞரின்பால்
அதிக மரியாதையும் மதிப்பும்
கொண்டிருக்கிறது

அதன் காரணமாகவே
அமைச்சர் பொறுப்பில் இருக்கிற
நாங்கள் எல்லோரும் எழுந்து நின்று பேச
தமிழ் அறிஞர் பெருமக்கள் எல்லாம்
அமர்ந்தபடியே உரையாற்ற ஏற்பாடு
செய்ததைக் கொண்டே நீங்கள் இதைப்
புரிந்து கொண்டிருப்பீர்கள் " என
அந்தச் சூழலை மிகப் பொருத்தமாகப்
பயன்படுத்திப் பேசியதை இரசித்த
கூட்டத்தின் கரகோஷம் அடங்க
வெகு நேரம் பிடித்தது

அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவனாய்
இருந்து அவரின் சமயோசிதமாய்ப் பேசியதை
இரசித்து மகிழும்படியான வாய்ப்புக் கிடைத்ததை
இன்று அவருக்கே ஆன நாளில் நினைவு
கூர்வதிலும் அதிப் பதிவு
செய்வதிலும் மிக்க மகிழ்வு கொள்கிறேன்

உழைப்பு என்றும் சலியாத உழைப்பு அதுவே
கலைஞரின் சிறப்பு என்பதை பதிவு செய்வதிலும்...

Tuesday, September 6, 2016

பிள்ளையார் சிலையை ஏன் திருடி வைக்கிறோம் ?

மன்னர் காலங்களில் சிற்பக் கூடங்கள்  ஏ 
அதிகம் இருக்கும்.அந்தச் சிற்பக் கூடம் ஒரு
தலைமைச் சிற்பியின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும்

சிற்பத்திற்குகந்த கற்களைத்
தேர்ந்தெடுத்துச் சேர்த்தல்,

சிற்பக் கலைஞர்களுக்குப் பயிற்சியளித்தல் ,

வடிவமைத்தல்,முதலான அனைத்திற்கும்
அந்தத் தலைமைச் சிற்பியே முழுப் பொறுப்பேற்பார்

ஓரளவு பயிற்சிப் பெற்றப் பின்புதான புதிய
சிற்பிகள் சிலை வடிக்க அனுமதிக்கப்படுவார்கள் 
ஆயினும் புதிய்வர்கள் என்பதால் எப்படியும் புதிதாகச்
செய்கையில் சிறு சிறு தவறின் காரணமாக
சிலைகள் சேதமுறவோ,இறுதி கட்டத்தில்
சிறு சிறுத் தவறுகள் நேர்ந்து விடவோ வாய்ப்பது
நிச்சயம் அதிகம் உண்டு

அது போன்று தவறுகள் நேரும் போது 
பயன்ற்ற சிலைகள் அதிகம் சிற்பக் கூடத்தில்
சேர்ந்து விடவும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு

மூளியான சிலைகள் சிற்பக் கூடத்தில் இருத்தல்
ஆகாது என்பதாலும், 

புதியவர்கள் அதனை உடனடியாக
பிள்ளையாராக மாற்றிவிட்டால் தவறுக்கான
தண்டனையில் இருந்து விலக்களிக்க
உத்திரவாதம் இருந்ததாலும், 

பிள்ளையாராக எந்தச்
சேதமுற்ற சிலையையும் மாற்றுதல் மிக மிக எளிது
என்பதாலும் 

புதிய சிற்பிகளுடன் தவறு நேர்ந்தவுடன்
உடனடியாக தலைமைச் சிற்பியின் கவனம்படும்முன்
அதனை பிள்ளையாராக உருமாற்றம் செய்து விடுவர்

எந்த ஒரு சிற்பியும் சிற்பிக்கான பயிற்சி முடித்ததும்
செய்கிற முதல் சிலை பிள்ளையாராக
இருக்கும் என்பதால்

எந்த ஒரு சேதமுற்ற சிலையையும் உடன்
பிள்ளையாராகச்செய்துவிடும் திறன்
அனைத்துப் புதிய சிற்பிகளுக்கு இருக்கும்

இப்படி அன்றாடம் சேருமின்ற பிள்ளையாரை 
வெளியேற்றுதலையே பிரதானப்
 பணியாகக் கொண்டால்சிற்பக் கூடத்தின்
பிரதான பணிகள் பாதிப்படையச் சாத்தியம் அதிகம்

எனவே அதனை மக்களாகவே எடுத்துச்
செல்லும் விதமாக

ஆலமரம் அரசமரம் பிணைந்த இடம்,
குளக்கரை,நேர்க்குத்து உள்ள இடங்கள்,
கோவில் அரசமரத்தடி
என பிள்ளையாருக்கான தேவையையும் 
அதிகம் இருக்கும்படியான நம்பிக்கையையும்
உருவாக்கி வைத்திருந்தார்கள்

அனுமதி பெற்றுக் கேட்டு எடுத்துச் செல்வது என்பது
இருக்குமாயின் அதற்கான  கால விரயம்,
 சம்ரதாயம்   அக்கறையின்மைக்குச்
சாத்தியம் என்பதால் கேட்காமலே
எடுத்துச் செல்லலாம்எனப் பிள்ளையாருக்கு மட்டும்
இந்தச் சலுகையைக் கொடுத்திருந்தார்கள்

காலப் போக்கில் கேட்காமல் எடுத்துச் செல்வதைத்
திருடுவது என்கிற அர்த்தமாக எடுத்துக் கொண்டு
அப்படி எடுத்துக் கொண்டு வைத்த பிள்ளையாருக்கு
திருடி வைத்த பிள்ளையார் என்றும் அதற்குத்தான்
அருளும் சக்தி மிக அதிகம் எனவும் (எல்லா
பிள்ளையாருக்கும் உண்டு என்றாலும் )
ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்ததால்தான்
நாம் அதன் தொடர்ச்சியாக இப்போதும் கூட
சன்னதிகளில் பிரதிஷ்டை செய்யப்படுகிற
பிள்ளையாரைத்  தவிர மற்ற இடங்களில் இன்னமும்
எங்கிருந்தோ பிள்ளையாரை கடத்தி வந்துத்தான்
(திருடித்தான் )வைத்துக் கொண்டிருக்கிறோம்

(சிறு வயதில் ஒரு பெரியவர் சொல்லக் கேட்டது
சுவாரஸ்யமாகவும், லாஜிக் சரியாகவும் இருந்ததால்
இப்போதுவரை என் நினைவில் இருந்ததால்
அதனை பதிவு செய்துள்ளேன் )

Wednesday, July 13, 2016

ஆடி அமாவாசை ..மூதாதையர் வழிபாடு ஏன் ? இந்துக்களின் நம்பிக்கை


கிரகத்தின் சுழற்சிப் பொருத்து பகல் இரவு
நேரங்கள் மாறுபடுவதைப் போல

கிரகங்களுக் கிடையிலான தொடர்பு பொருத்து
அவைகளுக்கிடையே ஆன மாத  வருடங்களும்
மாறுபடுகின்றன

அந்த வகையில் பூமியின் ஒரு வருடமே
தேவர்களுக்கு (அதாவது தெய்வங்களுக்கு )
ஒரு நாளென்பது இந்துக்களின் நம்பிக்கை

அந்த வகையில் மார்கழி மாதமே தேவர்களுக்கு
அதிகாலை( அதனால்தான் கோவில்களில்
திருப் பள்ளியெழுச்சிப் பூசைகள் )

தை முதல் வருகிற ஆறு மாதம் பகல் பொழுது

ஆடி மாதம் முதல் தொடர்கிற ஆறு மாதம்
அவர்களுக்கு இரவுப் பொழுது

அனைவருக்கும் புரிகிறார்போல உதாரணம் எனில்
இப்படிச் சொல்லலாம்

மாவட்ட ஆட்சித் தலைவரே ஆனாலும்கூட
பகலெல்லாம் பணியாற்றி விட்டு இரவு
ஓய்வெடுக்கையில் அலுவலகத்தில்
இருக்க் மாட்டார்.ஆனாலும் கூட
மாவட்டப் பொறுப்பு அவர்வசம்தான் இருக்கும்

அவர், தான் அலுவலகத்தில் இல்லாத
காலங்களிலும் தன் சார்பாக எந்தத்
தகவலைப் பெறவும் ஒரு  பொறுப்பான
காரியஸ்தரை நியமனம் செய்து வைத்திருப்பார்

மிக மிக அவசரம் எனில் அந்தப் பொறுப்பாளர்
தகவலை உடன் ஆட்சித் தலைவருக்கு
தெரிவிப்பார். அல்லது அவ்வளவு அவசரம்
இல்லையெனில் தகவல்களைப் பதிவு
செய்து வைத்திருப்பார்.

அதைப் போலவே ஓய்வ்டுக்கச் சொல்லும்
தெய்வங்கள் தங்கள் சார்பாக உலகைக் கவனித்துக்
கொள்ளும் பொறுப்பாளர்களாக மூதாதையரை
நியமித்துச் செல்வதாகவும்...

அவர்களை
வரவேற்று உபசரித்து தங்கள் குடும்பங்களைக்
காக்குமாறு வேண்டிக் கொள்ளும் நாளே
ஆடி அமாவாசையாகும்

அவ்வாறு இங்கு வந்திருந்து தங்களை
ஆறு மாதம் காத்து இருந்தவர்களுக்கு
நன்றி சொல்லி அனுப்பி வைக்கும் நாளே
தை அமாவாசையாகும்

இந்த ஆழமான நம்பிக்கையின் பொருட்டே
இந்துக்கள் ஆடி அமாவாசையை
மற்றும் தை அமாவாசையை

தங்கள் மூதாதையருக்கு உரிய நாளாக ஒதுக்கி
சிறப்புப்பூசைகளும் படையல்களும்
படைக்கிறார்கள்

படைப்பது சரி.அதற்கு எதற்கு நீர் நிலைக்குப்
போகவேண்டும். அதையும் கோவிலில்
செய்யலாமே ?

செய்யலாம் தான். ஆனால் அதற்கும் ஒரு
காரணமிருக்கிறது.........

Wednesday, December 23, 2015

"காலத்தை வென்றவன் காவியமானவன் "

ஒரறிவு  உயிரினங்கள் முதல்
ஆறறிவு மனிதர்வரை
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி "கர்ஜிக்கும்
காலன் தோற்றது.....

மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விட திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை......

அவர்தானே
வசூல் " சக்கரவர்த்தித் திருமகனாய் " இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை....

அவர்தானே
"மன்னாதி மன்னனாய்த்" திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமென

"எங்கள் தங்கமென"   அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?

எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும் புதிராய் இருப்பினும்
"நல்லவன் வாழ்வான் "
"தர்மம் தலைகாக்கும் "எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை

இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ்
"இன்றுபோல்  என்றும் வாழ்க" என
வாழ்த்தி நிறைவான பெருமிதம் கொள்வோம்

"அவர் " ( 2 )

தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களில்
தொடர்ந்து நீங்காது இடம்பெற்றிருக்கிற
தலைவர்களில்"இவரும் " முக்கியமானவர்
என்றாலும்.....

முன்பு சினிமாத் துறையினரால் எம். ஆர். டி. கெ
எனச் சுருக்கமாக அழைக்கப் பட்ட மதுரை/
இராமனாதபுரம்/திருநெல்வேலி/ கன்னியாகுமரி
மாவட்டங்களில் அவருக்கிருந்த செல்வாக்கு
இன்னும் அதிகமானது

அதிலும் மிகக் குறிப்பாக மதுரை எனச் சொல்லலாம்

அரசியல் வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்
வீரவாள் வழங்கியது/ கணக்குக் கேட்டது/
புரட்சித்தலைவிக்கு கொள்கைப்பரப்புச் செயலாளர்
பதவி வழங்கியது/ உலகத் தமிழர் மா நாடு நடத்தியது
என   அவரின் பல முக்கிய நிகழ்வுகள்
இப்படி மதுரையை அனுசரித்தே இருக்கும்

அப்படித்தான் அன்றைய முக்கிய நடிகர்களின்
புதுப்பட வெளியீடு பொதுப்பண்டிகையான
 தீபாவளி மற்றும் பொங்கலின் போதுதான்இருக்கும்
என்றாலும் ...

"இவரின் " சொந்தப் படம் ஒன்று
மதுரையின்முக்கியத் திரு நாளான சித்திரைத்
திரு நாளின் போது வெளியிடப்பட்டது.

அப்போதெல்லாம் இப்போதைப்போல டீஸர்கள்
கிடையாது என்றாலும் போஸ்டர்களும் அன்றாடம்
அது குறித்து வெளியிடப்படும் பத்திரிக்கை
 விளம்பரங்களும்படத்திற்கான சிறப்புப்புத்தகங்களும்
இப்போதையடீஸர்களை விட அதிக தாக்கத்தை
ஏற்படுத்திப் போகும்

இந்தப் படத்தைப் பொருத்தவரை , "இவர் " மற்றும்
"அவர் " இரண்டுவேடம் என்றதும்,இருவரும் அந்த ராஜா
ராணி உடையில் ஜெய்பூர் அரண்மனைப் பின்புலத்தில்
நடந்துவரும் படமும்,"அவரின்" மார்ப்புப் பிளவுகள்
தெரியும்படியான வித்தியாசமான உடையில்
சிங்கத்தின்வாய்ப் பிளப்பதுமான படங்களைப்
 பார்த்து நாங்கள் மெய் சிலிர்த்துக் கிடந்தோம்

எப்படியும் இப்படத்தை வந்த முதல் நாளே பார்த்து
விடுவது எனத் தீர்மானித்தோம்

அது மதுரையில் அவ்வளவு எளிதில்லை என்றுத்
தெளிவாகத் தெரிந்த போதும். நிற்க

(நிற்க . என்பதைப் பார்த்து யாரும் எழுந்து
நின்று விட வேண்டாம்

என்போன்ற அந்த காலத்து நபர்களுக்கு
நிற்க என்பதன் பொருள் நன்றாகத் தெரியும்.
இப்போதைய இளைஞர்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.

முன்பெல்லாம் நேரடியாகப் பேசுவதை விட
விரிவாகவும் உணர்வு பூர்வமாகவும்
கடிதம் எழுதுவார்கள்.

அப்படி எழுதிக் கொண்டுவருகையிலேயே
அதன்தொடர்புடைய வேறு விஷயத்தைச்சொல்ல
வருகையில்இந்த நிற்க. என்கிற வார்த்தையைப்
போடுவார்கள்.

அதைப்போலத்தான் இந்த நிற்க.)

தொடரும்

Tuesday, December 22, 2015

" அவர் "

எப்போதிருந்து " அவரைத் " தெரியும்
என்றிலிருந்து "அவர் " என்னை முழுவதும்
ஆக்கிரமித்துக் கொண்டார்..

 நினைவுச் சரடின் நுனிப்பிடித்து
மெல்லக் காலம் கடக்கிறேன்.

"படம் போட்டு எத்தனை நேரம் ஆச்சு
எத்தனைக் கட்டம் போச்சு " எனக் கேட்டபடி
மிகக் கஷ்டப்பட்டுச் சேர்த்த அந்த இருபத்தைந்து
பைசாக் காசில் எடுத்த தரை  டிக்கெட்டில்
மண் குவித்து அமர்ந்தபடிக் கேட்கிறேன்.

"இரண்டு கட்டம்தான் ஆகியிருக்கு.இன்னும்
அண்ணன் வரல " என்கிறான் முன்னால்
குந்தி இருந்த ஒருவன்.

திரையில் ஒரு சுடுகாட்டில் பண்ணையார்
 தன் முன் செருப்புப் போட்டு நின்றதற்காக
ஒரு பராரியை , சவுக்கால் அடிக்கத் துவங்குகிறார்

அந்தக் காட்சியின் கொடுமை,அவன் அடிபடும் விதம்
என்னுள் தானாகவே ஒரு ஆக்ரோஷத்தைக்
கிளப்பிவிடுகிறது

"என்ன கொடுமை இது.செருப்புப் போட்டு அவர் முன்
வருவது அத்தனை கொடிய செயலா ? இது என்னடா
அநியாயமாக இருக்கிறதே " என எண்ணத்
துவங்குகையிலேயே சட்டென
அடுத்தக் கட்டம் மாறுகிறது

ஒரு அருமையான காளை பூட்டிய ரேக்ளா  வண்டியில்
சாட்டையை சுழற்றியபடி "ஹேய் மனிசனை மனிசன்
சாப்பிடறாண்டா அருமைத் தம்பி " எனப் பாடியபடி
சீறிக் கொண்டு வருகிறார்  "அவர் "

கீற்றுக் கொட்டகையில் சீல்கை ஒலி  சீறிப்பறக்கிறது

மேலே விளக்குகளை போட்டுப் போட்டு அணைக்க
கூட்டத்தில் சப்தம் இன்னமும் கட்டுக்கடங்காது
காதை அடைக்கிறது.

 முதன் முதலாய் அந்த க் கூட்டத்தின் ஆக்ரோஷச்
சப்தத்தில் நானும் சங்கமிக்கிறேன்.....


--தொடரும்---

Thursday, October 23, 2014

பதிவர் சந்திப்பு,

தாமரைப் பூத்த தடாகம்
பார்க்கையில் கொள்ளை அழகுதான்
ஆயினும் அது தேக்கிவைத்திருக்கும் குளுமை
அதனினும் மிக அருமையானது
அது பார்வைக்குப் பிடிபடாதது
அந்த சொல்லுக்கு அடங்கா இனிமை
குளத்தினுள்  இறங்கிடத் துணிபவருக்குமட்டுமே
நிறைவாய் கிடைத்திட என்றும் சாத்தியம்

தத்தித் தவழும் குழந்தை
பார்க்கப் பார்க்க  அழகுதான்
ஆயினும் அது தன்னுள் கொண்டிருக்கும்
தெய்வீக மகிழ்வுப் பிரவாகம்
பார்வைக்குப் பிடிபடாதது
அதன் அருமை பெருமை
அதனை அள்ளிக் கொஞ்சத் தெரிந்தவர்கள் மட்டுமே
முழுதாய் அனுபவத் தறியச் சாத்தியம்

சன்னதிக்குள் காட்சிதரும் தெய்வம்
கண்கொள்ளா அருமைக் காட்சிதான்
அதனினும் அதன் அளவிடமுடியா அருட்திறம்
அறிவிற்குப் பிடிபடாததது
நிரூபிக்க இயலாதது
ஆயினும் அதன் அருளும் சக்தி
மாசற்ற நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே
அறிந்து உணர்ந்து பெறச் சாத்தியம்

எழுத்தில் அறிந்த பதிவர்களை
எதிரில் காணுதல் மகிழ்வுதான்
அதனினும் அவர்தம் பண்பு நலம்
நட்புக்கென உயிர்தரும் உயர்குணம்
பதிவில் அறிய முடியாததே
விளக்கியும் புரிய முடியாததே
ஆயினும் அவர்தம் அருமை பெருமைதனை
சந்திப்பில் சந்தித்து  மகிழ்ந்திருப்போர் மட்டுமே
தெளிவாய்  முழுதாய் புரியச் சாத்தியம்

எனவே
பதிவர் அனைவரும் அவசியம் வருவீர்
சந்திப்பின் சக்தியை முழுதாய் உணர்வீர்

Wednesday, April 23, 2014

ஐந்தாண்டுத் தவம் தந்த வரம்

யானை மட்டும் தானா தலையில்
தானே மண்ணைப் போட்டுக் கொள்ளும்-தேர்தல்
நாளில் தவறாய் முடிவு எடுத்தால்
நாமும் போட்டக் கதைதான் அறிவோம்-மூடக்

குரங்கு மட்டும் தானா தானே
ஆப்பை அசைத்து மாட்டித் தவிக்கும்-தேர்தல்
நடக்கும் நாளில் காசைப் பார்த்தால்
நாமும் மாட்டிப் பின்னால் தவிப்போம்-திருட்டுப்

பூனை மட்டும் தானா கண்ணை
மூடிப் பாலைக் குடித்து மாட்டும்-நடக்கும்
தீமை கண்டும் ஊமையாய் இருந்தால்
நாமும் மாட்டிப் பின்னால் துடிப்போம்-செக்கு

மாடு மட்டும் தானா தினமும்
நடந்த வழியே நடந்துச் சாகும்-நாமும்
கூறு கெட்டு இந்த முறையும்
தவறைச் செய்தால் நசிந்துப் போவோம்-நீண்ட

தவமாய் ஐந்து ஆண்டு இருக்க
கிடைக்கும் வரமே நமது வாக்கு-இதை
மறந்து இருக்க வேண்டாம் என்றே
எழுதி வைத்தேன் இந்தப் பாட்டு 

Friday, April 18, 2014

500 வது பதிவு

எனக்கே இது ஐநூறாவது பதிவென நினைவில்லை
பதிவுலக நண்பர்தான் ஃபோன் செய்து
"ஒரு சிறப்புப் பதிவு போடுங்களேன்  "என்றார்

வெகு தூரம் ஓடிவந்த பின் ஒரு சிறு நிழல் கிடைக்க
அதிலமர்ந்து வந்த பாதையைப் பார்ப்பது
ஒரு தனிச் சுகம்தான்.
அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான்
அந்தச் சுகம் அதிகம் புரிபடும்

98  நாடுகளில் 384 தொடர்பவர்களோடு
இரண்டு லட்சத்து முப்பதாயிரம்
 பக்கப் பார்வையாளர்களோடு
ஏறக்குறைய 23000 பின்னூட்டங்களோடு
இந்தப் பதிவுலகப் பயணம் தங்களைப் போன்ற
பதிவர்களின் நல்லாசியுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது

சிறப்பித்துச் சொல்லும்படியாக பதிவுகள் எதுவும்
எழுதவில்லையென்றாலும்
சிறப்பித்துச் சொல்லும்படியான
அதிகமான நண்பர்களைப் பெற்றதும்

ஓய்வு பெற்றப்பின் ஓய்ந்துவிடாமல் படிக்கவும்
மனதில் பட்டதைப் பகிர்வதன் மூலம் என்னைத்
தினமும் புதுப்பித்துக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பும்

தலைமுறை இடைவெளி அதிகப் பட்டுவிடாமல்
அனைவரின் மன நிலைகளை மிகச் சரியாகப்
புரிந்து கொள்ளவும்,இணைந்து கொள்ளும் லாவகமும்

இந்தப் பதிவுலகத் தொடர்பால் எனக்குக் கிடைத்த
அபூர்வ வரம்,அதீத சுகம் என்றால் அது மிகையான
வார்த்தை இல்லை

என் புலம்பலையும் ஒரு பொருட்டாகப் பாராட்டி
என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் எனதருமை
பதிவுலக உறவினர்கள் அனைவருக்கும் எனது
மனமார்ந்த நன்றி

Saturday, February 8, 2014

முக்கா முக்கா மூணுன்னும் சொல்லலாம்

ஆச்சரியத்திலும் ஆச்சரியமாய்
பதிவுலகப் பிதாமகரின் சிறுகதை விமர்சனப்
போட்டியில் மூன்றாவது கதைக்கானப் போட்டியிலும்
எனக்கே முதல் பரிசு கிடைத்துள்ளது என்பதைப்
பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

http://gopu1949.blogspot.in/2014/02/vgk-03-01-03-first-prize-winners.html

விமர்சனம் எழுதியது யார் என நடுவருக்குத்
தெரியாதபடி பெயரை எடுத்துவிட்டுதான்
விமர்சனங்களை அனுப்பிவைப்பதாக
ஏற்கெனவே தனது அறிவிப்பில்
திரு வை, கோ அவர்கள் குறிப்பிட்டிருந்தார்

நமக்கும் இதுவரை நடுவர் யார் எனத் தெரியாது

அந்த வகையில் மிக நேர்மையாக நடத்தப்படுகிற
இந்த சிறுகதை விமர்சனப் போட்டியில்
மூன்றாம் முறையாகக் கிடைத்த முதல் பரிசு
எனக்கு மிகவும் மகிழ்வளிப்பதோடு தொடர்ந்து
விமர்சனமும் எழுதலாம் என்கிற தைரியத்தையும்
தருகிறது

பதிவுலகில் அதிகமாய் இருக்கிற
சிறந்த  எழுத்தாளர்கள் இனியும் ஒதுங்கி இறாமல்
 இப்போட்டியில்பங்கு கொண்டு போட்டியை  மேலும்
சிறப்படையச் செய்யவேணுமாயும்
அதன் மூலம் பதிவர்கள் அனைவரும்
விமர்சனக் கலையிலும் சிறந்து விளங்க
நல்வழிகாட்டுமாறும்அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

இத்துடன் போட்டிச் சிறுகதைக்கான இணைப்பையும்
எனது விமர்சனத்தையும் கீழே தங்கள்
உடனடிப் பார்வைக்காக இணைத்துள்ளேன்

http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html

எனது விமர்சனம்

சுடிதார் வாங்கப் போறேன்

சுடிதார் வாங்கப் போன இந்தக் கதை
எனக்கு மிக அசாதாரணமான ஒரு விஷயத்தை
வேண்டுமென்றே மிகச் சாதாரணமாகச் சொல்லிப்
போனதைப் போலப்பட்டது

ஒருவேளை எனக்குத்தான் இப்படிப்படுகிறதோ
என எனக்குச் சந்தேகம் வந்ததால் என் நண்பனை
ஒருமுறைப்படிக்கச் சொல்லி அவன் கருத்தைச்
சொல்லுமாறு கேட்டேன்

அவனும் எனக்காகப் படித்து" சுடிதார் வாங்கிய
விஷயத்தை விரிவாக எழுதியுள்ளார்.
எழுத்துத் திறமை மிக்க படைப்பாளியாய்
இருப்பதால் நாமும் அவருடன்
இருந்து சுடிதார் வாங்குவதைப் போன்று
உணரவைக்கிறார் "என்றான்

"வேறு எதுவும் தோன்றவில்லையா ?"என்றேன்

"இல்லை " என்றான்

அவன் பதில் எனக்கு ஆச்சரியமளிப்பதாகத்தான் இருந்தது

இந்தக் கதை படிப்பதற்கு முன்னால் இப்படி ஒரு
சூழல் நேர்ந்திருக்குமெனில் "சட்டென உனக்கு
இலக்கிய ரசனை கம்மி என்றோ அல்லது
இன்னும் ஆழமாகப் படித்து பொருள் கொள்ளும்
பக்குவத்தை நீ வளர்த்துக் கொள்ளவேண்டும் "என்றோ
உரிமை கொடுத்த தைரியத்தில் அசட்டுத்தனமாகப்
பேசி இருப்பேன்

இந்தக் கதைப் படித்து நேர்ந்த பாதிப்பில் அப்படிப்
பேசத் தோன்றவில்லை

"மிகச் சரியாகத்தான் சொல்கிறாய் .ஆயினும் இன்னும்
சற்று ஊன்றிப் படித்திருந்தால் இன்றைய வாழ்வில்
நாம் உறவு முறையிலும் நட்பு வகையிலும்
நெருக்கத்தையும் இறுக்கத்தையும் இழந்து வருவதற்கான
உண்மையான காரணம் புரியும் "என்றேன்

அவன் புரிந்து கொள்ள முயல்பவன் போல
ஆர்வத்துடன் என்னைக் கவனிக்கத் துவங்கினான்

நான் தொடர்ந்தேன்
 "ஒரு மூன்று மாமாங்க காலமாக
மிகச் சரியாகச் சொன்னால் திருமணம் ஆனதிலிருந்து
 இன்றுபேரன் பேத்தி எடுக்கிற காலம் வரை
 தன் மனைவியிடம் ஒரு சிறு அங்கீகாரத்தைப்
 பெறுவதற்காக கதை நாயகனிடம்
இருக்கும் பெரும் ஏக்கமும் அதைத் தீர்ப்பத்தற்காக
அவர் செய்து தோற்கும் முயற்சிகளையும்
சேலையை ஒரு குறியீடாகக் கொண்டு மிக மிக
அருமையாக விவரிக்கிறார்.

இத்தனைக்கும் இந்த தம்பதிகள்  இருவரும்
சராசரித் தம்பதிகளைப் போல அல்லாது
ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த அன்பினையும்
 பற்றுதலையும்கொண்ட அருமையான தம்பதிகள்தான்
ஆயினும் ஒருவருக்காக ஒருவர் செய்கிற செயல்களை
அங்கீகரித்துப் பாராட்டும் ஒரு சிறு நற்பழக்கம்
இன்மையால்அவர்களுக்கும் இருக்கும்
அன்னியோன்யம் இருந்தும் வெளிப்படாது
 பூமிக்கடிப் புதையல் போல்
இருப்பதை பூடகமாகச் சொல்லிப் போனது
மிக மிக அருமை

உண்மையில் நம் போன்ற பழைய
 தலைமுறை நபர்களின்பெரிய குறைபாடே
இதுதான்

கதாசிரியர் சேலையையும் சுடிதாரையும்
 மிக மி கஅருமையாக தலைமுறைக்கான
 குறியீடாகக் கொள்வதுதான்
இந்தப் படைப்பின் மிகச் சிறப்பு

மிகச் சரியான சுடிதாரைத் தேடுவதற்கான
அதீத முயற்சிக் கூட அடுத்த தலைமுறையின்
ரசனையை, பண்பை, அவர்கள் வாழ்க்கை முறையை
புரிந்து கொள்வதற்கான முயற்சியும்
தன் தலைமுறை புரிந்து கொண்டு அங்கீகரிக்காத
பாராட்டாத நம் முயற்சியை அடுத்த
 தலைமுறையிடமாவதுபெற்று விட வேண்டும்
என்கிற அதிக ஆவலைச் சுட்டிக்காட்டத்தான்
கதாசிரியர்  அந்தப் பகுதியில்
அதிக கவனம் கொண்டிருக்கிறார் என்பதை
கொஞ்சம் கருத்துடன் படித்தால் புரியும்

நம் தலைமுறையைச் சேர்ந்த
கணவன் மனைவி இருவரும் இருபத்தி நான்கு
 மணி நேரமும்தொட்டுக் கொள்ளும் படியான
நெருக்கத்தில் இருந்தும்
மனதளவில் வெகு தூரம் விலகி இருப்பதும்

படிப்பு பணிச் சூழல் காரணமாக இந்தத் தலைமுறையினர்
இடத்தால் வெகு தூரம் விலகி இருந்தாலும்
மனத் தளவில் மிக நெருக்கமாக இருப்பதுவும்

கஞ்சத்தனமின்றி பாராட்ட வேண்டிய விஷயங்களை
காலம் தாழ்த்தாது மிகச் சிறப்பாக எப்படிப்
 பாராட்டவேண்டுமோ அப்படிப் பாராட்டி
 உரியவர்களை மகிழ்விப்பதோடு அல்லாமல்
தானும் மகிழ்ச்சி கொள்வதும்

இப்படி மூன்றாம் பகுதியில் மிக அருமையாகச்
சொல்லிப்போன விஷயங்களையெல்லாம் நான்
ஒவ்வொன்றாக விளக்கினால் அதிக நேரமாகும் "
என நான் சொல்லி முடிப்பதற்குள் என் நண்பனே
சட்டென என் கையைப் பிடித்து இப்படிச் சொன்னான்

"போதும் போதும்.எனக்கு உண்மையில் இதுவரை
குறியீடுகளைப் புரிந்து கொள்ளுகிற
 பக்குவம் மட்டும் அல்ல
புரியச் சொல்லுகிற விஷயத்தைத் தாண்டி
நாமாகவே புரிந்து தெளியட்டும் என விட்டுச் செல்லும்
விஷயங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை

இப்போது நீ சொன்ன விஷயங்களை உள்வாங்கி
இன்னொரு தடவை இந்தக் கதையைப் படித்து
மிகச் சரியாக விமர்சனம் செய்கிறேன் "
என்றான் நம்பிக்கையுடன்

எனக்கும் அவன் நிச்சயம் இனி கதைகளை
புரிந்து படிக்கத் துவங்குவான் மிகச் சரியாகவும்
விமர்சிப்பான் என்கிற நம்பிக்கை எனக்குள்ளும்
துளிர்விடத் துவங்கியது

விமர்சனம் என்பது படைப்பை உதறிக்
காயப்போடுவதும், அலசி உலற வைப்பது
மட்டும் அல்ல

அது வாசகனின் ரசனைத் தன்மையை
உயர்த்துவதும் நல்ல படைப்புகளைத் தேடும்படி
அவனை ஆற்றுப்படுத்துவதும் தான் என்பதை
நிச்சயம் அவன் புரிந்து கொண்டுவிட்டான்
என்றேப் படுகிறது எனக்கு

 உங்களுக்கு ?

Monday, December 23, 2013

இன்றுபோல் என்றும் வாழ்க

ஒரறிவு  உயிரினங்கள் முதல்
ஆறறிவு மனிதர்வரை
அனைத்தையும்
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும்
காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விடத்  திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
எங்கள் தங்கமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும்
மர்மயோகியாய்  இருப்பினும்
நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை
இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்தி  பெருமிதம் கொள்வோம்

Sunday, December 15, 2013

தலை நகரப் பதிவரே/தலையாயப் பதிவரே

சிறந்ததை மட்டுமே செய்தாலும்
அதனைச் செய்வதற்குரிய
முழுத் திறன்பெற்றுச் செய்தாலும்
செய்வதனைத் தொய்வின்றித்
தொடர்ச்சியாகச் செய்தாலும்
சுவாரஸ்யமாகச் செய்தாலும்
அதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியாகவும்
தொடர்ந்து முன்னணியில் இருக்கும்படியாகவும்
செய்வதென்பது எத்துறையிலும் எவர்க்கும்
என்றும் நிச்சயம் சாத்தியமில்லை

மிக நிச்சயமாக பதிவுலகில் அது சாத்தியமே இல்லை

அது எப்படியோ  நமது தலைநகரப் பதிவரே
பதிவுலகின் தலையாயப் பதிவரே
உங்களுக்கு மட்டும் அது சாத்தியமாகி இருக்கிறது

செப்டம்பர் 2009 இல் குரங்கு நீர் வீழ்ச்சியில்
நண்பர் நடராஜனுடனான அனுபவத்தை
நகைச்சுவைத் ததும்ப தலைக் காவிரிபோல்
சொல்லத் துவங்கி இன்று அகண்ட காவிரியாய்
சிவப்பு  அனுமாரில் தொடர்ந்து கொண்டிருக்கும்
நேர்த்திஎம்மில் ஏற்படுத்திப் போகும் பிரமிப்பும்

சந்தித்ததும் சிந்தித்ததும் என்கிற தலைப்பிற்கு ஏற்ப
அன்றாட நினைவுகள் குறித்த ஆழமான சிந்தனையை
அழுத்தமாகவும் அதே சமயம எவர் மனமும்
புண்படாமல்  சொல்லிப்போகும் பக்குவமும்

பயணப்படும் இடங்களிலெல்லாம் பதிவர்களை
மனதில் கொண்டு அனைத்துத் தகவல்களையும்
சேகரித்து அருமையாகக்  கொடுப்பதோடு
அற்புதமான புகைப்படங்களையும் பகிர்ந்து
 பதிவர்களுக்கும்உங்களுடன் பயணிப்பதைப் போன்ற
மனத் திருப்தியை ஏற்படுத்திப்போகும் திறனும்

பதிவர்கள் சந்திப்பு எனில் (குடும்பத்தில் அனைவரும்
பதிவர்கள் என்பதால்)குடும்பத்தோடு
கலந்து கொள்வதோடு மட்டுமல்லாது
அதில் குடும்ப விழாவில் கலந்துகொள்வதுபோல்
மனமகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு
அது குறித்தப் பதிவில்அனைவரின்
 புகைப்படங்களையும் பெயரோடு வெளியிட்டுச்
 சிறப்புச் செய்த பாங்கும்---

எம்மில் ஏற்படுத்திப் போகும் மதிப்பு.பிரமிப்பு----

தமிழ்மண தரவரிசைப்பட்டியலில்
 5 ஆவதாகத் தொடர்வதை விட

300 ஐ நெருங்கிய பின்தொடர்பவர்களைக்
கொண்டிருப்பதைவிட

2 இலட்சத்தை நெருங்கும் பக்கப் பார்வையாளர்களைக்
கொண்டதை விட

600 தரமான பதிவுகள் தந்தப்
பிரமிப்பை விட

கூடுதலானது எனச் சொன்னால்
நிச்சயம் அது மிகைப்படுத்தப்பட்டதல்ல

இந்தப் பதிவில் நான் தங்கள் பெயரைக் குறிப்பிடவேண்டிய
அவசியமே இல்லை
(அது சூரியனை லைட் அடித்து காண்பிப்பது போலாகிவிடும் )

ஏனெனில்
இத்தனை சாதனைகளுக்குச் சொந்தக்காரர்
தமிழ்ப் பதிவுலகில் உங்களையன்றி
வேறு யாருமில்லை என்பதை பதிவர்கள் அனைவரும்
அறிந்ததுதானே ?

தங்கள் சாதனைகள் தொடர பதிவர்கள்
அனைவரின் சார்பாக நல்வாழ்த்துக்கள்