Saturday, January 16, 2021

இன்று போல் என்றும் வாழ்க

 ஒரறிவு  உயிரினங்கள் முதல்

ஆறறிவு மனிதர்வரை
அனைத்தையும்
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும்
காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விடத்  திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
எங்கள் தங்கமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும்
மர்மயோகியாய்  இருப்பினும்
நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை
இந்த நாளில் நன்றியோடு நினைந்து மகிழ்வோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்தி  பெருமிதம் கொள்வோம்

Wednesday, January 13, 2021

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

 விதைத்த  ஒன்றை

நூறாய் ஆயிரமாய்
பெருக்கித் தரும்
பூமித் தாய்க்கு
நன்றி சொல்லும் நாளிது

எதிர்பார்ப்பு ஏதுமின்றி
உடனுழைத்து
நம் உயிர்  வளர்க்க உதவும்
விலங்கினங்களுக்கு
நன்றி சொல்லும் நாளிது

இணைந்து இயைந்து
 இருப்பதாலேயே
வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும்
உறவுகளுக்கு
நன்றி சொல்லும் நாளிது

அனைத்து இயக்கங்களுக்கும்
 மூல காரணமாகி
உலகைக் காக்கும்
கதிரவனுக்கு
நன்றி சொல்லும் நாளிது

நம்மிருப்புக்குக்  காரணமான
அனைத்திற்கும்
நன்றிசொல்வதன் மூலமே
மனிதராக  நம்மை நாம்
நிலை நிறுத்திக் கொள்ளும் நாளிது

அற்ப எல்லைகள்   கடந்து
நன்றியுடமையின்  பெருமை  சாற்றும்
 தமிழர் திரு நாளிதன்
உட்பொருள் அறிந்து  மகிழ்வோம்
அதன் உன்னதம் காத்து உயர்வோம்

( அனைவருக்கும்
பொங்கல்  திரு நாள்
நல்வாழ்த்துக்கள்  )

Tuesday, January 12, 2021

படித்ததும் பகிரப் பிடித்தது..

 தமிழகத்தில் இறந்து

கொண்டிருக்கும் நதிகளில்

ஒன்று வைகை. அது பாதி

செத்துவிட்டது. 


மதுரையில்

மனிதர்களைவிட அதிகம் கொலை

செய்யப்பட்டது வைகையாகத்தான்

இருக்கும். ஆற்றின் பல இடங்களில்

மலக் கழிவு கால்வாய்கள்

புதைக்கப்பட்டிருக் கின்றன. சகஜமாகக்

கலக்கின்றன சாக்கடைகள்.

சலனமின்றி கடந்து போகிறார்கள்

மனிதர்கள். மனசாட்சி என்பதே

இல்லாமல் போய்விட்டது.


எப்படி இருந்த நதி தெரியுமா

வைகை? 


ஒருகாலத்தில் வாழ்வாங்கு

வாழ்ந்தது வைகை நதி.

பாண்டியர்களின் செல்லப்

பிள்ளை அது. வருசநாட்டிலிருந்து

ராமநாதபுரம் வரை ஒரு

இளவரசியைப்போல வலம் வந்தது வைகை.


பாண்டியர்கள் வைகையை மடியில் வைத்து

தாலாட்டினார்கள். ஏரிகள்,

கண்மாய்கள் என்னும்

தொட்டிலில் வைத்து

சீராட்டினார்கள். அகமகிழ்ந்து

வாரி வழங்கியது வைகை.

வைகையை கடலில் புகாத நதி

என்பார்கள். உவமானத்துக்கு

சொன்னா லும் உண்மையும்

இருக்கிறது. இப் போதும் வைகையின் நீர்

நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை

வெள்ளங் களின்போது மட்டுமே

கடலில் கலக்கிறது. 


காரணம்,

பாண்டியர்களின் நீர் மேலாண்மை. நீரை

வீணாக்கக் கூடாது என்பதில்

அவர்கள் கவனமாக இருந்தார்

கள். 


பாண்டியர்கள் காலத்தில் வைகை

யில் சுமார் 3000 சங்கிலித்

தொடர் ஏரிகள்,

கண்மாய்கள் அமைக்கப்பட்டன. அந்த

நீர் நிலைகள் அத்தனையும் வைகையின் நீரை

உள்வாங்கிக்கொண்டன.


இதனால், கடலுக்கு வைகையின் நீர் மிகக்

குறை வான அளவே சென்றது.


இதை வைத்து ஒருமுறை ஒட்டக்கூத் தருக்கும்

புகழேந்திப் புலவருக்கும் பாட்டுப் போட்டி

நடந்தது. 

அப்போது ஓட்டக்கூத்தர்,

“நாரியிடப் பாகருக்கு நஞ்சளித்த

பாவியென்று

வாரியிடம் புகுதாத வைகையே” என்று

பாடினார்.


அதாவது, உமையை இடப்பக்கமாகக்

கொண்ட

சிவபெருமானுக்கு பாற்கடல்

நஞ்சை கொடுத்ததால் நான்

கடலுக்கு புகமாட்டேன் என்று

மறுத்துவிட்டதாம் வைகை.

இதற்கு எதிர்ப்பாட்டு பாடினார்

புகழேந்திப் புலவர்.


“வாரி இடத்தும் புறத்தும் இருகரையும்

பாய்ந்து

நடத்தும் தமிழ் பாண்டிய நாடு”

என்றார் அவர். 

முன்னவர் புராண

ரீதியாக காரணம்

சொன்னார் எனில்

பின்னவர் புவியியல் ரீதியாக

காரணத்தை விளக்கினார். 


வைகை தனது

தண்ணீரை இரு கரைகளிலும் வாரி வாரி

(வாய்க்கால்கள் வழியாக)

வழங்கிவிட்டதால் கடலுக்கு

செல்ல நீர் இல்லை என்கிறார்.


வைகை நதி மேற்குத் தொடர்ச்சி மலை

யின் கிழக்குப் பகுதியிலுள்ள வருசநாடு

- ஆண்டிபட்டி மலைத் தொடரின்

உயரமான மேகமலைப் பகுதியில்

உற்பத்தியாகிறது. வனத்துக்குள்ளேயே

வைகையுடன் மேல் மணலாறு,

இரவங்கலாறு இணைந்

துக்கொள்கின்றன.


சதுரமலையிலிருந்து வரும் மூங்கிலாறு

வருச நாட்டில் இணை கிறது. கம்பம்

பள்ளத்தாக்கிலிருந்து வரும்

முல்லையாறு, தேனிக்கும்

ஆண்டிப்பட்டிக்கும் இடையே இணைந்து வைகை

அணையை அடைகிறது. கூடலூருக்கு மேற்கே

கலிக்கவையாறு, சுருளி மலையிலிருந்து

சுருளியாறு, சுருளிப்பட்டிக்கு வடக்கில்

கூத்தநாச்சி வாய்க்கால்,

காமயக்கவுண் டன்பட்டிக்கும்

அணைப்பட்டிக்கும் இடையே வறட்டாறு

என்கிற தேனியாறு மற்றும் சில ஓடைகள்

வைகையுடன் இணைகின்றன. வைகை அணைக்கு

கிழக்கிலும் ஓடைகள் வைகையுடன்

இணைகின்றன. பழனி மலையின் மேற்கில்

உற்பத்தியாகும் சோற்றுப்பாறை ஆறு,

பாம்பாறு ஆகியவை வராக

நதியுடன் கலந்து வைகையுடன்

இணைகின்றன. 


இதற்கு கீழே

மஞ்சலாறு, மருதா நதி ஆகியவை

வைகையின் வடகரையில் இணைகின்றன.

இதுவரை மலைப் பள்ளதாக்குகளில் ஓடி

வரும் வைகை, அணைக்கரைப்பட்டியில்

சமதளத்தை அடைகிறது. பின்பு மதுரை அருகே

சாத்தையாறு ஓடையும், மானாமதுரை

அருகே உப்போடையும் வைகையுடன்

கலக்கின்றன. 


இத்தனை நதிகள்

இணைந்ததால் கடல் போல

பொங்கி ஓடியது வைகை. அது ஒரு

காலம்.

அதேசமயம் வடகிழக்கு பருவ மழையை

மட்டுமே நம்பியிருந்தது வைகை.


ஆற்றில்

எப்போதும் தண்ணீர் ஓடும் என்று

சொல்ல முடியாது. சுமார்

2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த

உண்மையை உணர்ந்த பாண்டியர்கள்

ஆற்றில் தண்ணீர் ஓடும்போது அதனை

முழுமையாக ஏரிகளில் சேமித்துக்

கொண்டார்கள். 


வைகையின்

இந்த நீரியல் ஓட்டத்தை அவர்கள்

நன்றாக புரிந்து வைத்திருந்தார்கள்.

குறிப்பிட்ட ஆண்டில் வைகையில் நிச்சயம்

நீர்ப்பாயும் என்று தெரிந்தால்

குறிப்பிட்ட ஏரிகள் நிரம்பும் வகையில்

ஆற்றிலிருந்து நேரடி கால்வாய்கள்

வெட்டினார்கள்.

வெள்ளக்காலங்களில் அந்தக்

கால்வாய்கள் திறக்கப்பட்டன.


நீர்வரத்து குறைவான காலங்களில்

ஆற்றின் குறுக்கே சாய்வாக மரம்,

தழை, மண் கொண்டு

தற்காலிக கொரம்புகளை

அமைத்தார்கள். சில இடங்களில்

பாறைகள் கொண்டு சிறு

அணைகளை அமைத்தனர்.


நாஞ்சில் நாட்டில் பறலையாற்றையும்

பழையாற்றையும் இணைத்ததுபோல வைகையில்

கால்வாய் வெட்டி அருகிலுள்ள

கீழ்குண்டாறு, சருகுணி ஆறு

ஆகியவற்றுடன் வைகையை

இணைத்தார்கள். வைகையின் வடிநிலப்

பகுதியும் அதனை அடுத்துள்ள

குண்டாறு, சருகணியாறு வடிநிலப்

பகுதியையும் பிரிக்கும் பகுதி வைகையின்

தளத்தைவிட மிகக் குறைந்த அளவே உயரம்

கொண்டது. 


அதேசமயம்

வைகையின் வடிநிலம் குறுகலானது. இந்த

புவியியல் பொறியியல்

உண்மையை புரிந்துகொண்ட

பாண்டியர்கள், வைகையின் நீரியல்

ஓட்டத்துக்கு ஏற்ற பொறியியல்

நுட்பங்களுடன் வைகையிலிருந்து

கால்வாய்களை அமைத்தார்கள்.

பாண்டிய மன்னன் செழியன்

சேந்தனால் (கி.பி.620 - 650) வைகையில்

மதகு மற்றும் அரிகேசரி கால்வாய்

வெட்டப்பட்டது. சோழவந்தான்

தென் கரை கண்மாயை

உருவாக்கியதும் செழின்

சேந்தன்தான். குருவித்துறை, நாகமலை

புதுக்கோட்டை, மாடக்குளம், நிலையூர்,

கூத்தியார்குண்டு, உறப்பனூர்

உள்ளிட்ட பகுதிகளில்

வாய்க்கால்களை வெட்டி

கண்மாய்களை நிரப்பினார்கள். 


சுட்ட

செங்கற்களால் ஏரியின் மதகை

வடிவமைத்தார்கள். நீர் கசியாதபடி

மண்ணுடன் தாவர பிசின் உள்ளிட்ட

சில பொருட்களை சேர்த்து

‘அரைமண்ணை’ பயன்படுத்தி ஏரிக் கரைகளை

அமைத்தார்கள்.


இன்று ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய

ஊர்களில் கண்மாய்கள் காய்ந்துக்

கிடக்கின்றன. தமிழகமே

வெள்ளக்காடாக மிதந்தபோதும்

அந்தக் கண்மாய்களில் துளி

தண்ணீர் வந்து சேரவில்லை.


விவசாயம்

பொய்த்துவிட்டது. கண்ணீர்

வடிக்கிறார்கள் விவசாயிகள்.

காரணம், வைகை ஆற்றில் நமது நவீன

பொறியாளர்கள் கட்டிய

கால்வாய்கள். 


பாண்டியர்களுக்கு

தெரிந்திருந்த வைகையின் நீரியல்

தொழில்நுட்பம்,

பொறியியல் படித்த

பொறியாளர்களுக்கு

தெரியாமல் போனதுதான் வேதனை.

😣😣😣😣😣


*படித்தேன் பகிர்ந்தேன்*💐💐💐💐💐💐

Sunday, January 10, 2021

படித்ததும் பகிரப் பிடித்தது சிதிலமடைந்த வீடு, இரண்டாவது திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறிய தந்தை, மனநிலை பிறழ்ந்த தாய், தன்னுடைய நிழலில் வளரும் இளைய சகோதரன் என்ற குடும்பப் பின்னணியில் ஒரு பள்ளி மாணவியின் முன்னேற்றம் என்னவாக இருக்கும்?

இதற்கான நிகழ்கால உதாரணம் புதுக்கோட்டை அருகே ஆதனங்கோட்டையைச் சேர்ந்த 16 வயது மாணவி ஜெயலட்சுமி.

வறுமையான, ஆதரவற்ற குடும்பச் சூழலில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, சர்வதேசத் தேர்வில் கலந்துகொண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செல்லக் கடந்த ஆண்டு தேர்வானவர் ஜெயலட்சுமி.

இவரின் சாதனைகள் குறித்து நம்மில் சிலர் அறிந்திருக்கலாம். ஆனால், அவரின் கடின உழைப்பும் தைரியமும் மனிதநேயமும் பலர் அறியாதவை.

வீட்டில் சமையல் உட்பட அனைத்து வேலைகளையும் செய்துகொண்டு, சிறப்பாகப் படிப்பதுடன் மாலை நேரத்தில் கூலி வேலைக்குச் சென்று ஒற்றை ஆளாய்த் தன் குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார் ஜெயலட்சுமி.

தினந்தோறும் ஓய்வே இல்லாமல் வீட்டு வேலை, படிப்பு, கூலி வேலை என்பது சிரமத்தை அளிக்கவில்லையா என்று கேட்டதற்கு, அது ஒன்றும் பிரச்சினை இல்லைங்க. பாத்துக்கலாம் என்று புன்னகைக்கும் ஜெயலட்சுமி, தொடர்ந்து பேசுகிறார்.

''ஸ்கூல் முடிச்சிட்டு தினமும் சாயந்தரம் முந்திரிப் பருப்பு உறிக்கப் போவேன். நாம செய்யற வேலைக்கு ஏத்த மாதிரி சம்பளம் கிடைக்கும். அதை வச்சு செலவுகளைச் சமாளிச்சுக்குவோம். ஊரடங்கு காலத்துலயும் வேலைக்குப் போய்க்கிட்டுதான் இருக்கேன்.

சின்ன வயசுல இருந்து நல்லாப் படிப்பேன். இப்போ ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளில 12-வது படிக்கறேன். அடிப்படையில் நான் கேரம் ப்ளேயர். ஒருநாள் விளையாடிட்டு இருந்தப்போ மழைத்தண்ணில ஒரு பேப்பர் கெடந்துச்சு. அதை எடுத்துப் பாத்தப்போ ராக்கெட் படம் போட்ருந்துச்சு. எக்ஸாம் எழுதி நாசா போன மாணவி ஒருத்தர் பத்தின செய்தி அது.

சரி, நாமும் ஏன் முயற்சி பண்ணிப் பாக்கக் கூடாதுன்னு நினைச்சு ஸ்கூல்ல கேட்டேன். அவங்க வழிகாட்டல்படி ஸ்பேஸ் பத்தி நிறையப் படிச்சு தேர்வு எழுதினேன். கம்ப்யூட்டர் சென்டர் போய் பணம் கட்டி தேர்வு எழுத வசதியில்ல. சித்தப்பா போனை வாங்கி அதுலயே எழுதினேன். ஆங்கில வழில தனியார் நிறுவனம் நடத்தின தேர்வுல 4 ஆயிரம் பேர்ல ஒருத்தியா தேர்வானேன்.

போன வருஷம் இது நடந்துச்சு. நாசா போய்ட்டு வர ரூ.1.69 லட்சம் தேவைப்பட்டுச்சு. விஷயம் கேள்விப்பட்டு நிறையப் பேரு உதவி செஞ்சாங்க. போதுமான பணம் கிடைச்சதுக்கப்புறம் கிராமாலயா தொண்டு நிறுவனத்துல இருந்து என்னைக் கூப்பிட்டுப் பேசினாங்க. உனக்கு எதாவது செய்யணுமேம்மா அப்படின்னு சொன்னாங்க. தேவையான உதவி கிடைச்சுருச்சுங்கன்னு சொன்னேன். வேற எதாவது செய்ய ஆசைப்படறோம்.. வீடு கட்டித் தரவா, டாய்லெட் வேணுமான்னு கேட்டாங்க'' என்கிறார் ஜெயலட்சுமி.

அதற்கு ஜெயலட்சுமி சொன்ன பதில் யாருமே எதிர்பார்க்காத ஒன்று. தனக்கு மட்டும் கழிப்பறை கட்டித் தருவதற்குப் பதில், ஊருக்கே கட்டித் தர முடியுமா என்று தயக்கத்துடன் கேட்க, அதிசயித்த தொண்டு நிறுவனம், உடனே சம்மதித்தது.

கிராமாலயா நிறுவனர் தாமோதரன் மேற்பார்வையில் ஆதனங்கோட்டையில் ஜெயலட்சுமி குடியிருக்கும் திருவள்ளுவர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 126 வீடுகளில் தலா ரூ.20 ஆயிரம் செலவில் 126 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு ஆன செலவு சுமார் ரூ.26 லட்சம். தனிக்கழிப்பறை, குளியலறையுடன் சேர்ந்த கழிப்பறை எனத் தேவைக்கேற்ற வகையில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஜெயலட்சுமி மேலும் கூறும்போது, ''முன்னாடிலாம் நான் டாய்லெட் போகணும்னா 2 கி.மீ. தூரம் நடக்கணும். போற வழில டாஸ்மாக், மெயின் ரோடு எல்லாம் இருக்கும். ஒரு பொண்ணா இதனால நிறையக் கஷ்டப்பட்டிருக்கேன். நம்மளை மாதிரிதானே அடுத்தவங்களும் கஷ்டப்படுவாங்க அப்படின்னு நெனைச்சுக் கேட்டேன். கிராமாலயாவும் அதைப் புரிஞ்சுக்கிட்டு 126 வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுத்தாங்க.

கரோனா பிரச்சினையால நாசா போறது தள்ளிப் போயிருக்கு. இந்த வருஷம் கூட்டிட்டுப் போறதா சொல்லி இருக்காங்க. அம்மாவுக்கு இப்போ சிகிச்சை கொடுத்துட்டு இருக்கோம். சீக்கிரம் நல்லபடியாக ஆகிடுவாங்கன்னு நம்பறேன். சட்டம் படிச்சு முடிச்சுட்டு ஐஏஎஸ் ஆகணும்னு ஆசை. எதிர்காலத்தில் அதை நடத்திக் காட்டுவேன்'' என்று தன்னம்பிக்கையுடன் பேசினார் ஜெயலட்சுமி என்று 'தி இந்து தமிழ்' நாளிதழ் பதிவு செய்துள்ளது...