Sunday, October 22, 2017

GST யை மெர்சலாக்குவோமா

வரிவிதிப்பு முறையை பயன்படுத்தி GST வரம்புக்குள் உட்படாத நிறுவனங்களும் அவர்களது ரசீதில் CGST, SGST என்று வரி விதிப்பதாக சொல்லப்படுகிறது.
இதை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும்.

அந்த நிறுவனங்கள் வரி வாங்க அனுமதி உள்ளதா என்பதை கண்டறிய 1 நிமிடம் மட்டுமே போதுமானது.

முதலில் அவர்கள் கொடுக்கும் ரசீதில் GSTIN எண் அச்சிடப்பட்டுள்ளதா என்று பாருங்கள். இல்லையென்றால் நீங்கள் வரிசெலுத்த தேவையில்லை. அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் பொருள்.

GSTIN எண் இருந்தும் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், அதுவும் 1 நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம்.
www.gst.gov.in என்ற இணையதளத்தில் "Search Tax Payer" என்பதை க்ளிக் செய்தால் GSTIN எண் கேட்கும் அதில் உங்கள் ரசீதில் உள்ள எண்ணை பதிவிடுங்கள். பதிவிட்ட உடனே கீழ்வரும் தகவல்கள் தெரியும்:

நிறுவனத்தின் பதிவு பெயர்.
மாநிலம்
பதிவு தேதி
நிறுவனத்தின்
வரி செலுத்தும் வகை
GST பதிவின் நிலை

என அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

அப்படி அந்த எண் இந்த தகவலில் ஒத்துப்போகவில்லை என்றால் நீங்கள் வரி செதுத்த தேவையில்லை. அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை புரிந்துகொண்டு புகார் அளிக்கவேண்டும்.

14404 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.

மேலும் core.nic.in என்ற இணையதள முகவரியில் உங்கள் குறைகளையும், குற்றச்சாட்டுகளையும் பதிவிடலாம்.

நிறுவனம் ஏமாற்றுகிறது என்றால் இந்த அளவிற்கு நீங்கள் செல்ல தேவையே இருக்காது. மொபைல எடுத்து இருங்க இந்த நம்பர் இருக்கா இல்லையானு பாக்குறேன்னு சும்மா டைப் பண்ணாலேயே அவர்கள் பயந்து வழிக்கு வந்துவிடுவார்கள்.

இது போன்ற தவறுகளை களைய மக்களுக்கும் அதிகாரம் இருக்கிறது. அதை நாம் தான் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

முக்கியமா இந்த ஹோட்டல், தண்ணீர் கேன் விநியோகம், பலசரக்கு கடை, ஜவுளி கடை, எலக்ட்ரிக்கல்ஸ், ஹார்டுவேர் கடை இதெல்லாம் கவனிக்க வேண்டிய இடங்கள்...

மக்களே உஷார்...
அதை பயன்படுத்தி சில வியாபாரிகளும் அப்பாவி மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். அதை அனுதிக்கக்கூடாது.

Thursday, October 19, 2017

நரகாசுரன்

" கோடிக்கணக்கில் குடித்துக் குடித்து உடலைக் கெடுத்துத் தொலைத்து  கோடிக்கணக்கில் வெடித்து வெடித்து சுற்றுச் சூழலைக் கெடுத்துத் தொலைத்து..ம்ம் இவர்களது சந்தோஷமும் கொண்டாட்டமும் இப்படித்தான் இருக்குமெனத் தெரிந்திருந்தால் சத்தியமாய் நாராயணா  என் மரணத்தைக் கொண்டாடும்படியான வரத்தை கேட்டே இருக்க மாட்டேன் "என  அலுத்துக் கொண்டான் நம் நகர வாசிகளின் கொண்டாட்டம் கண்ட நரகாசுரன்

Monday, October 16, 2017

முக நூல் சாரம்

எது பதியப்பட்டதோ அது நன்றாகவே பதியப்பட்டது
எது பதியப்படுகிறதோ அது நன்றாகவே பதியப்படுகிறது
எது பதியப்பட இருக்கிறதோ அதுவும் நன்றாகவே பதியப்படும்
உன்னுடையது என நீ எதைப் பதிந்தாய் ?
எதற்காக நீ பெருமிதம் கொள்கிறாய் ?
நீயாக எதைப் பதிந்தாய் பேரானந்தம் கொள்வதற்கு ?
நீயாக எதைக் கொடுத்தாய் பேருவகை கொள்வதற்கு ?
நீ எதைப் பதிந்தாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்ப்பட்டது
நீ எதைப் பகிர்ந்தாயோ
அதுவும் இதிலிருந்தே பகிரப்பபட்டது
எது இன்று உன்னுடையதோ அது
நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடையாதாகும்
இதுவே முக நூல் நியதியும்
முக நூலின் சாரமுமாகும்

முக நூல் பகவான்

( இடையிடையே கூட ஏதேனும் ஒன்றிரண்டு கூட
சுயமாக எழுதாது வெட்டி ஒட்டுதலை மட்டும்
செய்து கொண்டிருப்பவர்களுக்காக )

Thursday, October 12, 2017

காலச் சூழல்

காலச் சூழல்
தலை கீழ் மாற்றம் கொண்டுள்ளது
ஆயினும்
எமது தேர்வுகளில் விருப்பங்களில்
எவ்வித மாற்றமுமில்லை

கலப்படத்தால்
முன்பு
அரிசியில் கல்லைப் பொறுக்குவது
மிக எளிதாயிருந்தது

இப்போது
கல்லில் அரிசி பொறுக்குவதே
மிக எளிதாயிருக்கிறது

ஆயினும் எம் தேவை
அரிசி என்பதில்
எவ்வித மாற்றமுமில்லை

நல்லவைகளில்
முன்பு
தீயவைகளை ஒதுக்குவது
மிக எளிதாய் இருந்தது

இப்போது
தீயவைகளில் நல்லதை எடுப்பதே
மிக எளிதாய் இருக்கிறது

ஆயினும் எம் தேவை
நல்லவையே என்பதில்
எவ்விதக் குழப்பமுமில்லை

ஆம்
எம் விருப்பங்களில் தேர்வுகளில்
எவ்வித மாற்றமுமில்லை என்பதால்

காலச் சூழல்
எப்படித்தான் மாறினும்
எம்முள் எவ்வித மாற்றமுமில்லைWednesday, October 4, 2017

ஜோதிடத்தை நம்புபவர்களுக்கும்/ நம்பாதவர்களுக்கும்/

எனக்குக்  கொஞ்சம் ஜோதிடம் தெரியும்
ஜாதகம் எழுதும் அளவுக்கு ஜோதிட
அறிவும் கொஞ்சம் உண்டு

கடந்த ஆண்டு ஏடு பார்ப்பவர்கள் குறித்து
தெரிந்து கொள்ளலாமே என
என் பகுதியில் இருந்த ஏடு ஜோசியரைப்
பார்க்கப் போனேன்

ஒரு வகையில் பரிசோதிக்கும் நோக்கத்தோடு
என்று கூடச் சொல்லலாம்

அவர்கள் வழக்கம்போல ஒவ்வொரு ஏடாக
எடுத்துப் போட்டு பெயருக்கு ஒரு குறிப்பினைக்
கேட்கக் கேட்க நானாக ஒரு வார்த்தையும்
கூடுதல் குறைவாகச் சொல்லிவிடாது
இல்லை/ஆம் என்பது போல மட்டும்
சொல்லி வந்தேன்

என் மூலம் அவர்கள் எதையாவது தெரிந்துகொண்டு
அதன் மூலம் மிகச் சரியாகச் சொல்லுகிறார்போல
ஆகிவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக
இருந்தேன்

மூன்று நான்கு கட்டுக்கள் முடிந்து அடுத்து
ஒரு கட்டு எடுத்தவர்,"

உங்கள் பெயர்
இரண்டு தெய்வங்கள் குறிக்கும் பெயரா ? "
என்றார்

அது அப்படித்தான் என்பதால் "ஆம்" என்றேன்

"ஒன்று வைணவம் சார்ந்து ஒன்று
சைவம் சார்ந்ததா?" என்றார்

அதுவும் அப்படித்தான் என்பதால்
"ஆம் " என்றேன்

அவ்வளவுதான். அதற்கு மேல் என்னிடம்
எதுவும் கேட்கவில்லை

மடமடவென என்பெயர் என் மனைவி பெயர்
என் தாயார் பெயர் என வரிசையாக
மிகச் சரியாக அந்த ஏட்டைப்பார்த்துச்
சொல்ல ஆரம்பித்து விட்டார்

நான் பிரமித்து விட்டேன்

இது எப்படிச் சாத்தியம் என இதுவரை
விளங்கவில்லை

இது கூடப் பரவாயில்லை

என் கட்டை விரல் ரேகையைப் பதிவு
செய்துவிட்டு "இரண்டு நாட்கள் கழித்து
வாருங்கள் உங்கள் ஜாதகம் கணித்துத்
தருகிறேன் " என்றார்

மிகச் சரியாக இரண்டு நாள் கழித்துச் செல்ல
என் ஜாதகக் கட்டம் பிறந்த தேதி அனைத்தையும்
மிகச் சரியாக கணித்து வைத்திருந்தார்

சுயமாக எழுவதானாலும், கம்பியூட்டர்
ஜாதகமாயினும் பிறந்த ஊர், வருடம்,
தேதி, நேரம்மிகச் சரியாகத் தெரியாமல்
மிகத் துல்லியமாய் லக்கின ஜாதகம்
எழுதச் சாத்தியமே இல்லை


இவர்கள் எப்படி ரேகையை வைத்தும்
ஏடைவைத்தும் மிகத் துல்லியமாகக்
கணிக்கிறார்கள்

இது இன்றுவரை எனக்கு மிகக்
குழப்பமான விஷயமாகவே இருக்கிறது

நம்புபவர்கள் அது குறித்தும்
நம்பாதவர்கள் அதில் உள்ள சூட்சுமங்கள்
குறித்தும் எழுதினால் மகிழ்வேன்

இத்துடன் உங்கள் பார்வைக்காக என்னுடைய
கம்பியூட்டர் ஜாதக நகலையும்
இவர்கள் கொடுத்த குறிப்பினையும்
இணைத்துள்ளேன்


Monday, October 2, 2017

இதுவும் விக்ரம் வேதாதான்
"நிஜம் போல் ஒரு கதை சொல்லட்டுமா என்றான்"
விக்ரம்

"சொல் " என்றான் வேதா

விக்ரம் தொடர்ந்தான்

"அரசுத் துறையில் சுற்றுச் சூழல் பாதுகாப்புத்
திட்டத்தின் கீழ் ஐயாயிரம் மரக்கன்று
நடத் திட்டமிட்டார்கள்

அவசர அவசியம் கருதி குழி பறித்தல்,
மரக்கன்று ஊன்றுதல் ,குழியை மூடுதல் ஆகிய
மூன்று வேலைகளையும் ஒருவரிடமே கொடுத்தால்
காலதாமதம் ஆகும் எனக் கருதி
மூன்று வேலைகளைத் தனித்தனியாக
ஒவ்வொருவரிடமும் பிரித்துக் கொடுத்தார்கள்

குழி தோண்டுபவர் உடனே வேலையை
முடித்துக் கொடுத்து பில் தொகையையும்
பெற்றுவிட்டார்

இரண்டாமவருக்கு மரக்கன்றுகள் கிடைக்கத்
தாமதமாகிக் கொண்டே இருக்க

மூன்றாவர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து
இனியும் தாமதிக்க முடியாது என
குறிப்பிட்ட காலத்திற்கு முன் தன்
வேலையை முடிக்க வேண்டும் எனச் சொல்லி
வெட்டிய குழியை மூடி பணமும்
பெற்றுச் சென்றுவிட்டார்

மரக்கன்று ஊன்றாமலே குழி மூடப்பட
எரிச்சலுற்ற பொது ஜனம் இது குறித்து
விசாரித்து ஆவன் செய்ய உயர் அதிகாரிகளிடம்
மனுக் கொடுக்க, உயர் அதிகாரிகள்
தணிக்கை அதிகாரிகளிடம் விசாரிக்க
உத்தரவிட்டனர்

"இந்த விசாரனையின்
முடிவு என்ன என்னவாக இருக்கும்
எனச் சொல்ல முடியுமா ? "
என்றான் விக்ரம்

வேதா சற்றும் யோசிக்கவில்லை
சட்டென இப்படிச் சொன்னான்

"அவசரம் அவசியம் கருதி மூன்றாக
டெண்டர் விட்டது சரிதான்
குழிவெட்டியதற்கான ஆதாரமாய்
பட்டியலுடன் புகைப்படமும் இணைக்கப்
பட்டுள்ளது.என்வே இந்த வேலை
நடைபெற்றுப் பின் பணம் பட்டுவாடா
செய்ய்ப்பட்டது உண்மை

அதைப்போலவே குழியை மூடியதற்கான
ஆதாரமாய் பட்டியலுடன் புகைப்படமும்
இணைக்கப்பட்டுள்ளது. என்வே இந்த
வேலை நடந்ததும் உண்மை

மர்க்கன்றுக்கென டெண்டர் எடுத்தவர்
கன்றுகள் சப்ளை செய்யவில்லை
எனவே அவருக்கு பணப் பட்டுவாடா
ஏதும் செய்யப்படவில்லை

எனவே இந்த வேலையில் முறை மீறலோ
அல்லது ஊழலோ இல்லை எனவே
இந்த மனுவை தள்ளுபடி செய்யலாம்
என வந்திருக்கும் சரிதானே " என்றான்

வேதாவின் மிகச் சரியானப் பதிலால்
விக்ரம் திகைத்திருக்க
வேதா ஒரு கதை சொல்ல ஆரம்பித்தான்

"நீ நிஜம் போல் ஒரு கதை சொன்னாய்
நான கதை போல் ஒரு நிஜம் சொல்கிறேன்
முடிவு என்னவாக இருக்கும் நீ சொல்"
எனச் சொல்லிச் சொல்லத் துவங்கினான

"மதுரையில் தென் பகுதியில் வில்லாபுரம்
புது நகர் என ஒரு ஒரு பகுதி
வீட்டுவசதி வாரியத்தினரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது

ஏற்க்குறைய ஐந்து பிரதான வீதிகளும்
நூற்றுக்கு மேற்பட்ட குறுக்குத் தெருக்களும்
அமைந்த அந்தப் பகுதியில் வீதி குறிக்கும்
பெயர் பலகை இல்லாததால் ஏற்படும்
சிரமங்கள் குறித்து அந்தப் பகுதி வாழ மக்கள்
மா நகராட்சிக்கு மனு கொடுக்க..

மா நகராட்சி அதிகாரிகளும்,மொத்தக்
குறுக்குத் தெருக்கள் எண்ணிக்கையை
அதற்கான பெயர் பலகைக்கான டெண்டரும்
விட்டுவிட்டார்கள்

இடையில் அந்த மரக்கன்றுக்காரரைப் போலவே
தெருவின் எண் குறித்த விவரங்கள்
பெற்றுத் தர அதிகாரிகள் தவறியதால்
அவசர அவசியம் கருதி (?) அந்த
ஒப்பந்தக்காரரும் ஒட்டு மொத்த
பெயர் பலகையையும், வில்லாபுரம்
புது நகர் குடியிருப்பு எனவே தயார் செய்து
எல்லாத் தெருக்களிலும் ஊன்றி வைத்து
பட்டியலும் வாங்கிச் சென்று விட்டார்

மதுரை தெருக்களெல்லாம் மதுரை என்கிற
பெயர் பொறித்ததுபோல் இப்போது
வில்லாபுரம் புது நகர் பகுதி தெரு முழுவதும்
வில்லாபுரம் புது நகர் என்கிற பெயர்
பலகையே உள்ளது

இது அலட்சியத்தின்பால் நடந்த வெட்டிச்
செலவு ஊழலா ? அல்லது ஊழலினால்
அதிகாரிகள் கொண்ட அலட்சியமா?
இந்த விஷயத்தை உயர் அதிகார்களின்
கவனத்திற்குக் கொண்டு சென்றால்
என்ன நடக்கும்? "என்றான்

விகரம் கொஞ்சமும் யோசிக்காமல்
சட்டெனப் பதில் சொன்னான்

"இது பெரிய விஷயமே இல்லை
முதலில் இப்போதுள்ள அதிகாரிகள்
இது எங்கள் காலத்தில் நடக்கவில்லை
காரணமானவர்களிடம் விளக்கம்
கோரியுள்ளோம் என்பார்கள்

இதற்கிடையில் அந்தப் பெயர் பலகைகளை
உடன் அப்புறப்படுத்தி கரி பூசிய
முகத்தைத் துடைத்து கொள்வார்கள்

ஒப்பந்தக்காரரை பட்டியலிலிருந்து நீக்கி
இருக்கிறோம் எனச் சொல்லி பின்
அவர் மனைவி பெயரிலோ மகன் பெயரிலோ
பதிவு செய்து கொடுப்பார்கள்

பிடுங்கப்பட்ட பெயர்பலகைகளை பெயர் மாற்றி
வேறு ஒரு பகுதிக்கு ஊன்றுவதற்கு
ஏற்பாடு செய்து காசக்கி விடுவார்கள்

இதற்கிடையில் இது குறித்து தொடர்ந்து
ஏதும் எழுதவேண்டாம என சம்பத்தப்பட்டவரை
அவருக்கு வேண்டியவர்கள் மூலம்
கேட்டுக் கொண்டு இந்த விஷயத்தை அப்படியே
அமுக்கியும் விடுவார்கள்
சில நாட்களில் எல்லோரும் இதை
மறந்தும் விடுவார்கள்" என்றான்

விக்கிரமனின் மிகச் சரியான பதிலால்
நிலை குழைந்து போன வேதா பின்
பலமாகச் சிரித்து...

"நிஜம் போன்ற கதையும்
கதை போன்ற நிஜமும்
நம் ஊரில் சகஜம்தானே
வா ஒரு நல்ல காஃபி சாப்பிடலாம்"
என அழைக்க இதை படித்த நம்மைப் போல
அவர்களும் மிக சகஜமாகிப் போனார்கள்