Tuesday, May 30, 2017

காணும் யாவும் கருவாகிப் போகவும் எழுதும் எல்லாம் கவியாகிப் போகவும்...

தன்னுள் அடைக்கலமான
ஜீவத் துளியினை
உயிரெனக் காக்கும்
தாயென மாறிப் போனால்....

கூட்டில் உயிரைவைத்து
குஞ்சுகளுக்கென
பலகாதம் கடக்கும்
பறவையென மாறிப்போனால்...

இன்னும் இன்னும் என
மிக மிக நெருங்கி
ஓருடலாகத் துடிக்கும்
காதலர்கள் ஆகிப் போனால்..

விட்டு விலகி
விடுதலையாகித்
தாமரை இலைத் துளிநீர்த்
தன்மையடைந்து போனால்..

வேஷம் முற்றும் கலைத்து
ஜனத்திரளில்
இயல்பாய்க்  கலக்கும்
மன்னனாகிப் போனால்..

தானே பிரம்மம்  என்னும்
ஞானமடைந்தும்
செருக்கற்ற
அடியார்களென மாறிப்போனால்...

மொத்தத்தில்
தன்னிலை விடுத்துக்
கூடுவிட்டுக்  கூடுபாயும்
வித்தையறிந்துப்  போனால்..

காணும் யாவும்
கருவாகிப் போகவும்

எழுதும் எல்லாம்
கவியாகிப் போகவும்

நிச்சயம் சாத்தியம் தானே ?

Monday, May 29, 2017

உயர்நிலைக்கு முதல் நிலை

சம நிலையது  தவறுகையில்தான்
மிகச் சரியாய் இருந்த எல்லாம்
தாறுமாறாய்ப் போய்த் தொலைக்கிறது

யாருக்காக யாரை இழப்பது
என்கிற குழப்பத்தில்
இழக்கக் கூடாதவரை இழந்து
இழக்கவேண்டியவரை
இழுத்து அணைத்துக் கொள்வதும்  ...

எதனை எதற்காக இழப்பது
என்கிற குழப்பத்தில்
இழக்கக் கூடாததை இழந்து
இழக்கவேண்டியதை
இழுத்துப் பிடித்துக் கொள்வதும் ....

சம நிலை தவறும்
சமயங்களிலேயே
அதிகச்  சாத்தியமாகிப் போகிறது
/
சம நிலையது  தவறும்
சாத்தியக்கூறுகள் எல்லாம்

போதையில்
 காமப்பசியில்
கோபத்தில்
பதவி மோகத்தில்
அதிகார ஆணவத்தில்
மிக மிக அதிகம் என்பதால்..

சம நிலை தவறுகையில்தான்
எல்லாம்
தாறுமாறாகத்தான் போய்த்
தொலைக்கிறது என்பதால்

சம நிலை தவறச் செய்பவைகளை
நம் கையெட்டும் தூரத்திலிருந்துத்
தள்ளியே வைக்கப் பழகுவோம்

 சரியாகக்  காலூன்றலே
கர்ணம் அடிக்க
ஏதுவாகும்என்பதனால்

சம நிலைப்  பராமரிப்பே
உயர்நிலைக்கு முதல் நிலை 
என உணர்ந்துத்  தெளிவோம்

இதை
உலகுக்கும் உரக்கச் சொல்வோம் 

Sunday, May 28, 2017

நவீன பட்டி விக்கிரமாதித்தர்களாய்...

பத்தாண்டு கால விஸாவில்
ஆறு ஆறு மாதம் எனும் கணக்கில்
ஐந்தைந்து ஆண்டுகள்
இங்கும் அங்குமாய்..

வீடெங்கும் அவசியம்
எனக் கிடந்த
மொத்தத் தேவையையும்
நூறு கிலோவுக்குள்
அடக்கியபடி..

கண்போல் பாதுகாத்த
செடி கொடிகள்
உறவுடன் நட்பையும்
மெல்ல உதறியபடி
சூழலைப் புரிந்தபடி..

எப்படியும்
போகவேண்டியிருக்கும்
திரும்பவேண்டியிருக்கும்
என எப்போதும் கவனம் கொண்டபடி...

எதிலும் அதிகம்
பற்றுக் கொள்ளாதபடி
பட்டுக் கொள்ளாதபடி...

அந்தப் பெருமையை இங்கும்
இந்தப் பெருமையை அங்கும்
பகிர்வதில் ஒரு
அற்பச் சுகம் கண்டபடி
அது ஒன்றே பலன் என்றபடி...

எது நாடு எது காடு
என்னும் குழப்பம் கொண்டபடி...
நவீன மோஸ்தரில்
உடையணிந்தபடி
விமானங்களில்மாறி மாறிப்
பயணித்தபடி....

நவீனப்  பட்டி விக்கிரமாதித்தியர்களாய்
பயணித்தபடியே  இருக்கிறது
ஒரு புதிய இனம்
வளர்ச்சி தந்த வரமா
தவிர்க்க இயலா  சாபமா
என ஒன்றும்  புரியாதபடி

அறியாதவர்கள்
அதிகப்பொறாமை கொள்ளும்படியும்
மிக நன்றாய் அறிந்தவர்கள்மட்டுமே
சிலவற்றை இழந்துதான் 
சிலவற்றைப் பெற்றதனை  
மிகச் சரியாய்ப் புரிந்து  கொள்ளும்படியும் ..

Saturday, May 27, 2017

பதிவர்கள் ஊடக எழுத்தாளரினும்....

அன்றாட நிகழ்வுகளைத் தான்
பதிவு செய்து போகிறோம்
 எனினும்
பதிவெழுத்தினை
நாட்குறிப்பு எனச்
சொல்ல முடிவதில்லை

 ஆயினும்
நிகழ்வுகளின்சாரத்தை,
அதன் உள்ளார்ந்த காரணத்தைக்
குறிப்பாகப் பதிந்து போவதால்

அது நாட்குறிப்பினும்
அதிகம்  மேம்பட்டதே     

பதிவர்களின் பெரும்பாலோரின்
கவிதைகளை  கவிதைகள் எனச்
சொல்லமுடிவதில்லை

ஏனெனில் பதிவர்கள்
எதுகை மோனை சீர் செனத்திக்காக
அதிகம் மெனக்கெடுவதில்லை

ஆயினும்
அவர்கள் சமூக நோக்கத்திலும்
கருத்தின் ஆழத்திலும்
அதிகம் கவனம் கொள்வதால்

பதிவர்களின் படைப்புகள்
கவித்துவத்தில்
அதனினும்அதிகச் சிறப்புடையதே

பதிவினை ஊடகம் என்றும்
வகைப் படுத்த இயலவில்லை

ஏனெனில்
ஊடகம் போல அதிக வீச்சும்
ஜனரஞ்கத் தன்மையும் இல்லை

ஆயினும்
 சுயக் கட்டுப்பாடும்ஒரு நொடியில்
உலகைச் சுற்றி வரும் தன்மையிலும்
உடனுக்குடன் எதிர்விளைவுகளை
உண்டாக்கிப் போகும் திறத்தாலும்

பதிவர்களின் ஆக்கங்கள்
வேறு ஊடகத்தினும் நிச்சயம்  உயர்வானதே

பதிவர்கள்
 ஊடக எழுத்தாளர்களைப் போல
பிரபல்யமானவர்கள் இல்லை

ஆயினும்
போட்டிப் பொறாமையின்றி
ஒருவர் நலத்தில்
ஒருவர் அக்கறை கொள்வதிலும்
பரஸ்பர புரிதலிலும்உதவிக் கொள்வதிலும்
எழுத்தாளர்களுக்கு
நேர் எதிரானவர்களாய் இருப்பதால்

பதிவர்கள் வேறு  ஊடக எழுத்தாளரினும்
ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே

Thursday, May 25, 2017

கட்டுப்பட்டதைக் கொண்டு கட்டுப்படாததை சமாளித்தலே....

இரண்டும் ஒன்றை ஒன்று
சார்ந்தே இருப்பதெனினும்
இரண்டில் ஏதோ ஒன்றே
எப்போதும் நம் கட்டுப்பாட்டில்..

கட்டுப்பட்டதைக் கொண்டு
கட்டுப்படாததை சமாளித்தலே
ஆகக் கூடியது மட்டுமல்ல
அதுவே புத்திசாலித்தனமும் கூட

கட்டுப்பட்டது வரவெனில்
கட்டுப்படாத செலவதனை ..

கட்டுப்பட்டது கிடைப்பதெனில்
கட்டுப்படாத எதிர்பார்ப்பினை ...

கட்டுப்பட்டது உடலெனில்
கட்டுப்பட்டாத மனதினை...

கட்டுப்பட்டது வேகமெனில்
கட்டுப்படாத தூரத்தினை

கட்டுப்பட்டது யோகமெனில்
கட்டுப்படாத காமமதை

இப்படி உதாரணங்கள்  நூறு எதற்கு
மிகச் சுருக்கமாகவும்
நமக்கு மிகவும் நெருக்கமாகவும்.

கட்டுப்பட்ட கீழ்த்தாடையினைக்  கொண்டு
கட்டுப்படாத மேல்தாடையை
தினமும் சமாளித்தல் போலவும்...


தமிழ் மண வாக்களிக்க லிங்க் இதோ...

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461287

வால்மார்ட்டும் இரஜினியும்
Image result for walmart shopfront photoஇலாப நோக்கில்
கூடுதல் விலையில்
தரம் குறைந்த
சாமான்களத் தரும்
அரசியல்  வியாபாரிகளே

உங்கள் மீது
வாடிக்கையாளர்களாகிய
நாங்கள் கொண்ட கோபம்
வால்மார்ட்டுக்கும்  தெரிந்துவிட்டது

அனுபவமிருந்து
முதல் இல்லாதவர்களை
விலைக்கு வாங்கியேனும்

எப்போது வேண்டுமானாலும்
கடையைத் துவங்கும்
சாதுர்யமும் வால்மார்டிடம் இருக்கிறது

ஊழல்  வியாபாரிகளே

கிடைத்த சந்தை வாய்ப்புகளை
அபரிதமான பேராசையால்
நீங்களே அழித்து ஒழித்துவிட்டு
வால்மார்ட் வருவது குறித்து
கூச்சலிடுவது
எந்த விதத்தில் நியாயம் ?

வாடிக்கையாளர்களாகிய எங்களின்
இப்போதையத் தேவை
எப்படியாவது உங்கள்
மோசமான வியாபாரம்
நாசமாகவேண்டும் என்பதுதான்

உங்கள்
போலிச் சரக்குகளால் உண்டான
ஒவ்வாமை நோயின் பாதிப்பை
உடனடியாக குறைக்க வேண்டும்
படிப்படியாய்
அழிக்க வேண்டும் என்பதுதான்

ஆம்
சொரிந்து சுகம் பெற
எங்களுக்கு ஒரு மாற்று
இன்றைய சூழலில்
அவசியம் தேவை
அவசரமாய்த் தேவை
வேறு வழி தெரியவில்லை

வால்மார்ட்
சேவை  அமைப்பல்ல
அதுவும் இலாப நோக்கமுடையதே
என்பது  எங்களுக்கும் தெரியும்

அப்படிப்பட்டதாயினும்  கூட...
உங்கள் லொள்ளுக்கு ...
அது வந்தால் கூட

ஆம் அது
எப்படிப்பட்டதாயினும்   கூட
அது வந்தால் கூட
தேவலாம் எனத்தான் படுகிறது   எங்களுக்கு

Wednesday, May 24, 2017

கோப்பெரும்சோழனும் பிசிராந்தையாரும்...

மூன்றுபேரைக் கடக்கும்
சமுத்திரம் எனும் சொல்
சமூத்திரமாகி
முடிவாக
மூத்திரமாகி
அர்த்தம் கெட்டுப்போவதைப்போல

சப்தமென
வார்த்தைகளென
உருமாற்றம்கொண்ட
உணர்வுகள்எல்லாம்
படைப்பிலயங்களில்
அர்த்தமற்றுத்தான்போகின்றன

ஒருகுயிலின் கூவல்  
ஒருகுழந்தையின்சிரிப்பு
நொந்தவளின்விசும்பல்
அபயம்வேண்டி
அலறுவோனின்கூக்குரல்....

எந்தஉணர்வுகளின்வெளிப்பாடும்
சப்தங்களாய்இருக்கையில்
சங்கடப்படுத்துகிறஅளவு
நம்மை இம்சிக்கிற அளவு
வார்த்தைகளில்
 வசப்படுவதேஇல்லை

வாசகனின்அனுபவங்களோடு
ஒத்தஅலைவரிசையில்
எப்போதேனும்
ஒத்துப்போகையில்
உச்சம்தொடும்படைப்பு

அதுஅற்றுப்போகையில்
சவக்கிடங்கின்பிணஅடுக்களாய்
அசைவற்று த்தான்கிடககிறது

இருப்பினும்
எடுப்பதெல்லாம்
சிப்பி ஆகிப்போயினும்
என்றேனும் முத்தும்கிடைக்குமெனும்
நம்பிக்கையில்
உயிர்ப்பயம் விடுத்து
கடல் மூழ்கும்  மனிதனாய்

கவிபடைத்துக் கொண்டிருக்கிறேன் நான்

காடுமலைகடந்து
 நாடு கடந்து
எங்கோ
முத்தின்அருமைதெரிந்த
அதை அடைவதற்கான சிரமம் புரிந்த 
முகமறியாஒருவன்  இருப்பான்
என்கிறநம்பிககையில்

வார்த்தைமூடியஅநுபவங்களை
கவிதைகளாக்கி
நம்பிக்கையுடன்
காற்றில்விதைத்தும்  போகிறேன் நான்

கோப்பெரும்சோழனும்
பிசிராந்தையாரும்
அவ்வப்போது
நம்பிக்கையூட்டிப்போகிறார்கள் 

Tuesday, May 23, 2017

மண் சட்டியில் ஃபளூடாவையும் வெள்ளிக் கிண்ணத்தில் கூழையும்....

" குறிப்பிட்டுச் சொல்லும்படியாக
உன் படைப்புகளில் ஏதும் இல்லை

ஆனாலும் ஏதோ இருப்பது போல
பாவனை காட்டி மயக்குகிறது

அது எப்படி ?  "என்றேன்
எனைக் கவர்ந்த கவிஞனிடம்

"அது பெரிய விஷயமே இல்லை
யாரிடமும் சொல்லாவிட்டால்
உனக்கும் அந்த சூட்சுமம் சொல்கிறேன்"என்றான்
சத்தியம் வாங்காத குறையாய்

எதற்கும் ஆகட்டும் என
தலையாட்டி வைக்க
அவனே தொடர்ந்தான்

"எதனை எழுதத் துவங்கும் முன்பும்
அறிஞர் சபையில்
அரங்கேற்றப்படும்
கவிதைக்குரிய
கருவினைத்  தேடி மெனக் கெடுகிறேன்

கரு கிடைத்ததும்
பாமரன் சபையில்
அரங்கேற்றப்படும் கவிதைக்குரிய
எளிய சொற்களால் பகிர்கிறேன்
அவ்வளவே" என்றான்

நான் குழம்பி நின்றேன்
அவனே தொடர்ந்தான்

"சில சமயம்
எதை எழுதத் துவங்கும் முன்பும்
பாமரர் முன் அரங்கேற்றப்படும்
கவிதைக்குரிய
கருவினைத்  தேடி மெனக்கெடுகிறேன்

அது கிடைத்ததும்
அறிஞர் சபையில் அரங்கேற்றப்படும்
கவிதைக்குரிய கனத்த சொற்களை அடுக்கி
படைப்பாக்கிக் கொடுக்கிறேன்

மொத்தத்தில்
மண் சட்டியில் ஃபளூடாவையும்
வெள்ளிக் கிண்ணத்தில் கூழையும்.."
எனச் சொல்லிக் கண் சிமிட்டுகிறான்

கண் சிமிட்டலுக்கான அர்த்தம் புரியவில்லை
குழப்பம் எனக்குள் கூடித்தான் போகிறது

அவன் படைப்புகளை
மீண்டும் படித்துத்தான்
தெளிவு கொள்ள வேண்டும்

Monday, May 22, 2017

மின்மொழி அறிந்திடும் முன்னால்...

வலைத்தளம்   அறிந்திடும் முன்னால்-அதன்
வலுவினைப் புரிந்திடும் முன்னால்
அறையதைச் சிறையெனக் கொண்டோம்-தனிமை
வலியினில் அனுதினம் வெந்தோம்

விண்வெளி ஒருநொடிக் கடக்கும்-புதிய
மின்மொழி அறிந்திடும் முன்னால்
மண்ணடிக் கிடந்திடும் பொன்போல்-நாமும்
மண்னெனக் கிடந்தோம் பலநாள்

சொல்லிட ஆயிரம் இருந்தும்-அதைச்
சொல்லிடும் வழிவகை அறிந்தும்
சிற்பியின் உளிபடாக் கல்லாய் -நாமும்
சவமெனக்  கழித்தோம் வெகுநாள்

விதைத்ததும் விளைந்திடும் பயிராய்-பதிவைப்
படைத்ததும் அதுபெறும் பலத்தை
குறையது இன்றியே தெளிவாய்-இன்று
அனைவரும் அறிந்தோம் மகிழ்வாய்

கூர்மிகு வாள்வலி அறிந்து-அதனைச்
சுழற்றிடும் வீரனைப் போல
சீர்மிகு வலைப்பலம் உணர்ந்து-அதனைச்
சிறப்புறச் செய்வோம் நிறைவாய்

இனியொரு விதியது செய்யும்-மிக்க
வலிவது வலையினுக் குண்டு
எனும்மொழி மனதினில் கொண்டு-நம்
எழுத்தினைத் தொடர்வோம் மகிழ்வாய்  

Sunday, May 21, 2017

நம் துணைவியார் கூட நமக்குப் புத்தன்தானே...

முன்பெல்லாம்
ஒரு காரியத்தை செய்து முடித்ததும்
ஒரு செயலை வென்று முடித்ததும்
அதிலே லயிக்கத் துவங்கிவிடுவேன்
அந்தச் சுகத்தில் சில நாள்
மிதக்கத்  துவங்கிவிடுவேன்

நாலுவகைக் காய்கறியோடு
அப்பளம் வடையோடு
உண்ட சுகத்தோடு வரும்
ஒரு அசாத்திய களைப்பைப்போல
அதைத் தொடர்ந்து வரும்
ஒரு அருமையான தூக்கத்தைப்போல

அதிகாலையில் இருந்து
சமையலறையில்  தனியாய் போராடி
அனைவருக்கும் இதமாய்ப்  படைத்து
அவசரம் அவசரமாய் உண்டு முடித்தும்
அலுப்பில் ஓய்வெடுக்க முயலாது

மீண்டும் அடுத்த வேளைக்கென
பாத்திரங்களை கழுவி முடித்து
சமயலறையை ஒழுங்கு செய்துவைத்து
அடுப்பதனை மீண்டும் பற்றவைக்கும்
அருமை மனைவியைக் கண்டது முதல்

இப்போதெல்லாம்
ஒரு காரியத்தை செய்து முடித்ததும்
ஒரு செயலை வென்று முடித்ததும்
அதிலிருந்து உடன் விடுபட்டுவிடுகிறேன்
அடுத்ததை  உடன்  சிந்திக்கத்  துவங்கிவிடுகிறேன்

புத்தித் தெளிவடைதலே
ஞானமெனில்

அதைத் தருமிடமே
போதிமரமெனில்

சமையலறையதுக் கூட
நமக்கு போதிமரம்தானே

அதைத் தன் செயலால்
அன்றாடம்போதிக்கும்
நம்  துணைவியார்   கூட
நமக்குப் புத்தன்தானே

Friday, May 19, 2017

எட்டயப் புரத்து வேந்தன் இயற்றிய பாடல் தன்னை...

விளம"தும் "மா "வும் தேமா
முறைப்படி அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
உடனடி யாக உன்னால்
இயற்றிடக் கூடு மாயின்
கவியென ஏற்பேன் " என்றான்
வலதுகை போன்றே நாளும்
என்னுடன் உலவும் நண்பன்

"இதந்தரு மனையி னீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும் "
முதல்வரி இதுவாய்க் கொண்டு
முத்தெனத் தொடரும் அந்தச்
சுதந்திரத் தேவிப் பாடல்
சந்தமென் நினைவில் ஊற
பதட்டமே சிறிது மின்றி
பகிர்ந்தேன் இந்தப் பாடல்

"சிந்தனை செய்ய வேணும்
சிலநொடி நேரம் வேண்டும் "
என்றுநான் சொல்வே னென்ற
நினைப்பினில் இருந்த நண்பன்
மந்திரம் சொல்லல் போல
நிமிடமாய்ச் சொல்லக் கேட்டு
வந்தெனைக் கட்டிக் கொண்டு
வாழ்த்தினைப் பகிர்ந்து கொண்டான்

எட்டயப் புரத்து வேந்தன்
இயற்றிய பாடல் தன்னை
நித்தமும் பயின்றால் சந்தம்
நிலையென நெஞ்சில் தங்கும்
பக்குவம் இதனை யாரும்
பழகினால் மட்டும் போதும்
நிச்சயம் நொடியில் யாரும்
கவிஞராய் மாறக்  கூடும்

நண்பர்களும் பகைவர்களும்

முள்ளும் மலருமே
ரோஜாவை
அடையாளம் காட்டிப் போகின்றன
செடிக்கு
அழகு சேர்த்துப் போகின்றன

நண்பர்களும்
 பகைவர்களுமே
வாழ்க்கையினை
அர்த்தப்படுத்திப் போகிறார்கள்
தொடர்ந்து
முன்னெடுத்துப் போகிறார்கள்

நீரும் நெருப்பும் போல
நட்பும் பகையும்
எதிர் எதிரானவை அல்ல

இடம் மாறத் தக்கவை எப்படி
எதிரானவைகளாக இருக்கக்கூடும் ?

நம் வளர்ச்சி கண்டு
குமுறித் தவிக்கும் நண்பன்
மோசமான எதிரியாகிறான்

நாளடைவில்நய வஞ்சகனாய்
உருமாறிப் போகிறான்

நம் தரம் கண்டு
மாற்ற்ம் கொள்ளும் பகைவன்
உண்மை நண்பனாகிறான்

பின்  ஒரு நாள் உ யிர்த் தோழனாய்
நிலை மாற்றம் கொள்கிறான்

நண்பர்கள் என
அதிகம் கொண்டாடி
நட்பிழக்கவும் வேண்டாம்

பகைவரென
அழிக்கமுயன்று
நிலை குலைதலும் வேண்டாம்

நட்பையும் பகையையும்
அதனதன் இடத்தில் வைத்து
பக்குவமாய்ப் பாதுகாப்போம்

இடம் மாறத் தக்கவைகளிடம்
அலட்சியம் கொள்வது
அறிவுடமையல்ல

இன்றைய நிலையில்...

அரசியலில் மட்டும் அல்ல
அன்றாட வாழ்வில் கூட

நிரந்தர எதிரியும்
நிரந்தர நண்பனும்
நிச்சயமாய் இல்லவே இல்லை

Thursday, May 18, 2017

இருண்மை

எழுதுதலை கொஞ்சம்
நிறுத்தி இருந்தான் நண்பன்
காரணம்கேட்டேன்

"புரியாததை
புரியாதபடியே
படிப்பவர்களும்
புரிந்து கொள்ளாதபடியே
மறை பொருளாய் எழுதினேன்
பலர் முகம் திருப்பிப் போனார்கள்

மாறுதலாக
புரிந்ததை
புரிந்து கொண்டபடி
படிப்பவர்களும் புரிந்து கொள்ளுபடி
தெளிவாக எழுதிப் போனேன்
பலரும் பாராதே போனார்கள்
அதுதான் எழுதுவதில்லை "என்றான்

நான் சிரித்துக் கொண்டேன்

"பட்டப் பகலும்
நடு நிசியும்
அதிகம் போற்றப்படுவதில்லை
பாடப்படுவதும் இல்லை

பட்டப் பகலில்
எல்லாமே தெளிவாகத் தெரியும்
அதில் சொல்ல என்ன இருக்கிறது

நடு நிசியில்
எதுவுவேதெளிவாகத் தெரியாது
அதில் சொல்ல என்ன இருக்கிறது

விடிந்தும் விடியாத காலையிலும்
முடிந்தும் முடியாத மாலையிலும்
ஒரு ஒளிவு மறைவு இருக்கும்
அதில் தேட ஒரு சுவையிருக்கும்

அது குறித்து சொல்லவும் நிறைய இருக்கும்
அது எவரையும் மிக எளிதாயும் கவரும்
அப்படி முயற்சி செய்

அம்மணம் நிச்சய ம்  ஆபாசமே
முழுமறைப்பில் சொல்ல ஏதுமில்லை
ஒளிவு மறைவே
அழகை பேரழகாக்கும் என்றேன்

புரிந்தது போலவும்
புரியாதது போலவும்
தலையாட்டிப் போனான் அவன்

என்ன புரிந்து கொண்டான்  என்பது
அடுத்த கவிதையில் தான் தெரியும் 

Wednesday, May 17, 2017

மானஸீக உறவு

பால்மணம் மாறாத
பச்சிளம் குழ்ந்தையை
மடியில் கிடத்தி
ஏதோ பழங்கதையைச்
சொல்லிக் கொண்டிருக்கிறாள்
குடிசை வாசலில் தாய் ஒருத்தி

"இதென்ன கேலிக் கூத்து
இவள் சொல்வது
குழந்தைக்குப் புரியவா போகிறது ?
ஏன் அவளும் கஷ்டப்பட்டு
குழந்தையையும் கஸ்டப்படுத்துகிறாள் ?"
எரிச்சல்படுகிறான்  உடன் வந்த நண்பன்

"தாய்மை உணர்விருந்தால்
புரியும் என்பது
உனக்கும் புரியும்'
இல்லையேல் வாய்ப்பில்லை"
என்கிறேன்

அவன் அலட்சியமாய்ச் சிரிக்கிறான்

வரும் வழியில்
கோவில் வாசலில்
கண்ணீர் மல்க
என்ன என்னமோ
வேண்டிக் கொண்டிருக்கிறான்
பக்தன் ஒருவன்

"இத்தனைப் பக்தர்களையும் தாண்டி
இவன் வேண்டுதல்
ஆண்டவனுக்குத் தெரியப் போகிறதா ?
ஏன் இப்படி
இவனும் கஸ்டப்பட்டு
ஆண்டவனையும் கஷ்டப்படுத்துகிறான் ?"
மீண்டும் ஆதங்கப்பட்டான் நண்பன்

"பக்தி உணர்விருந்தால்
தெரியும் என்பது
உனக்கும் தெரியும்
இல்லையேல் வாய்ப்பில்லை "
என்கிறேன் மீண்டும்

தொடர்ந்து
"இவை இரண்டுக்கும்
ஆதாரமாய்இருக்கும்
ஒரு விஷயம்
கவிதைக்கும் கவிஞனுக்கும் உண்டு
அது குறித்து ஒரு கவிதை
எழுதும் உத்தேசமிருக்கிறது " என்கிறேன்

அவன் சிரிக்கிறான்
"இரண்டுமே அர்த்தமற்றது என்கிறேன்
அதை அர்த்தப்படுத்தும் விதமாய்
ஒரு கவிதை வேறா
அதுவாவது புரிய வாய்ப்புண்டா? "என்கிறான்

"கவி மனம் கொண்டால்
உனக்கும் புரிய வாய்ப்புண்டு
இல்லையேல்  அவைகள் போல்
நிச்சயம் இதற்கும் வாய்ப்பில்லை "
என்கிறேன்

பிரியும் இடம் வர
மெல்ல என்னை விட்டு
விலகத் துவங்குகிறான் அவன்

Tuesday, May 16, 2017

தீதும் நன்றும் பிறர் தர வாரா

விஞ்ஞான வளர்ச்சியின் கருணையால்
நாற்பதாண்டுகளுக்கு முந்தைய
கல்லூரி  நண்பர்களைத்
தேடித் தேடிக் கண்டெடுத்தோம்

உருவ அமைப்பில் பலர்
முற்றிலும் மாறிப் போயிருந்தார்கள்

பலரை அவர்கள்
அறிமுகப் படுத்திக் கொண்டபின்தான்
அறிந்து கொள்ளவே முடிந்தது

அறிந்த பின்தான்
அவர்கள் உருவ அமைப்பில்
முழுமையாக  மாறியிருந்தும்

அவர்கள் குண இயல்பு
துளியும் மாறாதிருந்தது
அப்பட்டமாய்த் தெரிந்தது

எத்தனை நிறைவினுள்ளும்
ஒரு சிறு குறையை
மிகத் தெளிவாய்க் கண்டுவிடும் இராமசாமி

"என்னடா எங்குடா போய்ச்சு
அத்தனை சுருள் முடியும்
இப்படி வழுக்கையாய் நிற்கிறாய் " என்றான்

எத்தனைக் குறைவினுள்ளும்
ஒரு நிறைவினைக் கண்டுவிடும் முருகன்

" எப்படிடா இப்படிக் கலரானே
என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கு " என்றான்

முழுதாக விசாரித்து முடிக்கையில்

குறைகண்டுபிடித்து விடும்
"இராமசாமிகள் " எல்லாம்
அனைத்து விதத்திலும்
குறையுடையவர்களாய் இருக்க

நிறைகண்டு மகிழும்
"முருகன்கள் " எல்லாம்
எல்லாவகையிலும்
நிறைவுடைவர்களாய் இருக்க

காலம் எதையும் எவரையும்
மாற்றிப் போவதில்லையென்பதையும்

இருப்பதைத்தான்
 கூட்டிப்  போகிறதென்பதையும்

விதி என்பது கூட மதிக்கு மாறாக
 எதையும்மாற்றித் தருவதில்லையென்பதையும்

பார்ப்பதைத்தான்
பரிசளித்துப் போகிறதென்பதையும்

உறுதி செய்து போனது

ஆம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்பதைமீண்டும்
அழுத்தமாய்ச்   சொல்லிப் போனது

Monday, May 15, 2017

நூலினும் வலத்தளமே பலமிக்கதெனும் ....

ஆயிரம்  கவிதைகளை
நூறு கவிதைகள் ஒரு நூலெனத்
தொகுத்திருந்தால்
பத்துக்  கவிதைப் புத்தகங்கள்
ஆகியிருக்கக் கூடும்

ஒரு பதிப்புக்கு ஆயிரமென
கணக்கிட்டால் கூட
அவையனைத்தும்
விற்றிருக்கக் கூடுமென
கற்பனையில் மிதந்தால் கூட
பத்தாயிரம் பேரே
வாங்கியிருக்கச் சாத்தியம்

கற்பனையை
இன்னும் விரித்து
ஒரு புத்தகத்தை பத்துபேர்
தொடந்து படித்தார்கள் என
நம்பிக்கை கொண்டால் கூட
ஒரு இலட்சம்  பேரே
படித்திருக்கச் சாத்தியம்

வலைத்தளம் போல்
ஐந்து  இலட்சத்தை நெருங்கித் தொட
சத்தியமாய்ச் சாத்தியமே இல்லை

புத்தகத்தினைப் பாராட்டி
ஆசிரியருக்கு கடிதமாக
புத்தகம் வாங்கியவர்கள்
அனைவருமே எழுதியிருப்பினும்
பத்தாயிரம் வாசகர் கடிதமே சாத்தியம்

வலைத்தள பின்னூட்டம் போல்
நாற்பதாயிரம்  தொட
நிச்சயமாய்ச் சாத்தியமில்லை

எத்த்துனைச் சாதுர்ய
பதிப்பகத்தார் ஆயினும்
குறைந்த பட்சம் ஐந்து நாடுகளில்
விற்றுவிடச் சாத்தியம்

இதுபோல்
நூற்று  இருபத்தைந்து நாடுகள் கடக்க
நிச்சயம் வாய்ப்பே இல்லை

எத்தனைப் பெரிய
எழுத்தாளர்கள் ஆயினும்
நல்ல வாசகர்களை பெற்றிடவே
அதிகச் சாத்தியம்

வலையுலகம் போல்
நூற்றுக்கணக்கான
நல்ல நண்பர்களை பெற்றிட
நிச்சயம் வாய்ப்பே இல்லை       

எனவே
வாளினும் எழுதுகோலே
பலமிக்கது என்பதனைப் போல்

நூலினும் வலத்தளமே
பலமிக்கதெனும்
புதுமொழியைப்  பரப்புவோம்

அவ நம்பிக்கையுடன் பகிரும்
பதிவர்களின் மனதை
நம்பிக்கை ஒளியால் நிரப்புவோம்

(ஒரு உதாரணத்திற்கே என்னுடைய கணக்கு
என்னைவிட ஜாம்பவான்கள்  இங்கே
அதிகம் உண்டு )


தமிழ்மண வாக்களிக்க இங்கு க்ளிக்கி வாக்களிக்கலாம்.

சராசரி படைப்பாளியாய் இருப்பது....

சராசரிப் படைப்பாளியாய் இருப்பது
கொஞ்சம் சௌகரியமாகத்தான் இருக்கிறது

இரு துருவங்களுக்கு
இடைப்பட்ட நாடுகளைப்போல

தலைவனுக்கும் தொண்டனுக்கும்
இடைப்பட்ட அல்லக்கைகள் போல

தனித்துவமாயும் இல்லாது
ஜனரஞ்சகமாயும் இல்லாது

நடுத்தரப் படைப்பாளியாய் இருப்பது
கொஞ்சம் நல்லதுபோலத்தான் படுகிறது

சராசரி என்பதால்
கீறிவிட்டுச்  சுகம் காண அலையும்
அறிவு ஜீவிகளின் மனோவிகாரப்
பிடுங்கல்  இல்லை

தனக்கு மேலிருக்கும் எதையும்
உயர்ந்ததாய் எண்ணி மயங்கும்
வெகுஜனம் தரும் மரியாதைக்குப்
பங்கமும் இல்லை

இலக்கியக் காவலர்களென
பத்துப் பதினைந்து பேர்
ஊரணி ஓரத்துப்  பள்ளத்து நீராய்
ஒரு சிறு கூட்டத்திற்கு அழைத்து
அரிய விடுமுறை நாளைக்
கெடுப்பதும் இல்லை

மௌனங் காத்தலே
அறியாமைக்கு உற்றத் திரையென
ஒதுங்கியே  நட்புகொள்ளும் வெகுஜனம்
அபூர்வமாய்க் கிடைக்கும்
இனிய தனிமைச் சுகத்தைத்
தகர்ப்பதும் இல்லை

ஜோல்னா குர்தா
வித்தியாசமாய் தாடி மீசை
புரியாத வழக்கு மொழி
கூடுதலான ஆங்கில வார்த்தை
குழுச்  சேர்க்கும் பிரயத்தனம்
இப்படிக் கூடுதல் சுமைகளும் இல்லை

வாசகரின் மாறும் மனோ நிலை
பத்திரிக்கைகளின் மசாலாப் போங்கு
மேடை ஓரம் ஒளிபடரும் இடம்
வீழ்ந்து விடாது நிற்க ஓரிடம்
இவைகளைத் தேடி  ஓடும்
நித்ய மராத்தான் ஓட்டமும்  இல்லை

மொத்தத்தில்
சராசரி படைப்பாளியாய் இருப்பது
சௌகரியமானதாக மட்டும் இல்லை
கூடுதல்
சந்தோஷமளிப்பதாவும்தான் இருக்கிறது

Sunday, May 14, 2017

நிகழ்காலமே நிஜமெனத் தெளிந்து.....

இதை
இன்று
இப்போது
இதனால்
இப்படி
இவர்கள் மூலம்

செய்யச் சாத்தியம் இருக்கையில்
எதனாலோ செய்யத் தவறுவீர்கள் ஆயின்

அதை
என்றும்
எப்போதும்
எதனாலும்
எப்படியும்
எவர் மூலமும்

செய்யமுடியாது போகவே
சாத்தியம் அதிகம்

அதனால்

இதை
இன்றே
இப்போதே
இதன் மூலமே
இப்படியே
இவர்கள் மூலமே

உடன் செய்து முடிக்க முயல்வோம்
என்றும் எப்போதும் எச்சூழலிலும்
நிகழ்காலமே நிஜமெனத்  தெளிந்து  உயர்வோம்

Saturday, May 13, 2017

தாய்மை

அகன்று விரைந்து பரவி
ஆக்ரோஷமாய்
ஊர் மிரட்டி ஓடியது
அகண்ட காவேரி
.
அதனுள்
இருப்பிடம் தெரியாது
கரைந்து கிடந்தாலும்
தான் தான் காவேரி என
பெருமிதம் கொண்டிருந்தது
தலைக்காவேரித் துளி நீர்.

அதிகாலைப் பொழுதில்
மெல்ல மெல்ல விரியும்
பூவிதழ்களாய்
வ்ளர்ந்து விரிந்து
வாசல் நிறைத்து நின்றது
மார்கழி மாதத்து வாயிற்கோலம்

அதன் முழு வளர்ச்சியில்
தான் முற்றாய் மறைந்துபோனாலும்
அதனை நிர்மானித்த பெருமிதத்தில்
மன நிறைவு கொண்டது கோலப்புள்ளி.

சொற்க் காம்புகளின் உச்சியில்
பூத்துச் சிரித்த
உணர்வுப் பூக்களைத்
தாங்கிய போதையில்
மண்மறந்து வானம் தொட
முயன்று தள்ளாடியது ஒருகவிதை

அதிகம் அறியப்படாது
உள்ளடங்கிக் கிடந்தாலும்
கவிதைக்கு உயிர்தரும் மகிழ்வினில்
வேராக உள்ளிருந்தே
பெருமையில் திளைத்தது
கவிதை தந்த கரு

பட்டம் பதவி தந்த
வசதி வாய்ப்புகளில்
ஊரெல்லாம் வாய்பிளக்க
வானம் தொட்டு நின்றான்
வறுமை அறியாதபடி
பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை

சுட்டெரிக்கும் வறுமைக்கு
துளி நிழல் தாராது போயினும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
அவனின் வளர்ச்சி கண்டு
அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்தம் கொண்டது தாய்மை

(அன்னையர்கள் அனைவரையும் 
அடிபணிந்து  வாழ்த்துவோமாக  )

வான்மூலம்திசையறியும் மெய்ஞானம்

இளமைமுறுக்கில்
வெற்றிக் களிப்பில்

சீறும் அலைகளை
வெல்லும் முனைப்பில்

உடன் நீந்துவோரைத்
தாண்டும் வெறியினில்

மோகம் கொண்டவன்
வேகம் கொண்டவன்

தன்னையும் மறக்கிறான்
தன சுழலும்  மறக்கிறான்

வெற்றிகள் தந்த
வீறாப்புடன் வேகத்துடன்

அலைகள்அற்ற
 ஆழ்கடல் அடைய

முதன் முதலாய்
முற்றிலும் புதிதாய்

அதன் கொடிய அமைதி
சட்டென முச்சடைக்க

மெல்ல மெல்லச்
சமநிலை   கொள்கிறான்

அதுவரை

அவனுக்கு
வழிகாட்டிகளாய்
தெம்பூட்டிகளாய்

முன்னால்
நீந்திக் கொண்டிருந்தவர்கள்
பலரும் கண் காணாது  போயிருக்க

பதபதைத்தபடி
ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்படியாய்
பக்கம் பார்க்க

உடன் வந்தவர்களும்
குறைந்த எண்ணிகையில்
தொலைவில் எங்கோ  வர

அந்தக்கரைக்கானாக் கடல்
மெல்ல மெல்ல
அச்சம் கூட்டிப் போகிறது

அதுவரை
முன்பின் மட்டும்
பார்த்து நீந்தியவன்

கண்ணுக்குத்  தெரிவதே
துணையாகும் என
அதுவரை எண்ணியவன்

முதன் முதலாய்
வேறுவழியின்றி
முகம் திருப்பி

இதுவரை பாராத
வானம் பார்த்து
 நீந்தத் துவங்குகிறான்

மற்றதையெல்லாம்
முற்றாக
மறந்தபடி...

தன்னையும்
விண்ணையும் மட்டும்
உணர்ந்தபடி...

அது ஒன்றே
வழிகாட்டும்
என நம்பியபடி ....

வான்மூலம்திசையறியும்
மெய்ஞானத்தை
மெல்ல மெல்ல உணர்ந்தபடிFriday, May 12, 2017

இரசித்துப் பயணிப்போம் வா வா...

சங்கடங்களைச் சந்திக்க
 சங்கடப்படுவோன்....

சுகச் சூழல் விடச்
சஞ்சலப்படுவோன்....

சராசரித்தனம் தாண்டச்
 சாத்தியமே இல்லை

நினைவலையின்    மடியிலேயே
முழுமனம் பதித்தவன்...

அடி ஆழம் செல்ல
அச்சப்படுபவன்....

சாதனை முத்தெடுக்கச்
சத்தியமாய் சாத்தியம்  இல்லை

சூழல் மறந்த
நேர்ச்சிந்தனையும்

இழப்புகளைத் தாங்கும்
 மனவலிமையும்

கொண்டவன் எவனோ
 சிகரத்திற்குப் பாத்தியப்பட்டவன்

ஒவ்வொரு நாளையும்
புதிய நாளாகவே  கொள்வதும்

ஒவ்வொரு செயலையும்
புதிதென எண்ணிச்   செய்தலுமே

தொடர்ந்து வெல்வதற்கான
 அடிப்படைச் சூத்திரம் 

இழந்தவைகளையும்
கடந்தவைகளையும்
கனவெனவே  கொள்வோம் வா

இனி நடப்பதையும்
நடக்க இருப்பதையும் மட்டுமே
நினைவினில் கொள்வோம் வா

வெற்றியும் சாதனையும்
நாம் அடையும் இலக்கல்ல
கடக்க  ஒரு குறியீடு  அவ்வளவே

தொடர்ந்து  குறியீடுகள் கடப்பதில்
கவனம் கொள்வோம்  வா வா

 இனிய பயணமே வாழ்க்கை
இரசித்துப்  பயணிப்போம் வா வா

Thursday, May 11, 2017

பதிவர் மேடை

இந்த மேடை
போதுமானதாகவே இருக்கிறது
பொருத்தமானதாகவே இருக்கிறது

மேடை
சிறிதெனினும்
வெளிச்சம் குறைவெனினும்
பார்வையாளர்களும்
அதிகமில்லையெனினும்

இந்த மேடை
மிகவும் பிடித்தமானதாகவே இருக்கிறது

ஆடை அலங்காரச்
சுமைகளின்றி

போலி முக
 வேஷங்களின்றி

நமது குளியறையில்
பாடுதல் போல்

நமது தோட்டத்தில்
உலாவுதல்   போல

இயல்பாகவே இருக்க  முடிவதாலே

 இந்த மேடை
மனம் கவர்ந்ததாகவே இருக்கிறது

இருள் உருவங்களாய் அல்லாது
பார்வையாளர்கள் பெரும்பாலோர்
பார்க்கும்படியாகவே இருப்பதாலே
பார்வையாளர்கள் அனைவருமே
படைப்பாளிகளாகவே இருப்பதாலே

இந்த மேடை
உத்வேகமளிப்பதாகவே  இருக்கிறது

நேரக்கணக்கின்றி
இஷ்டம்போல்
மேடை ஏற முடிவதாலும்

பண்பட்ட பார்வையாளர்களின்
பாராட்டையோ விமர்சனத்தையோ
உடனுக்குடன் பெற்றுவிட முடிவதாலே

அதிக  உயரமும்
வெளிச்சமும் சப்தமும்
ஆரவார ரசிகர்கள் நிறைந்த
அந்த  அலங்கார மேடையினும்

அளவு சிறிதெனினும்
வெளிச்சம் குறைவெனினும்
பார்வையாளர்கள் கூட்டம்
அதிகமில்லையெனினும்

உயிரோட்டமுள்ள
இந்தச் சின்ன மேடையே

உயர்வானதாகவும்
உண்மையானதாகவும்
நிலையானதாகவும்
என்றென்றும்
நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கிறது

நிலையாக என்னுள்
நங்கூரமிட்டுக்கொண்டும் இருக்கிறது


Wednesday, May 10, 2017

சுமைதாங்கியும்....

யாருமற்ற வெளிதனில்

சுமை தாங்காது
தத்தளிக்கையில்

கொஞ்சம் தாங்கி
ஆசுவாசப்படுத்தி

மீண்டும்
புதுத் தெம்புடன்

பாதசாரி பயணிக்கவே
சுமைதாங்கிக் கல்

உடன் சுமந்து வர
அது  சுமை  தூக்கி இல்லை

இதை அறிந்தவனுக்கு
குழப்பமில்லை

அறியாதவனே
அல்லற்படுகிறான்

அடுத்தவனையும்
அல்லற்படுத்துகிறான்  

Monday, May 8, 2017

ரூபத்தை அரூபம் வெல்லும் அதிசயத் திருநாள்...


உடலே மத்தாக
மூச்சே வடமாக
ஐம்புலனும் ரசிகனாக
காலமும் இதயமும் நடத்தும்
கயிறிழுக்கும் போட்டிதான்
நாம் வாழும் வாழ்வா ?

இழுத்து ஓய்ந்து
அலுத்த இதயம்
இயலாது தன் நுனியை
மருத்துவரிடம் சேர்க்க
எரிச்சலுற்ற காலம் தன் நுனியை
காலனிடம் சேர்க்கும் நாள்தான்
நமக்குக்  கடைசி நாளா ?

வார்த்தைகளை எளிதாய் வெல்லும்
அதீத மௌனம் போல
ஹிம்ஸையின் பேயாட்டத்தை
எதிர்க்காதே வெல்லும்
சக்தி மிக்க அஹிம்ஸைபோல
ரூபத்தை வெட்டிச் சாய்த்து
அரூபம் எளிதாய் வெல்லும்
அதிசயத் திருநாள்தான்
நமது  இறுதி நாளா ?

Saturday, May 6, 2017

எல்லோரையும் போல அவனும்....

"இன்னும் கொஞ்சம் "
எனும் வார்த்தை அவனுள்
எப்போது குடிகொண்டது ?

அது அவனுக்கே நினைவில்லை

நல்ல கல்லூரி கிடைக்காதபோது

"இன்னும் கொஞ்சம் நன்றாய்
படித்திருந்தால்.. :?
எனத் துவங்கி

 நல்ல வேலை கிடைக்காதபோது

"இன்னும் கொஞ்சம்
முயன்று இருந்தால் ?"
எனத் தொடர்ந்து

அழகான பெண் கிடைக்காதபோது

'இன்னும் கொஞ்சம்
பொறுத்திருந்தால் ?"
என மயங்கி

இப்படித் துவங்கிய
"இன்னும் கொஞ்சம் ...

 கிடைத்திருந்தால்...
கேட்டிருந்தால்....
வாங்கி இருந்தால்...
கொடுத்து இருந்தால்...
பணிந்து இருந்தால்...
போராடி இருந்தால்....

என ஒவ்வொன்றும்
முடிந்த பின்னும்
தான் கொண்ட எண்ணம்
எத்தனை மடத்தனமானது
என எண்ணி எண்ணி
நொந்து வாழ்ந்தவன். .  ...

இப்போது கூட
மரணப்படுக்கையில்
"இன்னும் கொஞ்சம்...
தான்வாழ முடிந்தால்..".

என எண்ணி மாய்கிறான்
 எல்லோரையும் போலவே 
அவனும்

சுகமாகவே சிகரம் தொடுவோம்...

பயணத்தின் இலக்கே
பயணத்தை அர்த்தப்படுத்தும்

பயணத்தின் அர்த்தமே
தூரம் குறித்துச் சிந்திக்கும்

பயணத்தின் தூரமே
வாகனத்தை முடிவு செய்யும்

வாகனமே பயண
வேகத்தை முடிவு செய்யும்

வாகன வேகமே
காலத்தை முடிவு செய்யும்

இத்தனையும்  பொருத்தே
இலக்கடைதலும் இருக்கும்

இதை புரியாதவன்
நல்ல பயணியும் இல்லை
சுகமாய் இலக்கடைதலும் இல்லை

எழுத்தின் நோக்கமே
கருவை முடிவு செய்யும்

கருவின் தாக்கமே
வடிவத்தை முடிவு செய்யும்

கொள்ளும் வடிவதுவே
வார்த்தைகளை முடிவு செய்யும்

வார்த்தைகளைப் பொருத்தே
உணர்வும் உள்ளடங்கும்

உணர்வின் உள்ளடக்கமே
படைப்பினைச் சிறப்பிக்கும்

இதைப் புரியாதவன்
நல்ல படைப்பாளியும் இல்லை
அவன் படைப்பு
சிறப்படைதலும் இல்லை

எச் செயலுக்கும்
முதலில்
மூலம் அறியும்
ஞானம் பெறுவோம்

பின்எச்செயலையும்
நிறைவாய்ச்   செய்து
சுகமாகவே
சிகரம் தொடுவோம்

Thursday, May 4, 2017

கவிதையைப் போலவும்...

"இப்படி விழுந்து விழுந்து ரசிப்பதற்கும்
தொடர்ந்து விடாது ரசிப்பதற்கும்
இதில் அப்படி என்னதான் இருக்கு ? "
என விலகி நின்று பார்த்தே
விலகிப் போயினர் சிலர்

"அதில் இறங்க விருப்பமில்லை
தேவையுமில்லை "என
அதனால் விரிந்த முன்பரப்பில்
உருண்டு விளையாடி
மனம் களித்துப் போயினர் பலர்

"முழுதும் நனைந்திடாது
பட்டும் படாமலும் ரசிப்பதே சுகம் "என
உணவுக்கு  ஊறுகாயாய்
அளவோடு இணைந்துப் பின் விலகி
உற்சாகம் கொண்டனர் சிலர்

"அதனுள் வீழ்ந்துக் கிடப்பதும்
நீந்திக் களிப்பதும்தான் பேரானந்தம் "என
செயற்கை அணிகலன்கள்
அனைத்தையும் அகற்றி முற்றாக
மூழ்கிச் சுகித்தனர் வெகு சிலர்

"இந்த விரிந்து பரந்த
பிரமாண்டம்தான் எத்தனைப் பேரின்பம் "என
வியந்தும் விக்கித்தும்
தனைமறந்தும் சூழல் மறந்தும்
தவசியாய்க் கிடந்தனர் வெகு வெகு சிலர்

தன்னிலை மாறாது எப்போதும்போல்
அதுவாகவே அது இருப்பினும்
எல்லோரின் நினைப்புக்கும்
ஏற்றதாகவும் இருந்தது
விரிந்து பரந்துக் கிடந்த அந்த நீலக்கடல்

கவிதையைப் போலவும்... 

Tuesday, May 2, 2017

பயணச் சாலையும் பயணச் சூழலும் ஒன்றுதான் ஆயினும்...

பயணச் சாலையும்
பயணச் சூழலும்
ஒன்றுதான் ஆயினும்...

தனிமையும்
இருளும்
முன்னம் கேட்டுப்பதிந்த
பேய்க்கதைகளும்
மனமெங்கும்
அச்ச உணர்வைக் கூட்டிப் போக

கரவொலி எழுப்பியபடியும்
விதம் விதமாய்
சப்த மெழுப்பியபடியும்
விரைந்து நடக்கிறான் ஒருவன்

பயணப்பாதை
நீண்டு கொண்டே போகிறது
அச்சமூட்டியபடி...

தனிமையும்
இருளும்
முன்னர் கிடைக்காத
சந்தர்ப்பமாய்
மனமெங்கும்
இன்ப உணர்வை கூட்டிப் போக

தாளமிட்டபடியும்
அதற்கேற்ப
பாட்டிசைத்தபடியும்
மெல்லப் பயணிக்கிறான் ஒருவன்

பயணப்பாதை
சுருங்கிக் கொண்டே போகிறது
மகிழ்வூட்டியபடி

ஆம்
பயணச் சாலையும்
பயணச் சூழலும்
ஒன்றுதான் ஆயினும்...

Monday, May 1, 2017

ஒவ்வொரு படைப்பின் போதும்...

ஒவ்வொரு படைப்பின் போதும்
"எதை" எனக்
குழப்பிக்கொள்ளாதே

அது உன் சிந்தனையை
ஓரடி நகரவிடாது நிறுத்திவிடும்

"இதை"த்தான் என்பதில்
மிகத் தெளிவாய் இரு

சிந்தனைச் சரடின் நுனி
சட்டெனச் சிக்கிவிடும்

ஒவ்வொரு படைப்பின் போதும்
"எப்படி"எனக்
கலங்கிப் போகாதே

அது போகாத ஊருக்கு அனுப்புவதில்
மிகக் குறியாய் இருக்கும்

ஒவ்வொரு படைப்பின் போதும்
"இப்படித்தான்"என்பதில்
 திண்ணமாய் இரு

நேர்வழியது தெரிவது மட்டுமின்றி
தெளிவாயும் தெரியத் துவங்கும்

ஒவ்வொரு படைப்பின் போதும்
"யாருக்கு" எனக்
குழம்பிச் சாகாதே

அது உன்னைச் செக்குமாடாக்கி
ஓரிடத்தினிலேயே சுழலச் செய்துவிடும்

ஒவ்வொரு படைப்பின் போதும்
"இவர்களுக்குத்" தான்
என்பதில்  உறுதியாய் இரு

நேர்க்கோட்டுச் சிந்தனை
இயல்பாகவே அமையப் பெற்றுவிடும்

ஒவ்வொரு படைப்பின் போதும்
"ஏன் " என
எண்ணி மாளாதே

அது அஸ்திவாரத்தை அசைப்பதோடு
உன்னையும் செல்லாக் காசாக்கிவிடும்

ஒவ்வொரு படைப்பின் போதும்
உன் இலக்கதனை
மிகச் சரியாய் நேர்செய்து கொள்

உன் படைப்பு நிச்சயம்
கவனிக்கத் தக்கதாகிவிடும்

காலம் கடக்கும்
அமர காவியமாகியும் விடும்