Thursday, June 30, 2016

மூலதனம்

குழந்தைகளின்
சேட்டைகளை மட்டுமல்ல

அவர்களின்
அறியாமை
முட்டாள்த்தனம்
முரண்டு
முதலானவைகளை
நொடியும் விட்டுவிடாது

மிகக் கவனமாய்
இரசிக்கப் பழகுங்கள்

மிகக் கவனமாய்க்
கையாளப் பழகுங்கள்

பின்னாளில்

அவர்களின்
வளர்ச்சியை மட்டுமல்ல

அவர்களின்
அறிவு
புத்திசாலித்தனம்
பெருந்தனமை
முதலானவைகளை
மிகச் சரியாய் இரசிக்க

கூடுதலாய் இரசிக்க
முழுமையாய் அனுபவிக்க

அதுதான் மூலதனம்
அதுதான் ஆணிவேர்

Wednesday, June 29, 2016

சிரிப்பின் சுகமறிவோம்

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

Sunday, June 19, 2016

வேறு எப்படிச் சொல்லலாம் ?

பிறப்பிடமும் இருப்பிடமும்
ஒன்றாகவே இருந்தபோதும்
இருக்கிற இடம் காரணமாக
இருந்த இடத்தை மாற்றி மாற்றியே
சொல்லவேண்டி இருக்கிறது

மதுரை நகருக்குள்
புதிதாகச் சந்தித்தவர்
ஊர் குறித்து விசாரிக்க
கிராமத்தின் பெயரையும்..

சென்னையில் நண்பர் விசாரிக்க
மதுரை எனவும்

பூனேயில் அறிமுகமானவர் விசாரிக்க
தமிழ் நாடு எனவும்

இதே கேள்வியை
அமெரிக்காவில் ஒருவர் விசாரிக்க
இந்தியா எனவும்...

பிறப்பிடமும் இருப்பிடமும்
ஒன்றாகவே இருந்தபோதும்
இருக்கிற இடம் காரணமாக
இருந்த இடத்தை  மாற்றி மாற்றியே
சொல்லவேண்டி இருக்கிறது

இது ஒரு பிரச்சனை இல்லை

பின்னொரு  நாளில்
இதே கேள்வியை
"அங்கு " கேட்கையில்
என்ன சொல்வது ?

"உலகம் " என்பது
பொதுப்பெயராக இருப்பதால்
அது சரியாகப் படவில்லை

வேறு எப்படிச் சொல்லலாம் ?

Thursday, June 16, 2016

தினமலரின் " நடுநிலைமை "

தமிழகத்தில் பெரும்பாலாக எந்தப் பத்திரிக்கையும்
செய்திகளைச் செய்திகளாகத் தருவதில்லை
மாறாக தங்கள் கருத்தைச் செய்திகள் போல்
தருவதில்தான் அதிக அக்கறை கொள்கின்றன
அதில் முன் வரிசையில் உள்ளது
தின மலர் என்றால் அது மிகையில்லை

கடந்த தேர்தலில் போது தி.மு க. வெல்லும் போல
ஒரு அபிப்பிராயம் நடு நிலை வாக்காளர்களுக்கு
அதிகம் இருந்தது. அதனை பிரதிபலிக்கும் விதமாகவும்
அப்படி ஒருவேளை தி. மு.க ஆட்சிக்கு வருமானால்
நிச்சயம் அரசின் சலுகைகள் பெற  உதவும் என்று
ஒரு பொதுப் பத்திரிக்கை என்கிறப் போர்வையில்
தி.மு.க வுக்கு சாதகமாகத் தெரியும் படியாக
தினமலர் கருத்துக் கணிப்பு வெளியிட்டது

அந்தக் கருத்துக் கணிப்பில் ஒரு சூட்சுமம் இருந்தது
மிகத்  திட்டவட்டமாக அ. இ அ. தி.மு க. வெல்லும்
இடங்களை அது வெல்லும் எனக் குறிப்பிட்டு விட்டு
குழப்பம் ஏற்படுத்தும்படியாக திட்டவட்டமாக
இல்லையெனினும் வெற்றி வாய்ப்புள்ளத்
தொகுதிகளை தி. மு. க வுக்கு சாதகமாக
வெளியிட்டுத் திருப்திப்படுத்திக் கொண்டது.

(எங்கள் திருப்பரங்குன்றம் தொகுதியில்
 அ. இ அ. தி. மு.க வேட்பாளர் 20,000 க்கும்
 மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில்
வென்ற தொகுதியை தி. மு.. க வுக்கு வாய்ப்புள்ளத்
தொகுதியாக கருத்துக்கணிப்பில் வெளியிட்டிருந்தது
ஒரு உதாரணம்.. )

அதற்காக பதவிக்கு வந்தவுடன் இந்த அரசு
மிகச் சரியான நேரத்தில் குழப்படி ஏற்படுத்திய
பத்திரிக்கைக்கு இருக்கை ஒதுக்கீட்டில் பின் தள்ளியது
சரியில்லை என்றாலும்,

அதற்காக ஆளுநர் உரையினை இன்றைய பதிப்பில்
ஒன்பதாம் பக்கத்திற்கும் பதிமூன்றாம் பக்கத்திற்கும்
தள்ளிவிட்டு தங்கள் பத்திரிக்கைக்கு இட ஒதிக்கீட்டு
விஷயத்தை முன் பக்கத்தில் எந்த விதத்தில் சரி

பொது ஜனத்திற்குத் தேவையான விஷயத்திற்கு
முக்கியத்துவம் தராமல் தன் சுய நலத்திற்கு
முக்கியத்துவம் தரும் பத்திரிக்கையை எப்படி
நடு நிலை நாளேடாகக் கொள்ள முடியும் ?

பிற ஊடகங்களின் மூலம் இந்த இருக்கை மாற்றம்
பற்றித் தெரிந்தவுடன்,இது அரசியல் நாகரீகமில்லை
எனப் பட்ட எனக்கு, இந்த செய்தி வெளியீட்டைப்
பார்த்ததும் அவர்கள் செய்ததும்
சரியெனத்தான் பட்டது

பொது ஜனத்திற்கு தேவையானதிற்கு முக்கிய
தராமல், தனக்கு முக்கியத்துவம் தருவது
எந்த விதத்தில் நாகரீகம் என்பது
எனக்குப் புரியவில்லை

முக்கியத்துவமான செய்தி என்பது
செய்தி  பொறுத்தல்ல
நாங்கள் முடிவு  செய்வதைபி பொறுத்து
என ஒரு நாளிதழை நினைக்குமானால்
அது எப்படி ஒரு  நடு நிலை நாளேடாக
இருக்கச் சாத்தியம்  ?

 இனி நடு நிலைச் செய்திகளைப் படிக்க
வேறு ஒரு நாளேட்டத் தேர்ந்தெடுத்தலே சரி எனப்
படுகிறது  எனக்கு

உங்களுக்கு ?

Wednesday, June 15, 2016

இறைவி--விமர்சனம் போல

ஜெயகாந்தன் அவர்களின்" சில நேரங்களில்
சில மனிதர்கள் " நாவலில்

"சீட்டாடுகிற
எல்லோரும் தோற்பதில்லை. ஜெயிக்கவும்
செய்கிறார்கள் .அப்படியிருக்க சீட்டாட்டத்தை ஏன்
தீமையானது என்கிறார்கள் " என ஒரு கேள்வி
எழுப்பி,கதாபாத்திரத்தின் மூலம் அதற்கான பதிலை
இப்படிச் சொல்வார்

"சீட்டாடி ஜெயித்த பணம் வீடு வந்து சேராது
ஆனால் தோற்றால் பணமெடுக்க வீடுதான்
வரவேண்டி இருக்கும் "என்பார்

வென்றால் கொண்டாட வெளி உறவுகள்
ஆயிரம் இருக்கும். ஆனால் தோற்றால்
வந்து விழுகிற அதனால பாதிக்கிற இடம்
நிச்சயம் வீடாகவும் மனைவியாகவும்
குழந்தைகளுமாகத் தான்  நிச்சயம் இருக்கும்

வாழ்க்கை என்பது கணவன், குழந்தைகள்
வீடு என மட்டுமே எனக் கொள்ளுகிறாள் பெண்

வாழ்க்கையென்றால் குடும்பமும் என மட்டுமே
கொள்ளுகிறான் ஆண்

இந்த இரண்டு எதிர் எதிர் நிலைகள்
ஒன்றை ஒன்று  புரிந்து கொண்டு கொஞ்சம்
 அனுசரித்து விட்டுக் கொடுத்துப்போகிற நிலை
வாழ்வைச்  சுவையானதாக்கிப் போகிறதோ
இல்லையோ, பிரச்சனையற்றதாகிப் போகிறது

அதன் காரணமாகவே சில சமூக இயக்கங்களில்
 ( அரசியல்தவிர்த்து  )பயிற்சியின் போது,
முதலில் உன்னைக் கவனி,பின் குடும்பம்,
பின் தொழில்,பின்னரே இந்த சமுக
இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடு என்பதாக
பயிற்றுவிக்கிறார்கள்

சொல்லப் பட்டதிலிருந்து, சொல்லப்படாத
பலவற்றை சிந்திக்குமாறு (நல்ல திசையில்  )
ஒரு படைப்பது தூண்டிப்  போகுமானால்
அதுவே மிகச் சிறந்த படைப்பாக இருக்கும்
எனக் கொண்டால்  இறைவி திரைப்படம்
ஒரு  சிறந்த திரைப்படம்எ ன்பதுவே என் கருத்து

வாழ்த்துக்களுடன்...

Tuesday, June 14, 2016

பிரிவுகள் தருகிற ஞானம்

அவன் வீட்டில்
அன்றுதான்
அவன் அவனை
அன்னியனாய் உணர்ந்தான்

வீடு நிறையப் பொருளிருந்தும்
எது எங்கிருக்கிறது என்றும்
எது எதற்கானது என்றும்
எதற்கடுத்து எது என்றும்
அதை எப்படிப் பயன்படுத்துவதென்றும்
எதுவுமே புரியவில்லை அவனுக்கு

விழித்தது முதல்
மெத்தையில் சாயும் வரை
அறுவை சிகிச்சையின் போது
அடுத்து  அடுத்துக்  கருவிகளை
மிக நேர்த்தியாய்    எடுத்துத் தரும்
தாதியாய் இருந்தவள்
இன்றில்லை என்றபோதுதான்

கையறு நிலை என்ற
சொல்லின் பொருளும்
இரு கையிழந்தவன் 
படும் துயரும்
தெளிவாய்த்  தெரிந்தது அவனுக்கு

 இந்தச் சிறு அசௌகரியங்களைக் கூட
அவனால் சகித்துக் கொள்ள முடிந்தது.....

திருமணம் முடிந்த  சில நாட்களில்
ஏதோ  ஒரு நாளில்
ஒரே ஒரு நாளில்
ஏதோ ஒரு பொருளை
 தேடித் தரத்  தாமதமானதற்காக
தான்  ஆடிய ருத்ர தாண்டவம்
நினைவுக்கு வர
வெந்துதான்   போனான்
மிகவும் நொந்துதான்  போனான்

 என்ன செய்வது
 "மனித்த பிறவியும்
வேண்டுவதே இந்த மாநிலத்தே"
என்பதுபோல
சில ஆணாதிக்க  ஜென்மங்கள்
பட்டுத் திருந்தி
சம நிலைப்பெறக் கூட
இதுபோன்ற  சிறு பிரிவுகள்
அவசியத் தேவையாகத்தான் இருக்கிறது    

Sunday, June 12, 2016

அவசியமும் அநாவசியமும்

ஆயுதம் என்பது
நிச்சயம் அவசியம் என்போருக்கு
கவசம் நிச்சயம் அவசியம்

அங்கீகாரம் என்பது
நிச்சயம் அவசிய மென்போருக்கு
பட்டயம்  நிச்சயம் அவசியம்

அதிகாரம் என்பது
நிச்சயம் அவசிய மென்போருக்கு
பதவி நிச்சயம் அவசியம்

அழகு
நிச்சயம் அவசியம் என்போருக்கு
அலங்காரம் நிச்சயம் அவசியம்

விவாதம்
நிச்சயம் அவசியம் என்போருக்கு
வார்த்தைகள் நிச்சயம் அவசியம்

................................................................

................................................................

..................................................................

அவசியம்
நிச்சயம் அவசியம் என்போருக்கு
எல்லாமே  நிச்சயம் அவசியம்

அவசியம் என்பது
அவசியம் இல்லை என்போருக்கோ
நிச்சயம் எல்லாமே அநாவசியம்

பிறவிச் சுழற்சி

அண்டத்திலும் பிண்டத்திலும்
பஞ்ச  பூதங்கள்
மாறி மாறி ஆடும்  ஆட்டமே
இறப்பா பிறப்பா ?

பிராண நெருப்பின்
ஊதுலைக் காற்றின்
ஒருங்கிணைப்பு உடைபட

வெப்பக் காற்றாய்
மேல் நோக்கிக் கிளம்பும் ஜீவன்

வெளுத்துப்பின் கருத்துக்
குளிர்காற்றின்
அணைப்பினில் இழுப்பினில்

எங்கோ மழையாய்
மண் நனைத்துப் பொழிய

புதைந்து கிடந்த
விதைத்து வைத்த

விதையது  உயிர்ப்பெற
வளர்ந்து பயன் தர

விளைந்ததை உண்ட
விலங்கினில் மனிதனில்

இரத்தம் ஊறிப் பெருக
அதுவே விந்துவாய் இறுக

விந்தின் சேகரம்
உடலை முறுக்க

அது கொள்ளும் உடல்
கருவதும் உயிரதும் கொள்ள

பிராண நெருப்பும்
பிராண வாயுவும்

மீண்டும் இணைந்து
உடல் வளர்க்க உயிர் வளர்க்க

காலதேவன் கட்டளை
அல்லது கண்ணசைவு

வரும்வரை ஆடவிட
வந்தவுடன் நோய்ப்பட

மீண்டும்

பிராண நெருப்பின்
ஊதுலைக் காற்றின்
ஒருங்கிணைப்பு உடைபட....

மீண்டும்....மீண்டும்

இப்படி...

அண்டத்திலும் பிண்டத்திலும்
பஞ்ச பூதங்கள்
மாறி மாறி ஆடும்  ஆட்டமே
இறப்பா பிறப்பா ?

Thursday, June 9, 2016

வாழ்வே நிச்சயம் சொர்க்கம் தானே

புன்னகை முகத்தில் என்றும்
பொங்கியே ஜொலிக்கக் கூடின்
பொன்நகை ஜொலிப்பு கொஞ்சம்
மங்கிடத் தானே செய்யும் ?

நன்மனை வாய்க்கப் பெற்று
நலமுடன் வாழ்ந்து வந்தால்
அரண்மனை சுகங்கள் கூட
அலுப்பினைத் தானே கூட்டும் ?

இருப்பதைக் கொண்டு வாழும்
இலக்கணம் அறிந்து கொண்டால்
பறப்பதைப் பிடிக்கும் மோகம்
மறைந்திடத் தானே செய்யும் ?

ஆசையது போடும் ஆட்டம்
அடங்கிடக்  கூடும் ஆயின்
தேவையின் சுமைகள் கூட
குறைந்திடத் தானே வேண்டும் ?

சுகமதை நிலைக்கச் செய்யும்
சூட்சுமம் வெளியில் இல்லை
நிதமிதை உணர்ந்தால் வாழ்வே
நிச்சயம் சொர்க்கம் தானே 

Tuesday, June 7, 2016

எந்த முதல்வர் ?

மீண்டும் நம்முள் பரபரப்பூட்ட
பதட்டமூட்ட
முயற்சிக்கின்றன.....

செய்திகள் என்னும் முகமூடியணிந்து
கருத்தைப் பரப்பும்
"வியாபாரப் " பத்திரிக்கைகள்

அவர்கள் எதிர்பார்க்கிறபடி
இனி நாம்
பரப்படையப் போவதில்லை
பதட்டம் கொள்ளப் போவதும் இல்லை

தீர்ப்பு இப்படி எனில்
அவர் தமிழக முதலவர்

தீர்ப்பு ஒருவேளை
அப்படியெனில்
அவர் மக்கள் முதல்வர்

முன் அனுபவம்
அவர்களுக்கும் இருக்கிறது
நமக்கும் இருக்கிறது

எந்த முதல்வர் என்பதைத்தான்
நீதி மன்றம் முடிவு செய்யப் போகிறதே ஒழிய
முதல்வர் இல்லை என்பதை அல்ல

அவர்களும்
தெளிவாகத்தான் இருக்கிறார்கள்
நம்மைப் போலவே

பத்திரிக்கைகள்தான்
குழம்பித் திரிகின்றன
அதனால் நம்மையும்
குழப்ப முயற்சிக்கின்றன

நாம் தொடர்ந்துத் தெளிவாய் இருப்போம்
நம் கடமையில் கவனமாய் இருப்போம்

மயில்களும் காகங்களும்

" நீ யார் பக்கம் "என
 மனவெளியில்
எப்போதும் போல
எண்ணிக்கையும் தரமும்
போரிடத் தயாராகி
அவனைக்  குழப்பின

இருவர் கைகளிலும்
கேடயங்கள்
விதம் விதமாய்
ஆயுதங்கள்

"எங்கும் எதிலும் எப்போதும்
வெற்றியை தீர்மானிப்பது நான்தான்"என
மீசையை முறுக்கியது எண்ணிக்கை

"தற்காலிக சந்தோஷமே
வெற்றி எனக் கொண்டால்
நீ சொல்வது சரி

நீடித்து நிலைத்து நிற்பது
வெற்றி எனச் சொன்னால்
அது நான்தான் "என
எப்போதும்போல
அடக்கமாகப் பேசியது தரம்

எகத்தாளமாகச் சிரித்தது எண்ணிக்கை
"நீடித்து நிலைத்து என்றால் எப்போது ?
போய்ச் சேர்ந்த பின்பா?

மூச்சுத் திணறி இறந்த பின்
வீசுகிற புயற் காற்று
பிணம் புரட்டித்தான் போகும்
உயிர் காக்காது " என்றது

பதிலேதும் பேசாது
தடுமாறித்   தரம் நிற்க

ஏற்கெனவே
குழப்பத்தை ரசித்த எண்ணிக்கை
இப்போது
குரங்காட்டம் போடத்துவங்கியது

அன்றாட நிகழ்வுகளில்
அநியாயக் காரனின் அட்டகாசங்கள்
களியாட்டம் போட

நியாயஸ்தனின் வாதங்கள்
தலை கவிழ்ந்து நிற்பது போல
அவனுக்குள்ளும் ஒரு  சிறுச் சறுக்கல்

தரத்தினை  விடுத்து
எண்ணிக்கையை
கூட்டலாமா என்ற
ஒரு பித்தலாட்ட எண்ணம்
அவனுள்  மெல்லத்  துளிர்ப்பதை
அவனால்ஏனோ  தவிர்க்க இயலவில்லை

Monday, June 6, 2016

வெள்ளத்தனைய.....

தெளிவடைந்தவர்கள்
யாரும்
அலட்டிக்கொள்வதில்லை
எதற்கும்

அவர்களுக்குத் தெரியும்
அவர்கள் கொடுப்பதெல்லாம்
இங்கிருந்து எடுத்ததுதான்

முடியுமானால் எடுத்ததை
செழுமைப்படுத்திக் கொடுப்பதிலும்
இன்னும் முடியுமானால்
எடுத்ததை விட
கூடுதலாக்கிக் கொடுப்பதிலும் மட்டுமே
கூடுதல் கவனம் கொள்கிறார்கள்

முதிர்ச்சியடைந்தவர்கள்
எவரும்
அகங்காரம் கொள்வதில்லை
 எதற்கும்

அவர்களுக்குத் தெரியும்
அவர்கள் எடுத்ததெல்லாம்
அவர்கள வரும் முன்பே
இங்கிருந்ததுதான்

முடியுமானால் எடுப்பதை
போதுமான அளவில் எடுப்பதிலும்
இன்னும் முடியுமானால்
குறைந்த அளவில் எடுப்பதிலும் மட்டுமே
அதிக ஆர்வம் கொள்கிறார்கள்

ஞானமடைந்தவர்கள்
எவரும்
மயக்கம் கொள்வதில்லை
எதற்கும்

அவர்களுக்குத் தெரியும்
அவர்களின் இருப்பு  அநித்தியமானது என்பதுவும்

அவர்கள் வரும் முன்பே  இருந்தது
அவர்கள் இல்லையெனினும்
இருக்குமென்பதுவும்
முடியுமானால் அவர்களின் இருப்பை
பயனுள்ளதாக்கப்  பார்க்கிறார்கள்

இன்னும் முடியுமானால்
நல்ல வழிகாட்டியாக
இருந்து போவதில் மட்டுமே
அதிக அக்கறை கொள்கிறார்கள்

Sunday, June 5, 2016

"இறைவி "

"இது என்ன கேள்விப்படாத
தமிழ்ச் சொல்லாய் இருக்கிறதே ?
இதற்கு என்ன பொருள்  "
என்றான் என் நண்பன்

"இறைவன்" என்கிற சொல்லைக்
கேள்விபட்டிருக்கிறாய் இல்லையா
அதைப் போல்தான் இது " என்றேன்

" ஓ அப்படியா
இது இறைவன் என்கிறச் சொல்லுக்கு
எதிர்ச் சொல்லா ?" என்றான்

நான் மிரண்டு போனேன்

"அடப்பாவி
இறைவனுக்கு எதிர்ச் சொல்
சைத்தான்

இது  இணைச் சொல்
இறைவனுக்குப் பெண்பால்"
என்றேன்

ஆணுக்குக்குப் பெண்ணும்
கணவனுக்கு மனைவியும்
முதலாளிக்குத் தொழிலாளியும்
எதிர்ச்சொல்லனெவே
பயிற்றுவிக்கப் பட்டவர்களுக்கு
சட்டெனப் புரிவது கொஞ்சம் சிரமம்தான்

Friday, June 3, 2016

படித்ததில் பிடித்தது

ஒரு மனிதன் நீண்ட நாளைக்குப் பிறகு
கல்யாணம் பண்ணிக் கொண்டான்.

மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது
எப்படி? என்று யோசித்து ஒரு முடிவுக்கு
வந்தான்.

கடை வீதிக்குப் போனான். கடையில் ஒரு
பொருளைப் பார்த்தான்.

இதுவரையில்
அவனுக்குப் பரிச்சயம் இல்லாத ஒரு பொருள்
அது.
‘‘அது என்னங்க?’’ என்று விசாரித்தான்.

‘‘அதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’ என்றார்
கடைக்காரர்.

‘‘அப்படின்னா என்னங்க... அது எதுக்கு
உபயோகம்?’’

‘‘இதுக்குள்ளே சூடான பொருளை வெச்சா
சூடாவே இருக்கும்! குளிர்ச்சியான பொருளை
வெச்சா குளிர்ச்சியாவே இருக்கும்!’’

‘‘அப்படியா அப்படின்னா அதுலே ஒண்ணு
கொடுங்க!’’ வாங்கிக் கொண்டு உற்சாகமாக
வீட்டிற்கு புறப்பட்டான்.

மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க
வேண்டும் என்பது அவன் திட்டம். அந்தத்
திட்டப்படி மேலும் சில பொருள்களை வாங்கிக்
கொண்டு வேகமாக நடந்து வீட்டுக்குள்
நுழைந்தான்.

‘‘சீக்கிரம் இங்கே வா!’’ என்று மனைவியை
அழைத்தான்.

அவள் வந்தாள். பார்த்தாள்.
‘‘என்னங்க இது?’’

‘‘இது ஒரு புதுமையான பாத்திரம்!’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம்! இதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’

‘‘எதுக்கு இது?’’ என்று தெரியாதது போல
கேட்டாள்.

‘‘இது சூடான பொருளைச் சூடாகவும்,
குளிர்ச்சியான பொருளைக் குளிர்ச்சியாகவும்
அப்படியே வெச்சிருக்கும்!
மனைவி கேட்டாள்: ‘‘உள்ளே என்ன இருக்கு?’’

அவன் சொன்னான்: ‘‘ஒரு கப் காபியும் + ஒரு
கப் ஐஸ்கிரீமும்!’’

மனைவி மயங்கி விழுந்தாள்.

ஒன்றைத் தெரிந்து கொள்வது என்பது வேறு;
அதைப் புரிந்து கொள்வது என்பது வேறு!

ஆன்மீகமும் அப்படித்தான். புரிந்து கொள்ள
வேண்டிய ஒன்று. அதைத் தெரிந்து
கொள்வதோடு நிறுத்தி விடுகிறவர்களுக்
குத்தான் தேவை இல்லாத குழப்பங்கள்
எல்லாம் வந்து சேர்கின்றன...

Wednesday, June 1, 2016

கண் கெட்ட பின்னே.....

ஒவ்வொரு பண்டிகையின் போதும்
சட்டைக்கு அளவு கொடுக்கையில்
"கொஞ்சம் வைத்துத் தை
வளர்கிற பிள்ளை " எனச் சொல்லி
கொஞ்சம் பெரிதாகவே தைத்துக் கொடுப்பாள் அம்மா
என்றைக்கோ...எவனோ..அதன் காரணமாய்
"தொள தொள மணி "என வைத்த பெயர்
இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது

கல்லூரிக்குள் நுழையும் நாள் முதலே
வேலைக்கான தயாரிப்புப் பணியில்
முழுவதுமாக என்னை முடக்கி வைப்பார் அப்பா
கல்லுரிக் கலாட்டா
நண்பர்கள் உல்லாசம் என
நான் கதைவிடுவதெல்லாம் கூட
சினிமா பார்த்துக் கற்றுக் கொண்டதுதான்

சம்பாத்தியம் தந்த தெம்பில்
கொஞ்சம் நான்
நடுத்தரம் மீறிய உல்லாசத்தில்
மிதக்க நினைத்தாலும்
ஏன் நடக்க நினைத்தாலும் கூட
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து
உபன்யாசம் செய்து என்னை
ஓய்ந்து உட்காரச் செய்வாள் மனைவி.

நடுவயதில்
திமிறித் தாவிய தேவைகளை
அடக்கி ஒடுக்கிய மிதப்பில்
அல்லது அலுப்பில்
கொஞ்சம் ஓய்ந்து சாய எத்தெனிக்கையில்
பால் வைத்த நெற்பயிறாய்
பருவம் எய்தினின்று
என்னை பதறச் செய்வர் பிள்ளைகள்.
அதனால்
தொடரோட்டம் தொடர்ந்து தொடரும்.

அனைத்து கடமைகளையும்
செவ்வனே செய்து முடித்து
நிகழ்காலக் காற்றைக் கொஞ்சம்
சுவாசிக்க முயலுகையில்
செத்த நாக்கிற்கு கொஞ்சம்
சுவை காட்ட நினைக்கையில்
"பழைய நினைப்பா பேராண்டி.."என
பரிகாசம் செய்வான் நண்பன்.

எனக்கென்னவோ..இப்போதெல்லாம்...
கிழிந்த சாக்குப் பையில்
அடுக்கி வைக்கப்பட்ட அடுக்கு இலையை
எடுக்க முயலும் ஒவ்வொரு முைற்யும்
"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி
கடைசி வரையில்
பச்சை இலையில் சாப்பிடாமலே போன
பாட்டியின் நினைவுதான்
அடிக்கடி வந்து தொலைக்கிறது.

என்ன செய்வது...
உடலிருக்கும் இடத்திலேயே மனதை வைப்பதும்
எப்போதும்
நிகழ்காலத்திலேயே நிலைத்து நிற்பதுமே
"வாழுதல்"என்பது கூட
எதிர்காலத்தின் நீட்சி
ஒரு முட்டுச்சந்தில்
முட்டி நிற்கையில்தான்
எல்லோருக்கும் புரியத் துவங்குகிறது.

மெய்நலம் போற்றிக் காத்து...

உலகிது விழிக்கும் முன்னே-நித்தம்
விழித்து எழுந்துப்  பாரு
உலகிது வியக்கும் வண்ணம்-உந்தன்
உயர்வது இருக்கும் பாரு

உடலினை வருத்தி நாளும்- உடற்
பயிற்சியைச் செய்துப்  பாரு
உடலது பணியாள் போல-உனக்கு
உதவிடும் முயன்றுப்  பாரு

உணவது வயிற்றில் பாதி-நல்ல
நீரும் காற்றும் மீதி
தினமிதை மறவா திருந்தால்-உன்னிடம்
நோய்நொடிக் கில்லை ஜோலி

ஓய்வதும் வேலை போல-தினமும்
அவசியம் என்றே அறிவாய்
ஓய்வதும் சக்திக் கூட்டும் -என்னும்
உண்மையை என்றும் மறவாய்

சுவரினை வைத்தே என்றும்-நல்ல
சித்திரம் வரையக் கூடும்
பழமொழி மேன்மை அறிந்தால்-எளிதாய்
பலநிலைக்  கடக்கக் கூடும்

தும்பதை விட்டு வாலைப்-பிடித்து
தோற்கிற அவலம் வேண்டாம்
மெய்நலம்  போற்றிக் காத்து-  எதிலும்
நிலையென நிற்போம்  வாராய்