Showing posts with label -. Show all posts
Showing posts with label -. Show all posts

Monday, June 26, 2017

முகமற்று ஏன் முக நூலில்...

பார்வைக் குறையுடன்
பிறந்த குழ்ந்தைக்கு
கண்ணாயிரம் எனப் பெயர் வைத்த
பெற்றோரின் மன நிலையைப்
புரிந்து கொள்ள முடிகிற எனக்கு

வீராச்சாமி எனப்
பெயரிடப்பட்டவன்
எதற்கும் எப்போதும்
பயந்தவனாய் உலவுவதைப்
புரிந்து கொள்ளமுடியவில்லை

மாண்பு மிகு என
அது கொஞ்சம் குறைவானவர்கள்
போட்டுக் கொள்வதனைக் கூட
மனச்சாட்சி உறுத்தல் எனப்
புரிந்து கொள்ள முடிகிற எனக்கு

முக நூலில்
தங்கள் முகம் மறைத்து
காரசாரமாய்
பிரச்சனைக்குரிய பதிவுகளாய்
பதிவிடுபவர்களை ஏனோ
புரிந்து கொள்ளமுடியவில்லை

பெண்கள் யுவதிகள்
என்றால் கூட
அதற்குப் போதிய காரணங்களிருக்கின்றன
ஆண்கள் பதுங்கிட
அப்படி என்ன அவசியமிருக்கிறது

குற்றாலம் போய்
குளிரடிக்கிறது என
குளியலறையில் சுடு நீரில்
குளிப்பதைக் கூடச்
சகித்துக் கொள்ளமுடிகிற எனக்கு

அருவியில்
குளிருக்கு அடக்கமாய் இருக்கட்டுமென 
போர்வையினைப் போர்த்திக் குளிப்பவரை
காணச் சகிக்கவில்லை
சிரிப்புத்தான் வருகிறது

ஆம் முகம் மறைத்து
முக நூலில்
உலவுவோர் நிலையினைப் போலவும்...

Wednesday, January 25, 2017

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

நிராயுதபாணியான
மிக மோசமான எதிரியையும்
இன்று போய் நாளை வா எனச் சொல்லிய
அவதாரப் புருஷர்களும்...

பகைவனுக்கருள்வாய் என
ஆண்டவனை வேண்டும்
பரந்து விரிந்த மனம் படைத்த கவிஞர்களும்...

வாடிய பயிரைக் கண்டு  வாடிய
கருணை மிக்க
அருளாளர்களும்

யாது ஊரே யாவரும் கேளிர்
எனும்  சொற்றோடர்  மூலம்
நம்மினத்தின்
விரிந்த மனப்பாங்கை
வெளிச்சமிட்டுக் காட்டியவர்களும் 

நமது நாட்டில்தான் சாத்தியம் எனும்
அளவு கடந்த
பெருமிதத்தோடு...

இந்த நாட்டில் குடிமகனாய் இருத்தலே
பெரும் பாக்கியம்  எனும்
அதீதச் செருக்கோடு

அனைவருக்கும் இனிய குடியரசு தின
நல்வாழ்த்துக்கள்

(இன்னும் நமக்கேயான பெருமிதங்களைப்
பின்னூட்டத்தில் தொடரலாமே )

Tuesday, June 7, 2016

எந்த முதல்வர் ?

மீண்டும் நம்முள் பரபரப்பூட்ட
பதட்டமூட்ட
முயற்சிக்கின்றன.....

செய்திகள் என்னும் முகமூடியணிந்து
கருத்தைப் பரப்பும்
"வியாபாரப் " பத்திரிக்கைகள்

அவர்கள் எதிர்பார்க்கிறபடி
இனி நாம்
பரப்படையப் போவதில்லை
பதட்டம் கொள்ளப் போவதும் இல்லை

தீர்ப்பு இப்படி எனில்
அவர் தமிழக முதலவர்

தீர்ப்பு ஒருவேளை
அப்படியெனில்
அவர் மக்கள் முதல்வர்

முன் அனுபவம்
அவர்களுக்கும் இருக்கிறது
நமக்கும் இருக்கிறது

எந்த முதல்வர் என்பதைத்தான்
நீதி மன்றம் முடிவு செய்யப் போகிறதே ஒழிய
முதல்வர் இல்லை என்பதை அல்ல

அவர்களும்
தெளிவாகத்தான் இருக்கிறார்கள்
நம்மைப் போலவே

பத்திரிக்கைகள்தான்
குழம்பித் திரிகின்றன
அதனால் நம்மையும்
குழப்ப முயற்சிக்கின்றன

நாம் தொடர்ந்துத் தெளிவாய் இருப்போம்
நம் கடமையில் கவனமாய் இருப்போம்

Monday, August 17, 2015

நாம் வெற்றி கொள்வோம் இனி வரும் தேர்தலிலேனும்

பதவிக்கான
தகுதி  இருந்தும்
பதவி  அடையாதவர்கள்
பிரச்சனைக் குரியவர்கள் இல்லை

அவர்கள்
சட்டெனச் சோர்ந்துபோய்
இலக்குவிட்டு  விலகிவிடுதலே
இங்குள்ள பிரச்சனை

பதவிக்குரிய
தகுதி இன்றி
பதவியடந்தவர்களாலும்
நிச்சயம் பிரச்சனை இல்லை

அவர்கள்
பதவியடைந்தும் தம்மை
தகுதிபடுத்திக் கொள்ளாததே
இங்குள்ள பெரும் பிரச்சனை

தகுதிக்குரியவர்கள்
பதவிபெறாததும்
பதவிபெற்றவர்கள்
தகுதியற்று இருப்பதும் கூட
இங்கு பிரச்சனையில்லை

பதவியின் பலமும்
தகுதி குறித்த   அறிவுமற்றவர்களே
பதவிக்குரியவர்களைத் 
தேர்வுசெய்பவர்களாக இருப்பதே
இங்குள்ள  பெரும் பிரச்சனை

இலைக்கும் கிளைக்கும்
நீரூற்றலை விடுத்து
இனியேனும்
வேருக்கு  நீரூற்றுவோம்

தலைமையையும் கட்சியையும்
விமர்சித்தலைவிடுத்து
இனியேனும்
வாக்காளர்களுக்கு விழிப்பூட்டுவோம்

தும்பைவிட்டு வாலைப்பிடித்து 
இதுவரை பட்டதெல்லாம்
போதும்  போதும்

கொம்புபிடித்து காளைகளை அடக்கி
நாம் வெற்றி கொள்வோம்
இனி வரும் தேர்தலிலேனும்
  

Wednesday, January 28, 2015

வரமா சாபமா ?

அளவு பொருத்து
மருந்தாகவும்
விஷமாகவும்
மாற்றம் கொள்ளும் அமுதாய்

சூழல் பொருத்தே
வரமாகவும்
சாபமாகவும்
மாற்றம் கொள்கிறது தனிமையும்..

தன்னுள்
ஆழம்போகத் தெரிந்தவனுக்கு
அற்புத முத்தெடுத்துத் தரும்
அந்த அதி அற்புதத் தனிமையே

தன் உள்
குப்பையைக் கிளறுவோனுக்கு
நாற்றத்தையும் சிதைவினையும்
தானமாகத் தந்து போகிறது

கூட்டத்திலும்
தனித்தும் விழித்தும்
இருக்கத் தெரிந்தோனுக்கு
தலைமையையை பரிசளிக்கும் தனிமையே

தனிமையிலும்
பரபரக்கும் மனத்தோனுக்கு
பதட்டத்தையும் வெறுமையையும்
சொத்தாக்கிச் சிதைத்துப் போகிறது

நிறமற்று
நிலம் வீழும் மழை நீர்
நிலம் பொருத்து
நிறம்பெறும் தன்மை போல்

தனிமைக்கும்
தனித்த குணமில்லை
மனம் பொருத்தே
தன்முகம் காட்டிப் போகிறது

ஆம்
தனிமை
வரமும் இல்லை
சாபமும் இல்லை

ஆம்
தனிமை
வரமும்தான்
சாபமும் தான்

Wednesday, January 21, 2015

" உம் "புராணம்

"மாதா
பிதா
குரு
தெய்வம்  "

என்றான் ஆன்மீக வாதி

"மாதா"வும் "
பிதா "வும் "
குரு "வும்தான் "
தெய்வம் "

என்றான் பகுத்தறிவு வாதி

"உம் தான் "
தேவையற்ற பிரிவினைகளின்
மூலம் என நவில்ந்தபடி
நகர்ந்தான் பொருள்முதல்வாதி

 "உம் தான் "
நமக்கு மூலதனம்
அதைவிடாது பெருக்கணும்
உறுதி கொள்கிறான் அரசியல்வாதி


"உம்மின்  "
உண்மை பலம் புரியாது
உம்மென  உலவுது
ஊமையாய் ஒரு பெருங்கூட்டம்

Friday, October 17, 2014

காற்று வாங்கப் போவோம்

காற்று வாங்கப் போனால்
கவிதை வாங்கி வரலாம்-இந்தக்
கூற்று மெத்த நிஜமே-இதை
உணர்ந்து தெளிந்தால் நலமே

இல்லந் தன்னில் அனலாய்
எரித்துக்  கொல்லும் தனிமை-தனித்துச்
செல்லும் போது நெஞ்சில்-தானே
பெருக்கித்  தருமே இனிமை

வீட்டுச் சுவற்றில் எங்கும்
ஒட்டி வைத்தச் செய்தி-நமக்கு
நாட்டு நடப்பைச் சொல்லும்-அதனால்
கருவும் தானே சுரக்கும்

மெல்ல விரியும் கதிர்கள்
மலர்ந்து சிரிக்கும் மலர்கள்-காணும்
உள்ளம் நிறைத்துப் போக-கவிதை
ஊற்று பெருகும் தானே

எனவே நாளும்----

காற்று வாங்கப் போவோம்
கவிதை வாங்கி வருவோம்-இந்தக்
கூற்றைச் சொன்ன கவியை -நாளும்
போற்றி நாமும் மகிழ்வோம்

Friday, January 24, 2014

இதுவும் ஒருவகை ,,,,,,,,,

தற்சமயம் மாநிலங்களவை தேர்தலுக்கான
வேட்பாளர்களை அ,தி,மு, க அதிகாரப் பூர்வமாக
அறிவித்துள்ளது.அதில் இருவர் தற்போது
மாநகராட்சி மேயராக இருப்பவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது

தென்மாவட்டங்களைக் குறிவைக்கும்
அண்ணா தி.மு.க.

வேட்பாளர் தேர்வில் புதிய வியூகம்
,
அனைத்து சமுகத்தினருக்கும்
வாய்ப்பளிக்கும் விதமாக
அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்

என்றெல்லாம்
வித்தியாசம் வித்தியாசமாக விதம் விதமாக
அலசி ஆராயும் பத்திரிக்கைகள்----

வேண்டுமென்றே நாம் யோசித்து விடக்கூடாது
என்பதற்காகவே இவர்கள் மேயர் பதவியை
ராஜினாமா செய்வதால் மீண்டும் தேர்தல்
நடக்க வேண்டி இருப்பது குறித்தோ
அதற்காக ஏற்படுகிற தேவையற்ற
 செலவு குறித்தோ
லேசாகக் கூட முனகவில்லை

தாம் விரும்புகிற இனத்தவருக்கு மதத்தவருக்கு
அவர்கள் மாநிலங்களவை பதவியைத் தரட்டும்
அவர்களுக்கு போதுமான வாக்குகள் இருப்பதால்
அது அவர்கள் இஷ்டம்.
அதை நாம் விமர்சிக்க முடியாது

ஆனால்  அதை ஏற்கெனவே பதவியில் இருப்பவர்களை
ராஜினாமா செய்யச் சொல்லி
அவர்களுக்குத்தான் தர வேண்டும்
என்பது என்ன கட்டாயம். ?

அவர்கள் பதவி கொடுக்க விரும்புகிற
 இனத்தில்,  மதத்தில்
இவர்களை விட்டால் மாநிலங்களவைக்குத்
தகுதியானவர்கள்இல்லையென்பது போல்
செயல்படுவது கூட
குறிப்பிட்ட இனத்தாரையும் மதத்தாரையும்
இழுவுபடுத்துதல் போலத்தான் இல்லையா ?

இந்த ராஜினாவால் நடக்கும் தேர்தலுக்கான செலவுக்கு
யார் பொறுப்பேற்றுக் கொள்வது ?

இதை ஏன் எந்தப் பத்திரிக்கையும்
மக்கள் முன் ஒரு கருத்தாக
 எடுத்து வைக்க முயலவில்லை ?

பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் இறந்தால்
மீண்டும் தேர்தல் வைக்காது வென்ற கட்சியிலேயே
ஒரு வேட்பாளரை அறிவிக்கச் செய்வதன் மூலம்
தேவையற்ற தேர்தலைத் தவிர்க்கலாமா  எனக் கூட
யோசிக்கிற கால கட்டத்தில் இது போன்று மீண்டும்
மீண்டும் தேவையற்ற செலவுகளை செய்ய முயல்வது
எந்த விதத்தில் நியாயம் ?

இது குறித்து  பதிவர்களின் விரிவான அலசலை
எதிர்பார்த்து இப்பதிவின் தலைப்பின் வாசகத்தை
முடிக்காது விட்டுள்ளேன்.

தங்கள் கருத்தை எதிர்பார்த்து..

வாழ்த்துக்களுடன் ...

Saturday, November 30, 2013

மரபுக் கவிதையும் ரவை உப்புமாவும்

எப்பொழுதும் எம்வீட்டில் குறைவு இன்றி
எப்பொருளும் எந்நாளும் இருக்கும் அதனால்
முப்பொழுதும் தப்பாது குறைகள் இன்றி
நளபாகம் படைத்திடுவாள் எந்தன் துணைவி

எப்படித்தான் சுதாரித்து இருந்தால் கூட
என்றேனும் ஒர்நாளில் சமையல் செய்ய
எப்படியோ பொருளொன்று குறைந்து போகும்
அப்போது சிலநிமிடம் குழப்பம் சூழும்

மல்யுத்தப் போட்டியிலே கீழே வீழ
மறுகணமே துள்ளியெழும் வீரன் போல
இல்லாத பொருள்குறித்தே எண்ணி இராது
சட்டெனவோர் முடிவெடுப்பாள் இல்லக் கிழத்தி

எதிர்க்கடைக்கு உடனடியாய் என்னை அனுப்பி
வறுத்தரவை அரைக்கிலோவும் அதற்குத் தோதாய்
கிளிநிறத்து மிளகாயும் வாங்கச் சொல்லி
உடனடியாய் செய்திடுவாள் உப்பு மாவே

நினைத்தவுடன் உடனடியாய் செய்யும் உணவு
உப்புமாபோல் உலகினிலே ஏதும் இல்லை
மனைவியர்க்கும் அவசரத்தில் உதவும் பதார்த்தம்
நிச்சயமாய் உப்புமாபோல் எங்கும் இல்லை

அதுபோல

எழுதுவது என்றெண்ணி அமர்ந்த பின்னே
எல்லாமே கற்பனையில் வந்து போகும்
எழுதிவிடத் துவங்கியதும் ஊற்று நீராய்
வார்த்தைகளும் சரளமாக வந்துச் சேரும்

எப்படித்தான்  ஆர்வமாக இருந்தால் கூட
என்றேனும் ஒருநாளில் கவிதைப் புனைய
எப்பொருளும் அமையாதுப் பூச்சிக் காட்டும்
எரிச்சலிலே எனைநிறுத்தி ஆட்டம் காட்டும்

வள்ளலுக்கு வருகின்ற வறுமை போல
வீரனுக்குள் வளர்கின்ற சோர்வு போல
உள்ளமதில் வெறுமையது சூழ்ந்த போதும்
அறிவதுவோ வேறுவழி ஒன்றைக் காட்டும்

"அச்சதற்குள் களிமண்ணைத் திணித்து எடுக்க
அழகான பொம்மையது வருதல் போல
சட்டத்துள் வார்த்தைகளை அடுக்கி எடுநீ
அழகான கவியொன்று கிடைக்கும்  "என்கும்

அதன்வழியே ஏழெட்டு எதுகை எடுத்து
அதற்கீடாய் மோனையையும் சேர்த்து எடுத்து
உடனடியாய் கவியொன்றைச்  செய்வேன் நானே
ஒருநொடியே ஆகுமதைச்  செய்யத் தானே

அதனால்

நினைத்தவுடன் செய்கின்ற உப்பு மாபோல்
உடன்கவிதை வேண்டுமெனில் தடங்கல் இன்றி
அனைவருக்கும் உதவுவது மரபு ஒன்றே
இளைஞரெல்லாம் இதையறிந்தால் நன்மை உண்டே