Friday, May 31, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (3 )

நான் காம்பவுண்ட் கேட்டைத் திறக்கிற
சப்தம் கேட்டதுமே நண்பனின் மகள் ஷாலினியும்
மகன் முகுந்தும் சட்டென "வாங்க மாமா "
எனக் குரல் கொடுக்க, நண்பனின் மனைவி மீனாட்சியும்
உடன் எழுந்து திரும்பி "வாங்க அண்ணே  "என
அன்புடன் அழைத்து வராண்டா இரும்புக்
கேட்டைத் திறக்க  என் நண்பன் கணேஷனோ
சுரத்தில்லாமல் "வாடா "என்றான்

ஒரு வார முடி அடர்ந்த அவன் முகமும்
குழி விழுந்தக் கண்களும் அந்தப் பழைய கைலியுடனும்
துண்டுடன் அவனைப் பார்க்க ஏதோ ஒரு மாதம்
பெரும் வியாதியில்  ஆஸ்பத்திரியில் கிடந்து
இப்போதுதான் மீண்டு வந்தவனைப் போல
இருந்தான்.அவனை இதற்கு முன்பு இது போன்ற
நிலையினில் நினைவுக் கெட்டிய அளவில்
பார்த்ததே இல்லை என்பதால் எனக்கு கொஞ்சம்
அதிர்ச்சியாகவே இருந்தது.

அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல்"என்னடா ஆச்சு
ஏன் இப்படி டல்லடிச்சுப் போய் இருக்கே"என்றேன்,
அவன் பதிலேதும் பேசவில்லை

அவன் மனைவி மீனாட்சிதான் மனச் சோகத்தையே
துடைத்தெறிவது போல முந்தானையால் முகத்தை
அழுத்தித் துடைத்தபடி பேசினார்

"என்னன்னு தெரியலைண்ணே .நாலு நாளைக்கு
முன்னாலே ராத்திரியிலே வயித்து வலின்னு
சொன்னார்எப்பவும் உஷ்ணத்துக்கு வர்ற
வயித்து வலிதானேன்னு சொல்லி
வெந்தயமும் மோரும் கொடுத்தேன்
சாப்பிட்டவர் அப்படியே வாந்தி எடுத்திட்டார்
அவர் அப்படி எல்லாம் வாந்தி எடுத்ததே இல்லை
அப்புறம் நைட்டு பூரம் அடிவயித்தைப் பிடிச்சுட்டு
வலியால துடிச்சுப்போயிட்டார்.அப்புறம்
காலையிலே மந்தையிலே  இருக்கிற டாக்டர் கிட்டே
போனோம்.அவர் ஊசி போட்டு மருந்து மாத்திரை
கொடுத்தார்.இரண்டு நாளா வலி தேவலைன்னு
சொன்னாலும் சரியா சாப்பிட முடியலை
சரியான தூக்கமும் இல்லை,
இப்ப திரும்பவும் வலிக்குதுன்னு சொல்றார்.
அதுதான் என்ன செய்யறதுன்னு தெரியாம
முழிச்சிக்கிட்டு  இருக்கோம் நல்லவேளை
நீங்களே வந்திட்டீங்க  " என்றார்

"சரி இவ்வளவு நடந்திருக்கே முன்னாடியே
ஏன் எங்கிட்டே சொல்லலை
ஒரு போன் போட்டிருந்தா வந்திருப்பேன்
இல்லை"என்றேன்

"நானும் சொன்னேன் அண்ணே நீங்க ஏதோ
அவசரமாய் ஊருக்குப் போயிருக்கீங்க
வர எப்படியும் ரெண்டு நாளாகும்.
தொந்தரவு செய்ய வேண்டாம்னு சொல்லிட்டாரு "
என்றார்

சரி அவனுக்கு இன்னமும் நம் மீது உள்ள கோபம்
தீரவில்லை எனவும் என்னைப்போலவே இது போல
எங்களிடையே வருகிற சிறுச் சிறு சண்டைகள்
வீட்டிற்குத் தெரிவது அசிங்கம் எனவும் நினைக்கிறான்
எனபதைப் புரிந்து கொண்டு  நானும்
"ஆமாம்  தங்கச்சி நானும் அவசர வேலையா
ஊருக்குத்தான் போயிருந்தேன், இன்னைக்குக்
காலையிலேதான் வந்தேன் "எனச் சொல்லி நிறுத்தி
அவன் முகத்தைப் பார்த்தேன்

அதுவரை இறுக்கமாக முகத்தை
வைத்திருந்தவன் நான் இப்படிச் சொன்னதும்
சப்தமாகச்  வயிறு குலுங்க சிரிக்கத் துவங்கினான்
அவன் சிரிப்பதைப் பார்க்க என்னாலும் சிரிப்பை
அடக்கமுடியவில்லை நானும் அவனைக்
கட்டிப்பிடித்தபடி சப்தமாகச் சிரிக்கத் துவங்கினேன்

முகுந்தும் ஷாலினியும் நாங்கள் இருவரும் இப்படி
சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சிரிப்பதைப் பார்த்ததும்
என்ன நினைத்தார்களோ அவர்களும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டும் எங்களைப்
பார்த்த படியும் கைதட்டிச் சிரிக்கத் துவங்கினார்கள்

மீனாட்சி என்ன நடக்கிறது என்பது தெரியாமல்
குழம்பியபடி எங்களையே ஆச்சரியமாகப்
பார்த்துக் கொண்டிருந்தார்

உண்மையில் நாங்கள் இருவரும் சேர்ந்து சிரிக்கும்
கடைசிச் சிரிப்பு அதுவாகத்தான் இருக்கப் போகிறது
எனத் தெரியாமலேயே நாங்கள் ஆனந்தமாகச்
சிரித்துக் கொண்டிருந்தோம்

(தொடரும்)

Wednesday, May 29, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி -(2)

சில குறிப்பிட்ட சமயங்களில் மனம் சம நிலை
இழந்து விடுவதால் உணர்வுகள் பேயாட்டம்
ஆடிவிடுவதனால வருகிற விளைவா அல்லது
உணர்வுகள் பேயாட்டம் போடத் துவங்கியதும்
மனம் சம நிலை இழந்துவிடுவதனால் வருகிற
விளைவா என  மிகச் சரியாகக்
கணிக்க முடியவில்லை

ஆயினும் எப்படித்தான் கவனமாக இருந்த போதிலும்
நம்மையும் மீறி சில சமயங்களில் நம் வயது, தரம் மீறி.
நமக்கு உரிமையுள்ள இடங்களில்
சில தடித்த வார்த்தைகள்நம்மையறியாதே
வந்து விழுந்து தொலைந்து
கேட்பவரை மட்டுமில்லாது நம்மையும் பல நாள்
நிம்மதி இழக்கச் செய்துவிடுவது நடந்தேவிடுகிறது

என் நண்பன் விஷயத்தில் கூட பல நாள் அவனிடம்
அவன் அலுவலகத்திற்குச் செல்லுகையில் தனியாக
ஒரு கேரியரி ல் கீழ் அடுக்கில் சாதம் அடுத்து
நடுத்தட்டில் காய்கறி மேல் தட்டில்  அப்பளம் ஊறுகாய்
மூன்று பிளாஸ்டிக் பாட்டில்களில் சாம்பார்
ரசம் மோர் பின் இலை என எடுத்துச் செல்வது
தேவையற்ற அலட்டல் விஷயம்.
வக்கணையாகச் சாப்பிட வேண்டுமென்றால்
காலையில் வீட்டில் அதுபோல் சாப்பிட்டு விட்டு
குறைவாக அலுவலகத்தில் சாப்பிடும்படியாக
ஒரு சிறு டிபன் பாக்ஸ் மற்றும் தண்ணீர் மட்டும்
கொண்டு செல்லலாம்.
இதனால் ஒரு நாள் போல வீட்டில்
மனைவிக்குத் தரும் சிரமம் குறையும் நமக்கும்
தேவையற்ற சுமைகளைச் சுமப்பது குறையும்
எனவும்  வற்புறுத்தியுள்ளேன்

நண்பனின் மனைவி கூட அப்படிச் செய்தால்
அவர்களுக்கும் கொஞ்சம் காலைவேளை
சிரமம் குறையும் எனவும் பிள்ளைகளைக் கவனிக்க
ஏதுவாகவும்  இருக்கும் எனவும் என் முன்னாலேயே
சொல்லியுள்ளார், இருவர்  பேச்சையும்வம்படியாகக்
கேட்காமல் என் நண்பன் தன் பழக்கத்தைத்
தொடர்ந்ததால் என் மனத்தில் இதுவிஷயத்தில்
அவன்மேல் வன்மம் வளர்ந்துள்ளது என எனக்கே
நான் மிக மட்டமாகப் பேசிய பின்புதான்
எனக்கேப் புரிந்தது

அதைப்போலவே என நண்பனும் இந்த
தெருவோரக்கடைகளில் பஜ்ஜி வடை
சாப்பிடுவதனால் வரும் கெடுதி குறித்து
அதிகம் பேசி இருக்கிறான்.
தெருவோரத்தில் தூசி விழும் இடங்களில் தயாரிப்பது./
மற்றும் திறந்தபடி வைத்திருப்பது/பயன்படுத்திய
எண்ணையையே மீண்டும் பயன்படுத்துவது/
என்பதையெல்லாம் விளக்கிச்சொல்லி பலமுறை
அவனுக்காகவேணும் அதை மட்டும் விட்டுவிடும்படி
பலமுறை கெஞ்சி இருக்கிறான்,நானும் அதைக்
கண்டுகொண்டதில்லை என்கிற கோபமே திடுமென
அவனை அப்படிப் பேச வைத்திருக்கிறது எனவும்
அவன் பேசிய பின்புதான் என்னாலும் புரிந்து கொள்ள
முடிந்தது,அவனும் என்னைப்போல் தனியாக
யோசிக்கையில் இதைப் புரிந்து கொண்டிருப்பான்
என நான் புரிந்து கொண்டேன்

வழக்கம்போல ஒரு வாரம் குற்ற உணர்வில்
கழிந்ததும் இரண்டு பேரில் மிக மோசமாகப்
பேசியவனாக நானே இருந்த படியால் நானே
அலுவலகம் விட்டு வந்ததும்
அவனைப் பார்க்கக் கிளம்பினேன்

இந்த நேரம் என்றால் அவன் தினசரி அட்டவணைக்
கணக்குப்படி நன்றாக ஒரு குளியல் போட்டு
பட்டையடித்து ஒரு துண்டைமட்டும் போர்த்தியபடி
மொட்டைமாடியில் உலாத்திக் கொண்டிருப்பான்
அந்த மாதிரியான மாலை கடந்த இரவுப் பொழுதுகள்
மிக ரம்மியமாக இருக்கும்,அப்போதுதான்  உலக
நடப்புகள் முதல் உள்ளுர் விஷயங்கள் வரை
துவைத்து அலசி காயப் போடப்படும் என்பதால்
அரட்டைப் பிரியனான எனக்கும் அந்தப் பொழுதுகள்
ரொம்பப் பிடிக்கும்,இன்று ஒரு அரைமணி நேரம்
பரஸ்பரம் நீவி விட்டுக் கொண்டாலும் பேசுவதற்கும்
நிறைய  சூடான நாட்டு நடப்புகள் இருந்ததால்
வீட்டிலேயும் கொஞ்சம் தாமதாகத்தான் வருவேன்
என சொல்லி வந்திருந்தேன்

இந்த மன நிலையில் நான்  வந்த  இரு சக்கர
வாகனத்தை அவன் வாசலிலேயே
 நிறுத்திவிட்டு   அவன் வீட்டு காம்பவுண்டுக்குள்
நுழைந்ததும் வாசல் வராண்டாவில் ஈஸி சேரில்
சாய்ந்துப் படுத்தபடி  சேவிங் செய்யப்படாத  சோர்ந்த
சோக முகத்துடன் அவன் இருக்க அவன் காலடியில்
கால்களை பிடித்துவிட்டபடி அவன் மனைவி
அமர்ந்திருக்கஅவன் பக்கவாட்டில்  விசிறியபடி
மகனும் மகளும்  இருந்தது
எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது

(தொடரும் )\

Monday, May 27, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி...


நண்பன் என்று சொன்னால் இருவருக்கும் பல
விசயங்களில் ஒத்த ரசனை இருக்கும்,
ஒத்த கருத்து இருக்கும்,
குறைந்த பட்சம் ஒத்த லட்சியமாவது இருக்கும்
இப்படி எதுவுமே இல்லாது நெருக்கமான
நண்பர்களாக இருந்தது நானும் கணேசனும்தான்

அவன் தீவீர சிவாஜி ரசிகன்,
நான் அதிதீவீர எம் ஜி ஆர் ரசிகன்,நான் எப்போதும்
 எதையாவது அசைபோட்டுக்கொண்டே
இருக்க விரும்புபவன்
அவன் வீட்டில் தவிர வெளியில் தண்ணிர் கூட
குடிக்கமாட்டான்.எனக்கு ஜாலியாக பேச ஆட்கள்
கிடைத்தால் போதும் நேரம் காலம் பார்க்கமாட்டேன்
அவன்  எத்தனை முக்கியமான அலுவல் இருந்தாலும்
மிகச் சரியாக ஒன்பது மணிக்கு குறட்டை
விட்டுக் கொண்டிருப்பான்.சில சமயங்களில்
கருத்து மோதல் அதிகமாகையின் நான்
நட்புக்காக விட்டுக் கொடுத்துச் செல்ல முயல்வேன்,
அவன்அவன் கொண்ட கருத்தை
வலியுறுத்துவதில்தான்மிகச் சரியாக இருப்பான்.

அதனால்  பலசமயம் மனக்கசப்பு ஏற்பட்டு
இரண்டு மூன்று நாள் பேசாமல் இருப்போம்.
அப்புறம் எங்கள் இருவருக்குமே போரடிக்கத்
 துவங்கிவிடும்.பின் யார் அந்தச் சண்டையில்
தேவையில்லாமல் அதிகம் பேசினோமோ அவர்களே
''சாரி''யெனச் சொல்லிவிட்டு முதலில்
பேசத் துவங்கிவிடுவோம்.இந்தச் சண்டை எப்படித்தான்
சுதாரிப்பாக இருந்தாலும் மூன்று மாதத்திற்கு
ஒருமுறை வந்து போய்விடும்

இத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் ஒரே பள்ளி
ஒரே ஊர்  என்னுடைய தந்தையும் அவனுடைய
தந்தையும்நண்பர்களாக இருந்தது எங்கள் நட்புக்கு
அடித்தளமாகஇருந்தது என நினைக்கிறேன்
அதனால்தான் என்னவோ இத்தனைமுரண்களுக்கு
 இடையிலும் பள்ளி நாட்கள் முதல்
பணியில் சேர்ந்த பிறகும் இப்போது திருமணமாகி
குழந்தை குட்டிகள் என ஆகிவிட்டபோதும் கூட
எங்கள் நட்பில் இதுவரை எந்தத் தொய்வும் ஏற்பட
வாய்ப்பில்லாமல் போனது என்றும் .என நம்புகிறேன்

ஆனாலும் ஆறு மாதங்களுக்கு முன்
எங்களுக்குள் மீண்டும் ஒரு பெரிய
வாக்குவாதம் வந்துவிட்டது.

அதற்குக் காரணம் அவன் எப்போதும்
அலுவலகத்திற்குச் செல்கையில்
சாப்பிடத்தான் அலுவலகம் போகிறவன் போல
தினமும் இலை தண்ணீர் பாட்டில் சகிதம் போவது
எனக்கு அதிகம் எரிச்சல் கொடுத்துத்தான் வந்தது
அதை ஜாடைமாடையாகச் சொல்லி யிருந்தாலும் 
 அது குறித்து அழுத்திப் பேச  மிகச்  சரியான
சந்தர்ப்பம் வாய்க்காது இருந்ததால்
என் மன  நிலையையும்   சொல்லாது இருந்தேன்

இந்த நிலையில்தான் எனக்கும் அவனுக்கும்
 நண்பனாக இருந்த முரளி இது குறித்து
அவனைக் கிண்டல் செய்து பேசியதுதான்
எனக்குள்ளும் கொஞ்சம் அதிக வெறுப்பேற்றியது

எனக்கும் அவன் கூற்று யோசித்துப்பார்க்கையில்
சரியெனவேப் பட்டதால் கொஞ்சம் அவனுக்கு
கோபம் வரும்படியாகவே சொன்னால்
மாறினாலும் மாறிவிடுவான் என்கிற நினைப்பில்
 "ஏண்டா இந்தக் காலத்திலும்
இப்படி அம்மாஞ்சியா இருக்கே எனக்கே
" எனக் கேட்டுவிட்டேன்

எப்போது யாருக்கு எந்த வார்த்தை அதிகப்
பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாமல்
சில சமயங்களில் நாம் பயன்படுத்திவிடுகிறோம்
அல்லது சனி வாயில் வந்து அப்படி பயன்படுத்தச்
செய்துவிடுகிறது என நினைக்கிறேன்,அதுவும்
நான்குபேர் சுற்றி இருக்கையில் ...

"அம்மாஞ்சி " என பயன்படுத்திய வார்த்தை
அவனைப் பாதித்ததற்கும் மேலாக என்னைப்
பாதிக்கவேண்டும் என நினைத்துச் சொன்னானோ
அல்லது அவன் வாயிலும் சனி புகுந்துவிட்டானோ
என்னவோ " நான் அம்மாஞ்சியாக இருந்தாலும்
இருந்துவிட்டுப் போகிறேன், ஆனால்
நல்லாத் தான் இருப்பபேன் உன்னை மாதிரி
"தின்னிப்பெருச்சாளி மாதிரி கண்டதைத் தின்னு
சீக்கு வந்து சாகமாட்டேன் " எனச்சொல்லிவிட்டான்.

அப்போது நான் தெருவோரக் கடையில்
இரண்டாவது பஜ்ஜி முடித்து அடுத்து ஒரு
மசால் வடையை எடுத்தபோது சொன்னதாலா
அல்லது எனக்கும் சுற்றி நண்பர்கள் சிலர்
இருந்தபோது சொன்னதாலா எனத் தெரியவில்லை

நானும் சட்டென "பாப்போம்டி,உன்னை மாதிரி
பொத்திப் பொத்தி உடம்பை வளர்த்தவந்தாண்டி
பொசுக்குன்னு போயிருக்காங்க.என்ன மாதிரி
ஆட்களெல்லாம் நூறுதாண்டித்தான் போவாம்டி "
என வார்த்தைகளைக் கொட்டிவிட்டேன்

அப்போது இப்படி ஏன் இவ்வளவு மோசமாகப்
பேசினேன் ஏன் பேசினேன் நான்தான் பேசினேனா
அல்லது விதிதான் என்னுள் இருந்து பேசியதா
என எண்ண எண்ண இப்போது கூட
பல இரவுகள் எனக்கு  தூக்கமில்லாமல்தான்
கடந்து கொண்டிருக்கிறது

(தொடரும்


Saturday, May 25, 2013

வாலிபத்து டி.எம்.எஸ்ஸும் சிறுவன் நானும்

மரியாதைக்குரிய டி.எம்.எஸ் அவர்கள் உச்சத்தில்
இருந்த காலக்கட்டம்.ஆண் குரல் பாடல் என்றால்
அதிகமாக டி.எம் எஸ் அவர்களும்
அடுத்துசீர்காழி அவர்களும்ஏ.எம் ராஜா மற்றும்
பி பி எஸ் அவர்களும் என இருந்த காலம்

மதுரையில் டி வி.எஸ் நகரை ஒட்டிய
சத்தியசாயி நகரில் அவரின் பங்களா  இருந்தது
அவர் மதுரைக்கு வரும் காலங்களில்
இந்த பங்களாவில்தான் தங்குவார்.அவர் பகவான்
சாயிபக்தர் என்பதால் அவர் தங்குகிற நாட்களில்
அதிகாலை அருகில் இருந்த பகவான் சாயி
கோவிலில் சில பக்திப்பாடல்களைப் பாடுவார்

அந்தக்  கோவிலின் பூசாரியாக அப்போது
எனது உறவினர் பையன் ஒருவன் இருந்தான்
அவர் இலவசமாக தங்கிக் கொள்ளும்படியாக
அவர் பங்களாவிலேயேஒரு அறையை
ஒதுக்கிக் கொடுத்திருந்தார்
அப்போது இந்தப் பகுதி அதிக ஜன நடமாட்டம்
இல்லாத பகுதியாக இருக்கும்,.அவர் மதுரைக்கு
வந்திருப்பதோ இந்த பங்களாவில்தான்
தங்குகிறார் என்பதோ பொது மக்களுக்கு
அதிகம் தெரியாது

எனது ஊருக்கும் சத்தியசாயி நகருக்கும் இடையில்
ஒரு கண்மாய் மட்டும் தான் இருந்தது.அப்போது
டெலிபோன் வசதிமட்டுமே இருந்தகாலம்
அவர் வருகிற தகவல் சென்னையில் இருந்து
அந்தப் பூசாரிப் பையனுக்கு  வந்தவுடன்
எனக்கும் போன் செய்து சொல்லிவிடுவான்

நான் டி.எம் எஸ் அவர்களின் பாடல்களைக்
கேட்கவேண்டுமே என்பதற்காக
அந்தப் பூசாரிப்பையனிடம் இருந்து
தகவல் வந்ததும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து
விடிந்தும் விடியாத  தனியாக அந்தக் கண்மாய்க்
கரைவழி நடந்து வந்து சத்தியசாயி கோவிலில்
காத்திருப்பேன்

சுமார் ஐந்தரை மணியளவில் அந்த அகன்ற நெற்றியில்
விபூதிப்பட்டை விளங்க அந்தத் தும்பைப் பூ  வெள்ளை
வேட்டி தரையத்  தழுவ கட்டி அவர் நடந்து வருகிற
அழகே அவ்வளவு அழகாயிருக்கும்

கோவிலுக்கு வந்தவர் பிரகாரத்தை
ஒரு சுற்று சுற்றுவிட்டு நெடுஞ்சாண்டையாக விழுந்து
 வணங்கி எழுந்ததும் கண்களை மூடி
 ஒரு ஒரு மணி நேரம் பக்திப்பாடலகளைப் பாடுவார்.
அப்போது அவருடைய கண்களில் இருந்து
சாரைசாரையாக கண்ணீ ர்பெருகி வழியும்
இசையினைப் பற்றி ஏதும் அறியாத நானும்
என் நண்பனும் சேர்ந்து விக்கி விக்கி
அழுதபடி இருப்போம் எங்கிருக்கிறோம்
என்ன நடக்கிறது என்பது கூட
அப்போது என்க்குத் தெரியாது,

முதலில் பிரபலமானவர்
ஒருவரின் பாடிக் கேட்கிற ஆவலில் வந்த நான்
அவர் இறைவனுக்காக ஆத்மார்தமாகப் பாடுகிற
அந்தப் பாடலைக் கேட்டு அதன் தெய்வீகச் சக்தியை
அறிந்தது முதல் அங்கு அவர் வருவதைப்  பார்க்கவும்
அவர் பாடலைக் கேட்பதையும் ஒரு தவமியற்றச்
செல்வது போலவே எண்ணித் தொடர்ந்து பல நாட்கள்
கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்

இசையின் சக்தியை இறைவன் இசை வடிவானவன்
என்கிற தகவலை எல்லாம்
பிற்காலங்களில் தெரிந்து கொண்ட போது எனக்கு
இந்தக் காட்சி நினைவுக்கு வருவதோடு அல்லாமல்
கண்களும் கலங்கத் துவங்கிவிடும் ,இன்றுவரை
அதற்கான காரணம் எனக்கு விளங்கவில்லை

அந்தத் தன்னிகரில்லாப் பாடகன் நேரடியாக
தெய்வத்திற்காக உலகை மறந்து பாடிய
பாடல்களை கேட்கிற பாக்கியம்
எனக்குக் கிடைத்தே என் வாழ்வில் கிடைத்தற்கரிய
பல பாக்கியங்களில் மிக முக்கியமானதாக
எண்ணி இன்றும் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்

தமிழுலகு இருக்கிற வரை நிச்சயம்
அவர் குரல் தமிழகத்தின்  ஒவ்வொரு நொடியும்
ஏதாவது ஒரு இடத்தில் ஒலித்துக் கொண்டுதானிருக்கும்
தமிழ் இசை  உலகுக்கு செய்யவேண்டியதை
அவர் தன் வாழ்வில் செய்து முடித்துவிட்டதான
திருப்தியை நிச்சயம் அவரும் அடைந்திருப்பார்

அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக் கொள்வோமாகFriday, May 24, 2013

ஆலையில்லா ஊரில்...

அவசரத்தில் போகிற போக்கில்
எதிர்படும் நண்பனை
விசாரித்துப்போகும் "மினிச் சுகத்தை "
"டுவீட்டுகளிலும்

அவசியமாக தவிர்க்க முடியாது
காத்திருக்கும் தருணங்களில்
சந்தித்த நண்பனுடன்
உரையாடும் "தனிச் சுகத்தை "
"முக நூலிலும் "

விடுமுறை நாட்களில்
ஊர்க்கோடி பாலத்தில் அமர்ந்து
சாவகாசமாகப் பேசும் "அற்புதச் சுகத்தை"
"பதிவுப் பக்கங்களிலும் "

அனுபவித்தபடி என்னை நான்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்

என்ன செய்வது
கடமைச் சுமை அழுத்த
கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக்  காட்டுக்குள் வசிப்பவன்
முழு நிலவின் அழகையும்
மனதைக் குளிர் விக்கும்
அந்தப் பனிப் பொழிவையும்
குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில்
கண்டு  தானே
" மெய்மறக்க  " முடியும்


Thursday, May 23, 2013

பழநிமுருகனும் நானும்

எதிர்பார்ப்புகள் எதுமின்றி
எப்போதும் உறவு கொள்வதால்
எனக்கு
உறவுகளும் அதிகம்
நண்பர்களும் அதிகம்

அதைப் போலவே
வேண்டுதல்கள் ஏதுமின்றி
சன்னதிக்குச் செல்வதால்
எனக்கும்
பழநி முருகனுக்கும்
பழக்கம் ரொம்ப நெருக்கம்

திருவிழா நாட்களில் அவன்
எப்போதும் கோவிலில் இருப்பதில்லை
சன்னதி திறந்ததும்
தாவிக் குதித்து வெளியேறிவிடுவான்
மீண்டும்
நடை  சாத்துகையில்தான்
கோவிலுக்குள் காலடி வைப்பான்

இன்றும் அப்படித்தான்
மயிலினை உலாவவிட்டு
என் எதிரில்தான் அமர்ந்துகொண்டான்

தக்க சமயம் இதுதானென
மெதுவாக காரணம் கேட்டேன்
சிரித்த முகத்துடன்தான்
என்னோடு பேசத் துவங்கினான்

"உண்மையில் எனக்கு
ஆத்திகர்களை விட
நாத்திகர்களைத்தான்
ரொம்பப் பிடிக்கும் "என்றான்
நான் அதிர்ந்து போனேன்
அவனேதான் தொடர்ந்து பேசினான்

"ஆத்திகர்களைப் போல நாத்திகர்கள்
அதிகம் என்னை தொந்தரவு செய்வதில்லை.
 காவடிக்குள்ளும் பால் குடத்திற்குள்ளும்
கோரிக்கைகள் ஆயிரம்  வைத்து என்னை
இம்சை படுத்துவதில்லை " என்றான்

நான் பணிந்து வணங்கிச் சொன்னேன்
" நீ கொடுப்பவன் என நம்பித்தான்
உன் கோவில் தேடி வருகிறார்கள்
வருகிறவர்களில் நல்லவர்களும் இருக்கலாம்
தகுதியானவர்களாகப் பார்த்து நீ
கொஞ்சம் தயை செய்யலாமே" என்றேன்

முருகனின் முகத்தில் லேசான
மாறுதல் தெரிந்தது

"இந்த மனிதர்களுக்கு நான்
எதைக்  கொடுக்காது இருக்கிறேன்
பஞ்ச பூதங்களைப்
படைத்துக் கொடுத்துள்ளேன்
அதை அடக்கி ஆளும்
அறிவினைக் கொடுத்துள்ளேன்
சக்தியைக் கொடுத்துள்ளேன்
சிந்திக்கும் திறனும் கொடுத்துள்ளேன்
இன்னும் போதாது போதாது என
என் வாசல் வந்து நின்றால்
நான் என்ன செய்யக்கூடும்
நிலம் கொடுத்து
விதை கொடுத்து
நீரும் கொடுத்து
சக்தி கொடுத்து
பயிரிடும் அறிவும் கொடுத்து
பிழைத்துகொள் என அருளினால்
மீண்டும் என்னிடமே வந்து
அடிவயிற்றில் பசி
அனலாய் எரிக்கிறது
எட்டேஎட்டு இட்லியும்
தொட்டுக்கொள்ள ஏதுவாக
கெட்டியாக சட்டினியும்
இருந்தால் நல்லது என்றால்
நான் என்ன செய்யக் கூடும் "என்றான்

நான் கொஞ்சம் பழக்கத்தை
கெடுத்துக் கொண்டேனோ என
பயந்துதான் போனேன்.

பின் தீர்க்கமான குரலில்
சண்முகனே பேசினான்
"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே கொடுத்துவிட்டேன்
இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே
கோவணாண்டியாகவே காட்சியும் தருகிறேன்
இதற்குமேல் நான் என்ன செய்யட்டும்" என்றான்

திருமுருகன் முகத்தில் தாண்டவமாடுவது
கோபமா கவலையா
என்னால் ஏதும் அனுமானிக்க இயலவில்லை

அதற்குள்
சன்னதியின் மணியோசைச் சப்தமும்
பக்தர்களின் அரோகரா சப்தமும்
குன்றெங்கும் பட்டுத் தெறித்தது
நானும் விழிமூடித் தியானித்து
லேசாக விழி திறந்தேன்
பழநி முருகன் எதிரில் இல்லை
அவன் இருந்து போனதன் அடையாளமாய்
எங்கும் சந்தன மணமே நிறைந்திருந்தது

(வைகாசி  விசாகம் இன்று )(மீள் பதிவு )

Tuesday, May 21, 2013

சமை யலறை கூட போதிமரம்தானே

முன்பெல்லாம்
ஒரு காரியத்தை செய்து முடித்ததும்
ஒரு செயலை வென்று முடித்ததும்
அதிலே லயிக்கத் துவங்கிவிடுவேன்
அந்தச் சுகத்தில் சில நாள்
வெறுமனே இருக்கத் துவங்கிவிடுவேன்

நாலுவகைக் காய்கறியோடு
அப்பளம் வடையோடு
உண்ட சுகத்தோடு வரும்
ஒரு அசாத்திய களைப்பைப்போல
அதைத் தொடர்ந்து வரும்
ஒரு அருமையான தூக்கத்தைப்போல

அதிகாலையில் இருந்து
அடுக்களையில் தனியாய் போராடி
அனைவருக்கும் இதமாய் பரிமாறி
அவசரம் அவசரமாய் உண்டு முடித்தும்
அலுப்பில் ஓய்வெடுக்க முயலாது

மீண்டும் அடுத்த வேளைக்கென
பாத்திரங்களை கழுவி முடித்து
சமயலறையை ஒழுங்கு செய்துவைத்து
அடுப்பதனை மீண்டும் பற்றவைக்கும்
அருமை மனைவியைக் கண்டது முதல்

இப்போதெல்லாம்
ஒரு காரியத்தை செய்து முடித்ததும்
ஒரு செயலை வென்று முடித்ததும்
அதிலிருந்து உடன் விடுபட்டுவிடுகிறேன்
அடுத்ததில் உடன் லயிக்க்கத் துவங்கிவிடுகிறேன்

புத்தித் தெளிவடைதலே ஞானமெனில்
அதைத் தருமிடமே போதிமரமெனில்
சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே
அதைத் தன் செயலால் போதிக்கும்
மனைவி கூட நமக்குப் புத்தன்தானே

Monday, May 20, 2013

பிரபஞ்ச சக்தியும் நாமும்

வெள்ளிக் கிண்ணத்தில் அமுதத்தை ஏந்தியபடி
தாயின் தவிப்போடு பிரபஞ்சம்
வெளியே பரிதவித்திருக்க

தாளிடப்பட்ட சிறிய வீட்டினுள்
தாழ்பாள் அகற்றத் தெரியாது
பசியுடன் தவித்துக் கொண்டிருக்கிறோம் நாம்

வேண்டும் வேண்டும் என நேர்மறையாக
கேட்பதையெல்லாம் அள்ளிக் கொடுக்கும் ஆர்வத்தில்
பிரபஞ்சம் வெளியே துடித்துக் கொண்டிருக்க

வேண்டாம் வேண்டாம் என எதிர்மறையாக
வேண்டாதையெல்லாம் தொடர்ந்து கேட்டபடி
துயரத்தில் உழன்றுகொண்டிருக்கிறோம் நாம்

நேர்மறையான  வேண்டுதலுக்கு வாரி வழங்கவும்
"அது அப்படியே ஆகட்டும் " என ஆசி வழங்கவுமே
அருளப்பட்ட பிரபஞ்சச் சக்தியிடம்

எதிர்மறையானவைகளைக் கேட்டுக் கேட்டே
எதுவும் கிடைக்காது நொந்து போகிறோம் நாம்
ஏமாற்றத்தில் வெந்து சாகிறோம் நாம்

ஒளி வேண்டிக் கேளாது இருள் விலகக் கேட்டும்
வளம் வழங்கக் கேளாது வறுமை போக்கக் கேட்டும்
சுகம் நிறையக் கேளாது துயர் நீக்கக் கேட்டும்

நாமும் வாழ்வில் எதுவும் பெறாது
 பிரபஞ்சத்தையும் கொடுக்க விடாது
வாழ்வில்"தப்பாட்டம் "ஆடி  நோகும் நாம்
இனியேனும்
பிரபஞ்ச சக்தியை புரிய முயல்வோமாக

இனியேனும்
கேட்கத் தெரிந்து
பெறவேண்டியதைப் பெற முயல்வோமாக
தட்டத் தெரிந்து
 திறவாத வாயில்களைத் திறக்க அறிவோமாக
தேடத் தெரிந்து
அடையாத உச்சங்களை அடைந்து மகிழ்வோமாக

Sunday, May 19, 2013

பதிவு மேடை

 இந்த மேடை நமக்குப்
போதுமானதாகவே இருக்கிறது
பொருத்தமானதாகவே இருக்கிறது

மேடை சிறிதெனினும்
வெளிச்சம் குறைவெனினும்
பார்வையாளர்களும்
அதிகமில்லையெனினும்

நமக்கு இந்த மேடை
மிகவும் பிடித்தமானதாகவே இருக்கிறது

ஆடை அலங்காரச்  சுமைகளின்றி
போலி முக வேஷங்களின்றி
நமது குளியறையில் பாடுதல் போல்
நமது தோட்டத்தில் ஆடுதல்  போல
இயல்பாகவே இருக்க  முடிவதாலே

நமக்கு இந்த மேடை
மனம் கவர்ந்ததாகவே இருக்கிறது

இருள் உருவங்களாய் அல்லாது
பார்வையாளர்கள் பெரும்பாலோர்
பார்க்கும்படியாகவே இருப்பதாலே
பார்வையாளர்கள் அனைவருமே
படைப்பாளிகளாகவே இருப்பதாலே

நமக்கு இந்த மேடை
உத்வேகமளிப்பதாகவே  இருக்கிறது

நேரக்கணக்கின்றி  நம் இஷ்டம்போல்
மேடை ஏற முடிவதாலும்
பண்பட்ட பார்வையாளர்களின்
பாராட்டையோ விமர்சனத்தையோ
உடனுக்குடன் பெற்றுவிட முடிவதாலே

அதிக  உயரமும்
வெளிச்சமும் சப்தமும்
ஆரவார ரசிகர்கள் நிறைந்த
அந்த  அலங்கார மேடையினும்

அளவு சிறிதெனினும்
வெளிச்சம் குறைவெனினும்
பார்வையாளர்கள் கூட்டம்
அதிகமில்லையெனினும்

உயிரோட்டமுள்ள
இந்தச் சின்ன மேடையே

உயர்வானதாகவும்
உண்மையானதாகவும்
நமக்கானதாகவும்
நிலையானதாகவும்
என்றென்றும் நமக்குள்
நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கிறது
நமக்குள் நிலையாக
நங்கூரமிட்டுக்கொண்டும் இருக்கிறது

Saturday, May 18, 2013

கேள்விகளும் பதில்களும்

கேள்வி வேள்விகளில் கிடைக்கும்
வரங்களே பதில்களாயினும்
வரங்களே மீண்டும் வேள்வித்தீயை
பற்றவைத்துப் போவதே
வாழ்வின் சுவாரஸ்யம்

பதில் கிடைத்த கேள்விகளை விட
குழப்புகிற பதில்களும்
பதிலறியா கேள்விகளும்
புதிய சிந்தனையை விதைத்துப்  போவதே
வாழ்வில் அற்புதம்

கேள்விகளுக்கான பதில்கள் கூட
கேள்விக்கானதாக இல்லாது
கேட்கப்பட்டவருக்கானதாய் இருப்பதாலேயே
கேள்விகூட பலசமயங்களில்
குழம்பி மௌனமாகிவிடுகிறது

"நல்ல கவிதை நூலுக்கு
எது தேவை "என்கிற கேள்வியை
நால்வருக்குமுன் விரித்தபோது

இளைஞன்   "அனுபவ அறிவு " எனச் சொல்ல
ஆங்கில வழிகற்றவன்   "மொழி அறிவு "எனச் சொல்ல
 யதார்த்தவாதி "கற்பனை " எனச் சொல்ல
எழுத்தாளனோ "நல்ல பதிப்பகம்  " எனச் சொல்ல
நான்  குழம்பியும் போனேன்
மௌனமாகியும்   போனேன்

 இருப்பது மறந்து  இல்லாதது  குறித்தே
எப்போதும்   நினைத்திருப்போர்
நிறைந்திருக்கும் உலகினில்

"கேள்வி வரைத்தன்று கேள்வி அதுகூட
கேள்வி பெறப்பட்டார் வரைத்து "
என்றேப் படுகிறது எனக்கு
உங்களுக்கு ?

Thursday, May 16, 2013

மொக்கை குறித்தொரு மொக்கை

அவசரமாய் வேலையிருந்தும்
நேரத்தின் "கன "மறிந்தும்
அழகான பெண்பார்த்து
அசந்துபோய் நிற்பதனை..

ஆள்தரம் தெரியாது
மணிகேட்ட பெண்ணுடனே
நாள்கணக்கில் பேசஎண்ணி
வாய்பிளந்து கிடப்பதனை...

ராங்கால்தான் என அறிந்தும்
பேசியது பெண்ணானால்
போங்காட்டம் ஆடஎண்ணி
திரும்படயல் செய்வதனை

சொல்லிநிதம் அறுத்ததையே
சொல்கூட மாற்றாது
சொல்லிவதம் செய்வதனை
பேச்சில்சுகம் பெறுவதனை

சொல்வதற்கு ஏதுமற்றும்
சொல்லுகின்ற திறனுமற்றும்
சொல்லிவிட முயல்வதனை
வாசகனைக் கொல்வதனை

முகநூலில் பெண்படமே
முகப்பாக இருக்குமெனில்
அகமகிழ்ந்து நாள்தோறும்
"லைக்"போடும் கொடுமைதனை

சாறெடுத்த கரும்பதனை
சக்கையெனச் சொல்லுதல்போல்
ஓர்சொல்லில்  சுருக்கமாக
மொக்கையெனச் சொல்லலாமே ?

(மொக்கைக்கு விளக்கம் கேட்ட
பதிவுலக பிதாமருக்காக)

Wednesday, May 15, 2013

"அந்த விஷத்தில்" ரஜினி அவர்களும் கமலும்

நெருக்கமான காதல் காட்சியில்
நண்பனான நடிகையின் கணவன்
நினைவில் அடிக்கடி வந்து போக
பதறியபடி நடித்தனைச் சொல்லி
சக்திக்குள் கால்கள் இருப்பினும்
தாமரையாய் பூக்கிறார் ஒருவர்

தான் புதுமையானவன் என
விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக
அறையின் அந்தரங்கங்களை
மேடையில் விரித்துக்காயப் போட்டு
"தொகுப்பாளினிக்கும் " முத்தம் கொடுத்து
 பால்ச் சங்கெடுத்து
விஷமூட்டிப் போகிறார் ஒருவர்

யாரும் எட்டிப்பார்க்கமுடியாதபடி
அந்தரங்கமாய் அந்தப்புரமாய்
படுக்கையறையை வைத்துக் கொள்ளுவதையோ
அறைக்குள் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தோ
சமூகம் அக்கறை கொள்ளாத போது
அவர்கள் மட்டும் ஏன்
சந்தர்ப்பம் கிடைக்கையில்
நடுத்தெருவில் பாய் விரிக்கிறார்கள்

ஒருவேளை

அவசரமாயினும்
வீட்டில் வசதி இல்லையாயினும்
கோவணம் கட்டியவன் எல்லாம்
குளக்கரைதான் போகவேண்டும்

நாகரீக உடையணிந்தவன்
சமூக அந்தஸ்துள்ளவன்
நடுத்தெருவில் மலம் கழிப்பது கூட
நமக்காகத்தான் என்கிற மனோபாவம்
நமக்குள் மண்டித் தொலைத்ததாலா ?

Tuesday, May 14, 2013

பாவப்பட்ட அவன்

உட்புறம் தாளிட்டுக்
கதவருகில் அமர்ந்தபடி
யாரேனும் வரமாட்டார்களாவென
வெகு நேரம் காத்திருந்து
மனச் சோர்வு கொள்கிறான்

இழுத்து அடைக்கப்பட்ட
ஜன்னலருகில் அமர்ந்தபடி
அறையினைக் கொதிகலனாக்கும்
வெக்கையில் புழுக்கத்தில் தன்மீதே
கழிவிரக்கம் கொள்கிறான்

தனிமைத் துயர்
குரல்வளை நெறிக்க
யாரேனும் அழைக்கமாட்டார்களாவென
தொலைபேசிக்கு அருகமர்ந்து
மனம் சலித்துப் போகிறான்

யாராவது சிரித்தால்
சிரிக்கலாமென்று ஆவலோடும்
யாராவது பேசினால்
பேசலாமென்று ஆர்வத்தோடும்
காலமெல்லாம் காத்துக்கிடந்தே
கவலை மிகக் கொள்கிறான்

விளைச்சலைப் பெற
முதலில் விதைத்தலும்
வேண்டியதைப் பெற
முதலில் கொடுத்தலும்
காரியம் வெற்றிபெற
முதலில் துவக்குதலும்
அவசியமென்பதை அறியாமலேயே...
துவக்க வேண்டியது
தான்தானென்பது புரியாமலேயே...

எதனையோ எவரையோ எதிர்பார்த்தபடியே
இன்றும் அவன் எப்போதும்போல்
காத்திருந்து காத்திருந்து
வெந்து நொந்துச் சாகிறான்
பாவப்பட்ட அவன்....

நாம் ஏன் பதிவராய்த் தொடர்கிறோம் ?

கோழையை வென்று
வீரனெனப் பெயர் பெறுவதைவிட
வீரனிடம் தோற்றுக் கோழையெனப்
பெயர் பெறுவது
நமக்குச்  சிறந்ததாகப் படுவதாலா  ?

கஞ்சன் தரும்
வள்ளல் பட்டத்தை விட
வள்ளல் தரும் கஞ்சன் பட்டம்
நமக்குக் கொஞ்சம்
உயர்வானதாகப்  படுவதாலா ?

முட்டாளிடம் பெறும்
அறிஞன் பட்டத்தை விட
அறிஞன் தரும் முட்டாள் பட்டம்
நமக்குக்  கூடுதல்
மகிழ்வளிக்கச்  செய்வதாலா  ?

நல்லவன் என
அயோக்கியன் தரும்.சான்றிதழை விட
நல்லவன் தரும்அயோக்கியச்   சான்று
நம்மைக்  கொஞ்சம்
பெருமை கொள்ளச்  செய்வதாலா  ?

சராசரி வாசகன் தரும்
கவியரசுப் பட்டத்தை விட
பதிவர்கள்  தரும் "மொக்கைப்" பட்டம்
நமக்குக்  கொஞ்சம்
அதிகப் பரவசம் தந்து போவதாலா ?

Saturday, May 11, 2013

வழிப்பயணமும் வாழ்க்கைப் பயணமும்

பயணத்தின் நோக்கம்
எதற்கோ எங்கோ
பயணப்படுபவர்களுக்கெல்லாம்
இலக்காக ஒரு ஊர் இருக்கத்தான் செய்கிறது

அவரவர் வசதிக்குத் தக்கபடி
வாகனங்களையும்
சக்திக்குத்  தக்கபடி
வேகத்தையும் முடிவு செய்தபடி
எல்லோரும் விரைந்து
பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்

எப்படித் தெளிவானவர்களாக இருப்பினும்
குறிப்பற்ற சந்திப்புச் சாலைகளில்
பயணிக்கும் திசையறியாத போது
கொஞ்சம் குழப்பம் நேரத்தான் செய்கிறது

எந்தகைய வாகனத்தவராயினும்
தூரம் தெரியாத வேளைகளில்
போய்ச் சேரும் நேரம் அறிய முடியாத போது
மனம்  கொஞ்சம் தளரத்தான் செய்கிறது

ஆயினும்
முன்னரே அந்தச் சாலைகளில்
பயணப்பட்டு அறிந்தவர்கள்
பயணிப்பவர்களுக்காக
அக்கறையோடு வைத்துச் சென்றிருக்கிற

தூரம் காட்டும் மைல்கற்களும்
சந்திப்புப் பெயர்ப்பலகைகளும்

பண்பட்ட கதைகள் போலவும்
கருத்துள்ள கவிதைகள் போலவும்

நம்பிக்கையூட்டுவது மட்டுமல்லாது
சரியான வழிகாட்டியும்தான் போகிறது

அதனைச் சரியாகப் புரிந்து
பயன்படுத்திப்  பயணிப்பவர்களின் பயணம்
எளிதானதாகவும்
சுகமானதாகவும்
சுவாரஸ்யமானதாகவும் மட்டுமல்ல
விரைவானதாகவும் அமைந்தும்தான்   போகிறது

Friday, May 10, 2013

உன்னழகுப் போதையிலே........

சேலைகட்டி அந்திவேளை
நீநடந்து போகையில
பாலையான சாலைகூட
சோலையாகிப் போகுதடி

விட்டுவிட்டு பார்த்தபடி
எட்டுவைச்சுப் போகையிலே
பட்டமரம் துளிர்க்குதடி
பாதையெல்லாம் மணக்குதடி

குடமெடுத்து நீரெடுத்து
இடுப்பசைய நடக்கையிலே
சொரணயத்த வீதிகூட
சொர்க்கலோகம் ஆகுதடி

அன்னமென நீ நடந்து
சொர்ணமென்னைக்  கடக்கையிலே
ஒன்னுமத்த கரிநாளும்
திரு நாளாய் மாறுதடி

நீநடந்த பாதையிலே
நான்நடந்து போனாலே
வானகத்தில் நடப்பதுபோல்
மனம்மகிழ்வு கொள்ளுதடி

உன்னழகு போதையிலே
நாளெல்லாம் நான்உளறும்
ஒன்னுமத்த வார்த்தைகூட
கவிதைபோலத் தோணுதடி

Thursday, May 9, 2013

சிரிப்பின் பலமறிவோம்


சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

Tuesday, May 7, 2013

சூட்சுமம் ?

நாம்தான் சூட்சுமம் தெரியாது
செக்கு மாடாய்
சுற்றிச் சுற்றித் திரிகிறோமா  ?

அழகிய மலரினைப்போல
குழ்ந்தையின் சிரிப்பினைப்போல
அன்றாட விடியலைப்போல

அழகானவை
இனிமையானவை
உயர்வானவை எல்லாம்

ஆடையின்றி
எளிமையாய்
மிக அருகாமையில்
நம்மைச் சுற்றியே
வலம் வருகையில்

நாம் தான்
கண்ணை மூடி
காட்சி தேடி
மூடனாகத் திரிகிறோமா  ?

நாம் தினம் எதிர் கொள்ளும்
சுனாமிச் சீற்றங்களும்
பூகம்ப அதிர்வுகளும்
எரிமலை குழம்புகளும் கூட
நம்முள்
எவ்வித சலனங்களையும்
ஏற்படுத்தாது போக....

வெகு சிலருக்கோ.....
...
முதலிரவில் மறுத்துச் சொன்ன
ஒரே ஒரு வார்த்தை.கூட..
கை மாறி மாறி வந்து சேர்ந்த
ஒரு சிறு கனி.கூட..
அலைந்து ஓய்ந்துச் சாய்ந்த
அடி மரத்து நிழல் கூட
விழிபடைதலுக்கு
போதுமானதாகிப் போக
போதி மரமாகி போக

நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோமா  ?

நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்தும்
சூட்சுமம் அறியும்  உபாயமறியாது ம்
 நாளும் சவமாய் வாழ்ந்தே சாகிறோமா ? 

Friday, May 3, 2013

ஒட்டக் காய்ச்சிய உரை நடையே

காதல் உணர்வு  பூக்கையில்
சேர்ந்தே பிறந்து பரவும்
மகரந்த மணமே

வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே

கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே

மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
 கூர்மிகுக்  கோடாலியே

தனிமைத் துயர் போக்கி
ஏகாந்த சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே

குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு  பான மே

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே

தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச்  தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவோ

கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்
என்றும்போல உன் அருளை
எமக்குநீ வாரிவழங்கிச் செல்