Tuesday, June 30, 2020

கொரோனா கூட முகவுரையே

சில வரன்முறைகளுக்கு உட்பட்டே
நம் உடல் நம்மை
ஆரோக்கியமாய் உலவவிடுகிறது

நாவின் போக்கில்
மனதின் இழுப்புக்கு
நாம் அந்த வரன்முறைகளை மீறுகையில்..

தன் எதிர்ப்பை அது
சிறு சிறு நோயாக வெளிப்படுத்தி
எதிர்ப்பைப் பதிவு செய்கிறது.

பதிவுகளை அலட்சியப்படுத்தி
நாம் நம்போக்கில் தொடர்கையில்
பெரும் எரிச்சல் கொள்கிறது

அது நம்மை முடக்கி வைத்து
தன்னை சில நாட்களில்
தானே சரி செய்து கொள்கிறது..

சில வரன்முறைகளுக்கு உட்பட்டே
இப் பிரபஞ்சமும்
வாழத்தக்கதாய் விரிந்துக் கிடக்கிறது

ஆசையின் போக்கில்
ஆணவத்திற்கு அடிபணிந்து
நாம் அந்த வரன்மு\றைகளை மீறுகையில்..

தன் எதிர்ப்பை அது
சிறு சிறு பருவ மாறுதல்களால
பதிவு செய்து காட்டுகிறது

பதிவுகளை அலட்சியப்படுத்தி
நாம் நம் போக்கில் தொடர்கையில்
அது மெல்லத் தன் தன்மை மாறுகிறது

அது நம்மை முற்றிலுமாக
முடக்கி வைத்து
தன்னைத் தானே சரி செய்து கொள்கிறது

மனச் சாட்சியை மீறி
தர்ம எல்லைகளைக் கடக்கையில்
சட்டத்தின் தலையீட்டைத் தவிர்க்க இயலாது

இயற்கை நியதிகளை மீறி
பொதுவெளி அறம் கடக்கையில்
பேரிடர்களை நிச்சயம் தவிர்க்க இயலாது

இந்தப்  பாலபாடம் அறிந்து
தெளியாத வரையில்
அழிவு என்பது தொடர்கதையே..

கொரோனா தொற்றுக் கூட
இந்தப்  பாலபாட நூலுக்கான
சுருக்கமான முகவுரையே

பீலிபெய் சாகாடும் அச்சிறும்..

  • அவர்கள் பேச்சை கொஞ்சம்
கவனமாகக் கேளுங்கள்
நெருங்கிய நண்பர்களின் நயவஞ்சகத்தால்
நைந்து போனவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்கள் கண்களைக் கொஞ்சம்
கருணையோடு பாருங்கள்
உரிமை என்கிற பெயரில்
உறவுகளால் அடிமையாக்கப்பட்டு
அவதிப் படுவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்களுக்கு மனதுக்குஆறுதலாய்
இரண்டு வார்த்தைகள் கூறுங்கள்
தோல்வி தவிர ஏதுமறியாது
துவண்டு போனவர்களாய்
அவர்கள் இருக்கலாம்

நம்முடையை சிறு கவனம்
நம்முடைய  லேசான கருணைப் பார்வை
நம்முடைய  ஒரே ஒரு ஆறுதல் பேச்சு
என்ன செய்துவிடப் போகிறது என
அசட்டையாக மட்டும் இருந்துவிடாதீர்கள்

அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு
இறுதியாக உங்களிடம்
அடைக்கலமென வருவோருக்கு
உங்களது சிறு அலட்சியம்
உங்களது சிறு முகச் சுழிப்பு
அவர்களுக்குள் ஒரு பெரும்
பிரளயத்தைஉண்டாக்கிவிடக் கூடும்

பீலிபெய் சாகாடும் அச்சிறும்  அப்பண்டஞ 
சால மிகுத்துப்பெயின் நேரும் அவலம்
உங்கள் சிறு அசிரத்தையால் கூட
அவருக்குள் நேர்ந்து விட வாய்ப்புண்டு
அந்தப் பாவம் நிச்சயம் நமக்கு வேண்டாம்
அதுவும் இந்தக் கொரோனா காலத்தில்
எனவே....yaathoramani.blogspot.com

Sunday, June 28, 2020

கொரோனா நல்லது

ஞானம் தேடிப் போகப்
புத்தனுக்குக் கூட
மூன்று
வருத்தம் தரும் நிகழ்வுகள் தேவைப்பட்டது

நான்..
எனது...
எனக்கு...
என்பதனைக் கடந்து

எனக்குப் பின்.....
நான் இல்லையெனில்...
தடுக்கமுடியாததை
ஏற்றுத்தானே ஆகணும்..
எனவெல்லாம்

அனுபவங்களும்
நீதிபோதனைகளும்
தராத மாற்றத்தைத் தர  

சுய நலம் கடந்துத்
தெளிவாய் யோசிக்கும்
புதிய ஞானத்தைப்  பெற
....

உயிரற்ற
கடத்துபவரின்றி
நகரக் கூட முடியாத

கண்ணுக்குத் தெரியாத
இந்தக் கொரோனாக் கிருமியே
போதுமானதாய் இருக்கிறது..

அந்த வகையில்
கறை நல்லது என வரும்
விளம்பர வாசகம் போல்

இந்தக் கொரோனா கூட
நல்லது தானோ எனத் தோணுகிறது
சில நாட்களாய் எனக்கும்...

Friday, June 26, 2020

கட்டுப்பட்டதைக் கொண்டு...

இரண்டும் ஒன்றை ஒன்று
சார்ந்தே இருப்பதெனினும்
இரண்டில் ஏதோ ஒன்றே
எப்போதும் நம் கட்டுப்பாட்டில்..

கட்டுப்பட்டதைக் கொண்டு
கட்டுப்படாததை சமாளித்தலே
ஆகக் கூடியது மட்டுமல்ல
அதுவே புத்திசாலித்தனமும் கூட

கட்டுப்பட்டது வரவெனில்
கட்டுப்படாத செலவதனை ..

கட்டுப்பட்டது கிடைப்பதெனில்
கட்டுப்படாத எதிர்பார்ப்பினை ...

கட்டுப்பட்டது உடலெனில்
கட்டுப்பட்டாத மனதினை...

கட்டுப்பட்டது வேகமெனில்
கட்டுப்படாத தூரத்தினை

கட்டுப்பட்டது யோகமெனில்
கட்டுப்படாத காமமதை

இப்படி உதாரணங்கள்  நூறு எதற்கு
மிகச் சுருக்கமாகவும்
நமக்கு மிகவும் நெருக்கமாகவும்
                                                                        கட்டுப்பட்ட சமூக இடைவெளியைக் கொண்டு                                                                   கட்டுப்படாத கொரோனாவை கட்டுப்படுத்துதல் போலவும்                                     
கட்டுப்பட்ட கீழ்த்தாடையினைக்  கொண்டு
கட்டுப்படாத மேல்தாடையை
தினமும் சமாளித்தல் போலவும்...Tuesday, June 23, 2020

நீரோடு செல்கின்ற ஓடம்...

நல்ல படிப்பு
நல்ல வேலை
என்னை
ஊரைவிட்டும்
உறவைவிட்டும்
பிரித்துப் போடும்

சம்பளத்தொகையே
என் இல்லத்திற்கும்
என் அலுவலகத்திற்க்கான
இடைவெளியை
நிர்ண்யித்துப் போகும்

வீட்டுக்கடன்
பிடித்தத் தொகையே
எனக்கான
சம்பாதிக்கும் பெண்ணை
முடிவு செய்துப்போகும்

யாரை அழைத்துக் கொள்வது
அல்லது
யாரிடம் பராமரிக்க அனுப்புவது
என்கின்ற தீர்மானமே
நான் தகப்பனாவதை
நிர்ணயிக்கும் காரணியாகிப் போகும்

திங்கள் காலை முதல்
வெள்ளி மாலைவரை
என் உணர்வுகளும்
என் செயல்களும்
அலுவலக திசை நோக்கியே நீளும்
இல்லம் கூட
அலுவலகம் போல வேகும்

அவசியப் பேச்சுக்கே
நேரமில்லை என்பதால்
எங்களுக்கான
அன்னியோன்னிய பேச்சுக்கள்
அடியோடு நசுங்கிப்போகும்

மறுவார தயாரிப்புக்கு
சனிக்கிழமை பலியாகும்
நாவுக்கு ருசிகாட்டவோ
உடலுக்கு சுருதி கூட்டவோ
ஞாயிறு ஒதுக்கீடாகிப்போகும்

என் இஷ்டப்படி எதுதான் நடந்தது என
அவ்வபோது முனங்கி
தொடர் ஓட்டத்தின்
துயர் தாங்காது
மன இறுக்கத்தின்
வலி பொறுக்காது
குறிப்பிட்ட கால இடைவெளியில்
என்னைக்
கடித்துக் குதறி சின்னா பின்னமாக்கி
தன் துயர் குைற்க்க முயன்று
தோற்று வீழ்வாள் துணை

என் இஷ்டபடியும்
இதுவரை எதுதான் நடந்தது
என்பதை விளக்கிச் சொல்லி
அவளுக்கு ஆறுதல் சொல்லி
நானும் ஆறுதல் பெறலாம் என
எத்தெனிக்கையில்
கடந்தகால இழப்புகளும்
எதிர்கால கவலைகளும்
நிகழ்கால பொறுப்புகளும்
என்னை
கையாலாகாதவன் ஆக்கிப்போகும்

இத்தனைக்கும் இடையில்......

ஆற்றங்கரையோரம்
வியாபாரத்திற்க்காக
பரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்
சாகாதிருப்பதற்க்காக
அவ்வப்போது தெளிக்கப்படும்
துளி நீர் போல
உயிர் நீர் போல

"மின்னோடு வானம் தண் துளி தலை இ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆர் உயிர்
முறை வழிபடூஉம்..."என்ற
பூங்குன்றனின் அருள்வாக்கு
அவ்வப்போது ஆறுதல் சொல்லிப் போகும்

Saturday, June 20, 2020

தொடர் முயற்சி

எப்போதேனும்
கூடுதல் எடை கொண்ட
யானைக் கூட்டம்
பாறையினைக் கடக்கப்
பதியாதத் தடம்...

தொடர்ந்து
எடையே இல்லா
எறும்புக் கூட்டம் கடக்கப்
பதிவதனைக் கண்டு
முன்பு  நான் ஆச்சரியப்பட்டதுண்டு..

பலவானும் பண்டிதனும்
அலட்சிய மனோபாவத்தால்
வெற்றி எல்லையைத்
தொடத் தடுமாறுகையில்....

பலவீனனும் பாமரனும்
தொடர்முயற்சியால்
மிக எளிதாய்த் தொடுதல் இப்போது
எனக்கு அதிசயமாகப் படவில்லை..

ஆம் அதன் காரணமாகவே
முயல் ஆமைக் கதையின்
முக்கியத்துவமும்
தொடர்ந்து முயலாமையின்
பேரிழப்பும் இப்போது
மிக எளிதாய்ப் புரிகிறது எனக்கு..

(சொல்லிக் கொள்ளும்படியான
மொழிப் பாண்டித்தியமோ
பண்டை இலக்கியப் பின்புலமோ
இல்லையெனினும் தொடர்ந்து
பத்தாண்டு காலமாக  எழுதுவதாலேயே
  131 நாடுகளை சார்ந்த சுமார் 6.25 இலட்சம்
பக்கப் பார்வையாளர்களை பெறமுடிந்தது
ஏறக்குறைய  50 ஆயிரம் பேர்களின்
மறுமொழியினையும்....அனைவருக்கும்
எனது மனமார்ந்த நன்றியினையும்
நல்வாழ்த்துக்களையும் இந்தப்  பதிவின் மூலம்
சமர்ப்பித்துக் கொள்கிறேன்.. அன்புடன் .
yaathoramani.blogspot.com 

Friday, June 19, 2020

விதையும் விதைப்பந்தும்

அனுபவத்தில்
விளைந்து முதிர்ந்த
பயனுள்ள வீரியமிக்க விதைகளை
வீணாக்கிவிட விரும்பாது
அறிந்தவர் தெரிந்தவர் அனைவரிடத்திலும்
பயன்பெறட்டும் எனக் கொடுத்துப் போகிறேன்...

மரியாதை நிமித்தம்
பணிவுடன் கனிவுடன்
பெற்றுக் கொண்ட போதிலும்
எவரும் விதைக்கவோ விளைவிக்கவோ
இல்லையெனத் தெரிந்த போது
மிக நொந்து போகிறேன்

இப்போதெல்லாம்
விதைகளை யாரிடமும் கொடுத்தலைத் தவிர்த்து
விதைப் பந்துகளாக்கி
வெளிதனில் விதைத்துப் போகிறேன்

அது மெல்ல முளைவிட
முகமறியாதவர்கள் ஆயினும்
அதன் மதிப்பறிந்தவர்கள்
அதனைப் போற்றிப் பாதுகாக்க
மிக மகிழ்ந்து போகிறேன்..

Thursday, June 18, 2020

கொரோனாவும் சனாதனமும்

மிக நெருக்கமானவர்கள் ஆயினும்
தொட்டுவிடாது மிகக் கவனமாய்
ஒதுங்கியிருந்து.....

எவ்வளவு தெரிந்தவர்கள் ஆயினும்
மேலே பட்டுவிடாது மிகக் கவனமாய்
விலகியிருந்து.

சில மணி நேர,ம் தான் ஆயினும்
வெளியில் சென்று வந்தாலே கவனமாய்
உடல் நனைத்து

சில நிமிடஙகள்தான் ஆயினும்
சாவு வீடு சென்று வந்தால் கவனமாய்
முழுக்குப் போட்டு

வெளியில் உண்ணாது
இடைவெளிப் பராமரிப்புக்குக் குடைபிடித்து

..............................

சனாதனவாதிகளின் சடங்குகள் அனைத்தையும்
விருப்பம் இருப்பினும்
இல்லாதே போயினும்
கட்டாயம் கடைப்பிடிக்கும்படி
சனாதனதர்ம எதிர்ப்பார்களையும்
மாற்றிச் சிரிக்கிறது
நாளும் பல்கிப் பெருகும
சைனச் சனியன் கொரோனா...

Monday, June 15, 2020

மாடிமனை கோடியென..

மாடிமனை கோடியெனத்
தேடியோடிச் சேர்த்ததெல்லாம்
மனதுக்குள் என்னமாற்றம் செய்யும் ? -அது
இன்னுமின்னும் எனக்கேட்டே கொல்லும்

பகலிரவாய் நூறுபெண்ணை
வகைவகையாய் அனுபவித்தும்
சுகம்போதும் எனமனமா சொல்லும் ?அது
அடுத்தொன்றைத் தேடித்தான் செல்லும்

நடுக்கமுடல் எடுத்தபின்னும்
நரைதிரையும் நிறைந்தபின்னும்
இருந்ததெல்லாம் போதுமென்றா எண்ணும் ?-மனது
இருக்கநூறு காரணங்கள் சொல்லும்

மொத்தமாகக்  கற்றுவிட்ட
வித்தைகளும் தத்துவமும்
சித்தமதில்  என்னவினை செய்யும் ?-அது
கூடுதலாய்க்குழப்பத்தான் செய்யும்

குட்டியிலே சங்கிலியில்
வளர்ந்தவுடன்  சணல்கயிற்றில்
கட்டிவைத்தால் யானையது  அடங்கும்-மாறிச்
செய்துவைத்தால் சங்கடந்தான் மிஞ்சும்

மனமதனை அடக்கிவைத்து
அறிவதனை வளர்த்தெடுத்தால்
தினம்நன்மை தடையின்றித் தொடரும்-மாறின்
சங்கடமே தொடர்கதைபோல் வளரும்

மதமென்ற ஓரமைப்பை
முன்னோர்கள்  ஆக்கிவைத்த
மகத்துவத்தை  மனமுணர்ந்தால்  போதும் -முன்னே
சொன்னதெல்லாம் மிக எளிதாய் விளங்கும்  

Sunday, June 14, 2020

இணைதலும்..இணைத்தலும்..

பிரிதலுக்கும்
பிரித்தலுக்கும் இடையில்
இணைதலுக்கும்
இணைத்தலுக்கும்
ஓரெழுத்து மட்டும் வித்தியாசமில்லை
ஒரு நூறு வித்தியாசமிருக்கிறது

பிரிதல் இணைதல்
சோகமானதாகவோ
சுகமானதோ
இதில் வன்முறையில்லை
இதில் கொள்கை திணிப்பில்லை
அடுத்தவர் தலையீடில்லை

பிரித்தல் இணைத்தல்
சோகமானதோ சுகமானதோ
இதில் வன்முறையுண்டு
கொள்கைத் திணிப்புண்டு
அடுத்தவர் தலையீடு அதிகம் உண்டு

ஜாதி மதத்தில் இருந்து பிரித்து
இனத்தில் சேர்த்தவனாயினும்
இனத்திலிருந்து பிரித்து
தேசீயத்தில் சேர்த்தவனாயினும்
தேசீயத்திலிருந்து பிரித்து
வர்க்கத்தில் இணைத்தவனாயினும்...

அப்பத்தைப் பங்கிட்ட குரங்காய்
அதிகப் பங்குகொண்டவன்
அவனாகத்தான் இருக்கிறான்
நிகழ்வில்
பங்கேற்பவனாக மட்டுமே நாமிருக்கிறோம்
பலனடைபவன் அவனாயிருக்கிறான்

இழப்பதற்கு கோவணம் தவிர
ஏதுமில்லையாயினும்
பிரிதலோ இணைதலோ
முடிவெடுப்பதில்  இனியேனும்
சுயமாய்  இருப்போம்
சுய நலப் பிண்டங்களை
இனி எட்ட நிறுத்தியே ரசிப்போம்

Thursday, June 11, 2020

பிணத்து மேல் போட்டப் பூமாலை..

சிந்தனையைத் தூண்டாத கல்வி
சங்கடத்தில் உதவாத நட்பு
நம்பிக்கை தாராத பக்தி
பயன்படுத்த இயலாத சக்தி
தன்மதிப்பைக் கூட்டாத செல்வம்
சமயத்தில் இணையாத சுற்றம்
நம்மோடு இருந்தால்தான் என்ன?
இல்லையென்று ஆனால்தான் என்ன?

பயனின்றி பேசுகின்ற பேச்சு
ஆக்ஸிஜன் இல்லாத காற்று
தயார் நிலையில் இல்லாத படைகள்
உடலுறுப்பு மறைக்காத உடைகள்
மனமகிழ்ச்சி  தாராத கூத்து
நடப்படாது கட்டிவைத்த நாற்று
கணக்கின்றி  இருந்தால்தான் என்ன ?
இல்லையென்று போனால்தான் என்ன ?

நோய் நொடிகள் தீர்க்காத மருந்து
நோக்கமற்று எழுதுகின்ற எழுத்து
பார்வையற்று திறந்திருக்கும் விழிகள்
ஒழுக்கமற்ற அழகான பெண்கள்
தாய்தந்தை பேணாத தனயன்
தனனலத்தை துறக்காத தலைவன்
மேற் சொன்ன எல்லாமே வீண்தான்
பிணத்தின்மேல் பூமாலை போல்தான்

Monday, June 8, 2020

நதி மூலம்...ரிஷிமூலம்..

ஹோட்டலில் உணவை இரசித்து
உண்ணும் ஆசை இருக்கிறதா ?
தயவு செய்து  சமயலறையை
எட்டிப் பார்க்காதிருங்கள்
அதுதான் சாலச் சிறந்தது

ஒரு சிற் பத்தின் அற்புதத்தை
இரசித்து வியக்க ஆசை இருக்கிறதா ?
அதற்குச் சிற்பம் செதுக்குமிடம்
ஏற்ற இடமில்லை
கலைக் கூடமே சரியான இடம்

பெருக்கெடுத்தோடும் ஆற்றின்
அழகை இரசித்து மகிழ ஆசையா ?
அதற்கு உற்பத்தி ஸ்தானம்
சரிப்பட்டு வராது
விரிந்தோடும் மையப் பகுதியே அழகு

குழந்தையின் அழகை மென்மையை
தொட்டு ரசிக்க ஆசையா ?
அதற்குப் பிரசவ ஆஸ்பத்திரி
சரியான இடமில்லை
அது தவழத்துவங்குமிடமே மிகச் சரி

கவிதையின் பூரணச் செறிவை
ருசித்து மகிழ ஆசையா ?
அதற்கு கவிஞனின் அருகாமை
நிச்சயம் உசித மானதில்லை
தனிமையே அதற்கு யதாஸ்தானம்

நதி மூலம் ரிஷி மூலம் மட்டுமல்ல
எந்த மூலமுமே அழகானதுமில்லை
கற்பனை செய்தபடி நிஜமானதுமில்லை
அதனை அறிந்து தெளிந்தவனுக்கு
ஏமாற்றம் நேர்வதற்கு வாய்ப்பே இல்லை

( மனம் கவர்ந்த ஒரு தலைவனை
நேரடியாகச் சந்திக்க விளைந்த ஏமாற்றம்
தந்த  சிந்தனை )

Sunday, June 7, 2020

செய்யும் தொழிலே தெய்வம்..

🤚செய்யும் தொழிலே தெய்வம்🤚

 பெயர் : ஜெயந்தி (ப்ராமணப் பெண்)
அப்பா : பட்டு குருக்கள் (சிவன் கோயில் அர்ச்சகர்)
படிப்பு : MA
வேலை : மின்மயானத்தில் பிணம் எரிப்பு
(குறிப்பு : தொடர்ந்து, பிணவாடையோ அல்லது பிணம்எரியும் புகையையோ சுவாசித்தால், மிகஅதிகமான மறதி நோய் ஏற்படும். மேலும் வாழ்நாட்கள் குறையும்)

அர்ச்சகரோ, வெட்டியானோ... அவங்கவங்களுக்கு கிடைச்ச, வாய்ச்ச வேலைகள இயல்பா அவங்கவங்க செஞ்சுட்டுதான் இருக்காங்க. ஆனா சில வேலவெட்டி இல்லாத ஓசிச்சோத்து தெருநாய்கள்தான், வேலைல பேதம்பிரிச்சு... பிரச்சனைய உண்டு பண்றாங்க. 'அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கணும்' ன்னு, போராடுன குரூப்பு... 'அனைத்து சாதியினரையும் வெட்டியான் ஆக்கணும்' ன்னு, போராடுமா ? போராட்டம் பண்ணி அர்ச்சகர் வேலை வாங்குனா... கோயில் சொத்தையும், உண்டியலையும் ஆட்டைய போடலாம். போராட்டம் பண்ணி  வெட்டியான் வேலை வாங்குனா... நெத்திக் காசும், வாய்கரிசியும்தான் மிஞ்சும் !!!

 பயத்துக்கு சவால் விடும் ஜெயந்தி..

பிராமண இன பெண் பிணத்தை எரிக்கிறார்..

நாமக்கல் அருகே கூலிப்பட்டி கிராமத்துல பிறந்தவ நான். அப்பா பட்டுகுருக்கள், சிவன் கோயில் அர்ச்சகர். எங்க வீட்டுல மூணு பொண்ணுங்க.

நான்தான் கடைசிங்கிறதால, அப்பாவுக்கு என் மேல ரொம்ப பாசம். எம்.ஏ முடிச்ச நேரத்துல வேற ஜாதியைச் சேர்ந்த வாசுதேவனைக் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

 எங்கம்மா, அக்கா எல்லோரும் என்னை ஒதுக்க, அப்பா மட்டும் எதிர்க்கல. கணவர் வீட்டுல என்னை ஏத்துக்கிட்டாங்க. எனக்கு ரெட்டைக் குழந்தைகள் பிறந்தன..

என் அப்பா திடீர்னு இறந்துட்டாரு. அவரை அடக்கம் பண்ணும்போது, பெண்ணா இருந்தாலும் நான் அங்கே இருந்தேன். அப்போ ஓர் உடலா இல்லாம, தெய்வமாதான் தெரிஞ்சாரு எங்கப்பா.

 நான் தையல் வேலை கத்துக்கிட்டு, அதை செய்திட்டிருந்தேன். தையல் மெஷினை மிதிக்க மிதிக்க வயித்துவலி அதிகமாக...

 டாக்டர், வயித்துல ரெண்டரை கிலோ கட்டி இருக்கிறதா சொன்னாங்க. சீரியஸான நிலையில ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனேன்.

உயிர் பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. எங்கப்பாதான் தெய்வமா இருந்து அறுவை சிகிச்சையில் என்னைக் காப்பாத்திக் கொடுத்தார்.

வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் என்ற குடும்பச் சூழலில்தான், நாலு வருஷத்துக்கு முன்ன இந்த மின்மயானத்துல தோட்டப் பராமரிப்பு வேலைக்காக வந்தேன்.

இடிபாடுகளாவும், மண்டை ஓடு, எலும்புகளாவும் இருந்த இடத்தை, நானும், மலர்னு ஒரு பெண்ணும் சேர்ந்து மூணே மாசத்துல பச்சைப்பசேல் தோட்டமா மாத்தினோம்.

சில மாசங்கள்ல, சிதையூட்டிட்டு இருந்த ஆண்கள் வேலையை விட்டுப் போக, நான் அந்த வேலையைச் செய்றேன்னு நிர்வாகத்துக்கிட்ட கேட்டேன். ‘உன்னோட கணவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தா வேலை தர்றோம்'னு சொல்லிட்டாங்க.

வீட்டுல எல்லாரையும் சம்மதிக்க வெச்சு இந்த வேலையில சேர்ந்தேன். என்னோட பணி நேர்த்தியைப் பார்த்து, ஒரே வருஷத்துக்குள்ள, என்னையே இந்த மின்மயானததுக்கு மேனேஜர் ஆக்கிச்சு நிர்வாகம்’’ என்ற ஜெயந்தி, தொடர்ந்தார்.

‘‘இறந்தவங்களோட உறவினர்களை எல்லாம் வெளிய அனுப்பிட்டு, நான், எனக்கு உதவியா மலர்னு ரெண்டு பொம் பளைங்க மட்டும், டிராலியில உடலை வைக்கிறதுல இருந்து, கடைசி வரைக்கும் எல்லா வேலைகளையும் செய்தாலும், கொஞ்சம்கூட பயந்ததில்ல. அதுக்காக சிதையூட்டும் வேலை சுலபமானதும் இல்ல.

இயற்கை மரணம் எய்தினவங்களை சிதையூட்டும் போது, 45 நிமிஷத்துல சாம்பலை எடுத்திடலாம்.

ஆனா, போஸ்ட் மார்ட்டம் பண்ணின உடலா இருந்தா, சிதையூட்டின கொஞ்ச நேரத்துலயே, சூட்டுல எல்லா உறுப்புகளும் தனியா சிதறி விழும்.

 அதை எல்லாம் மறுபடியும் எடுத்து, மரக்கட்டை மேல போடணும். சிரமமான அந்த வேலைகளை, தைரியமா பண்ணியிருக்கேன்.

ஒரு நாளில் அதிகபட்சமா 9 உடல்கள் வரை, பின்னிரவு வரைகூட இருந்து சிதையூட்டி இருக்கேன். அநாதைப் பிணங்களை இலவசமா சிதையூட்டுவேன்.

 சின்ன வயசுல, பக்கத்துல யாராச்சும் முட்டை சாப்பிட்டாகூட மூக்கை மூடிக்குவேன்.

இப்போ பிண வாடை பழகிப் போச்சு. அதான் வாழ்க்கை!’’ என்ற ஜெயந்தியின் கண்களிலும் படர்கிறது சிரிப்பு.    ஆம்....செய்யும் தொழிலே தெய்வம்...அதில் திறமைதான் நமக்குச் செல்வம்..

Saturday, June 6, 2020

சைக்கிள்தானே...

மதுரை மக்களை ஆச்சரியப்படுத்தும் ‘சைக்கிள் டாக்டர்!

மதுரை அப்போலோ மருத்துவமனையில் மிக பிசியான மருத்துவர் எஸ். மீனாட்சி சுந்தரம். நரம்பியல்துறை  வல்லுநர்! சிறப்பு மருத்துவர்! டாக்டர் SMS என்று அன்புடன் அழைக்கப்படுகிற அன்பான மருத்துவர். 

இவரைப் பற்றிய சுவாரசியமான இந்தச் செய்தி எப்படி இரண்டு நாளாகியும் என் கண்ணில் படாமல் போனது?
அலுவலகங்களுக்கு சொகுசு கார், பைக்குகளில் செல்பவர்களுக்கு மத்தியில் மதுரையில் நரம்பியல் துறை சிறப்பு மருத்துவர் ஒருவர், தான் வைத்திருந்த காரை விற்றுவிட்டு, சைக்கிளில் தினமும் மருத்துவமனைக்கு எளிமையாகச் சென்று வருகிறார்.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் டாக்டர் எஸ். மீனாட்சிசுந்தரம் (49). நரம்பியல்துறை சிறப்பு மருத்துவர். இவர் கடந்த 4 ஆண்டுகளாக தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று வருகிறார். 18 ஆண்டுகளாக மருத்துவப் பணியில் இருக்கும் இவர், ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு மற்ற மருத்துவர்களை போல் காரில்தான் சென்று வந்துள்ளார். அதன்பிறகு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டதால், அருகில் உள்ள பூங்காவுக்கு நடைப் பயிற்சி செய்வதற்காக காரை பயன்படுத்தாமல் சைக்கிளில் செல்லத் தொடங்கினார்.
மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்வு ஏற்பட்டதால், தினமும் வீட்டிலிருந்து தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு தற்போது சைக்கிளில் சென்று வருகிறார். அருகே உள்ள கடைகளுக்கு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கச் செல்வது முதல், நட்சத்திர விடுதிகளில் நடக்கும் மருத்துவக் கருத்தரங்குக்கும் செல்வதற்கு சைக்கிளை பயன்படுத்தி வருகிறார். நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்த சைக்கிள் டாக்டர் மீனாட்சி சுந்தரத்தை சந்தித்தோம்.
அவர் கூறியதாவது: ‘‘நானும் ஆரம்பத்தில் டவேரா காரில்தான் மருத்து வமனைக்குச் சென்று வந்தேன். ஒருநாள் எனது நண்பர் மதுரையைச் சேர்ந்த இருதய சிகிச்சை நிபுணர் கண்ணன்தான், சைக்கிள் ஓட்டும்படி பரிந்துரைத்தார். சைக்கிள் ஓட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்றும், குண்டாக இருக்கிறாய், எடையைக் குறைக்கும்படி அறிவுரை கூறி அவரே சைக்கிளையும் வாங்கித் தந்தார்.
2015-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி முதல் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன். சைக்கிளை உடற்பயிற்சிக்காக ஓட்டக்கூடாது. கார் வைத்திருந்தால் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் வராது என்பதால் காரை விற்று விட்டேன். அதன்பிறகு சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தபின், காரை பயன்படுத்துவதே இல்லை. எங்கு போனாலும் சைக்கிளில்தான் செல்வேன்.

ஆரம்பத்தில், நான் சைக்கிளில் செல்வதை பார்த்து சிரித்தவர்கள், தற்போது என்னை வியந்து பாராட்டுகிறார்கள். என்னைப் பார்த்து என்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், எனது மருத்துவ நண்பர்கள் பலரும் தற்போது சைக்கிளுக்கு மாறி விட்டனர். சைக்கிளில் சென்றால் நிதானமாக பரபரப்பு இல்லாமல் வேலைக்குச் செல்ல முடிகிறது. சைக்கிளில் சென்றால் லேட்டாகும் என்று சொல்வதில் துளிகூட உண்மையில்லை. தொலை தூரத்துக்கு செல்ல வேண்டுமென்றால் அது பொருந்தும். நகர் பகுதியில் சைக்கிள்தான் சிறந்த வாகனம்.
 உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டினால் சில நாள்கள் ஓட்டிவிட்டு பிறகு விட்டு விடுவோம். சைக்கிள் நமது வாழ்க்கையோடு இணைய வேண்டும். என்னைப் பார்த்து எனது மகன்களும் பள்ளிக்கு சைக்கிளில் செல்ல ஆரம்பித்து விட்டனர். ஆரம்பத்தில் எனது மனைவிக்கு சைக்கிளில் செல்வது பிடிக்கவில்லை. பாதுகாப்பாக இருக்குமா, மற்றவர்கள் கேலி செய்வார்களே என நினைத்து வருந்தினார். தற்போது எனது உடல் ஆரோக்கியம் மேம்பட்டதை பார்த்து அவரே என்னை சைக்கிளில் செல்ல வழியனுப்பி வைக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலும் ‘சைக்கிள்’ பயணம்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெனீஸ் அருகே லீடோன் என்ற குட்டித் தீவில் ஒரு மருத்துவக் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்றிருந்தேன். நான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து கருத்தரங்கு நடந்த இடத்துக்கு காரில் செல்ல ஒரு முறைக்கு 8 யூரோ கொடுக்க வேண்டியிருந்தது. அதனால், சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சென்றேன்.
எனது நண்பர்கள், கார் வாடகை, சாப்பாடு உள்ளிட்ட மற்ற அனைத்துக்கும் ஒரு நாளைக்கு 30 யூரோ வரை செலவு செய்தார்கள். ஆனால், நான் அங்கு தங்கியிருந்த 6 நாட்களும் சைக்கிளை குறைந்த வாடகைக்கு எடுத்து மருத்துவக் கருத்தரங்குக்குச் சென்றேன். தீவில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களையும் சைக்கிளில் எளிதாக சுற்றி பார்க்க முடிந்தது. கார் வாடகை பணமும் மிச்சமானது. மதுரையில் சைக்கிளில் செல்வதற்கு முன்பாக ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் வரை பெட்ரோலுக்கு செலவழித்தேன். தற்போது அந்தப் பணமும் சேமிப்பாகி விட்டது. என்கிறார் மருத்துவர் மீனாட்சிசுந்தரம்...படித்ததில் பிடித்தது...

Wednesday, June 3, 2020

நிஜமாகும் கட்டுக்கதை...

ஏழுகடல் தாண்டி
ஏழுமலை தாண்டி
எங்கோ இருக்கும் மலைக் குகையில்
ஒரு கூண்டுக் கிளியிடம்  உயிரைவைத்து
ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை
நான் நம்பியதே இல்லை

உயிருக்கும் உடலுக்குமான
இடைவெளித் தூரம்
சாத்தியமற்றதென்றும்
அது ஒரு  தெளிவான கட்டுக்கதையென்றும்
ஆக்ரோஷமாய் விவாதித்திருக்கிறேன்

இப்போதெல்லாம் அப்படியில்லை

முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து

சாரமற்ற  என் படைப்பினுக்கு
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
புதிய சிந்தனைப் பிறக்கிறது

எங்கிருக்கும் உடலையும்
எங்கோ  இருக்கும்  உயிரும்
ஓயவிடாது  இயக்குதெலென்பது

அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது

இப்போதெல்லாம்
கட்டுக்கதை என நம்பிக்கைகொண்டிருந்த
அரக்கன் கதை  கூட
நிஜமாயிருக்கவும்
சாத்தியமென்றே படுகிறது

Monday, June 1, 2020

எண்ணமே வாழ்வு...

மனவெளிச் சாலைகளில்
கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே

நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ  எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே

நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
 மறக்க வைத்து
இழக்கவைத்து
உயர்வைத் தடுப்பது எண்ணமே

தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப்  பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

என்றும்  எப்போதும் இதனை
மறவாது மனதில் கொள்வோம்-வாழ்வில்
எதிர்படும் தடைகள்  எதையும்
 மிக மிக எளிதாய் வெல்வோம்