சூழலுக்குப் பயந்து பயந்து வாழ்பவன்
நிச்சயம் செத்துச் செத்துத்தான் வாழ்வான்
மாறாக எத்தகைய மோசமான சூழலாயினும்
அதனை அறிவின் மூலம் சிறப்பாகக்
கையாளத் தெரிந்தவன் அந்த மோசமான
சூழலையே தனக்கு மிகச் சாதகமாகப் பயன்படுத்தி
வெற்றி அடைவான் என்பதற்கு நான்
கேள்விப்பட்ட ஒரு சிறு கதை
ஒரு காட்டில் ஒரு நிறைமாத ஆடு ஒன்று
இருந்தது.நிறைமாதம் என்பதால் பலசாலியான்
வேறு மிருகம் ஏதேனும் வேட்டையாட
முயன்றால் வேகமாக ஓட முடியாது என்பதால்
தனக்கு ஒரு பாதுகாப்பான இடம் தேடித் திரிந்தது
அப்போது நேரடியாக சண்டைப் போட்டு
ஆட்டைஜெயித்து அதை உண்ண முடியாது
என எண்ணிய தந்திர நரி
அந்தக் காட்டில் இருந்த ஒரு சிங்கத்தின்
குகையைக் காட்டி "இந்தக் கிழச் சிங்கம்
அடுத்த காட்டிற்குப் போயுள்ளது,வருவதற்கு
எப்படியும் இரண்டு மாதம் ஆகும்.அதற்குள்
உனக்கும் பிரசவம் ஆகிவிடும்..எனவே நீ
அது வருவத்ற்குள் வேறு பாதுகாப்பான இடத்திற்குப்
போய்விடலாம் " என நம்பிக்கையூட்டி அந்த
குகைக்குள் தங்க விட்டு சிங்கத்திடம்
ஆடு இருக்கும் தகவலைச் சொல்லி வரவழைக்கக்
கிளம்பிவிட்டது.
நரியின் தந்திர எண்ணத்தைப் புரிந்துகொண்ட
நிறைமாத ஆட்டுடன் இருந்த குட்டி ஆடு
"என்னம்மா நரி பேச்சை நம்பி ஒளியத் தெரியாதவன்
தலையாரி வீட்டில் ஒளிந்த மாதிரி ஒளிந்து
கொண்டிருக்கிறோம்.சிங்கம் வந்தால் நம் நிலைமை
என்னவாகும் "என்றது
"கவலைப்படாதே,நரி ஏதோ தந்திரமாக
யோசித்துத்தான்நமக்கு இந்த ஐடியாவைச்
சொல்லியுள்ளது எனக்குத் தெரியும்
நானும் அதற்குத் தகுந்தாற்போல யோசித்து
வைத்திருக்கிறேன்.சிங்கம் வந்தால் கொஞ்சம்
குரலை மாற்றி "அம்மா எனக்கு சிங்கக் குடல்தான்
வேண்டும் எனச் சொல்லி அடம் பிடிப்பது போல அழு
அடுத்ததை நான் பார்த்துக் கொள்கிறேன் "என்றது
ஆடு கிடைக்கும் ஆசையில் நரியும்
உடன் சிங்கத்தைத்தேடிப்பிடித்து குகைக்குள்
நிறை மாத ஆடும் அதனுடன்
ஒரு குட்டிஆடும் இருக்கும் விஷயத்தைச் சொல்லி
ஆசைக் கூட்டி குகை வாசலுக்கு அழைத்து வந்தது
சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டதும் குட்டி ஆடு
தாய் ஆடு சொல்லிக் கொடுத்ததைப் போல
குரலை கொஞ்சம் கரடுமுரடாக்கி "அம்மா
எனக்கு எப்பம்மா சிங்கக் குடல் தரப்போற
ரொம்பப் பசிக்குதம்மா "எனச் சப்தமாக கத்தத்
தொடங்கியது
"பொறுடா கண்ணா சிங்கம் வருகிற மாதிரித்தான்
தெரியுது.வந்தவுடன் உனக்கு அதன் குடலை எடுத்துத்
தந்துவிடுகிறேன்.குடல் போக மீதியை மட்டும்
நான் வைத்துக் கொள்கிறேன்.சரியா "என்றது
இதைக் கேட்ட சிங்கத்திற்கு மிக லேசாக குடல்
நடுங்கத் துவங்கியது,நம் குகைக்குள்ளேயே
இருந்து கொண்டு நம் குடல் கேட்கிறது என்றால்
நிச்சயம் அது நம்மைவிட பலசாலியான
ஏதோ ஒரு புதிய மிருகமாகத்தான் இருக்கணும்
இந்த நரி ஏதோ தந்திரம் செய்து நம்மை கொல்லப்
பார்க்கிறது என் நினைத்து திருப்பி ஓடத் துவங்கியது
அதை விரட்டிப்பிடித்த நரி "சிங்கம் அண்ணே
நான் உங்களுக்கு துரோகம் செய்வேனா
நிச்சயம் அது நிறைமாத ஆடும் குட்டியும்தான்
தங்களை ஏமாற்ற குரல்மாற்றி அப்படிப் பேசுகிறது
நம்பிக்கை இல்லாவிட்டால் உங்கள் வாலுடன்
என் வாலை சேர்த்துக் கட்டிக் கொள்கிறேன்
பொய் என்றால் நான் ஓட முடியாது என்னை
அடித்தேக் கொன்றுவிடுங்கள் "என்றது
நரி இப்படிச் சொன்னதும் சிங்கத்திற்குப் பயம்
கொஞ்சம் குறைந்தது,ஆனாலும் எதற்கும்
இருக்கட்டுமென்று நரியை தன் வாலுடன்
இறுக்கக் கட்டிக் கொண்டு குகை நோக்கி வந்தது
இதை குகை இடைவெளியில் பார்த்த ஆடு
திரும்பவும் தன் குட்டியப் பார்த்து
அதே மாதிரி அடம் பிடி எனச் சொல்ல
குட்டி ஆடும்"என்னம்மா வந்த சிங்கமும்
ஓடிப் போயிடுச்சு,எனக்கு எப்பம்மா சிங்கக் குடல்
தின்னத் தர்ப்போறே " என்றது சப்தமாக
ஆடும் சப்தமாக சிங்கம் கேட்கும்படியாக
குரலை மாற்றி "அவசரப்படாதடா கண்ணா
நரி மாமா நம்மிடம் சொன்னபடி சிங்கத்தை
ஏமாற்றி எப்படியாவது தன் வாலில் கட்டியாவது
கொண்டுவந்துவிடுவார்.அதுவரை
பொறுமையாக இரு"என்றது
இதைக் கேட்டச் சிங்கம் "ஆஹா நரி நம்மை
வஞ்சம் தீர்க்க ஏதோ ஒரு பலசாலி மிருகத்தை
ஏற்பாடு செய்து நம்மை தந்திரமாக கொல்ல அல்லவா
பார்க்கிறது "என்கிற முடிவுக்கு வந்து தலைதெறிக்க
ஓடத் துவங்கியது
பாவம் நரி,தந்திரத்தின் மூலம் சிங்கத்தின் மூலம்
ஆட்டுக்கறி தின்ன முயன்ற நரி கல்லிலும் முள்ளிலும்
அடிபட்டு உயிரைவிட்டு கறியாகிக் கொண்டிருந்தது
புத்திசாலி ஆடு சிங்கத்தின் குகையில் எந்த வித
அச்சுறுத்தலும் இன்று சுகமாக குட்டியை
ஈன்று கொண்டிருந்தது.
எனவே..(.மீண்டும் முதல்பத்தியைப் படிக்கவும்)