Tuesday, August 28, 2018

வெள்ள நிவாரண சேவைப்பணி

உலகில் எங்கு தேவை உள்ளதோ
அங்கு நிச்சயம் உடன் உதவ அரிமாக்கள்  இருப்பார்கள்
என்பது உலகம் முழுதும் அறிந்த மொழி

மிகக் குறிப்பாக வில்லாபுரம் அரிமா சங்கமும்
அது துவங்கக் காரணமாக இருந்த
வில்லாபுரம் புது நகர் குடியிருப்போர்
நலச் சங்கமும் இருக்கும்   என்பது
மதுரை மாவட்டம் அறிந்தச் செய்தி

சென்னை நகரம் புயலால் பாதிக்கப்பட்டபோது
சுமார் பத்து இலட்சம் மதிப்பிலான
நிவாரணப்பொருட்களுடன் பாதிக்கப்பட்ட
பகுதிக்கு  (முடிச்சூர்) நேரடியாகச் சென்று
வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றதன்
தொடர்ச்சியாய் ..... அதன் மூலம் பெற்ற
அனுபவத்தின் தொடர்ச்சியாய் ...

(அப்போது வழிப்பறி கொள்ளையர்களாய்
சில கட்சிக்காரர்களே இருக்க அதனைத்
தடுக்கும் விதமாய் காவல்துறை
அதிகாரிகளை உடன் அழைத்துச் சென்றது,
வெறும் உணவுப் பொட்டலங்கள் மட்டுமின்றி
சமையல் சாமான்கள் பத்து நாட்களுக்கு
வரும்படியாக தனித்தனியாக பேக் செய்து
கொண்டு போனது ,  மெழுகுவர்த்தி
தீப்பெட்டி ,டார்ச் லைட் ,மருந்துப்  பொருட்கள்
என உடனடியாகவும்   தொடர்ந்து சிலநாட்களுக்கு
அவர்களுக்குத் பயன்படும்படியாய் பார்த்துப் பார்த்து
சேகரித்துக் கொண்டு போனது , மிகச் சரியாக
முறையாக பாதிக்கப்பட்டோரை நிவாரணப் பொருட்கள்
சேரவேண்டும் என்பதற்காக முடிச்சூரில் இருந்த
சேவை மனப்பான்மை கொண்ட அமைப்புடன்
இணைந்து பகிர்ந்தளித்தது இத்யாதி ..இத்யாதி )

..இம்முறை கேரளாவில் அதிகம் பாதிக்கப்பட்ட
ஆலுவா என்கிற பகுதியினைத் தேர்ந்தெடுத்து
அப்பகுதியில் சுமார் 1500 பேருக்குப் பயன்படும்படியாக
சுமார் பதினைந்து இலட்சம் மதிப்பிலான
நிவாரணப் பொருட்களை சேகரம் செய்து
மிகச் சரியாக முறையாக பகிர்ந்துதளித்து
திரும்பி இருக்கிற சேவைச் செம்மல்களை
எவ்வளவு பாராட்டினாலும் தகும்

இந்த மாபெரும் சேவைப் பணியினை
முன்னின்று முறையாகச் செய்து தந்த

வில்லாபுரம் புதுநகர் குடியிருப்போர் சங்க
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் ,

வில்லாபுரம் புது நகர் அரிமா சங்க முன்னாள் ,
மற்றும் இவ்வருட  நிர்வாகிகளுக்கும்
துடிப்புமிக்க உறுப்பினர்களுக்கும்

வில்லாபுரம் புதுநகர் பேட்மிண்டன் சங்க
பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும்

மிக  முக்கியமாய் இவர்கள் அனைவரையும்
மிகக் சரியாய் ஒருங்கிணைத்து இந்த
வெள்ள நிவாரண சேவைப்பணிமிகச் சரியாய்
நடைபெறக் காரணமாய் இருந்த
வில்லாபுரம் புது நகர் அரிமா சங்க
பட்டயத் தலைவர் /குடியிருப்போர் சங்கச்
செயலாளர் லயன் இப்ராகிம் சுல்தான் சேட்
அவர்களுக்கும்

எங்கள் மனமார்ந்த நன்றியினைக்
காணிக்கையாக்கி அது  தொடர்பான
புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்வதில்
பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்


:

Tuesday, August 21, 2018

விஸ்வ ரூபம் எடுத்த வாமனர்கள்

சாதாரண நாட்களில் படித்துக் கொண்டும்
விளையாடிக் கொண்டும் ஒய்வு நேரங்களில்
ஜாலியாகச் சினிமா மற்றும் வெட்டி அரட்டை
அடித்தபடி   சிரித்துப்  பேசி
கலாய்த்துக் கொண்டு  மட்டுமே
இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும்
இளைஞர்களுக்குள்  ,

நீறுபூத்த நெருப்பாக சமூகப் பொறுப்பும்
சேவை மனப்பான்மையும்  எவ்வளவு
கனன்று கொண்டிருக்கிறது  என்பதற்கு
வெள்ளம் புயல் போன்ற அசாதாரண
சூழல்கள்  வரும்போதுதான் நமக்கே
புரியவும் செய்கிறது ,நம் நாட்டின் வருங்காலம்
குறித்து பெரும் நம்பிக்கையும் துளிர்க்கச் செய்து போகிறது

மதுரை டி .வி.ஸ்  நகரில் இயங்கிவரும்
இளைஞர்கள் அமைப்பின் சார்பில்
சில தினங்களுக்குள் சுமார் ஒன்றரை
மதிப்பிலான மருந்துப்பொருட்கள் நாப்கின்
டவல்ஸ் , பிஸ்கெட்ஸ்,டார்ச் லைட் /உடைகள்
மற்றும்   உடனடி அவசரத் தேவைக்கான
பொருட்களை ச் சேகரித்து நிவாரண
முகாம்களுக்கு அனுப்பிவைத்த நிகழ்வு
மிக்க பெருமிதம் தருகிறது

அவர்களது சேவையைப்  போற்றும் விதமாக
விஸ்வரூபம் எடுத்த வாமனர்களின்
புகைப்படங்களை இங்கு பகிர்வதில்
பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்


Monday, August 20, 2018

இம்முறையும் எப்போதும் போலவே ..

இம்முறையும் நாங்கள்
உறுதிமொழி   எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே

இயற்கைக்கு எதிராக
எங்கள்  வசதியான வாழ்க்கைக்காக
நாங்கள்  செய்தக்  கொடுமைகளை

அது  தானாகத்  தன்னைச்
 சரிசெய்து கொள்ளச்
தன்னைச் சீர்திருத்திக் கொள்ள முயல

அது  எங்களுக்குப்   பேரிடராய்
பெரும் அழிவாய்
எம்  அன்றாட வாழ்வைப் பாதிக்க

இனியும் அது தொடர்ந்தால்
எம் நிலை அதோ கதிதான் என
மிகத்  தெளிவாய்ப் புரியக்

காடுகளை அழிப்பதில்லை
மண்வளம் கெடுப்பதில்லை
நீர் வளம் காக்கத் தவறுவதில்லை என

இன்னும் அற்புதமான
மிக மிக அவசியமான
உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே

ஒவ்வொரு முறையும்
குடலும் உடலும்
குடியால் பாதிக்கப்பட

இனியும் குடித்தால்
உயிருக்கு உ த்தரவாதமில்லை என
மருத்துவர் கைவிரிக்க

இனியும் குடிப்பதில்லை என
மருத்துவருக்கு உறுதி தரும்
ஒரு மொடாக்   குடிகாரனைப்போலவே

இம்முறையும் நாங்கள்
உறுதிமொழி  எடுத்துக் கொண்டோம்
எப்போதும் போலவே

செயலால் துரும்பசைக்கக் கூடக்
சிறிது குனிந்து நிமிரும் சிரமம் இருக்கிறது என்பதால்

எண்ணத்தால் இமயம் அசைப்பதில்        வெற்றுச் சொல்லால் அதன் சிகரம் தொடுவதில்
சிறிதும் சிரமம் இல்லை என்பதால்

இம்முறையும் .....


Thursday, August 16, 2018

"தமிழனென்பேன் கன்னடியன் என்பேன்...

கையில் காசு குறைகிறதெனில்
வீட்டில்
சட்டிப் பானை உருட்டி
ஆர்ப்பாட்டம் செய்து...

காசு வ்ந்தவுடன்
அதனை
மதுக்கடையில் கொண்டு சேர்ப்பவனை
என்னவென்பாய் " என்றது
கருத்துப் பெருத்திருந்த
அந்தக் கார் மேகம்

"இதிலென்ன சந்தேகம்
குடிகாரன் என்பேன்
கூறு கெட்டவன் என்பேன்
இன்னும் சரியாகச் சொன்னால்
வாழத் தகுதியற்றவன் என்பேன்"
என்றேன்

இகழ்ச்சியாய் மின்னலாய்ச்
சிரித்த மேகம்...

"அது சரி
அப்படியானால்
குறைவாய்க் கொடுக்கையில்
அதன் அருமை புரிந்து
பகிர்ந்துவாழப் பழகாது
அரசியல் செய்பவனை

அதிகமாய்க் கொடுக்கையில்
சேமிக்கத்  தெரியாது
அதனை வீணாய்க்
கடலில் சேர்ப்பவனை
என்னவென்பாய் " என்றது நக்கலாய்..

சுருக்கென்றது

"தமிழனென்பேன்
கன்னடியன் என்பேன்
இன்னும் சரியாகச் சொன்னால்
இந்தியன் என்பேன் "
எனத் தான் சொல்லத் தோன்றியது

ஆனாலும்
இனப்பற்றும் நாட்டுப்பற்றும்
இடையிலிருந்துத் தடுக்க
மௌனமானேன்

மௌனத்தில் எரிச்சல் கொண்ட மேகம்
இடியெனச் சிரித்து
இன்னும் கருத்துக் கனக்கத் துவங்கியது

கோபத்தில் அது
இன்னமும் "கொட்டித்" தீர்க்கலாம்
எனப்படுகிறது எனக்கு

Tuesday, August 14, 2018

ஆயிரம் பதிவுகடந்தும்...

அறவுரையாய் அல்லாது
அறிவுரையாய் இல்லாது
அனுபவ உரையாய்...

அறிவுறுத்தியும் சொல்லாது
அலட்சியமாயும் சொல்லாது
எளிமையாய் மிக  இயல்பாய்..

கவிதையாயும் இல்லாது
உரையாயும் இல்லாது
இரண்டுக்கும் இடைப்பட்டதாய்..

இளக்கிய கவிதையாய்
இறுக்கிய உரையாய்
வசனகவிதை எனும் படியாய்

இழுத்தும் செல்லாது
ஒதுக்கியும் போகாது
உடன்வரும் வழிகாட்டியாய்..

பாண்டித்தியம் காட்டாதும்
"படி "இறங்கிச் சாயாதும்
தரமது நிலைக்கும்படியாய் ...

உயர்த்தும்படி இல்லையெனினும்
ஒதுக்கும்படி இல்லாது
தவறாது தொடரும்படியாய்

வேகமது குறைவெனினும்
விட்டுவிடாது தொடர்ச்சியாய்
எட்டாம் ஆண்டு எனும்படியாய்

ஆயிரம் பதிவுகடந்தும்
அயராது தொடர்கிறேன்
ஆரம்ப நாளைப்  போலவே

என்றும் குறையாது
தொடரும் உங்கள்
ஆதரவைப்  போலவே...

 வாழ்த்துக்களுடன்....


Monday, August 13, 2018

கன மனம் கொண்டோரே கவலை மிகக் கொண்டோரே

கன மனம் கொண்டோரே
கவலை மிகக் கொண்டோரே

நதிக்கரையோரம்...
குளக்கரையோரம்...
ஓடைக்கரையோரம்...

மெல்ல நடப்பதாலேயே
நீங்கள் ஆறுதல் கொள்வது நிஜம்தான்...

அந்தச் சூழல் உங்களுக்குள்
ஒருமாற்றம் ஏற்படுத்துவது நிஜம் தான்

ஆயினும்
அதற்கு மறுபக்கம் ஒன்று உண்டு
என்பதை நீங்கள் என்றேனும்  சிந்தித்ததுண்டா ?

ஆம் சிந்தித்தீர்கள் ஆயின்

நிச்சயம் கனத்த மனத்துடன்..
கவலை தோய்ந்த முகத்துடன்
அவ்விடம் செல்ல மாட்டீர்...

மேலே பறந்தபடி
தன்னைக் கவ்வ நோட்டமிடும்
பருந்துக் கூட்டம் எதையும்..

தவமுனிவனைப் போல்
ஒற்றைக்காலில் நின்று தன்னைக் கொத்த எண்ணும்
கொக்குக் கூட்டம் எதையும்...

வலைவீசியபடி
ஆசையோடுக் காத்திருக்கும்
மீனவர் கூட்டம் எதையும்...

துளியும் கவலையது கொள்ளாது

பிடிபடும் கடைசி நொடிவரை
சந்தோசித்துத் திரியும்
அந்த மீன் கூட்டதின் மன நிலையை..

அதன்
உற்சாக மன நிலையை
உல்லாச சுக நிலையை

உங்கள் கனத்த மன நிலை
கவலை கொண்ட மன நிலை

நிச்சயம் மாற்றவும்
வாய்ப்பு உண்டுதானே..

எனவே
கன மனம் கொண்டோரே
கவலை மிகக் கொண்டோரே...

Thursday, August 9, 2018

முகம் மறைத்துப் புரட்சித் தீமூட்டும்....

பிரச்சனையாளர்களாய் இருப்போம்
எப்போதுமே
பிரச்சனையாளர்களாய் இருப்போம்

பிரச்சனை சிறிது எனில்
ஊதி ஊதிப் பெரிதாக்குவோம்

பிரச்சனை ஏதும் இல்லையெனில்
நாமே அதை உண்டாக்குவோம்

ஏனெனில் பிரச்சனை இல்லையெனில்
நம்மை கண்டு கொள்வார் இல்லை

நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள
நியாய வழியில் வாய்ப்பே இல்லை

நேரடிச் சண்டையில்
சிறிதேனும் காயம் பட வாய்ப்புண்டு

நிழல் யுத்தத்தில்
சிறுகீறலுக்கும் நிச்சயம் வாய்ப்பில்லை

கவனமாய் முகம் தெரியாது
முகமூடி அணிந்து கொள்வோம்

பிறர் பொருளுக்கு ஆசைப்படும்
திருடனுக்கு மட்டுமல்ல

சமூக அமைதியைக் குலைக்கும் நமக்கும்
அது  நிச்சயம் அவசியம்

சொல்பவர்கள் ஆயிரம் சொல்லட்டும்

தானெரித்த  வீட்டில் சிகரெட்டுக்கு
நெருப்பெடுக்கும் சுகம்
அனுபவித்தால்தான் புரிந்து கொள்ள முடியும்

எரிபவர்கள் குறித்து வருந்துபவனுக்கு
இந்தச் சுகம் புரிய
நிச்சயமாய்  வாய்ப்பே இல்லை

முகம் மறைத்துப் புரட்சித் தீமூட்டும்
நவயுகப்  போராளிகளே...

வாருங்கள்

இன்றைக்கு எதைப் பற்ற வைப்பது
என்பது குறித்துச் சிந்திப்போம்

நாடு எப்படியோ நாசமாகட்டும்

நம்மை அடையாளப் படுத்திக் கொள்வதில்
நாம் நம்  கவனத்தைக் குவிப்போம்

Tuesday, August 7, 2018

"அந்தோ ஐயகோ "

"அந்தோ ஐயகோ "
சோகத்தின் உச்சத்திற்கான வார்த்தைகளாய்
உன் பயன்பட்டால்
வீரியம் கொண்ட  வார்த்தைகளை
உனக்கே பயன்படுத்தும்படி  ஆகிப் போனதே

ஐயகோ ! இந்தக் கொடுமையை
என்னவென்று சொல்வது ?

"அண்ணனுக்கு" நீ எழுதிய
இரங்கற்பாவே இன்று வரை
இரங்கற்பாவிற்கு இலக்கணமாய்..
இரங்கற்பா இலக்கியமாய்...

உனக்கே ஒரு இறங்கற்பாவா
இந்தக் கொடுமையை எப்படிச் சகிப்பது ?

அன்று இயக்கப் பாதையில்
நீ முதலடி எடுத்து வைக்கையில்
உன்னைச் சுற்றி
இரண்டு பட்டமேற்படிப்புத் தலைவர்களே அதிகம்

மிரண்டு விடவில்லை நீ
காரணம் உன்னிடம் அவர்களினும்
இரண்டு மடங்கு தமிழறிவும் தமிழுணர்வும்
தகிக்கித் கிடந்தது உன்னுள்

அன்றைய தலைவர்கள் எல்லாம்
நகர வாசிகளாய் நடுத்தரவாசிகளாய்
நீ மட்டும் கிராமவாசியாய் கீழ் நிலையாய்..

கலங்கிடவில்லை நீ...

காரணம் நீ  பேச்சாற்றலால்
தமிழகமெங்கும்
நகரும் வாசியாய் இருந்ததால்

பாமர மக்களை
இனிய தமிழால்
கவரும் வாசியாய் இருந்ததால்..

அண்ணனுக்கு அடுத்து நான்
என் முன் வரிசையில் எல்லோரும் இருக்க
நீ அண்ண்னுக்கு பின் பலமாய் இருந்தாய்

அதனால் தானே கழகத்தின் உயிராய்
தொண்டனுக்குத் தலைவானாய்
தமிழக முதல்வனாய் முன்மொழியப்பட்டாய்..

பதவியை முள் கிரீடமாய் எண்ணினாய்

அதனால்தான் உன்னால்

தென்றலின் சுகத்தில்
மயங்கா தீரனாய்

புயலில் கொடுமையில்
சோராத தலைவனாய்
இறுதிவரை இருக்க முடிந்தது

அதனால்தானே கழகத்தை
அண்ணன் போதித்த
கடமை கண்ணியம் கட்டுப் பாட்டுடன்
இன்று வரை கட்டிக் காக்க முடிந்தது..

நல்ல தெளிவுடன் இருக்கையிலேயே
" ஓயாது உழைத்த இதயம் இங்கு
ஓய்வு கொள்கிறது " என
கல்லறைக்கான  இறுதிவாசகம் தந்தவனே

சாணக்கியத் தனத்தினால்
உன் அரசியல் எதிரிகளையும்
உனக்குச் சாமரம் வீச  வைத்தவனே

பேச்சுச் திறத்தால்
உன் கொள்கை எதிரிகளையும்
உனக்குத் காவடித் தூக்க வைத்தவனே

திடமான முடிவுகளால்
என்றும் எதிரான வடவர்களையும்
உனக்கு கம்பளம் விரிக்க வைத்தவனே                                                                                      மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதில் நீ உறுதியாய் இருந்தாய்             அதனால்தானே அந்த மகேசனும்             பழுத்த ஆன்மீக வாதிக்கும் அருளும்   l ஏகாதசி மரணத்தை உனக்கு அருளி          மனம் நிறைவு கொண்டிருக்கிறான்

 உன் திறன் குறித்து எழுத
உன் புகழ்க் குறித்து எழுத
நிச்சயம் இங்கு எமக்குத் தகுதியில்லை

எங்கள் விழிப்புணர்வுக்காக
ஓயாது உழைத்த உதய சூரியனே

தமிழ் உள்ளவரை
உன் புகழ் நிச்சயம் உச்சத்தில்தான்

கையறு நிலையில்
கண்ணீர் மல்க விடைதருகிறோம்

போய் வா
தன் மானத் தலைவா

போய்வா
தமிழினதின் ஒப்பற்ற தலைவா

Monday, August 6, 2018

சாய்வு நாற்காலியில் இருந்து ...

இளமையில்
நல்லவைகள் எதைச் செய்யவும்
வரையரை வைக்காதீர்கள்

இளமையில்
நல்லவைகள்  எதை இரசிக்கவும்
எல்லைகள் வகுக்காதீர்கள்

ஏனெனில் முதுமையில் ...

நினைத்ததையெல்லாம்
முன்போல உங்களால்
சொல்லச் சாத்தியமில்லை

சொல்ல முடிந்தவைகள் மட்டுமே
நினைவுகளாய்...

விரும்பியதையெல்லாம்
முன்போல் உங்களால்
உண்ணச் சாத்தியமில்லை

உண்ணமுடிந்தவைகள்  மட்டுமே
விருப்பங்களாய்...

நண்பர்களையெல்லாம்
முன்போல் உங்களால்
சந்திக்கச் சாத்தியமில்லை

சந்திக்க முடிந்தவர்கள் மட்டுமே
நண்பர்களாய்...

இலட்சியங்களையெல்லாம்
முன்போல் உங்களால்
அடையச் சாத்தியமில்லை

அடைய முடிந்தவைகள் மட்டுமே
இலட்சியங்களாய்...

ஆம் ...

நினைத்ததையெல்லாம்
மிகச் சரியாய்ச் சொன்னதும்..

விரும்பியதையெல்லாம்
அதிகம் இரசித்து  உண்டதும்

நண்பர்களையெல்லாம்
தவறாது தினமும் சந்தித்ததும்

இலட்சியங்களையெல்லாம்
விடாதுத் தொடர்ந்து அடைந்ததுமே

முதிர்ந்த  நிலையில்
மனதுக்கு இதம் தருவதாய்..

தொடர்ந்து இயங்குவதற்கு
உடலுக்கு உரம் தருவதாய்...

வாழ்ந்த,
வாழும் வாழ்க்கைக்கு

முழுமையான அர்த்தம் தருவதாய்...
இருக்கச் சாத்தியம்  என்பதால் ..

இளமையில்
நல்லவைகள் எதைச் செய்யவும்
வரையரை வைக்காதீர்கள்

இளமையில்
நல்லவைகள்  எதை இரசிக்கவும்
எல்லைகள் வகுக்காதீர்கள்

Thursday, August 2, 2018

காதலும் கவிதையும்

"காதலர்கள் காதலில் தோற்று
தற்கொலை செய்துகொள்வது
தொடர்ந்து நடக்கிற போதும்...

கவிதைகள் என்கிற பெயரில்
குப்பை கூளங்கள்
தொடர்ந்துப் பெருகிடும் போதும்...

காதலும் கவிதையும் மட்டும்
எப்படி நித்தமும் புத்தம் புதிதாய்த்
தழைத்தபடியே இருக்கிறது

பதினாறு வயது மார்க்கண்டேயனாய்
எப்படி இளமைத் துடிப்புடன்
நிலைத்தபடியே இருக்கிறது " என்றான்
புதிதாய்க் காதல்வலையில் சிக்கிய நண்பன்

" எல்லாம்
அசட்டுத் துணிச்சலும்
குருட்டு நம்பிக்கையும்
 தரும் பலத்தால் தான் "என்றேன் சிரித்தபடி

"இது காதலை அறியாதவனின்
பொறாமைப் புலம்பல் " என்றான் எரிச்சலுடன்

"அரசியல் செய்யவில்லை என்றால்
அரசியல் தெரியாது என்று அர்த்தமில்லை
அப்படித்தான்
காதலிக்கவில்லை என்றால்
காதல் புரியாது என்றும் அர்த்தமில்லை" என்றேன்

"எனக்குத் தேவை
 புத்திசாலித்தனப் புலம்பல் இல்லை
ஏற்றுக் கொள்ளும்படியான
தெளிவான விளக்கம் " என்றான்

"பகைவனின் கோட்டைக்குள்
காதலி இருக்கிறாள் எனில்..

கிடைக்கும் நூலேணி பிடித்தோ
ஒட்டடை நூல் பிடித்தோ
ஏறும் அசட்டுச் துணிச்சலையும்...

ஒரு சந்தம் கிடைத்ததென்றால்
ஒரு சொல் கவர்ந்ததென்றால்...

அதைக் கொண்டே
ஒரு காவியம் இயற்றிவிடலாம் எனும்
குருட்டு நம்பிக்கையையும்

நிச்சயம்
காதல் உணர்வும்
கவிதை மனமும் மட்டுமே தரும்.

அதனால்தான்
காதலர்கள் தோற்றபோதும்
காதல் என்றும் தோற்காதும்..

குப்பைகள் நிறைந்தபோதும்
கவிதையும் வீரியம் குறையாதும்

தொடர்ந்து கொண்டிருக்கிறது "என்றேன்

இதனை ஒப்புக் கொண்டானா
எனத் தெரியவில்லை
ஆனால் பதில் கேள்வி எழுப்பவில்லை