Saturday, February 26, 2011

பிரசவ சங்கல்பம்

தன்னைப் பாதிக்கிற
ஒவவொரு நிகழ்வும்
ஒவவொரு உணர்வும்
கருவாகி
அவனுள் வளர்ந்து
கவியாக வரும் வரை...

கவிஞன் படும் பிரவச அவஸ்தை
அவன் மட்டுமே அறிந்தது
ஆயினும்
கருவானது கவியாகி
கால் கொண்டு நடக்கையில்
அது தரும் அவஸ்தை
அது கூட அவன் மட்டுமே அறிந்தது

இளைஞர்களைக்  கொள்ளை கொண்ட
'இழந்த காதலை'
இயற்றிய அவனே
மறந்து போன நிலையில்
கவிஞனின் மனைவி ஒரு நாள் கேட்டாள்

'யார் அந்த அழகு சுந்தரி
இப்பொது கூட விலகிக்  கொள்கிறேன்
இடைஞ்சலாக இருக்க மாட்டேன்' என
கண் கசக்கிப் போனாள்

இந்தப் பிரச்சனை ஒயவே
ஆறு மாதங்கள் ஆகிப்போனது

'நண்பனின் நயவஞ்சகம்'
கவிதை வெளிவந்த பின்னே
கவிஞனின் நெருங்கிய நண்பன்
தொடர்பு எல்லையை விட்டு
தொலைந்தே போனான்

அதற்கான காரணம்
இதுவரை
கவிஞனுக்கு விளங்கவே இல்லை

'சம்பந்திகளின் தர்பார்'
கவிதைக்குப்  பின்னே
மாப்பிள்ளை முகம் கொடுதது பேசுவதே இல்லை

'தவறினை நேரடியாகச் சொல்லியிருக்கலாம்
கவிதையாக்கி அசிங்கப் படுத்தியிருக்க வெண்டாம்' என
சொல்லி போன சம்பந்தி
கவிஞனின் வீட்டுப் பக்கம்
இன்று வரை வரவே இல்லை

முத்தைக் கொண்டு
கடற் பரப்பைக் கூட
அளந்து அறியக் கூடும்
படைப்பைக் கொண்டு
படைப்பாளியை அறியக் கூடுமோ?

கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
கவிதைகள் நீர்த்துப் போகும்
கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்

ஆனாலும் என்ன...

கவிஞனை பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன

Wednesday, February 23, 2011

மயில்களும் காகங்களும்

" நீ யார் பக்கம் "என
என் மனவெளியில்
எப்போதும் போல
எண்ணிக்கையும் தரமும்
போரிடத் தயாராகி
என்னைக் குழப்பின

இருவர் கைகளிலும்
கேடயங்கள்
விதம் விதமாய்
ஆயுதங்கள்

"எங்கும் எதிலும் எப்போதும்
வெற்றியை தீர்மானிப்பது நான்தான்"என
மீசையை முறுக்கியது எண்ணிக்கை

"த்ற்காலிக சந்தோஷமே
வெற்றி எனக் கொண்டால்
நீ சொல்வது சரி
ஆயினும்
நீடித்து நிலைத்து நிற்பது
வெற்றி எனச் சொன்னால்
அது நான்தான் "என
எப்போதும்போல
அடக்கமாகப் பேசியது தரம்

எகத்தாளமாகச் சிரித்தது எண்ணிக்கை
"நீடித்து நிலைத்து என்றால் எப்போது ?
போய்ச் சேர்ந்த பின்பா?
மூச்சுத் திணறி இறந்த பின்
வீசுகிற புயற் காற்று
பிணம் புரட்டித்தான் போகும்
உயிர் காக்காது " என்றது

பதிலேதும் பேசாது
புன்னகைத்து நின்றது தரம்
ஏற்கெனவே
குழப்பத்தை ரசித்து நின்ற மனம்
இப்போது
குரங்காட்டம் போடத்துவங்கியது

அன்றாட நிகழ்வுகளில்
அ நியாயக் காரனின் அட்டகாசங்கள்
களியாட்டம் போட
நியாயஸ்தனின் வாதங்கள்
தலை கவிழ்ந்து நிற்பது போல
எனக்குள்ளும் ஒரு சறுக்கல்

தரத்தோடு எண்ணிக்கையை
கூட்டலாமா என்ற
ஒரு பித்தலாட்ட எண்ணம்
என்னுள் தலை தூக்குவதை
என்னால் தவிர்க்க இயலவில்லை

Saturday, February 19, 2011

சதுப்பு நிலம்

வீட்டை அடுத்திருந்த
திருமண மண்டபத்தில்
முகூர்த்தக் கால் ஊண்டப்பட்டவுடன்
எங்கள் வீட்டில் அனைவருக்கும்
மூச்சுத் திணற துவங்கி விடும்

மந்திர சப்தமும்
மங்கள வாத்தியமும்
கேட்க துவங்கியதும்
நங்கள் மூவரும்
மூலைக்கு ஒருவராய் தூக்கி எறியப் படுவோம்

வாழ்வில் தொலைந்து போனவைகள் எல்லாம்
ரேஷன் அரிசியில் இருப்பது போல்
முற்றத்தில் அமர்ந்து
முறத்தில் முகம் புதைப்பாள் அம்மா

அறுத்து அறுத்து தேய்ந்து போன
கதிர் அறிவாளாய்
இயலாமையின் மொத்த உருவாய்
ஈசி சேரில் மிகச் சாய்ந்து
முகட்டினில் முகம் புதைப்பார் அப்பா

முன்னறை ஜன்னலோரம்
முழங்காலில் முகம் புதைத்து
திருமணத்தில் இரண்டறக் கலப்பேன் நான்

நம்பிக்கைகளும் ஆசைகளும்
சமதளத்தில் இருந்தவரை
என் கனவுகளும் கற்பனைகளும் கூட
நாகரிகம்தான் இருந்தன

நம்பிக்கைகள் முழுவதும் தொலைந்து போக
ஆசைகள் ஆர்பரித்துச்சீற
ஜானவாசத்தில்
மாப்பிள்ளை அருகில்
நெருங்கி அமர துவங்கிய நான்
இப்போதெல்லாம்
பள்ளியறையில்
பின்னிரவு வரை
பயணித்து கொண்டே இருக்கிறேன்

Monday, February 14, 2011

கண் கெட்ட பின்னே.......

ஒவ்வொரு பண்டிகையின் போதும்
சட்டைக்கு அளவு கொடுக்கையில்
"கொஞ்சம் வைத்துத் தை
வளர்கிற பிள்ளை " எனச் சொல்லி
கொஞ்சம் பெரிதாகவே தைத்துக் கொடுப்பாள் அம்மா
என்றைக்கோ...எவனோ..அதன் காரணமாய்
"தொள தொள மணி "என வைத்த பெயர்
இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது

கல்லூரிக்குள் நுழையும் நாள் முதலே
வேலைக்கான தயாரிப்புப் பணியில்
முழுவதுமாக என்னை முடக்கி வைப்பார் அப்பா
கல்லுரிக் கலாட்டா
நண்பர்கள் உல்லாசம் என
நான் கதைவிடுவதெல்லாம் கூட
சினிமா பார்த்துக் கற்றுக் கொண்டதுதான்

சம்பாத்தியம் தந்த தெம்பில்
கொஞ்சம் நான்
நடுத்தரம் மீறிய உல்லாசத்தில்
மிதக்க நினைத்தாலும்
ஏன் நடக்க நினைத்தாலும் கூட
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து
உபன்யாசம் செய்து என்னை
ஓய்ந்து உட்காரச் செய்வாள் மனைவி.

நடுவயதில்
திமிறித் தாவிய தேவைகளை
அடக்கி ஒடுக்கிய மிதப்பில்
அல்லது அலுப்பில்
கொஞ்சம் ஓய்ந்து சாய எத்தெனிக்கையில்
பால் வைத்த நெற்பயிறாய்
பருவம் எய்தினின்று
என்னை பதறச் செய்வர் பிள்ளைகள்.
அதனால்
தொடரோட்டம் தொடர்ந்து தொடரும்.

அனைத்து கடமைகளையும்
செவ்வனே செய்து முடித்து
நிகழ்காலக் காற்றைக் கொஞ்சம்
சுவாசிக்க முயலுகையில்
செத்த நாக்கிற்கு கொஞ்சம்
சுவை காட்ட நினைக்கையில்
"பழைய நினைப்பா பேராண்டி.."என
பரிகாசம் செய்வான் நண்பன்.

எனக்கென்னவோ..இப்போதெல்லாம்...
கிழிந்த சாக்குப் பையில்
அடுக்கி வைக்கப்பட்ட அடுக்கு இலையை
எடுக்க முயலும் ஒவ்வொரு முைற்யும்
"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி
கடைசி வரையில்
பச்சை இலையில் சாப்பிடாமலே போன
பாட்டியின் நினைவுதான்
அடிக்கடி வந்து தொலைக்கிறது.

என்ன செய்வது...
உடலிருக்கும் இடத்திலேயே மனதை வைப்பதும்
எப்போதும்
நிகழ்காலத்திலேயே நிலைத்து நிற்பதுமே
"வாழுதல்"என்பது கூட
எதிர்காலத்தின் நீட்சி
ஒரு முட்டுச்சந்தில்
முட்டி நிற்கையில்தான்
எல்லோருக்கும் புரியத் துவங்குகிறது.

Friday, February 11, 2011

பழநிமுருகனும் நானும்

எதிர்பார்ப்புகள் எதுமின்றி
எப்போதும் உறவு கொள்வதால்
எனக்கு
உறவுகளும் அதிகம்
நண்பர்களும் அதிகம்

அதைப் போலவே
வேண்டுதல்கள் ஏதுமின்றி
சன்னதிக்குச் செல்வதால்
எனக்கும்
பழநி முருகனுக்கும்
பழக்கம் ரொம்ப நெருக்கம்

திருவிழா நாட்களில் அவன்
எப்போதும் கோவிலில் இருப்பதில்லை
சன்னதி திறந்ததும்
தாவிக் குதித்து வெளியேறிவிடுவான்
மீண்டும்
நடை  சாத்துகையில்தான்
கோவிலுக்குள் காலடி வைப்பான்

இன்றும் அப்படித்தான்
மயிலினை உலாவவிட்டு
என் எதிரில்தான் அமர்ந்துகொண்டான்

தக்க சமயம் இதுதானென
மெதுவாக காரணம் கேட்டேன்
சிரித்த முகத்துடன்தான்
என்னோடு பேசத் துவங்கினான்

"உண்மையில் எனக்கு
ஆத்திகர்களை விட
நாத்திகர்களைத்தான்
ரொம்பப் பிடிக்கும் "என்றான்
நான் அதிர்ந்து போனேன்
அவனேதான் தொடர்ந்து பேசினான்

"ஆத்திகர்களைப் போல நாத்திகர்கள்
அதிகம் என்னை தொந்தரவு செய்வதில்லை.
 காவடிக்குள்ளும் பால் குடத்திற்குள்ளும்
கோரிக்கைகள் ஆயிரம்  வைத்து என்னை
இம்சை படுத்துவதில்லை " என்றான்

நான் பணிந்து வணங்கிச் சொன்னேன்
" நீ கொடுப்பவன் என நம்பித்தான்
உன் கோவில் தேடி வருகிறார்கள்
வருகிறவர்களில் நல்லவர்களும் இருக்கலாம்
தகுதியானவர்களாகப் பார்த்து நீ
கொஞ்சம் தயை செய்யலாமே" என்றேன்

முருகனின் முகத்தில் லேசான
மாறுதல் தெரிந்தது

"இந்த மனிதர்களுக்கு நான்
எதை கொடுக்காது இருக்கிறேன்
பஞ்ச பூதங்களைப்
படைத்துக் கொடுத்துள்ளேன்
அதை அடக்கி ஆளும்
அறிவினைக் கொடுத்துள்ளேன்
சக்தியைக் கொடுத்துள்ளேன்
சிந்திக்கும் திறனும் கொடுத்துள்ளேன்
இன்னும் போதாது போதாது என
என் வாசல் வந்து நின்றால்
நான் என்ன செய்யக்கூடும்
நிலம் கொடுத்து
விதை கொடுத்து
நீரும் கொடுத்து
சக்தி கொடுத்து
பயிரிடும் அறிவும் கொடுத்து
பிழைத்துகொள் என அருளினால்
மீண்டும் என்னிடமே வந்து
அடிவயிற்றில் பசி
அனலாய் எரிகிறது
எட்டேஎட்டு இட்லியும்
தொட்டுக்கொள்ள ஏதுவாக
கெட்டியாக சட்டினியும்
இருந்தால் நல்லது என்றால்
நான் என்ன செய்யக் கூடும் "என்றான்

நான் கொஞ்சம் பழக்கத்தை
கெடுத்துக் கொண்டேனோ என
பயந்துதான் போனேன்.

பின் தீர்க்கமான குரலில்
சண்முகனே பேசினான்
"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே கொடுத்துவிட்டேன்
இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே
கோவணாண்டியாகவே காட்சியும் தருகிறேன்
இதற்குமேல் நான் என்ன செய்யட்டும்" என்றான்

திருமுருகன் முகத்தில் தாண்டவமாடுவது
கோபமா கவலையா
என்னால் ஏதும் அனுமானிக்க இயலவில்லை

அதற்குள்
சன்னதியின் மணியோசைச் சப்தமும்
பக்தர்களின் அரோகரா சப்தமும்
குன்றெங்கும் பட்டுத் தெறித்தது
நானும் விழிமூடித் தியானித்து
லேசாக விழி திறந்தேன்
பழநி முருகன் எதிரில் இல்லை
அவன் இருந்து போனதன் அடையாளமாய்
எங்கும் சந்தன மணமே நிறைந்திருந்தது

Tuesday, February 8, 2011

ரகசியங்களை அறியும் ரகசியம்

பூமி பாரக் குறைப்பையே
நோக்கமாகக் கொண்ட கண்ணன்
அனைத்து அதர்மங்களையும்
தர்மமாகவே செய்து போகிறான்

தன்பெயர் தரும் சக்தியாலேயே
அனுமன் அனைத்து சாகஸங்களும் செய்ய
தன் இன்னுயிர் மனைவியை மீட்க
பாலம் கட்டித்தான் போகிறான் இராமன்

இலக்கே வழியைத் தீர்மானிக்கிறது
என்கிற முற்போக்குச் சிந்தனையும்
இலக்கு மட்டுமல்ல
வழியும் பிரதானமே எனச் சொல்லும்
காந்தீயச் சிந்தனையும்
புராண காலங்களிலேயே
நம் மண்ணில்
செழித்தோங்கி வானம் தொட்டிருந்தன

கதைகளுக்குள் ஒளித்துவைத்த
ரகசியங்களை அறிய முயலாது
கதைகளை விமர்சித்தே நாம்
காலம்  பல கடந்து விட்டோம்

ஒளிந்து ஒளிந்து
மாயாஜாலம் காட்டும்
ரகசியங்களை அறியும்
ரகசியம் அறிந்து கொண்டாலே
நம்முள் பல அதிசயங்கள்
நிகழ்ந்து போகுமோ ?
இந்தத்  துயர்மிக்க பூமிகூட
சொர்க்கமாக மாறிப்போகுமோ ?


.


Sunday, February 6, 2011

உயிரும் உடலும்....

எங்கள் ஊருக்குள் போக
இரண்டு வழிகள் உண்டு
ஒன்று நேர்வழி
இன்னொன்று  சுருக்குவழி

நேர்வழி
 நல்ல சாலை
ஆனால் தூரம் அதிகம்
ஆனாலும் எப்போதும்
ஆள் நடமாட்டம் உண்டு

சுருக்குவழி
ஒற்றையடிப்பாதை
கொஞ்சம் தூரம் குறைவு
ஆனாலும் போகிற வழியில்
ஒரு பேய் மரமும்
பெரிய சுடுகாடும் உண்டு

எனக்கு பேய்கதைகள்
நிறையத் தெரியும்
எனவே
பகல் பன்னிரெண்டு ஆனாலும்
நேர்வழிதான் போவேன்

என் நண்பன் தைரியசாலி
இரவு பன்னிரெண்டு ஆனாலும்
சுடுகாட்டு வழிதான் வருவான்

ஒரு நாள் அவனிடம்
தைரியமாய் இருப்பதன்
சூட்சுமம் கேட்டேன்
ரகசியக் காப்பு ப்ரமானம் கேட்டு
பின் இப்படிச் சொன்னான்.

"இதில் பயப்பட ஏதும் இல்லை
பிணம் என்றால் உயிரற்ற உடல்
உயிரில்லாது அது இயங்க இயலாது

பேய் என்றால் அது உடலற்ற உயிர்
உடலன்றி அது இயங்க முடியாது
அதனால் எனக்கு பயமில்லை" என்றான்

எனக்கு புரிந்தது போல் இருந்தது
கொஞ்சம் தைரியமும் வந்தது
"இனி சுடுகாடுவழி வருவேன் ' என்றேன்

கொஞ்சம் பெருமூச்சு விட்டபடி
"எனக்கு நேர்வழி என்றால்
ரொம்ப பயம் " என்றான்

நான் குழம்பிப் போனேன்
பின் அவனே மெதுவாக
"நேர் வழியில்
பேயும் பிணமும் சேர்ந்து
நிறையத் திரியும்
அதனால் அதிகப் பயம்"  என்றான்

எனக்கேதும் விளங்கவில்லை
உங்களுக்கேதேனும்  புரிந்தததா ?Wednesday, February 2, 2011

குழப்பத்தை மீண்டும் குழப்புவோமா ?


நான் குழப்பவாதி இல்லை
.உங்களை குழப்புகிற நோக்கமும் இல்லை.
சொல்லுகிற விசயம் கொஞ்சம் குழப்பமானது
.நீங்கள் குழம்பாது படிக்கவே
இத்தனை பீடிகை.

நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா ?
நம்புங்கள்
அதில் பிரச்சனை ஏதும் இல்லை
ஆனால்
நம்பச் சொல்லுகிறவனை நம்பாதீர்கள்.
ஏனெனில்
அவன் நம்பிக்கையை விதைக்கிற சாக்கில்
பல மூட நம்பிக்கைகளையும் விதைத்துப் போகிறான்

நீங்கள் கடவுளை நம்பவில்லையா?
நம்பாதீர்கள்.
அதில் பிரச்சனை ஏதும் இல்லை.
ஆனல்
நம்பாதீர்கள் என்பவனை நம்பாதீர்கள்
ஏனெனில்
அவன் மூட நம்பிக்கையை வேரறுக்கிற சாக்கில்
நம்பிக்கையின் ஆனிவேரையும் அசைத்துப் போகிறான்

பாற்கடலை  கடைந்தெடுக்கையில்
விஷத்தைத் தொடர்ந்துதான்
அமிர்தமே கிடைக்கிறது.

எனவே
முழுமையான நன்மை என்பதோ
முழுமையான தீமை என்பதோ
முழுமையான உண்மை என்பதோ
முழுமையான பொய்மை என்பதோ
உலகில் நிச்சயம் இல்லை.
விகிதாச் சாரங்களே
அதனதன் தன்மையை நிர்ணயித்துப் போகின்றன

நீங்கள் பூசை செய்தால்
மனங்குளிர்ந்து வரமளிக்கவோ
நீங்கள் மேடைபோட்டுத் தாக்கினால்
மனம் வெறுத்து சாபம் தரவோ
கடவுள் என்பவன் மனிதப் பிறப்பு இல்லை

அவன் இருக்கிறானா?
அவன் இல்லையா ?
என்கிற தேவையற்ற கேள்விகளில்
நாம்தான் சண்டையிட்டுச் சாகிறோம்
அவனை நிரூபிக்க.
அவன் என்றுமே
முயற்சி செய்த்தும் இல்லை
இனி முயலப் போவதும் இல்லை

அனைத்தையும் ஆட்டுவிப்பது அவன் என
ஆத்திகர்கள் நம்பித்தொலைக்கட்டும்
அனைத்தையும்..இயக்குவது "அதுவே  'என
நாத்திகர்கள்.சொல்லி இருக்கட்டும்
நாம் இவர்களுக்கிடையில் சிக்காது
நிம்மதியாய் இருப்போம்.

இயற்கையின் மாறாத விதி ஒன்று
மாறாது உள்ளது.
இயற்கையின் மாறாத  நியதி ஒன்று
நிச்சயமாய் உள்ளது.
விதியினைக் காப்பதே அவன் வேலை
.நியதியைக் காப்பதே அதன் வேலை
நம்மைக் காப்பது அவனுக்கான
 வேலையும் இல்லை
நம்மைக் காப்பது அதனுக்கான
 வேலையும் இல்லை
என்பதில் தெளிவாய் இருப்போம்
என்றென்றும் குழம்பாது  சிரிப்போம்