Friday, October 14, 2016

விடாது தொடரும் உங்கள் நினைவு நிச்சயம் எங்களைத் தூங்க விடாது

இந்தியர்கள் அனைவருக்கும்
ஆகஸ்ட் பதினைந்து ஒரு
விடியல் நாளெனில்

இளைஞர்கள் அனைவருக்கும்
அக்டோபர் பதினைந்தை ஒரு
எழுச்சி நாளாக்கிப் போனவரே

இந்தியாவின் கடைக் கோடியில்
ஒரு சாமானியனாய்ப் பிறந்து
இந்தியா முழுமைக்கும்
ஒரு ஆதர்ஷ நாயகானாய் உயர்ந்தவரே

அலங்காரமிக்க அதிகாரமிக்கப்
ஒரு பதவியை
முதன் முதலாய்
மக்களுக்கான பதவியாக்கியவரே

வல்லமையுள்ளோருக்கானது
என்றான  ஜனாதிபதி மாளிகையை
சாமானியர்களும்  மிக இயல்பாய்
நமக்கானது என உணரச் செய்தவரே

ஓயாத உழைப்பின் மூலம்
சாமானியனும்
உச்சத்தைத் தொட முடியும் என
நிரூபித்துக் காட்டியவரே

பதவியால் அல்ல
செய்வதற்கரிய செயல்களால்
தலைநகரையே ஒரு சிற்றூருக்கு
மாற்றிக் காட்டியவரே

உங்கள் பிறந்த நாள்
இளைஞர்களுக்கான
எழுச்சி நாள் மட்டுமல்ல

இந்தியர்கள் அனைவரும்
2020 என்னும் இலட்சியத்தை
எண்ணச் செய்யும் நாள்

இந் நாளை
நீங்கள் அவதரித்த நாளாக மட்டுமல்ல
உலகத் தலைமைக்கு
இந்தியாவைத்
தயார்ப்படுத்தும் நாளாகக் கொள்கிறோம்

விடாது தொடரும் உங்கள் நினைவு
நிச்சயம் எங்களைத் தூங்க விடாது

வாழ்த்துக்களுடன்....

Wednesday, October 12, 2016

வேறு எதை எதையோ நொந்தபடி....

கொத்தனாரை
தோட்ட வேலை செய்யவும்
தோட்டக்காரனை
வீடு கட்டவும்
விட்டக் கதையாய்

சர்வரை
சமையல் வேலை செய்யவும்
சமையல்காரரை
நின்று பரிமாற
வைத்தக் கதையாய்

அரசனை
ஆலோசனை வழங்கச் செய்தும்
மந்திரியை
பெரும் போருக்கு
அனுப்பும் முறையாய்

எல்லாவற்றையும்
மாற்றி மாற்றிச் செய்து
மாற்றம் இல்லையென
நொந்துச் சாகிறோம்

ஆப்பசைத்து
மாட்டிக் கொண்ட குரங்கு
நுனி அமர்ந்து
முன்னால் வெட்டிய முட்டாள்
கதைகளைச் சொல்லியபடி..

இவைகளிரண்டுமாய்
அனைத்து விஷயத்திலும்
நாம்தான் இருக்கிறோம் என்பதை
இயல்பாய் மறந்தபடி
 வேறு எதை எதையோ நொந்தபடி.