Wednesday, January 30, 2019

வரப்புயர .....

"இதனை
இதனால்
இவன்
என்பதை மட்டுமல்ல...

அதனை
அவன்கண்
என்பதையும் கூட

எதனுடனும்
எவருடனும்
இணைத்துப் பொருள் கொள்ளமுடியும்

அப்படி
இன்றைய சீரழிவுக்குக் காரணம்..

எது
எதனால்
யாரால்
ஏன் என்பதனை
பொதுமைப்படுத்திச் சொல்லமுடியுமா ?"
என்றான் நண்பன்

அது பெரிய விஷயமில்லை

தீமையை எது தருமோ
அது எட்டும்படியும்

பயனற்றதை
முயன்றால் அடையும்படியும்

நன்மையை எது தருமோ
அதை அடைய முடியாதபடியும்...
உள்ளதை அறியாது...

தேவையற்றதை
தெளிவாய்த் தெரிந்து கொண்டும்

பயனற்றதை
அரைகுறையாய் அறிந்தபடியும்

அவசியமானதை
முற்றாக அறியாதபடியும்
இருப்பதால் தான் "என்றேன்

நண்பன் ஒவ்வொன்றாய்
பட்டியலிட்டப்பின் சொல்கிறான்

"ஆம் வரப்புயர "என்பதைத் தொடர
அது எங்கெங்கோ சுற்றி
கோன் என முடிவதைப் போல்
இதுவும் மூலம் தொடுகிறது
மிகச் சரியாய்" என்கிறான் திருப்தியுடன்.

Tuesday, January 22, 2019

நமதருமைப் பதிவர்கள் போலவே....


சமபந்திதான் ஆயினும்
ருசியான சத்தான சாத்வீகமான
உணவுதான் ஆயினும்..
சரிசமமாகப் பறி,மாறப்பட்டதே ஆயினும்

அள்ளியபடி பல கைகளும்
துழாவியபடி சில கைகளும்
இருக்கக் காரணம்
நிச்சயம் கைகளில்லை

மாறாக
பசித்த வயிறும்
ஏற்கெனவே
அஜீரணத்தில் அவதியுறும் வயிறும் என்பது
பறிமாறுபவனுக்குப் புரியும்..

எனவே
பறிமாறுபவன் தொடர்ந்து
பறிமாறுவதில் மட்டுமே
கவனம் கொள்கிறான்

நியாயமானதுதான் ஆயினும்
நடுநிலையில் பயன்கருதி எளிமையாகச்
சொல்லப்பட்டதுதான் ஆயினும்

இரசித்துச் பலரும்
கண்டும் காணாதபடிச் சிலரும் 
இருக்கக் காரணம்
நிச்சயம் படைப்பில்லை

மாறாக
பரிசீலித்தேற்கும் மனநிலையும்
ஏற்கெனவே
கொள்கைகளால் நிரம்பிய மனமும் என்பது
படைப்பாளிக்கும் தெரியும்

எனவே
படைப்பாளி தொடர்ந்து
படைப்பதில் மட்டுமே
கவனம் கொள்கிறான்

பதிவுலகில் தொடர்ந்து எழுதும்
நமதருமைப் பதிவர்கள்  போலவே....

Monday, January 21, 2019

இன்றைய அரசியல்..அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது ?

அந்தக் காலங்களில் நாம் இருவருமே
மனிதர்களாய் இருந்தோம்

எம் உயர்வு குறித்து
எப்போதும் சிந்தித்தபடி நீங்களும்

உங்கள் நல்வாழ்வு உயர்வு குறித்து
எப்போதும் வேண்டியபடி நாங்களும்

எங்களைச் சந்திப்பதில் உங்களுக்கிருந்த
மகிழ்வும் இன்பமும்
உண்மையாய் இருந்தது

உங்களைத் தரிசிப்பதில் எங்களுக்கிருந்த
ஆர்வமும் எழுச்சியும்
அளவு கடந்திருந்தது

அதனால்தான் இரவெல்லாம் நாங்கள்
தூங்காது விழித்துக் காத்திருந்தோம்

அதனால்தான் பகலிரவாய் நீங்களும்
சோராது சந்தித்து மகிழ்ந்தீர்கள்

இப்போது நாம் இருவருமே
மோசமான வியாபாரிகளாகி விட்டோம்

உம் நிலைப்புக் குறித்து
எப்போதும் சிந்தித்தபடி  நீங்களும்

எங்கள் அற்பத் தேவைகள் குறித்து
எப்போதும் நினைத்தபடி நாங்களும்

எங்களைச் சந்திப்பது
உங்களுக்கு இப்போது
அலுப்பாகவும் சலிப்பாகவும்

உங்களைச் சந்திப்பது
எங்களுக்கு  இப்போது
வெறுப்பாகவும் கோபமாகவும்

அதனால்தான்
இப்போதெல்லாம் நீங்கள்
அழைத்துச் செல்லவேண்டி
எம் வீட்டிலேயே காத்திருக்கிறோம்

மாறிய
சூழலறிந்து நீங்களும்
பணத்துடன் பொட்டலத்துடன்
எம் வீட்டு வாசல் வருகிறீர்கள்

இருவரில் யார் மிக மோசம்
என்னும் போட்டி
நம்முள் தொடர்ந்து கொண்டிருக்கிறது...

மிகச் சரியாகச் சொன்னால்...

விபச்சாரி வீடு போய்
பழக்கப்பட்டவன்
பழக்க தோஷம் போகாது

முதலிரவில் மனைவியிடம்
நூறு ரூபாய்க் கொடுக்க

அவளும் பழக்க தோஷம் போகாது
ஐம்பது ரூபாயைத்
திருப்பிக் கொடுத்த கதையாக...

இன்றைய நம் அரசியல்
அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...?

இப்படித்தான் சொல்லணும்

இன்னும் மிகச் சரியாய் என்றால்
இன்னும்
அசிங்கமாகத்தான்தான் சொல்லணும்..

Saturday, January 19, 2019

கலகக்காரன்.

."எத்தனை தடைகள் எதிர்ப்புகள்
வந்த போதும்
எப்படி உன்னால்.
கலகக்காரனாகவே தொடர்ந்து இருக்க முடிகிறது..
இந்த அசுர மனோபலம்
உனக்கு எங்கிருந்து கிடைக்கிறது ?"
என்கிறான் நண்பன்

" எங்கிருந்தும் கிடைக்கும்
நமக்குப் பார்க்கத் தெரிய வேண்டும்
நம் சக்தியில் நமக்கு
நம்பிக்கையும் வேண்டும்
அவ்வளவே " என்கிறேன்

"புரியவில்லை" என்கிறான்

அவனுக்கு விளக்குவதுபோல்
எங்களெதிரே
சாலையின் மறுபுற சாக்கடையோரமிருக்கும்
பூக்கடைக்கு வாக்கப்பட்டும்
நாற்றத்தை மீறி
மணந்து சிரிக்கிறது
குண்டு மல்லிகைப் பந்து

Friday, January 18, 2019

கவிநூறு நம்வசமே

மலரோடு உறவாடி
மகிழ்வோடு வலம்போகும்
நிலவோடு உறவாட
நினைவெல்லாம் பூமணக்கும்

கரையோடு தினம்கூடி
களிப்போடு சதிராடும்
அலையோடு நினைவோட
நுரைபொங்கும் மனமெங்கும்

மலையரசன் உடல்தழுவி
மதிமயங்கித் தரைநழுவும்
குளிரருவி நிலையுணர
மனமாகும் குற்றாலம்

தண்மலரைக் கூடிமனக்
களிப்போடு உலாபோகும்
வண்டினத்தின் சுகமறிய
மனம்கொள்ளும் ரீங்காரம்

இயற்கையுடன் இணைந்துவிடும்
இளம்மனது வாய்த்துவிட்டால்
இயற்கையதன் சுகம்யாவும்
யாவருக்கும் இலவசமே

கணந்தோறும் மகிழ்வோடு
சூழலிலே மயங்கவிழும்
மனமதுவும் கொண்டுவிட்டால்
கவிநூறு நம்வசமே

நவீனத் தோட்டிகளாய்..

முன்பெல்லாம்
மாதமொரு முறை
சுத்தம் செய்தால் போதும்
எனும் அளவு
நிரம்பி வழியும்
இ.மெயில்கள்...

இப்போதெல்லாம்
வாரமொருமுறை
சுத்தம் செய்யும் அளவு
நிரம்பி வழிகிறது

எரிச்சலுடன்
தேவையானவைகளை மட்டும் 
இருக்க விட்டு
மற்றவற்றையெல்லாம்
ஒதுக்கி நிமிர்கிறேன்

எதிர் ஜன்னல்வெளியில்
காக்கிச் சட்டையணிந்த தோட்டி
இரண்டு மேடுகள் கடந்து
மூன்றாம் குப்பைமேட்டைக்
கிளறிக் கொண்டிருக்கிறான்.

அவன் பின்னால் கிடந்த
இரண்டு குப்பைக் குவியல்கள்
முகநூலையும் வாட்ஸ்-அப்பையும்
நினைவுறுத்திப் போக
மீண்டும் பொறுக்கக் குனிகிறேன்

Wednesday, January 16, 2019

தமிழகத்தின் தவப்புதல்வனே

சாணக்கியத் தனமே
அரசாள  அச்சாணி
எனும் போலி நம்பிக்கையை
மக்கள் மன்றத்தில் சிலர்
பரப்பிக் கொண்டிருந்த காலத்தில்.

இல்லையில்லை
மக்கள் நல மனத்தாலும்
மனிதாபிமானத்தால் கூட
அது சாத்தியம் என
நிரூபித்துக் காட்டியவனே..

கலை கலைக்காகவே
எனும் பழமை வாத வழியில்
பலர் பயணப்பட்டு
விருதுகளும் கேடயங்களும்
பெற்றுக் கொண்டிருந்த காலத்தில்

கலை மக்களுக்காகவே
எனும் கொள்கை வழியில்
திடமாய் இருந்து
ஏழை எளிய மக்களின்
உள்ளம் கவர்ந்த உயர்ந்தவனே

வாழ்ந்தவர்  கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில்
நிறைந்தவர் யார் எனும்
கேள்வியை நீயே எழுப்பி

மறைந்து ஆண்டுகள்
நாற்பதை நெருங்கியும்
மக்கள் மனங்களில்
மறையாது நிலைத்து
அது "நான் தான் "என நிரூபிப்பவனே

உன்னை நினைத்திருப்பதே
எங்கள் நலம் எங்கள் பலம்

உன் பிறந்த நாளில்
உன் நினைவுகளில் மூழ்குவதையே
தவமாகக் கொள்கிறோம்
இன்றுபோல் என்றென்றும்
வாழ்க நீ வாழ்க நீ
தமிழகத்தின் தவப்புதல்வனே

Monday, January 14, 2019

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ஒவ்வொரு நாட்டுக்கும்
சுதேசித் திரு நாட்கள்
எனப் பல உண்டு

ஒவ்வொரு மதத்திற்கான
பண்டிகை நாட்கள்
எனப் பல உண்டு

ஒவ்வொரு ஜாதிக்கான
பண்டிகைகள் எனக் கூட
சில நாட்கள் உண்டு

ஆயினும் ஒவ்வொரு
இனத்திற்கான பண்டிகைகள்
என ஒன்றிரண்டே உண்டு

அதில்
நம் தமிழர் திரு நாளாம்
தைப் பொங்கல் திரு நாளே
முதன்மையானது எனச்
சொல்லத்தான் வேண்டுமா என்ன ?

தமிழ்ப் பதிவர்கள் அனைவருக்கும்
மனமார்ந்த பொங்கல் திரு நாள்
நல்வாழ்த்துக்கள்

Sunday, January 13, 2019

பதிவர்களுக்கு....

படுத்தபடி விழிமூடி
யோசித்துக்கொண்டிருப்பவன்
தான் தூங்கவில்லை என
நிரூபணம் செய்வதற்காக
காலையாட்டிக் கொண்டிருப்பதைப் போலவேனும்

பதிவுகள் எழுத
நேரமில்லையாயினும்
தொடர்பில் இருக்கிறோம் என்பதை
நிரூபணம் செய்வதற்காகவேணும்
பின்னூட்டமிட்டுக் கொண்டாவது இருப்போம் வாரீர்
( எனக்கும் சேர்த்துத்தான் )

பசுஞ்சோலை மாலையாய்
திருவிழாவின் கோலாகலமாய்
இணைப்புக்கும் மனமகிழ்வுக்கும்
ஆதாரமாய் இருந்த பதிவுலகு...

இன்று இருண்டு
திருவிழா முடிந்த
மறு நாள் மைதானமாய்
வெறிச்சோடிக் கிடப்பது
உங்களைப்போல்
எனக்கும் உடன்பாடில்லை

பேரெழுச்சியின் துவக்கமாய்
இத்தைத் திருநாள் முதலேனும்
பின்னூட்டமிடுதல் மூலமோ
பதிவுகள் மூலமோ
பண்டைச் செழிப்பை
மீண்டும் நிலை நிறுத்துவோம் வாரீர்

எழுத்தின் மூலம்
அகம் கண்டுத் தொடர்ந்து
சந்திப்பின் மூலம்
முகம் கண்டு மகிழ்ந்த
அந்த வஸந்த நாட்களை
இன்று முதல்
மீட்டுருவாக்கம் செய்வோம் வாரீர்

(எம் மதிப்பிற்குரிய கரந்தையாரின்
பதிவின் தாக்கத்தில் எழுதியது
அவருக்கு என் மனப்பூர்வமான
நல்வாழ்த்துக்கள்

பதிவர்கள் அனைவருக்கும் இனிய
பொங்கல் திரு நாள் நல்வாழ்துக்கள் )

Thursday, January 10, 2019

எங்களைக் குற்றவாளியாக்காதீர்கள்...

எங்களைக்  குற்றவாளியாக்காதீர்கள் 
எங்களைக் குறைகூறி அலையாதீர்கள்

கொஞ்சம் தூரமாயினும்
அமருமிடமும்
பறிமாறும் நேர்த்தியும்
திருப்திப்படவில்லையாயினும்
கைப்பக்குவமும் ருசியும்
சரியாயிருந்தால் சரி
என்ற காலம் போய்.....

ருசி கொஞ்சம்
முன்பின்னாயினும்
ஹோட்டல் இருப்பிடமும்
கார் பார்க் வசதியும்
பரிமாறும் நேர்த்தியும்
சரியாய் இருந்தால்தான்
திருப்திப்படுகிறது என்பதால்

வசதியற்றவனாயினும்
நேர்மையானவனாக
எளிமையானவனாக
கூப்பிட்ட குரலுக்கு
உடன் வருபவனாக
இருந்தால் போதும்
என்ற காலம் போய்.....

ஜெயித்தப்பின்
காணாமல் போகிறவனாயினும்
கிரிமினல் குற்றவாளியாயினும்
தேர்தல் சமயத்தில்
கொடுப்பவருள்
கூடுதலாய் கொடுப்பவனாய் இருந்தால்
சரியானவனாய்ப் படுகிறது என்பதால்

ஒப்பனைகளாயினும்
அழகுக் கடங்கியும்
பாவனைகளாயினும்
அறிவுக் கடங்கியும்
அளவுகோள்கள்
நெகிழும் தனமையற்றும்
இருந்த.காலம் போய்...

அழகென்பதே
ஒப்பனைகளாய்
அறிவென்பதே
பாவனைகளாய்
நெகிழத் தக்கதே
அளவுகோள்களாய் இருந்தால்தான்
சந்தைப்படுத்த முடிகிறது என்பதால்

சொல்லத் தக்கதை
பயனுள்ளதை
எளிமையாய்
மிக உறுதியாய்
சொல்வதென்பதே
மதிக்கத் தக்கதென
இருந்தகாலம் போய்...

பொய்யாயினும்
சுவாரஸ்யமாய்
பயனற்றதாயினும்
நேரங்கடத்தியாய்
இருக்கத் தகுந்ததே
மதிக்கத் தகுந்ததாய்
வியாபாரமாகிறது என்பதால்...

இது சரியானது 
இதற்கானது எது என்பது போய் ...
எனக்கிது சரி
இதற்கானது எது
என்பதுவே
இன்றைய   சூழலின் 
தர்மமாகிப் போனதால்

எப்போதும்,
இனியேனும்
எங்களைக்  குற்றவாளியாக்காதீர்கள் 
எங்களைக் குறைகூறி அலையாதீர்கள்

Wednesday, January 9, 2019

மடங்கிய விரல்களே நிஜம் காட்டுகிறது மௌனமாய்

வெள்ளையன்
கொள்ளையன்
அவனை விரட்டினால்
பாலும் தேனும் ஓடும்
என்றார்கள்

இப்போது நீருக்கே
அல்லாடுகிறோம்

தொழிற்புரட்சிக்குப் பின்
உற்பத்திப் பெருக்கத்தில்
எல்லாருக்கும் எல்லாம்
எளிதாய்க் கிடைக்கும் என்றார்கள்

வேட்டியிலிருந்து
கோவணத்திற்கு வந்து விட்டோம்

பசுமைப் புரட்சியில்
விளைச்சல் பெருக்கத்தில்
தன்னிறைவு
அடைந்துவிட்டோம் என்றார்கள்

கருப்பை கெட்டதைப்போல்
நிலம் விஷமானதே மிச்சம்

வெண்மைப் புரட்சியில்
பால் உற்பத்தியில்
உலகில் நாம்தான்
முன்னணி என்றார்கள்

மாட்டுத் தீவனமே
குதிரைக் கொம்பாகிப் போனது

ஜனநாயகமே
சிறந்த அரசியல் நெறி
தேர்தலே அதற்கு
அச்சாணி என்றார்கள்

தேர்தலில் சர்வாதிகளையே
தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்

பிள்ளையார்ப் பிடிக்க
குரங்கான கதையாய்
எல்லாமே மாறுபட
காரணம் எதுவாயிருக்கும் ?

ஆள்காட்டி விரல்
எதை எதையோ சுட்டிக்காட்ட
மடங்கிய விரல்களே
நிஜம் காட்டுகிறது மௌனமாய்

கட்சியும் அரசும்

சிறுவனாய் இருக்கையில்
என் போல் பலருக்கும்
காங்கிரஸ் கொடிக்கும்
அரசாங்கக் கொடிக்கும்
இருக்கும் சிறு வித்தியாசம்
தெரியவே தெரியாது.

இரண்டினையும் ஒன்றெனவே
நாங்கள்
நினைத்துக் கொண்டிருப்போம்

அவ்வப்போது வரும்
குடியரசு தினமும்
சுதந்திர தினமும்
இரண்டு வேறு வேறு என
ஞாபகமூட்டிப் போகும்
நாங்கள்
வெட்கித் தலைகுனியும்படியாய்...

இப்போது
பெரியவனாய் ஆனபின்னும்
என் போல் பலருக்கும்
கட்சியென்பதற்கும்
ஆட்சியென்பதற்கும்
இருக்கும் வித்தியாசம்
சுத்தமாய்த் தெரியவில்லை

ஆட்சியாளர்களும்
இரண்டும் ஒன்றெனவே
நினைத்துக் கொண்டிருக்க

இப்போதும்
அது அப்படியில்லை என்பதனை
அவ்வப்போது வரும்
நீதிமன்றத் தீர்ப்புகளே
ஞாபக மூட்டிப் போகிறது

எல்லோரும் 
தலையில் அடித்துக் கொள்ளும்படியாய்...