Showing posts with label சிறப்புக் கவிதை -. Show all posts
Showing posts with label சிறப்புக் கவிதை -. Show all posts

Wednesday, January 16, 2019

தமிழகத்தின் தவப்புதல்வனே

சாணக்கியத் தனமே
அரசாள  அச்சாணி
எனும் போலி நம்பிக்கையை
மக்கள் மன்றத்தில் சிலர்
பரப்பிக் கொண்டிருந்த காலத்தில்.

இல்லையில்லை
மக்கள் நல மனத்தாலும்
மனிதாபிமானத்தால் கூட
அது சாத்தியம் என
நிரூபித்துக் காட்டியவனே..

கலை கலைக்காகவே
எனும் பழமை வாத வழியில்
பலர் பயணப்பட்டு
விருதுகளும் கேடயங்களும்
பெற்றுக் கொண்டிருந்த காலத்தில்

கலை மக்களுக்காகவே
எனும் கொள்கை வழியில்
திடமாய் இருந்து
ஏழை எளிய மக்களின்
உள்ளம் கவர்ந்த உயர்ந்தவனே

வாழ்ந்தவர்  கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில்
நிறைந்தவர் யார் எனும்
கேள்வியை நீயே எழுப்பி

மறைந்து ஆண்டுகள்
நாற்பதை நெருங்கியும்
மக்கள் மனங்களில்
மறையாது நிலைத்து
அது "நான் தான் "என நிரூபிப்பவனே

உன்னை நினைத்திருப்பதே
எங்கள் நலம் எங்கள் பலம்

உன் பிறந்த நாளில்
உன் நினைவுகளில் மூழ்குவதையே
தவமாகக் கொள்கிறோம்
இன்றுபோல் என்றென்றும்
வாழ்க நீ வாழ்க நீ
தமிழகத்தின் தவப்புதல்வனே

Monday, June 4, 2018

மூல மந்திரம்

உயிரின் அருமை
அறிந்து தெளிந்தோம்
அதன் காரணமாய்
உடல் மீது கவனம் கொண்டோம்

உடல் மீது
கவனம்  கொண்டோம்
அதன் பொருட்டு
உட்கொள்பவைகளின் மீது
அக்கறை   கொண்டோம்

உட்கொள்பவைகளின் மீது
அக்கறை   கொண்டோம்
அதன் தொடர்ச்சியாய் 
நிலம், நீர்,வெளி இவைகளின்
அருமை அறிந்தோம்

நிலம், நீர் ,வெளியதன்
அருமை அறிந்தோம்
அதன் நீட்சியாய்
அதன் தூய்மையைக்  காத்தலே
முதல் நெறி என உணர்ந்தோம்

'எதிரிலிருக்கும்  கோன் உயர
வெளியே விரவிக்கிடக்கும்
வரப்புயர்தல்  அவசியம் "என்ற
அவ்வையின் அறிவுரை
அறிந்த நமக்கு

 "உடல் வளர்த்தேன்
உயிர் வளர்த்தேனே  " என்று
விரிந்த ஒன்றை சுருங்கச் சொன்ன 
திரு மூலரின்  வாக்கினைப்
புரிந்த நமக்கு

"சுற்றுப்புறச் சூழல் காத்தலே
நம் உடல் காக்கும்
நம் உடல் மூலம் நம் உயிர்  காக்கும்
மூல மந்திரம்  "என்பதனை
பிறர் விளக்கவேண்டுமா என்ன ?

Thursday, August 24, 2017

கணபதி திருவடி அனுதினம் அடிபணி...


கணபதி திருவடி
அனுதினம் அடிபணி
துயரது கனவினி -என்றும் 
இன்பமே எனஅறி

கஜமுகன் திருமுகம்
காணுநீ  தினமினி
நிஜமென மருவிடும்-உடன்
வருகிற கனவினி

பரமனின் முதல்மகன்
அடியினை உடன்பணி
பயமது அடங்கிடும்-உடன்
தொடர்ந்திடும் ஜெயமினி

உமையவள் திருமகன்
புகழ்மொழி தினம்படி
நிலைபெறும் நிம்மதி-இனி
நிலைத்திடும் என்றறி

சரவணன் மனம் கவர்
கரிமுகன் பதம்பணி
குறையது  தகர்ந்திடும்  -என்றும் 
நிறைவுதான் எனத்தெளி


(அனைவருக்கும் இனிய  விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள்   )

Sunday, August 6, 2017

"வாடா போடா " நண்பர்கள்...

"வாடா போடா "
நண்பர்கள் அதிகம்
உடனிருக்கையில் இருந்த
இளமைத் துள்ளலும்
தைரியமும் மகிழ்வும்

"வா, போ "
நண்பர்களிடம்
விட்டக் குறையாய்
தொட்டக்குறையாய்
விடாதுத் தொடர்ந்ததும்

இப்போது
"வாங்க போங்க "
நண்பர்களிடமும்
இருப்பது போன்ற
பாவனையில் என்
நட்பைத் தொடர்கிறேன்

பிறந்த சூழலில் வாய்த்த
புழுதி வீதியும்
அந்த எருமை குளிக்கும் குளமும்
கிட்டிப் புல் விளையாட்டும் தந்த
 நீங்காதச் சுகத்தை

இன்று வசதி வாய்ப்புகள் தரும்
பிரதான சாலைகளில்
நவீன நீச்சல் குளங்களில்
நவ நாகரீக  விளையாட்டுகளில்
நாளும்தேடிச் சோரும்
என்வயதுப்பெருசுகள் போலவும்

( வலைத்தளம், மற்றும் முக நூல் நண்பர்கள்
அனைவருக்கும்  
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் ) 

Thursday, July 27, 2017

எங்கள் அப்துல் "கலாமே '


தமிழில்
இருக் "கலாம் "
வந்திருக் "கலாம் "
போயிருக் "கலாம் "
செய்திருக் "கலாம் "
முடித்திருக் "கலாம் "
நினைத்திருக் "கலாம் "

இப்படி நூறு வார்த்தைகள் உண்டு
ஆயினும்
இவைகள் அனைத்தும்
தெளிவற்றவை
உறுதியற்றவை
நேர்மறைத் தன்மையற்றவை

ஆயினும்
தமிழுக்கு
தமிழனுக்கு
இந்தியனுக்கு

உறுதியை உறுதி செய்வதாய்
நேர்மறைத்தன்மை ஊட்டுவதாய்
இளைஞர்கள் நரம்புகளை முறுக்கேற்றுவதாய்
ஒளிகூட்டுவதாய்
வழிகாட்டுவதாய்

ஒரே ஒரு "கலாமாய் " வந்தவரே
அப்துல் "கலாமாய் " ஒளிர்ந்தவரே

இந்த நூற்றாண்டில்
இந்தியனின்  உன்னத உயர்வுக்கு
காரணமாய இருந்தவரே
தொடர்ந்து இருப்பவரே

இன்னும் சிலகாலம்
இருந்து வழிகாட்டியாய்
இருந்திருக் "கலாம் "என
இந்தியரெல்லாம்
கண்ணீர்விடவைத்து....

அந்தப் பொறாமைப் பிடித்த காலன்
தன் கோரமுகத்தை
அழிக்கும் புத்தியை
உங்கள் விசயத்திலும்
காட்டிவிட்டானே  "பாவி "

அந்தக் காலனை
முன்னே வரவைத்து
காலால் எட்டி உதைத்து
காலம் வென்றவர்கள் பட்டியலில்
முண்டாசுக் கவிஞர் வரிசையில்
எங்கள் அப்துல் "கலாமே '
நீங்களும் சேர்ந்துவிட்ட இரகசியம்
அறிய மாட்டான் அந்த அப் "பாவி "

விழித்து இருக்க
வருவதே கனவென
புதிய வேதம் சொன்னவரே

நீங்கள் ஒளிகூட்டிக் கொடுத்த
தீபமதைக் கையிலேந்தி
புதிய உலகை நிச்சயம் படைப்போம்

இறுதி மூச்சு வரை
ஓயாது உழைத்த பெருந்தகையே

இனியேனும் சிறிது  ஓய்வெடுப்பீர்

நீங்கள் காட்டிய வழியில்
வீறு போடத் துடித்திருக்கும்
இளைஞர் படைதனைக் கண்டு

இனியேனும் இரசித்து மகிழ்ந்து
சொர்க்கத்தில் சிறிது ஓய்வெடுப்பீர் 

Saturday, January 21, 2017

இயக்கம் ஒன்று ஆண்டு நூறைக் கடந்து நிலைத்து நிற்கு தென்றால்

சந்தாக் கட்டி சண்டை போடும்
சங்கம் நூறு உண்டு---இங்கு
சங்கம் நூறு உண்டு

சந்தைப் போலக் கூடிக் கலையும்
சங்கம் எங்கும் உண்டு----வெட்டிச்
சங்கம் எங்கும் உண்டு

சிந்தை தன்னில் சேவை எண்ணம்
உள்ள வர்கள் மட்டும்--நிலையாய்க்
கொண்ட வர்கள் மட்டும்

ஒன்றாய்க் கூடி உள்ள சங்கம்
ஒன்றே ஒன்று தானே --அது நம்
அரிமா சங்கம் தானே

ஜாதி சமய பேதம் என்று
பிரிவு ஏதும் இன்றி--மனப்
பிளவு ஏதும் இன்றி

கோடி உள்ளோர் இல்லார் என்ற
பேதம் ஏதும் இன்றி--பிரிவுக்
கூறு ஏதும் இன்றி

வாடி நிற்போர் துயரம் போக்க
ஓடும் எண்ணம் மட்டும்---தொடர்ந்து
ஓடும் எண்ணம் மட்டும்

நாடி தன்னில் கொண்ட வர்கள்
அரிமா மக்கள் நாமே--அதுநம்
உதிரப் பண்பு தானே

உலகம் முழுதும் ஆண்ட நாடும்
நூறைத் தாண்ட வில்லை--தன்னிலை
தொடர முடிய வில்லை

உலகம் வியக்க சிவந்த நாடும்
நூறைத் தாண்ட வில்லை--சிதறலைத்
தடுக்க இயல வில்லை

இயக்கம் ஒன்று ஆண்டு நூறைக்
கடந்து  நிற்கு தென்றால்--உலகை
வியக்க வைக்கு தென்றால்

உலகில் நமது இயக்கம் ஒன்றே
என்று அறிந்து மகிழ்வோம்--அதனை
உயிராய்ப் போற்றித் தொடர்வோம்

( நான் சார்ந்துள்ள உலக அரிமா இயக்கம்
நூறாம் ஆண்டைக் கடக்கும்
மகிழ்ச்சியான தருணத்தை வாழ்த்தி
எழுதப்பட்டது )

Monday, January 16, 2017

காலத்தை வென்றவரை காவியமானவரை...

ஒரறிவு  உயிரினங்கள் முதல்
ஆறறிவு மனிதர்வரை
அனைத்தையும்
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும்
காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விடத்  திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
எங்கள் தங்கமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும்
மர்மயோகியாய்  இருப்பினும்
நல்லவன் வாழ்வான்,
 தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை  நம்முள்
விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை
காவியமானவரை
இந்த நூற்றாண்டுப்   பிறந்த நாளில்
 நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்திப் பெருமிதம் கொள்வோம்

Saturday, December 31, 2016

இன்றோடு.......

இன்றோடு.......
தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
நாளைமுதல்
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

இருளோடு
நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
ஒளியோடு
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

அடியோடு
உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
அழகோடு
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

நிலையாக
கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
விளைவாக
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Saturday, November 12, 2016

நேரு மாமா பிறக்கும் முன்பும் ரோஜா இருந்தது

நேரு மாமா பிறக்கும் முன்பும்
ரோஜா இருந்தது  - அது
நூறு பூவில் தானும்  ஒன்று
என்றே   இருந்தது

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-அதுவே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டது

பஞ்சம் பசியும் பிணியும் உலகை
விட்டு விலகவும்  -எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்....

பஞ்ச சீலக் கொள்கை தன்னை
உலகு உய்யவே -தந்து
ஐந்து கண்டம்  புகழும் வண்ணம்
உயர்வு கொண்டதும் .....

முதலாய் இருத்தல்  மட்டும் பெருமை
என்று  இறாது  -அதிலே
தொடர்ந்து இருத்தல்  அதுவே பெருமை
என்று   உணர்ந்ததும் ......

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்ததும் -நமது
இந்தி யாவும்  வளர்ந்து சிறக்க
வழியை வகுத்ததும் ......

நமது  வாழ்வு ஏற்றம் கொள்ள
வழியைத்  தந்தது - அதை 
உணர்ந்துப்   போற்றி நெஞ்சில் பதித்தல்
மகிழத்  தக்கது -

குழந்தை  நலமே நாட்டின் நலமாய்
மனதில் கொண்டதால்  -என்றும்
குழந்தைக் கூட்டம்   சுற்றி  இருக்க
விருப்பம் கொண்டதால்

குழந்தை  களுக்கே   உரிய தெனது
பிறந்த நாளது -என்று
உவந்து சொன்ன  நேரு மாமா
பிறந்த நாளதில்

அவர்தம்  பெருமை முழுதாய்  அறிந்து
மகிழ்ச்சி  கொள்ளுவோம்  -என்றும்
அவர்தம் கனவை  நிஜமென் றாக்க
உறுதி  கொள்ளுவோம்

Monday, August 15, 2016

எங்கள் பாரதிக்கு.. எங்கள் வாக்குறுதி

இதந்தரு மனையி னீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்...

(அடிப்படை வசதிக ளின்றி
அனுதினம் துயருற் றாலும்  )

பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்...

( எதிர்ப்பினைக்  காட்டி  நாளும்
தடியடி அதைப்பெற் றாலும்)

விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்

(அரசுகள் எல்லாம் எங்கள்
நலமதை மறந்திட்டாலும்  )

சுதந்திர தேவி உன்னை
தொழுதிடல் மறக்கி லேனே

(சுதந்திர தேவி தன்னை
தொழுதிட மறக்கி லோமே )

அனைவருக்கும் இனிய
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Tuesday, August 2, 2016

தொடர் பயணம்

(ஆறு  வருடம்

1000 வது பதிவு

116 நாடுகளில் தொடர்பவர்கள்

4 இலட்சத்திற்கும் மேற்பட்ட   பக்கப் பார்வை

30000/ க்கும் மேற்பட்ட  பதிலுரைகள்

10 க்குள் தொடர்ந்து  தமிழ் மணத்தில் முன்னிலை
                         (தற்சமயம்   5 /  12279 )

இவைகளையெல்லாம்  அடையக்  காரணமாய்
இருக்கிற  பதிவர்கள்  அனைவருக்கும்
என மனமார்ந்த  நன்றி )


                                        **********************************

சமதளமாகவே
காலடியில் கிடக்கிறது
எட்டிவிட்ட சிகரம்

ஒரு அடையாளமாய்
ஒரு ஓரமாகவே  இருக்கிறது
அடைந்துவிட்ட இலக்கும்

சிகரத்தை அடைவது
ஓய்ந்துச் சாய இல்லை
கொஞ்சம் ஓய்வெடுத்து
மீண்டும் துவங்கவே என்பதில்
தெளிவாய் இருக்கிறேன்

வெகு கவனமாய்
சிகரத்தில்  கிடைத்த
கிரீடங்களையும் மாலைகளையும்
உடலிலிருந்தும் மனத்திலிருந்தும்
இறக்கி வைத்து
என்னை எளிதாக்கிக் கொள்கிறேன்

ஏனெனில்
ககமான பயணத்தை
சீரழிக்கும் முதல் எதிரி
 கூடுதல் சுமைகளே என்பதில்
எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை

தேடலும் பயணிப்பதுமே
வாழ்க்கையேயன்றி
ஒன்றை அடைதலும் இல்லை
ஒன்றில் அடைதலும் இல்லை
இதில்  எனக்கு எவ்வித குழப்பமுமில்லை

மீண்டும் பயணிக்கத் துவங்குகிறேன்
எதிரே நீண்டு விரிகிறது பயணப் பாதை
தொடர்கிறேன் உங்கள் ஆசியுடனே 

Wednesday, October 14, 2015

விடாது தொடரும் உங்கள் நினைவு நிச்சயம் எங்களைத் தூங்க விடாது

இந்தியர்கள் அனைவருக்கும்
ஆகஸ்ட் பதினைந்து ஒரு
விடியல் நாளெனில்

இளைஞர்கள் அனைவருக்கும்
அக்டோபர் பதினைந்தை ஒரு
எழுச்சி நாளாக்கிப் போனவரே

இந்தியாவின் கடைக் கோடியில்
ஒரு சாமானியனாய்ப் பிறந்து
இந்தியா முழுமைக்கும்
ஒரு ஆதர்ஷ நாயகானாய் உயர்ந்தவரே

அலங்காரமிக்க அதிகாரமிக்கப்
ஒரு பதவியை
முதன் முதலாய்
மக்களுக்கான பதவியாக்கியவரே

வல்லமையுள்ளோருக்கானது
என்றான  ஜனாதிபதி மாளிகையை
சாமானியர்களும்  மிக இயல்பாய்
நமக்கானது என உணரச் செய்தவரே

ஓயாத உழைப்பின் மூலம்
சாமானியனும்
உச்சத்தைத் தொட முடியும் என
நிரூபித்துக் காட்டியவரே

பதவியால் அல்ல
செய்வதற்கரிய செயல்களால்
தலைநகரையே ஒரு சிற்றூருக்கு
மாற்றிக் காட்டியவரே

உங்கள் பிறந்த நாள்
இளைஞர்களுக்கான
எழுச்சி நாள் மட்டுமல்ல

இந்தியர்கள் அனைவரும்
2020 என்னும் இலட்சியத்தை
எண்ணச் செய்யும் நாள்

இந் நாளை
நீங்கள் அவதரித்த நாளாக மட்டுமல்ல
உலகத் தலைமைக்கு
இந்தியாவைத்
தயார்ப்படுத்தும் நாளாகக் கொள்கிறோம்

விடாது தொடரும் உங்கள் நினைவு
நிச்சயம் எங்களைத் தூங்க விடாது

வாழ்த்துக்களுடன்....

Thursday, July 30, 2015

புகழுடம்பு

தேடிநித்தம் சேர்த்ததெல்லாம்
தெருக்குப்பை ஆகிவிடும்
தேடியோடிப் படித்ததெல்லாம்
தொலைந்தெங்கோ  ஓடிவிடும்
கூடியாடிக் களித்ததெல்லாம்
வெறுங்கனவாய் மாறிவிடும்
தேடிவந்து காலனவன்
மூச்சடைக்க நடந்துவிடும்

வெளியோடி உள்ளோடி
உயிரதற்கு ஆதரவாய்
ஒலியதனைத் தினம்கடத்தும்
ஒப்பற்றச் சாதனமாய்
நொடிதோரும் உழைத்திட்ட
வளியதுவும் திசைமாறும்
வெளியோடு நின்றுடலை
பிணமாக்கி சுகம்காணும்

தினமுலவி வாழ்வதற்கும்
நிம்மதியாய் சாய்வதற்கும்
தினந்தோரும் வகைவகையாய்
தின்றுவுயிர் வளர்ப்பதற்கும்
மனமிளகித் தாய்போலத்
தனைத்தந்த நிலமகளும்
மனங்கெட்டு அரக்கியாகி
உடல்தின்னத் துணிந்துவிடும்

நதியாகித் தினமோடி
நாடெல்லாம் செழிப்பாக்கி
தவிப்பெடுத்த உயிரனைத்தின்
தாகமதை தினம்தீர்த்த
அதிமதுர நீரதுவும்
நிலைமாறும் முகம்மாறும்
பொதியான பிணம்கழுவும்
புழக்கடைநீர் போலாகும்

உடல்நலத்தைத் தினம்காக்கும்
உணவாக்க உறுதுணையாய்
கசடுயெனத் தினம்சேரும்
கழிவழிக்கப் பெருந்துணையாய்
உடனிருந்த பெருந்தீயும்
கொண்டகுணம் விட்டுவிடும்
உடலெரித்துப் பசியடக்கப்
பேராசைக் கொண்டுவிடும்

நான்கினையும் உள்ளடக்கி
ஏதுமில்லை என்பதுபோல்
காண்பதற்குத் தெரிந்தாலும்
கடவுள்போல் யாதுமாகி
ஆண்டுவரும் வெளியதுவும்
அரக்ககுணம் கொண்டுவுடல்
தாண்டிவரும் உயிரதனை
விழுங்கிடவே தினமலையும்

உடலோடு உயிரிருக்க
உள்ளன்பின் துணையோடு
உலகத்தார் மேன்மையுற
உழைக்கின்ற உழைப்பொன்றே
உடல்விட்டு உயிர்பிரிந்தும்
உலகுவிட்டு மறையாது
புகழுடம்பு எடுத்திங்கு
எந்நாளும் நிலைத்திருக்கும்