Wednesday, December 30, 2020

புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

 இன்றோடு.......

தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
நாளைமுதல்
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும் 
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

இருளோடு
நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
ஒளியோடு
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

அடியோடு
உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
அழகோடு
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

நிலையாக
கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
விளைவாக
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Friday, December 25, 2020

மின்சாரச் சிக்கனம்...தேவை இக்கணம்

 ❇ விழிப்புணர்வு பதிவு...


🌐 மின்சாரக் கட்டணம் உயர்கிற இந்த நேரத்தில் வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்களை எத்தனை  மணி நேரம் உபயோகித்தால் எவ்வளவு மின்சாரம் செலவாகும் என்ற கணக்கீட்டையும் தெரிவித்துள்ளனது...


பெரும்பாலானவர்களுக்கு நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை...


💢 உதாரணமாக..


🔘 இரண்டு 60 வாட்ஸ் பல்புகள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால் மாதம் 18 யூனிட் செலவாகும்.


▪ ஆனால்

 

 🔘  அதுவே 60 வாட்ஸ் பல்புகளுக்குப் பதிலாக 15 வாட்ஸ் கொண்ட 2 சிஎப்எல் பல்புகளை தினமும் 5 மணி நேரம் உபயோகித்தால் மாதம் 4.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.


▫ அதுபோல


🔘 40 வாட்ஸ் திறன் கொண்ட 2 டியூப் லைட்கள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால், மாதம் 12 யூனிட் செலவாகும்.


🔘 750 வாட்ஸ் திறன் கொண்ட அயர்ன் பாக்ஸ் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 22.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.


🔘 150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும்.


🔘 2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உப யோகப் படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும்.


🔘 அதுவே 200 வாட்ஸ் ஏர்கூலர் என்றால்  மாதம் 30 யூனிட் செலவாகும்.


🔘 75 வாட்ஸ் திறனுள்ள 2 மின்விசிறி தினமும் 8 மணி ஓடினால், மாதம் 36 யூனிட் செலவாகும்.


🔘 400 வாட்ஸ் வாஷிங்மெஷின் தினமும் ஒரு மணி நேரம் உபயோகப்படுத்தினால் மாதம் 12 யூனிட் செலவாகும். 100 வாட்ஸ்டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும்.


🔘 500 வாட்ஸ் மிக்ஸி தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 15 யூனிட் மின்சாரமும்,  300 வாட்ஸ் வெட் கிரைண்டர் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 9 யூனிட் மின்சாரமும் செலவாகும்.


🔘 200 வாட்ஸ் கம்ப்யூட்டர் தினமும் ஒரு மணி நேரம் இயங்கினால் மாதம் 6 யூனிட் மின்சாரமும், 740 வாட்ஸ்குதிரை திறனுள்ள பம்பு மோட்டார் தினமும் ஒரு மணி நேரம் ஓடினால்,  மாதம் 22 யூனிட் மின்சாரமும் தேவைப்படும்.


🔘 7 வாட்ஸ் திறனுள்ள மொபைல் பேட்டரி சார்ஜர் தினமும் ஒரு மணி நேரம் பயன்படுத்தப்பட்டால் மாதம் 0.21 யூனிட் மின்சாரம் காலியாகும்.


🔘 இந்த அளவீடுகளைத் தெரிந்து மின்சாரத்தைச் சிக்கனமாக  உபயோகிக்கக் கற்றுக்கொண்டால் மின் கட்டணம் அதிகரிக்காது...


📌 மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்...

Sunday, December 6, 2020

ரஜினி ஒரு கிரியா ஊக்கி மட்டுமே

 நான் பள்ளியில் படித்த கிரியா ஊக்கிக் குறித்த

விளக்கம் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது.


"தான் எவ்வித மாறுதலையும் அடையாமல்

தான் பக்கத்தில் இருப்பதாலேயே

மாறுதலைத் தூண்டும் பொருளுக்கு

கிரியா ஊக்கி எனப் பெயர்."


நிச்சயமாக தேர்தல் முடிந்தபின்னும்

தான் சார்ந்த அணிகள் ஜெயித்தால்

அது மக்களின் வெற்றி எனவும்.


தோற்றால் அது மக்களின் தோல்வி எனவும்

பேட்டிக் கொடுத்துவிட்டு இப்போது இருப்பது

போலவே....


அரசியலில் இருப்பது போலவும்

தமிழக மக்கள் வாழ்வில் அதீத அக்கறை

உள்ளவர் போலவும் காட்டிக் கொண்டபடியே


சினிமாவில் நடிக்கக் கிளம்பிவிடுவார்..


அதன் காரணமாகவே எந்தக் கட்சியையும்

எதிர்த்து அரசியல் செய்யாதபடி தான்

ஆட்சிக்கு வந்தால் இதை இதைச் செய்வேன்

என மட்டும் பிரச்சாரம் செய்துவிட்டு....


அதை ஆன்மீக அரசியல்

காந்தீய அரசியல் எனவும் 

புதுக் கதை விட்டு விட்டு..


தன் ரசிகர்களை மீண்டும் இரசிகர்களாகவே

இருக்கவிட்டு விட்டு அரசியலுக்கு நிச்சயம்

முழுக்குப் போட்டுவிடுவார்..


அதன் காரணமாகவே தன் இரசிகர்கள்

யாரையும் ஒருங்கிணைப்பாளராகவோ

ஆலோசகராகவோ நியமிக்காது சில நூறு

பேருக்கு மட்டும் தெரிந்தவர்களை அந்தப்

பதவிகளில் சாமர்த்தியமாக நியமித்திருக்கிறார்.


இந்த விசயம் அவர்களுக்குத் தெரியாததில்லை

அவர்களைப் பொருத்தவரை அவர்களுக்கு முன்னால்

ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும்

கண்கொள்ளாக் காட்சியினை வாழ்வில் 

ஒருமுறை பார்த்த திருப்தி ஒன்றே 

அவர்களுக்குப் போதும்

ஆம் அதுவே அவர்கள் வாழ்நாள் சாதனை

ஆகிப் போகும்.


(ஒரு வகையில் புரட்சித் தலைவருடன் 

தோழர் கல்யாணசுந்தரம்

அவர்கள் அனுபவித்த சுகத்தைப் போல )


மற்றபடி இரஜினி அவர்கள் அரசியல் கட்சித்

துவங்குவதால் தமிழக அரசியலில் பெரும்

மாறுதல் ஏதும் ஏற்பட்டு விடப் போவதில்லை

அது அவருக்கும் தெரியும்...


அவர் வருகையால் சில லட்சம் ஓட்டுகள்

இடம் மாறி சில கணக்குகள் மாறும்.


கொள்கை கூட்டணி என சொல்லிக் கொண்டு

தான் எதிர்பார்த்தது கிடைக்காத கட்சிகள் சில

இருந்த இடம் விட்டு மாறும்...ஆம் நிறம் மாறும்


தன்னை இயக்குபவர்கள் எதிர்பார்ப்புக்கு

ஏற்றார்ப்போல இந்த மாறுதல்களுக்கெல்லாம்

தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பதன் மூலம்

அவரே முழு முதற்காரணமாய் இருந்துவிட்டு...

...

தான் எவ்வித மாறுதலும் அடையாது...


ஆம் கிரியா ஊக்கிபோல்..பழைய இரஜினியாய்

இயமலைக்கும்...பண்ணைவீட்டுக்கும்...

ஸ்டுடியோவுக்கும்..இடையிடையே பயணித்தபடி...

 

இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக

முக்கியப் பிரச்சனைகளுக்கு சிறு சிறு

சுவாரஸ்யப்பேட்டிக் கொடுத்துக் கொண்டும்

அதன் காரணமாக தன் பிராண்ட் வேல்யூ

குறைந்துவிடாது சினிமாவில் தொடர்வார்

என்பதே என் கருத்து...


ஆம் இரஜினி ஒரு கிரியா ஊக்கி மட்டுமே

என்பது என் ஆணித்தரமான கருத்து...

Thursday, December 3, 2020

எதுக்கும் படிச்சு மனசில் வச்சுக்குவோம்..

 என்கிட்ட 20 ரூவாதான் இருக்கு உங்க 

        ஆட்டோவுல வரலாமா .?  இப்படி கேட்டுவிட்டு தன்னுடைய ஆட்டோவில் 

       ஏறிய முன்னாள் எம்.எல்.ஏ குறித்து .,


              ஆட்டோ டிரைவர் ஒருவர் வியந்து எழுதிய முகநூல் பதிவு வைரலாகிக் கொண்டிருக்கிறது.


                          மதுரை முனிச்சாலையை சேர்ந்தவர் பாண்டி. பட்டதாரியான இவர், சொந்தமாக ஆட்டோ ஓட்டித் தொழில் செய்து வருகிறார். 


           கடந்த 27-ம் தேதி காலையில் இவர் மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கோரிப்பாளையம் நோக்கி சென்ற போது, 


                   அரசு மருத்துவமனை அருகே பேருந்தில் ஏற முயன்ற பெரியவர் ஒருவர் தன்னுடைய ஒற்றைக்கால் செருப்பை தவற விட்டுவிட்டார்.


           உடனே பேருந்தில் இருந்து இறங்கி செருப்பை அவர் தேடிக்கொண்டிருப்பதை கண்ட பாண்டி, 


                     அந்த பெரியவர் மதுரையின் முன்னாள் எம்.எல்.ஏ என்பதை அடையாளம் கண்டு வியந்திருக்கிறார்.


                  பேருந்தைத் தவறவிட்ட அந்த பெரியவரிடம் போய், தன்னுடைய ஆட்டோவில் ஏறச் சொல்லி கேட்டார் பாண்டி. 


                      அதற்கு அவர், 'என்னிடம் 20 ரூபாய்தான் இருக்கிறது. கொண்டுபோய் விட்டுவிடுவீர்களா?' என்று கேட்டிருக்கிறார். 


                      'சரிங்கய்யா' என்று சொல்லி அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற பாண்டி, ஆட்டோவில் இருந்த அந்த முன்னாள் எம்.எல்.ஏவுடன் ஒரு செல்ஃபி எடுத்து அதனை முகநூலில் பதிவிட்டார்.


                 கூடவே, 'வெறும் 20 ரூபாயுடன், ஒற்றைக் கால் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு மறு செருப்பை தேடித் திரிந்த அந்த பெரியவர் .


                   மதுரை கிழக்குத் தொகுதியில் இருமுறை எம்.எல்.ஏவாக இருந்த எளிமையின் சிகரமான நன்மாறன் அய்யா. 


                    கொள்கையில் முரண்பாடுகள் இருந்தாலும் மிகவும் எளிமையான, நேர்மையான, மனிதநேயம் கொண்ட மனிதரான அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்' என்று எழுதியிருந்தார்.


                       இதுகுறித்து முனிச்சாலை பாண்டியிடம் கேட்டபோது, 'முதலில் வயதானவராக இருக்கிறாரே என்றுதான் உதவுவதற்கு முன் வந்தேன். 


                    அப்புறம்தான் அவர் முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் என்று கண்டுகொண்டேன். 'எங்கே போகணும் அய்யா, ஆட்டோவில் ஏறிக்கோங்க' என்றபோது, 


                     தயங்கியபடி 'கருப்பாயூரணி போகணும். என்னிடம் 20 ரூபாய்தான் இருக்கிறது, கூட்டிட்டுப் போவீங்களா?' என்று கேட்டார். 


                   எனக்குக் கண் கலங்கிவிட்டது. நான் பசும்பொன் தேசியக் கழகத்தின் மதுரை மாநகர் இளைஞரணி செயலாளராக இருக்கிறேன். 


                            ஆட்டோ ஓட்டிக்கொண்டே அரசியலிலும் இருப்பதால், மதுரையில் பொதுவாழ்வில் இருப்போரை நன்கு அறிந்தவன் நான்.


          சைக்கிள் வாங்கவே காசில்லாமல் இருந்த பலர், இன்று டொயோட்டா, பார்ச்சூன் கார்களில் பறக்கிறார்கள். 


             சமீபத்தில் மதுரையின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தன்னுடைய மகள் திருமணத்துக்குச் சீர்வரிசையாக மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொடுத்தார். 


                       ஆனால், நன்மாறனோ கட்சி வாங்கி கொடுத்த ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போட்டாலே கட்டுப்படியாகாது என்று, 72 வயதிலும் பேருந்தில் போய்க் கொண்டிருக்கிறார். 


                   எம்.எல்.ஏவாக இருந்ததற்கான பென்ஷன் தொகை ரூ.20 ஆயிரத்தில் பாதியைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தில் வாழ்கிறார். 


                     ஆட்டோவை விட்டு இறங்கும் வரையில் நான் முன்னாள் எம்.எல்.ஏ என்பதை அவராகச் சொல்லவே இல்லை' என்றார்.


             நன்மாறனைத் தொடர்பு கொண்டு இந்தச் சம்பவம் உண்மையா என்று கேட்டோம். 'ஆமாம், உங்களுக்கு எப்படித் தெரியும்?' என்றார். 


                      முகநூல் பதிவு விஷயத்தை சொன்னதும், 'அதை எல்லாம் செய்தியாக்க வேண்டாம். 


             டெல்லி விவசாயிகள் போராட்டம் போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்' என்று கேட்டுக்கொண்டார்.


                          தற்போது ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார் நன்மாறன். 


            அவரது மூத்த மகன் குணசேகரன் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பாண்டியன் (தமிழ்நாடு) கிராம வங்கியில் பணியாற்றுகிறார். 


         இளைய மகன் ராஜசேகரன், மதுரை அரசு மருத்துமனையில் தற்காலிக பணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


-- Hindu tamil --

Amudhan maheshvarma .