Tuesday, March 31, 2015

குஞ்சென்றும் மூப்பென்றும். ....

தீபஜோதியின் மையத்து இருளாய்
மெல்லக் கிளம்பிய வெறுமை
ஆழ்கடலின் வெற்றிடமாய் விஸ்ரூபமெடுத்து
அவனை எங்கெங்கோ
அலையவைத்து போகிறது
அவன் உடையத் துவங்குகிறான்

வறண்ட நினைவுகள் மட்டுமே
உள்ளமெங்கு ம் கடைபரப்பித் தொலைக்க
தப்பிக்க வழியின்றி
தலைதெறிக்க ஓடுகிறான்
பாதம் படும் இடமெல்லாம
பாலையாகவே விரிந்து எரிக்கிறது

கண்படும் இடமெல்லாம்
நயவஞ்சகம் நம்பிக்கைத் துரோகம்
கை படுமிடமெல்லாம்
பொய் பித்தலாட்டம் வன்மம்
ஆறுதல் தேடிப் போகும் இடத்தும்
இருள் அரவம் போலித்தனம் பாசாங்கு
தப்பிப் பிழைக்க கண்மூடி
திசைகளறியாது ஓடுகிறான்

மரண தாகத்திற்குக் கிடைத்த சொட்டு நீரும்
விஷமாகிச சிரிக்க
அதலபாதாள நடுவில் கிடைத்த சிறுபிடியும்
நச்சரவாய்  மாறி நெளிய
பதுங்கல் ஒளிதல் ஏதும்
இனி பயனற்றது என அஞ்சி
 முழுமையான விடுதலை மட்டுமே
தனக்கு இனி விடிவு என
விளிம்பிற்கே ஓடுகிறான
 " வாரியணைத்துக் கொள்கிறேன் வா "என
ஒரு பெரும் பூதம் அவனை நெருங்கிக் கொண்டிருந்தது

தழல் வீரத்தில் மட்டுமில்லை
மனச் சோர்வின் வீரியத்தில் கூட
குஞ்சென்றும் மூப்பென்றுமில்லை என்பதனை
இறுதிவரை
பாவம் அவன்
அறிந்து தொலைக்கவே இல்லை

Friday, March 27, 2015

என்னை நானே அறிய விடு

நண்பகலையும் நடு நிசியாய் காட்டும்
அடர்ந்த காட்டினுள்
வழித்  தடங்கள்
ஏதும ற்ற வெளிதனில்
என்னை விட்டுப் போ

நான் சிறு பிள்ளையில்லை

திசை காட்டும் கருவியின்
வரைபடங்களின் துணையும்
எனக்குப் போதும்

உன் விரல் பிடித்து நடந்துவர
எனக்கு இஷ்டமில்லை
என்னைப் புரிந்து கொள்

இப்போதெல்லாம் எனக்கு
பாதுகாப்பான பயணங்கள் உடன்பாடில்லை

வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
விழுந்தே தெரிந்து கொள்கிறேன்

உடலெங்கும் உன்னைபோல் எனக்கும்
காயம்பட்டுத்  தழும்பாகட்டும்

விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை

விழாதிரு என எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி
என்னை வளரவிடு

எத்தகைய சுவையான பழமாயினும்
உரித்துக் கொடுத்தவை யெல்லாம்
கசக்கவே செய்கின்றன

என்னைப் புரிந்து கொள்
என்னைப் பசி அறியவிடு

குறியீடுகளின் படிமங்களின் தோல்கள்
கடினமானவையே

என்னைக் கடித்து உண்ணவிடு
என் பற்களும் நகங்களும்
சிறிதேனும் பலம் பெறட்டும்
நகர்ந்து எனக்கு வழிவிடு

என்னை இனியேனும்
அலைய விடு
தேட விடு
அறியவிடு

ஒரு தொண்டனாய்
ஒரு பூசாரியாய்
 ஒரு புத்தப்  பிட்சுவாய்
வாழ்வைத் தொடராது

ஒரு தலைவனாய்
ஒரு சித்தனாய்
ஒரு புத்தனாய்

என்னை மலரவிடு
என்னை நானே அறிய விடு

Thursday, March 26, 2015

தீதும் நன்றும்...

விஞ்ஞான வளர்ச்சியின் கருணையால்
நாற்பதாண்டுகளுக்கு முந்தைய
பள்ளிக் கூட நண்பர்களைத்
தேடித் தேடிக் கண்டெடுத்தோம்

உருவ அமைப்பில் பலர்
முற்றிலும் மாறிப் போயிருந்தார்கள்
பலரை அவர்கள்
அறிமுகப் படுத்திக் கொண்டபின்தான்
அறிந்து கொள்ளவே முடிந்தது

அறிந்த பின்தான்
அவர்கள் குண இயல்பு
துளியும் மாறாதிருந்தது
அப்பட்டமாய்த் தெரிந்தது

எத்தனை நிறைவினுள்ளும்
ஒரு சிறு குறையை
மிகத் தெளிவாய்க் கண்டுவிடும் இராமசாமி

"என்னடா எங்குடா போய்ச்சு
அத்தனை சுருள் முடியும்
இப்படி வழுக்கையாய் நிற்கிறாய் " என்றான்

எத்தனைக் குறைவினுள்ளும்
ஒரு நிறைவினைக் கண்டுவிடும் முருகன்

" எப்படிடா இப்படிக் கலரானே
என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கு " என்றான்

முழுதாக விசாரித்து முடிக்கையில்

குறைகண்டுபிடித்து விடும்
"இராமசாமிகள் " எல்லாம்
அனைத்து விதத்திலும்
குறையுடையவர்களாய் இருக்க

நிறைகண்டு மகிழும்
"முருகன்கள் " எல்லாம்
எல்லாவகையிலும்
நிறைவுடைவர்களாய் இருக்க

காலம் எதையும் எவரையும்
மாற்றிப் போவதில்லையென்பதையும்
இருப்பதைத்தான் கூட்டித்தான் போகிறதென்பதையும்

விதி இருப்பதற்கு மாறாக எதையும்
மாற்றித் தருவதில்லையென்பதையும்
பார்ப்பதைத்தான் பரிசளித்துப் போகிறதென்பதையும்

உறுதி செய்து போனது

ஆம்
தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லையென்பதை
மீண்டும்
அழுத்திச் சொல்லிப் போனது

Monday, March 23, 2015

துயிலின் அருமை

பிரிவுத் துயரை
அனுபவித்து அறிய
பிரிய வேண்டியதுதான்
கட்டாயம் என்பதில்லை

அவ்வப்போது
பார்வையளனாய் சென்றுவரும்
புகைவண்டி நிலையமே
போதுமானதாய் இருக்கிறது

வலியின் வலுவினை
நோய்வாய்ப்பட்டே
அறிய வேண்டியதுதான்
அவசியம் என்பதில்லை

அவ்வப்போது
ஆறுதல் சொல்லச் சென்றுவரும்
மருத்துவமனையே
அதனை உணர்த்திவிடுகிறது

நிலையற்ற வாழ்வினைப்
புரிந்து கொள்ள
ஞானம் கொள்ளத்தான்
வேண்டுமென்பது அவசியமில்லை

அவ்வப்போது
தவிர்க்க இயலாது சென்றுவரும்
சாவு வீடுகளே
போதுமானதாய் இருக்கிறது

மனப்பாரம் இறக்கி
நிர்வாணம் சுகித்திட
போதி மர நிழலே
தேவை என்பதாயுமில்லை

ஒவ்வொரு இரவும்
சிறு மரணத்தில் ஆழ்த்திப்போகும்
ஆழ்ந்த துயிலே
(வாய்க்கப்பெற்றால் )
போதுமென்றாகிப் போகிறது

Sunday, March 22, 2015

ஆயாசம்

அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தபடி
"கொஞ்சம் சீக்கிரம் 
அடுத்த காரியத்துப் போகவேண்டும் "
அவசரப் படுத்தினார் சாஸ்திரிகள்


"ஜங்ஷனுக்கு அரை மணி நேரத்தில்
போய் விடலாம் இல்லையா"
பக்கத்திலிருந்தவரிடம் பதட்டத்துடன்
கேட்டுக் கொண்டிருந்தார் சித்தப்பா"

ப த்து மணிதான் அதுக்கு மேலே தாங்காது
படபடன்னு வந்திரும்
சாப்பிட்டு மாத்திரை போட்டாகணும் " என
யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார் சம்பந்தி

தூரே மொத்தமாய் நின்றபடி
இன்றைய அரசியல் நிகழ்வு குறித்து
சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டிருந்தனர்
அலுவலக நண்பர்கள்

"குளத்துத் தண்ணி ரொம்ப மோசம்
வீட்டில் போய் நன்றாகக் குளிக்க வேணும் "என
அவனாகவே பினாத்திக்  கொண்டிருந்தான
"அவரின் "  மூத்த மகன்

கண் கலங்கியபடி பேரன் மட்டுமே 
"அவரையே "பார்த்துக் கொண்டிருந்தான்

"அவருக்கும்" கூட
"அவர் "மீது வைக்கிற கொள்ளியை
காலாகாலத்தில் வைத்துத் தொலைத்தால்
தேவலாம் போலத்தான் இருந்தது

Saturday, March 21, 2015

நீயும் கூட அசட்டு மாமா தானே

ஆசை நூறு நெஞ்சில் பொங்கி மாமா--என்னை
லூசுக் கணக்கா சுத்த விடுது மாமா-நம்ம
நேசம் உண்மை யென்றி ருந்தா மாமா-உடன்
வந்து என்னைக் காக்க வேணும் மாமா

மல்லு வேட்டிக் கட்டிக் கிட்டு மாமா-கனத்த
மைனர் செயினும் போட்டிக் கிட்டு மாமா-வில்லு
விட்டுப் பாயும் அம்பு போல மாமா-உடன்
வந்து என்னைப் பார்க்க வேணும் மாமா

எட்டு ஊரு கேக்கும் படியா மாமா-நல்ல
கெட்டி மேளம் கொட்டிக் கிட்டு மாமா-சீரு
தட்டு நூறு தூக்கிக் கிட்டு மாமா-நீயும்
சொந்தத் தோடக் கூடி வரணும் மாமா

பாறை போல இறுகிக் கிடந்த என்னை-ஒரு
பார்வை யாலே இளக்கிப் போன மாமா-உன்
பாதைப் பாத்து நோங்கிக் கிடக்கேன் மாமா-உடன்
பரிஸம் போட நாளைப் பாரு மாமா

ருசியாச் சமைச்ச சோறு கூட மாமா-கொஞ்சம்
ஆறிப் போனா ருசியை இழக்கும் மாமா- இது
சரியாப் புரிஞ்சா அசத்தல் மாமா நீயே -இல்லை
நிஜமா நீயும்  அசட்டு மாமா தானே

Wednesday, March 18, 2015

சீர்மிகு கவிகள் செய்ய.......

சீர்மிகு கவிகள் செய்ய
சிந்தனை அதிகம் வேண்டாம்
கூர்மதி அதுவும் வேண்டாம்
குழப்பமும் சிறிதும் வேண்டாம்
யாரெது சொன்ன போதும்
அசந்து நீ போக வேண்டாம்
நேர்வழி அதற்கு உண்டு
புரிந்திடச் சொல்வேன் கேளாய்

உயிரது இல்லா தேகம்
பிணமென பெயரைப் பூணும்
அரிசியே இல்லா நெல்லோ
பதரென இழிசொல் காணும்
குயிலதன் குரலில் தேனாய்
குழைந்திடும் இனிமை போல
கவிதனை சிறக்கச் செய்ய
கருவதே உயிர்போல் வேண்டும்

மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்
நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும்

தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்

Saturday, March 7, 2015

சர்வ தேச மகளிர் தினம்

ஒரு அற்புதமான கவிதை  என் 
மெயிலுக்கு   வந்தது
அதைப் பகிர்வதில்  பெரும் 
மகிழ்ச்சி கொள்கிறேன் 
சிலேடைச் சித்தருக்கு  என்
மனமார்ந்த நன்றி    


சர்வ தேச மகளிர் தினம் 

தாயாய்  , தாரமாய் , 
தமக்கையாய் , தாதியாய் 
மகளாய் , மன்னியாய் 
மாமியாராய்  , மருமகளாய் 
தோழியாய் , துணைவியாய் 
பாசமிகு  பாட்டியாய் 
தசாவதாரம் எடுப்பது மகளிரன்றோ 

பசி தீர்க்கும் அன்னமாய் 
நோய் தீர்க்கும் மருந்தாய் 
பொறுமையில் பூமியாய் 
உறவிணைக்கும்   பாலமாய் 
வழிகாட்டும் குருவாய் 
வரமளிக்கும் தெய்வமாய் 
அஷ்டாவதானம் செய்வதும் மகளிரன்றோ 

கலங்கிடும் மனதிற்கு 
கலங்கரை விளக்கமாய் 
விளங்கி கரை சேர்ப்பவர் மகளிரன்றோ  

குத்து விளக்கேற்றி 
குடும்பமே கோயிலாய் 
விளங்கிடச் செய்வது மகளிரன்றோ  

செவிலியர் போலவே 
சேவைகள் செய்வதில் 
சிறந்து விளங்குவோர் மகளிரன்றோ 

பெண்கல்வி எதிர்க்கும் துன்மதியாளரை 
பெண்களை போகப்பொருளாய் நினைப்போரை 
பெண்களை அடிமையென  பேசித் திரிவோரை 
பெண்களால் முடியாதென பிதற்றித் திரிவோரை 
பெண்களி டம் வரதட்சினை கேட்போரை 
பெண்களை எள்ளி நகையாடிடும் பேடிகளை 
நன்முறை அல்லது  வன்முறை கொண்டு 
வரன்முறைப் படுத்திட சூளுரைப்போம் .

உரி மைகள் கொடுப்போம் 
மரியாதை கொடுப்போம் 
உயர்ந்த இடமொன்று 
உள்ளத்தில் கொடுப்போம் 
உலக மகளிர்தின உறுதிமொழி எடுப்போம்  

வாழ்க மகளிர் !          வாளர்க மகளிர் புகழ் !!  

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 
8.03.2015