மரத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆணிவேர்தான் காரணம்
என்பதை விவசாயிக்கு விளக்க வேண்டியதில்லை
மாளிகையின் நிலைப்புக்கும் உறுதிக்கும்
அஸ்திவாரம்தான் முழுக்காரணம் என்பதை எந்த பொறியாளருக்கும
விளக்க வேண்டியதில்லை
இச்சமூகத்தின் வளச்சிக்கும் மேன்மைக்கும் பெண்கள்தான்காரணம் என்பதைஇந்தியாவில் எவருக்கும் யாரும்
விளக்கவேண்டிய அவசியமே இல்லை
ஏனெனில் இதனை
ஆதியிலேயே மிகத் தெளிவாக அறிந்திருந்தனால்தான்,
படைக்கும் பிரம்மனுக்குத் துணையாக கலைக்கும்
கல்விக்குமான கலைமகளை துணையாக்கி மகிழ்ந்திருக்கிறான்
காக்கும் திருமாலுக்கு இணையாக கருணையும்
செல்வத்திற்குமான திருமகளை துணைவியாக்கி
குதூகலித்திருக்கிறான்
அழிக்கும் ருத்திரனுக்கு இணையாக ஆக்ரோஷமும்
சக்தி மிக்கவளுமான மலைமகளை இணையாக்கி இன்பம் கொண்டிருக்கிறான்
கலைமகள் துணையற்று படைத்தலும்
திருமகள் கருணையற்று காத்தலும்
சக்தியின் அருளற்று அழித்தலும்
ஆகாத ஒன்று என அறிந்ததால்தான்
முப்பெரும் தேவியரை பிரதானப் படுத்தி
ஒன்பது இரவுகளை தேர்ந்தெடுத்து
நவராத்திரியாக கொண்டாடியும் மகிழ்ந்திருக்கிறான்
நாமும் தொடர்ந்து கொண்டாடி மகிழ்கிறோம்
அதைப் போன்றே
குழந்தையாய் முழுமையாக அவளைச் சார்ந்திருக்கும் நாளில்அன்பின் மொத்த வடிவாக அன்னையாக
கணவனாக அவளுக்கு இணையாக சேர்ந்திருக்கும் நாளில்
பின்னிருந்து இயக்கும் சக்தியாக தாரமாக
வயதாகி சக்தியிழந்து ஓய்ந்துச் சாய்கிற நாளில்அனைத்துமாய் தாங்கும் அன்புமிக்க மகளாக
மண்ணகத்தில் மங்கையர் எல்லாம் கண்கண்ட
முப்பெரும் தேவியராய்த் திகழ்வதாலேயே
மங்கையரைக் கௌரவிக்கும் நாளாகவே இந்த
நவராத்திரித் திரு நாளைக் கொண்டாடி
நாமும் மகிழ்கின்றோம்
அவர்களது தியாக உள்ளங்களை இந் நாளில்
சிறிதேனும் நாமும் கொள்ள முயல்வோம்
அவர்களோடு இணந்து இந்தச் சீர்கெட்ட சமூகம் சிறக்க
நாமும் நம்மாலானதைச் செய்வோம்