Tuesday, May 29, 2012

யானைப்பசியும் பூனைப்பசியும்

என் நண்பன் தன் மகனை
குச்சியால் விளாசிக்கொண்டிருந்தான்
தடுத்து நிறுத்திக் காரணம் கேட்டேன்

"எத்தனைமுறை சொல்லியபோதும்
கேட்காது தொடர்ந்து
பக்கத்து பையனிடம்
பேனா பென்சில்
திருடிக்கொண்டு வருகிறான்
நான் அவனுக்குத்
தேவைப்பட்டதையெல்லாம்
ஆபீஸில் இருந்து கொண்டு வந்தும்
இவனுக்கு எதுக்கு இந்த
திருட்டு புத்தி " என்றான்

கூடியிருந்த பக்தர்களை நோக்கி
கைகளை மிக உயர்த்தி
"கதவுகளைத் திறவுங்கள்
காற்று வரட்டும் "என்றார்
காவியில் இருந்த இளைய துறவி

தனித்து ஆசிரமத்திருக்கையில்
கதவருகில் இருந்த
ஆத்ம சீடனை நோக்கி
"கதவை மூடிப் போ
அவள் மட்டும் இருக்கட்டும்"ஏன்றார்
ஜாலியில் இருந்த அதே துறவி

தமிழர்களின்
பண்பாடு குறித்து
கலாச்சார பெருமை குறித்து
கோடை மழையென
மேடையில்
கொட்டித் தீர்த்தார்
மக்கள் தலைவர்

கேட்டுக்கொண்டிருந்த
மக்கள் மட்டுமல்ல
முன் வரிசையில் அமர்ந்திருந்த
தலைவரின்
மூன்று மனைவியர் மட்டுமின்றி
அவரது வாரீசுகளும்
வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர்

பசி எனச் சொன்னால்
யானைப்பசியும்
பூனைப்பசியும் ஒன்றுதான்
ஆனால்
அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல்

Friday, May 25, 2012

சாதாரணத்தின் சுகமும் அசாதாரணத்தின் ரணமும்

ஓவியக் கோடுகளின்
நளின வளைவுகளின் நேர்த்தியையும்
வண்ணங்களின் அர்த்தங்களையும்
அதிக்மாகத் தெரிந்து கொள்ளாதவரை
அனைத்து ஓவியங்களும்
மிக அழகாகத்தான் தெரிகின்றன

படிமம் குறியீடு
இருண்மை முதலான அறிவும்
இலக்கணம் குறித்த தெளிவும் 
இல்லாத வரையில்
கவிதைகளை மிகச் ச்ரியாக
ரசிக்க மட்டுமல்ல
படைப்பது கூட
மிக எளிதாகத்தான் இருக்கிறது

ஜால வண்ணங்கள் பூசிய
வார்த்தைகளுக்குப் பின் இருந்த
நோக்கமும் துரோகமும் புரியாதவரை
உறவுகளில் குழப்பமில்லை
என்பது மட்டுமல்ல
உறவுகள் எல்லாம் 
மிக இறுக்கமாகத்தான் இருக்கின்றன

வாழ்வு குறித்த தேடலின்றி
மந்தையோடு மந்தையாய்
காலம் செலுத்திய வழியில்
கண் மூடிப் பயணிக்கையில்
மனதில் சங்கடங்கள் ஏதுமில்லை
என்பதுமட்டுமல்ல
வாழ்வு கூட
மிக்க ரம்மியமாகத்தான் இருக்கிறது

திண்ணையையும் தலைப்பாகையையும்
சிம்மாசனமாகவும் கிரீடமாகவும்
ஏற்றுக் கொண்டு
சாதாரணமான்வனாக இருத்தல்
சுகமாக மட்டும் அல்ல
அது பலருக்கு ஞானத்தின்
 எளிதான குறீயீடாகக் கூடப் படுகிறது

வரப்புகளைப் பெயர்த்தெடுத்தும்
வரம்புகளை உடைத்தெறிந்தும்
ஒவ்வொரு நொடியும் போராடும்
போராளிக்கு மட்டுமே
அசாதாரணமாயிருத்தல்
ரணகளமாக  இருக்கிறது
ஆயினும்
அதுதான் அவனுக்கு  இருத்தலுக்கான
 உன்னத அடையாளமாய  இருக்கிறது


Wednesday, May 23, 2012

கரு நாகத்தின் பலவீனம் -5 (டிஸ்கி )


நம் வாழ்வில் எவ்வித மாறுதலும் இல்லாமல்
நிகழ்வுகளும் நாட்களும் தொடர்ந்து ஒரே மாதிரி
செல்லுகிற வரையில் எவ்வித
பிரச்சனையும் இல்லை
நாம் பாதுகாப்பு வலையத்தினுள் மிகச்சரியாகவும்
அதிகச் சுகமாகவும் மிக இயல்பாகவும்
பொருந்தி இருப்பதாக எண்ணி நாட்களைக்
கடத்திக் கொண்டிருக்கிறோம்

அதே சமயம் புதியதாகவும் நம் அன்றாட
நிகழ்வுகளில் ஒரு தடை ஏற்படுத்துவதாக்வும்
ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்குமாயின் அதிர்ச்சி
அடைவதோடு குழம்பியும் போய் விடுகிறோம்
அந்தக் குழப்பத்திற்கு பிரச்சனை எனப் பெயரிட்டு
திகைத்து நிற்கிறோம் இதனைத்தான்
 கரு நாகத்தின் பலவீனத்தின்
முதல் பதிவாகப் போட்டிருந்தேன்
அனைவரின் கவனமும் பிரச்சனையில்
முழுவதுமாக இருக்கும்படியாக பதிவை
மிக கவனமாக எழுதி இருந்தேன்
பின்னூட்டங்களும் அதையே பிரதிபலித்தன.

வேடிக்கைப் பார்த்துக் கொண்டோ அல்லது
அதனுடன் இருந்து கொண்டே எப்போதும் போல
இயல்பாக இருக்க முடிகிற பிரச்சனைகள் குறித்து
நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.
மாறாக அதனைத தீர்க்காவிடில்
நம் அன்றாட வாழ்வில் அதிகப் பாதிப்பு
ஏற்படும் எனில் அப்போதுதான்
அதனைத்தான் உடனடியாக தீர்க்க முயல்கிறோம்

முதல் நிலையாக நமக்குத் தெரிந்த விஷயங்கள்
மூலம் முயல்கிறோம்..அது சரிப்பட்டு
வரவில்லையெனில் அது குறித்து
அனுபவஸ்தர்களின் அறிவுரைகளைப்
பெற முயல்கிறோம்.பின் சாத்தியமானதும்
உடனடியாக ஆகக் கூடியதாகவும் உள்ள
ஒரு தீர்வைத் தேர்ந்தெடுத்து செயல் பட
முடிவெடுக்கிறோம்
இதைத்தான் இரண்டாம் பதிவாகப் போட்டிருந்தேன்
பின்னூட்டங்களிலும் இதன் பிரதிபலிப்பு
மிகச் சரியாக இருந்தது

பிரச்சனையை அங்குதான் தீர்க்கவேண்டும்
என்றாலும் கூடஅதற்கான தீர்வு அங்குதான்
இருக்கவேண்டும் என்பதில்லை
விக்கிரமாதித்தன் கதைகளிலோ அல்லது
பிற மந்திர வாதிக்கதைகளிலோ
அரக்கனின் உயிர் அவனிடத்து இல்லாது
வேறு எங்கோஒளித்துவைக்கப் பட்டிருப்பதைப்போல
 தீர்வுகளும் வேறு எங்கோ இருக்கலாம்
இதனை அறிய ஏற்கெனவே இதுபோல்
இதுவிஷயத்தில் அனுபவப்பட்டவர்களைத்
தேடிச் செல்வதே புத்திசாலித் தனம்

நமக்கு இமாலயப் பிரச்சனையாகத்
தெரிகிற பிரச்சனைஅவர்களுக்கு கூழாங்கல்லைப்
போலக் கூட எளியதாக இருக்கலாம் .
இதனை வலியுறுத்தும் விதமாகவே
பாம்புப் பிடிக்கும் ஊரைத் தேடிப்
போவதையும் அவர்கள் மிக எளிதான
ஒரு தீர்வு சொன்னதையும் பதிவாகப்போட்டிருந்தேன்'

முதல் பதிவில் பிரச்சனைகளின் தாக்கத்தில் மட்டுமே
இருந்தவர்கள் இரண்டாவதாக அடுத்து என்ன
எனத் தொடர்ந்தவர்கள் மூன்றாவதான பதிவில்
அந்தப் பலவீனம் என்ன எனஅறிந்து கொள்வதிலேயே
அதிகம்ஆர்வம் காட்டினார்களே ஒழிய பிரச்சனையில்
முன் போல அதிகக் கவனம் கொள்ளவில்லை.

நான்காவதாக பிரச்சனையை அனுபவஸ்தர்களின்
அறிவுறுத்தலோடு அல்லது அவர்களின் துணையோடு
தீர்ப்பது குறித்து எழுதி இருந்தேன்
அனுபவஸ்தர்களாக இருந்தாலும் பிரச்சனையை
முதல் தடவை சந்திக்கிற அதே மனோபாவத்தில்
பிரச்சனையை அணுகவேண்டிய
அவசியம் குறித்து சரியாகப் புரிந்து கொள்ளவே
பெரியவர் சூழலை ஆராய்வது தன் கைகளைத் துணியால்
கட்டிக் கொள்வது செங்கல்லைத் தேர்ந்தெடுப்பது என
நுட்பமான விஷயங்களாகப் பதிவு செய்திருந்தேன்

பாம்புப் பிரச்சனை மட்டுமில்லை.எந்தப் பகாசுரப்
பிரச்சனையாக இருந்தாலும் நிச்சயமாக அதற்கென
நிச்சயமாகஒரு தீர்வு உண்டு.ஒருவேளை இப்பதிவில்
குறிப்பிட்டிருப்பதைப் போல அந்தப் பிரச்சனைக்கு
மிகப் பெரிய பலவீனமான பக்கம் இருக்கவும் நிச்சயம்
 அதிகச் சாத்தியம் உண்டு எனபதற்காகவே
தலைப்பைக் கூட க் கரு நாகத்தின் பல்வீனம்
எனக் குறிப்பிட்டிருந்தேன்

இது நடந்த நிகழ்வுதான்.என்வேதான் இயல்பாக
எழுத முடிந்தது.ஆயினும் இது வெறும் நிகழ்வாகவும்
கதை போலவும் மட்டும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக்வே
இத்தனை பகுதிகளாகப் பிரித்து இதனை எழுதினேன்

இதனை மிகச் சரியாக்ப் புரிந்து கொண்டு சிலர்
பின்னூட்டமிட்டிருந்தது மனதிற்கு நிறைவாக இருந்தது
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி


Tuesday, May 22, 2012

கரு நாகத்தின் பலவீனம்-4

இந்தப் பாம்புப் பிரச்சனை வந்த நாள் முதல்
எப்போது வீட்டிற்கு வந்தாலும் முதலில்
வண்டியை நடு ரோட்டில் வைத்துவிட்டு
கைகளால் சப்தம் கொடுத்தபடியும் செருப்புக் காலை
தரையில் தேய்த்தபடியும் வாசல் கதவைத் திறந்து
பின் வண்டியை ஸ்டார்ட்செய்து செட்டில்
நிறுத்திவிட்டு பின் கதவைத் திறக்கும்படி
குரல் கொடுப்பேன்

அப்போதுதான் மனைவி வாசலுக்கே வருவாள்
இன்று என்றும் இல்லாத அதிசமாய் வாசல் படியில்
மனைவியும் குழந்தைகளும் உட்கார்ந்திருக்க
ஆச்சரியப்பட்டுப் போனேன்

என் இரண்டாம் பெண்தான் மூன்று மணிக்கே
 இன்று பாம்பு வீட்டைக் கிராஸ் செய்து
 போய்விட்டதென்றும்அதுதான் தைரியமாக
 வாசலில் உட்கார்ந்திருப்பதாகவும் சொன்னாள்

கூடுதல் தகவலாக இன்றுபாம்புக்கு செம தீனி
என்றும் வயிறு உப்பலாக இருந்தது என்றும்
அதனால் அது மிக மிக மெதுவாக
 ஊர்ந்து சென்றது என்றும் எல்லோரும்
வாசல் வராண்டாவில் இருந்தே அதை
மிக நன்றாகப் பார்த்ததாகவும் சொன்னாள்

அவர்கள் கண்களில் பிரமிப்பு இருந்த அளவு
பயம் இல்லை

எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது
முதன் முதலில் பாம்பைப் பார்த்த போது
இருந்த பயம்அது படமெடுத்து வாசல் கதவில்
 நின்ற போதுஏற்பட்ட நடுக்கம் எல்லாம்
எங்கே போனது என எனக்கே
ஆச்சரியமாக இருந்தது

ஒருவேளை புரியாதது அல்லது புதியதுதான்
முதலில் பயத்தையும் பதட்டத்தையும்
 ஏற்படுத்துமோ? எத்தனை மோசமானதாகிலும்
பழகிவிட்டால்பயமும் பதட்டமும்
பறந்து விடுமோ எனத் தோன்றியது

பின் செயற்கரிய செயல் போல கிராமத்திற்குச் சென்று
பாம்பு பிடிப்பவனைப் பார்த்து வந்தது குறித்தும்
அடிக்காமலும் பிடிக்காமலும் அதை எளிதாக
இல்லாமல் செய்வது குறித்த தகவலையும்
அவளிடம் ஆவலாக விவரிக்க அவள் "அப்படியா "
என்கிற ஒற்றைக் குரலோடு முடித்துக் கொண்டாள்
எனக்கே எதற்கடா விளக்கினோம் என
எரிச்சலாக வந்தது

மறு நாள் அலுவலக விடுமுறை என்பதால் நான்
வீட்டிலேயே இருந்தேன். அந்த பாம்பு பிடிக்கும்
பெரியவரும் காலையிலேயே வீட்டிற்கு அந்தத்
தலைவருடனே வந்து விட்டார்.வந்தவர்
அது வருகிற வழி அது போகிற இடம் உத்தேசமாக்
அது பதுங்கும் பொந்தின் திசை எல்லாம்
காண்பிக்கச் சொன்னார்.நாங்கள் காண்பித்தோம்

பின் அவர் மட்டும் நாங்கள் பொந்து இருக்கும்
 இடம் என குறிப்பிட்ட இடத்திற்கு சிறிது நேரம்
உலாத்தினார்.பின் ஒரு குறிப்பிட்ட பொந்தின்
அருகில் லேசாக குனிந்து பார்த்தார்.
பின் என்னை மட்டும் அருகில் அழைத்தார்

பின் அவர் முன் இருந்த பொந்தைக் காண்பித்து
" இதற்குள்தான் ஐயா இருக்காக " என்றார்

"எப்படிச் சொல்கிறீர்கள் " என்றேன்

"அவங்க மூச்சுக் காத்துக்கே அத்தனை விஷமுண்டு
பொந்து சுத்தி செத்துக் கிடக்கிற தட்டானையும்
ஈயையும் பார்த்தீர்களா " என்றார்

அந்தப் பொந்தைச் சுற்றி நிறையத் தட்டான்களும்
ஈக்களும் இறந்து கிடந்தன

பின் மெதுவாக " இவக மூச்சுக் காத்துப் பட்டு
எல்லாம் செத்துக் கிடக்குதுகள்.இவக விஷத்துக்கு
அவ்வளவு பவர் " என்றார்

பின் இடத்தை விட்டு வெளியேறி வீ ட்டைச் சுற்றி
சிதறிக்கிடந்த செங்கல் நான்கைக் கையில் எடுத்துக்
கொண்டு பொந்தின் வாய் இருந்த திசைக்குப் பின்னால்
நின்று கொண்டார்.பின் கையில் துணியைச்
சுற்றிக் கொண்டு மெதுவாகக் குனிந்து முதல்
செங்கல்லை பொந்தில் வாயில் அடைத்து
மிக வேகமாக அடுத்து அடுத்து மூன்று
செங்கல்லையும்அந்த பொந்திலேயே திணித்தார்.
பின் மண் வெட்டிஎடுத்துவரச் சொல்லி சுற்றி இருக்கிற
மண்ணை வெட்டி அந்த இடத்தை மேடாக்கிவிட்டு
வந்து வாசல் திண்ணையில் அமர்ந்தார்
அவர் தைரியமாகத் தன்னைக் காட்டிக் கொணடாலும்
கண்களில் மிரட்சியும் உடல் நடுக்கமும்
லேசாகத் தெரியத்தான் செய்தது  

பின் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி
குடித்துவிட்டு " ஊரையே மிரட்டுகிற இவகளுக்கு
பொந்து தோண்டவும் தெரியாது.பொந்தை அடைச்சா
வெளியே வரவும் தெரியாது " என்றார்


Saturday, May 19, 2012

கரு நாகத்தின் பலவீனம் -3

ஒரு வழியாக பாம்பை அடிக்கக்கூடாது எனவும்
பாம்பாட்டியை அழைத்து பிடித்துப் போவது என
முடிவு செய்தவுடன் உடன் அதற்கான தகவலகளை
விசாரிக்கத் துவங்கினேன்

இப்போது என்றால் பாம்பு பிடிப்பவரின் செல் நம்பர்
 கூட டைரக்டரியிலேயே கிடைக்கிறது.முன்பெல்லாம்
அப்படி இல்லை.அவர்களைத் தேடி அவர்கள் இருக்கும்
கிராமத்திற்குத்தான் போகவேண்டும்

அதன்படி எனது நிர்வாகக் கட்டுப்பாட்டில்
 இருந்த ஒரு கிராமத்தில் பாம்பு பிடிக்கிறவர்கள்
அதிகம் இருப்பார்கள் எனக் கேள்விப்பட்டு அங்கு போய்
விசாரிக்கத் துவங்கினேன்.

அங்கு போய் விசாரிக்கையில்தான் பாம்பு பிடித்து
அதன் தோலை உரித்து விற்று அதை
ஒரு தொழிலாக செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம்
அதிகாரிகள் அடிக்கடி வந்து பாம்பு பிடிக்கத்
தடை உள்ளதாகச் சொல்லி ரெய்ட் வந்து
பாம்புத் தோலை பறிமுதல் செய்து போவதோடு
அல்லாமல் கேஸும் பதிவு செய்வதால்
வெறுப்படைந்து  போய் பாம்பு பிடிக்கும் தொழிலையே
விட்டு விட்டு சித்தாள் வேலைக்கும்
 நிமிந்தாள் வேலைக்கும் போய்க்கொண்டிருப்பதாகச்
 சொன்னார்கள்

பின் அந்த கிராமத் தலைவரிடம் என் நிலைமையைச்
சொல்லி எப்படியாவது  கொஞ்சம் தெளிவான
ஒருவரை மட்டும்எனக்காக அனுப்பிவைக்கும்படி
கேட்டுக் கொள்ளஅவர் உடன் ஊருக்குள்
தகவல் சொல்லி ஒரு பெரியவரை அழைத்துவந்து
என் முன் நிறுத்தினார்

அவர் முழுக் கதையையும் கேட்டுவிட்டு
  "இதற்குப் போயா இத்தனை தூரம் வந்தீர்கள்
இப்படிச் செய்தால் போதுமே .அந்தக் கரு நாகம்
அத்தோடு மண்ணாகிப் போகுமே " என
நான் செய்ய வேண்டியதைச் சொல்ல
 எனக்கே ப்.பூ.. கரு நாகத்தின் பலம்அவ்வளவுதானா
எனப் பட்டது

பாக்கியராஜ் அவர்கள் டார்லிங் டார்லிங் படத்தில்
இறுதிக் காட்சியில் மனம் வெறுத்துப் போய்
தற்கொலை செய்து கொள்வதற்காக மலை உச்சிக்கு
விரைந்து கொண்டிருப்பார்..அவர் காதலி
அவரைத் தடுத்து நிறுத்த தொடர்ந்து
 கத்திக் கொண்டே வர இவர் அதனைக் கண்டு
கொள்ளாது மலை உச்சிக்கே வந்து நின்று
குதிக்கப் போகிற பாவனையில்
முகத்தில் ஒரு உணர்ச்சிக் குவியலைக் காட்டுவார்
அதில் அந்த மலையின் அதல பாதாளமே
அவர் முகத்தில் பிரதிபலிப்பதாகத் தெரியும்
நாமும் அதிர்ந்து போய் இருக்கையின் நுனிக்கே
வந்து விடுவோம்.அடுத்த காட்சியில்
மலைச் சரிவுக்கு பதிலாக அவருக்கு முன்னெ
அகலமான அழகான தார்ச் சாலையும் அதில்
காரும் பஸ்ஸும் போய்க்கொண்டிருக்கும்
நம்மையும் அறியாது நாமும் அவரின் காதலியோடு
சிரிக்கத் துவங்கிவிடுவோம்

அந்தப் பெரியவர் அந்த கரு நாகத்தைக்
கொல்வதற்குச் சொன்னவழியைக் கேட்டதும்
எனக்குள் ஏனோ இந்தக் காட்சிதான்
உடன் நினைவுக்கு வந்துபோனது

(தொடரும் )

Thursday, May 17, 2012

கரு நாகத்தின் பலவீனம் -2

நானும் வெலவெலத்துப் போனேன்
சினிமாவில் பார்ப்பது என்பது வேறு,பாம்பாட்டியின்
அருகில்பாதுகாப்புடன் இருந்து பார்ப்பது என்பது வேறு
.அல்லதுஅவசர கதியில் எங்காவது
போய்க்கொண்டிருக்கும்போது பார்ப்பது என்பது வேறு.

ஆனாலஇப்படி வீட்டு வாசலில்
முழுவீட்டையும் ஆக்கிரமித்து மிரட்டுகிற மாதிரி
படமெடுத்துப் பார்க்க ஏற்பட்ட பாதிப்பில் இருந்து
என்னால் வெகு நேரம் மீளவே முடியவில்லை

வாசல் விளக்கைப் போட்டபடி அதனுடையை
நகர்வை தெரிந்து கொள்வோம் என நானும்
அரை மணி நேரத்திற்கு மேலாக வாசல் வராண்டாவில்
அமர்ந்திருக்க அதுவும் அதற்குரிய இடத்தில்
 இருப்பதானதோரணையில்
 அலட்சியமாக அமர்ந்திருந்தது

 எங்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்பு
என்பதைவிட எங்கள் வீடு தேடி இப்போது யாரும்
 வந்துவிடக் கூடாதே என்கிற பயமே அதிகம் இருந்தது
அதனால் மாடிக்கு என் மனைவியை அனுப்பி
எங்கள் வீட்டுக்கு அடுத்திருந்த திருப்பத்தில் யார்
வந்தாலும் எச்சரிக்கை செய்யும்படி அனுப்பிவைத்தேன்
நல்லவேளை யாரும் வரவில்லை.நாகமும் பின்
சர்வ சாதாரண்மாக இறங்கி வழக்கம்போல் செல்லும்
பொந்தின் பக்கம் நகரத் துவங்கியது.என்னால் இரவு
முழுவதும் தூங்க் முடியவில்லை

நானும் கிராமத்தில் வளர்ந்தவன் என்பதால்
பாம்பு குறித்து எனக்குஅதீத பயம் கிடையாது
ஆயினும் எதிர்பாராது அதன் அருகில் யாரும்
வர நேர்ந்தால தன்னை தற்காத்துக் கொள்ளும்
 நோக்கில்நிச்சயம் தீண்டிவிடும் என்பதில்
 எனக்கு எவ்வித சந்தேகமும்    இல்லை.
மனிதர்கள் இயல்பாகப் புழங்குகிறபகுதியில்
 எப்போது எது நேரம் என உறுதி சொல்ல முடியாது
என்பதால் நிச்சயம் இதற்கு ஒரு முடிவு
 செய்யவேண்டும்என முடிவெடுத்து இரவு
எப்போதோ என்னை அறியாதுஉறங்கிபோனேன்

மறு நாள் எழுந்து முதல் வேலையாக அக்கம் பக்கம்
வீட்டில் உள்ளவர்களிடம் இதுவிவரம் தெரிவித்து
என்ன செய்யலாம் இப்படியே தொடர்வதில் உள்ள
ஆபத்தை விளக்கி அதனை அடித்துக் கொல்லலாம் என
முடிவு செய்தோம்

ஆயினும் அதிலும் இரண்டு சிக்கல் இருந்தது

என் வீட்டிலும் அடுத்திருந்த வீட்டில்
 இருந்த பெண்களும்நாகத்தை அடித்துக் கொல்வது
பாவம் என்றும்அதற்கு உறுதியாய்
 சம்மதிக்கமாட்டோம் என்றும் யாராவது
பாம்பாட்டியை அழைத்துவந்துபிடித்துப் போகத்தான்
செய்யவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்கள்

இரண்டாவது அதனுடைய ஆகிருதியை
 நேரடியாகப்பார்த்தவர்கள் நிச்சயம் அதனை  அடிக்கத் 
தயங்கத்தான் செய்வார்கள்.மேலும் அ துமிகச்
 சுதாரிப்பாக காம்பௌண்ட் சுவரை ஒட்டியே
மிகக் கவனமாகச்செல்வதால் மிகச் சரியாக
 ஒரு அடியில்கவனித்து அடித்தால் ஒழிய
அதனை அடித்துக்கொல்வது என்பது நிச்சயம்
 சாத்தியமில்லை.ஒருவேளை அடிக்க முயன்று
தவறிப்போனால் அதற்கும் நமக்கும் உள்ள
சுமுக உறவில்ஏற்படுத்தும் பாதிப்பை தாங்கிக்
 கொள்கிற தைரியம் எங்களில் எவருக்கும் இல்லை.

என்வே முடிவாக எங்கள் நகருக்குஅருகில் உள்ள
கிராமத்திற்குச் சென்று பாம்பு பிடிக்கிறவரை அழைத்து
வந்து பிடித்துக் கொண்டுபோகச் சொல்வது என
ஏக மனதாக முடிவெடுத்தோம்

அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை

(தொடரும் )


Tuesday, May 15, 2012

கரு நாகத்தின் பலவீனம்

அப்போது நாங்கள் ஒரு வாய்க்காலை
ஒட்டிய வீட்டில் குடியிருந்தோம்
வாய்க்காலை ஒட்டிய வீட்டில் இருந்தால்
என்ன என்ன பிரச்சனைகள் இருக்குமோ
அத்தனை பிரச்சனைகளும் எங்களுக்கு இருந்தது

மழைக் காலங்களில் அதிகமானக் கொசுக்கடி
விதம் விதமான பூச்சிகளின் நடமாட்டம் மற்றும் கடி
நீரில் மூழ்கிய மேடு பள்ளச் சாலைகள்
சுகாதாரக் கேடு விளைவிக்கும் சாக்கடைகலந்த குடி நீர்
இவையெல்லாம் கூட எங்களுக்கு ஒருமாதிரி
பழகிப் போய் வாழ்ந்து கொண்டிருக்கிற வேளையில்

 ஒரு நாள்....

நாங்கள் வளர்த்து வந்த அல்சேஷன் நாய் ஒரு
வித்தியாசமான குரலில் குரைக்க   ஆரம்பித்தது
நாங்கள் அவசரமாய் ஓடிப் போய்ப் பார்க்க
இருட்டில் ஒன்றும் புரியவில்லை. சரி ஒன்றுமில்லை
ஏதாவது புதியதாக வேறு பகுதி நாய் வந்திருக்கும்
அதனால்தான் இப்படி வித்தியாசமாகக்
 குரைக்கிறது  என எங்களை நாங்களே
சமாதானம் செய்து கொண்டு படுத்துவிட்டோம்

மறு நாள் பகல் பொழுதில் நாய் மீண்டும்
அதே மாதிரிக் குரைக்க  அவசரம் அவசரமாய்
வாசல் கதவைத் திறந்து பார்க்க அதிர்ந்து போனோம்.
ஒரு ஆறடிக்குக் குறையாத கன்னங்கரேலென
ஒரு பெரிய பாம்பு வீட்டு மதிலோரம்
அலட்சியமாக ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது

அதனுடைய உடல் மினுமினுப்பு பருமன் நிறம்
எங்களுக்குள் ஒரு கிலியை ஏற்படுத்திப் போக
என்ன செய்வது என அறியாமல்
திகைத்துப் போய் நின்றோம்
அது எங்களை யாரையும் ஒரு பொருட்டாகக்
கருதாதுஅதன் போக்கில் மெதுவாகக்
காம்பௌண்டைக் கடந்து வீட்டை அடுத்திருந்த
புதருக்குள் மறைந்து போனது

அடுத்து உடனடி நடவடிக்கையாக
காம்பௌண்டுச்சுவருக்கு அருகில் இருந்த
 செடி கொடிகளையெல்லாம்
சுத்தம் செய்து அடுத்த வீட்டுக் காரர் சொன்ன
ஐடியாவின்படி மஞ்சள் கரைத்துத் தெளித்து
அருகில் இருந்தகோவிலுக்குப் போய்
 நாக கன்னிகளுகளுக்கு பால் அபிஷேகம்
செய்து இனி பாம்புப் பிரச்சனை இருக்காது என
நாங்கள் எங்களை  தைரியப் படுத்துக் கொள்ள
 முயற்சித்துக் கொண்டிருந்தோம்

ஆனால் எங்களுடைய இத்தனை பிரயத்தனங்களும்
அந்தப் பாம்பிடம் எந்தவித பாதிப்பினையும்
ஏற்படுத்தவில்லை
மாறாக ஒரு நாளைக்கு ஒருமுறை போய்வந்தது
இரண்டுமுறை போய் வர ஆரம்பித்தது.

எங்கள் வீட்டு நாய் கூட முதலில்
பயந்து ஒரு மாதிரியான குரலில் குரைத்தது
இப்போது ஒரு சிறு தகவல் தெரிவிப்பது போல
வித்தியாசமான குரலில்குரைக்க மட்டும் செய்தது
அதன் குரலில் பழைய பதட்டமோ பயமோ இல்லை

நாங்கள் கூட இரயில் தண்டவாளத்தின்
அருகில் வசிப்பவர்கள் ரயில் சப்தத்தை வைத்து
 இத்தனை மணிக்கு இந்த ரயில் போகும் என
அந்த சப்தத்தோடு தங்களைச் சம்பத்தப்படுத்திக்
கொள்வதைப் போல நாங்களும் நாயின்
 குரலை வைத்து பாம்பு கிராஸ் செய்து
கொண்டு உள்ளது எனத் தெரிந்து கொண்டு
 பயமோ பதட்டமோ இல்லாமல்
எங்களுடைய வேலைகளை நாங்கள்
கவனிக்கப பழகிவிட்டோம்

இந்த்ச் சூழலில் ஒரு நாள் மாலை மிக லேசாக
இருள்பரவத் துவங்கிய சமயத்தில்
 வாசல் பக்கம் போனஎனது பெண் திடுமேன
கத்தியபடி ஓடி வந்து என் மடியில்முகம் புதைத்து
சப்தமாக பயந்து அலற ஆரம்பித்தாள்
உட்ல் தெப்பமாய் வேர்த்துக் கொட்ட
 உடல் நடுங்கிக் கொண்டிருந்தது

நானும் பயந்து போய் அவளை கீழே
 படுக்கவைத்துவிட்டுவாசல் பக்கம் வந்து பார்க்க
 வாசல் கேட் கதவின் மேல்முழுவுடலையும்
 கிடத்திப படமெடு த்தபடி அந்தக் கரு நாகம்
சாவகாசமாக காற்று வாங்கிக் கொண்டிருந்தது            
                                                                     

 (தொடரும் )

Thursday, May 10, 2012

தகுதியும் தலைமையும்


"சமத்தன் சந்தைக்குப் போனால்
சாமான் வாங்கமாட்டான் " என்பது
ஊரறிந்த பழமொழி
"சமத்தனுடன் சந்தைக்குப் போனாலும்
சாமான் வா ஙக முடியாது" என்பது
நானறிந்த புதுமொழி 

நெருங்கிய நண்பனொருவனின்
புதுமனை புகுவிழாவிற்கு
திருமுருகன் திருவுருவப்படம்
பரிசளிக்கலாம் என எண்ணி
என் ஓவிய ந ண்பனின்
உதவியை நாடினேன்

எத்தனை கடை ஏறி இறங்கிய போதும்
எத்தனை படங்கள் எடுத்துக்காட்டிய போதும்
அத்தனையும் சரியில்லை எனச்சொல்லி
எனக்கு வெறுப்பேற்றிக்கொண்டே வந்தான்

பொறுமை இழந்து நானும்
உண்மைக் காரணம் கேட்டபோது
முடிவாக இப்படிச் சொன்னான்

"அனைத்து படங்களிலும்
குறையொன்று உள்ளது
முருகனின் சிரசுக்கு மேலாக
வேலின் கூர்முனை உள்ளது
இது வைக்கப்பட்ட வீடு
நிச்சயம் உருப்படாது "என்றான்

முருகனின் உயரத்திற்கும்
வேலின் உயரத்திற்கும்
அப்படி என்ன சம்பந்தம்
எனக்கேதும் விளங்கவில்லை

பின் அவனே விளக்கலானான்
"முருகனின் வேல் ஆயுதமில்லை
அது ஞானத்தின் குறியீடு
ஞானம் முருகனை மீறியது இல்லை
அவனுக்குள் அடங்கியதற்குள்
அவனை அடக்குவதென்பது
அறிவீனமானது "என்றான்


"சரி இருக்கட்டும்
அதனால் என்ன " என்றேன் நான் 

என்னை அவன் ஒரு மாதிரியாகப் பார்த்தான்
அதில் ஏளனக் கலப்பு அதிகம் இருந்தது.
பின் தொடர்ந்து இப்படிச் சொன்னான்

"சரி இதையே மாற்றிச் சொல்லுகிறேன்
பதவிக்கு மீறிய தகுதி உடையவன்
தலைவன் என ஆனால்
பதவிக்கும் பெருமை
நாட்டுக்கும் நல்லது
பதவிதான் தகுதி என
ஒரு தலைவன் இருப்பானாகில்
அவனும் உருப்படமாட்டன்
அவன் நாடும் உருப்படாது
நம் நாட்டைபோல" எனச் சொல்லி
என்னை கடந்து போனான்.

வழக்கம்போலவே
நான் விளங்கிக் கொள்ள
சிறிது நேரம் ஆனது

Tuesday, May 8, 2012

அலை வோர் பயணிக்க

தேடுதலையே...
நினைவுகளில் தீர்க்கமாய்
வாழ்வின் நோக்கமாய்
எக்கணமும் கொள்வதால்
அலுத்து அமரவோ
சலித்து ஒதுங்கவோ
நேர்வதில்லை எப்போதும்

இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்
தேங்கி நிற்கவோ
சோர்ந்து சாயவோ
தோன்றுவதில்லை எப்போதும்.

சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை எப்போதும்.

விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
வெற்றிக்கு தடையேதும்
கண்டதில்லை எப்போதும்.

Thursday, May 3, 2012

ஆண்டவனுக்கு அருள்வோமா

அல்லாவும்
ஏசுவும்
சிவனும் பெருமாளும்
எப்படி மிகச் சரியாக
அவர் அவர்களுக்கானவர்களை
கண்டுபிடித்து அருளுகிறார்கள் ?
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது

நிலவைப் போல்
காற்றைப் போல்
சூரியக் கதிர்கள் போல்
அனைவருக்கும்
பொதுவாக இருப்பதே எளிது

தனித் தனியாக
அவர் அவர்களுக்கானவர்களைத்
 தேடிப்பிடித்து அருளுவது என்பது
இன்றைய காலச் சூழலில்
ஜ்ன நெருக்கடியில்
ஆண்டவனாயினும்
அதிகச் சிரமமே

நமக்காக இல்லையென்றாலும்
ஆண்டவனுக்காகவாவது
இது குறித்து கொஞ்சம் சிந்திப்போமா ?
அவர்களது நிம்மதிக்காவாவது
இது குறித்து சிந்திக்கத் துவங்கி
அவர்களுக்கு நிம்மதி தர முயல்வோமா ?

Tuesday, May 1, 2012

காலத்துக்கு தக்கபடி...

பூஞ்செடிகளும்
முள்வேலிகளுமே
பூங்காக்களை
அடையாளம் காட்டிப் போகின்றன
ஊருக்கு
அழகு சேர்த்துப் போகின்றன

நண்பர்களும்
 பகைவர்களுமே
வாழ்க்கையினை
அர்த்தப்படுத்திப் போகிறார்கள்
தொடர்ந்து
முன்னெடுத்துப் போகிறார்கள்

நீரும் நெருப்பும் போல
நட்பும் பகையும்
எதிர் எதிரானவை அல்ல

இடம் மாறத் தக்கவை எப்படி
எதிரானவைகளாக இருக்கக்கூடும் ?

நம் வளர்ச்சி கண்டு
குமுறித் தவிக்கும் நண்பன்
மோசமான எதிரியாகிறான்
நய வஞ்சகனாய்
உருமாறிப் போகிறான்

நம் தரம் கண்டு
மாற்ற்ம் கொள்ளும் பகைவன்
உண்மை நண்பனாகிறான்
உயிர்த் தோழனாய்
நிலை மாற்றம் கொள்கிறான்

நண்பர்கள் என அதிகம் கொண்டாடி
நட்பிழக்கவும் வேண்டாம்
பகைவரென அழிக்கமுயன்று
நிலை குலைதலும் வேண்டாம்

நட்பையும் பகையையும்
அதனதன் இடத்தில் வைத்து
பக்குவமாய்ப் பாதுகாப்போம்

இடம் மாறத் தக்கவைகளிடம்
அலட்சியம் கொள்வது
அறிவுடமையல்ல

இன்றைய நிலையில்...

அரசியலில் மட்டும் அல்ல
அன்றாட வாழ்வில் கூட

நிரந்தர எதிரியும்
நிரந்தர நண்பனும்
நிச்சயமாய் இல்லவே இல்லை