Sunday, April 30, 2017

வளரட்டும் நிலைக்கட்டும் உலகெங்கும் மேதினத்தின் நோக்கங்கள் எல்லாமே

தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லா"மே "
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லா"மே "

நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லா"மே "
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லா"மே "

உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லா"மே "
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லா" மே "

கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லா"மே "
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லா"மே "

உணரட்டும்  இணையட்டும் வளரட்டும்
உழைப்பவருக்கு உழைக்கின்ற எல்லா "மே "
வளரட்டும் நிலைக்கட்டும்   உலகெங்கும்
"மே "தினத்தின் நோக்கங்கள் எல்லா"மே "


(அனைவருக்கும்  மே  தின  நல்வாழ்த்துக்கள் )

Wednesday, April 26, 2017

நடு நவீனத்துவம்

தலைப்புக் கொடுத்திருக்கிறேன்

வாக்கியத்தை
முன் பின்னாய்ப்  பிரித்து
வித்தியாசமாய்
அடுக்கி இருக்கிறேன்

புரட்சி,மானுடம்,வர்க்கம்
இவையெல்லாம்
இருக்கும்படியாய்
கவனம் கொண்டிருக்கிறேன்

தவறியும்
யாப்பமைதி
அமைந்து விடாதபடி
இலக்கணம் தவிர்த்திருக்கிறேன்

கூடுமானவரையில்
எத்தனை முறைப் படித்தாலும்
புரிந்துவிடாதபடி இருக்க
அதிகம் மெனக்கெட்டிருக்கிறேன்

மிகக் குறிப்பாய்
சென்றமுறை
நீங்கள்  எழுதியதாய்ச் சொன்னதை
நல்ல கவிதை எனப் புகழ்ந்திருக்கிறேன்

அப்படியும் நீங்கள்
இதை
நல்ல நடு நவீனத்துவக் கவிதையென
ஒப்புக்கொள்ளவில்லையெனில்

உடன் மறுபரிசீலனை
செய்வதைத் தவிர
எனக்கு வேறு வழியில்லை

நான் கவிதையைச் சொல்லவில்லை

நம் உறவைச்  சொல்கிறேன்

Tuesday, April 25, 2017

ஒரு கவிக்கருவைச் சிதைத்தபடி....

கலங்கிய நீரில்
விழுந்து
மெல்ல மெல்ல
முகம் இழக்கும் நாணயமாய்

விழித்ததும்
நினைவிலிருந்து
மெல்ல மெல்லக் கரையும்
ஒரு நல்ல கனவாய்

சாலைப் பேரிரைச்சலில்
கலந்துக் கலைந்து
மெல்ல மெல்ல உயிர்த்தொலைக்கும்
ஒரு நல்ல இசையாய்

பெருந்திரளின்
அழுத்தத்தில்
மெல்ல மெல்ல ஒதுங்கும்
தர்மமாய், நியாயமாய்

யதார்த்தத்தின்
அதீத நெருக்கடியில்
மெல்ல மெல்லக் கலைகிறது
கனவுகளும் கற்பனைகளும்

அதன் காரணமாய்
உருவாக இருந்த
ஒரு கவிக்கருவை
மெல்ல மெல்லச்
சிதைத்தபடியும், கலைத்தபடியும்

Saturday, April 22, 2017

பதவியில் இருப்பவர்கள் எல்லாம்.....

பதவியில் இருப்பவர்கள்  எல்லாம்
காது  கேளாதவர்களா  ?
இல்லை கெட்டிக்காரர்களா   ?

இல்லை நாம் தான்
முட்டாள்களா
இல்லை ஏமாளிகளா   ?

"கல்வித்துறையில்  கொள்ளையை ஒழியுங்கள்
கல்விக் கொள்கையை மாற்றுங்கள் "
என்றால்

கல்விக் கடன் தருகிறோம்
கல்விக் கடனைத் தள்ளுபடி செய்கிறோம் "
என்கிறார்கள்

வேலைக்கு உத்திரவாதம் தாருங்கள்
வேலை வாய்ப்பைப் பெருக்குங்கள்
என்றால்

வேலைபெறாதோருக்கு உதவித் தொகை
வேலையற்றோரின் கடன் தள்ளுபடி
என்கிறார்கள்

சாலைகளைச் சீர்ப்படுத்துங்கள்
சாலைப் போக்குவரத்தை  மேம்படுத்துங்கள்
என்றால்

வாகனத்திற்கு மானியம்
பஸ் கட்டணச் சலுகை
என்கிறார்கள்

மது விலக்கை  அமல்படுத்துங்கள்
மதுக் கடைகளை மூடுங்கள்
என்றால்

கைம்ப்பெண்களுக்கு நிவாரணம்
தாலிக்குத் தங்கம்
என்கிறார்கள்

பள்ளி மற்றும் நெடுஞ்சாலைகளில்
மதுக்கடைகளை அகற்றுங்கள்
என்றால்

அதனை ஊருக்குள்ளும்
வீட்டருகிலும்  வைப்பதற்கு
ஆவன செய்கிறார்கள்

நீர் நிலைகளைப் பராமரியுங்கள்
நீ ஆதாரத்தைப் பெருக்குங்கள்
என்றால்

கடல் நீரிலிருந்து குடி நீர்
தெர்மாக்கோல் மூடி
என்கிறார்கள்

......................................
................................................

நிஜமாகவே
நம் கோரிக்கைகள் அவர்கள்
காதுகளில் மாறித்தான்  விழுகிறதா ?

அல்லது
 நமக்குத்தான் அவர்களுக்குப்
புரியும்படியாய் சொல்லத்தெரியவில்லையா  ?


Wednesday, April 19, 2017

யார் யார் காரணமோ அவர்கள் வாழ்க

யார் யார் காரணமோ
அவர்கள் வாழ்க

முந்தைய ராஜாராணிக்கதைகளில்
மன்னனின்
சிறு பலவீனத்தைப் பயன்படுத்தி
நாட்டை நாசகாடாக்கும்
சதிகாரர்கள் போல்

புரட்சித் தலைவியின்
ஏதோ ஒரு
பலவீனப்படுத்தைப் பயன்படுத்தி
தமிழகத்தையே சூறையாடிய
ஒரு சதிகாரக் குடும்பத்தை

சட்டமும் நீதியும் தண்டித்தும்
அடங்காது விஷ நாகமாய்
வேறு உருவில் சீறி
மீண்டும் தமிழகத்தை கொள்ளையிடத் துணிந்த
ஒரு மனச்சாட்சி அற்றக் குடும்பத்தை

உல்கின் மூத்தக் குடிமக்கள்
எனப் பெருமிதம்கொண்டத் தமிழினத்தை
உலகின் "பெரும் குடி "மக்களாக்கி
தன் ஆலைச் சரக்கு விற்பனைக் களமாக்கிய
ஒரு சுய நலக்கூட்டக் கும்பலை

அதிகார வட்டத்திலிருந்து
விலக அல்லது வெளியேற்ற
யார் காரணமோ
யார் யாரெல்லாம் காரணமோ
அவர்கள் எத்தன்மையுடையவராயினும்
அவர்கள் வாழ்க

Tuesday, April 18, 2017

தண்ணிக்கண்டத்தில் தமிழ் நாடு.....

தமிழ் நாட்டுக்கும்
பக்கத்து மாநிலம்
ரெண்டுக்கும்
தண்ணி தான் பிரச்சனை

இப்போ
தமிழ் நாடு முழுசுக்கும்
குடி தண்ணியும் பிரச்சனை

மூடின
தண்ணிக் கடையைத்
திறக்கறதுலயும்
நாளெல்லாம் பிரச்சனை

கூவத்தூர்ல
"அதுல " கிடந்து எடுத்த
முடிவுலதான்
அரசாட்சிக்கு
பெரும் பிரச்சனை

இப்ப எதுக்கு
இவங்க
தண்ணில  மிதந்து
முடிவெடுக்கப் போறாங்க ?

ஒருவேளை
அவங்களை காப்பாத்திக்கறதுக்காக
வழக்கம்போல
நம்க்குத் "தண்ணிகாட்ட " இருக்குமோ ?

ஆண்டவா
தமிழ் நாட்டை
தண்ணிக் கண்டத்துல இருந்து
காப்பாத்துப்பா

உனக்கு
ஆயிரம் ஆயிரம்
தண்ணிக் குடமெடுத்து
அபிஷேகம் செய்யுறோம்

Monday, April 17, 2017

மௌன மொழி







மௌன மொழி,பேசாமல் பேசுவது,
சொல்லாமல் சொல்வது ,இப்படியெல்லாம்
சொல்லக் கேட்டதுண்டு

அதனைஆன்மீகமீகவாதிகளின்அசட்டுப் புலம்பல்
எனக் கூடக் கருத்தில் கொண்டதுண்டுமௌன மொழி

ஆனால் இங்கு(அமெரிக்காவில் )
பதினைந்து  நாட்களுக்கு முன்பு
எங்கள் வீட்டுப் பால்கனியில் இருந்துக் கூட
புகைப்படம் எடுக்க இயலாதவாறு
பனிப்பொழிவு அத்தனைக் கடினமாக இருந்தது

என்னை முற்றிலுமாக மூடி மறைத்தபடி
ஒரு நொடி வெளியேறித்தான் இந்த புகைப்படங்களை
எடுத்தேன்

இந்தப் பனி இன்னும் எத்தனை நாள் நீடிக்கும்
எப்போது இயல்பாக நடமாடும் சூழல் வரும்
என எல்லாம் இங்கு விசாரித்துக் கொண்டிருந்தேன்
சீதோஷ்ண நிலை குறித்த அறிக்கைகளையும்
கவனித்துக் கொண்டும்தான் இருந்தேன்

இந்தச் சூழலில் வெளியில் இருந்த
செடியை மிகச் சரியாய்க் கவனிக்கவில்லை

கடந்த ஒருவாரமாய்  கொஞ்சம்
சீதோஷண நிலைமை சரியாகி வர
பால்கனி வழி அந்தச் செடிகளைப்
பார்க்க மிகஅதிசயித்துப் போனேன்

அத்தனையும் மிகப் பசுமையாய் துளிர்விட்டும்
பூத்தும் அற்புதக் காட்சியளித்துக் கொண்டிருந்தது

விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாய்
எத்தனையோ அதி அற்புதக் கருவிகளைக் கொண்டு
வருகிற வாரம் சீதோஷண நிலையில்
மாறுதல் இருக்கும் என நாம் கணித்துக்
கொண்டிருக்க, அதுவும் சில சமயம்
பொய்த்துக் கொண்டிருக்க,

இனிப் பனிப்பொழிவில்லை,நீ துளிர்க்கலாம்
பூக்கலாம் என வானம்  மௌன மொழியாய்ச்
சொன்ன உறுதி மொழி,செடிகளுக்கு
மட்டும் எப்படிக் கேட்டது ?

தட்சிணாமூர்த்தியும் சீடர்களும் போல்
வானமும் மண்ணும் பரிமாறிக் கொள்ளும்
மௌனமொழி அறியும் பக்குவம்தான்
நம் புராணக் கால ஞானிகள் கொண்டிருந்த
ஞானமா ?

மௌன மொழி குறித்தும்
பேசாமல் பேசுவது குறித்தும்
சொல்லாமல் சொல்வது குறித்தும்
மாற்று எண்ணம் மெல்ல மெல்ல வளர்வதைத்
தவிர்க்க இயலவில்லை

Friday, April 14, 2017

ஒரு போதைக்காரனின் புலம்பல்

பச்சை விளக்கைப் பார்க்கும் போதே
போதை ஏறுதே  -கால்கள்
இச்சை கொண்டு பாதை மாறி
போக ஏங்குதே

மொத்த உடம்பும் பித்தம் ஏற
ஆட்டம் போடவே-மனசில்
மிச்சச் சொச்சக் கூச்சம் கூட
விலகி ஓடுதே

வீடு போக எந்தப் பாதை
மாறிப் போயினும்- இந்தக்
கேடு கெட்ட" பாரு "அங்கே
இருந்து தொலைக்குதே

தாறு மாறா விலையைக் கூட்டி
விற்கும் போதிலும்-காசை
வீசி எறிந்து வாங்கிக் குடிக்க
மனசு தாவுதே

கடனைக் கேட்டு வட்டிக் காரன்
வந்து போனதும்-ரோட்டில்
கிடக்கப் பார்த்த மனிதர் எல்லாம்
முகத்தைச் சுளித்ததும்

நினைப்பில் வந்து தடுக்கப் பார்த்தும்
வெட்கம் இன்றியே-இந்த
வலையைக் கிழிக்கும் பலத்தை இழந்து
புலம்பித் தவிக்குதே

கிடைக்கும் தூரம் எட்டிப்போனால்
நானும் மாறலாம் -ஒரு
நடைக்கு பயந்து வீடு  நோக்கிக்
காலும் திரும்பலாம்

கேடுக் கேட்ட அரசு  இதனை
உணர  மறுக்குதே  -  எங்கள்
வீடு இருக்கும் தெருவில் புதிதாய்
திறக்க நினைக்குதே

தாயைப் போல தயவு  கொள்ள
வேண்டும் அரசுமே --கொடிய
பேயைப் போல இரத்தம் குடிக்க
நித்தம் அலையுதே

வாடி வாசல் திறக்கச் சேர்ந்த
இளைஞர் கூட்டமே --இந்தக்
கேடு ஒழிய நீங்கள் மனது
வைத்தால் போதுமே

மதுவை விற்று அரசு நடத்த
எண்ணும் கூட்டமே --உடன்
பதவி விட்டு ஊரை  நோக்கி
எடுக்கும்   ஓட்டமே     


Wednesday, April 12, 2017

அட... சாராய சாம்ராஜ்ய மன்னர்களின் அடிவருடிகளே...



அன்று
மதுரைப்  பாண்டிய ராஜனால்
ஈஸ்வரனின் முதுகில் பட்ட அடி
உலகில் உள்ளோர்
அனைவரின் முதுகிலும்
பட்டதாமே

இதை
நாத்திக வாதிகள்
ஒப்புக் கொள்வதில்லை

ஆயினும்
இன்று
திருப்பூர் பாண்டியராஜனால்
ஈஸ்வரியின் கன்னத்தில் விழுந்த அடி

எங்கள்
அனைவரின் இதயத்திலும்
இடியாய் இறங்கியிருக்கிறதே

இதை நினைக்க
அதுவும் கூட
சாத்தியமாயிருக்கச்
சாத்தியமே எனப் படுகிறது எனக்கு

அட...
சாராய சாம்ராஜ்ய மன்னர்களின்
அடிவருடிகளே
அடியைவருடுங்கள்

அழுக்குப்போக
நக்கக் கூடச் செய்யுங்கள்

அதற்காக
அவர்கள் காலே  கூட
 புண்ணாகிவிடும்படி இப்படியா ?

Tuesday, April 11, 2017

நம் காவல் துறையினரைத் தொந்தரவு செய்யாதீர்கள்...



தமிழகப்  பொது ஜனங்களே
நம் காவல் துறையினரைத்
தொந்தரவு செய்யாதீர்கள்

களவு, கொள்ளை
தகராறு,வன்முறை
செயின் பறிப்பு
கற்பழிப்பு முதலான
சிறுச்  சிறு விஷயங்களையெல்லாம் விட

சிலைப்பாதுகாப்பு
முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு
பொதுக்கூட்டப் பாதுகாப்பு
இவை போன்ற
தவிர்க்க இயலாத விஷயங்களை விட

இப்போது
டாஸ்மாக் வரிசை ஒழுங்குபடுத்துவது
புதுக்கடை துவங்க நேரும்
தடைகளைத் தகர்த்தெறிவது
முதலான  அத்தியாவசியப் பணிகள்
அவர்களுக்கு அதிகம் இருக்கிறது

மிக மிகக் குறிப்பாகப்
பெண்களிடம் தங்கள்
புஜ பலப்  பராக்கிரமத்தைக் காண்பிப்பது உட்பட

என்வே
அப்பாவித்  தமிழ்  ஜனங்களே

சட்டம் ஒழுங்கினைக்
காப்பதுதான்
அவர்களுக்கிட்டப்பணி
என்பதனை

அவர்கள் மறந்தே
வெகு காலமாகிவிட்டது

அவர்கள் பிரிட்டிஷ்  போலிஸாராகி
வெகு நாளாகிவிட்டது

எனவே அதைஅவர்களுக்கு
ஞாபகப்படுத்தி
அவர்களைக்  கஷ்டப்படுத்தாதீர்கள்
அதனால்
நீங்களும் கஷ்டப்படாதீர்கள்

எனவே
ஊமை ஜனங்களே
இனியேனும்  

நம் காவல் துறையினரைத்
தொந்தரவு செய்யாதீர்கள்



வானம் பார்த்து மண்ணில் நடக்கும் கற்பனை மனோபாவம்...

நகத்தால் கீறி
முடிக்க வேண்டியவைகள் எல்லாம்

இப்போது

கோடாரியினைக் கொண்டு
முடிக்கவேண்டி இருப்பது எதனால் ?

சாக்கடை அடைப்பென்றால்
சட்டசபையிலும்

பாதாள சாக்கடை அடைப்பெனில்
பாராளுமன்றத்திலும்

நம் தெரு மதுக்கடை மூடவேண்டுமெனில்
உச்ச நீதி மன்றத்திலும்

முறையிட்டு முடிக்கும்படி
நம் தலையெழுத்து ஆனது ஏன் ?

வேரில்
மண்ணில்
நீரூற்றி
மரம் வளர்க்க நினையாது

இலையில்
கிளையில்
நீரூற்றி
வளர்க்க நினைப்பது போல்

நம்மில்
நம் பகுதியில்
நம் தலைவனைத்
நாமே தேட முயலாது

தலைவர் குடும்பம் மூலம்
பிரபலஸ்தர்களின்  மூலம்
 நம் தலைவர்களைத்  தேடுவதாலா ?

நினைவில் எப்போதும்
நம் பகுதிக்குறித்த
சிந்தனையது
சிறிதும் இல்லாது

ஐ. நா சபைகுறித்தும்
அமெரிக்க ஜனாதிபதி குறித்தும்
அதிகம் பேசி
அறிவாளிபோல் அலட்டி கொள்வதாலா ?

மொத்தத்தில்
அண்ணா சொன்னது போல்

"கூரையேறி
கோழி பிடிக்க இயலாதவன்
வானமேறி
வைகுண்டம் ஏக நினைப்பதுபோல்

வானம் பார்த்து
மண்ணில் நடக்கும்
கற்பனை மனோபாவம்
நம்முள் வளர்ந்துத் தொலைத்ததாலா ?

முன்புபோல் அல்லாது
இப்போதெல்லாம்

நகத்தால் கீறி
முடிக்க வேண்டியவைகளை  எல்லாம்

ஏன்

கோடாரியினைக் கொண்டு
வெட்டித்தொலைக்க வேண்டி இருக்கிறது  ?


Monday, April 10, 2017

தேர்தல் ஆணையர் ஐயா

தப்புப் பன்னீட்டீ ங்களே
ஆணையர்  ஐயா
தப்புப் பன்னிட்டீங்களே

தப்புக் கணக்குக்கும்
கணக்குத் தப்புக்கும்
வித்தியாசம் தெரியாம
தப்புப்பன்னிட்டீங்களே

எங்கள் தொப்பி ஐயா
தேர்தல் செலவுக்குப் பணமில்லாம
கஷ்டப்படரானுன்னு

தொகுதி மக்கள்
ஆளுக்கு நாலாயிரமாப் போட்டு
மந்திரி மூலமா கொடுத்தப் பணமய்யா

வரவை செலவா
செலவை வரவா
தப்பா எழுதினதாலே
உங்களுக்குத்
தப்பாத் தெரியுதையா

இது
கணக்குத் தப்பையா
தப்புக் கணக்கில்லே ஐயா

இப்ப
டாக்டர் ஐயா
குடக் கூலிக்கு கொடுத்தது
ரேகைக்கு இல்லேன்னு
சொன்னாருப் பாத்தீங்களா

அப்படி எங்க
வக்கீல் ஐயாவும்
கணக்குத் தப்பைப்  பத்தி
மிகச் சரியா
நாளைக்குச் சொல்வாரையா

ஒரு கடைக் கோடி
தொண்டன் எனக்குத்
தெரிஞ்சது கூடத் தெரியாம

அதுக்குள்ள
அவசரப்பட்டு
தப்புப் பன்னிட்டீங்களே

தப்புப் பண்ணிட்டீங்களே
ஆணையர் ஐயா
தப்புப் பன்னிட்டீங்களே 

Sunday, April 9, 2017

தேர்தல் சடங்கு

உப்புச் சப்பற்று  இருந்த
எங்கள் ஊர்
சட்டெனக்  கார நெடி கொள்ளும்

மூத்திரச் சந்துகளெல்லாம்
ஒளிபெற்று
மணக்கத் துவங்கும்   

கொடிகளின் சலசலப்பில்
இருபதிலிருந்து எட்டான
ஜாதியப்  பிரிவுகள்

மீண்டும்
முன்போல்இருபதாகி
வன்மம் கூட்டும்

முன்பு எத்தனைமுறை
காவடிஎடுத்தும்
 திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"

"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
எங்கள்குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்

கேட்டது மட்டுமல்லாது
கேளாததுதம் தருவதாய்ச் சொல்லி
எங்களைக்  கிறங்கவைப்பர்  

கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
 "கெட்டிக்கார" மக்கள் கூட்டம்

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்

என்னைப்போல்
சில அ ணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை என
வீதி விட்டு ஒதுங்கி
வீட்டு மூலைகளில்
'முக்காடிட்டு' அமர

கண்ணில் படாது
எங்கோ கிடந்த பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்

துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்

அவ்வப்போது
"நானே பெரும்பூதம்
நானே கருப்பணச்சாமி " என
உறியடித்து
தீவட்டி சாட்டைகளோடு
ஊர் மிரள
ஊர் வலம் வந்துப்  பின் . . . .

வலம் வந்துப்  பின்

வந்துப் பின் 

பின்....

ஒருபெரிய  வீட்டுச்  சடங்குபோல்
தேர்தல் நடத்தி
முடிவினைச் சொல்லி
மலைஏறிப் போகும்
அதிகாரம் அதிகம் கொண்ட
தேர்தல் ஆணையம்

கார நெடி  கண்ட
எங்கள் ஊர்
மீண்டும்
உப்புச் சப்பற்றுப் போக

ஒளிபெற்று
மணந்த தெருக்களெல்லாம்
மீண்டும்
மூத்திர நாற்றம் கொள்ளும் 

   

Saturday, April 8, 2017

யார் மார்க்கண்டேயன் ?

அலுவலக மனக்கடி
போக்குவரத்து மற்றும்
நேர நெருக்கடி
மனச் சோர்வைக் கூட்ட...

உடல்வலி
சிறுநீர் மற்றும்
முலைக்காம்பின் அழுத்தம்
மூச்சிரைக்க வைக்க

இல்லம் நுழைந்ததும்
ஸோபாவில்
மெல்லச் சரிகிறேன் நான்

பாட்டியின் கொஞ்சலுக்கு
செப்புச் சாமானின் சப்தத்திற்கு
மயங்கியதாய்

நடித்துக் கொண்டிருந்த செல்லம்
சட்டெனத் தாவி
என்னைக் கட்டிக்கொள்கிறது
நான் அழுத்தமாய் அணைத்துக் கொள்கிறேன்

மெல்ல மெல்ல
உடல்பாரமும்
மனப்பாரமும்
குறைய்த் துவங்குகிறது

"தாவரதப் பாரேன்
சிவலிங்கம் பார்த்த
மார்க்கண்டேயன் மாதிரி "
என்கிறாள் பாட்டி

எனக்கு குழப்பமாய் இருக்கிறது
இருவரில்
யார் சிவலிங்கம் ?
யார் மார்க்கண்டேயன் ?

Friday, April 7, 2017

வரித்துறை ரெய்டும் எதிர் விளைவுகளும்...

ரெய்டு நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது

ஓட்டு எண்ணிக்கைக் காட்டி
மொத்தமாய் வாங்கியவன்

"நல்ல வேளை வாங்கிவிட்டேன்
தேர்தலைத் தள்ளிவைத்தால்
மறுமுறையும் தருவார்கள்தானே "
எனஆவலாய்க் கேட்கிறான்

வாங்கக் காத்திருப்பவன்

"அதற்குள் இவர்களுக்கென்ன கொள்ளை
இத்தனை நாள் பொறுத்தவர்கள்
இன்னும் சில நாள் பொறுத்தால் என்ன ?"
எனப் பொருமுகிறான்

பணம் கிடைக்க வாய்ப்பில்லாத
மாற்றுக் கட்சிகாரன்

"ஒத்திவைத்தால்
இன்னும் செலவழிக்க வேண்டிவரும் தானே
அப்படியாவது அவர்கள் கொள்ளைப்பணம்
கரைந்து தொலையட்டும் "
என வயிறெரிந்துத்  திரிகிறான்

வேறு தொகுதிக்காரனோ
வானம் பார்க்கும்
கரிசல்காட்டுக்காரன் மாதிரி

மருத்துவனையில் சேர்க்கப்பட்ட
தங்கள் பிரதிநிதி குறித்து
"நல்ல சேதி ஏதும் உண்டா ? " என
விசாரித்துச் சலிக்கிறான்

இந்தப் பித்தலாட்ட அரசியல்வாதிகளின்
அரிச்சுவடி அறிந்தவர்களோ
"இதுவும் ஒரு பாம்பு கீரிச்சண்டைப் பம்மாத்து "
என முகம் சுழித்துக் கடக்கின்றனர்

தொலைக்காட்சி மற்றும்
செய்தி ஊடகங்களோ

மற்றுமொரு இலை  விழும்
சப்தம்கேட்டு ஓடும்
"அதுவாய் "
செய்தி சேகரிக்க ஓடிக்கொண்டிருக்கின்றன

மீண்டும் ஒருமுறை
ரெய்டு நாடகம்
சுவாரஸ்யமாய் அரங்கேறிக் கொண்டிருக்கிறது

Thursday, April 6, 2017

அவ நம்பிக்கை கொள்ளத் துவங்குகிறது நம்பிக்கை...

எது இருக்கிறது
எப்படி இருக்கிறது
என்பதைவிட
"எதில் "இருக்கிறது என்பதிலும்

யார் இருக்கிறார்
எப்படி இருக்கிறார்
என்பதைவிட
"யாருடன்" இருக்கிறார் என்பதிலும்

எதைச் சொல்கிறான்
எப்படிச் சொல்கிறான்
என்பதைவிட
"எவர்" சொல்கிறார் என்பதிலும்

ஏன் தருகிறான்
எதற்குத் தருகிறான்
என்பதைவிட
"எவ்வளவு" தருகிறான் என்பதிலும்

அதிகக் கவனம்  கொண்டவர்கள்தான்
முடிவைத் தீர்மானிப்பவர்களாக இருக்க
அனைத்துத் துறைகளிலும் நிலைகளிலும் 
கூடுதல் எண்ணிக்கையில் இருக்க

அவ நம்பிக்கை
கொள்ளத் துவங்குகிறது
தர்மத்தை நம்பிய நம்பிக்கை

மெல்ல மெல்ல
அதர்மத்திற்கு
தலைவணங்கத் தயாராகிறது
நம்பிக்கையை இழந்த  தர்மமும்...

Wednesday, April 5, 2017

புகழுடம்பு

தேடிநித்தம் சேர்த்ததெல்லாம்
தெருக்குப்பை ஆகிவிடும்
தேடியோடிப் படித்ததெல்லாம்
தொலைந்தெங்கோ  ஓடிவிடும்
கூடியாடிக் களித்ததெல்லாம்
வெறுங்கனவாய் மாறிவிடும்
தேடிவந்து காலனவன்
மூச்சடைக்க நடந்துவிடும்

வெளியோடி உள்ளோடி
உயிரதற்கு ஆதரவாய்
ஒலியதனைத் தினம்கடத்தும்
ஒப்பற்றச் சாதனமாய்
நொடிதோரும் உழைத்திட்ட
வளியதுவும் திசைமாறும்
வெளியோடு நின்றுடலை
பிணமாக்கி சுகம்காணும்

தினமுலவி வாழ்வதற்கும்
நிம்மதியாய் சாய்வதற்கும்
தினந்தோரும் வகைவகையாய்
தின்றுவுயிர் வளர்ப்பதற்கும்
மனமிளகித் தாய்போலத்
தனைத்தந்த நிலமகளும்
மனங்கெட்டு அரக்கியாகி
உடல்தின்னத் துணிந்துவிடும்

நதியாகித் தினமோடி
நாடெல்லாம் செழிப்பாக்கி
தவிப்பெடுத்த உயிரனைத்தின்
தாகமதை தினம்தீர்த்த
அதிமதுர நீரதுவும்
நிலைமாறும் முகம்மாறும்
பொதியான பிணம்கழுவும்
புழக்கடைநீர் போலாகும்

உடல்நலத்தைத் தினம்காக்கும்
உணவாக்க உறுதுணையாய்
கசடுயெனத் தினம்சேரும்
கழிவழிக்கப் பெருந்துணையாய்
உடனிருந்த பெருந்தீயும்
கொண்டகுணம் விட்டுவிடும்
உடலெரித்துப் பசியடக்கப்
பேராசைக் கொண்டுவிடும்

நான்கினையும் உள்ளடக்கி
ஏதுமில்லை என்பதுபோல்
காண்பதற்குத் தெரிந்தாலும்
கடவுள்போல் யாதுமாகி
ஆண்டுவரும் வெளியதுவும்
அரக்ககுணம் கொண்டுவுடல்
தாண்டிவரும் உயிரதனை
விழுங்கிடவே தினமலையும்

உடலோடு உயிரிருக்க
உள்ளன்பின் துணையோடு
உலகத்தார் மேன்மையுற
உழைக்கின்ற உழைப்பொன்றே
உடல்விட்டு உயிர்பிரிந்தும்
உலகுவிட்டு மறையாது
புகழுடம்பு எடுத்திங்கு
எந்நாளும் நிலைத்திருக்கும்

Sunday, April 2, 2017

தரவரிசை...நாலாந்தரம் ..

"நாலாந்தரம் என்பதென்ன "
விள்க்கம் கேட்கிறான் நண்பன்

"நல்லதை
நல்லவிதமாகக் கொடுப்பது
முதல் தரமெனச் சொல்வதும்

நல்லதை
மோசமாகக் கொடுப்பது
இரண்டாம் தரமெனச் சொல்வதும்

நல்லதல்லாததை
மோசமாகக் கொடுப்பது
மூன்றாம் தரமெனச் சொல்வதும்
புரிகிறது

அது என்ன
நான்காம் தரம்
அதுவும் மூன்றைவிட
மிக மோசமானதாய்..."  

நல்ல கேள்வியாய்ப்படுகிறது எனக்கும்

நான் இப்படிச் சொன்னேன்

"அரசியல், சினிமா,பண்பாடு
கலாச்சாரம் மற்றும் இலக்கியம் என
அனைத்திற்கும்பொருந்தும்படியாய்
சொல்லட்டுமா " என்கிறேன்

"முடிந்தால் சுருக்கமாகச் சொல் " என்றான்

"நல்லதல்லாததை
மிகச் சிறப்பாகத் தருவது
அதுவும்
நாம் விரும்பும்படியாகவும்
நாம் படிப்படியாய்
நம்மையறியாது அதற்கு நாசமாகும்படியாகவும்"
என்கிறேன்

அவன் யோசிப்பதுப் புரிந்தது

ஒருவேளை ஒப்புக்கொள்ளக் கூடும்

Saturday, April 1, 2017

எளிமையுடன் நல்லதையே எழுதினால் போதும்

ஒருஏக்கர் நிலத்தினிலே
வீடும் வேண்டாம்- தூக்கம்
வாராம இரவெல்லாம்
தவிக்கவும்  வேண்டாம்

ஒழுகாத ஒருவீடு
இருந்தா போதும் -அதுல
கும்பகர்ணன் போலனித்தம்
அசந்தா போதும்

ஒருமூட சோத்துநெல்லு
வேணவே வேணாம்-வயிறு
பசிக்காம கொறிக்கிச்சுகிட்டு
 கிடக்கவும் வேண்டாம்

ஒருபொழுது சோறுதண்ணிக்
 கூடப் போதும்-தினமும்
பசியெடுத்து ருசித்துத் தின்னா
 போதும் போதும்

பட்டுச்சொக்கா போட்டிக்கிட்டு
மினுக்கவும் வேண்டாம்-அதுக்கு
ஏத்தாப்பல செலவழித்துத்
தவிக்கவும் வேணாம்

கட்டுச்செட்டா ரெண்டுடுப்பு
இருந்தா போதும்-பார்ப்போர்
மதிக்குமாறு உடுத்தினாலே
போதும் போதும்

தலைவனாக தலைநிமிர்ந்து
 நடக்கவும் வேண்டாம் -அதைத்
தக்கவைக்கப்  பித்தலாட்டம்
செய்யவும் வேண்டாம்

நிலைகுலையா மனிதனாக
உலவினால் போதும்-ஊரில்
தெரிஞ்சசனம் மதித்தாலே
போதும் போதும்

கவிஞனென்று ஊருலகே
போற்றவும் வேண்டாம்-தினமும்
அதுக்காக எதைஎதையோ
எழுதவும் வேண்டாம்

எளிமையுடன் நல்லதையே
எழுதினால் போதும்-அதுக்கு
கிடைக்கின்ற மதிப்பதுவே
போதும் போதும்