Friday, April 14, 2017

ஒரு போதைக்காரனின் புலம்பல்

பச்சை விளக்கைப் பார்க்கும் போதே
போதை ஏறுதே  -கால்கள்
இச்சை கொண்டு பாதை மாறி
போக ஏங்குதே

மொத்த உடம்பும் பித்தம் ஏற
ஆட்டம் போடவே-மனசில்
மிச்சச் சொச்சக் கூச்சம் கூட
விலகி ஓடுதே

வீடு போக எந்தப் பாதை
மாறிப் போயினும்- இந்தக்
கேடு கெட்ட" பாரு "அங்கே
இருந்து தொலைக்குதே

தாறு மாறா விலையைக் கூட்டி
விற்கும் போதிலும்-காசை
வீசி எறிந்து வாங்கிக் குடிக்க
மனசு தாவுதே

கடனைக் கேட்டு வட்டிக் காரன்
வந்து போனதும்-ரோட்டில்
கிடக்கப் பார்த்த மனிதர் எல்லாம்
முகத்தைச் சுளித்ததும்

நினைப்பில் வந்து தடுக்கப் பார்த்தும்
வெட்கம் இன்றியே-இந்த
வலையைக் கிழிக்கும் பலத்தை இழந்து
புலம்பித் தவிக்குதே

கிடைக்கும் தூரம் எட்டிப்போனால்
நானும் மாறலாம் -ஒரு
நடைக்கு பயந்து வீடு  நோக்கிக்
காலும் திரும்பலாம்

கேடுக் கேட்ட அரசு  இதனை
உணர  மறுக்குதே  -  எங்கள்
வீடு இருக்கும் தெருவில் புதிதாய்
திறக்க நினைக்குதே

தாயைப் போல தயவு  கொள்ள
வேண்டும் அரசுமே --கொடிய
பேயைப் போல இரத்தம் குடிக்க
நித்தம் அலையுதே

வாடி வாசல் திறக்கச் சேர்ந்த
இளைஞர் கூட்டமே --இந்தக்
கேடு ஒழிய நீங்கள் மனது
வைத்தால் போதுமே

மதுவை விற்று அரசு நடத்த
எண்ணும் கூட்டமே --உடன்
பதவி விட்டு ஊரை  நோக்கி
எடுக்கும்   ஓட்டமே     


9 comments:

ஸ்ரீராம். said...

அப்படி என்னதான் இருக்கோ அதில்!

வெங்கட் நாகராஜ் said...

போதை.... அரசுக்கும் அதன் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தின் மேல்....

பண போதை அரசியல்வாதிகளுக்கும்...

இராய செல்லப்பா said...

உலகில் எல்லாநாட்டிலும் தான் குடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த போதை நாடகங்கள் அதிகம் அரங்கேற்றமாகின்றன...

KILLERGEE Devakottai said...

பேதை உள்ளங்கள் போதையை நாடு"ம்

G.M Balasubramaniam said...

இத்தனை விஷயங்கள் அறிந்தவர் அதைவில்லவும் தெரிந்திருக்க வேண்டுமேஅதுதானே முதல் படி

Yarlpavanan said...

"வீடு போக எந்தப் பாதை
மாறிப் போயினும்- இந்தக்
கேடு கெட்ட "பாரு" அங்கே
இருந்து தொலைக்குதே" என்பதே
நாடெங்கும் மலிந்திருக்கிறதே!

திண்டுக்கல் தனபாலன் said...

விடாது கருப்பு...

Kasthuri Rengan said...

அருமை அய்யா

Unknown said...

Thanks to the effort of the Supreme Court
"Dawning" is being felt.

Post a Comment