Saturday, April 1, 2017

எளிமையுடன் நல்லதையே எழுதினால் போதும்

ஒருஏக்கர் நிலத்தினிலே
வீடும் வேண்டாம்- தூக்கம்
வாராம இரவெல்லாம்
தவிக்கவும்  வேண்டாம்

ஒழுகாத ஒருவீடு
இருந்தா போதும் -அதுல
கும்பகர்ணன் போலனித்தம்
அசந்தா போதும்

ஒருமூட சோத்துநெல்லு
வேணவே வேணாம்-வயிறு
பசிக்காம கொறிக்கிச்சுகிட்டு
 கிடக்கவும் வேண்டாம்

ஒருபொழுது சோறுதண்ணிக்
 கூடப் போதும்-தினமும்
பசியெடுத்து ருசித்துத் தின்னா
 போதும் போதும்

பட்டுச்சொக்கா போட்டிக்கிட்டு
மினுக்கவும் வேண்டாம்-அதுக்கு
ஏத்தாப்பல செலவழித்துத்
தவிக்கவும் வேணாம்

கட்டுச்செட்டா ரெண்டுடுப்பு
இருந்தா போதும்-பார்ப்போர்
மதிக்குமாறு உடுத்தினாலே
போதும் போதும்

தலைவனாக தலைநிமிர்ந்து
 நடக்கவும் வேண்டாம் -அதைத்
தக்கவைக்கப்  பித்தலாட்டம்
செய்யவும் வேண்டாம்

நிலைகுலையா மனிதனாக
உலவினால் போதும்-ஊரில்
தெரிஞ்சசனம் மதித்தாலே
போதும் போதும்

கவிஞனென்று ஊருலகே
போற்றவும் வேண்டாம்-தினமும்
அதுக்காக எதைஎதையோ
எழுதவும் வேண்டாம்

எளிமையுடன் நல்லதையே
எழுதினால் போதும்-அதுக்கு
கிடைக்கின்ற மதிப்பதுவே
போதும் போதும்

7 comments:

மனோ சாமிநாதன் said...

எளிமையாக, நல்லதையே எழுதும் ஒரு நல்ல மனிதனாக, பசித்தால் உண்ண எளிய சோறும் படுத்தால் உடனே உறங்கும் சாத்தியமும் வேண்டும் என்ற நியாயமான ஆசைகளுடன் ஒரு அருமையான கவிதை!! 'காணி நிலம் வேண்டும்' என்று சொன்ன பாரதி தான் நினைவில் எழுந்தார்!!

Yarlpavanan said...

"எளிமையுடன் நல்லதையே
எழுதினால் போதும்-அதுக்கு
கிடைக்கின்ற மதிப்பதுவே
போதும் போதும்" என்பதை
ஏற்று எழுதுவோம் - அதனால்
நிறைவு காண்போம்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

உண்மையாகவும், எளிமையாகவும், தூய்மையாகவும், மன நிம்மதியுடன் இருந்துகொண்டு நம்மைச் சுற்றியுள்ளோர் நம்மை மதிக்கும்படி நடந்துகொண்டாலே போதும் என அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள்.

இராய செல்லப்பா said...

அதாவது போதுமென்ற மனமே ..போதும் என்கிறீர்கள். ஆனால் இது உலகமயமான காலமாயிற்றே! முடியுமா?

- இராய செல்லப்பா நியூஜெர்சி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை. அழகாய்ச் சொல்லி இருக்கீங்க....

Thulasidharan V Thillaiakathu said...

அருமை!!போதும் என்று மூளை வலியுறுத்தினாலும், மனம் எனும் அதன் மறுபகுதி நின்றுவிடுவதில்லையே!!

G.M Balasubramaniam said...

போதும் என்னும் மனமே பொன்செய்யும் மருந்து என்று இருந்து விட்டால் முன்னேறுவதுதான் எப்போது. ஆங்கிலத்தில் contentment smothers improvement என்றும் சொல்வார்கள்

Post a Comment