Saturday, April 17, 2021

விவேக்..

 விவேக். . . . . . . . . . (நம்மை எல்லாம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஒரு மாபெரும் கலைஞனின் மாமனிதனின்  சிதைந்த மனத்தின் சில சிதறல்கள்.)


                   சமீபத்தில் மறைந்த... என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி மனம் திறக்கச் சொல்கிறார்கள். இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..? அவனை நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறது. கண்கள் தளும்புகிறது. எழுதும் பேனா அழுது தீர்ந்துவிடுகிறது. இதயம் சோர்ந்துவிடுகிறது. அடுக்கடுக்காக அவன் நினைவுகள் கண்ணீர்மேகமாய் என்னைச் சூழ்ந்துகொள்கின்றன.


பிரசன்ன குமார் - என் பிரசன்னா. 13 வருடங்கள் ஆயிற்று; 14 -ம் வருட வாழ்வு போயிற்று. அக்டோபர் 23 -ல் பிறந்தவன். அக்டோபர் 29 -ல் விடைபெற்றான். 14 வருடங்களின் வருடல் இனி என் நினைவுப்பரப்பில் என்றும் கதறல். இன்னும் கொஞ்சம் அதிகம் பழகி இருக்கலாமோ? இத்தனைக்கும் அவன் நிறையப் பேசுபவன் அல்ல. அவன், அவனது பியானோ, அமர்சித்ரகதா, வீடியோ கேம்ஸ், கால்பந்து, குறிப்பிட்ட சில நண்பர்கள் என்ற ஒரு சிறிய வட்டம் அவன் உலகம்.


எப்போதாவது பேசுவான். கேமரா, பேட்டி என்றால் கூசுவான். அவனுக்கு எல்லாமே அவன் அம்மாதான். அந்த வளரிளம்பருவக் குழந்தைக்கு, அம்மாமேல் கால்போட்டுக்கொண்டால்தான் தூக்கம் வரும்.  


வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது மனிதருக்கு தோழமை பாப்பா! தெருவில் திரியும் நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்துவந்து, ‘இதை வளர்ப்போம் டாடி!’ எனும்போது கண்கள் மிளிர்ந்து நிற்பான். அவனுடன் நான் பேசிய பேச்சுகள் மிக மிகக் குறைவு. காரணம் அவன் பதில்கள் ‘ஓ.கே.’, ‘உம்’, ‘சரி’, ‘மாட்டேன்’ என ஒற்றை வார்த்தையில் முடிந்துவிடும். ஃபோட்டோவுக்கு நிற்க மாட்டான்; கட்டாயப்படுத்தி நிற்கவைத்தாலும் முகத்தை அஷ்டகோணலாக்கி... அந்த ஃபோட்டோவை பயன்படுத்த முடியாமல் செய்துவிடுவான். அவனுக்குத் தெரியாமல், அவன் புத்தகம் படிக்கும்போது, பியானோ வாசிக்கும்போது, வீடியோ கேம்ஸ் விளையாடும்போது, தூங்கும்போது என எடுத்த ஃபோட்டோக்கள்தான் என் ஃபோனில் உள்ளன இப்போது. 


அவனுக்கு ஒரு நல்ல நண்பனாக இருக்க நான் போராடிக்கொண்டிருந்தேன். அவனைத் திட்டியதில்லை, அடித்ததில்லை, ஏன், அவனைக் கொஞ்சியதும் இல்லை. காரணம் அவன் விடுவதில்லை. அவன் அம்மாவே அவனை முத்தமிட முடியாது. பிடிக்காது. விடமாட்டான். அது என்ன கூச்சமோ?!


தன்னைச் சுருக்கிக்கொண்டு வாழ்ந்தாலும் அவனிடம் ஏதோ ஒரு புனிதம் இருந்தது. அவனை எல்லோருக்கும் பிடித்துப்போனது. இளையராஜா, அவனை அழைத்து மடியில் அமர்த்தி ஃபோட்டோ எடுக்கச் சொல்வார். ஏ.ஆர்.ரஹ்மான் அவனைப் பியானோ அருகில் நிற்கவைத்து ஃபோட்டோ எடுப்பார். ‘இவனுக்கு 18 வயசு வரும்போது முழு இசைக்கலைஞன் ஆகிவிடுவான்’ என்பார்(முந்திக்கொண்டானே!). ஹாரிஸ் தனது ஸ்டுடியோவைச் சுற்றிக் காட்டுவார். தன்னோடு அணைத்து ஃபோட்டோ எடுக்கச் சொல்வார். அவர் மகன் நிக்கோலஸும் இவனும் அப்துல் சத்தார் மாஸ்டரிடம் பியானோ கற்றுக்கொண்டிருந்தார்கள். 


அது ஒரு காலம். ஷுட்டிங் இல்லாத நாட்களில் நானே அவனை பியானோ கிளாஸுக்குக் கூட்டிச்செல்வேன். டீக்கடையில் பட்டர் பிஸ்கெட்டும், டீயும் வாங்கிக் கொடுப்பேன். அவன் அம்மாவுடன் சென்றால், இந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்கள் கிடைக்காது என்பான். 


இந்த வருடம் ஏழாவது கிரேடு பியானோ எக்ஸாம் எழுத வேண்டியது. எட்டாவது கிரேடுடன் நிறைவடைகிறது. இப்போது அந்த பியானோ, வாசித்தவன் எங்கே போனான் என்று யோசித்துக் கிடக்கிறது. அவன் விளையாடிய ஃபுட்பால் உதைக்க ஆள் இல்லாமல் ஹாலின் மூலையில் உறைந்து கிடக்கிறது. அவன் விளையாடிய வீடியோ கேம்ஸ், வீணே கிடக்கிறது. தூசி படிந்த அவன் புத்தகங்கள், அயர்ன் செய்துவைத்த யூனிஃபார்ம்கள், பிடித்து வாங்கிய ஷூக்கள்... என வீட்டின் ஒவ்வொரு சதுர அடியிலும் கசிந்துகொண்டிருக்கின்றன அவன் ஞாபகங்கள். தோட்டத்தில் உலவினாலும் தொடர்ந்து வரும் சோகங்கள். 


இதுவரை ‘புத்திர சோகம்’ என்பது ஒரு வார்த்தைத் தொடர் எனக்கு. இப்போதுதான் புரிகிறது அது வாழ்வைச் சிதைக்கும் பேரிடர். கையில் முகர்ந்த வாழ்வெனும் வசந்தத்தை விரலிடுக்கில் ஒழுகவிட்டுவிட்டேன். இழந்த பின்னர் இன்னும் அடர்த்தியாய் மனதில் இறங்குகிறது மகனின் அருமை. அவன் விட்டுச்சென்ற வெறுமை. 


அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..! 


குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள். 


உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம். கார் மெக்கானிஸத்தில் காதல்கொண்ட மகனை டாக்டர் ஆக்கப் போராடாதீர்கள். ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிப்புக்குப் பச்சைக்கொடி காட்டி, தொடர்ந்து பக்கபலமாக இருங்கள். அவன் வாழ்வு ஒரு மகிழ்ச்சிப் பூங்கா ஆவதைப் பார்ப்பீர்கள். தோனியைப் பார்த்துவிட்டு, பையனை கிரிக்கெட் கோச்சிங் அனுப்பாதீர்கள். அவனுக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கலாம். டென்னிஸில் காதல்கொண்ட மகளை பரதநாட்டியத்துக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டாம். 


அவர்கள் ஆன்மிகமும் படிக்கட்டும்; அனிருத்தும் கேட்கட்டும். வீட்டுக்குள் அடைத்து, ஏ.சி. ரூமில் டிவி பார்த்துக்கொண்டே சிப்ஸ் கொறிக்க வைக்க வேண்டாம். தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்! 


பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள். எதிர்காலம் புதிர்காலமாகும் சூழலில், அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம். ‘ரேப்பிஸ்ட்’களுக்கு உதவித்தொகையும், தையல் மெஷினும் வழங்கும் ஜனநாயகம் இது. பெண்கள், அவர்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். 


பாரதியாரையும், விவேகானந்தரையும் உங்கள் வீட்டுச் சின்னஞ் சிறு மனிதர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். மனம் வளம் பெறும். மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள். அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம். நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். ஃபார்மஸியில் மாத்திரைகள் வாங்கி விழுங்கினோம். இனியாவது புராதனங்களை மீட்டெடுப்போம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்! 


பின் குறிப்பு: எப்போதுமே முத்தமிட அனுமதிக்காத என் மகன்... ஒரு முறை அனுமதித்தான். அவன் இறந்த பின், எரியூட்ட அனுப்பும் முன், அவன் நெற்றியில் ஒருமுறை முத்தமிட..!


ஒவ்வொரு சனிக்கிழமையும் சாயி பாபா கோவிலில் அன்னதானம் செய்து வந்தோம். வருகிறோம். அந்த அன்னதானத்தில் சிப்ஸ் கொடுக்குறது என்னோட பையன் பிரசன்னா. அவன் ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது கூட அன்னதானம் பண்றத நிறுத்தல. ரொம்ப விரும்பி அவன் அதை செய்றதைப் பாத்திருக்கேன். அதனால அவன் திரும்பி வர்ற வரைக்கும் அவனோட பணியை நானே  செய்யலாம்னு நெனச்சு, நான்தான் அப்போ சிப்ஸ் கொடுத்துட்டு இருந்தேன். எப்பொழுதும் நானே கொடுக்கும்படி ஆகுமென்று நினைக்கவில்லை.


வீட்டுல எப்பவாச்சும் இரவு கட்டில்ல உக்காந்து நாங்க ரெண்டு பெரும் தலையணை சண்டை போடுறது உண்டு. நான் ஃப்ரீயா இருக்கும்போது என்கூட சண்டை போட அவனும், அவன் கூட சண்டை போட நானும் விரும்புவோம். அவன் இறுதி நாட்களை எடுத்துக்கொண்ட மருத்துவமனை கட்டில், ரிமோட்டின் உதவியால் மேலும் கீழும் அசையுற மாதிரி இருந்துச்சு. அந்த சூழ்நிலையிலும் அந்தக் கட்டிலை ரிமோட் ஊஞ்சலா மாத்தி விளையாடிட்டு இருந்தோம்.  அந்த கட்டில் இப்போது அவனைத்தேடும். என் வீட்டுக் கட்டிலும், தலையணையும் எப்போதும் அவனைத் தேடும்.


‘The Good, The Bad and The Ugly’ என்றொரு இத்தாலிய சினிமா.  நான் வீட்டில் இருக்கும்போது யார் என்னை தொலைபேசியில் அழைத்தாலும் எனது பதில், பிரசன்னாவுடன்  ‘The Good, The Bad and The Ugly’ படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதுதான். எத்தனை முறைதான் அந்தப் படத்தைப் பாப்பீங்க என்று அவர்கள் கேட்கும் கேள்வியின் பதிலை இப்போதுச் சொல்கிறேன்.  இசையமைப்பாளர் ‘என்னியோ மொரிக்கோன்’ இசையமைத்த அந்தப் படத்தின் பின்னணி இசைக்காகவே அத்தனை முறைப் பார்ப்பான் என் பிரசன்னா. அவனோடு சேர்ந்து நானும். இனி யாருடன் பார்ப்பேன்? யாருக்குப் புரியும் அவனது ரசனையும், அவன் ரசித்த அந்த இசையும்!


நடிகன் என்ற கர்வம் சிறிதேனும் என்னிடம் அவ்வப்போது வெளிப்பட்டு விடும். நடிகனின் மகன் என்ற கர்வம் ஒருபோதும் அவனிடம் வெளிப்பட்டது கிடையாது. எங்கள் ஏரியா சிறுவர்களுடனேயே தொடர்ந்து விளையாடும் பழக்கம் உள்ள அவனுக்கு நண்பர்களும் அவர்களே. அடிக்கடி என்னிடம் பணம் வாங்கிக் கொள்வான். வாங்கும் பணத்தை என்ன செய்கிறான் என்று விசாரித்தபோது, இருபது ரூபாய்க்கு கிடைக்கும் டிவிடி - க்களை வாங்கி அதில் வீடியோ கேம்ஸ் ஏற்றி அவன் நண்பர்களுக்கு கொடுக்கிறான் என்று தெரிந்து சந்தோஷப்பட்டேன். சந்தோஷப்படுகிறேன்.


நேரத்திற்கு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லை எனக்கு. எப்போதாவதுதான் பேசும் அவன், அடிக்கடி பேசும் வார்த்தை. ‘அப்பா! தண்ணி குடிச்சீங்களா?’. என் கைபேசியில் ஒரு அப்ளிகேஷன் வைத்திருக்கிறேன். நேரத்திற்கு தண்ணீர் குடிக்கச் சொல்லி அலெர்ட் செய்யும் என்னை அது. இப்போது அந்த அப்ளிகேஷன் ‘Please drink water Daddy by prasanna’ என்று என்னை அலெர்ட் செய்கிறது.  மனம் திறந்து : கடைசி முத்தம்! 


- நடிகர் விவேக்


மகனைப் பற்றி 2016 பிப்ரவரியில் இணையதளத்தில் விவேக் எழுதிய கட்டுரை.

Sunday, April 11, 2021

கார்ப்பரேட் தேர்தல்

 எப்படி முயன்றபோதும் தன் மனைவியின்

மனதைக் கவர முடியாது தோற்றவன்

பெண்களைக் கவர்வதில் கெட்டிக்காரன் என

நம்பப்படுகிறவனிடம்/ 

அப்படி ஒரு போலி நம்பிக்கையை 

ஏற்படுத்தி வைத்திருப்பவனிடம்

பெரும் தொகையைக் கொடுத்து 

ஆலோசனை கேட்க...


கெட்டிக்காரனாக நம்பப்படுகிறவன்

தனக்கான  ஆட்களை நியமித்து 

அவன் மனைவியைப் தொடர்ந்து 

தொடரச் செய்து அவருக்கு

கோவில் பிடிக்கும்/ இடியாப்பம் பிடிக்கும்/

ரோஜாப் பூ பிடிக்கும் என பட்டியல் கொடுத்து

பெரும் தொகையைப் பெற்றுக் கொள்ள..


அவன் ஐடியாவை வைத்து இவையெல்லாம்

வாங்கிக் கொடுத்து  தன் மனைவியைக்

கவர முயலுகிறவன் போல.....


(சில நாட்கள் மனைவியிடம் மனம் விட்டுப் பேசிப்

பழகி இருந்தாலே இந்த விஷயங்கள் எல்லாம்

செலவின்றியே தெளிவாகப் 

புரிந்து கொண்டிருக்கமுடியும் )


தன் மாவட்டச் செயலாளர், நகர மற்றும்

ஒன்றியச் செயலாளர் முலம் இந்த ஐ பேக்

நிறுவனத்திற்குச் செலவழித்த தொகையில்

கால் பகுதியைச் செலவழித்திருந்தால் கூட

அவர்களும் தம் தொகுதி மக்களுக்கும்

உண்மையான கட்சித் தொண்டர்களுக்கும்

தேவையானதைச் செய்து வெற்றிக்கு

வித்திட்டிருக்க முடியும்...


இதை விடுத்து ஜன நாயகத்தின் ஆணிவேரான

தேர்தலையே ஒரு கார்பரேட் நிறுவனம் மூலம்

சந்தித்து தேர்தலையே ஒரு கார்பரேட்

பாணியில் சந்தித்தவர்கள் ....


பிற கட்சியினரை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு

உடந்தையானவர்கள்/ கார்பரேட் அடிவருடிகள்

எனப் பிரச்சாரம் செய்வது மட்டுமல்ல


கல்வி போல மருத்துவம் போல

தேர்தலையும் சாமானியர்கள்

சந்திக்க இயலாதபடிச் செய்துவிட்டு (கார்ப்பரேட்டுகளுக்கு வழியமைத்துக் கொடுத்துவிட்டு)

தங்களை ஜனநாயவாதிகள் என்றும்

தங்கள் இயக்கம் பாமர ஜனங்களுக்கானது

எனப் பிரச்சாரம் செய்வதையும்

என்னவென்று சொல்வது....

Saturday, April 10, 2021

இன்று மாலை..

 👆👆👆👆👆

யார் இந்தச் சாலையோரச் சிறுவர்கள்?


உலகம் முழுக்க 100 மில்லியனுக்கும் அதிகமான சாலையோரக் குழந்தைகள் இருப்பதாக யுனிசெஃப் எனும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children's Fund) அமைப்பு தெரிவிக்கிறது. இதில், இந்தியாவில் மட்டும் 18 மில்லியனுக்கும் அதிகமான சாலையோரக் குழந்தைகள் இருக்கின்றன என்கின்றனர். 5 முதல் 18 வயதுக்குட்பட்ட இந்தக் குழந்தைகள் எப்படி சாலைக்கு வருகிறார்கள்? சாலையோரங்களில் தஞ்சமடைந்திருக்கும் இவர்கள் உணவுக்கு என்ன செய்கிறார்கள்? சாலையோரங்களில் வசிக்கும் இவர்களை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? இவர்கள் எப்படியெல்லாம் துன்புறுத்தப்படுகிறார்கள்? இவர்களால் சமூகத்தில் என்ன பிரச்சனைகளெல்லாம் ஏற்படுகின்றன? இவர்களை மாற்றுவதற்கு அரசு என்ன செய்கிறது? இவர்களது மறுவாழ்வுக்கு அரசு இனி என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள விருப்பமா? அப்படியென்றால், இந்த நிகழ்வு உங்களுக்காகத்தான்...!


தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து நடத்தி வரும் “இணைய வழியிலான தமிழியல் உரை மற்றும் கலந்துரையாடல்” நிகழ்வில் பன்னாட்டுச் சாலையோரச் சிறுவர்கள் நாளை (ஏப்ரல் 12) முன்னிட்டு, இன்று (11-4-2021) மாலை 5.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி, சேவை தொடருந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி ஜா. ரேவதி அவர்கள் “சாலையோரச் சிறுவர்கள்: மக்கள் பார்வையும் அரசின் கடமையும்” எனும் தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்.


இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள், https://meet.google.com/hzr-ekri-gmf எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தி Google Meet எனும் செயலி வழியாக Ask Join அல்லது Join Meeting என்பதைச் சொடுக்கி, அதன் வழியாக  இணையலாம். Enter Code எனும் கேட்கும் நிலையில், அவ்விடத்தில் hzr-ekri-gmf என்று உள்ளீடு செய்து இணையலாம். 


Google Meet வழியாக இணைந்தவுடன், அங்கே தெரியும் தங்களது ஒலிவாங்கி (Mike) மற்றும் நிகழ்படம் (video) ஆகியவற்றுக்கான குறியீட்டை அணைத்து (Mute) வைத்து, சிறப்புப் பேச்சாளரின் உரையினை அனைவரும் தெளிவாகக் கேட்க உதவ வேண்டுகிறோம்.   


இந்நிகழ்வில் பங்கேற்றுப் பின்னூட்டம் பதிவு செய்யும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

 வருடப் பிறப்பும் வேப்பம்பூ பச்சடியும்


"எங்கள் வீட்டில்

எல்லா வருடப் பிறப்பின் போதும்

வேம்பம்பூப் பச்சடி உண்டு


சில வருடங்களில்

நான் காலண்டர் இல்லாதே கூட

வருடத்தைக் கடத்தி இருக்கிறேன்


ஆனால் வேப்பம்பூப் பச்சடி இன்றி

ஒரு வருடப் பிறப்பைக்  கூடக் 

கடந்ததே இல்லை.. 


காரணம்

காலத்தோடு பிணைக்கப் பட்டிருப்பதை

மறந்து நான்

காலண்டரோடு பிணைந்து

குழம்பித் திரிவதைப் போல


எங்கள் வீட்டு வேம்பு

என்றும் குழப்பம் கொண்டதே இல்லை..


(அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு

நல்வாழ்த்துக்கள் )