Sunday, March 31, 2013

உள்ளும் புறமும் (2 )


அந்தப் புதிய குடியிருப்புப் பகுதியில்
இடம்  வாங்கும்போதே என் இடத்திற்கும்
கிழக்கே மூன்ற பர்லாங்க் தூரத்தில் இருக்கும்
பிரதான சாலைக்கும்இடையில் இருக்கும்
அந்த முள் காட்டில் சாராயம் விற்கிறார்கள்
எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆயினும் அந்தப் பக்கம் அதிகம் வரவேண்டி
இல்லாதபடிவேறு பாதைகள் இருந்ததால்
அது குறித்து நான்அதிகம் விசாரித்துத்
 தொலைக்கவில்லை

வீடு கட்டி குடியேறிய ஒரு வாரத்தில் என் வண்டியைப்
பராமரிப்புக்கு விட வேண்டியிருந்ததால் அன்று மாலை
அலுவலகம் விட்டு பஸ்ஸிலேயே வீடு வர வேண்டி
இருந்தது.பிரதான சாலையில் உள்ள ஸ்டாப்புக்கு
டிக்கெட் எடுத்துவிட்டு ஸ்டாப் வந்தவுடன் இறங்கத்
துவங்குகையில் கண்டக்டர்குட்டி பாண்டிச்சேரி
-யெல்லாம்இறங்கு என குரல் கொடுத்ததும்
 பஸ்ஸில் இருந்தமொத்த ஆண்கள் கூட்டமும்
 இறங்கத் துவங்கியது.

இறங்கியவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக
முள் காட்டுக்குள் அவசரம் அவசரமாக நடையைக்
கட்டினார்கள்.நானும்  அந்த ஸ்டாப்பிலேயே
நின்று இருபுறமும் வருகிற பஸ்ஸைக் கவனிக்கத்
துவங்கினேன்.வருகிற பஸ்ஸில் எல்லாம்
அதிகமாக ஆண்கள்கூட்டமும்  இருப்பதும்
அவர்கள் அனைவரும் இறங்கிமுள்காட்டுக்குள்
 பறப்பதும்  வயிற்றைக் கலக்கவும் துவங்கியது
கொஞ்சம் அவசரப்பட்டுஇந்த ஏரியாவில்
வீடு கட்டிவிட்டோமோ எனப் பயமும்
 தோன்ற ஆரம்பித்துவிட்டது

முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்கிற
பழமொழிப்படி இனி யோசித்துப் பயனில்லை இங்கு
என்னதான் நடக்கிறது எனப் பார்ப்போம் என
நானும் அந்த முள்காட்டு ஒத்தையடிப்பாதையில் போய்
உள்ளே பார்க்க அதிர்ந்து போனேன்.

உள்ளே கிராமத்தில் குட்டி திரு விழாவுக்கு
கடைகள் போட்டது போல  ஒரு இருபது முப்பதுக்கு
குறையாமல் பந்தல் போட்டு கடைபோட்டிருந்தார்கள்.
ஒவ்வொரு கடைக்கு முன்னும் குறைந்த பட்சம்
இருபது முப்பது பேருக்குக் குறையாமல்
குடித்துக் கொண்டும் கையில் கொண்டு வந்திருந்த
 திண்பண்டங்களைக்கொறித்துக் கொண்டும் இருந்தார்கள்.

அது மது விலக்கு அமலில் இருந்த காலம்.
பக்கத்தில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில்
போலீஸ் ஸ்டேஸனும் இருக்கிறது.இந்த நிலையில்
இப்படி ஒரு மிகப் பெரிய அளவில்
 கள்ளச் சாராய வியாபாரம் நடப்பதை என்னால்
 ஜீரணிக்கவே முடியவில்லை
கூறு கெட்டவ்ர்கள் சூழ இருக்கிற இடத்தில் கூட
நிம்மதியாய் வாழ்ந்து விட முடியும்.இத்தனை
குடிகாரக் கூட்டம் தினம் புழங்குகிற ஏரியாவில்
பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு தனியாக
வீடு கட்டிக் கொண்டது எத்தனை பெரிய முட்டாள்தனம்
என எண்ணியபடி வீடு  நோக்கி நடக்கத் துவங்கினேன்
மனம் மிகச் சஞ்சலப்பட்டுப் போனது

போகிற வழியில் சாலைக்கு நடுவில்
ஒரு இந்தியத் தலைவரின் சிலையும்
அதை ஒட்டிஒரு தெரு விளக்கும் உண்டு.
அதைத் தாண்டினால்வீடு வரை ஒரே இருள்தான்.
எனவே சிறிது நேரம் அந்த சிலையின் அடியில்
உள்ள  திட்டில் அமர்ந்து போகலாம்
என எண்ணி அந்தத் திட்டை நோக்கி நடந்தேன்

திடுமென்று " அங்கே யாரப்பா  அது "'
எனக் கத்தியபடி கையில் ஒரு
வேல் கம்புடன் ஒரு கை ஓசை சங்கிலி முருகன் மாதிரி
கருப்புப் போர்வையைப் போர்த்தியபடை மீசையை
ஏற்றிவிட்டபடி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்

(தொடரும் )

Friday, March 29, 2013

உள்ளும் புறமும்


இதைக் கதையாகக் கொள்வதுதான் நல்லது.
உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்தான்
ஏன் ? எல்லோருக்குதான்.

வயது நாற்பதை வயதை ஒட்டிய சமயத்தில்
மனைவியின் தொடர் வற்புறுத்தலாலோ அல்லது
அடுத்து அடுத்து வீட்டுச் சொந்தக் காரர்களின்
அடாவடித்தனத்தால் வீடு மாற்றி மாற்றி
நொந்து போனதாலோ எனக்கும் சுயமாக
வீடு கட்டவேண்டும் என ஆசை இருந்தது
ஆனால் எதனாலோ அதிக ஆர்வமில்லை

இந்தச் சூழலில்

எனது அலுவலகத்தில் எனது வயதை ஒத்த
உதவியாளன்ஒருவன் இருந்தான்.
அவன் அந்த சமயத்தில் அவனுடையபையனுக்கு
 தீவீரமாகப் பெண் பார்த்துக் கொண்டிருந்தான்.
நேற்று என்னிடம் பெண் பார்க்கப் போவதாக விடுமுறை
சொல்லிவிட்டுப் போயிருந்ததால் அவன் வந்தவுடன்
 ஆர்வமாக"என்ன ஆயிற்று " எனக் கேட்டேன்

அவன் சலித்தபடி சொன்னான்
"பெண் அழகாயிருக்கிறதுவசதியான குடும்பம் தான்.
பவுனும் 30 க்கு  குறையாமல்போடுகிறேன் எனச்
சொல்கிறார்கள்.சம்பாதிக்கிற அண்ணன்கள்
இருவரும் தாட்டியமாக இருக்கிறார்கள்.
ஆனாலும்... 'எனச் சொல்லி நிறுத்தினான்

எனக்கு எரிச்சலாகிப் போனது.
"இதற்கு மேல் உனக்கு எப்படிச்   சம்பந்தம்
 வேண்டும் எனநினைக்கிறாய்  "
என்றேன் எரிச்சலுடன்

"எல்லாம் இருந்து என்ன சார்.வாடகை வீட்டில்
 இருக்கிறார்கள்வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு
 எப்படி சார் பெண்ணைக்கொடுப்பது " என்றான்

எனக்கு அவன் பதில் சட்டென யாரோ மண்டையில்
 தடி கொண்டுதாக்கியது போல இருந்தது.

நான் கௌரவமான ஒரு அரசுப் பணியில் இருக்கிறேன்
இரண்டு பெண்களையும் பொறியியல் கல்லூரியில்
 சேர்த்துபடிக்கவைத்துக் கொண்டுள்ளேன்.
மிகச் சிறப்பான முறையில்திருமணம் செய்து
 கொடுக்கக் கூடிய வகையில்திருமணத்திற்கு
த்தேவையான அனைத்தையும்
சிறிது சிறிதாக சேமித்தும் வைத்துள்ளேன்
வீடு கட்டுவதற்கு ஏதுவாக இரண்டு மூன்று
 இடங்களைவாங்கியும் வைத்துள்ளேன்
.பொறியல் துறையிலேயேஇருப்பதனால்
வடிவமைப்பதுகுறித்தோ வேலை ஆட்களிடம்
வேலை வாங்குவது குறித்தோ கவலை இல்லை

.ஆனாலும்

எப்போது வேண்டுமானலும் கட்டிவிடமுடியும் என்கிற
நமபிக்கையினாலோ அல்லது அலட்சியத்தினாலோ
 உடன்சொந்தமாக வீடு கட்ட நான் முயற்சிக்கவே இல்லை

இன் நிலையில் என் உதவியாளர் சொந்த வீடு
 இல்லாதவர்கள்வீட்டில் எப்படி சம்பந்தம் செய்வது
 என்கிற வார்த்தை என்னுள்ஒரு பெரும் பாதிப்பை
ஏற்படுத்திவிட்டது,இவன் அளவிலேயேஇப்படிப்பட்ட
எண்ணம் இருக்குமாயின் நான் மாப்பிள்ளை பார்க்கத்
துவங்குகையில் நல்ல சம்பந்தம் அமைந்து
 இதன் காரணமாகதட்டிப் போனால் என்ன செய்வது
என்கிற எண்ணம் வர அவனுடைய வார்த்தையை
 ஏதோ அசரீரியின் வாக்காக எடுத்துக்
-கொண்டு உடன் வீடு கட்டது துவங்கிவிட்டேன்.

ஆறு மாதத்தில் புதிய வீட்டில் குடியேறியும் விட்டேன்
இதிலெல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்லை
.நான் வீடு கட்டியபகுதி புதிய குடியேற்றப் பகுதியாய்
 இருந்ததால் என் வீட்டை ஒட்டிஒரு இரண்டு பர்லாங்க்
 தூரத்திற்கு வீடு ஏதும் இல்லை
அது கூட  பெரிய பிரச்சனையாய் இல்லை.
என் வீட்டிற்குகிழக்கே இரண்டு பர்லாங்க் தூரத்தில்
 மிகப் பெரியமுள் காடு ஒன்று இருந்தது.
அதனால் இத்தனை பிரச்சனைகள் இருக்கும் என
 எனக்கு முதலில் தெரியாது.

(தொடரும்

Wednesday, March 27, 2013

இறுதிப் போட்டி ?


உடலே மத்தாக
மூச்சே வடமாக
ஐம்புலனும் ரசிகனாக
காலமும் இதயமும் நடத்தும்
கயிறிழுக்கும் போட்டிதான்
நாம் வாழும் வாழ்வா ?

இழுத்து ஓய்ந்து
அலுத்த இதயம்
இயலாது தன் நுனியை
மருத்துவரிடம் சேர்க்க
எரிச்சலுற்ற காலம் தன் நுனியை
காலனிடம் சேர்க்கும் நாள்தான்
நமக்கு கடைசி நாளா ?

வார்த்தைகளை எளிதாய் வெல்லும்
அதீத மௌனம் போல
ஹிம்ஸையின் பேயாட்டத்தை
எதிர்க்காதே வெல்லும்
சக்தி மிக்க அஹிம்ஸைபோல்
ரூபத்தை வெட்டிச் சாய்த்து
அரூபம் வெல்லும்
அதிசயத் திரு   நாள்தான்
நமக்கெல்லாம் இறுதி நாளா ?

Tuesday, March 26, 2013

அதிசய உறவுகள்


மீண்டு வருதலும்
மீண்டும் வருதலும்
ஒன்றுபோலத் தோன்றினும்
ஆழ நோக்கின்
இவைகள் இரண்டும்
வேறு பொருள் கொண்டவையே

உயிரோடிருத்தலும்
வாழுதலும் நமக்கு
ஒன்றுபோலப் படினும்
கொஞ்சம் சிந்தித்தால்
இவைகளிரண்டும்
எதிர் அர்த்தம் தருபவையே

ஒன்றை அறிதலும்
ஒன்றை உணர்தலும்
ஒன்று போலப் பொருள்தரினும்
சிறிது உற்று நோக்கின்
உறுதியாய் இவையிரண்டும்
இருவேறு துருவங்களே

கவிதையும் கவித்துவமும்
ஒரு பொருள் இரு சொல்லென
மயக்கம் தருகிற போதும்
கவனமாய் சீர்தூக்கிப் பார்க்கின்
இவைகளிரண்டும்
எப்போதேனும் ஒன்றுசேரும்
அல்லது  சேராதேத்  திரியும் 
அதிசய உறவுகளே

Monday, March 25, 2013

எது அழகு ?

பூமிக்கு நீர் நதி அழகு 
பூவைக்கு நளினமே அழகு
சாமிக்கு அருளலே அழகு
செல்வர்க்கு கருணையே அழகு

மலருக்கு வண்ணமே அழகு
மன்னருக்கு மணிமுடி அழகு
நிலவுக்கு வெண்பனி அழகு
நினைவுக்கு நல்லதே அழகு

வயலுக்கு விளைச்சலேஅழகு
வார்த்தைக்கு வாய்மையே அழகு
யுவதிக்குப் பருவமே அழகு
தமிழுக்குத் தொன்மையே அழகு

முதுமைக்கு நிதானமே அழகு
முயற்சிக்கு தொடரலே அழகு
பதுமைக்கு இருப்பிடம் அழகு
புலமைக்கு சொற்திறம் அழகு

வீணைக்கு நாதமே அழகு
விருந்துக்கு இன்முகம் அழகு
யானைக்குத் தந்தமே அழகு
கவிதைக்குச் சந்தமே அழகு