Tuesday, February 20, 2018

இந்த அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...?

அந்தக் காலங்களில் நாம் இருவருமே
நல்ல மனிதர்களாய் இருந்தோம்

எம் நல்வாழ்வு  குறித்து
எப்போதும் சிந்தித்தபடி நீங்களும்

உங்கள்  உயர்வு குறித்து
எப்போதும் வேண்டியபடி நாங்களும்

அதனால்
எங்களைச் சந்திப்பதில் உங்களுக்கிருந்த
மகிழ்வும் இன்பமும்
அன்று உண்மையாய் இருந்தது

அதனாலேயே 
உ ங்களைத் தரிசிப்பதில் எங்களுக்கிருந்த
ஆர்வமும் எழுச்சியும்
அளவு கடந்தும் இருந்தது

அதனால்தான் இரவெல்லாம் நாங்கள்
தூங்காது விழித்துக் காத்திருந்தோம்

அதனால்தான் பகலிரவாய் நீங்களும்
சோராது சந்தித்து மகிழ்ந்தீர்கள்

இப்போது நாம் இருவருமே
மோசமான வியாபாரிகளாகி விட்டோம்

உம் நிலைப்புக் குறித்து
எப்போதும் சிந்தித்தபடி  நீங்களும்

எங்கள் அற்பத் தேவைகள் குறித்து
எப்போதும் நினைத்தபடி நாங்களும்

எங்களைச் சந்திப்பது
உங்களுக்கு இப்போது
அலுப்பாகவும் சலிப்பாகவும்

உங்களைச் சந்திப்பது
எங்களுக்கு  இப்போது
வெறுப்பாகவும் கோபமாகவும்

அதனால்தான்
இப்போதெல்லாம் நீங்கள்
அழைத்துச் செல்லவேண்டி
துண்டு விரித்துக் காத்திருக்கிறோம்

மாறிய
சூழலறிந்து நீங்களும்
பணத்துடன் பொட்டலத்துடன்
எம் வீட்டு வாசல் வருகிறீர்கள்

இருவரில் யார் மிக மோசம்
என்னும் போட்டி
நம்முள் தொடர்ந்து கொண்டிருக்கிறது...

மிகச் சரியாகச் சொன்னால்...

விபச்சாரி வீடு போய்
பழக்கப்பட்டவன்
பழக்க தோஷம் போகாது

முதலிரவில் மனைவியிடம்
நூறு ரூபாய்க் கொடுக்க

அவளும் பழக்க தோஷம் போகாது
ஐம்பது ரூபாயைத்
திருப்பிக் கொடுத்த கதையாக...

இந்த அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...?

Friday, February 16, 2018

எனவே இனியேனும்.......

பொதுக்கூட்டங்களில்
விளையாட்டு மைதானங்களில்
பார்வையாளர்களாய் இருக்கும் நாம்
நிச்சயம்
பாராட்டுக்குரியவர்களே

ஏனெனில்
பார்வையாளர்களாய் இருப்பதன் மூலம்
நம்மை மட்டுமல்ல
அந்த நிகழ்வையும்
பொதுக்கூட்டத்தையும்
விளையாட்டையும்
சுவாரஸ்யப்படுத்துவதோடு மட்டுமல்லாது
பங்கேற்றவர்களையும்
கௌரவப்படுத்தியும் போகிறோம்

ஆயினும்
நமக்கான
போராட்டங்களில்
இயக்கங்களில்
நாம் வெறும்பார்வையாளர்கள் எனில்
நிச்சயம்
பரிகாசத்துக்குரியவர்களே

ஏனெனில்
போராட்டக்களத்தில்
நாம் வெறும் பார்வையாளர்களாக இருப்பது
நம்மை மட்டுமல்ல
அந்தப் போராட்டத்தையும்
இயக்கத்தையும்
நீர்த்துப்போகச் செய்வதோடு
போராடுவோரையும்
அவமதித்தும் போகிறோம்

ஏனெனில்
முன்னதன் வெற்றி
அதை நடத்துபவரைச் சாரும்
பின்னதோ
நம்மையும் வந்து சேரும்

உழைப்பின்றி
வந்து சேரும் செல்வம் மட்டுமல்ல
பங்களிப்பின்றி
வந்து சேரும்
நன்மைகள் கூட 
நிச்சயம்
அதன் மதிப்பறியாதே செய்து போகும்

எனவே
இனியேனும்..........

Friday, February 9, 2018

காதலர்கள் வித்தியாசமானவர்கள் காதல் விசித்திரமானது !

காதலர்கள்
வித்தியாசமானவர்கள்
காதல்
விசித்திரமானது

காதலியின் முகங்கான
ஒட்டடை நூல்பிடித்துக் கூட
கொடிய எதிரியின் கோட்டை ஏறும்
அசட்டுத் துணிச்சலும்...

காதலை இழந்தால்.
அனைத்துச் சுகங்களையும் ஒதுக்கி
ஏதுமற்ற ஆண்டியாய்த் திரியும்
மனோ வலிமையும்

காதலர்களையன்றி
வேறு யாருக்கு வரும் ?

வெற்றிக் கொண்டவனை
கூட்டத்தில் ஒருவனாக்கி
சராசரியாக்கி உலவ விடும்
அபூர்வச் சக்தியும்

தோற்றவனை
அமரகாவிய நாயகனாக்கி
காலம் கடந்தும் வாழவைக்கும்
ஈடில்லா சாதுர்யமும்

காதலையன்றி
வேறு எதற்கு வரும் ?

ஆம்
அதனால்தான்
இன்னும்
எத்தனை யுகமாயினும்

காதலர்கள்தான்
வித்தியாசமானவர்களாய்த்
தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்

ஆம்
அதனால்தான்
எத்தனை
மாறுதல் நேரினும்

காதல் ஒன்றே
விசித்திரமானதாகத்
தொடர்ந்து கொண்டும் இருக்கிறது

வித்தியாசமானதை
விசித்திரமானதை
நாமும் வாழ்த்தி வைப்போம்

இல்லையேல்
நாமும்
வித்தியாசமானவர்களாகத் தெரிவோம்
விசித்திரமானவர்களாக அறியப்படுவோம்

வாழ்க காதலர்கள்
வாழ்க காதலர்தினம்

Thursday, February 8, 2018

தமிழிசையின் அபஸ்வரம் ( ? )

கத்தியினைக்  கொண்டு
பிறந்த நாள் கேக் வெட்டுவது
ஆங்கிலேயர் கலாச்சாரம்
அது நம்முடையதில்லை

தமிழக கலாச்சாரப்படி
கத்தி குத்துவதற்கு
அரிவாள் வெட்டுவதற்கு

அது தலை ஆயினும்
பிறந்த நாள் கேக் ஆயினும்..

மாறிச் செய்வது
நம் மரபல்ல

சந்தேகம் எனில்
பரம்பரைக் குறித்த நினைப்பிலேயே
நாளும் வாழும்
இயக்குநரைக் கேட்டிருக்கலாம்

இது அறியாது தமிழிசை அவர்கள்
அரிவாள் கொண்டு
பிறந்த நாள் கேக் வெட்டுதலை

அதுவும்
ஒரு முன்னணி ரவுடி வெட்டுவதை
ரவுடிகள் சூழ  வெட்டுதலை

தமிழக சட்டம் ஒழுங்கோடு
பிணைத்துப் பார்ப்பது
நிச்சயம் அபஸ்வரமே

அமைதிப்  பூங்காவான  தமிழகத்தின்
பண்பாட்டுக் காவலர்கள்  ( ? )நாங்கள்
இதை வன்மையாய்க் கண்டிக்கிறோம்

தமிழகத்தின் பெருமைதன்னை தொய்யவிடாது ...

"குற்றம் நிரூபிக்கப்பட்டு
குற்றவாளி என தண்டிக்கப்பட்ட ஒருவரின்
பிறந்த நாளின் போது நீ விடுவிக்கப்படுவாய்"
எனத் தண்டிக்கப்பட்ட குற்றவாளியைப் பார்த்து
 ஒருவன் சில மாதங்களுக்கு முன்னாலோ
சில வருடங்களுக்கு முன்னாலோ
 சொல்லி இருந்தால் ......

சந்தேகமில்லாமல்
 நிச்சயம் அவனைப் பைத்தியம் என்றுதானே
முத்திரைக் குத்தியிருப்போம் /

அப்படிப் பட்ட தேசம்
ஒரு பைத்தியக்காரர்களின் தேசம்
என்றுதானே முடிவு செய்திருப்போம்/

அப்படி அப்போது
முடிவெடுக்கவில்லை என்றால்
 நம்மை அல்லவா எல்லோரும்
 பைத்தியம் என முத்திரைக் குத்தி இருப்பார்கள்/

சரி சரி இப்போதும்
அரசின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை
 ஆதரிக்கவில்லை எனில்
நமக்கு பைத்தியங்கள் எனப்  பெயர் பெறவே
 நிச்சயம்சாத்தியம் /

எனவே  வை.கோ சார் வகையறாக்கள்
ஆதரிக்கும் முன்னே
நாம் இதனை ஆதரித்து
புரட்சியாளர்கள் எனப் பெயர் பெறுவோம் வாரீர்.

தமிழகத்தின் பெருமைதன்னை
தொய்யவிடாது தொடர்ந்துக் காப்போம் வாரீர்

Tuesday, February 6, 2018

அதைப் போலவும்....

எண்ணம் மட்டும்
நல்லதாய்க்  கொண்டால்
நிச்சயம் செயலெல்லாம்
சிறப்பானதாகத்தான் இருக்கும்

அது தெரியத்தான் செய்கிறது

செயலில் மட்டும்
கவனமாய்  இருந்தால்
உறவுகள் எல்லாம்
சிறப்பானதாகத்தான் அமையும்

அது புரியத்தான் செய்கிறது

உறவுத் தெரிவு மட்டும்
சரியாக இருந்தால்
இவ்வுலக வாழ்வே
சொர்க்கமாகத்தான் இருக்கும்

அது நிஜமெனத்தான் தெரிகிறது

ஆயினும் என்ன செய்ய...?

ஆள்பவர்களை மட்டும்
மிகச் சரியானவர்களாக
தேர்ந்தெடுத்துவிட்டால்
நாடு நன்றாக இருக்கும்
எனது தெரிந்தும்

நாமும் நலமாகத்தான் இருப்போம்
எனத் தெரிந்தும்...

பணத்திற்கும்
வேறு எதெதற்கோ
ஆசைப்பட்டு அடிமைப்பட்டு
காலம் காலமாய்
பாழ்ப்பட்டுக் கிடக்கிறோமே
அவதிப்பட்டுக் கிடக்கிறோமே

அதைப் போலவும்....

(முழுவதையும்
விளக்கத்தான் வேண்டுமா என்ன  ? )

Friday, February 2, 2018

இழக்கப் பிறக்கும் ஞானம்

இல்லற வானில்
நாற்பதாண்டுக் காலம்
இணைந்து இன்புற்று உடன் பறந்த
தன் துணை வீழ்ந்து பட..

வேரெடுக்கப்பட்ட
செடியாய்
மெல்ல மெல்ல
தன்னை இழந்து கொண்டிருந்தவனுக்கு
எப்படி ஆறுதல் சொல்வதெனத் தெரியாது
கைகளை மட்டும் இறுக்கப்
பற்றிக் கொண்டிருந்தேன்

எக்கணமும் வெடித்துச் சிதறுவான் போல்
இறுக்கிக் கிடந்தான் அவன்

பின் மெல்ல அவனே
பிதற்றத் துவங்கினான்

"இரவு இத்தனை நீண்டதென
இருள் இத்தனைக் கனத்ததென
தனிமை இத்தனை துயெரென
வெறுமை இத்தனைக் கொடிதென
அவளை இழந்தபின் தான்
இந்த ஒரு வாரத்தில்தான்
எனக்குப் புரிந்து தொலைக்கிறது

பசி இருக்க
உண்ண முடியாதும்
உடல் அயற்சியுற்றும்
உறங்க முடியாதும்
உயிர் இருந்தும்
இயங்க முடியாதும்
என்ன கொடுமையிது " என்றான்

கண்ணீருடன் கலங்கி நின்ற
அவன் நிலை காணக் காண
மனம் பற்றியெரியவும் துவங்கியது

"பாவக்கா கறியில்
உப்புக் கொஞ்சம் குறைந்ததற்காக
நேற்று
ருத்ரதாண்டவம் ஆடிய  எனக்கு"