Tuesday, July 30, 2013

இன்றைய நாளை நாமே கணிப்போம் (அவல் 2 )

ஒரு நாள் இரவு நானும் வான சாஸ்திரம் தெரிந்த
எனது நண்பனும் மொட்டை மாடியில் அமர்ந்து
பல்வேறு விஷயங்கள் குறித்துப்
பேசிக் கொண்டிருந்தோம்..

அப்போது வானில் ஊர்ந்து கொண்டிருந்த
அரை நிலவைக்காட்டி  இன்று வளர்பிறையா
தேய்பிறையா  சொல் " என்றான் என் நண்பன்

"காலண்டரைப் பார்த்து வரவா "என்றேன் நான்

"அதைப் பார்த்துத்தான் எல்லோரும்
சொல்லிவிடுவார்களே.அதில் என்ன இருக்கிறது
இங்கிருந்தே இப்படியே சொல்லவேண்டும்
அதுதான் விஷயம் "என்றான்

நிலவு அரை தேய்ந்திருந்தது.மிக லேசாக
நடு உச்சத்திலிருந்து  கொஞ்சம் கிழக்கே இருந்தது
வேறு குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை
இதைவைத்து எப்படி வளர்பிறையா தேய்பிறையா
எனச் சொல்லமுடியும்.எனக்குப் புரியவில்லை

என் நண்பனே தொடர்ந்தான்

"இதை வைத்து  வளர்பிறை தேய்பிறை மட்டுமல்ல
மிகச் சரியாக இன்றைய நட்சத்திரத்தைக் கூட
 சொல்லிவிட முடியும் " என்றான்

என்னால் நிச்சயம் அதை நம்ப முடியவில்லை

நண்பன் தொடர்ந்து பேசினான்

"முன் காலத்தில் பிராமணர்கள் என்றாலே
தனக்கென தன் குடும்பத்திற்கென வாழாது
சமூகத்திற்கு வாழ்பவர்கள் என அர்த்தம்

அதனால் தான் அவர்களுக்கான தேவைகளைப்
பூர்த்தி செய்ய அவர்கள் எந்த பணிகளையும் செய்யாது
வேத சாஸ்திரப் பணிகளை மட்டும் பார்த்துக்
கொண்டிருக்க, அவர்களுக்கான தேவைகளை
சமூகமும் சமூகத்தின் சார்பில் மன்னர்களும்
கவனித்துக் கொண்டார்கள்

அவர்களுக்கு எது தேவை என்பதைக் கூட
அவர்கள் வாய் திறந்து கேட்கவேண்டியதில்லை.
அவர்கள் மார்பில்அணிந்திருந்த பூணூலின்
எண்ணிக்கையேஅவர்கள் பிரம்மச்சாரியா கிரஹஸ்தனா
அல்லது குழந்தைகள் பெற்றவரா எனபதை மிகச் சரியாக
காட்டிக் கொடுக்க அதற்கு ஏற்ப அவர்களுக்குத்
தேவையானதை மன்னன் கொடுத்துவிடுவார்

இவர்கள் எந்தக் காரணம் கொண்டும் லௌகீக
விஷயங்களுக்கு என தனது நேரத்தை தேவையின்றி
செலவிடாது முழு நேரமும் எப்போது எங்கு கேட்டாலும்
அன்றைய தினம் நாள் நட்சத்திரம் மற்றும் அதன்
தொடர்ச்சியாக  சுப அசுப பலன்களை மிகச் சரியாகச்
சொல்லும்படி எப்போதும் தன்னை தயார் நிலையில்
வைத்திருக்கவேண்டும்.வைத்திருந்தார்கள்

இதுபோல் காலண்டர் இல்லாத காலங்களில்
எந்த நாட்டிற்குச் சென்றாலும் எப்போது கேட்டாலும்
மிகச் சரியாக நாள் நட்சத்திரத்தைச் சொல்ல
அவர்களுக்கு உதவியது இந்த நிலவின் சஞ்சாரமும்
அதை அறிந்து கொள்ள அவர்கள் அவர்களுக்கென
ஏற்படுத்திக் கொண்டிருந்த சில சம்பிரதாயங்களும்தான்

அதில் மிக மிக முக்கியமானது அவர்களின்
நித்திய கடமையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த
சந்தியாவந்தனம்தான் "எனச் சொல்லி நிறுத்தினான்

ஆவல் அதிகரித்தாலும் அவன் பாணியில்
அவனாகத் தொடர்வதே சிறப்பாக இருந்ததால்
நானும் அவனாகவே தொடரட்டும் என
மௌனமாய்க் காத்துக் கொண்டிருந்தேன்

(தொடரும் )

Saturday, July 27, 2013

ஆடியும் தம்பதிகள் பிரிந்திருத்தலும்,,,,(அவல்) (1)

ஆடி மாதம் தம்பதிகளை பிரித்து வைப்பதற்கான
காரணங்களை பலரும் பலவிதமாக விளக்கி இருந்தார்கள்

அதில் குறிப்பாக ஆடியில் சேர்ந்திருந்து கருத்தரித்தால்
சித்திரையில் குழந்தை பிறப்பிருக்கும்
கோடை வெய்யிலில் அது தாய்க்கு மிகுந்த
சிரமமாய் இருக்கும் என்பதுவும் ஒன்று

சமீபத்தில் ஜாதகம் பார்க்கும் நண்பர் ஒருவரை
சந்தித்து பேசிக் கொண்டிருக்கையில்
அதற்கு வேறு விதமாக விளக்கம் கொடுத்தார்

ஆடியில் கருத்தரிக்கிற பெண்ணுக்கு சித்திரையில்
குழந்தை பிறந்தால் அது மேஷ ராசியில்
பிறந்ததாக இருக்கும்

மேஷம் செவ்வாயின் ஆட்சி வீடு
அது சூரியனுக்கு உச்சவீடு
எனவே அந்த ராசியில் பிறப்பவன் நிச்சயம்
வீரமானவனாகவும் தலைமைப் பொறுப்பேற்பவனாகவும்
இருப்பான்,அதிலும் அதிகாலையில்  பிறந்து
லக்னமும் அதுவாக அடையப்பெற்ற்றவனாயின்
அவனுக்கு அரசனாகும் யோகம் கூட உண்டு

தேவையில்லாமல் அதற்கு எதற்கு சந்தர்ப்பம்
அளிக்கவேண்டும் என்பதற்காகவே
 மன்னர்களின் காலத்தில்
ஜோதிடர்களின் வழிகாட்டுதலின்படி தம்பதிகளைப்
பிரித்துவைத்தலை ஒரு சடங்காக சம்பிரதாயமாக
ஆக்கி நாமும் காரணம் தெரியாமல் அதைத் தொடர்ந்து
கொண்டிருக்கிறோம் என்றார்

ஒருவேளை அப்படியும் இருக்கலாமோ எனத்
தோன்றுகிறது எனக்கு

உங்களுக்கு ?

Thursday, July 25, 2013

கவிமூலம்

மெள்ள மெள்ளத் துள்ளிவரும்
வெள்ளியலை போலே-என்
உள்ளமெங்கும் இன்ப அலை
எல்லாம் உன்னாலே

தள்ளத் தள்ள மீதுவிழும்
பிள்ளைசுகம் போலே-வேறு
எண்ணம் வரஉந்தன் வண்ணம்
மேவும் தன்னாலே

மெல்ல மெல்லத் தித்தித்கிற
வெல்லக்கட்டி போலே-உன்னை
எண்ண எண்ண சுகம்சேர்க்கும்
பெண்ணே பொன்மானே

வெல்ல வெல்லத் தழைக்கின்ற
மூவாசைப் போலே- காலம்
செல்லச் செல்ல சுவைகூட்டும்
கண்ணே கலைமானே

உள்ளத் துள்ளே மலராக
மணக்கின்ற மாதே-உன்னை
எண்ணிச் சொல்லும் உளறல்கூட
நற்கவிதை ஆமே

Tuesday, July 23, 2013

எல்லைக்கோடு

வெகு நேரம் பேசி முடித்தபின்
இனி பேசுவதற்கு ஏதுமில்லை எனும்
நிலைக்கு உரையாடல் வர
இருவருக்கும் இடையில்
சிறு மௌனத்திற்குப் பின்
சட்டென கோடாரியாய்
வந்து விழும் "அப்புறம் "போல
அதைத் தொடர்ந்து வரும்
"சரி அப்புறம் பார்ப்போம்:" என்பதுபோல்

நிறைய எழுதிவிட்டு
இனி எழுதுவதற்கு ஏதுமில்லை என
உணர்வு எச்சரித்த போதும்
உள்ளம் நச்சரித்த போதும்
எழுதுபவர்கள் மட்டும்
நம் கடைமூடாது
பாம்பாட்டி காட்டும்
கீரிப்பாம்புச் சண்டையாய்
பம்மாத்து காட்டுவது எதனால் ?

விஷயம்  ஏதும் இல்லையெனினும்
சொல்லும்வித்தை தெரிந்த கர்வத்தினாலா ?
வாசகனின் முகக்குறிப்பை
எதிரே காண முடியாத சௌகரியத்தினாலா ?

Saturday, July 20, 2013

"வலி " தீர்க்கும் " வழி "

குளத்திற்கு குளிக்கச் சென்று
சேறு பூசி  வீடு திரும்பல் சரியா ?

கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்று
"நோட்டம் "விட்டுத் திரிவது முறையா ?

வேலைக்குச் சம்பாதிக்கச் சென்று
'சம்திங்கில் "கவனம் கொள்வது தெளிவா ?

சேவை செய்ய அரசியலுக்கு வந்து
"சுருட்டல் "நினைப்பில் திரிவது நெறியா

அதனைப் போலவே

கல்லூரிக்கு படிக்கச் சென்று
"காதல் வலையில் " சிக்கி வீழ்வது அறிவா ?

கல்லூரிக் காலங்களில்
அரசியலைப் புரிந்து கொள்வோம்
அரசியல் வேண்டாம் நமக்கு
அதற்கு காலம் நிறைய இருக்கு

கல்லூரிக் காலங்களில்
காதலையும் புரிந்து கொள்வோம்
காதல் வேண்டாம் நமக்கு
அதற்கும் காலம் நிறைய இருக்கு

மேற்ச்சொன்னவையெல்லாம்
ஜாதி மதம் கடந்து
அனைவருக்கும் பொதுவானவதே
இதனை தெளிவாய் யாவரும் அறிவோம்

வேதனையும் வலிகளுமற்ற
ஒரு புதிய விடியலை
இனியேனும் படைக்க முயல்வோம்

தடங்களும்  தடைகளுமற்ற
ஒரு புதிய வழியை
இனியேனும் வகுக்கத் துணிவோம்

Thursday, July 18, 2013

வாலி நீ வாழீ

நாளும்
பூமாலைத் தொடுத்து
தெய்வத்தின் திருமார்பில்
சூடிக் களித்தலே
வாழ்வெனக் கொண்டவனின்
பூதவுடலுக்கு
பூமாலைச் சூட நேர்வது அவலமே

நாளும்
பாமாலைச் சூடி
தமிழன்னை திருப்பாதம்
படைத்துக் களித்தலே
வாழ்வெனக் கொண்டவனே
உன்மறைவுக்கு
இரங்கற்பா பாட நேர்ந்ததும் அவலமே

என்றும்
மரபுக் கவிதையின் சந்த அழகையும்
வசன கவிதையின் இறுக்கத்தையும்
ஒன்றாக இணைத்துத் தந்த உன் கவித்துவம்
அனைவருக்கும் உவப்பாய் இருந்ததைப் போலவே

பழுத்த
ஆன்மீக வாதியாய் பகுத்தறிவு மேடைகளிலும்
பகுத்தறிவாளனாய் ஆன்மீகத் தளங்களிலும்
வேஷங்களின்றி ராஜ நடைபோட்டு நீ திரிந்ததும்
அனைவருக்கும் ஏற்கத் தக்கதாகத்தான் இருந்தது

கோரிக்கையாக அன்று நீ எழுதிய ஒரு பாடல்
பட்டிதொட்டியெல்லாம்
நாடு நகரமெல்லாம்
காலக்கணக்கற்று
ஆண்டவன் செவிகளைத் துளைக்க
இரண்டாவது முறையாகத்
தோற்க நேர்ந்தமைக்காக
 எமனவன் இன்று
பழிதீர்த்துக் கொண்டுள்ளான் பாவி

கல்லுக்குள் ஈரம்போல்
எருமை உயிர்  மரணம் பாசக்கயிறு என
எந்த நாளும் கடுமையாய்த் திரிந்து
மரத்துப் போன அவன் மனது
உன் இயைபுத் தொடையின் அழகிலும்
சிந்தனைச் செறிவின் உயர்விலும் மயங்கிட
அவசரப்பட்டு விட்டான் மடையன்

ஆயினும்
மெய்யென்று  மேனியை
யார் சொன்னது எனச் சாடிய உனக்கு
புகழுடலே மெய்யெனப் புரியாதா இருக்கும் ?

கவியால்
தமிழோடு தமிழாகக் கலந்து
காலம் கடக்கும் உனக்கு
மரணமில்லை என்பது தெரியாதா இருக்கும் ?

வாலி நீ வாழீ

Monday, July 15, 2013

குறைப் பிரசவம்....

எண்ணிக்கையும் தரமும்
இரு துருவங்களாய்
எதிர் எதிர் நின்று வாதாட

குழப்பத்திற்கும்
தெளிவிற்கும் இடையில்
சிந்தனை தடுமாறித் திணற

வார்த்தைகளும் கருவும்
நீரும் எண்ணையுமாய்
ஒட்டாது விலகி விலகி வெறுப்பேற்ற

உடல்போலும்
உயிர் இருப்பது போலும்
தெரித்து விழுகிறது ஒருகவிதைப்  பிண்டம்

விலக்கவும் திறனற்று
ஏற்கவும் மனமின்றி
தடுமாறித் தத்தளிக்கிறது கவித்தாய்மனம்

Thursday, July 11, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி ( 20 )

நேரம் ஆக ஆக நாங்கள் அமர்ந்திருந்த பெஞ்சில்
வெய்யில் ஆக்கிரமிக்கத் துவங்க,
இனியும் காலதாமதமாகக் கிளம்பினால்
சாப்பாட்டிற்குள் வீடு வந்து சேருவது கடினம் என
கணேசனிடம் வற்புறுத்திச் சொல்லி என் வண்டியில்
ஏற்றிக் கொண்டு நாகமலை நோக்கிக் கிளம்பினேன்

எங்கள் வரவை எதிர்பார்த்து கணேசனின் நண்பர்
வாசல் திண்ணையிலேயே காத்திருந்தார்.

நாங்கள் சென்றவுடன் எங்களை நல்லவிதமாக
வரவேற்றுகுடும்ப உறுப்பினர்களை அறிமுகம்
செய்துவைத்து பின்அவர் புதிதாகக்
கட்டிக் கொண்டுள்ள வீட்டையும் சுற்றிக்
காட்டி அவர் எழுதிவைத்திருந்த கடன் பத்திரத்தை
படிக்கக் காட்டி நாங்கள் சம்மதம் எனச்
சொன்னவுடன்கையொப்பமிட்டும் கொடுத்தார்

கணேசனின் நண்பர் பேச்சுவாக்கில்
 தனது மூத்தவன்ஒன்பதாவது  படிப்பதாகவும்
 பெண் ஏழாவது படிப்பதாகவும்
இப்போது வீடு கட்டினால்தான் பையனின் படிப்பு
 மற்றும்பெண்ணின் திருமணத்திற்கு திட்டமிட
வசதியாக இருக்கும்என சொன்ன விஷயம் அவர் எல்லா விஷயங்களையும்திட்டமிட்டு மிகச் சரியாகச்
செய்பவராகப் பட்டது

நாங்கள் வீட்டிற்குத் திரும்புகிற வழியில் கணேசன்
இந்த விஷயத்தையே குறிப்பிட்டுச் சொல்லி
"நானும் இதே ஐடியாவிலதான் மிகச் சரியாகத்
திட்டமிட்டு அடுத்த வருடம் வீடு கட்டலாம என
முடிவு செய்து மனைவி மற்றும் குழந்தைகள்
விரும்பிக் கேட்ட சின்ன சின்ன ஆசைகளைக் கூட
செஞ்சு தராம இடமும் வாங்கி ஆரம்பச்
செலவுகளுக்காக இரண்டு லட்சமும் சேர்த்தேன்.
இப்பப் பாரு எல்லாம் பகல் கனவு மாதிரி ஆகப் போகுது "
என வருத்தப்பட்டுக் கொண்டே வந்தான்

நாங்கள் வீடு வந்த சேர மதியம்
இரண்டரை மணியாகிவிட்டது

எங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருந்ததைப் போல
நாங்கள் வந்ததும் குழந்தைகள் மற்றும் எங்களுக்கும்
வரிசையாக வாழை இலை போட்டு சாப்பாடு பரிமாறத்
துவங்கினாள் என் மனைவி

இரண்டு கறி கூட்டு வடை பாயாசம் என ஒரு
விருந்து சாப்பாடே சமைத்திருப்பதைப் பார்த்து
கணேசன் "அக்கா இவ்வளவு எதுக்கு செஞ்சீங்க
நான் என்ன நம்ம வீட்டுக்கு விருந்தாளியா. "என்றான்

எனக்கு கூட  அவன் கேட்பது சரியெனவேப்பட்டது

குனிந்தபடி பரிமாறிக் கொண்டிருந்தபடி மனைவி
மெல்ல நிமிர அவள் முகத்தில் அத்தனை சந்தோஷம்
"என்னங்க்க அண்ணே அப்படிச் சொல்லிட்டீங்க
தலைக்கு வந்த சனியன் தலைப்போகையோடு
போனதுன்னு நாங்க எல்லாம் எவ்வளவு
சந்தோஷப்பட்டோம் தெரியுமா /
நீங்க  ஆம்பளைங்க எல்லாம் சந்தோஷம்னா
உடனே ஃபிரண்ட்ஸ்களோட வெளியே
 கொண்டாடுறதைப்பத்தி யோசிப்பீங்க
பொம்பளைங்களுக்கு தெரிஞ்சது எல்லாம்
தன்னை அழகு படித்திக்கறதும்
இப்படி வகை வகையா சமைச்சுப் சாப்பிடவைச்சு
ரசிக்கிறதுதானே "என்றாள்

அவள் சொல்வது எனக்கு நறுக்கெனச் சுட்டது
நான் குனிந்தபடி கணேசனைப் பார்க்க
அவன் கண்கள்கலங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது

சாப்பிட்டு முடித்து சிறிது ஓய்வெடுக்கலாம் என
எனது அறையில் கணேசனை சோஃபாவில்
அமரவைத்து நான் அருகில் சேரில் அமர்ந்து கொள்ள
சிறிது நேரம் மௌனமாக இருந்த அவன்
"அப்பா அம்மா குழந்தைகள் விஷயத்தில்
மிகச் சரியாக நடந்து கொள்கிற மிகச் சரியாக
அவர்களைப் புரிந்து கொள்கிற பெரும்பாலான
ஆண்கள் மனைவி விஷயத்தில் தான்
சரியாக நடந்து கொள்வதும் இல்லை
அவர்களை மிகச் சரியாகப் புரிந்து கொள்வதுமில்லை"
என்றான்  அழுத்தம் திருத்தமாக

கணேசன் அவன் அவன் மனைவி சம்பத்தப்பட்டே
இது குறித்து விரிவாகச் சொன்னாலும் அது
என் சம்பத்தப் பட்டதுமட்டுமல்ல நம் அனைவரின்
சம்பத்தப்பட்டது போலவே பட்டது எனக்கு

(தொடரும் )

Monday, July 8, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவோடி ( 19 )

வாழ்வில் சில சமயங்களில் நாம் எதிர்கொள்கின்ற
கேள்விகள் பதில்களை எதிர்பார்க்காதவைகளே
அதனுள்ளேயே மிகச் சரியான
பதில்களைக் கொண்டவைகளே

கணேசனின் கேள்வியும் அத்தகையதுதான்
என்பதால் நான் பதிலேதும் சொல்லவில்லை
அவனே தொடர்ந்தான்

"டாக்டர்கள் எவ்வளவுதான் மறைச்சும்
நம்பிக்கையூட்டும்படியாகப் பேசினாலும்
அவங்க என்னோட நோயின் தீவிர பாதிப்பை
மிகச் சரியாகக் கணித்துவிட்டார்கள் என்பதுல
எனக்கு சந்தேகமில்லடா.

முட்டாள்தனமான நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு
பின் அவதிப்படுவதற்குப் பதிலா அவநம்பிக்கையில்
முழுமையான நம்பிக்கை வைச்சு அதைத் தொடர்ந்து
செய்ய வேண்டியவைகளை மிகச் சரியாகச்
செய்றதாக முடிவெடுத்துவிட்டேன்

எனக்கே நான் மூன்று மாசத்தை டெட் லைனாக
வைச்சுக்கிட்டு எதை எதை அதுக்குள்ளே
நான்  இருந்து அவசியம் செய்ய வேண்டுமோ
அதையெல்லாம் தாமதம் செய்யாமல்
இன்று புதிதாய்ப் பிறந்தஉற்சாகத்தோடு மட்டுமில்லாம
இன்றே போய்ச்சேரப் போகிற மனோபாவத்தோடும்
செய்றதாக தீமானிச்சுட்டேன்

இப்படி ச் செய்யறதாலே
மூன்று மாசங்களுக்குப் பின்னால் நான் இருந்தா
எனக்கு நஷ்டம் ஏதும் இல்லை.லாபம்தான்
நான் இல்லையானா நிச்சயம் அதனால
இருக்கிறவங்களுக்கு லாபம்தான் "என்றான்

இப்படி அனைத்திலும் ஒரு தீர்மானமான முடிவுடன்
இருப்பவனிடன் நான் என்ன பேசுவது ?
கேட்டுக் கொண்டிருப்பதைவிட வேறு வழி எனக்குத்
தெரியவில்லை

சிறிது மௌனத்திற்குப் பின் அவனே தொடர்ந்தான்

"முதல் வேலையா டாக்டர்கிட்டே மூணு மாசத்துக்கு
மெடிகல் சர்டிஃபிகேட் வாங்கினேன். அதை ஆபீஸில்
கொடுத்துவிட்டு அப்படியே என்னுடய
 ரிட்டெயர்மெண்ட்டெத் பெனிஃபிட் நாமினேசனை
அப்பா பேரில் இருந்து மனைவி பேருக்கு மாத்திட்டு
 செர்விஸ் ரெஜிஸ்டரை தரோவா செக் பண்ணினேன்.
ரெண்டுசர்விஸ் வெரிஃபிகேசன் விட்டு இருந்தது
அ தைச்  சரி பண்ணினேன்

எதுக்கும் இருக்கட்டும்னும் ஜி பி எஃப் யில் ஒரு
முக்கால் சதவீத லோனுக்கு அப்பளை பண்ணினேன்
ஆபீஸைப் பொருத்தமட்டில் ஓரளவு எல்லாம் ஓ கே

அடுத்து வெளியே ஃபைனான்ஸ் விஷயம்
நான் அஞ்சும் பத்துமா வெளியே தர
வேண்டியவங்களுக்குஎல்லாம் தந்து முடிச்சிட்டேன்,
இனி எனக்கு வரவேண்டியதை
சரி செய்ய வேண்டியதுதான் பாக்கி.
சின்னத் தொகையைப்பத்திப் பிரச்சனையில்லை
.மூணு மாசத்திலே வாங்கிக்கலாம்
பெரிய தொகை ஒண்ணு என் நண்பன் கிட்டே இருக்கு
அவன் வீடு கட்டிக்கிட்டு இருக்கான்,அதுக்காக
 கைமாத்தாவட்டியில்லா கடனா வாங்கினான்
,நான் அடுத்த வருடம்வீடு கட்டும்போது
 டபுளா அவன் கடன் தருவதாப் பேச்சு
இப்பத்தான் இப்படி ஆகிப்போச்சே

ஆகையினாலே கிரஹப் பிரவேசம் முடிந்ததும்
கடன் கொடுத்த தொகையை உன்கிட்டே
கொடுக்கும்படியும்நான் இப்போது அவசரம்
என்பதால் உங்கிட்டே வாங்கிட்டதாகவும் சொல்லி
 உன் பேருக்கு ஒருபத்து ரூபா பத்திரத்திலே
எழுதிக் கொடுக்கும்படியா சொல்லி இருக்கேன்
.அவனும் சரின்னு சொல்லி இருக்கான்
இப்போ அதை வாங்கத் தான் போறோம் "என்றான்

நான் மௌனமாய் தலையாட்டினேன்

"ஆபீஸிலே கல்யாணம் ஆன உடனே நாமினேஷனை
மாத்தி இருக்கணும்,அப்ப அப்ப வருஷா வருஷம்
சர்விஸ் ரெஜிஸ்டெரை  செக் பண்ணி இருக்கணும்
எல்லாம் பாத்துக்கிரு வோம்ன்னுதா ன்பதினைந்து
வருஷமா எவ்வளவு அசால்ட்டா  இருந்திருக்கேன்

ஆபீஸில் கூடத் தேவலாம்டா இரண்டு நாளில்
சரி செய்துட்டேன், குடும்ப விஷயத்தில தான்
நிறைய விஷயங்களைச் செய்யாமல் விட்டு
எல்லோரையும் போல எவ்வளவோ
குழப்பி வைச்சுருக்கேன்.அதை இரண்டு மாசத்திலே
நோய் கடுமையாகறதுக்குள்ளேசரிப்படுத்தணும்டா
அதையும் ஆபீஸ் விஷயத்தைப்போல சரிபண்ணிட்டா
எனக்குப்  நிச்சயம் சாவுப்பயம்  இல்லாம போயிரும்டா

நானும் தைரியமா எமனோட விளையாட உறவாட
முடிஞ்சா மார்க்கண்டன் மாதிரி மல்லுக்கட்டக் கூட
தயாராயிருவேண்டா " என்றான்தைரியமாக

எனக்குத்தான்   உதறல்  கூட ஆரம்பித்தது

(தொடரும் )

Saturday, July 6, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (18 )

கணேசன் வெளியே கிளம்பலாம் எனச் சொன்னதும்
நானும் உடனடியாக கிளம்ப ரெடியாகிவிட்டேன்.
அவன் வெளியில் சாப்பிடமாட்டான் ஆகையால்
இருவருமே சாப்பிடும்படியாக மதியம் சாப்பாடு
தயார்செய்யும்படி மனைவியிடம் சொல்லிவிட்டு
அவன் வண்டி ஓட்டி சிரமப் படவேண்டாம் என
எனது வண்டியிலேயே பின் சீட்டில்
அவனை ஏற்றிக் கொண்டு"எந்தப் பக்கம் போகணும்"
என்றேன்

"டேய் நாம நாகமலைப்புதுக்கோட்டைவரை
ஒருஅலுவலக நண்பரைப் பார்க்கப் போகணும்,
அதற்கு முன்னால்உன்னிடம் கொஞ்சம் பேசணும்
.போகிற வழியில்ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள
பூங்காவில் கொஞ்சம் நிறுத்து,
பேசிவிட்டுப் பின் போகலாம் :என்றான்

மதுரை  டி வி எஸ் நகரில் உள்ள அந்தப் பூங்கா
மதுரை முக்கியப் பிரமுகர் சிபாரிசில்
அமைக்கப்பட்டதோடுஅல்லாமல் அந்த நகர்
குடியிருப்பு வாசிகளும்கொஞ்சம் சமூக சிந்தனை
உள்ள மனிதர்களாக இருப்பவர்கள் ஆதலால்
அந்தப் பூங்கா கொஞ்சம் நல்லவிதமாகவே இருக்கும்
,
யார்  தொந்தரவும் இல்லாமல் மனம் திறந்து பேச
அந்தப் பூங்கா மிகச் சரியான இடம்தான்

வண்டியை பார்க் ஓரம் பார்க்செய்து விட்டு
வெய்யில் வர வாய்ப்பு இல்லாத ஒரு பெஞ்சில்
இருவரும் அமர்ந்து கொண்டோம்

வழக்கம்போல சிறிது மௌனம்  காத்து பின்
பேசத் துவங்கினான்.

"உன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்னு நானே
நாம் வந்த மறு நாளே இங்கே டாக்டரைப் பார்த்தேன்
அவரும் ரிபோர்ட்டையெல்லாம் படித்துவிட்டு
கொஞ்சம் சீரியஸான நிலைதான்,ஒரு மூன்று
மாதத்திற்கான மருந்துகளை டாக்டர்
கொடுத்திருப்பதாகவும் அதைச் சாப்பிட வேண்டிய
அளவும் முறையும் சொன்னார்.

சாப்பிடுகையில் உடல் ரீதியாக மோசனில்
அல்லது முழுங்குவதில் அல்லது வாந்தி ஏதும்வந்தால்
உடன் அவரைச் சந்திக்கும்படியும் சொன்னார்

நான் டாக்டரிடம் ஓபனாகவே கேட்டுவிட்டேன்
சார் சென்னை டாக்டர் சொன்னதைவைத்தே நான்
மரணத்தைச் சந்திக்கத் தயாரகிவிட்டேன்
அதனால்தான் வேறு அசுர டிரீட்மெண்ட் எல்லாம்
வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன்.ஆகையால்
தயவு செய்து எனக்குள்ள கிரேஸ் டைம்
எவ்வளவுன்னுமட்டும் சொல்லுங்கள் டாக்டர்"
என்றேன்

அவருக்கு சட்டென கோபம் வந்துவிட்டது
ஆனாலும் என் மேல் இரக்கப்பட்டோ என்னவோ
கொஞ்சம் பொறுமையாக "தம்பி டாக்டர்கள்
எல்லாம் கடவுள்கள் இல்லை
நாங்கள் சொல்வதெல்லாம் வேத வாக்கும் இல்லை
கடைசி நொடி வரை நாங்கள் நோயாளியைக் காக்கப்
போராடவும் கடைசி மூச்சுவரை நோயாளிக்கு
நம்பிக்கையூட்டவும்தான் படித்துவந்திருக்கிறோம்
எனவே இப்படியெல்லாம கேள்வி கேட்காமல்
ஒழுங்காக மருந்து சாப்பிட்டு சொல்கிறபடி
டயட்டில் இரு.

கூடுமானவரையில் குடலுக்கு
சிரமம் தர வேண்டாம்.

மஞ்சள் காமாலை அல்லது
விடாத வயிற்றுப்போக்கு வரும்படியாக ஆனால்
கொஞ்சம் சிரமம்தான் என்றார் "எனச் சொல்லி
நிறுத்தினான்

"சரி அதைவிடு இப்போ போற வேலைக்குக்
கிளம்பலாமா ? அங்கே எதுக்குப் போறோம்னு
முதலில் சொல்லு "என்றேன்

அவன் சிரித்தபடி "அதற்குள் அவசரப்பட்டால் எப்படி ?
நீயும் கிரிக்கெட் பிளேயர்தானே நான் சொல்வதற்கு
மட்டும் பதில் சொல்லு.
கடைசி ஒரு பால் மட்டும் இருக்கு
ஜெயிக்க ஆறு ரன் வேண்டியிருக்கு
தடுத்து ஆடுவது புத்திசாலித்தனமா ?
அல்லது ஆனது ஆகட்டும் என அடித்து ஆடுதல்
புத்திசாலித்தனமா ?" என்றான்

இந்தக் கேள்விக்கு பதில் நிச்சயம் ஒன்றுதான்
என்பதால் அவன் முடிவும் எப்படிப்பட்டதாக இருக்கும்
என யூகிக்க முடிந்ததால் எனக்குள் பயம்
விஸ்வரூபம் எடுக்கத் துவங்கிவிட்டது

(தொடரும் )

Thursday, July 4, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (17 )

இரவு நான் வீடு வந்து சேர வெகு நேரம்
ஆகிவிட்டபடியால் மனைவி அதிகமாக எதுவும்
கேட்டுக் கொள்ளவில்லை

.காலையில் காபி குடிக்கும் வேளையில் கணேசன்
தன் மனைவியிடம் சொன்னதைப்போலவே
நல்லவிதமாகவும் நம்பிக்கையூட்டும்விதமாகவும்
பட்டும்படாமலும் சென்னை சென்று வந்த
விஷயம் குறித்து சொல்லிவைத்தேன்.

அவள் நம்பிய மாதிரியும் தெரியவில்லை
நம்பாதது மாதிரியும் தெரியவில்லை.

கடந்த ஒரு வாரமாக கணேசன் விஷயமாகவே
நினைத்துக் கொண்டிருந்ததாலும் அவன் சம்பந்தப்பட்ட
காரியங்களையே செய்து கொண்டிருந்ததாலும்
என் வீட்டிற்குரிய எந்தக்கடமையையும் செய்யாததன்
பாதிப்பு எனக்கே நன்றாகத் தெரிந்தது

நீர் ஊற்றாத பூச்செடிகள் ,மார்கெட் போகாததால்
காலியாகிக் கிடந்த பிரிட்ஜ்,இரண்டு வேளையும்
பஸ்ஸில் போய் வந்ததால் குழந்தைகள் முகத்தில்
கண்ட வாட்டம்,தனியாக அவ்வளவாக
இருந்து பழகாததால் மனைவி கொண்டிருந்த
மனவருத்தம் காட்டும் முகம் எல்லாம் என்னை
கொஞ்சம் சங்கடப்படுத்தியது

இந்த வாரத்தில் அனைத்தையும் சரிப்படுத்திவிடுவது
என்கிற முடிவுடன் அலுவலகம்  புறப்பட்டேன்

அலுவலகம் வந்ததும்தான் என் உயரதிகாரி அவர்
பென்ஷன் விசயமாக சென்னை அலுவலகத்தில்
விசாரித்து வரச் சொன்ன ஞாபகமே வந்தது
சட்டென என்ன பொய் சொல்வதெனத் தெரியவில்லை
அந்த செக்சன் கிளார்க் லீவு எனச் சொல்வதுதான்
சரியாக இருக்கும் என எண்ணிக் கொண்டு
நான் அவர் அறைக்குள் நுழைந்ததும்
அவரே சந்தோஷமாக
"ரொம்ப நன்றி ரமணிசார்.ஹெட் ஆபீஸில் இருந்து
ஃபார்மல் சேங்ஸன் லெட்டர் வந்துவிட்டது
அவ்வளவு வேலையிலும் இதையும் பார்த்து
வந்ததற்கு மிக்க நன்றி "என்றார்

எனக்கு என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை
"உங்கள் வேலையும் முக்கியமான வேலைதானே சார்"
என சமாளித்து என் அறைக்கு வந்தேன்

இதைப்போலவே கணேசன் நோயும் சரியாகிப்
போய்விடாதா தமிழ் சினிமாவில் சினிமா
முடிகிற வேலையில் ஏதோ ஒரு எஃஸ்ரே படத்தைத்
தூக்கிப்பிடித்து " ஓ மை காட் வாட் எ
மெடிகல் மிரேக்கிள்"
எனச் சொல்லி எல்லா நோயும் காணாமல்
போய்விட்டதைப்போல  சொல்வார்களே அதைப்போல
கணேசன் விஷயத்திலும் ஏதேனும் நடந்து விடாதா
எனக் கூட எனக்குள் ஒரு பேராசைகூட வந்தது

அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் அவனை
வீட்டில் சந்தித்துப் பேசிப்போகலாம் என நான்
நினைத்துக் கொண்டிருக்கையிலேயே அவன்
மூன்று நாள் தனக்கு முக்கியமான வேலை
இருப்பதாகவும் நானும் கொஞ்சம் ஃபிரீயாக
வீட்டு வேலை களையும் அலுவலக வேலை களையும்
பார்க்கும்படியும் அவனே போன் செய்தான்

வெள்ளிவரை அவனைப் பார்க்கவில்லையாயினும்
எனது அன்றாட நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும்
அவன் நினைவே வந்து கொண்டிருந்தது
இரவு தூக்கத்தில் கனவில் கூட ஏதோ ஒரு
விதத்தில் அவன் வந்து போய்க் கொண்டே இருந்தான்
வந்த விதம் எதுவும் மகிழ்வூட்டுவதாக
இல்லை என்றாலும் அவன் வருவது மட்டும்
தொடர்ந்து கொண்டுதான் இருந்தது

அவன் சனிக்கிழமை காலை போன் செய்தபடி
காலையிலேயே  வீட்டிற்கு வந்து விட்டான்.
முடிவெட்டி சேவிங் செய்து புது மாப்பிள்ளை போல
அருமையாக டிரஸ் செய்து வந்ததைப் பார்க்க
போன வாரம் பார்த்த கணேசனா என என்னாலேயே
நம்ப முடியவில்லை.நான்தான் சீக்காளியைப்
போலிருப்பதாக எனக்கே பட்டது

கொஞ்ச நேரம் என் மனைவியிடமும்
குழந்தைகளிடமும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டு
என்னைப் பார்த்து  " கிளம்புடா  வெளியே
கொஞ்சம் அவசர வேலை இருக்கு " என்றான்

(தொடரும்

Tuesday, July 2, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (16 )

நாங்கள் எப்போது சென்னையில் இருந்து
திரும்ப வேண்டியிருக்கும் எனபது எங்களுக்கே
திட்டவட்டமாகத் தெரியாதாகையால் ஊர் திரும்ப
முன்பதிவு ஏதும் செய்யவில்லை.அது கூட
ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று

திருச்சிவரை டிக்கெட் எடுத்து ஸ்ரீரங்கம்
திருவானைக்காவல் கோவில்கள் போய் விட்டு
பின் மதுரை பஸ் பிடித்தோம்

முன்பெல்லாம இது போல் கோவில் குளங்கள்
போவதென்றால் அவ்வளவு விரும்பமாட்டான்
இப்போது அவனாகப் போகவேண்டும் என
விரும்புவது மட்டுமல்லாது
ஒவ்வொரு இடத்தையும்இதுதான் கடைசி முறையாகப்
பார்ப்பது போலப் பார்ப்பதையும்
பழகுபவர்கள் பேசுபவர்கள் எல்லோரிடத்தும்
இனிமேல் பார்க்கப் போவதில்லை பேசப்போவதில்லை
இதுதான் கடைசி என்பதுபோல் பேசுவதும்தான்
என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை

இரவு பத்து மணி அளவில் வீடு வந்து சேர்ந்ததும்
குழந்தைகள் இருவரும் ஓடிவந்து அப்பாவை
வாசலிலேயே கட்டி அணைத்துக்  கொண்டார்கள்
அவனுடைய மனைவி இருவரின் பையையும்
வாங்கி உள்ளே வைத்து நாங்கள் சேரில்
அமர்ந்ததும் எங்கள் கீழ் நாங்களாக என்ன என்ன
நடந்தது எனச் சொல்லட்டும் என்பது போல
அருகில் அமர்ந்து கொண்டார்.

ஏற்கெனவே தொலைபேசியில்
பயப்படும்படியாக ஏதும் இல்லை ஆரம்ப நிலைதான்
என்பதால் சுலபமாக குணப்படுத்துவிடமுடியும் என
டாக்டர் சொல்லியதாகச் சொல்லி இருந்ததால்
அவர் மனைவியிடம் அவ்வளவு பதட்டமில்லை

நானாக ஆரம்பித்தால் எதுவும் உளறிவிட
சந்தர்ப்பமுண்டு என்வே அவன்முதலில்
ஆரம்பிக்கட்டும்அவன் சொல்வதற்கு ஏற்றபடி
பேசிவிடலாம் என நானும்காத்திருந்தேன்.

அவனுக்கும் சட்டென மனைவியின் குழந்தைகளின்
முகத்தைப் பார்த்ததும் எப்படி ஆரம்பிப்பது என
குழப்பமைடைந்தானோ என்னவோ
"நல்லவேளை உடனே சென்னை போனது
நல்லதாகப் போயிற்று,இன்னும் இரண்டு மூன்று
மாதம் தாமதித்துப் போயிருந்தால் கொஞ்சம்
கஷ்டப்படவேண்டியிருக்கும்,
அதைப்பற்றியெல்லாம் காலையில் விரிவாகப்
 பேசிக் கொள்ளலாம்முதலில் அந்த சூட்கேஸை எடு "
எனச் சொல்லிஅதனுள் இருந்த மனைவிக்கு
வாங்கிய சேலையும் குழந்தைகளுக்கு  வாங்கிய
 டிரஸ்ஸையும்வெளியே எடுத்தான்

அதனைக் கண்ட அவனது மனைவியும்
குழந்தைகளும்ஏதோ காணாத அதிசயத்தைக்
கண்டதைப்போலஆச்சரியப்பட்டு
முழு வாயைத் திறந்து" வாவ் "எனக் குரல் எழுப்ப
அது எனக்கு மிகுந்த ஆச்சரியமாகஇருந்தது.

மேலும் அவர் மனைவி
 "உங்களுக்கு என்னங்க ஆச்சு"\எனக் கேட்டது
என் ஆச்சரியத்தைஇன்னும் அதிகப்படுத்தியது

"என்னடா ஒரு டிரஸ்ஸுக்கு இப்படி அதிகமா
 பில்டப்தர்றாங்க.நீ எங்கேயும் போனா எதுவும்
வாங்கி வரமாட்டாயா"என்றேன்
 பொறுக்கமாட்டாமல்

அவன் பதிலேதும் பேசாது இருக்க அவர் மனைவியே
தொடர்ந்தார்

"என்னங்க  அண்ணே அடையாரிலே ஆலமரம்தானே
இருக்குன்னு சொல்வாங்க,போதி மரம் கூட இருக்கா "
என்றார்

எனக்கு எதற்கு இப்படி கேட்கிறார் எனப் புரியவில்லை

பின் அவரே தொடர்ந்தார்."நான் சிறுவயதில் இருந்து
அம்மனுக்கு விரதம் இருந்து தீச்சட்டியெல்லாம்
 எடுப்பேன்எனக்கு அந்த சிவப்பு பாவாடை
 சட்டை தாவணி சேலைஎன்றால் ரொம்ப இஷ்டம்
.கல்யாணம் ஆகி இரண்டுசேலை கூட கொண்டு வந்தேன்.
ஒரு ஆடி வெள்ளிக் கிழமை அந்த சேலையைக் கட்டி
இவரோடு அம்மன் கோவிலுக்கு நான் கிளம்ப இவருக்கு
வந்ததே கோபம்,ஏதோ ராக்கம்மா மூக்கம்மா மாதிரி
பட்டிக்காட்டுக்காரி மாதிரி இருக்குன்ன்னு ஒரே கத்தல்
எங்க அப்பா கூட பயந்து போய் அந்த ரெண்டு
சேலையைக் கூட ஊருக்கே தூக்கிட்டுப்போயிட்டாரு
இப்ப என்னன்னா அவரே அந்த சேலையை வாங்கி
வந்திருந்தா ஆச்சரியமா இருக்காதா ?

இந்தப் பையனும் மூணு தீபாவளிக்கு ஜீன்ஸ் கேட்டு
அலுத்துப் போனான்,அதெல்லாம் காலேஜ் போறப்ப
பாத்துக்கலாம்னு சொல்லிட்டாரு

பொண்ணுக்கும் அப்படித்தான் இந்த மாடர்ன்
 டிரஸ்செல்லாம்இப்பவே வேண்டாம் பழகிட்டா
அப்படியே போயிரும்அவளுக்கு வாய்க்கிறவன்
 அதையெல்லாம் விரும்பாதவனா
இருந்தா அதுவே பிரச்சனையாயிடும்னு சொல்லி
இதுவரை வாங்கித் தரவே இல்லை

இப்ப என்னடான்னா அப்படியே தலைகிழா
 மாறினவராட்டம்இப்படி வாங்கிவந்தால்
ஆச்சரியமா இருக்காதா
நீங்களே சொல்லுங்கள் "என்றார்

ஒரு சோகமான சூழலாக  இல்லாமல்
சட்டென இந்த டிரஸ் விஷயத்தால் ஒருசுமுகமான
சூழல் உருவானதால்  நானும் இயல்பு நிலைக்கு வர
ஏதுவாக இருந்தது

நாளை பார்ப்போம் எனச் சொல்லி அவர்களிடம்
விடைபெற்றுக் கொண்டு எனது
வீட்டிற்குப் புறப்பட்டேன்

டிரஸ் விஷயத்தில் மட்டுமல்ல
 அனைத்து விஷயத்திலும்
அவன் தீர்மானமான முடிவோடு இருப்பது
போகப் போகத்தான் புரிந்தது

(தொடரும் )