Wednesday, December 30, 2015

தொடர் பயணம்

சமதளமாய்
காலடியில் கிடக்கிறது
எட்டிவிட்ட சிகரம்

ஒரு அடையாளமாய்
சேர்ந்தே இருக்கிறது
அடைந்துவிட்ட இலக்கும்

சிகரத்தை அடைவது
ஓய்ந்துச் சாய இல்லை

கொஞ்சம் ஓய்வெடுத்து
மீண்டும் துவங்கவே என்பதில்
தெளிவாய் இருக்கிறேன்

வெகு கவனமாய்
சிகரத்தில்  கிடைத்த
கிரீடங்களையும் மாலைகளையும்
உடலிலிருந்தும் மனத்திலிருந்தும்
இறக்கி வைத்து
என்னை எளிதாக்கிக் கொள்கிறேன்

ஏனெனில்
ககமான பயணத்தை
சீரழிக்கும் முதல் எதிரி
 கூடுதல் சுமைகளே என்பதில்
எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை

தேடலும் பயணிப்பதுமே
வாழ்க்கையேயன்றி

ஒன்றை அடைதலும் இல்லை
ஒன்றில் அடைதலும் இல்லை

இதில்  எனக்கு எவ்வித குழப்பமுமில்லை

மீண்டும் பயணிக்கத் துவங்குகிறேன்

எதிரே சவாலாய்த தெரிகிறது
வானை  முட்டி நிற்கும் 
அந்த நெடிய சிகரம்

(அனைவருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்  )

இனிய செய்தி

நமது 324 பி 3 அரிமா மாவட்டத்தில்
 மண்டலம் சி யில்  நமது 9 வட்டாரமே புதிய
அங்கத்தினர்கள் சேர்க்கையில்
முதன் மையாக உள்ளது  என்பதைப்
பதிவு செய்வதில்   பெருமை கொள்கிறேன்

அதற்குக் காரணமான
நமது  வட்டாரத்தைச் சார்ந்த
தலைவர்/ செயலாளர் /பொருளாளர்
மற்றும் அரிமா நண்பர்கள் அனைவருக்கும்
எனது மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்

மிகக் குறிப்பாக  இரண்டு  புதிய
சங்கங்களை   தோற்றுவித்ததன் மூலம்
46 புதிய உறுப்பினர்களைச்  சேர்த்த
மதுரை டிலைட்  அரிமா சங்க
அரிமாக்களுக்கும் ,நிர்வாகிகளுக்கும்....

அதற்கு மிக்க உறுதுணையாய்  இருந்த
முன்னாள்  ஆளுநர்  லயன் த.பாண்டியராஜன்
பி.எம்.ஜே எப் மற்றும்  மண்டலத் தலைவர்
லயன்.எ மோஹன்  எம்.ஜே எப் அவர்களுக்கும்
 மனமார்ந்த நன்றி

அனைவருக்கும்  இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்

எஸ் வேங்கட சுப்ரமணியன்
வட்டாரத் தலைவர்     சி 9


My Info
  • 2015 - 2016 Zone Chairperson
    S Venkatasubramanian (3887765)
    Club
    Madurai Delight (121291)
    Member Correspondence Address
    MIG 30 5th Main Road
    Villapauram Housing Board Colony
    Madurai T N,
    625011
    Officer Correspondence Address
    MIG 30 5th Main Road
    Villapauram Housing Board Colo
    Madurai T N,
    625011
    E-mailsvramani08@gmail.com
My Members
Statistics Updated 12/30/2015 3:01 PM
  • This Month
    This Year
    Opening Balance
    200
    181
    Added Members
    1
    52
    Dropped Members
    0
    32
    Closing Balance
    201
    201
    Net Gain/Loss
    1
    20

புத்தாண்டு முதல் சுகவாழ்வு காண்போம்

சக்தி இருந்தும்
சமாதானமாய்

வசதி இருந்தும்
எளிமையாய்

அதிகாரமிருந்தும்
பணிவாய்

அறிவிருந்தும்
அடக்கமாய்

நியாயமிருந்தும்
பொறுமையாய்

பாண்டித்தியமிருந்தும்
மிக இயல்பாய்

மொத்தத்தில் ....

சந்தோஷத்தில்
துள்ளாது

சஞ்சலத்தில்
துவளாது

இருப்பவன்
அகராதியில்

என்றும்

வெற்றியன்றி
தோல்வியில்லை

சுகமன்றி
சங்கடங்களில்லை

இயற்கையின்
என்றும் மாறா

நியதி  இதனை

மனதில் தெளிவாய்
மறையாய்க் கொள்வோம்

புத்தாண்டு முதல்

வாழ் நாளெல்லாம்
சுகவாழ்வு கொள்வோம்

Tuesday, December 29, 2015

"சகாயங்கள் "குறித்து ....

மாற்றி யோசிக்க
ஆரம்பித்து விட்டோம்

இல்லாத இடத்திலேயே
தேடிக் கொண்டிருந்ததும்

குறுகிய வட்டத்துக்குள்ளேயே
தேடிக் கொண்டிருந்ததும்

எத்தனை தவறென்று உணர்ந்து

மாற்றி யோசிக்க
ஆரம்பித்துவிட்டோம்

அதனால்தான்
உங்களைப் போல்
"அசகாய " சூரர்கள்
வேண்டியதில்லையென்றும்

கட்சியில்லையெனினும்
தனித்தவரெனினும்
"சகாயங்கள் "குறித்து
சிந்திக்கத் துவங்கிவிட்டோம்

ஊடக நாடகங்கள்
ஆரவார ஆர்ப்பாட்டங்கள்
திருமங்கலம் ஃபார்முலாக்கள்
தில்லு முல்லுப் பேச்சுக்கள்
இலவச பம்மாத்துக்கள்
எல்லாம்
பத்தாம்பசலிச் சாமர்த்தியங்கள்

இவைகள் இனி
எடுபடுவது கஷ்டமே

இனியேனும்
மாறித் தொலைக்க யோசியுங்கள்
மாற்றி யோசிக்க ஆரம்பியுங்கள்

ஏனெனில்
நாங்கள்  மாற்றி யோசிக்க
ஆரம்பித்துவிட்டோம்.

Monday, December 28, 2015

நாம் தான் தலையில் அடித்துக் கொள்ளணும்


விஜயகாந்த் துப்பிட்டார் என்று பொங்கும் பத்திரிக்கையாளர்களுக்கு நிச்சயம் பொதுமக்கள் ஆதரவு துளி கூட கிடைக்காது...
காசுக்காகவும், தங்கள் சேனல் விளம்பரத்திற்காகவும் தான் இவர்கள் கேள்வி கேட்கின்றனர். அதுவும் கேள்வி என்ற பெயரில் இடம், பொருள், ஏவல் தெரியாமல் சம்பந்தமே இல்லாமல் கேள்வி கேட்டு அதில் டிஆர்பி ரேட்டை ஏற்றி குளிர்காய்கின்றனர்....
இவர்களை த்துதூ என்று தூக்கி அடிச்ச கேப்டனை அனைவரும் பாரட்டத்தான் செய்கின்றனர்...
(இன்றைய டீக்கடை அனுபவமே மேற்கொண்ட பதிவு)
Raja Roja யாகவராயினும் நாகாக்க !!!! எதை வேணும்னாலும் கேட்கிறவன்..பிறரை கோபப்படுத்தி உள்ளுர சுகம் காணும் விளம்பரம் தேடும் பத்ரிகைகாரன் மீது துப்பலாம்


Nellai Solomon T அது தப்பாகவே இருக்கலாம்..ஆனாலும் தில்லான மனிதன்....



உண்மையை எழுதத் துப்பில்லாத பத்திரிக்கையாளர்களைத் துப்பியதில் ஒரு குற்றமும் இல்லை என்பதே என் கருத்து.


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து இதுவரை ஆறுதல் கூறாத ஜெயலலிதாவை கண்டிக்க துப்பில்லாத பத்திரிக்கைகளை காறி துப்பிட்டாரு கேப்டன்...!
#100%உண்மை

எதற்குத் துப்பினார் என
யோசிப்பது  வேறு

துப்புவது  அநாகரீகம் என
யோசிப்பது வேறு

அநாகரீகச் செயல்களுக்கும்
அட்டூழியங்களுக்கும்
காரணம்  தேடினால் நிச்சயம்
ஒன்று இருக்கவே செய்யும்

நடு ரோட்டில்
மலம் கழித்தலைக் கூட
பாவம் அவசரமாக வந்து விட்டது
எனச் சொல்லி முடிக்கலாம்தானே ?

கொலைக்கும் கற்பழிப்புக்கும் கூட
சமூகம் காரணம் என
விளக்கம் அளிக்க முடியும் தானே ?

கேப்டனாக " நடித்து "
அந்தப் பெயரைப் பெற்றவர்

அநாகரீகமாக தொடர்ந்து "நடந்து "
"காட்டான்( ர் )  " என
நிச்சயம் அடைமொழி பெறும் காலம்
நிச்சயம் அதிகத் தூரமில்லை

அப்படி அடைமொழி பெறுவதைக் கூட
தகுதியாக அவர் கருதலாம்

இப்படியான தலைவர்கள்
தமிழகத்திற்கு வாய்த்ததற்கும் 

அவரகளின் அநாகரிக  செயல்களுக்கும் 
சுற்றி வளைத்து 
வக்காலத்து வாங்க
ஆட்கள் இருப்பதற்கும் 


நாம் தான் தலையில் அடித்துக் கொள்ளணும் 

அநாகரீகத்தை அநாகரிகமாகவே சந்தித்தல் ...

பல்லைக் கடிப்பது...

நாக்கைத் துருத்துவது...

தூ எனத்  துப்புவது ...

பொது வெளியில்  பொறுப்பு மிக்க
பதவிகளில்  இருப்பவரையே  அடிப்பது

இது சிறுபிள்ளைத் தனமா  ?

கிறுக்குத் தனமா ?

எதில்  சேர்ப்பது இதை ?

பொது வழியில் தன்னைக்
கட்டுப்படுத்திக் கொள்ளும்
அடிப்படைத் தன்மை கூட
இல்லாதவர்கள் ...

 பொறுப்பு  மிக்க
பதவியில் அமர்ந்தால்
மாற்றுக் கருத்துடையோரை
எப்படி எதிர்கொள்வார்கள் .. ?

திட்டியா
அடித்தா
 அல்லது
ஆள்  வைத்து உதைத்தா ?

மண்டியிட வைத்து இரசிக்கும் குரூரம்
ஒருவகை அநாகரீகமெனில்

அநாகரீகச் செய்கைகளும்
 ஒருவகை குரூரமே


அநாகரீகத்தை
அநாகரிகமாகவே  சந்தித்தல்
நிச்சயம் நாகரீகமில்லை

எப்படிப் புரியவைப்பது இதை ?

எப்படிச் சகித்துக் கொள்வது இதை ?




Saturday, December 26, 2015

முக நூலின் பலம் ?


Venkatasubramanian Sankaranarayanan's photo.











இப்பொதெல்லாம்  பதிவர்கள்  பதிவுலகு  விட்டு
 அதிகம் முக நூல்  பக்கம் முகத்தைத்  திருப்பியிருப்பதன்
காரணம் ஏன்  தெரிகிறதா  ?

மூன்றரை கோடியென்பது  கொஞ்சம்  மலைக்க
  வைக்கத்தான்  செய்யும் இல்லையா  ?

இருப்பினும்  விடாப்பிடியாக  சிலர்
பதிவுலகில்  தொடர்வதற்கு  சில   வலுவான
காரணங்கள்   இருக்கத்தான் செய்கின்றன

 இது குறித்து பதிவர்கள் விரிவான  பதிவுகள்
எழுதலாமே ?

 (மிகக் குறிப்பாக தமிழ் மணத்தில்   முதல் இருபதில்
 தொடர்ந்து நிலைத்திருக்கிற  முன்னணிப் பதிவர்கள் )




Wednesday, December 23, 2015

"காலத்தை வென்றவன் காவியமானவன் "

ஒரறிவு  உயிரினங்கள் முதல்
ஆறறிவு மனிதர்வரை
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி "கர்ஜிக்கும்
காலன் தோற்றது.....

மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விட திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை......

அவர்தானே
வசூல் " சக்கரவர்த்தித் திருமகனாய் " இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை....

அவர்தானே
"மன்னாதி மன்னனாய்த்" திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமென

"எங்கள் தங்கமென"   அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?

எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும் புதிராய் இருப்பினும்
"நல்லவன் வாழ்வான் "
"தர்மம் தலைகாக்கும் "எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை

இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ்
"இன்றுபோல்  என்றும் வாழ்க" என
வாழ்த்தி நிறைவான பெருமிதம் கொள்வோம்

"அவர் " ( 2 )

தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களில்
தொடர்ந்து நீங்காது இடம்பெற்றிருக்கிற
தலைவர்களில்"இவரும் " முக்கியமானவர்
என்றாலும்.....

முன்பு சினிமாத் துறையினரால் எம். ஆர். டி. கெ
எனச் சுருக்கமாக அழைக்கப் பட்ட மதுரை/
இராமனாதபுரம்/திருநெல்வேலி/ கன்னியாகுமரி
மாவட்டங்களில் அவருக்கிருந்த செல்வாக்கு
இன்னும் அதிகமானது

அதிலும் மிகக் குறிப்பாக மதுரை எனச் சொல்லலாம்

அரசியல் வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்
வீரவாள் வழங்கியது/ கணக்குக் கேட்டது/
புரட்சித்தலைவிக்கு கொள்கைப்பரப்புச் செயலாளர்
பதவி வழங்கியது/ உலகத் தமிழர் மா நாடு நடத்தியது
என   அவரின் பல முக்கிய நிகழ்வுகள்
இப்படி மதுரையை அனுசரித்தே இருக்கும்

அப்படித்தான் அன்றைய முக்கிய நடிகர்களின்
புதுப்பட வெளியீடு பொதுப்பண்டிகையான
 தீபாவளி மற்றும் பொங்கலின் போதுதான்இருக்கும்
என்றாலும் ...

"இவரின் " சொந்தப் படம் ஒன்று
மதுரையின்முக்கியத் திரு நாளான சித்திரைத்
திரு நாளின் போது வெளியிடப்பட்டது.

அப்போதெல்லாம் இப்போதைப்போல டீஸர்கள்
கிடையாது என்றாலும் போஸ்டர்களும் அன்றாடம்
அது குறித்து வெளியிடப்படும் பத்திரிக்கை
 விளம்பரங்களும்படத்திற்கான சிறப்புப்புத்தகங்களும்
இப்போதையடீஸர்களை விட அதிக தாக்கத்தை
ஏற்படுத்திப் போகும்

இந்தப் படத்தைப் பொருத்தவரை , "இவர் " மற்றும்
"அவர் " இரண்டுவேடம் என்றதும்,இருவரும் அந்த ராஜா
ராணி உடையில் ஜெய்பூர் அரண்மனைப் பின்புலத்தில்
நடந்துவரும் படமும்,"அவரின்" மார்ப்புப் பிளவுகள்
தெரியும்படியான வித்தியாசமான உடையில்
சிங்கத்தின்வாய்ப் பிளப்பதுமான படங்களைப்
 பார்த்து நாங்கள் மெய் சிலிர்த்துக் கிடந்தோம்

எப்படியும் இப்படத்தை வந்த முதல் நாளே பார்த்து
விடுவது எனத் தீர்மானித்தோம்

அது மதுரையில் அவ்வளவு எளிதில்லை என்றுத்
தெளிவாகத் தெரிந்த போதும். நிற்க

(நிற்க . என்பதைப் பார்த்து யாரும் எழுந்து
நின்று விட வேண்டாம்

என்போன்ற அந்த காலத்து நபர்களுக்கு
நிற்க என்பதன் பொருள் நன்றாகத் தெரியும்.
இப்போதைய இளைஞர்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.

முன்பெல்லாம் நேரடியாகப் பேசுவதை விட
விரிவாகவும் உணர்வு பூர்வமாகவும்
கடிதம் எழுதுவார்கள்.

அப்படி எழுதிக் கொண்டுவருகையிலேயே
அதன்தொடர்புடைய வேறு விஷயத்தைச்சொல்ல
வருகையில்இந்த நிற்க. என்கிற வார்த்தையைப்
போடுவார்கள்.

அதைப்போலத்தான் இந்த நிற்க.)

தொடரும்

Tuesday, December 22, 2015

" அவர் "

எப்போதிருந்து " அவரைத் " தெரியும்
என்றிலிருந்து "அவர் " என்னை முழுவதும்
ஆக்கிரமித்துக் கொண்டார்..

 நினைவுச் சரடின் நுனிப்பிடித்து
மெல்லக் காலம் கடக்கிறேன்.

"படம் போட்டு எத்தனை நேரம் ஆச்சு
எத்தனைக் கட்டம் போச்சு " எனக் கேட்டபடி
மிகக் கஷ்டப்பட்டுச் சேர்த்த அந்த இருபத்தைந்து
பைசாக் காசில் எடுத்த தரை  டிக்கெட்டில்
மண் குவித்து அமர்ந்தபடிக் கேட்கிறேன்.

"இரண்டு கட்டம்தான் ஆகியிருக்கு.இன்னும்
அண்ணன் வரல " என்கிறான் முன்னால்
குந்தி இருந்த ஒருவன்.

திரையில் ஒரு சுடுகாட்டில் பண்ணையார்
 தன் முன் செருப்புப் போட்டு நின்றதற்காக
ஒரு பராரியை , சவுக்கால் அடிக்கத் துவங்குகிறார்

அந்தக் காட்சியின் கொடுமை,அவன் அடிபடும் விதம்
என்னுள் தானாகவே ஒரு ஆக்ரோஷத்தைக்
கிளப்பிவிடுகிறது

"என்ன கொடுமை இது.செருப்புப் போட்டு அவர் முன்
வருவது அத்தனை கொடிய செயலா ? இது என்னடா
அநியாயமாக இருக்கிறதே " என எண்ணத்
துவங்குகையிலேயே சட்டென
அடுத்தக் கட்டம் மாறுகிறது

ஒரு அருமையான காளை பூட்டிய ரேக்ளா  வண்டியில்
சாட்டையை சுழற்றியபடி "ஹேய் மனிசனை மனிசன்
சாப்பிடறாண்டா அருமைத் தம்பி " எனப் பாடியபடி
சீறிக் கொண்டு வருகிறார்  "அவர் "

கீற்றுக் கொட்டகையில் சீல்கை ஒலி  சீறிப்பறக்கிறது

மேலே விளக்குகளை போட்டுப் போட்டு அணைக்க
கூட்டத்தில் சப்தம் இன்னமும் கட்டுக்கடங்காது
காதை அடைக்கிறது.

 முதன் முதலாய் அந்த க் கூட்டத்தின் ஆக்ரோஷச்
சப்தத்தில் நானும் சங்கமிக்கிறேன்.....


--தொடரும்---

Monday, December 21, 2015

சிம்பென்னும் வம்பனை...

தீயவை எல்லாம் சாலை யோரங்களில்
மிக எளிதாய்க் கிடைக்க

தேவையானவைகள்
அவசியமானவைகள்
எல்லாம் கிடைக்காதும்
எங்கோ ஒளிக்கப்பட்டிருக்கும் சூழலில்,

கிடைப்பதே சரியானதென்றும்
எட்ட இருப்பவையெல்லாம்
தேவையற்றவை என்றும்

இளைய சமூகம்
குழம்பிக் கிடைக்கையில்

நரகலை காற்றில் வீசுபவனை
சகித்துக் கொள்ளாதீர்கள்

மக்களின் கவனத்தைத்  திருப்ப
இதுவும் ஒரு சதியென
இவனும் ஒரு கருவியென
புரிந்த போதிலும்...

கஞ்சா விற்பதும்
பயன்படுத்துவதும் மட்டுமன்று
மறைவாய் விளைவிப்பதும் குற்றமென்று
.அறியாததுபோல் நடிப்பினும்...

நரகலை காற்றில் வீசுபவனை
சகித்துக் கொள்ளாதீர்கள்

தவறுக்கு மண்டியிடாதவரை அவனை
மனிதனென்றே மதியாதீர்

Sunday, December 20, 2015

விந்தையிலும் விந்தைதான்

யானைகளைக் கட்டி
பலசமயம்
இழுக்க இயலாதுப்  போனக்
கவிதைத் தேரது

ஒரு சிறு எறும்பிழுக்க
வேகமாய்
வலம் வருவது விந்தை

குடம் குடமாய்
நீரூற்ற
வளராது வாடும்
கவிதைச் செடியது

ஒரு சிறு சாரலில்
முதுகு நிமிர்த்தி
ஓங்கி வளர்வது  விந்தை

படித்து
அளவுகோலில் நிறுத்து
முயன்று செய்ய ருசிக்காதக்
கவிதைக் குழம்பு

மனமளக்க
கை நிறுக்க
அதிகம் ருசிப்பது விந்தை

விதம் விதமாய்
வேடிக்கைகள் காட்டியும்
வித்தைகள் செய்தும் வரமறுக்கும்
கவிதைக் குழந்தை

எதையோ நினைத்திருக்கையில்
சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது  விந்தை

ஆம் ..
அதிசயமே அதிசயிக்கும்
அதிசயப் பெண்போல

விந்தையே வியக்கும்
விந்தையது கவிதைதான் 

Friday, December 18, 2015

உன்னழகுப் போதையிலே........

சேலைகட்டி அந்திவேளை
நீநடந்து போகையில
பாலையான சாலைகூட
சோலையாகிப் போகுதடி

விட்டுவிட்டு பார்த்தபடி
எட்டுவைச்சுப் போகையிலே
பட்டமரம் துளிர்க்குதடி
பாதையெல்லாம் மணக்குதடி

குடமெடுத்து நீரெடுத்து
இடுப்பசைய நடக்கையிலே
சொரணயத்த வீதிகூட
சொர்க்கலோகம் ஆகுதடி

அன்னமென நீ நடந்து
சொர்ணமென்னைக்  கடக்கையிலே
ஒன்னுமத்த கரிநாளும்
திரு நாளாய் மாறுதடி

நீநடந்த பாதையிலே
நான்நடந்து போகையிலே
வானகத்தில் நடப்பதுபோல்
மனம்மகிழ்வு கொள்ளுதடி

உன்னழகு போதையிலே
மதிமயங்கி  நான்உளறும்
ஒன்னுமத்த வார்த்தைகூட
கவிதையாக  மாறுதடி 

Thursday, December 17, 2015

இனிய பயணமே வாழ்க்கை

சங்கடங்களைச் சந்திக்க
 சங்கடப்படுவோன்....

சுகச் சூழல் விடச்
சஞ்சலப்படுவோன்....

சராசரித்தனம் தாண்டச்
 சாத்தியமே இல்லை

நினைவு அலையின்   மடியிலேயே
முழுமனம் பதித்தவன்...

அடி ஆழம் செல்ல
அச்சப்படுபவன்....

சாதனை முத்தெடுக்கச்
சத்தியமாய் வாய்ப்பே இல்லை

சூழல் மறந்த
நேர்ச்சிந்தனையும்

இழப்புகளைத் தாங்கும்
 மனவலிமையும்

கொண்டவனே
 சிகரத்திற்குப் பாத்தியப்பட்டவன் 

ஒவ்வொரு நாளையும்
புதிய நாளாகவே  கொள்வதும்

ஒவ்வொரு செயலையும்
புதிதெனச்  செய்தலுமே

தொடர்ந்து வெல்வதற்கான
கம்ப  சூத்திரம்

இழந்தவைகளையும்
கடந்தவைகளையும்
கனவெனவே  கொள்வோம் வா

நடப்பதையும்
நடக்க இருப்பதையும்
நினைவினில் கொள்வோம் வா

வெற்றியும் சாதனையும்
நாம் அடையும் இலக்கல்ல
கடக்க  ஒரு குறியீடு  அவ்வளவே

தொடர்ந்து  குறியீடுகள் கடப்பதில்
கவனம் கொள்வோம்  வா வா

 இனிய பயணமே வாழ்க்கை
இரசித்துப்  பயணிப்போம் வா வா



Wednesday, December 16, 2015

நிலையான முகவரி

கடலுக்கு அலையது முகவரி
நிலவுக்கு பனியது முகவரி
மலருக்கு  மணமது முகவரி-என்
மகிழ்விற்கு "அவள்தான்" முகவரி

கொடையதற்கு கருணையே முகவரி
காதலுக்கு அன்பதே முகவரி
படையதற்கு தலைவனே முகவரி-என்
புகழுக்கு "அவள்தான் " முகவரி

மனதுக்கு நினைவதே   முகவரி
நினைவுக்கு மொழியதே  முகவரி
பகலுக்கு ஒளியதே  முகவரி-என்
உயர்வுக்கு  "அவள்தான்" முகவரி

கடவுளுக்கு கோவிலே முகவரி
கனியினுக்கு சுவையதே   முகவரி
உடலுக்கு முகமதே  முகவரி-ஆம் 
எனக்கென்றும் "கவிதையே   " முகவரி

Tuesday, December 15, 2015

முடிவின் விளிம்பில்..........

குழப்பம் என்னுள் சூறாவளியாய்
சுழன்றடிக்கிறது

நான் எத்தனை நாள் இப்படி இருக்கிறேன்?


இருக்கிறேன் என்பது சரியா?
கிடக்கிறேன் என்பது சரியா?
அல்லது
இறக்கிறேன் என்பதுதான் சரியா?

ஐம்புலன்களின் கட்டுப்பாட்டை
முழுவதும் இழந்து போனதால்
கால உண்ர்வு அற்றுப்போனதா? 


கால உண்ர்வு அற்றுப்போனதால்
அனைத்தையும் இழந்து போனேனா?

தொடர்ந்து விஸ்வரூபம் எடுக்கும்
விடையற்ற கேள்விகளை புறம்தள்ளி
விழிகளைத் திறக்க முயல்கிறேன்

இருப்பிடம் தெரியாதிருந்த
இமைகள் இரண்டும்
சிதிலமடைந்த அரண்மனையின் 

புறவாயில்கள்போல்
கனத்து கிறீச்சிடுகின்றன


பட்டப்பகலில் குளத்து நீரில்
பட்டுத்தெறிக்கிற சூரியஒளிபோல்
பார்க்குமிடமெல்லாம்
ஒளிச்சிதறல்களே பரவிச் சிரிக்கின்றன


பயப்பாம்பு மனமெங்கும் ஊர்ந்து திரிகிறது
பார்வையும் பட்டுப்போய்விட்டதா?

எரிமலையாய் என்னுள்
மரணபயம் வெடித்துச்சிதற
அதன் அக்கினிக்குழம்புகள்
என் நாடி நரம்பெல்லாம் பரவி விரிய
என் சக்தியனைத்தையும் திரட்டி ஓலமிடுகிறேன்


மலைச்சரிவினில் உருண்டுவரும் பெரும்பாறைபோல்
ஏதோ ஒன்று உள்ளிருந்து உருண்டு
என் குரல்வளையை அடைத்துச் சிரிக்கிறது
நான் மரண வாசலை நெருங்கிவிட்டேனா?

தன் முகத்தையே
என் மார்பினில் புதைக்க முயல்பவள்போல்
முட்டிமோதி பிதற்றுகிறாள் என் மனைவி


முப்பதாண்டுகால உடல் பரிச்சியம் என்னுள்
காந்த அலையாய் பரவித் தெறிக்கிறது


விழிமூடும் முன் ஒருமுறையேனும்
அவளை த் தொட்டுவிட்டு வீழத் துடிக்கிறேன்


என் கைகள் இரண்டும்
எனக்கு சம்பந்தமற்றவைகள்போல்
வெட்டிவீழ்த்தப்பட்ட பனைமரங்களைப்போல்
மல்லாந்து கிடக்கின்றன


எரிகின்ற வீட்டின்முன்
செயலற்றுக் கதறுபவர்கள்போல்
யார் யாரோ கூக்குரலிட்டு அழுவது
மிக லேசாய் கேட்கிறது
நான்தான் எறிந்துகொண்டிருக்கிறேனா?

சுட்டெரிக்கின்ற பாலைவனத்தில்
கொப்பளிக்கின்ற சுனை நீர்போல
இத்துணை  அவஸ்தைகளுக்கும் மத்தியில்


இவைகளுக்கெல்லாம்

 தொடர்பே இல்லாததுபோல்

தென்றலின் குளுமை அடிவயிற்றை நிறைக்க
நாபிக்கு கீழே மொட்டு ஒன்று மலர்தலைப்போல
சிப்பி ஒன்று மிதந்து வந்து வாய்திறக்க
வண்ணத்துப் பூச்சியின் வர்ணஜாலங்களோடு

 தங்கத்தின் தகதகக்கும் ஜொலிப்போடு
ஒரு ஒளிக்கொத்து
லேசாக மிக லேசாக
எட்டிப் பார்த்துச் சிரிக்கிறது

அந்த ஒளிக்
கொத்தின் மாயாஜாலத்தில்
என்னுள் பேயாட்டம் போட்ட
அத்துணை வலிகளும்
அத்துணை துயர்களும்
ஒளிகண்டு ஓடும் இருள் போல
எங்கோ ஓடி மறைகிறது

அந்தக் கருணை ஒளி
முகம் நோக்கி ஈரடியாய்
பின்னோக்கி ஓரடியாய்
தொடர்ந்து மெல்ல நகர


அது கடந்த வழியெல்லாம்

 சில்லிட்டுப்போக
அது நடக்கும் வழியெல்லாம்

 பரவசம்  பரந்து விரிய

நானே பாதி உடலாகவும்
நானே பாதி பிணமாகவும் மாறிப்போகிறேன்

இனி எப்போதுமே

 திரும்பமுடியாத உலகுக்கும்
இனி போய்ச் 

சேரவேண்டிய வெட்டவெளிக்கும்

இடையிலான லட்சுமணக்கோட்டில்
என் உயிர்மூச்சு ஊசலாடிக்கொண்டிருக்கிறது


இப்போது எனக்கு எல்லாமே தெளிவாகத் தெரிகிறது

என்பார்வை அவள்மீது படுகிற அதிர்வினில்
செய்வதறியாது திகைத்து
என்முகத்தோடு முகம்சேர்த்து கதறுகிறாள் மனைவி


"பெரிய உயிர் அடங்கப்போகிறது
பால்வார்ப்பவர்கள் பக்கம் வாங்கோ"என
யாரோ கூக்குரலிடுகிற்ர்கள்


கதறல் ஒலி கூடமெங்கும் பட்டுத்தெறிக்க
கூட்டம் கட்டிலைச்சுற்றி அடைக்கிறது

தொப்புள்கொடி அறுபட
காலத்தாய் ஊட்டிய முதல்மூச்சுதான் உயிரா?


காலத்தாயோடு நித்தம்
உடல்கொண்ட பரிச்சியம்தான் ஜீவித்திருத்தலா?


காலவெளியில் காலத்துளி

 மீண்டும் இணைதல்தான் காலமாதலா?

காலத்தாயை அடைகிற வெறியில்
காலத்துளி என்னை விலக்கிப் பறக்கிறது


நான் பிணமாகிறேன்


அறையெங்கும் மரண ஓலம் தீயாய் பரவுகிறது

Monday, December 14, 2015

நாங்கள் தயாராகிவிட்டோம்...

மண்ணைக் கீறி
ஆழமாய் விதைக்கப் பட்ட
வீரிய மிக்க விதை மட்டுமல்ல

நெஞ்சைக் கீறி
ஆழமாய் விதைக்கப்பட்ட
 அதீத வெறுப்பும் கூட

நிச்சயம்  அதற்கான காலத்தில்
தடைகள் தகர்த்து
வெளிக் கிளம்பவே செய்யும்

"நிர்கதி " என்ற
சொல்லின் பொருள்
அனுபத்தில் விளங்கும்படியாய்
நாங்கள் நின்ற அந்த ஒரு வார காலம்

"நித்சலன் " எனும்
வழக்கொழிந்த சொல்லுக்கு
நேரடி விளக்கமாய்
நீங்கள் கழித்த அந்த ஒரு வாரம்..

பெருங்கனவினிலும்
நீங்காத நினைவாய்
பெரும் மகிழ்விலும்
உறுத்தும் துயராய்
நீறி பூத்த நெருப்பாய்
ஆழப்பதிந்தே கிடக்கிறது...

சோதனைக்காலங்களில்
உங்கள் மனங்களை
உங்கள் செயலற்ற தன்மையால்
நிர்வாணமாகவே  கண்டுவிட்டோம்

இனி உங்கள்
எந்த முகமூடிக்கும்
எந்தப் பித்தலாட்டப் பார்முலாக்களுக்கும்
நாங்கள் ஏமாறத் தயாராயில்லை

மொத்தத்தில்
சுருங்கச் சொன்னால்
நாங்கள் தயாராகிவிட்டோம்

நீங்கள் தாயாராகிக் கொள்ளுங்கள்
அதுவே ஏமாற்றம் தவிர்க்க எளிய வழி  ..

Sunday, December 13, 2015

விளங்குவதும் விளங்காததும் ....

 தனித்துவமும் ஜன ரஞ்சகமும்
நேர் எதிரானவைகளைப்போன்றே
பயனும் சுவாரஸ்யமும்
எப்போதும்
எதிர் துருவங்களாகவே  திரிகின்றன

 பயனற்றதாயினும்
சுவாரஸ்யமாய் தரத் தெரிந்தவன்
பிழைக்கத் தெரிந்தவனாகவும்
புகழடைந்தவனாகவும் "விளங்க "

சுவாரஸ்யத்தைப் புறம் தள்ளி
பயனுள்ளதை மட்டுமே தருபவனோ
ஊருக்குத்   தெரியாதவனாகவும்
உலகுக்கு
 "  விளங்காத "வனாகத்தான்  தெரிகிறான்

 ஆயினும் என்ன
 கால  நெருப்பு தீண்டுகையில்

"விளங்கியவன்  "படைப்பு
எரிந்து கருகி
எதற்கும் விளங்காது  போக

 நிகழ்காலத்தில்
"விளங்காதவன் " படைப்போ
 சுட்ட சங்காய்
கூடுதல் வெண்மை  கொண்டு
ஒளி விளக்காய்
 " விளங்கத்தான் "   செய்கிறது

என்ன செய்வது
 காலம் கடந்த பின்புதான்

படைப்பாளியைக்
காலன்   கவர்ந்த பினபுதான்

உலகுக்கும் கூட
ஆண்  மயிலுக்கும்
வான் கோழிக்குமுள்ள வித்தியாசம்
"விளங்கித்  "தொலைக்கிறது 

சின்னச் சின்னக் குறிப்புகள்..

மார்பினை மீறித்
துருத்தாத வயிறு
அவன் ஆரோக்கியத்தை
பறைசாற்றிப் போனது

வரவினை மீறாத
அவன் செலவு
அவன் செல்வந்தனாவதை
உறுதி செய்துப் போனது

எல்லை மீறாத
அவனது பரிச்சியங்கள்
அவனது வளர்ச்சியை
நிச்சயித்துப் போனது

அறிவினை மீறாத
அவனது மனது
அவனது நடத்தைக்கு
வழி சமைத்துப் போனது

சமூக நல்லிணக்கம்  மீறாத
தனிமனித செயல்பாடுகள்
அவன் தரம் சொல்லிப் போனது

தகுதி மீறாது
அவனடையும் பதவிகள்
அவன் வெற்றிகள் தொடருமென
பறைசாற்றிப் போனது

பொது நலம் மறக்காத
அவனது சிந்தனைகள்
அவன் சராசரி இல்லையென்பதை
நிரூபித்துப் போனது

இலக்கினை மீறாத
அவன் படைப்புகள்
 காலத்தைஎளிதாய் கடக்கும் என்பதை
சூசகமாய்ச் சொல்லிப் போனது

Friday, December 11, 2015

மதிப்பிற்குரிய ரஜினி அவர்களே....

உலகில் சரித்திரம் சிலரை தலைவராக்கி
தன் தேவையைப்பூர்த்தி செய்துகொண்டிருக்கிறது.

சில தலைவர்கள் தங்கள் அபரீதமான உழைப்பால்,
கடவுளின் அருட்பார்வையால்,மக்களின்
பூரண ஒத்துழைப்பால்சரித்திரத்தை தலைகீழாய்ப்
புரட்டிப் போட்டிருக்கிறார்கள்

இதில் இரண்டாம் வகையைச் சார்ந்தவராக
விளங்க வேண்டியவர் நீங்கள்

தங்களை அரசியலுக்கு இழுக்கும் முயற்சி என்பது கூட
ஒரு யானையை பானைக்குள் திணிக்க எடுக்கும்
அற்ப முயற்சியே.

தமிழகத்தின் அனைத்து பிரிவினரும்
ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள தங்களை
ஒரு சிறு வட்டத்திற்குள் அடைக்க முயலும் முயற்சி
அற்பத்தனமானதே. அது வேண்டாம்

பெரும்பாலான மக்களுக்கும் இதில் உடன்பாடில்லை

ஆயினும் தங்கள் பாஷையில் சொன்னால்
ஒரு துளி வியர்வைக்கு நூறு கோடி தங்கக் காசை
அள்ளித் தந்த தமிழகத்திற்கு ஏதாவது
செய்ய வேண்டும் என்கிற தீவிர எண்ணம்
தங்களுக்கு இருப்பதால்...

தங்களின் பிறந்த நாள் பரிசாக தமிழக மக்களுக்கு
இந்தப் பேருதவியை செய்து தந்தால் தமிழகம்
 இன்றுபோல்உங்களை என்றும் கொண்டாடும்

தமிழகத்தைச் சார்ந்த மதிப்பிற்குரிய
 சி.சுப்ரமணியம் அவர்கள்நிதியமைச்சராக
இருந்த காலத்தில் இந்தியாவில் ஏற்பட்டிருந்த
கடுமையான பஞ்சத்தை நீக்குவதற்காக எடுக்கப்பட்ட
பல்வேறு நடவடிக்கைகளில் விஷமாக
ஒட்டிக் கொண்டு வந்ததுதான் இந்த
நாசகாரச் சீமைக் கருவேலை

இதனுடைய  அபரீதமான பெருக்கம்
மண்வளம் கெடுத்துநீர்வளம் கெடுத்து
காற்றிலுள்ள ஈரப்பதத்தையும்
உறிஞ்சுவதன் மூலம் சுற்றுச் சூழலையும் கெடுத்து

இப்போது தமிழகத்தை நாசகாடாக்கிக் கொண்டிருக்கிறது

அண்டை மாநிலமான கேரளத்தில் அரசின்
உதவியோடுசீமைக் கருவேல முள்ளை முற்றிலும்
அழித்து தங்கள் மண்ணைச் சொர்க்க
பூமியாக்கிவிட்டார்கள்

நாம்தான் நரகத்தின் இடையில் நிற்கிறோம்

இதன் தீமைகளை முற்றாக அறிந்து
நான் சார்ந்திருக்கிறஅரிமா சங்கத்தின் 324 பி3
 கடந்த ஆண்டுக்குரிய சேவைத் திட்டமாக
சீமைக் கருவேல முள்ளை அகற்றுதலைச்
செய்யமுனைய அனைவரின் ஒத்துழைப்போடு
இதுவரைமதுரை தேனி சிவகங்கை திண்டுக்கல்
முதலானமாவட்டங்களில் 10000 ஏக்கருக்கு
மேற்பட்ட நிலப் பரப்பில் இதனை அகற்றிவிட்டோம்.
இன்னும் அகற்றிக் கொண்டிருக்கிறோம்

ஆயினும் இதனை விழிப்புணர்வு இயக்கமாகத்தான்
செய்ய முடிகிறதே ஒழிய முற்றாக ஒழிக்க இயலவில்லை

எங்கள் முயற்சி வானளவு வளர்ந்து நிற்கும் ஒரு
கொடிய அரக்கனை  சிறுகம்பு கொண்டு வெல்ல
முயல்வது போலத்தான் உள்ளது

தாங்கள் மனது வைத்தால் தங்கள் பிறந்த நாள்
கோரிக்கையாக மக்களிடன் இந்த கருத்தை மட்டும்
வலியுறுத்தினால் ,.......

தமிழகத்தில் ஏதேனும் ஓரிடத்தில்
நீங்கள் ஒரு முள்ளை வெட்டினால்போதும்

நிச்சயம் தமிழகத்திலிருந்து இந்த கருவேல முள்
அடியோடுஒழிக்கப் பட்டுவிடும்

இதற்கான சேடலைட் மூலம் தமிழகத்தில் உள்ள
ஒட்டு மொத்தகருவேல முள் பரப்பையும்

அதனைவிஞ்ஞானப் பூர்வமாக ஒழிப்பதற்கான
செயல் திட்ட முறைகளையும் தருவதோடு

உடன் இணைந்து பணியாற்றவும்
பல இயக்கங்கள் எங்களைப் போல தயாராக உள்ளன

தங்கள் பிறந்த நாள் பரிசாக தமிழக மக்களுக்கு
தமிழ் மண்ணின் வளத்தை மட்டும் மீட்டுத் தாருங்கள்

இதை அரசு  மட்டும் செய்ய முடியாது.

தாங்கள் நினைத்தால்
நிச்சயம் இதைஒரு மக்கள் இயக்கமாக்கி
சாதித்துக் காட்டமுடியும்

அதைத் தொடர்ந்து தமிழக மக்களின்
வாழ்வில் வளமும் நலமும் மாண்பும்
நிச்சயம் பல்கிப் பெருகும்

நிச்சயம் இது தமிழக மக்களுக்குச் செய்த வாழ்நாள்
பேருதவியாகவும் இருக்கும்

உங்கள் வாழ் நாள் சாதனையாகவும் இருக்கும்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Thursday, December 10, 2015

"இன்று புதிதாய் பிறந்தவனை" ப் போல்.....

"நல்லதோர் வீணையாய் "
 அவனிருந்தான்
அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து
புது விடியலைக் காட்ட முடிந்தது

"சுடர்மிகும் அறிவுடன் "
அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி
 நல்வழி காட்ட முடிந்தது

"எமக்குத் தொழிலே கவிதை "
என்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை
 விடுவித்துக் கவிதையை
அனைவருக்குமான தாக்க முடிந்தது

"ஊருக்குழைத்தலே "
 கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு
அடித்தளமிட முடிந்தது

" இமைப்பொழுதும்"
 சோராதிருந்தான்
அதனால்தானே காலத்தை வென்றவனாய்
காவிய மானவனாய்
"இன்று புதிதாய் பிறந்தவனை" ப் போல்
என்றென்றும்  எப்போதும்
பரிமளிக்கவும் முடிகிறது


மனித நேயத்தின் அருமையும் பெருமையும்...

உயிர் பெரிதெனத்
தெரிகையில்தான்
விலை கூடிய உடமைகளின்
மலிவுத் தன்மை
புரியத் துவங்கியது

உணவே உயிரென
ஆனபின் தான்
கட்டிக் காத்து வந்த
வரட்டு கௌரவங்கள்
உடையத் துவங்கியது

ஒரு மடக்கு குடி நீருக்கு
அல்லாடுகையில்தான்
அவசியம் அத்தியாவசியங்களுக்குமான
இணைவில்லா  வித்தியாசம்
விளங்கத் துவங்கியது

மாற்றுத் துணியின்றி
மாட்டிக் கிடைக்கையில்தான்
தேவைக்கும் நாகரீகத்திற்குமான
மிக நீண்ட இடைவெளி
கண்ணுக்குத் தெரிந்தது

ஆம்...

எங்கிருந்தோ எவரோ
முகமறியா இனமறியா பலர்
எங்களை நாடி வந்து
அரவணைக்கையில்தான்
ஆறுதல் அளிக்கையில்தான்....

ஜாதி மத அரசியல் ஆர்ப்பாட்டங்கள்
வெற்றுப்  பிணச் சுமையெனவும்
மனித நேயத்தின்
அருமையும்  பெருமையும்
மெல்ல மெல்ல
விளங்கத் துவங்குகிறது

Tuesday, December 8, 2015

விதைப்பதைப் போலத்தான்.

அலுவலங்களில் உயர் அதிகாரிகள் அடுத்து
அடுத்து இருப்பது  கீழ் நிலை அதிகாரிகளின்
தவறுகளைகுற்ற நோக்கில் கண்டுபிடிப்பதற்காக
அல்ல

தவறு தவறி நேர்வது இயல்பு.அதைச் செய்பவரை விட
அதைக் கவனித்துக் கொண்டிருப்பவர் கண்டுபிடிப்பது
மிக எளிது என்பதால்தான்.

அதனால்தான் கோடலிக் காரனுக்கு நாலு ரூபாய்
என்றால்கோளாறு சொல்பவனுக்கு பத்து ருபாய்
என கிராமங்களில்சொல்வார்கள்

அதைப் போலவே செய்வது சிறிய உதவிதான் எனினும்
அதை மறைத்துச் செய்யாமல் பிறர் தெரிகிறபடிச்
செய்வதும் பிரச்சார நோக்கில் இல்லை

இதைப் பார்க்கிறவர்கள் நாமும் நம்மால் முடிந்த அளவு
செய்யலாமே என்கிற எண்ணம் நிச்சயம் உருவாகும்
என்கிற நோக்கில்தான்

அதுவும் வரி வடிவங்களில் உதவி செய்வதைச்
சொல்வதை விட புகைப்படங்களாய்,காணொளியாய்
இருப்பது கூடுதல் சிறப்பு.

சமீபத்தில் எங்கள் பகுதியில் மழையோடு மழையாய்
தெருக்களில் நின்று  நிவாரண நிதி
வசூலித்துக் கொண்டிருக்கையில்
பள்ளி வாசல் ஒன்றில் கையேந்தி  கைக் குழந்தையுடன்
பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண் தனது
அருகில் நின்றிருந்த  தனது மூத்த பெண்ணிடம்
இருபது ரூபாயக் கொடுத்து நாங்கள்
கொண்டுவந்திருந்தஉண்டியலில் போடச் சொன்னது
இன்றும்நினைத்துப் பார்க்கையில்கண் கலங்கச்
செய்துதான் போகிறது.

மழை நேரம் என்பதாலும் சட்டென
இது நடந்து விட்டதாலும் இதைப் புகைப்படம்
எடுக்க முடியவில்லை.

இப்படி எழுத்க் கொண்டிருப்பதை விட அது
புகைப்படமாக எடுக்கப்பட்டுப் பதிவிடப் பட்டிருந்தால்
அந்த இருபது ரூபாய் எத்தனை ஆயிரமாய்
சேரக் காரணமாய் இருந்திருக்கும். ?

எனவே தங்களால் இயன்ற அளவு உதவி
செய்பவர்கள் அனைவரும் கூடுமானவரையில்
முடிந்த அளவு அதை பிறர் அறியப் பதிவு செய்யுங்கள்

இதுவும் ஒருவகையில் விதைப்பதைப் போலத்தான்.

வாழ்த்துக்களுடன்....

Monday, December 7, 2015

தலை சென்னை...இதயம் கடலூர்

தமிழகத்தின் தலை
எங்கள் தலை நகர்  சென்னை

இதயம்  கடலூர்

இரண்டும்பாதித்துக் கிடக்க 
எங்கள் மனம் 
வேறில் கவனம் கொள்ள
நிச்சயம் சாத்தியமில்லை 

ஜாதித் தலைவலி 
மதச் சளி
கட்சி வயிறுப்  போக்கு என்பதெல்லாம் 
இப்போது எங்களுக்கு   
ஒரு பொருட்டே இல்லை

கட்டைவிரல் நுனி
கன்னியாகுமரி முதல் 

நுனிமுடி இமயம் வரை 

பரவிக் கிடக்கும் 
இரத்த நாளங்களில் எல்லாம்
இப்போது நிரம்பிக் கிடப்பது...

சிறுமையை  சீரழிக்கும் 
பெருந்தன்மை  வெள்ளையணுக்களும்  

செயலாற்றத் துடிக்கும்
செம்மை மிகு சிவப்பணுக்களுமே  

நம்  பலவீனம் கண்டு
வீழ்த்திட   முனைந்த 
இந்தப் பேரழிவுப் 
பெருமழை  நோயினை 

நம் பலம் காட்டி
கடல் நோக்கியே  
விரட்டி  விடுவோம் வாரீர்

நம் சேவையைக் கண்டு
உலகே வியக்க
தொடர்ந்து  முயல்வோம்   வாரீர்

   

Saturday, December 5, 2015

சிறு துளி பெரும் மழையாய் .......

சமூக நலனில் அக்கறை கொண்ட எம் பகுதி வாழ்
மக்களைக் கொண்டுஎங்கள் பகுதியின் நலனுக்காக
குடியிருப்போர் நலச் சங்கம்  என்னும் ஒரு அமைப்பை
 உருவாக்கினோம் .

அதன் மூலம்

எங்கள் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யும்
விதமாகபத்து  இலட்சம் செலவில்  ஏறக்குறைய
ஏழு கிலோ மீட்டர்சுற்றளவை கண்காணிக்கும்படியாக
 கண்காணிப்புக்கேமராக்களைப் பொருத்தி
காவல் துறையிடம் ஒப்படை த்து
அவர்கள் மூலம் கண்காணித்து வருகிறோம்

இந்தக் குடியிருப்போர் சங்கத்திலிருந்து இன்னும்
 விசாலமானமனம் கொண்டவர்களைத்
தேர்ந்தெடுத்து எங்கள் பகுதிக்கென
ஒரு அரிமா சங்கத்தை ஏற்படுத்தி  அதன் மூலம்
இன்று வரைமொத்தம் பதினைந்து இலட்சம் மதிப்பிலான  சேவைகளைச்செய்துள்ளோம்

இன்னும் இப்பகுதியில்  சமூக நலன் குறித்த
ஆர்வம் உள்ளஇளைஞர்களை ஒன்றுபடுத்தும் விதமாக
அரிமா  லியோ சங்கம்ஒன்றை உருவாக்கினோம்

அவர்கள் மட்டும் தனியாக பொது மக்களிடம் இருந்தும்
முக நூல் மற்றும்   வாட்ஸ் அப்  மற்றும் பள்ளி கல்லூரி
மாணவர்கள் மூலம் மொத்தம் எட்டு இலட்சம்
 மதிப்பிலானவெள்ள நிவாரணப் பொருட்களைச்
சேகரித்து  ஹிந்துதமிழ் நாளிதழ்   மூலமாகவும்
மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவும் இன்று
அனுப்பி வைத்துள்ளார்கள் என்பதை
மகிழ்வுடன்  பகிர்வு செய்வதில்
பெருமை கொள்கிறோம்





அதைப் போலவே   மூல அமைப்பான குடியி ருப்போர்
நலச் சங்கம் மற்றும் அரிமா  சங்கத்தின் சார்பாக
தனியாக எட்டு இலட்சம் மதிப்பிலான
நிவாரணப் பொருட்களைபகுதிவாழ்
பொது மக்களிடம்இருந்து   சேகரித்து இன்று
பத்து  உறுப்பினர்களுடன் சென்னைக்கே
அனுப்பி வைத்துள்ளோம் .

அரிமா மாவட்ட ஆளு நர்
லயன் இராமசுப்பு   எம் ஜே எப் பல்வேறு
பணிக்கிடையில்வந்திருந்து அவர்களை வாழ்த்தி
வழி அனுப்பிவைத்துள்ளார்கள்

நாங்கள் தெரு த் தெருவாகச் சென்று மக்களிடம்
உதவி கேட்டு நின்ற போது அவர்கள் காட்டிய
ஆர்வத்தையு ம்கொடுத்த ஆதரவையும்
நி னைக்க   நினைக்க இந்தப் பதிவை
பதிவு செய்து கொண்டிருக்கும் போது கூட 
கண்களில்  ஆனந்தக் கண்ணீர
பெருகிக் கொண்டுதான் உள்ளது

உதவிய  ,உடன் ஒத்துழைத்த அனைவருக்கும்
மனமார்ந்தநன்றியும் நல்வாழ்த்துக்களும்

இதுவரை   எங்கள் பகுதியில் இருந்து
அனுப்பிவைக்கபட்டநிவாரணப் பொருட்களின்
மதிப்பு மட்டும்  ரூபாய் பதினை ந்து இலட்சம்

இன்னும் இது தொடரும்...

















Thursday, December 3, 2015

அணிலாய்....


நான் சார்ந்திருக்கிற அரிமா இயக்கத்தில் எனது
வட்டாரத்தில் உள்ள வில்லாபுரம் புது நகர் லியோ
சங்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் முதல் தவணையாக
நல்ல உள்ளம் கொண்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட
நிவாரணப்பொருட்களை இன்று சென்னைக்கு
அனுப்பி வைக்கிறார்கள். இந்த மகத்தான பணியை
ஆர்வமுடன் செய்கிற அனைவரும் மாணவர்கள் என்பது
கவனிக்கத் தக்கது.

இன்று வில்லாபுரம் அரிமா சங்கத்தின் சார்பாக
பொது மக்களிடம் இருந்து நிவாரணப்பொருட்களை
சேகரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்

இது நாளை சென்னைக்கு அனுப்பி வைக்க
முடிவாகி உள்ளது.

வாழ்த்துக்களுடன்......




Wednesday, December 2, 2015

அவனே நிச்சயம் உயரந்தவன்...

கடந்த காலத்தில்
செய்ய மறந்தது

எதிர்காலத்தில்
செய்ய வேண்டியது

செய்யாது விட்டது
யார் தவறு ?

இனி யார் வந்தால்
சரியாகச் செய்வார்கள் ?

இவைகள் குறித்து
மிகத் தெளிவாகப்
பேசிக் கொண்டிருப்பவன்  எல்லாம்
எந்த விதத்தில் உயர்ந்தவன் ஆயினும்
அவன் நிச்சயம் மனிதனில்லை

இயன்றதைக் கொடுத்தும்
முடிந்ததைச் செய்தும்
கடந்து கொண்டிருப்பவன் எல்லாம்
எந்த விதத்தில் குறைந்தவன் ஆயினும்
அவனே நிச்சயம் உயரந்தவன்

இயற்கையின் பாதிப்பிற்கு
 எதிரான இந்த
மாபெரும் பணியில்
நாம் மனிதாபிமானமிக்கவராகவே இருப்போம்

எதிலும் அரசியல் லாபம்
காண முயல்வோரை
எந்த நிலை உள்ளவராயினும்
ஒதுக்கிவைத்து  நம் பணியினைத் தொடர்வோம்