Saturday, October 5, 2019

நெத்தியடி என்பது யாதெனில்...

இன்னும் கொஞ்சம்
நாகரீகமாய்ச் சொல்லி இருக்கலாம்

இதை இவ்வளவு அழுத்தமாய்ச்
சொல்லி இருக்கவேண்டியதில்லை

இதைச் சொல்லும் முன்
இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்

எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க
இது ஏன் இப்போது ?

இந்த அசட்டுத் தைரியம்
நிச்சயம் ஆபத்தானதுதான்

இப்படியெல்லாம்
உன் எழுத்துக்கு விமர்சனம் வருகிறது எனில்...

சரியான நேரத்தில்
மிகச் சரியாக
மிகச் சரியானதைத்தான்
சொல்லி இருக்கிறாய் எனச்
சொல்லத்தான் வேண்டுமா என்ன ?

Sunday, September 22, 2019

மனச்சாட்சியும் அறிவும்

"மன்னராட்சியின் நீட்சியாய்
வாரீசுக்கு பட்டம் சூட்டிய
மேடையிலேயே
ஜனநாயகத்தின் சிறப்புக் குறித்து
எப்படிப் ,பேசுவது "

கடைசிச் சொட்டு இரத்தம் போல
கடைசி முயற்சியாய்
மெல்ல முனகியது மனச்சாட்சி..

"குவாட்டருக்கும்
நூறு ரூபாய் பணத்திற்கும்
காத்திருக்கும் கூட்டத்தில்
இதை மட்டுமல்ல
 எதையும் பேசலாம்
 எப்படியும் பேசலாம் "
என எக்காளமிட்டது
அரசியல் அறிவு

Sunday, September 8, 2019

மதுரை நண்பர்களுக்கு தகவலுக்காக (நான் தற்சமயம் மதுரையில் இல்லை )

Saturday, September 7, 2019

ஓரடி முன்னால்...போவது அதள பாதாளமாயினும்..

மது வியாபாரத்தாலதான் வருமானம்னு ஆகிப்போச்சு.அப்போ அதைக் கூட்டறதைக் குறித்து அரசு யோசிக்கலாமே (ஏதோ என்னால் ஆன ஐடியா..)  இதை ஆன் லைன் வியாபாரமாகச் செய்யலாம். கடை வாடகை ஊழியர் சம்பளம் மிச்சம்.ரவுடிகளின் கூடல் இடமாவது இல்லாமல் போகும்..குடித்து வண்டி ஓட்டி சாவது குறையும்.இன்னும் எத்தனையோ. அரசு விரும்பினால் திட்ட அறிக்கையை தயார் செய்து தர நான் ரெடி..(ஆன் லைன் சினிமா டிக்கெட்..ஆன் லைன் மது பான விற்பனை..முடிவா...அதையும் ..அது எதுன்னு அப்புறம் சொல்றேன்..)

Friday, September 6, 2019

அம்மணமான ஊரில்...

எந்த ஒரு நிறுவனம் ஆனாலும் லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் தம் வாடிக்கையாளர் நலனிலும் கொஞ்சமேனும் அக்கறை கொள்ளவேண்டும்..அந்தவகையில் அரசு இயங்குவதற்கே காரணமாயிருக்கிற "குடி"மக்களின் நலனிலும் அரசு கொஞ்சமேனும் அக்கறை செலுத்தவேண்டும்.உதாரணமாக சைட் டீஸ்ஸீம் தண்ணீரும் இலவசமாய் தரலாம்.அதிகப் போதைக்காரர்களை வீட்டில் கொண்டு சேர்க்க தனியாக ஆட்களை நியமனம் செய்யலாம்.ஊருக்கு வெளியே கடை இருக்குமானால் ஊர் வரை போக்குவரத்து ஏற்பாடு செய்யலாம்.போதையில் ரகளை செய்தால் அதற்கு தண்டனை கிடையாது எனச் சொல்லலாம்..சில மதிக்கத் தக்க நாளில் கடைக்கு விடுமுறை அளிப்பதைப் போல மதுக்கடையை கொணர்ந்த தலைவர்களின் பிறந்த நாளை கௌரவிக்கும் விதமாக அன்று இலவசமாக மதுவினைத் தரலாம்..மொத்தத்தில் அனைவருக்கும்  குடிக்கும் பழக்கம் ஏற்படுத்தும்படியாக ஒரு பிரச்சார அமைப்பை ஏற்படுத்தலாம்.குடியினால் இறப்பவர்களுக்கு இறுதிச் சடங்கை அரசின் செலவில் செய்யலாம்.இலவசமாக இறப்புச் சான்றிதழ் தரலாம்..இதை மட்டும் செய்து பாருங்கள்  அப்புறம் எத்தனை காலமானாலும் எதிர்க்கட்சியே இல்லாமல் இதை அமல்படுத்தியவர்களே அவர்களது பரம்பரையே எப்போதும் தமிழகத்தை  ஆள்பவர்களாக இருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..

Sunday, September 1, 2019


ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் நான்காவது “இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் - வருக! வருக!!



கணினித் தமிழ்ச் சங்கம்,புதுக்கோட்டை
இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் - 4 


இடம் – ஜெஜெ.கல்லூரி சிவபுரம், (மதுரைச்சாலை) புதுக்கோட்டை
நாள்- அக்டோபர்-12,13 சனி,ஞாயிறு காலை 9மணி – மாலை 5மணி
(அழைப்பிதழ் விரைவில், இது ஒரு முன்தெரிவிப்பே)

 பங்கேற்பாளர்கள் இணையஇணைப்புடன் கூடிய செல்பேசி / மடிக்கணினி கொண்டுவருதல் நல்லது. 
மற்றவர்க்கு செய்துதர முயற்சி செய்வோம்
இரண்டுநாள் மதியஉணவு, கையேடு, தேநீர்ச் செலவுக்காக 
ரூ.200 (மாணவர்க்கு ரூ.100) நன்கொடை வரவேற்கப்படுகிறது.

பங்கேற்பாளர் விவரம் தந்து முன்பதிவு செய்தல் அவசியம்

தலைமை
முனைவர் நா.அருள் முருகன்அவர்கள்
கணினித் தமிழ்ச்சங்க நிறுவுநர்
(இணைஇயக்குநர், பள்ளிக்கல்வித்துறை, சென்னை)

தொடக்கவுரை
முனைவர் .இராசேந்திரன்அவர்கள்
ஆசிரியர் - கணையாழி – இலக்கிய இதழ்
(மேனாள் துணை வேந்தர் –தமிழ்ப்பல்கலைக் கழகம்) 

முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்குவோர்
திருமிகு நா.சுப்பிரமணியன்அவர்கள்,
செயலர் ஜெ.ஜெ.கல்விக் குழுமம், புதுக்கோட்டை
முனைவர் ஜ.பரசுராமன் அவர்கள் 
      முதல்வர்ஜெ.ஜெ.கலைஅறிவியல் கல்லூரி       
முனைவர் கு.தயாநிதி அவர்கள்
       தமிழ்த்துறைத் தலைவர்

---------- பயிற்சியளிக்கும்கணித்தமிழ் வல்லுநர்கள் --------
முனைவர் மு.பழனியப்பன்காரைக்குடி,  திண்டுக்கல் தனபாலன்சிவ.தினகரன் காஞ்சி, தி.ந.முரளிதரன் சென்னை பிரின்சு என்னாரெசுப் பெரியார் சென்னை, நீச்சல்காரன்சென்னை, எஸ்.பி.செந்தில்குமார்மதுரை,  முனைவர் பா.ஜம்புலிங்கம்தஞ்சாவூர், கரந்தை ஜெயக்குமார், மற்றும் 
புதுக்கோட்டை நண்பர்கள் - 
யு.கே.கார்த்திகஸ்தூரிரெங்கன்எஸ்.இளங்கோ, புதுகை செல்வா, த.ரேவதி, ஸ்ரீமலையப்பன்காயத்ரிஉதயகுமார், திவ்யபாரதி

-------------------ஒருங்கிணைப்பாளர்கள்-------------------
நா.முத்துநிலவன்ராசி.பன்னீர்செல்வன்மு.கீதா,இரா.ஜெயலட்சுமிகு.ம.திருப்பதி,எஸ்.டி.பஷீர்அலிமகா.சுந்தர்,.மாலதி, கே.ஸ்டாலின் சரவணன்சு.மதியழகன்மைதிலிதென்றல்பொன்.கருப்பையா மீரா.செல்வக்குமார், சோலச்சி. என்.கே.சூரியா
----------------------------------------------
ஒருங்கிணைப்பில் இணைந்து பணியாற்ற விரும்பும் புதுகை நண்பர்களோ, பயிற்சிமுகாமில் பயிற்சி தர விரும்பும் வல்லுநர்களோ விவரம்தெரிவித்தால் அவசியம் பயன்படுத்திக் கொள்வோம். 
வருக வருக!

பயிற்சிக் கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்காக உதவிசெய்ய, பங்களிக்க விரும்பி நன்கொடை தர விரும்புவோர் நமது ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா அவர்களை தொடர்பு கொண்டு நன்கொடை தந்தால் மிகவும் மகிழ்வோம். வழக்கம் போல முகாம் முடிந்து, வரவு செலவு விவரம் இங்குத்தரப்படும்

இணையத் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் விவரம்
(1)  கணினியில் தமிழ் எளிய அறிமுகம் –
(2)  இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் வாய்ப்பும் – உரை –
(3)  வலைத்தளங்களில்செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்
(4)  தமிழில் வலைப்பக்கம் (Blog)உருவாக்கம் விரிவாக்கம் –
(5)  தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல்
(6)  தமிழில் புலனம் (whatsaap)செயல்பாட்டுப் பயிற்சி -
(7)  தமிழில் முகநூல் (FaceBook)செயல்பாட்டுப் பயிற்சி –
(8)  தமிழில் இன்ஸ்டாகிராம்செயல்பாட்டுப் பயிற்சி –
(9)  தமிழில் சுட்டுரை(Twitter)செயல்பாட்டுப் பயிற்சி –
(10)          ,இணைய (Online) வணிகவாய்ப்புகளும் ஏய்ப்புகளும் –
(11)          தட்டச்சு செய்யாமலே குரல்வழிப்பதிவேற்றுதல் -
(12)          மின்னூல் (E.Book) / இலவசப் பதிவிறக்கம் பற்றிய தகவல்கள் 
(13)          கிண்டில் (Kindle) படித்தல்பதிவிறக்கிச் சேமித்தல்
(14)          படைப்புகளை You-Tubeஇல்ஏற்றுதல் செயல்பாட்டுப் பயிற்சி-
(15)          மின்-சுவரொட்டி (Flex) தயாரித்தல்,செயல்பாட்டுப் பயிற்சி -  
(16)          பார்க்க வேண்டிய குறும்படங்கள்(மாலை,இரவு)

இவைபற்றிய கையேடுகள்  இலவசமாக வழங்கப்படும்

ஒரு வேண்டுகோள்...
இதைப் படிக்கும் நண்பர்கள். 
தமக்குத் தொடர்புள்ள சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து
இணையத்தமிழ் வளர்ச்சிக்கு
 உதவிடவேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணையத்தால் இணைவோம்!
---------------------------------------
மேற்காணும் தலைப்புகளே அன்றி வேறு தலைப்புகளும் அவசியம் கற்பிக்கப்படவேண்டும் என்று கருதுவோர், அதுபற்றிய தகவல்களோடு, வணிகநோக்கிலன்றி வந்து கற்பிக்கத் தக்க வல்லுநர் விவரங்களையும் தந்துதவ அன்புடன் வேண்டுகிறேன், வணக்கம்.
----------------------------------------------------------
நமது முந்திய பயிற்சி முகாம்களைப் பற்றி அறிய -
--------------------------------- 
பயிற்சி முகாம் தொடர்பான மேல்விவரம் அறிய 

        மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com,
        செல்பேசி எண்கள்-
நா.முத்துநிலவன் 9443193293,    கவிஞர் மு.கீதா-9659247363 
---------------------------------------------

1 கருத்து:

  1. அருமை ஐயா... தொழில்நுட்ப விசயத்தில் என்னை மறுபடியும் மேம்படுத்திக் கொள்ள, இதை சிறந்த வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறேன்...

    நன்றி ஐயா...
    பதிலளி


Tuesday, June 4, 2019

தமிழ்நாட்டில் இந்தி

சிறு வயதில் நீச்சல் கற்றுக் கொள்வது எளிது.அப்படியே சைக்கிள் கற்றுக் கொள்வதும்...அந்தப் பருவத்தில் கற்றுக் கொள்ளாது பெரியவர்கள் ஆனதும் அதனைக் கற்றுக் கொள்ள அதிகம் மெனக்கெட்டவர்களையும் அல்லது கற்றுக் கொள்ள இயலாதே போனவர்களையும் அதற்காக வருத்தப்படுபவர்களையும் எனக்கு அதிகம் தெரியும். நாம் கடலையா /ஆற்றையா கடக்கப்  போகிறோம் அப்படி கடக்க வேண்டி இருந்தாலும் படகு இருக்கிறது கப்பல் இருக்கிறது எனச் சொல்வது இப்போது புத்திசாலித்தனமாக ஏன் பகுத்தறிவுடன் பேசுவதுப் போலப் படலாம். ஆனால் அழகிய ஏரியைக் கண்டதும்  சட்டென இறங்கி நீந்தத் துவங்கும் நண்பனைக் கண்டதும் ஏற்படும் ஒரு விரக்தி/ சைக்கிள் ஓட்டத் தெரியாதா அப்போது பைக் பழகுவது கடினமாக  இருக்கும் என பயிற்சியாளர் சொல்லத் தோன்றும் சங்கடம் அனுபவித்தால்தான் தெரியும்     அந்த வகையில் பள்ளி நாட்களில் விளையாட்டுத்தனமாக வேறு ஒரு  மொழியைக் கற்றுக் கொள்வது நிச்சயம் பின்னாளில் அதிகம் பயனுள்ளதாகவே இருக்கும்..அது சரி கற்றுக் கொள்வோம் அதற்கு ஏன் இந்தி..உலகத்திற்கான பொது மொழி ஆங்கிலம் என்பது போல் (வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும்) இந்தியாவுக்கான பொது மொழியாக இந்தி இருக்கவே சாத்தியம்.(வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு மொழிகள் பேசப்பட்டாலும்) சிறுவயதில் ஒழுக்கத்தை கட்டாயப்படுத்தித்தான் கற்றுத் தரவேண்டும்.இங்கு இஷ்டப்பட்டால் என்கிற வாதம் சரிப்படாது.அப்படித்தான் வாழ்வுக்கு பயனுள்ளதையும்..தங்கள் தொழில் சார்ந்து பள்ளியில் ஹிந்தி அவசியம் என கட்டாயப்படுத்துகிற பகுத்தறிவுப் பாசாங்கிகள் வெளிஉலகில் அரசியல் ஆதாயத்திற்காக செய்கின்ற மாய்மாலங்களில் மயங்கிடாது பொறுப்பான தந்தையாக தாயாகச் சிந்தித்தால் இதிலுள்ள நியாயம் புரியும்..                                                          .(நானும் இந்தி போராட்டத்தில் கலந்து கொண்டவன் தான், ஆனால் இன்றுஅது முட்டாள்தனமாக தோன்றுகிறது தவறுசெய்து விட்டோம்-சாலமன் பாப்பையா! )

Tuesday, May 28, 2019

வலைத்தளத்தின் எதிர்காலம்

பத்திரிக்கைகள் நியூஸைத் தராது நியூஸ் குறித்த அவர்களது வியூஸையே செய்தியாகத் தருவதால்.. தொலைக்காட்சிகள் அதன் முதலாளிகள் சார்ந்திருக்கிற கட்சியினைச் சார்ந்தே செய்திகள் தருவதால் .....             அவைகள் நமக்கானதில்லை என மக்கள்  முடிவு செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை எனவே அப்போது நேரும் வெற்றிடத்தை வலைத் தளங்களும் முகநூலுமே நிரப்பவேண்டியிருக்கும்  என்பதை மனதில் கொண்டு இப்போதிருந்தே பொறுப்பாக எழுதப் பழகுவோம்.அதற்கான ஆயத்தப் பணியாக பொறுப்பற்று தரமற்று எழுதுவோரையும் பின்னூட்டமிடுவோரை ஒதுக்கி வைக்கவும் பழகுவோம் ( மீடியாவை விட்டு விலகியே இருப்பதால்   அஜித் அவர்களுக்கான மதிப்பு குறைந்து விட்டதா என்ன? )

Monday, May 27, 2019

கெட்டிக்கார வாக்காளன்

தன் வாயிலிருந்து வருகிற இரத்தம் என அறியாது தான் கடிக்கிற எலும்பிலிருந்து வருகிற இரத்தமெனக்கருதி இன்னும் அழுத்தமாய் எலும்பை இரசித்துக் கொண்டிருந்தது அந்தத் தெருநாய்                              அதன் முட்டாள்த்தனத்தைக் கண்டு தலையிலடித்துக் கொண்டு நகர்கிறான் அதிகப் பணம் கொடுத்தவருக்கு வாக்களிக்கும் வேகத்தில் ஓட்டுச் சாவடிக்கு ஓடும் கெட்டிக்கார வாக்காளன்

ஓட்டிங் மெஷின் ஹேக்கிங்

ஓட்டிங் மெஷினை ஹேக் பண்ணித்தான் அவுக ஜெயித்ததாகச் சொல்றாங்களே அப்படியானா தமிழ்நாட்டில மட்டும் ரிசல்ட் ஏன் இப்படி ஆகிப் போச்சு..                                                    அது ஒன்னுமில்லை வடக்கே எல்லாம் தப்பை சரியாச் செய்துட்டாங்க. தமிழ்நாட்டுல மட்டும் தப்பைத் தப்பாவே செய்துட்டாங்க அம்புட்டுத்தான்                     அய்யோ புரியும்படியாகத்தான் சொல்லேன்                                                             விசயம் சிம்பிள் ஹேக்கருக்கு சரியா இங்கிலிஸ் தெரியாது.அமித்ஷா அவர்கிட்டே " மை டியர் சன் தமிழ்நாடு ரிசல்ட் இஸ் இன் யுவர் ஹேண்ட் டோண்ட் ஃபார்கெட் மைடியர் சன்னுன்னு திரும்பத் திரும்ப சொல்லி இருக்காரு..இதை மொழி பெயர்த்தவர் தங்கபாலு மாதிரிஒருத்தர் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கையையும் சூரியனையும் மறந்திடாதன்னு டிரான்ஸ்லேட்  பன்னிட்டாரு அதனால வந்த வினைதான் இது                              அய்யோ அப்பா இதில இவ்வளவு விசயம் இருக்கா.அப்புறம் என்ன ஆச்சு                 அப்புறம் என்ன இதை வெளியே சொல்லிப்புடாதன்னு ஹேக்கருக்கு இவங்களும் சில கோடி கொடுத்து விசயத்தை அமுக்கிப்புட்டாங்க.               யாருக்கும் தெரியாத இவ்வளவு பெரிய விசயம் உனக்கு மட்டும் எப்படித் தெரிஞ்சது                                               அதெல்லாம் பெரிய விசயமே இல்ல நீயும்   மோடி அவர்களுக்கு எதிரா எழுதறவங்க ஃபேஸ்புக்கைப் பத்து நாள் படி. உனக்கும் இந்த மாதிரி பல விசயங்கள் தானா தோணும்.சரி வரட்டா

Sunday, May 26, 2019

பெரியார் மண்

லெப்ட்ல இண்டிகேட்டரைப் போட்டு ரைட்ல கையைக்காட்டி ஸ்ரைட்டா போய்க்கிட்டே இருப்போம்.ஆமா தமிழ்நாட்டு ஆட்டோக்காரன்னா சும்மாவா...   /    அதேமாதிரி   தொகுதியில எந்த ஜாதிக்காரன் எந்த மதத்துக்காரன் ஜாஸ்தி இருக்கானோ அவனை வேட்பாளராப் போட்டு பணமும் கொடுத்து ஜெயிச்சு இது பெரியார் மண்ணு இங்கெல்லாம் ஜாதி மதத்துக்கு இடமே இல்லை ன்னு கத்திக்கிட்டே திரிவோம் ஆமா ..தமிழ்நாட்டு அரசியல்வாதின்னா சும்மாவா..

Friday, February 15, 2019

இங்கு இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்

முன்பெல்லாம்
எங்களைத் தூரம் பிரித்திருந்தது
எங்களுக்கும் அதனால்
சந்திப்பின் அருமை புரிந்திருந்தது

முன்பெல்லாம்
தொடர்புச் சாதனங்கள்
எமக்கு எட்டாத உயரத்திலிருந்தன
நாங்களும் அதனால்
சாதனங்களின் அருமை அறிந்திருந்தோம்

முன்பெல்லாம்
எல்லோரும் சமதளத்தில்
இருப்பதாக உணர்ந்திருந்தோம்
நாங்களும் அதனால்
பரஸ்பர புரிதலில் இருந்தோம்

முன்பெல்லாம்
வசதிக்கான சாதனங்கள்
எங்கள் இடத்தை அடைக்கவில்லை
நாங்களெல்லாம் அதனால்
மிக நெருக்கமாகவே இருந்தோம்

எதனை நினைக்கையிலும்
முன்பெல்லாம் என்கிற நினைவு..

இழந்ததையெல்லாம் மனதில்
சுமை ஏற்றிப் போக

இப்போதெல்லாம் நாங்கள்
அன்றைய சுகந்த நினைவுகளைச் சுகித்தபடி  

 இன்றைய இருப்புக் கணக்கில் மட்டும்
விடுபடாது இருப்பதுபோலவே  இருக்கிறோம்

Friday, February 1, 2019

😭😭😭😭😭😭😭😭 அதிர்ச்சி தரும் செய்தி
*பிரபல வலைப் பதிவரும், என் அருமை நண்பருமான, திருச்சி திருமழபாடி தி. தமிழ் இளங்கோ அவர்கள் இன்று 02.02.2019 சனிக்கிழமை காலை 9.15 மணி சுமாருக்கு, மூச்சுத் திணறல் அதிகமாகி காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.*

*அன்னாரின் இறுதி யாத்திரை நாளை 03.02.2019 ஞாயிறு காலை 10 மணி சுமாருக்கு No. 27, துளசி இல்லம், 3rd Cross, நாகப்பா நகர், Near KK Near Bus Stand ....,  திருச்சியிலிருந்து புறப்பட உள்ளது.*

*தொடர்புக்கு:*
*அரவிந்தன் (ஒரே மகன்)*
*9486114574*
😭😭😭😭😭😭😭😭

Wednesday, January 30, 2019

வரப்புயர .....

"இதனை
இதனால்
இவன்
என்பதை மட்டுமல்ல...

அதனை
அவன்கண்
என்பதையும் கூட

எதனுடனும்
எவருடனும்
இணைத்துப் பொருள் கொள்ளமுடியும்

அப்படி
இன்றைய சீரழிவுக்குக் காரணம்..

எது
எதனால்
யாரால்
ஏன் என்பதனை
பொதுமைப்படுத்திச் சொல்லமுடியுமா ?"
என்றான் நண்பன்

அது பெரிய விஷயமில்லை

தீமையை எது தருமோ
அது எட்டும்படியும்

பயனற்றதை
முயன்றால் அடையும்படியும்

நன்மையை எது தருமோ
அதை அடைய முடியாதபடியும்...
உள்ளதை அறியாது...

தேவையற்றதை
தெளிவாய்த் தெரிந்து கொண்டும்

பயனற்றதை
அரைகுறையாய் அறிந்தபடியும்

அவசியமானதை
முற்றாக அறியாதபடியும்
இருப்பதால் தான் "என்றேன்

நண்பன் ஒவ்வொன்றாய்
பட்டியலிட்டப்பின் சொல்கிறான்

"ஆம் வரப்புயர "என்பதைத் தொடர
அது எங்கெங்கோ சுற்றி
கோன் என முடிவதைப் போல்
இதுவும் மூலம் தொடுகிறது
மிகச் சரியாய்" என்கிறான் திருப்தியுடன்.

Tuesday, January 22, 2019

நமதருமைப் பதிவர்கள் போலவே....


சமபந்திதான் ஆயினும்
ருசியான சத்தான சாத்வீகமான
உணவுதான் ஆயினும்..
சரிசமமாகப் பறி,மாறப்பட்டதே ஆயினும்

அள்ளியபடி பல கைகளும்
துழாவியபடி சில கைகளும்
இருக்கக் காரணம்
நிச்சயம் கைகளில்லை

மாறாக
பசித்த வயிறும்
ஏற்கெனவே
அஜீரணத்தில் அவதியுறும் வயிறும் என்பது
பறிமாறுபவனுக்குப் புரியும்..

எனவே
பறிமாறுபவன் தொடர்ந்து
பறிமாறுவதில் மட்டுமே
கவனம் கொள்கிறான்

நியாயமானதுதான் ஆயினும்
நடுநிலையில் பயன்கருதி எளிமையாகச்
சொல்லப்பட்டதுதான் ஆயினும்

இரசித்துச் பலரும்
கண்டும் காணாதபடிச் சிலரும் 
இருக்கக் காரணம்
நிச்சயம் படைப்பில்லை

மாறாக
பரிசீலித்தேற்கும் மனநிலையும்
ஏற்கெனவே
கொள்கைகளால் நிரம்பிய மனமும் என்பது
படைப்பாளிக்கும் தெரியும்

எனவே
படைப்பாளி தொடர்ந்து
படைப்பதில் மட்டுமே
கவனம் கொள்கிறான்

பதிவுலகில் தொடர்ந்து எழுதும்
நமதருமைப் பதிவர்கள்  போலவே....

Monday, January 21, 2019

இன்றைய அரசியல்..அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது ?

அந்தக் காலங்களில் நாம் இருவருமே
மனிதர்களாய் இருந்தோம்

எம் உயர்வு குறித்து
எப்போதும் சிந்தித்தபடி நீங்களும்

உங்கள் நல்வாழ்வு உயர்வு குறித்து
எப்போதும் வேண்டியபடி நாங்களும்

எங்களைச் சந்திப்பதில் உங்களுக்கிருந்த
மகிழ்வும் இன்பமும்
உண்மையாய் இருந்தது

உங்களைத் தரிசிப்பதில் எங்களுக்கிருந்த
ஆர்வமும் எழுச்சியும்
அளவு கடந்திருந்தது

அதனால்தான் இரவெல்லாம் நாங்கள்
தூங்காது விழித்துக் காத்திருந்தோம்

அதனால்தான் பகலிரவாய் நீங்களும்
சோராது சந்தித்து மகிழ்ந்தீர்கள்

இப்போது நாம் இருவருமே
மோசமான வியாபாரிகளாகி விட்டோம்

உம் நிலைப்புக் குறித்து
எப்போதும் சிந்தித்தபடி  நீங்களும்

எங்கள் அற்பத் தேவைகள் குறித்து
எப்போதும் நினைத்தபடி நாங்களும்

எங்களைச் சந்திப்பது
உங்களுக்கு இப்போது
அலுப்பாகவும் சலிப்பாகவும்

உங்களைச் சந்திப்பது
எங்களுக்கு  இப்போது
வெறுப்பாகவும் கோபமாகவும்

அதனால்தான்
இப்போதெல்லாம் நீங்கள்
அழைத்துச் செல்லவேண்டி
எம் வீட்டிலேயே காத்திருக்கிறோம்

மாறிய
சூழலறிந்து நீங்களும்
பணத்துடன் பொட்டலத்துடன்
எம் வீட்டு வாசல் வருகிறீர்கள்

இருவரில் யார் மிக மோசம்
என்னும் போட்டி
நம்முள் தொடர்ந்து கொண்டிருக்கிறது...

மிகச் சரியாகச் சொன்னால்...

விபச்சாரி வீடு போய்
பழக்கப்பட்டவன்
பழக்க தோஷம் போகாது

முதலிரவில் மனைவியிடம்
நூறு ரூபாய்க் கொடுக்க

அவளும் பழக்க தோஷம் போகாது
ஐம்பது ரூபாயைத்
திருப்பிக் கொடுத்த கதையாக...

இன்றைய நம் அரசியல்
அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...?

இப்படித்தான் சொல்லணும்

இன்னும் மிகச் சரியாய் என்றால்
இன்னும்
அசிங்கமாகத்தான்தான் சொல்லணும்..

Saturday, January 19, 2019

கலகக்காரன்.

."எத்தனை தடைகள் எதிர்ப்புகள்
வந்த போதும்
எப்படி உன்னால்.
கலகக்காரனாகவே தொடர்ந்து இருக்க முடிகிறது..
இந்த அசுர மனோபலம்
உனக்கு எங்கிருந்து கிடைக்கிறது ?"
என்கிறான் நண்பன்

" எங்கிருந்தும் கிடைக்கும்
நமக்குப் பார்க்கத் தெரிய வேண்டும்
நம் சக்தியில் நமக்கு
நம்பிக்கையும் வேண்டும்
அவ்வளவே " என்கிறேன்

"புரியவில்லை" என்கிறான்

அவனுக்கு விளக்குவதுபோல்
எங்களெதிரே
சாலையின் மறுபுற சாக்கடையோரமிருக்கும்
பூக்கடைக்கு வாக்கப்பட்டும்
நாற்றத்தை மீறி
மணந்து சிரிக்கிறது
குண்டு மல்லிகைப் பந்து

Friday, January 18, 2019

கவிநூறு நம்வசமே

மலரோடு உறவாடி
மகிழ்வோடு வலம்போகும்
நிலவோடு உறவாட
நினைவெல்லாம் பூமணக்கும்

கரையோடு தினம்கூடி
களிப்போடு சதிராடும்
அலையோடு நினைவோட
நுரைபொங்கும் மனமெங்கும்

மலையரசன் உடல்தழுவி
மதிமயங்கித் தரைநழுவும்
குளிரருவி நிலையுணர
மனமாகும் குற்றாலம்

தண்மலரைக் கூடிமனக்
களிப்போடு உலாபோகும்
வண்டினத்தின் சுகமறிய
மனம்கொள்ளும் ரீங்காரம்

இயற்கையுடன் இணைந்துவிடும்
இளம்மனது வாய்த்துவிட்டால்
இயற்கையதன் சுகம்யாவும்
யாவருக்கும் இலவசமே

கணந்தோறும் மகிழ்வோடு
சூழலிலே மயங்கவிழும்
மனமதுவும் கொண்டுவிட்டால்
கவிநூறு நம்வசமே

நவீனத் தோட்டிகளாய்..

முன்பெல்லாம்
மாதமொரு முறை
சுத்தம் செய்தால் போதும்
எனும் அளவு
நிரம்பி வழியும்
இ.மெயில்கள்...

இப்போதெல்லாம்
வாரமொருமுறை
சுத்தம் செய்யும் அளவு
நிரம்பி வழிகிறது

எரிச்சலுடன்
தேவையானவைகளை மட்டும் 
இருக்க விட்டு
மற்றவற்றையெல்லாம்
ஒதுக்கி நிமிர்கிறேன்

எதிர் ஜன்னல்வெளியில்
காக்கிச் சட்டையணிந்த தோட்டி
இரண்டு மேடுகள் கடந்து
மூன்றாம் குப்பைமேட்டைக்
கிளறிக் கொண்டிருக்கிறான்.

அவன் பின்னால் கிடந்த
இரண்டு குப்பைக் குவியல்கள்
முகநூலையும் வாட்ஸ்-அப்பையும்
நினைவுறுத்திப் போக
மீண்டும் பொறுக்கக் குனிகிறேன்

Wednesday, January 16, 2019

தமிழகத்தின் தவப்புதல்வனே

சாணக்கியத் தனமே
அரசாள  அச்சாணி
எனும் போலி நம்பிக்கையை
மக்கள் மன்றத்தில் சிலர்
பரப்பிக் கொண்டிருந்த காலத்தில்.

இல்லையில்லை
மக்கள் நல மனத்தாலும்
மனிதாபிமானத்தால் கூட
அது சாத்தியம் என
நிரூபித்துக் காட்டியவனே..

கலை கலைக்காகவே
எனும் பழமை வாத வழியில்
பலர் பயணப்பட்டு
விருதுகளும் கேடயங்களும்
பெற்றுக் கொண்டிருந்த காலத்தில்

கலை மக்களுக்காகவே
எனும் கொள்கை வழியில்
திடமாய் இருந்து
ஏழை எளிய மக்களின்
உள்ளம் கவர்ந்த உயர்ந்தவனே

வாழ்ந்தவர்  கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில்
நிறைந்தவர் யார் எனும்
கேள்வியை நீயே எழுப்பி

மறைந்து ஆண்டுகள்
நாற்பதை நெருங்கியும்
மக்கள் மனங்களில்
மறையாது நிலைத்து
அது "நான் தான் "என நிரூபிப்பவனே

உன்னை நினைத்திருப்பதே
எங்கள் நலம் எங்கள் பலம்

உன் பிறந்த நாளில்
உன் நினைவுகளில் மூழ்குவதையே
தவமாகக் கொள்கிறோம்
இன்றுபோல் என்றென்றும்
வாழ்க நீ வாழ்க நீ
தமிழகத்தின் தவப்புதல்வனே

Monday, January 14, 2019

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ஒவ்வொரு நாட்டுக்கும்
சுதேசித் திரு நாட்கள்
எனப் பல உண்டு

ஒவ்வொரு மதத்திற்கான
பண்டிகை நாட்கள்
எனப் பல உண்டு

ஒவ்வொரு ஜாதிக்கான
பண்டிகைகள் எனக் கூட
சில நாட்கள் உண்டு

ஆயினும் ஒவ்வொரு
இனத்திற்கான பண்டிகைகள்
என ஒன்றிரண்டே உண்டு

அதில்
நம் தமிழர் திரு நாளாம்
தைப் பொங்கல் திரு நாளே
முதன்மையானது எனச்
சொல்லத்தான் வேண்டுமா என்ன ?

தமிழ்ப் பதிவர்கள் அனைவருக்கும்
மனமார்ந்த பொங்கல் திரு நாள்
நல்வாழ்த்துக்கள்

Sunday, January 13, 2019

பதிவர்களுக்கு....

படுத்தபடி விழிமூடி
யோசித்துக்கொண்டிருப்பவன்
தான் தூங்கவில்லை என
நிரூபணம் செய்வதற்காக
காலையாட்டிக் கொண்டிருப்பதைப் போலவேனும்

பதிவுகள் எழுத
நேரமில்லையாயினும்
தொடர்பில் இருக்கிறோம் என்பதை
நிரூபணம் செய்வதற்காகவேணும்
பின்னூட்டமிட்டுக் கொண்டாவது இருப்போம் வாரீர்
( எனக்கும் சேர்த்துத்தான் )

பசுஞ்சோலை மாலையாய்
திருவிழாவின் கோலாகலமாய்
இணைப்புக்கும் மனமகிழ்வுக்கும்
ஆதாரமாய் இருந்த பதிவுலகு...

இன்று இருண்டு
திருவிழா முடிந்த
மறு நாள் மைதானமாய்
வெறிச்சோடிக் கிடப்பது
உங்களைப்போல்
எனக்கும் உடன்பாடில்லை

பேரெழுச்சியின் துவக்கமாய்
இத்தைத் திருநாள் முதலேனும்
பின்னூட்டமிடுதல் மூலமோ
பதிவுகள் மூலமோ
பண்டைச் செழிப்பை
மீண்டும் நிலை நிறுத்துவோம் வாரீர்

எழுத்தின் மூலம்
அகம் கண்டுத் தொடர்ந்து
சந்திப்பின் மூலம்
முகம் கண்டு மகிழ்ந்த
அந்த வஸந்த நாட்களை
இன்று முதல்
மீட்டுருவாக்கம் செய்வோம் வாரீர்

(எம் மதிப்பிற்குரிய கரந்தையாரின்
பதிவின் தாக்கத்தில் எழுதியது
அவருக்கு என் மனப்பூர்வமான
நல்வாழ்த்துக்கள்

பதிவர்கள் அனைவருக்கும் இனிய
பொங்கல் திரு நாள் நல்வாழ்துக்கள் )

Thursday, January 10, 2019

எங்களைக் குற்றவாளியாக்காதீர்கள்...

எங்களைக்  குற்றவாளியாக்காதீர்கள் 
எங்களைக் குறைகூறி அலையாதீர்கள்

கொஞ்சம் தூரமாயினும்
அமருமிடமும்
பறிமாறும் நேர்த்தியும்
திருப்திப்படவில்லையாயினும்
கைப்பக்குவமும் ருசியும்
சரியாயிருந்தால் சரி
என்ற காலம் போய்.....

ருசி கொஞ்சம்
முன்பின்னாயினும்
ஹோட்டல் இருப்பிடமும்
கார் பார்க் வசதியும்
பரிமாறும் நேர்த்தியும்
சரியாய் இருந்தால்தான்
திருப்திப்படுகிறது என்பதால்

வசதியற்றவனாயினும்
நேர்மையானவனாக
எளிமையானவனாக
கூப்பிட்ட குரலுக்கு
உடன் வருபவனாக
இருந்தால் போதும்
என்ற காலம் போய்.....

ஜெயித்தப்பின்
காணாமல் போகிறவனாயினும்
கிரிமினல் குற்றவாளியாயினும்
தேர்தல் சமயத்தில்
கொடுப்பவருள்
கூடுதலாய் கொடுப்பவனாய் இருந்தால்
சரியானவனாய்ப் படுகிறது என்பதால்

ஒப்பனைகளாயினும்
அழகுக் கடங்கியும்
பாவனைகளாயினும்
அறிவுக் கடங்கியும்
அளவுகோள்கள்
நெகிழும் தனமையற்றும்
இருந்த.காலம் போய்...

அழகென்பதே
ஒப்பனைகளாய்
அறிவென்பதே
பாவனைகளாய்
நெகிழத் தக்கதே
அளவுகோள்களாய் இருந்தால்தான்
சந்தைப்படுத்த முடிகிறது என்பதால்

சொல்லத் தக்கதை
பயனுள்ளதை
எளிமையாய்
மிக உறுதியாய்
சொல்வதென்பதே
மதிக்கத் தக்கதென
இருந்தகாலம் போய்...

பொய்யாயினும்
சுவாரஸ்யமாய்
பயனற்றதாயினும்
நேரங்கடத்தியாய்
இருக்கத் தகுந்ததே
மதிக்கத் தகுந்ததாய்
வியாபாரமாகிறது என்பதால்...

இது சரியானது 
இதற்கானது எது என்பது போய் ...
எனக்கிது சரி
இதற்கானது எது
என்பதுவே
இன்றைய   சூழலின் 
தர்மமாகிப் போனதால்

எப்போதும்,
இனியேனும்
எங்களைக்  குற்றவாளியாக்காதீர்கள் 
எங்களைக் குறைகூறி அலையாதீர்கள்

Wednesday, January 9, 2019

மடங்கிய விரல்களே நிஜம் காட்டுகிறது மௌனமாய்

வெள்ளையன்
கொள்ளையன்
அவனை விரட்டினால்
பாலும் தேனும் ஓடும்
என்றார்கள்

இப்போது நீருக்கே
அல்லாடுகிறோம்

தொழிற்புரட்சிக்குப் பின்
உற்பத்திப் பெருக்கத்தில்
எல்லாருக்கும் எல்லாம்
எளிதாய்க் கிடைக்கும் என்றார்கள்

வேட்டியிலிருந்து
கோவணத்திற்கு வந்து விட்டோம்

பசுமைப் புரட்சியில்
விளைச்சல் பெருக்கத்தில்
தன்னிறைவு
அடைந்துவிட்டோம் என்றார்கள்

கருப்பை கெட்டதைப்போல்
நிலம் விஷமானதே மிச்சம்

வெண்மைப் புரட்சியில்
பால் உற்பத்தியில்
உலகில் நாம்தான்
முன்னணி என்றார்கள்

மாட்டுத் தீவனமே
குதிரைக் கொம்பாகிப் போனது

ஜனநாயகமே
சிறந்த அரசியல் நெறி
தேர்தலே அதற்கு
அச்சாணி என்றார்கள்

தேர்தலில் சர்வாதிகளையே
தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்

பிள்ளையார்ப் பிடிக்க
குரங்கான கதையாய்
எல்லாமே மாறுபட
காரணம் எதுவாயிருக்கும் ?

ஆள்காட்டி விரல்
எதை எதையோ சுட்டிக்காட்ட
மடங்கிய விரல்களே
நிஜம் காட்டுகிறது மௌனமாய்

கட்சியும் அரசும்

சிறுவனாய் இருக்கையில்
என் போல் பலருக்கும்
காங்கிரஸ் கொடிக்கும்
அரசாங்கக் கொடிக்கும்
இருக்கும் சிறு வித்தியாசம்
தெரியவே தெரியாது.

இரண்டினையும் ஒன்றெனவே
நாங்கள்
நினைத்துக் கொண்டிருப்போம்

அவ்வப்போது வரும்
குடியரசு தினமும்
சுதந்திர தினமும்
இரண்டு வேறு வேறு என
ஞாபகமூட்டிப் போகும்
நாங்கள்
வெட்கித் தலைகுனியும்படியாய்...

இப்போது
பெரியவனாய் ஆனபின்னும்
என் போல் பலருக்கும்
கட்சியென்பதற்கும்
ஆட்சியென்பதற்கும்
இருக்கும் வித்தியாசம்
சுத்தமாய்த் தெரியவில்லை

ஆட்சியாளர்களும்
இரண்டும் ஒன்றெனவே
நினைத்துக் கொண்டிருக்க

இப்போதும்
அது அப்படியில்லை என்பதனை
அவ்வப்போது வரும்
நீதிமன்றத் தீர்ப்புகளே
ஞாபக மூட்டிப் போகிறது

எல்லோரும் 
தலையில் அடித்துக் கொள்ளும்படியாய்...