Saturday, September 23, 2017

என்றென்றும் புகழ்மங்கா எம்மதுரை வாழியவே....

மஞ்சளோடு குங்குமமும்
மணக்கின்ற சந்தனமும்
மங்களமாய் ஊரெங்கும்
மணக்கின்ற மாமதுரை

சுந்தரனாம் சொக்கனோடு
சரிபாதி எனஆகி
எங்களன்னை மீனாட்சி
எமையாளும் சீர்மதுரை

அன்னைமடித் தவழ்ந்துதினம்
அகம்மகிழும் குழந்தையாக
மண்தொட்டு மகிழ்ந்தோடும்
வைகைநதித் தண்மதுரை

மணக்கின்ற மல்லியதன்
மணம்போல நிறம்போல
குணம்கொண்ட நிறைமாந்தர்
நிறைந்திருக்கும் நன்மதுரை

நகரெல்லாம் விழாக்கோலம்
நாளெல்லாம் கொண்டாட்டம்
தவறாதுக் காண்கின்ற
தவச்சீலம் தென்மதுரை

தூங்காதப் பெருநகரம்
கோவில்சூழ் மாநகரம்
ஓங்குபுகழ் தமிழ்வளர்த்த
ஒப்பில்லாத் திருமதுரை

தென்மதுரை தண்மதுரை
சீர்மதுரை வாழியவே
என்றென்றும் புகழ்மங்கா
எம்மதுரை வாழியவே







Wednesday, September 20, 2017

நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்


மரத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும்
ஆணிவேர்தான் காரணம்
என்பதை விவசாயிக்கு விளக்க வேண்டியதில்லை

மாளிகையின் நிலைப்புக்கும் உறுதிக்கும்
அஸ்திவாரம்தான் முழுக்காரணம் என்பதை
எந்த பொறியாளருக்கும  
விளக்க வேண்டியதில்லை

இச்சமூகத்தின் வளச்சிக்கும் மேன்மைக்கும்
பெண்கள்தான்காரணம் என்பதை
இந்தியாவில் எவருக்கும் யாரும்
விளக்கவேண்டிய அவசியமே இல்லை

ஏனெனில் இதனைஆதியிலேயே
மிகத் தெளிவாக அறிந்திருந்தனால்தான்......

படைக்கும் பிரம்மனுக்குத் துணையாக
கலைக்கும்கல்விக்குமான கலைமகளை
துணையாக்கி மகிழ்ந்திருக்கிறான்

காக்கும் திருமாலுக்கு இணையாக
கருணையும்செல்வத்திற்குமான திருமகளை
துணைவியாக்கி குதூகலித்திருக்கிறான்

அழிக்கும் ருத்திரனுக்கு இணையாக
ஆக்ரோஷமும்சக்தியின் சொரூபமான
மலைமகளை இணையாக்கி
இன்பம் கொண்டிருக்கிறான்

கலைமகள் துணையற்று படைத்தலும்
திருமகள் கருணையற்று காத்தலும்
சக்தியின் அருளற்று அழித்தலும்
ஆகாத ஒன்று என அறிந்ததால்தான்
முப்பெரும் தேவியரை பிரதானப் படுத்தி
ஒன்பது இரவுகளை தேர்ந்தெடுத்து
 நவராத்திரியாக கொண்டாடியும்  மகிழ்ந்திருக்கிறான்

அவர்களின் உள் நோக்கமறிந்து
நாமும் தொடர்ந்து கொண்டாடி மகிழ்கிறோம்

குழந்தையாய்
முழுமையாக அவளைச்  சார்ந்திருக்கும் நாளில்
அன்பின் மொத்த வடிவான   அன்னையாக

கணவனாக
அவளுக்கு இணையாக சேர்ந்திருக்கும் நாளில்
பின்னிருந்து இயக்கும் சக்தியாகத்  தாரமாக

வயதாகி
சக்தியிழந்து ஓய்ந்துச் சாய்கிற நாளில்
அனைத்துமாய்  தாங்கும் அன்புமிக்க மகளாக

 மண்ணகத்தில் மங்கையர் எல்லாம் கண்கண்ட
முப்பெரும் தேவியராய்த் திகழ்வதாலேயே

மங்கையரைக் கௌரவிக்கும் நாளாகவே இந்த
 நவராத்திரித் திரு நாளைக் கொண்டாடி
 நாமும் மகிழ்கின்றோம்

அவர்களது தியாக உள்ளங்களை இந் நாளில்
 சிறிதேனும் நாமும் கொள்ள முயல்வோம்

அவர்களோடு இணந்து  சமூகம்  சிறக்க
 நாமும்  நம்மாலானதைச் செய்வோம்

அனைவருக்கும் இனிய நவராத்திரி தின
நல்வாழ்த்துக்கள்  

Tuesday, September 19, 2017

"வரம் கொடுத்தவன் தலையிலேயே

"வரம் கொடுத்தவன்
தலையிலேயே
கைவைக்க முயற்சித்த
அசுரன் கதையில்
எனக்கு நம்பிக்கையில்லை"
என்றார் அந்த முதியவர்

"எனக்கும் அப்படித்தான்
அரக்கனே ஆயினும் கூட
அப்படிச் செய்ய மனம் வருமா ?"
என்றார் அடுத்தப் பெரியவர்

அடுத்திருந்தப் பெரியவர் மட்டும்
"எனக்கு நம்பிக்கை இருக்கிறது
முயற்சித்த இல்லை
கைவைத்த....."
என்றார் விரக்தியாய்

பெரியவர்கள் இருவரும்
ஒரு பத்தாம்பசலியைப்
பார்ப்பதுப் போல
அவரைப் பார்க்க...

அவர் இப்படிச் சொன்னார்
"வாரீசுகள் வசதியாய் இருந்தும்
இந்த வயோதிகர் இல்லத்தில்
இருக்கிற நாமெல்லாம் யாராம்?
அனுப்பி வைத்தவர்கள் எல்லாம் யாராம் ?"
என்றார் மெல்லச் சிரித்தபடி

சிறிது நேரம் யாரும்
பேசிக் கொள்ளவுமில்லை
ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொள்ளவுமில்லை

மெல்லக் கனத்த இருள்
சூழத் துவங்கியது
வெளியிலும்....

Monday, September 18, 2017

யாருக்குப் பொருந்தும் ?

யாருக்குப் பொருந்தும் ?

திருடிக் கொண்டு ஓடுகையில்
கண்டு கொண்ட
மக்கள் கூட்டம்
"திருடன் திருடன்' எனக் கத்தியபடி விரட்ட

கெட்டிக்காரத் திருடன்
தானும்
"திருடன் திருடன் " எனக் கத்தியபடியே
முன்னே ஓடுகிறான்

பார்ப்பவரையும்
விரட்டுபவர்களையும்
குழப்பியபடியும்
ஏமாற்றியபடியும்..

துரோகம் இழைத்ததற்காக
"அவர்" இருக்கையில்
ஒதுக்கியே வைக்கப்பட்டவர்
இப்போது
"துரோகிகள் துரோகிகள் "
என அனைவரையும்
தூற்றியபடியே
நகர் வலம் வந்து கொண்டிருக்கிறார்

தொண்டர்களையும்
மக்களையும்
முட்டாள்கள் என
நினைத்தபடி
கணித்தபடி

(இது யாருக்குப் பொருந்தும் என
கணிக்க முடியாதவர்களுக்கு
ஒரு அருமையான க்ளூ

அவர் மூன்றெழுத்து இன்சியலால்
அழைக்கப்படுபவர்

மூவரும் அப்படித்தானே அழைக்கப்படுகிறார்கள்
என நீங்கள் யூகித்தால் அதற்கு
நான் பொறுப்பல்ல )

Friday, September 15, 2017

நிகழ்வுகள்

நாளை (16-09-2017) காலை 9 மணிக்கு மதுரை பாத்திமா கல்லூரித் தமிழ்த்துறை மாணவியரைக் கொண்டு முனைவர்.மு.இராமசாமி உருவாக்கிய 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' நாடகம் நிகழ உள்ளது. வாய்ப்புள்ளோர் அவசியம் வருக! ....

Monday, September 11, 2017

நல்லதோர் வீணையாய்....

"நல்லதோர் வீணையாய் "அவனிருந்தான்
அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து விடியலைக் காட்ட முடிந்தது

"சுடர்மிகும் அறிவுடன் "அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி நல்வழி காட்ட முடிந்தது

"எமக்குத் தொழிலே கவிதை" யென்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை விடுவித்து
கவிதையை அனைவருக்குமான தாக்க முடிந்தது

"ஊருக்குழைத்தலே" தன் கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு அடித்தளமிட முடிந்தது

" இமைப்பொழுதும்"  இருக்கும்வரைச் சோராதிருந்தான்
அதனால்தானே இளம்வயதில்
 காலனவன் அழைத்தபோதும்
காலத்தை வென்றவனாய் காவிய மானவனாய்
பாட்டுக்கொருவனென  இன்றளவும்
 அவன் மட்டுமே பரிமளிக்க முடிகிறது