அர்த்த ஜாமத்தில்
மயானத்தின் மத்தியில்எறியும் சிதையருகில்
எப்போதும்
"அதுகளும்" நானும் மட்டும் இருப்போம்
எரிகின்ற சிதையை
"அதுகள்" எதையோஇழந்ததைப் போலப் பார்க்கும்
போதையின் உச்சத்தில்
சில சமயம்
என்னை அறியாது நான் பிதற்றுவேன்
"அதுகளும்"
தன்னை அறியாது
பிதற்றத் துவங்கும்
"அது" ஆணாக இருப்பின்
முதலில் ஒரு ஏக்க பெருமூச்சு விடும்
பின்
"அவளை அவ்வளவு கஷ்டப் படுத்தியிருக்க வேண்டியதில்லை"
எனச் சொல்லி
விக்கி விக்கி அழும்
நான் ஆறுதல் சொல்லித் தேற்றுவேன்
"அடுத்த ஜென்மத்திலாவது மனிதனாக
நடந்து கொள்ள வேண்டும்"
எனப் பிதற்றி நகரும்
"அது" பெண்ணாக இருப்பின்
"இனி இந்த மனிதன் என்ன பாடு படப் போகிறானோ' என
விம்மி விம்மி அழும்
நானும் ஆறுதல் சொல்வேன்
முடிவாக
"படட்டும்...நன்றாகப் படட்டும்
அப்போது தான் என்னருமை தெரியும்"
எனச் சொல்லி நகலும்
போதையின் உச்சத்தில்
எனக்கும் ஞானம் வரும்
மயானம் விட்டு வெளியேறுகையில்
நானும் முழு மனிதனாகத்தான் போவேன்
வீதி கடந்து வீடு நுழைகையில்
எனக்கு முன்பாகவே
என் "வீராப்பு" அமர்ந்திருக்கும்
"மனிதன் செத்து பொழச்சு வாரான்
தூக்கத்தப் பாரு" என
என் குரல் ஓங்கி ஒலிக்கும்
ஒரு கால் கதவை உடைக்கும்
போதையில்
உடல் மட்டும்தானா ஆடும்?
வீடென்ன
வீதியே ஆடத் துவங்கும்