மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தும்
படைப்பின்
ஆன்மா புரிந்த அளவு
அதன் அர்த்தங்கள் புரியவே இல்லை
படைப்பின்
ஒவ்வொரு வரியிலும் துடிக்கும்
விழியற்றவனின்
புதிய இடத்துப் பயணப் பதட்டமும்....
கருவானதை
விழுங்கவும் உமிழவும் முடியாது தவிக்கும்
திரு நீல கண்ட மயக்கமும்
ஒட்டுமொத்த படைப்பிலும் ஊடாடும்
இறுதி மூச்சுக்காரனின்
பிடிதேடும் அவலமும்...
என்னுள்ளும்
பதட்டத்தையும்
தவிப்பையும்
அவலத்தையும்
பரவ விட்டுப் போகிறது
படைப்பின் ஆன்மாவைப் புரிந்து கொண்டவனுக்கு
அர்த்தங்கள் அவசியமா என்ன ?