Showing posts with label யாதோ. Show all posts
Showing posts with label யாதோ. Show all posts

Monday, January 20, 2020

"வாழ்வாங்கு வாழ்பவன் "

ஒரு அபூர்வமான இடத்திற்கு
இன்பச் சுற்றுலா சென்று வந்த பின்...

இன்னும் சரியாய்த் திட்டமிட்டு
கூடுதல் இடங்களை
இரசித்துப் பார்த்திருக்கலாமோ..

ஓய்வெடுத்தலைக் குறைத்து
இன்னும் பயணத்தைப்
பயனுள்ளதாக ஆக்கி இருக்கலாமோ..

என எண்ணி எண்ணி
வருந்துபவனைப் போல் அல்லாது .

அபூர்வமாய் வாய்த்தப் பிறப்பின்
அந்திமக் காலத்தில்.

இன்னும் கூடுதலாய் உழைத்து
பிறருக்குக் கொடுத்து இரசித்திருக்கலாமோ

இன்னும் ஒவ்வொரு நொடியினையும்
நேர்த்தியாய் இரசித்துக் களித்திருக்கலாமோ

என்கிற எண்ணமே தோன்றாதபடி
அப்படியே வாழ்ந்து கொண்டிருப்பவன் எவனோ

அவனே "வாழ்வாங்கு வாழ்பவன் "
எனும் வார்த்தைக்குப் பொருளானவன்

மற்றவரெல்லாம் நிச்சயமாய்
சாகாததால் இங்கிருப்பவர்கள்  அவ்வளவே

Tuesday, January 22, 2019

நமதருமைப் பதிவர்கள் போலவே....


சமபந்திதான் ஆயினும்
ருசியான சத்தான சாத்வீகமான
உணவுதான் ஆயினும்..
சரிசமமாகப் பறி,மாறப்பட்டதே ஆயினும்

அள்ளியபடி பல கைகளும்
துழாவியபடி சில கைகளும்
இருக்கக் காரணம்
நிச்சயம் கைகளில்லை

மாறாக
பசித்த வயிறும்
ஏற்கெனவே
அஜீரணத்தில் அவதியுறும் வயிறும் என்பது
பறிமாறுபவனுக்குப் புரியும்..

எனவே
பறிமாறுபவன் தொடர்ந்து
பறிமாறுவதில் மட்டுமே
கவனம் கொள்கிறான்

நியாயமானதுதான் ஆயினும்
நடுநிலையில் பயன்கருதி எளிமையாகச்
சொல்லப்பட்டதுதான் ஆயினும்

இரசித்துச் பலரும்
கண்டும் காணாதபடிச் சிலரும் 
இருக்கக் காரணம்
நிச்சயம் படைப்பில்லை

மாறாக
பரிசீலித்தேற்கும் மனநிலையும்
ஏற்கெனவே
கொள்கைகளால் நிரம்பிய மனமும் என்பது
படைப்பாளிக்கும் தெரியும்

எனவே
படைப்பாளி தொடர்ந்து
படைப்பதில் மட்டுமே
கவனம் கொள்கிறான்

பதிவுலகில் தொடர்ந்து எழுதும்
நமதருமைப் பதிவர்கள்  போலவே....

Thursday, November 1, 2018

சர்க்காருக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை

எதைச் சொல்வது என அறியாது
எப்படிச் சொல்வது என்பதறிந்து
என்ன செய்வது என அறியாது
உப்பரிகையில் உலாத்தியபடி சிலர்

எதைச் சொல்வது என்பதறிந்து
எங்கு எப்படிச் சொல்வதென அறியாது
என்ன செய்யலாம் என பிதற்றியபடி
வீதியில் திரிந்தபடிப் பலர்

எதை எப்படி என இரண்டுமறிந்தவர்
முன்புபோல் ஏன் இல்லை என
விசனப்பட்டு இருவருக்குமிடையில்
அனாதைகளாய் கதைகளுக்கான கவிதைகளுக்கான
பல அற்புதக் கனவுகளும் கற்பனைகளும்....

Wednesday, October 31, 2018

தலைப்பும் கவிதையும் கவிஞனும்

தயிருக்குள் தயிராகவே
தனைமறைத்த வெண்ணையாய்க்
கவிதைக்குள் புலப்படாது மறைந்திருந்து

கவிஞனின் தேடுதல் நிறைவுற
மெல்லத் தலைக்காட்டும் நற்தலைப்பும்

மொட்டுக்குள் நேர்த்தியாய்
மறைந்திருக்கும் இதழ்களாய்த்
தலைப்புக்குள் சூட்சுமமாய் ஒளிந்திருந்து....

கவிஞனின் சிந்தனை ஒளிபட
மெல்ல விரியும் பூங்கவிதையும்

கண்ணுக்கினிய காட்சியாய்
நிகழ்வாய் உணர்வாய்
அரூபமாய் எங்கெனும் ஒளிர்ந்திருந்ததை

கண்டு உணர்ந்து இரசித்து
கவியாக்கி மகிழும் கவிஞனும்

ஒன்றுக்குள் ஒன்றாயும்
ஒன்றின்றிலிருந்து ஒன்றாயும்
ஒன்றின்றி ஒன்று இல்லையாயினும்..

அவைகளுக்கான இடம் விட்டு நகராதும்
இடைவெளிக் காக்கும் நாசூக்கும் கூட...

புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டுமென
வாழ்வின் சூட்சுமம் ஒன்றை
சொல்லாது சொல்லித்தான் போகிறது

Monday, October 29, 2018

ஆனந்தத்தின் அற்புதம்

அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும்

யானையக் கொண்டு
பிச்சை எடுப்பதை விட
எடைத் தூக்கப் பயிற்றுவிப்பது
எளிதானதில்லை என்று.

ஆயினும் அவர்கள்
எடைத் தூக்க பயிற்றுவித்தலையே செய்கிறார்கள்

அவர்களுக்கு உறுதியாய்த் தெரியும்

புல்லாங்குழல்கொண்டு
அடுப்பூதுவதை விட
இசைப்பயிற்சி மேற்கொள்வது
சிரமமானது என்று

ஆயினும்
இசைப்பயிற்சிப் பெறுதலையே நாளும் செய்கிறார்கள்

அவர்களுக்கு திட்டவட்டமாய்த் தெரியும்

ஜாதி மதம் கொண்டு
ஒற்றுமைப் படுத்துவதை விட
வேற்றுமைப் படுத்துதலே மிக எளிதென்று

ஆயினும் அவர்கள்
ஒற்றுமைப் படுத்தவே நாளும் முயல்கிறார்கள்

அவர்களுக்குச் சந்தேகமின்றித் தெரியும்

சமூக வலைத் தளங்களில்
பயனற்ற சுவாரஸ்யங்களுக்கு இருக்கும் மதிப்பு
பயனுள்ள உண்மைகளுக்கு இல்லை என்று

ஆயினும் அவர்கள்
பயனுள்ள உண்மைகளையே நாளும் பதிவு செய்கிறார்கள்

காரணம் அவர்கள் அனைவருக்கும்
எவ்வித ஐயமுமின்றித் தெரியும்....

எலி வேட்டையாடித்
ஜெயிக்கக் கிடைக்கிற மகிழ்வை விட
புலி வேடையாடி
தோற்பதில் உள்ள ஆனந்தத்தின் அற்புதம் 

Tuesday, August 14, 2018

ஆயிரம் பதிவுகடந்தும்...

அறவுரையாய் அல்லாது
அறிவுரையாய் இல்லாது
அனுபவ உரையாய்...

அறிவுறுத்தியும் சொல்லாது
அலட்சியமாயும் சொல்லாது
எளிமையாய் மிக  இயல்பாய்..

கவிதையாயும் இல்லாது
உரையாயும் இல்லாது
இரண்டுக்கும் இடைப்பட்டதாய்..

இளக்கிய கவிதையாய்
இறுக்கிய உரையாய்
வசனகவிதை எனும் படியாய்

இழுத்தும் செல்லாது
ஒதுக்கியும் போகாது
உடன்வரும் வழிகாட்டியாய்..

பாண்டித்தியம் காட்டாதும்
"படி "இறங்கிச் சாயாதும்
தரமது நிலைக்கும்படியாய் ...

உயர்த்தும்படி இல்லையெனினும்
ஒதுக்கும்படி இல்லாது
தவறாது தொடரும்படியாய்

வேகமது குறைவெனினும்
விட்டுவிடாது தொடர்ச்சியாய்
எட்டாம் ஆண்டு எனும்படியாய்

ஆயிரம் பதிவுகடந்தும்
அயராது தொடர்கிறேன்
ஆரம்ப நாளைப்  போலவே

என்றும் குறையாது
தொடரும் உங்கள்
ஆதரவைப்  போலவே...

 வாழ்த்துக்களுடன்....


Sunday, March 5, 2017

ஒட்டக் காய்ச்சிய உரை நடையே

காதல் உணர்வதுப்   பூக்கையில்
சேர்ந்தே பிறந்துப்  பரவும்
மகரந்த மணமே

வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே

கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே

மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
 கூர்மிகுக்  கோடாலியே

தனிமைத் துயர்ப்  போக்கி
ஏகாந்தச்  சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே

குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு  பாணமே

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே

தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச்  தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவோ

கவிதைபெண்ணே உனக்கு ஈடாய்
உலகினில் மாற்று ஏது சொல்
எமக்கு  உன் அருளை
என்றும்போல்  வாரிவழங்கிச் செல்

Thursday, June 4, 2015

பாலபாடம்

 தொழுகைச் சப்தம் கேட்டு
பஷீர் வீடு வரும் அல்லா
எதிர்வீட்டு
ஜேம்ஸ்ஸின் வேண்டுதலை
ஏன் கண்டுகொள்வதில்லை ?

பிரார்த்தனைக்கு உருகி
ஜேம்ஸ் வீடு வரும் ஏசு
தவறியும்
ஏன் பஷீரைப் பார்ப்பதேயில்லை ?

பஜனைக்கு உருகி
பழனியைப் பார்க்க வரும் பார்த்தன்
பஷீரையோ ஜேம்ஸையோ
ஏன் சட்டைசெய்வதே இல்லை

இறைவனும்
கட்சித் தலைவன் போல்தானா ?

மாற்றுக் கட்சியினர் மனோபாவம்
வாலறிவனுக்கு எதற்கு ?

குழப்பச் சகதியில்
புரண்டுக் கிடந்தேன் நான்

என்னைக் கண்டு சிரித்த நண்பன்

"யானையைக் கூடையில் அடைக்கவும்
கோழியைச் சங்கிலியில் கட்டவும்
முயலுகிற மூடனாகிப் போனாய் நீ

நாசியால் கேட்கவும்
காதால் நுகரவும் எத்தனிக்கும்
கோட்டியாகிப் போனாய் நீ

அறிவுக்கும் நம்பிக்கைக்கும் என்றும்
ஏழாம் பொருத்தமே

அறிவு சாதிக்காததை
நம்பிக்கை சாதிக்கும்

அறிவு நம்பிக்கையை என்றும்
வம்புக்கே இழுக்கும்

பாலபாடம் இது
புரிந்தால் மட்டுமே
முன்னதற்கு விளக்கம் கிடைக்கும்

இல்லையெனில் குழப்பமே
கூடுதலாகிப் போகும்

இது நம்பிக்கை குறித்த விஷயம்
ஆராச்சிக்குரியதில்லை"என்றான்

பாலபாடம் கற்கத் துவங்குகிறேன் நான்

Tuesday, May 20, 2014

தீதும் நன்றும்.............

தீதும் நன்றும்
பிறர் தர வருவதில்லை
நாம் பெற்று வைத்துக் கொள்வதே
நமக்கான தாகிவிடுகிறது

இனியேனும் தீமைகளை மறுத்து
நன்மைகளை மட்டுமே பெற  முயலுவோம்

நட்பும் பகையும் கூட
வெளியில் நிச்சயம் இல்லை
நம் பலமே நண்பன்
பலவீனமே பகைவன்

இனியேனும் பலவீனத்தை ஒதுக்கிவைத்து
பலத்தை மட்டுமே பெருக்கப பயிலுவோம்

வெற்றியும் தோல்வியும்
பிறருடனான ஒப்பீட்டில் இல்லை
நம்முடனான ஒப்பீடுமட்டுமே
சரியானதும் முறையானதும்

இனியேனும்  பிறர் உயரம் விடுத்து
நம்மை அளக்கப் பழகி உயர்வோம்  

வாழ்க்கையென்பது
ஒன்றை அடைதலும்
ஒன்றில் அடைதலும்இல்லை
அது பயணம்  மட்டுமே

இனியேனும்  அனுபவித்துப் பயணித்து
வாழ்வினை  அர்த்தப்படுத்தி மகிழ்வோம்  

Thursday, May 8, 2014

கவிதைப் பெண்ணும் காதல் நண்பியும்

காக்க வைத்து தவிக்க விட்டுப்
பார்த்து ரசிப்பதில்-பின்பு
சேர்த்து  நிறையக் கொடுத்து நம்மைக்
கிறங்க வைப்பதில்

தூக்கம் கெடுத்து விழித்து நம்மை
நினைக்க வைப்பதில்-எதிர்
பார்ப்பு இல்லா நேரம் நம்முள்
தானாய் நிறைவதில்

கைக்கு எட்டும் தூரம் இருந்தும்
எட்டித்  திரிவதில்-கண்கள்
பார்க்க இயலா இடம் இருந்தும்
தெளிவாய்த் தெரிவதில்

ஈர்க்க வைத்துப் பித்தன் போல
அலைய வைப்பதில்-தானே
தேர்ந்த நல்ல அடிமைப் போலப்
பணிந்து நிற்பதில்

பார்க்கும் எதையும் தன்னைப் போல
தெரியச் செய்வதில்-நாம்
பார்க்கும் போது  மட்டும்  தன்னை
மறைக்க முயல்வதில்
 
கூர்மை யாக எண்ணிப் பார்க்க
கவிதைப் பெண்ணுமே -நாம்
தேர்ந் தெடுத்த    நண்பி(மனைவி ) தன்னை
நினைவில்   நிறுத்துமே

Wednesday, May 7, 2014

வள்ளுவன் சொன்ன ராஜ ரகசியம்

சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
ராஜ ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்

Tuesday, May 6, 2014

கவிமூலம்

சின்னப் பொண்ணு செல்லப் பொண்ணு
உன்னைத் தாண்டிப் போனா
தாண்டிப் போகும் கன்னிப் பொண்ணும்
கண்ண டிச்சுப் போனா
மண்ணை விட்டு விண்ணில் நீயும்
தாவி ஏற மாட்டியா-அந்த
கம்ப னோட மகனைப் போல
மாறிப் போக மாட்டியா ?

இனிய நினைவு உன்னில் பெருக 
மகிழ்ந்து நிற்கும் போது
குளிந்த நிலவும் மனதைத் தடவி
கொஞ்சிச்செல்லும் போது
உலகை மறந்து உன்னை மறந்து
பறக்க நினைக்க மாட்டியா-அந்த
உணர்வை கவியாய் சொல்ல நீயும்
முட்டி மோத மாட்டியா ?

வலிமை இருக்கும் திமிரில் ஒருவன்
எல்லை மீறும் போது
எளியோன் தன்னை எட்டி உதைத்து
பலத்தை காட்டும் போது
உதிரம் கொதிக்க கண்கள் சிவக்க
புலியாய் சீற மாட்டியா-அந்த
வலியைச் சொல்ல நாலு வார்த்தை
நீயும் பேச மாட்டியா ?

கண்ணில் காணும் காட்சி எல்லாம்
கனவு போலத் தானே
தண்ணீர் மேலே போட்ட கோலம்
தானே வாழ்வு தானே
உண்மை இதனை உணர்ந்து கொண்டால்
முதிர்ச்சி கொள்ள மாட்டியா-நீயும்  
அந்த  ராமா னுஜனைப் போல
உரத்துக்  கதற மாட்டியா ?

விதையாய் கவிதை அனவரி டத்தும்
நிறைந்து தானே  கிடக்கு
விரைந்து வெளியே  விளைந்து வரவே
தவித்துத் தானே  கிடக்கு
முறையாய் இதனைப்  புரிந்து  கொண்டால்
மட்டும்  போதும் போதுமே--உன்னுள்  
நிறைவாய்க்  கவிதை நூறு  கோடி
தானாய்ப்  பெருகிக் கொட்டுமே  ! 

Sunday, May 4, 2014

பிணம் கொண்ட மாலை

நாசிக்கு மணமும்
நாவுக்குச் சுவையும்
ஊசிமனைக் குறையும் இன்றி-உணவு
முழுமையாத் தந்த போதும்

உடலுக்கு ஊறு
விளைவிக்கு மாயின்
விஷம்போலத் தானே உணவு-அதை
விலக்குதல் தானே அறிவு

மயங்கிடும் வண்ணமும்
மதித்திடும் வண்ணமும்
உயர்தர உடையே ஆயினும்-அதனால்
மதிப்பது கூடும் போதினும்

சூழலுக்கு மாறாய்
இருந்திடு மாயின்
தீயது தானே உடையே-அதைத்
தவிர்த்திடல் தானே முறையே

அரண்மணை அளவும்
மயக்கிடும் அழகும்
நிறைந்தே இருந்த போதும்-வீடு
வியத்திட வைத்த போதும்

நிம்மதிக்கு ஊறாய்
இருந்திடு மாயின்
நிச்சயம் வீடும் காடே-அதில்
வசிப்பதும் துயரம் தானே

பாகுபோல் எதுகையும்
பால்போல் மோனையும்
ஏதுவாய் கலந்த போதும்-கவிக்கு
சுவையாக அமைந்த போதும்

பயனற்ற கருவுக்கு
பல்லக்கு தூக்கின்
விழலுக்கு நீர்போல் தானே-நிச்சயம்
பிணம் கொண்ட மாலை   தானே

Saturday, May 3, 2014

முரண்

இன்றைய நிலையில்-----
அமைதியான சூழலுக்கு
அன்றாடம் போராடும்படியானதும்
எளிமையாக இருப்பதற்கு
அதிக செல்வச் செழிப்பு வேண்டும்படியானதும்
சும்மா இருப்பதற்கு
அதிகப் பிரயத்தனப்படும்படியானதும்
வாழ்வாங்கு வாழ அன்றாடம்
செத்துச் செத்துப் பிழைக்கும்படியானதும்

முரணெனப்பட்டாலும்
துயரெனப்பட்டாலும்
வாழ்வினை
அர்த்தப்படுத்துவதும்
அழகுப்படுத்துவதும்
அதுவாகத்தானே இருக்கிறது ?

சாரமற்ற வாழ்வில் ருசிகூட்டவும்
சோம்பலை ஒழித்து வேகம் கூட்டவும்
வெறுமையான வாழ்வினைச் சுவாரஸ்யப்படுத்தவும்
ஒருவகையில் முரண் என்பதுவும்
தேவையாகத்தானே இருக்கிறது ?

Tuesday, April 29, 2014

பொருள் என்பதற்கான பொருள்

பொருட்களின்
 பயன்பொறு த்து
அதன் பயன்பாடுபொறு த்து
 புனிதம் பொறு த்து
அதனதன் இடத்தில்
அந்த  அந்தப் பொருட்களை
தன் செயல்களுக்கு  உதவும்படி
வைப்பதுவும்
தன் வளர்ச்சிக்கு  அதனை
முறையாகப் பயன்படுத்துவதுவே
புத்திசாலித்தனம்

 மாறாக
 இடம் மாற்றிவைப்பது
குழப்பத்தை மட்டுமல்ல
கால விரயத்தை மட்டுமல்ல
பொருட்களின் பயன்பாட்டை மட்டுமல்ல
அந்தப் பொருளையே கூட
அதிகம் பாதிக்கக் கூடும்
அதன் மதிப்பையே கூட
முற்றாக அழிக்கக் கூடும்

ஆயினும்
பொருட்களுக்கு
கூடுதல்  இடத்தையும்
 எல்லா  இடத்தையும்
கொடுத்துவிட்டு
இடமின்றித் திரிவதும்
தடுமாறித்  தவிப்பதுவும்
நிச்சயம் புத்திசாலித்தனமில்லை

பொருள் என்பதற்கான பொருள்
கார் சாவி, செருப்பு ,பேனா எனத்தான்
இருக்கவேண்டுமா என்ன ?
அது ஜாதி மதம் அரசியல்
எனக் கூட
இருக்கலாம்தானே !

Monday, April 28, 2014

முட்டுச் சந்து

ஒவ்வொரு பண்டிகையின் போதும்
சட்டைக்கு அளவு கொடுக்கையில்
"கொஞ்சம் வைத்துத் தை
வளர்கிற பிள்ளை " எனச் சொல்லி
கொஞ்சம் பெரிதாகவே தைத்துக் கொடுப்பாள் அம்மா
என்றைக்கோ...எவனோ..அதன் காரணமாய்
"தொள தொள மணி "என வைத்த பெயர்
இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது

கல்லூரிக்குள் நுழையும் நாள் முதலே
வேலைக்கான தயாரிப்புப் பணியில்
முழுவதுமாக என்னை முடக்கி வைப்பார் அப்பா
கல்லுரிக் கலாட்டா
நண்பர்கள் உல்லாசம் என
நான் கதைவிடுவதெல்லாம் கூட
சினிமா பார்த்துக் கற்றுக் கொண்டதுதான் 

சம்பாத்தியம் தந்த தெம்பில்
கொஞ்சம் நான்
நடுத்தரம் மீறிய உல்லாசத்தில்
மிதக்க நினைத்தாலும்
ஏன் நடக்க நினைத்தாலும் கூட
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து
உபன்யாசம் செய்து என்னை
ஓய்ந்து உட்காரச் செய்வாள் மனைவி.

நடுவயதில்
திமிறித் தாவிய தேவைகளை
அடக்கி ஒடுக்கிய மிதப்பில்
அல்லது அலுப்பில்
கொஞ்சம் ஓய்ந்து சாய எத்தெனிக்கையில்
பால் வைத்த நெற்பயிறாய்
பருவம் எய்தினின்று
என்னை பதறச் செய்வர் பிள்ளைகள்.
அதனால்
தொடரோட்டம் தொடர்ந்து தொடரும்.

அனைத்து கடமைகளையும்
செவ்வனே செய்து முடித்து
நிகழ்காலக் காற்றைக் கொஞ்சம்
சுவாசிக்க முயலுகையில்
செத்த நாக்கிற்கு கொஞ்சம்
சுவை காட்ட நினைக்கையில்
"பழைய நினைப்பா பேராண்டி.."என
பரிகாசம் செய்வான் நண்பன்.

எனக்கென்னவோ..இப்போதெல்லாம்...
கிழிந்த சாக்குப் பையில்
அடுக்கி வைக்கப்பட்ட அடுக்கு இலையை
எடுக்க முயலும் ஒவ்வொரு முைற்யும்
"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி
கடைசி வரையில்
பச்சை இலையில் சாப்பிடாமலே போன
பாட்டியின் நினைவுதான்
அடிக்கடி வந்து தொலைக்கிறது.

என்ன செய்வது...
உடலிருக்கும் இடத்திலேயே மனதை வைப்பதும்
எப்போதும்
நிகழ்காலத்திலேயே நிலைத்து நிற்பதுமே
"வாழுதல்"என்பது கூட
எதிர்காலத்தின் நீட்சி
ஒரு முட்டுச்சந்தில்
முட்டி நிற்கையில்தான்
எல்லோருக்கும் புரியத் துவங்குகிறது.

Thursday, April 24, 2014

மனதின் ஓரம் இனிய நாதம்

சந்தம் ஒன்று நெஞ்சில் வந்து
கொஞ்சி நிற்கும் போது
சிந்தை தன்னில் வண்ணம் தந்து
தஞ்சம் கொள்ளும் போது
விந்தை போல வார்த்தை நூறு
வந்து வாசல் நிற்கும்
கங்கை போலக் கவிதை பெருக
தன்னைத் தந்து ரசிக்கும்

ராகம் ஒன்று மெல்ல வந்து
மனதை வருடும் போது
தாளம் உடனே தனயன் போல
தொடந்து இணையும் போது
மாயம் போல எதுகை மோனை
தானே வந்து நிறையும்
ஞாலம் போற்றும் கவிதை தந்து
தானும் அதனுள் மறையும்

மனது மெல்ல நினைவு கடந்து
கனவில் மிதக்கும் போது
கனத்த பெருமை என்னும் சுமையை
துறந்து கடக்கும் போது
மனதின் ஓரம் இனிய நாதம்
ஒன்று கேட்கக் கூடும்
கவனம் கொண்டால் அதுதான் சந்தம்
என்று தெளியக் கூடும் 

Wednesday, April 23, 2014

ஐந்தாண்டுத் தவம் தந்த வரம்

யானை மட்டும் தானா தலையில்
தானே மண்ணைப் போட்டுக் கொள்ளும்-தேர்தல்
நாளில் தவறாய் முடிவு எடுத்தால்
நாமும் போட்டக் கதைதான் அறிவோம்-மூடக்

குரங்கு மட்டும் தானா தானே
ஆப்பை அசைத்து மாட்டித் தவிக்கும்-தேர்தல்
நடக்கும் நாளில் காசைப் பார்த்தால்
நாமும் மாட்டிப் பின்னால் தவிப்போம்-திருட்டுப்

பூனை மட்டும் தானா கண்ணை
மூடிப் பாலைக் குடித்து மாட்டும்-நடக்கும்
தீமை கண்டும் ஊமையாய் இருந்தால்
நாமும் மாட்டிப் பின்னால் துடிப்போம்-செக்கு

மாடு மட்டும் தானா தினமும்
நடந்த வழியே நடந்துச் சாகும்-நாமும்
கூறு கெட்டு இந்த முறையும்
தவறைச் செய்தால் நசிந்துப் போவோம்-நீண்ட

தவமாய் ஐந்து ஆண்டு இருக்க
கிடைக்கும் வரமே நமது வாக்கு-இதை
மறந்து இருக்க வேண்டாம் என்றே
எழுதி வைத்தேன் இந்தப் பாட்டு 

Monday, April 21, 2014

கவிதையும் கருவும் ( 2 )

" புடைத்து எடுத்து
பொறுக்கி எடுத்து
தேர்ந்தெடுக்கும்
அற்பப் பொருளல்ல
கவிஞனின் படைப்பு

மலர்தல் போல்
விடிதல் போல்
மறைதல் போல்
மிக இயல்பானது
மிக இனிதானது அது

தோண்டி எடுத்து
பிசைந்துக் களைத்து
உருட்டிச் சேர்த்து
உருவாக்கி ரசிக்கும்
பாண்டமல்ல படைப்பு

கருவாதல் போல்
நிலையாதல் போல்
உருவாதல்போல்
அதிசயமானது அது
அபூர்வமானது அது

ஆள்துளை அமைத்து
எடுத்த கிணற்று நீரோ
ஆழத் தோண்டி எடுத்த
அற்புத உலோகத் தகடோ
நிச்சயம் இல்லை அது

காற்றுப் படப் பெய்யும்
கனத்த மழையினைப் போல
தரை பிளந்து எழும்
அழகிய செடியினைப் போல
என்றும் புதிரானது அது

மொத்தத்தில்
எடுத்து இறுக்கித்
தருவதல்ல்ல அது
இருப்பில் எடுக்க
வருவது அது "என்றது

"எனக்குப் புரியவில்லை "என்றான அவன்

"நீ கவிதை எழுதி
கவிஞனானவன்
எனவே  புரிய வாய்ப்பில்லை
நீ கவிஞனாகி
கவிதை எழுது
புரியத் துவங்கும் "என்றது

லேசாகப் புரிவது
போலிருந்ததது அவனுக்கு
புரிய வைத்த திருப்தியில்
கருவும் மெல்லக்
கலையத் துவங்கியது

Saturday, April 19, 2014

கருவும் கவியும் ( 1 )

எழுதிவிட  எண்ணி
அவன் எழுதுகோலை எடுத்ததும்
ஓராயிரம் கருக்கள் அவன்  முன்
ஓரணியாய் நிற்கத் துவங்குகின்றன

குழம்பித் தவித்து அவன்
பயனுள்ளவைகளை மட்டும்
பொறுப்புடன் பொறுக்கி எடுக்க
பாதி குப்பையாகிப் போகிறது

மீந்து நிற்பவைகளுள்
நிகழ் காலச் சூழலுக்குக்கானதை
நிதானமாய் யோசித்து எடுக்க
பெரும்பகுதி கூளமாகிப் போகிறது

இருப்பவைகளுக்குள் அவன்
சுவாரஸ்யப்படுத்த முடிந்தவைகளை
கவனமாய்த் தேர்ந்தெடுக்க
ஒன்று மட்டுமே எஞ்சி நிற்கிறது

சந்தோஷமாய் அவன்
அது குறித்து சிந்திக்கத் துவங்க
மெல்ல அது அவன்  கைவிட்டு
நழுவுவதிலே கவனமாய் இருக்கிறது

எரிச்சலுற்று அவன்
அதற்கான காரணம் கேட்கையில்
"நீ பக்குவப் பட்டவில்லை
என்னை விட்டுவிடு "என்கிறது

குழப்பம் கூடுதலாகிப் போக
"காரணம் சொல் திருந்த முயல்கிறேன் "
என அவன் கெஞ்சிக் கேட்க
முகஞ்சுளித்து அது  இப்படிச் சொல்கிறது

( தொடரும் )