Saturday, December 11, 2010

கடவுளும் கடவுள் வாழ்த்தும்......

எல்லோருக்கும் எப்போதும்
மாலை நேரத்தில் மயக்கம்தான் வரும்
எனக்கென்னவோ சில நாட்களாய்
குழப்பம்தான் வருகிறது

துவங்கிய நிகழ்வு
தடங்களின்றி முடிய
கடவுள்வாழ்த்து அவசியமென
எல்லோரும் நம்புகிறோம்
தவறாதும் சொல்லுகிறோம்

ஆனாலும்
கவிச்சக்கரவர்த்தி கம்பன்மகன் வாழ்வில்
அது ஏன் தவறாகிப் போனது?
அம்பிகாபதி பாடிய நூறு பாடல்களில்
கடவுள் வாழ்த்தினை
கணக்கில் கொள்வதா?
அல்லது
கொள்ளாமல் விடுவதா?
என்று எழுந்த கேள்வியே
கவிஞனைக் கொல்வதா?
அல்லது 
கொல்லாமல் விடுவதா? என்ற
குழப்பத்தினை உண்டாக்கி
முடிவில்
கடவுள்வாழ்த்துக் கணக்கே
அவனைக் கொன்றும் போட்டதால்.....

தடங்களின்றி காரியம் முடிய
கடவுள்வாழ்த்து
அவசியத் தேவையா?
அல்லது
அனாவசிய சேர்க்கையா?
என்கின்ற பெருங்கேள்வி என்னை 
குழப்பிக்கொண்டே இருந்தது

குழப்பத்தின் உச்சத்தில் நான்
ஓய்ந்துபோய் உறங்கிப் போக
கவிச்சக்கரவர்த்தி கம்பனே என்
கனவில் வந்து நின்றான்.

அவன்
கமலப்பாதங்களைத் தொட்டு வணங்கி
என் கேள்வியை நான் கேட்கும் முன்பே
கையமர்த்தி என்னை அமரச்சொல்லி
கண்கலங்க இப்படி சொன்னான்

"கடவுள்வாழ்த்துக் கணக்கில் நான்
என் கண்மணியை இழந்தாலும்
ராம காதையில் 
நானதைச் சொல்ல மறந்தேனா?
கடவுளை வாழ்த்துவதில் மட்டும்
கவனமாய் இருந்து 
காரியத்தில் கவனமின்மையேல்
கடவுள்வாழ்த்தும் உன்னைக்காக்காது 
அந்த கடவுளும் உன்னைக் காக்கமாட்டான்
அம்பிகாபதியின் அவல மரணம்
அனைவருக்கும் சொல்லும் செய்தி இது"எனி
கண்கலங்கச் சொல்லிப் போனான் கம்பன்

நான் அதிர்ந்து விழித்து எழுந்தபோது
விடிந்தும் இருந்தது
என்னை வாட்டி எடுத்த குழப்பமெங்கோ
தொலைந்தும் இருந்தது

Sunday, December 5, 2010

புறமும்_அகமும்

வெட்டவெளியில்
கூடியிருந்த பக்தகோடிகைள்  நோக்கி 
  
"கதவைத் திறவுங்கள்
காற்று வரட்டும் " என
கையுயர்த்தி அருளினார்
காவி நித்யானந்தர்

தனியறையில்
ஆத்மார்த்த சீடரிடம்
"கதவை மூடிப்போ
ரஞ்சிதா மட்டும் இருக்கட்டும்"என
ரகசியமாய் முனங்கினார்
ஜாலி நித்ய ஆனந்தர்