Sunday, June 30, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (15

இரவு வெகு நேரம் கடற்கரை மணலிலேயே
பேசியபடி படுத்திருந்து பின் ஆஸ்பத்திரி திரும்பினோம்

மறு நாள் காலை குளித்து முடித்து ஊருக்குத் திரும்ப
எங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு மிகச் சரியாக
ஒன்பது மணிக்கு டாக்டர் அறைக்கு வந்து சேர்ந்தோம்

டாக்டரும் முதல் நபராக எங்களை அழைத்து
மருத்துவ அறிக்கை மற்றும் மருந்து மாத்திரைகள்
மற்றும் மதுரை டாக்டருக்கென தனியாக ஒரு
கடிதம் எனக் கொடுத்து சீக்கிரம் குணமடைய
"வாழ்த்துக்கள் "எனக் கூறி "வேறு ஏதேனும்
கேட்கவேண்டியிருக்கிறதா "என்றார்

கணேசன் ஒன்றுமில்லையென தலையசைக்க
நான்தான் புற்று நோய் குறித்து சில தகவல்கள்
தெரிந்து கொண்டால் நல்லது என்கிற
அடிப்படையில்சில கேள்விகள் கேட்டுவைத்தேன்.

அவரது பதிலில் இருந்து நான் தெரிந்து கொண்டவைகள்

புற்று நோயை உண்டாக்கவும் முடியாது
தடுக்கவும் முடியாது

புற்று நோய் என்றால் கட்டாயம் மரணம்தான்
என்பதில்லைஅதனுடன் வாழப் பழகவேண்டும்.
ஒருவன் இறக்கும்போது
புற்று நோயும் அவனுடன் இறந்துவிடும்

புற்று நோய் பரம்பரை நோயுமல்ல
தொற்று நோயும் அல்ல

புகையிலை குட்கா சிகரெட் மற்றும் கண்ட கண்ட
ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட உணவு
மற்றும் அலங்காரப் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு
புற்று நோய் வர கூடுதல் வாய்ப்புண்டு

ஆரம்ப அறிகுறியிலேயே கண்டுபிடிக்கப்பட்டால்
புற்று நோயை குணப்படுத்துவது எளிது

இறுதியாக கணேசனின் உண்மையான நோயின்
நிலை குறித்தும் கேட்டேன்

நோயின் தீவீரத்தைக் குறைக்கும்படியான
மருந்துகள் கொடுத்துள்ளதாகவும்
.வலி குறைக்கும்படியான மருந்துகளும்
கொடுத்துள்ளதாகவும் சொன்னார்

உடலில் மருந்தினால் ஏற்படும் மாறுதல் குறித்து
வாரத்திற்கு ஒருமுறை மதுரை டாக்டரிடம் செக்கப்
செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தினார்

குடலில் நோய் முற்றி இருப்பதால்
உணவு விஷயத்தில் கவனமாக இருக்கும்படியும்
தொடர்ந்து வயிற்றுப் போக்கோ மஞ்சள் காமாலையோ
வராமல் கவனமாக இருக்கும்படியும்
பார்த்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினார்

ஏனெனில் மருந்து தோற்று நோய் ஜெயிப்பதற்கான
திட்டவட்டமான அறிகுறி அது என்றார்

இறுதியாக "சீக்கிரம் குணமடைய  வாழ்த்துக்கள்"
என கணேசனின் கைகுலுக்கி வாழ்த்துக்களைச் சொல்ல
நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தோம்

வெளியே வந்ததும் "சிறிது நேரம் அந்த எதிர் பார்க்கில்
உட்கார்ந்து இருந்து போவாமா "என்றான் கணேசன்

அவன் ஏதோ விரிவாகப் பேச விரும்புகிறான் எனப்
புரிந்து கொண்டு நானும் சரியெனச் சொல்லி
உடன் சென்று பூங்காவில் இருந்த பெஞ்சில்
அமர்ந்து கொண்டேன்

அவன் சிறிது நேரம்  பேசவேண்டியதை
மனதுக்குள் சொல்லிப்பார்ப்பதுபோல மௌனமாக
இருந்துவிட்டு பேசத் துவங்கினான்

"நான் ஆறு மாதங்களுக்குப் பின் இருக்கமாட்டேன்
என்கிற உறுதியோடு நினைத்துப்பார்க்கையில்தான்
நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எத்தனை
அர்த்தமற்றது என்றும் எனது கருத்தையும்
நம்பிக்கையையும் எத்தனை வலுக்கட்டாயமாக
குடும்பத்திலும் உறவினர்களிடத்தும் திணித்து
அற்ப சந்தோதோசப்பட்டுள்ளேன் என எனக்கு
இப்போது புரிகிறது.

ஆறு மாதங்களுக்குப் பின் இருந்தால் மிக்க
சந்தோசம்,இல்லையென்றாலும் கவலையில்லை
என்கிற மன உறுதியோடு இனியாவது
ஒரு நல்ல கணவனாக தந்தையாக மகனாக
வாழப் போகிறேன்

தயவு செய்து புற்று நோய் முற்றியுள்ள விவரம்
குறித்து மட்டும் யாரிடமும் தவறியும்
வாய்விட்டு விடாதே " எனச் சொல்லி
என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான்

அதற்குப் பின் ஒரு மூன்று மாத காலம்
அவன் எடுத்த முடிவுகள் அவன் செய்த காரியங்கள்
எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்க
இப்போது கூட என்னால்அந்தப்
பிரமிப்பில் இருந்து மீளவோ
கண்ணீரை அடக்கவோ நிச்சயமாக முடியவில்லை

(தொடரும் )

Tuesday, June 25, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (14 )

பலகற்று  தெளிந்து ஒருவர் கொள்ளும்
ஞானத்தை விட இழப்பில் விரக்தியில்
தோன்றும் ஞானம் நிச்சயமாக அதிக
பலமுள்ளதாகவும் நீடித்து நிலைப்பதுமாக
இருக்கும் என்பதை பர்த்துஹரி மற்றும்
பட்டினத்தார் அவர்கள் வாழ்வின்
மூலம் மட்டுமல்லஎன் நண்பன் மூலமும்
நான் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்

நேற்று டாக்டர் விரிவாக அவன் நோய் குறித்துச்
சொல்லும்வரை என் போக்கில் வந்தவன்
முழுவதும் தெரிந்தபின் இப்போது
அவன் போங்கில் போக நானும் எவ்வித மறுப்பும்
இன்றி அவனைத் தொடரத் துவங்கிவிட்டேன்

முதலில் காலையில் கபாலீஸ்வரர் ஆலயமும்
பின் சாயிபாபா கோவிலும் போகவேண்டும்
என்றான்.போனோம் .பின் மதியம் ஒரு
ராஜஸ்தானி வகை சாப்பாடு சாப்பிட வேண்டும்
என்றான்.சாப்பிட்டோம்.
 பின் ரெங்கனாதன் தெருவில்உள்ள ஒரு பிரபலத்
 துணிக்கடைக்குப் போய் ஒரு அடர் சிவப்பில்
மனைவிக்கு சேலையும்
மிகவும் மாடனாக தன் மகளுக்கு ஒரு டிரஸ்ஸும்
மகனுக்கு அதிக  விலையில் ஒரு ஜீன்ஸும்
டி சர்ட் ஒன்றும் எடுத்தான்.பின் மாலையில்
சாந்தோம் கடற்கரை செல்லவேண்டும் என்றான்

அங்கு வெட்ட வெளியில் இருந்த கடையில்
அவனுக்குமாகச் சேர்த்து மிளகாய் பஜ்ஜி
வாங்கச் சொன்னான்,நான் கடந்த வாரம்
 நண்பனிடம்ஏற்பட்ட விவாதம் முதல்
அவனுக்காகவேனும் எனக்குப் பிடித்த பஜ்ஜியை
சாப்பிடாது விட்டுவிடுவதுஎன் முடிவெடுத்திருந்தேன்.

அதைச் சொன்னதும் அவன் சப்தமாகச் சிரித்து
"எனக்காக நீ சாப்பிட வேண்டாம் என முடிவெடுத்தது
தெரியாமல் இனி உனகாக நான் சாப்பிடுவது என
முடிவெடுத்துவிட்டேன்,யார் விட்டுக் கொடுக்கலாம் "
என்றான்

"நானே விட்டுத் தருவதுதான் நியாயம் " என்றேன்

"எதற்கு நான் சில மாதங்களில்
போய்ச் சேர்ந்து விடுவேன் என்றா " என்றான்

நான் பதறி விட்டேன் "என்னடா லூஸ் மாதிரி
 பேசுகிறாய்இப்படியெல்லாம் அப சகுனமாக ப்
பேசுவாய் என்றால் நான் பேச்சைக் குறைத்துக்
கொள்வதைத் தவிர வேறு வழியில்லை "என்றேன்

"விடுறா..நெருப்புன்னா வாய் வெந்தா போயிடும்
என் நோய் குறித்து எல்லோருக்கும் தெரிந்தால்
எல்லோரும் இப்படி விட்டுக் கொடுத்துப்போனால்
எனக்கு இருக்கிற சில நாட்களிலும் வாழ்வில்
சுவாரஸ்யம் இல்லாது போய்விடும்,
நான் இருக்கிறவரை எல்லோரும் இயல்பாக
என்னுடன் இருப்பதையே நான் விரும்புகிறேன்
நீ நீங்களாக,,," என்றான்

அவன் ஏதோ முரண்பாடாய் முடிவெடுத்துவிட்டான்
எனப் புரிந்தது. அவன் சிறிது நேரம் பேசவில்லை
அவனாகப் பேசட்டும் என
நானும் மௌனமாயிருந்தேன்

தலைக்கு கையை அண்டக் கொடுத்தபடி
வானத்து நட்சத்திரங்களையே வெறிக்கப்
பார்த்துக் கொண்டிருந்தவன் " என் நோய் குறித்து
நான் என் மனைவி குழந்தைகளிடம் கூட
சொல்லவேண்டாம் என் நினைத்திருக்கிறேன்
நீ உன் மனைவியிடம் கூடச்  சொல்லி
விடவேண்டாம்

மருந்து மாத்திரைகளால் நோய் சரியாய்
போனாலும் சரி அல்லது அது தோத்து
நோய் ஜெயித்தாலும் சரி.இருக்கிறவரை
இயல்பாய் இருந்து போகவேண்டும் என்பதுதான்
என் ஆசை "என்றான்

அப்போது அவன் சொன்னது எனக்கு
அதிர்ச்சியாகவும் ஜீரணிக்கமுடியாததாகவும்
இருந்தாலும்  அந்த முடிவால்தான்
அவன் வாழ்ந்த அந்தக் கடைசிச்
சில  மாதங்களில்அவனைப் பொருத்தவரை
உண்மையாகவும் நிம்மதியாகவும்
அவன் நினைத்தபடி அவனால் வாழமுடிந்தது
என்பது என் சிற்றறிவுக்கு இப்போது புரிகிறது

(தொடரும்

Friday, June 21, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (13 )

இரவு வெகு நேரம் தூங்காததால் காலையில்
ஏழு மணிவரை எழ முடியவில்லை
கணேசன்தான் தட்டி எழுப்பினான்

நான் விழித்துப் பார்க்கையில் அவன் குளித்து
முடித்து டிரஸ் செய்து வெளியில் கிளம்பத்
தயாராய் இருப்பது போல் இருந்தான்"
என்னையும் சீக்கிரம் குளித்து முடித்துக்
கிளம்பும்படி அவசரப்படுத்தினான்

நான் இப்போதெல்லாம அவன் எது சொன்னாலும்
கேள்வி கேட்பதில்லை,அவன் எது சொன்னாலும்
சரியோ தவறோ செய்துவிடவேண்டியது தான்
என்கிற முடிவில் இருந்ததால் நானும்
அவசரம் அவசரமாய் குளித்து முடித்து
டிரஸ் செய்து அவன் முன் ஆஜரானேன்

"வா முதலில் டாக்டரைப் பார்ப்போம் "என்றான்
நான் பின் தொடர்ந்தேன்

டாக்டர் அப்போதுதான் வீட்டை விட்டு வெளியே
வந்து கொண்டிருந்தார்,எங்களைக் கண்டதும்
:வாங்க வாங்க உட்காருங்க என்ன காலையில்
இவ்வளவு சீக்கிரம் தேடி வந்திருக்கிறீர்கள் "
என்றார்

எனக்கு காரணம் ஏதும் தெரியாததால் கணேசன்
முகத்தைப் பார்த்தேன்

அவன் பேசத் துவங்கினான் ,அவன் பேச்சில்
இதுவரை நான் காணாத தெளிச்சியும் உறுதியும்
இருந்தது

"டாக்டர் நான் இரவெல்லாம் நீங்கள் சொன்னதை
எல்லா வகையிலும் யோசித்துப் பார்த்தேன்
நீங்கள் குறிப்பிட்டபடி நிச்சயம் உறுதி சொல்ல
முடியாத அதிக செலவு பிடிக்கிற கதிரியக்கச்
சிகிச்சையை விட மாத்திரை  மருந்தின் மூலம்
சிகிச்சை பெறுதலே சிறந்ததாகப் படுகிறது எனக்கு
அதற்குரிய ஏற்பாடுகளை மட்டும் செய்யுங்கள்
என் குடும்ப சூழலுக்கும் அதுதான் ஒத்து வரும்
ஆனால் தயவு செய்து உண்மை நிலவரத்தை
மிகச் சரியாக சொல்லிவிடுங்கள் டாக்டர்
எதையும் ஏற்றுக் கொள்ளுகிற பக்குவத்திற்கு
நான் வந்து விட்டேன் "என்றான்

டாக்டர் சட்டென நெகிழ்ந்து போய் கணேசனின்
தோள்களைத் தட்டிக் கொடுத்தபடி அருகில் இருந்த
நாற்காலியில் அமரச் செய்தார்

"இவ்வளவு உறுதியான மன நிலை இருக்கிற
பட்சத்தில் நிச்சயம் நீங்கள் இந்த நோயை
வெற்றி கொண்டு விடுவீர்கள்.

நாளை உங்களுக்கு முதல் கோர்ஸ் மாத்திரை
மருந்துகளைக் கொடுத்து விட்டு தொடர்ந்து
சாப்பிட வேண்டிய மருந்துகளின் விவரங்களையும்
குறித்து உங்கள் டாக்டருக்கு ஒரு மெடிகல் ரிபோர்ட்
கொடுத்துவிடுகிறேன்,ஒரு டாக்டரின்
தொடர் கண்காணிப்பில் மருந்து எடுத்துக்
கொள்வதுதான் நல்லது.

நோயின் வளர்ச்சியைத் தடுப்பது படிப்படியாய்
அதன் வீரியத்தைக் குறைப்பது வலியை
கூடுமானவரையில் குறைப்பது என்கிற வகையில்
மருத்துவ செயல்திட்டம் இருக்கும்

விடாமல் டாக்டர் சொல்கிறபடி மருந்தை
தவறாது உட்கொள்வதுடன் அவர் சொல்கிற
உணவுக் கட்டுப்பாட்டையும் அவசியம்
கடைப்பிடிக்கவும்,விரைவில் பூரண குணம்
அடைந்து விடுவீர்கள் வாழ்த்த்துக்கள் "
எனச் சொல்லி இருவரின் கைகளைக் குலுக்கி
விடைபெற்றார்

நாங்கள் மருத்துவ மனையை விட்டு வெளியே
வந்தோம்,

கணேசன் நேற்று இரவு முதலே
சராசரி நிலையை விட்டு வெளியே வெகுதூரம்
வந்து விட்டான் என்பது அவனது
ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும்
தெளிவாகத் தெரிந்தது

(தொடரும் )

Wednesday, June 19, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடு (12 )

இரவு  மணி எட்டை நெருங்கியது
இப்போது போனால்தான் எதிரிலுள்ள மெஸ்ஸில்
டிபன் ஏதாவது கிடைக்கும்.நான் கடிகாரத்தைப்
பார்ப்பதை டாக்டரும் கவனித்துவிட்டார்

அவர் தன் மனைவியின் பக்கம் திரும்பி
" நீ போய் எடுத்து வை சரியாய் இருக்கும்"என்றார்

பின் டாக்டர் எங்களைப் பார்த்து தொடர்ந்து
பேசத் துவங்கினார்.

"இப்போது இதுவரை நான் பேசியது எல்லாம்
பொதுவானது.மிகச் சரியாக நோயைக் குறித்து
புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகப் பேசியது
இப்போது உங்கள் நிலைபற்றிப் பேசுவோம

நீங்கள் துவக்கத்திலேயே நோயை நிர்ணயம்
செய்யாததால் கொஞ்சம் நோய் முற்றி உள்ளது

இந்நிலையில் அறுவைச் சிகிச்சையோ
கதிரியக்கச் சிகிச்சையோதான் இந்த நிலைக்கு
சரியான தீர்வாக இருக்கும்,அது குறித்து
உங்களிடம் தெளிவாகப் பேசத்தான் நான்
இங்கே உங்களை வரவழைத்தேன்
அதன் சாதக பாதகங்கள் குறித்து மிகத் தெளிவாகப்
புரிந்து கொண்டு நீங்கள்தான் சரியான
முடிவெடுக்க வேண்டும்"என்றார்

இந்த சமயத்தில் "எல்லாம் ரெடி
வாங்க சாப்பிடலாம் "என்றபடி டாக்டரின்
மனைவி வராண்டாவில் இருந்து குரல் கொடுத்தார்

"சரி சார் நாங்கள் வருகிறோம் " காலையில்
திரும்பவும் தங்களைப் பார்க்கிறோம் : என்றபடி
நானும் கணேசனும் எழுந்தோம்

"உங்களுக்கும் சேர்த்துதான் டிபன் ரெடி
செய்துள்ளார்.இன்று நீங்கள் இருவரும் எங்கள்
விருந்தாளி.வாருங்கள் " என எங்களைக்
கைபிடித்துஅழைத்தபடி விட்டினுள்
அழைத்துச் சென்றார்

எங்களால் மறுக்க இயலவில்லை

சாப்பிட்டு முடித்து மீண்டும் தோட்டத்து
நாற்காலியில்வந்து அமர்ந்தோம்

நான் தான் பேச்சைத் துவங்கினேன்
"சரி டாக்டர் அறுவை சிகிச்சையோ கதிரியக்கச்
சிகிச்சையோதான் முடிவென்றால் நோய்
குணமடைய வாய்ப்பிருக்கிறதா ?அதற்கு
உத்தேசமாக எத்தனை மாதமாகும் ?
எவ்வளவு செலவழியும் "என்றேன்

"சரியாகக் கேட்டீர்கள் இதைச் சொல்லத்தான்
நான் சுற்றிவளைத்துப் பேசுகிறேன்
நீங்கள் நேரடியாகக் கேட்டுவிட்டது கூட
நல்லதுதான் "என்றார்

பின் சிறிது நேரம் அமைதியாக எதையோ
யோசிப்பது போல இருந்தவர் பின் வருத்தம்
தோய்ந்த குரலில் பேச ஆரம்பித்தார்

"நீங்கள் நான் சொல்கிற எதையும் நெகட்டிவ்வாக
எடுத்துக் கொள்ளக் கூடாது.
எனது பத்தாண்டு கால அனுபவத்தில்
இதே முற்றிய நிலையில் வந்தவர்கள் பலரை
சந்தித்திருக்கிறேன்.சிலருக்கு கதிரியக்கச்
சிகிச்சையும் பலனற்றுப் போய் இருக்கிறது
சிலருக்கு தொடர்ந்து மாத்திரைச் சாப்பிட்டே
கடைசி வரை அதிகத் தொந்தரவு செய்யாமலும்
இருந்திருக்கிறது.

வசதியற்ற ஏழைகள் ஒரே முடிவாக
எங்களுக்கெல்லாம் அவ்வளவு வசதி இல்லை சார்
எல்லாம் ஆண்டவன் விட்ட வழி
மாத்திரை போதும் சார் என சட்டென
முடிவெடுத்துவிடுகிறார்கள்

பணக்காரர்களுக்கும் பிரச்சனையில்லை
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை சார்
எந்த சிகிச்சையும் பார்த்துவிடுவோம் என
உடனடியாக முடிவெடுத்துவிடுகிறார்கள்

இடையில் மாட்டிக்கொண்டு முடிவெடுக்க முடியாது
அல்லாடுவதும் தவறான முடிவெடுத்து பின்
அவரது குடும்பத்தையேபொருளாதார ரீதியாக
நிராதரவாக விட்டுவிட்டும் போய் விடுவதும்
பெரும்பாலும் நடுத்தர மக்கள்தான்

நான் நோயின் நிலைகுறித்து ஆராய்வதோடு
மட்டுமல்லாது நோயாளியின் நிலை குறித்தும்
தீர விசாரித்துத் தெரிந்து கொண்டுதான்
வைத்தியதை முடிவு செய்வது என்பதில்
கவனமாக இருக்கிறேன்.அதிலும் குறிப்பாக
நோய் முற்றிவர்களிடத்தும் நடுத்தர மக்களிடத்தும்"
எனச் சொல்லி நிறுத்தினார்

டாக்டருடைய அன்னியோன்யமான அணுகுமுறை
எடுத்தவுடனேயே அதிர்ச்சிதராமல் விரிவாக
நோய் குறித்துப் பேசி பின் கணேசன் நிலை
குறித்துப் பேசியது,இப்போது அதற்காக இருக்கிற
சரியான தீர்வுகளைச் சொல்லி தீர்மானம் செய்யும்
முடிவை எங்களிடமே விட்டது எனக்குப்
பிடித்திருந்தது

கணெசன் அப்செட் ஆகிப் போயிருந்தான்
பரமபத விளையாட்டைப் போல நம்பிக்கையும்
அவ நம்பிக்கையும் மாறி மாறி வர அவன்
குழம்பிக் கிடப்பது அவன் முகத்தில் தெரிந்தது

"உங்களுக்கு நாளை இரவு வரை அட்மிஷன் உள்ளது
நிதானமாக யோசித்து உங்கள் முடிவைச்
சொல்லுங்கள் அவசரமில்லை.
அதற்கேற்றார்போல வைத்தியத்தைத்
துவங்கிவிடலாம் " என டாக்டர் முடிவாகச் சொல்ல
நாங்கள் விடைபெற்றுக் கொண்டு வார்டுக்கு வந்தோம்

இருவருக்கும் இரவு முழுவதும் தூக்கமில்லை
தூங்குவது போல் அவனுக்குத் தெரியட்டும் என நானும்
எனக்குத் தெரியட்டுமென அவனும் காலைவரை
தூங்குவதுபோல் நடித்துக் கொண்டிருந்தோம்

(தொடரும் )

Monday, June 17, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (11)

சென்னை மருத்துவர் புற்று நோய்
மருத்துவத்தில் மட்டுமல்லாது நோயாளிகளுக்கு
கவுன்ஸ்சிலிங் தருவதிலும் அனுபவமிக்கவர் என்பது
நோயைப்பற்றி சொல்லத் துவங்குவதற்கு முன்னால்
தன்னைப்பற்றியும் தன் மனைவி குறித்தும்
சுருக்கமாகச் சொன்னதில் புரிந்து கொள்ள முடிந்தது

புற்று நோயின் காரணமாக தந்தை இறந்ததும்
சராசரிக் குடும்பத்தில் பிறந்ததால் மிகவும்
கஷ்டப்பட்டுப் படித்ததும் ஆசிரியர் தொழிலைப்
போலவே மருத்துவத் துறையும்
சேவைத் துறை என்கிற கருத்தில் ஆணித்தரமாக
தன்னைப்போலவே தன் மனைவியும் இருந்ததால்
காதலித்துத் திருமணம் செய்து கொண்டது குறித்தும்
சொல்லிமுடித்த பின்னே அவர் புற்று நோய் குறித்து
சொல்லத் துவங்கியது எங்களுக்குள் அவர்மேல்
கூடுதல் மதிப்பும் மரியாதையும் உண்டாகியது

அவர் விரிவாகச் சொன்னதின் சாராம்சம் இதுதான்

புற்று நோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால்
குணப்படுத்துவது எளிது,அது காட்டும் ஆரம்ப
அறிகுறிகள் ந்ம்மை அதிகம் கஷ்டப்படுத்தாது
இருப்பதால்அதை நாம் மிகச் சிறிய நோய் என
அனுமானித்துஅதற்கு மட்டுமே வைத்தியம் செய்து
 புற்று நோயைஅதிகம் வளரவைத்துவிடுகிறோம்

நாள் பட்ட ஆறாத புண்
இடைவிடாத இருமல்
குரல் மாற்றம்
உணவு விழுங்குவதில் சிரமம்
மச்சத்திலோ கரணையிலோ ஏற்படும் மாற்றம்
நாள்பட்ட மலச்ச்சிக்கல்
உடல் எடையில் மாற்றம்
உணவுப் பழக்கத்திலோ தூக்கத்திலோ மாற்றம்

இப்படி மிகச் சிறிய அறிகுறிகள் கூட
 புற்று நோய்க்கானஅறிகுறிகளாக
 இருந்துவிடுவதுண்டு
.நாற்பத்து ஐந்துக்கு மேற்பட்ட எவரும்
 இதுபோன்றஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
அறிகுறிகள் இருப்பின் முதலிலேயேமருத்துவரிடம்
 பரிசோதனை செய்து கொள்வது நல்லது
மேற்குறித்த அறிகுறிகள் அனைத்துமே
 புற்று நோய்க்கான அறிகுறிகள்தான் என
 திட்டவட்டமாக கூறமுடியாதுஆயினும்சகஜமான
 சிகிச்சையில் இவை குணமடையாவிட்டால்
புற்று நோய்க்கான சாத்தியக் கூறு உண்டு என
அனைவரும்மனதில் கொள்ள வேண்டும் என்றார்.

மாலை மெல்ல மெல்ல மயங்கத் துவங்க
இருள் பரவத் துவங்க டாக்டரின் மனைவி வாசல்
வராண்டா விளக்கை எரியவிட்டு
எங்கள் அனைவருக்கும் ஒரு தட்டில் ஸ்னேக்ஸும்
 காப்பியும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு
அருகில் அமர்ந்து கொள்ளடாக்டர் தொடர்ந்து பேசினார்

"இப்படித்தான் கணேசன் உங்களுக்கு வயிற்றில்
தொடர்ந்து மூன்று வருடங்களாக வலி இருந்தும்
நீங்கள் அதை பரிசோதனை செய்யாது நீங்களாகவே
அது சூட்டுக்கான வலி அது இதுவென்று
நீங்களாகவே வைத்தியம் பார்த்துக் கொண்டு
குடலில் புற்று நோயை முற்றவைத்துக்
கொண்டிருக்கிறீர்கள் "எனச் சொல்லி நிறுத்த
நாங்கள் அதிர்ந்து போனோம்

வெளியில் சூழ்ந்த இருளெல்லாம் இப்போது
எங்கள் இருவருக்குள்ளும் சூழ்ந்ததைப் போலிருந்தது

நடுங்கிய குரலில்
"புற்று நோய் சிகிச்சைக்காக அதி நவீன மருந்துகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும். குணப்படுத்துவது
முன்புபோல அத்தனை கடினமில்லை  எனவும்
சொல்கிறார்களே "நான்தான் கேட்டேன்

விரக்தியுடன் சிரித்தபடி டாக்டர் தொடர்ந்தார்

"புற்று நோய்க்கான அதி நவீன மருந்துகள்
கண்டுபிடிக்கப்பட்டாலும் அவைகளைப் பாவிக்கையில்
அது புற்று நோய் செல்களை மட்டும் அல்லாது
நல்ல செல்களையும் அழிக்கிறது
இதனால் நாளடைவில் இந்த மருந்துகளாலேயே
 நோயாளி வேறு பல இன்னல்களுக்கு
ஆளாகிப் போகிறான்

தலை ரோமம் உதிர்தல்,வாயில் சிறுகுடலில்
ஆறாத புண் தோன்றுதல் இரத்த சோகை முதலான
நோய்கள் பெருக நோயாளி  மிக அவதியுறுகிறான்

கதிரியக்கச் சிகிச்சையும் செய்யலாம்தான்
அது புற்று நோய்க் கிருமிகளை அழிப்பதுடன்
இரத்த உற்பத்திக்கு காரணமான
எலும்பு மஜ்ஜையையும் மிகவும் பாதிக்கிறது "
எனச் சொல்லி நிறுத்த
நாங்கள் பாதி செத்துப்போனோம்

ஏண்டா சென்னை வந்தோம் பேசாமல் இன்னும்
சில நாள் மோரில் வெந்தயத்தைப் போட்டுக்
குடித்துக் கூட பொழுதை ஓட்டிக் கொண்டு
போகிற நேரத்தில் போய்ச் சேர்ந்திருக்கலாமோ
எனக் கூடத் தோன்றியது

கணேசன் தான் பொறுக்கமுடியாமல் கேட்டான்
"அப்போ சாவதைத் தவிர வேறு வழி இல்லையா
டாக்டர் "

"கணேசன் இல்லையெனச் சொல்வதற்கா நாங்கள்
டாக்டருக்குப் படித்திருக்கிறோம்
,நிச்சயமாக இருக்கிறது
பொய்யான நம்பிக்கையை விட உண்மை நிலையை
அறிந்து கொண்டு மனதில்  நிஜநம்பிக்கை கொள்வது
புற்று நோய் சிகிச்சைக்கு மிகவும் அவசியம் "என்றார்

நாங்கள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சுவிட்டோம்

ஆயினும் அவர் அடுத்து சொன்ன விஷயங்கள்
இன்னும் எங்களை அதிகம் நிலை குலையச்
செய்துவிட்டது

(தொடரும் )

Saturday, June 15, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (10)

டாக்டர்  சொல்லியிருந்தபடி அவரைச்
சந்திப்பதற்காக மாலை நாலு மணிக்கெல்லாம்
வார்டில் ரெடியாக இருந்தோம்

வார்டு பையனும் மிகச் சரியான
நேரத்துக்கு வந்து எங்களை அவர் குவார்டஸ்சிற்கு
அழைத்துப் போனான்,குவார்டஸ்ர்ஸ் ஆஸ்பத்திரிக்கு
மிக அருகிலேயே இருந்தது,நாங்கள் காம்பௌவுண்ட்
கேட்டைத் திறக்கிற சப்தம் கேட்டதும் வாசல் முன்புற
தோட்டத்தில் அமர்ந்திருந்த டாக்டர் எங்களை
வரவேற்கும் விதமாக எழுந்து "வாங்க வாங்க
உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன் "என்றார்

நாங்கள் அவர் குறிப்பிட்ட இருக்கையில் அமர்ந்ததும்
வீட்டை நோக்கி "ராஜி அவங்க வந்துட்டாங்க
கொஞ்சம் வந்து போயேன் " என்றார்

சுருக்கமாகச் சொன்னால் லட்சுமிகரமாக
ஆரோக்கியமாக பார்த்தவுடன் எழுந்து வணங்கத்
தக்கவராக அவர் இருந்தார்,

அவர் டாக்டரின் மனைவியாக இருக்கவேண்டும்
அவரும் டாக்டராகத்தான் இருக்கவேண்டும் என
பார்த்தவுடனே தெரிந்தது

நாங்கள் இருவரும் எழுந்து வணக்கம் தெரிவித்து
விட்டு இருக்கையில் அமரவும் " உங்கள் இருவரில்
யார் கணேசன் " எனக் கேட்டபடி டாக்டரின் அருகில்
இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்

நாங்கள் இருவரும் எங்களை அறிமுகம் செய்து
கொண்டு அமர்ந்ததும் டாக்டரும் அவரது மனைவியை
அறிமுகப்படுத்தியதுடன் அவர்களுக்கு பெண்
குழந்தைகள் இருவர் எனவும் அவர்களில் ஒருவர்
டாக்டருக்கும் ஒருவர் எஞ்சினியரிங்கும் ஹாஸ்டலில்
தங்கிப் படிப்பதாகவும் சொல்லி கொஞ்சம்  லேசாக
ரிலாக்ஸ்டாக தன் சாய்வு இருக்கையில் சாய்ந்தபடி
" ஆர் யூ ஃபீல் ரிலாக்ஸ்ட் "என்றார்

சரி டாக்டர் எதுவோ பெரிதாக எங்களைப்
பாதிக்கும்படியாக எதையோ சொல்லப் போகிறார்
எனப் புரிந்து போயிற்று

,நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக
தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜான் என்ன
முழம் என்ன என்கிற மனோ நிலைக்கு ஏறக்குறைய
வந்திருந்ததால் "ஒன்னும் பிரச்சனையில்லை சார்
எதுவானாலும் ஓபனாக சொல்லுங்க சார் "என்றோம்

டாக்டர் வருத்தம் தோய்ந்த குரலில் பேச ஆரம்பித்தார்

"கணேசன் நீங்க மனைவி தம்பி என உறவுக்காரங்க
யாரையும் கூட்டி வராததை வைத்தே  உங்க நண்பரை
மட்டும் கூட்டிவந்துள்ளதை வைத்தே உங்கள் நோய்
குறித்த விவரத்தை உங்கள் வீட்டில் யாருக்கும்
சொல்லவில்லை என அனுமானிக்கிறேன் சரியா ?"
என்றார்

நாங்கள் இருவரும் "ஆம்" என்பதுபோல் தலையாட்டினோம்

"அது கூட ஒருவகையில் நல்லதுதான்.இல்லையெனில்
இப்படி ஓபனாகப் பேசமுடியாது.முதலில் கேன்ஸரைப்பத்தி
ஓரு சின்ன விளக்கம் சொல்லிவிட்டு உங்கள் நிலையச்
சொல்கிறேன்.அப்போதுதான் நீங்கள் எந்த முறையில்
 சிகிச்சை மேற்கொள்வது என நீங்கள் முடிவெடுக்க
வசதியாக இருக்கும்"என்றார்

"கொஞ்சம் பேசிக்கொண்டிருங்கள்,இதோ வந்துவிடுகிறேன்"
என டாக்டரின் மனைவி எழுந்து செல்ல டாக்டர்
புற்று நோயினைக் குறித்து சுருக்கமாகச்
சொல்லத் துவங்க்கினார்

அவர் தொடர்ந்து சொல்லச் சொல்லத்தான் நாம்
எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்து கொண்டு
நகத்தோடு கிள்ளி எறிய வேண்டிய புற்று நோயை
கோடாலி கொண்டு வெட்டிச் சாய்க்கும்படியாக
முட்டாள்தனத்தைச் செய்து கொண்டு
நாமும் அதிகக் கஸ்டப்பட்டுக் கொண்டு நம்மைச்
சார்ந்தவர்களையும் கஷ்டப் படுத்திக் கொண்டிருக்கிறோம்
எனப் புரியத் துவங்கியது

(தொடரும் )

Friday, June 14, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (9)

சந்தோசமான நிகழ்வெனிலோ அல்லது அதிக
சோகமான நிகழ்வெனிலோ அதை பகிர்ந்து
கொள்வதற்காக நான் அவன் வீட்டிலோ அல்லது
அவன் என் வீட்டிலோ இரவு தங்குவதுண்டு

அது நிச்சமாக எங்கள் சந்தோசத்தை இரட்டிப்பாக்கும்
சோகத்தை இல்லாது செய்துவிடும்.

இந்தமுறை அதிகச் சோகத்தைப் பங்கிட்டுக்
கொள்வதற்காகவே அவன் இன்றுஎங்கள் வீட்டிற்கு
இரவு தங்க வந்துள்ளான் என்பதைப் புரிந்து கொண்டு
நானும்அவசரம் அவசரமாக இரவு உணவை
 முடித்துவிட்டு படுக்கையை எடுத்துக் கொண்டு
 மொட்டை மாடிக்கு வந்தபோது வெறும் தரையில்
 படுத்தபடி வானத் தைவெறிக்க
ப்பார்த்துக் கொண்டிருந்தான்

நான் படுக்கையை விரித்து படுத்தபடி
"சரி இப்போது சொல்றா என்ன முடிவு எடுத்திருக்கே
உன மனைவியிடம் விஷயத்தைச் சொல்லியாச்சா
நாளை மறு நாள் சென்னை செல்கிறோம் தானே "
என நானே அவன் பேச அடியெடுத்துக் கொடுத்தேன்

அவன் எழுந்துவந்து என் அருகில் படுத்தபடி
பேச ஆரம்பித்தான்

"தப்பாக நினைக்காதே நான் ரொம்ப யோசித்துத்தான்
இந்த முடிவுக்கு வந்திருக்கேன்.என் பிள்ளைகளிடமும்
மனைவியிடமும் கேன்ஸர் எனச் சொல்லப்போவதில்லை
வயிற்றுப்புண் அதிகமாக உள்ளது.
விட்டால் கேன்ஸராக சான்ஸ் இருக்குன்னு
 டாக்டர் சொல்லி இருக்கார்
எதற்கும் சென்னைக்குப் போய் நன்றாக டெஸ்ட் செய்து
விடுங்கள்.இங்கு அவ்வளவு வசதி இல்லை எனச்
சொல்லி இருக்கிறார் எனச் சொல்லப்போறேன்
அவள் நான் எதைச் சொன்னாலும்
நம்பித்தான் தொலைப்பாள்"எனச் சொல்லி நிறுத்தினான்

"டேய் அது தப்பில்லையா.ஊருக்கு உறவுக்குத்
தெரிய வேணாம் மனைவி பிள்ளைகளிடம் எப்படியடா
சொல்லாமல் இருப்பது"என்றேன் பதற்றத்துடன்

"இல்லை நல்லா யோசித்துப் பார்த்துட்டேன்
இது ட்ரீட்மெண்ட்டில் சரியாகிப் போச்சுன்னா சரி
அவங்க அதுவரை மனக் கஷ்டப்படாம இருப்பாங்க
சரியாப் போகாமப்போனாலும் பரவாயில்லைக்
நான் இருக்கும் வரையாவது சகஜமாக இருப்பாங்க.
இப்பக் கூடப் பாரேன் எனக்கு கேன்ஸர்ன்னு
தெரிஞ்சதிலிருந்து நீ சகஜமாயில்லை.
எதுகெடுத்தாலும் விடாப்பிடியாஆர்கு பண்ற நீ கூட
நான் எது சொன்னாலும்சரி சரின்னு போறே
.அது எனக்கு ரொம்ப மனச் சங்கடமாயிருக்கு,
அதே மாதிரி சந்தோஷமா சகஜமா இருக்கிற
பொஞ்சாதி பிள்ளைகளை இருக்கிறவரை
கஷ்டப்படுத்தவேண்டாம்னுநினைக்கிறேண்டா
"என்றான்

அவன் சொல்வது கூட எனக்குச் சரியெனத்தான் பட்டது
 இப்போது கூட முன் போல உரிமையாக
அவனுக்கு எதிராக வாதிடும் நிலையிலும் நான் இல்லை

பின் அவன் வீடு கட்ட வைத்திருக்கும் பணத்தில்
ஒரு ஐம்பதாயிரத்துக் குறையாமல் எடுத்துக் கொண்டு
வருவதாகவும் மாமனாரை ஒரு வாரம் வீட்டில் இருந்து
பார்த்துக் கொள்ளும்படு ஏற்பாடு செய்துவிட்டதாகவும்
நானும் என மனைவியிடம் அவன் சொல்லி
இருப்பதைப்போலவே சொல்லிவிடுமாறும் சொன்னான்
நான் மறுப்பேதும் சொல்லவில்லை.
அவன் சொல்வதற்கெல்லா
ம்" ம் "கொட்டிக் கொண்டிருந்தேன்

பின் வெகு நேரம் பழங்கதைகளைப் பேசிக்
கொண்டிருந்துவிட்டு தூங்கிப்போனோம்

பிறகு எல்லாம் திட்டமிட்டபடியே சரியாக நடந்தது
சென்னை சென்றதும் ஆஸ்பத்திரிக்கு அருகிலேயே
ரூம் எடுத்துத் தங்கிவிட்டு மறு நாள் காலையில்
மதுரை டாக்டர் கொடுத்த மெடிகல் ரிபோர்ட்டுடன்
சிபாரிசுக் கடிதத்துடன் சென்னை டாக்டரைப் பார்த்தோம்

சென்னை டாக்டர் மிக சகஜமாகப் பேசினார்
மதுரை டாக்டரும் அவரும் ஒரே கல்லூரி மாணவர்கள்
மட்டுமல்ல .ஐந்து ஆண்டும் ஒரே அறையில் தங்கி
இருந்தவர்கள் எனச் சொல்லி  நாங்கள் கொண்டு வந்த
ரெபோர்ட்டுகளை எல்லாம் எங்கள் எதிரிலேயே
படித்துவிட்டு இன்னும் சரியாக அனுமானிக்க
 சில டெஸ்ட்டுகள் எடுக்க வேண்டும் எனவும்
 நாளைக் காலையில்ரூமைக் காலிசெய்துவிட்டு
இங்கேயே தங்கும்படியாகவந்துவிடும்படியும்
தான் இங்கு அட்மிஷன் போட்டுவிடுவதாகவும்
 சொன்னார்,

டாக்டர் இத்தனை இயல்பாக பேசியதே என் நண்பனுக்கு
பாதி நோய் குணமாகிவிட்டதைப் போல கொஞ்சம்
தெளிவாகத் தெரிந்தான்

மறு நாள் காலையில் என்னை வார்டிலேயே இருக்கச்
சொல்லிவிட்டு அவனை மட்டும் செக்கப்புக்காக
டாக்டர் அழைப்பதாக நர்ஸ் அழைத்துப் போனார்
அவன் திரும்பி வர மாலைக்கு மேல் ஆகிவிட்டது

வந்தவன்" டேய் உங்க டாக்டர் சொன்னது
சரியாகத்தானிருக்கு,இங்க லேபில் அவ்வளவு
மெஷினெரிடா.டாக்டரும் ரொம்ப நல்ல டைப்புடா
ஒரு ரெண்டு டெஸ்ட் ரிஸல்ட் சரியா வரலைன்னு
திரும்ப திரும்ப எடுக்கச் சொல்லிட்டாருடா
இங்க வந்தது நல்லதாப் போச்சுடா
கேன்ஸருக்கு இவங்கதான் அதாரிடி போல
அவ்வளவு நல்லா பாக்குராங்கடா "என்றான்

அவன் நோயின் தீவிரம் மிகச் சரியாகக்
கணிக்கப்பட்டுவிடும் என நம்பியதாலும்
அதனால் நிச்சயம் நோய் குணப்படுத்தப்பட்டுவிடும்
என் நம்பியதாலுமோ என்னவோ
இத்தனை நாள் இல்லாத அளவு மிகவும்
சந்தோஷமாக இருந்தான்.
எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது


ஊருக்குப்போன் போட்டு எல்லாம் நல்லவிதமாகப்
போய்க்க்கொண்டிருக்கிறது,ஒன்றும் பிரச்சனையில்லை
என்பதுமாதிரி மனைவி மற்றும்
குழந்தைகளிடம்  பேசினான்
இரவு இருவரும் நிம்மதியாகத் தூங்கினோம்

மறு நாள் காலையில் கொஞ்சம் தாமதமாக
ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் "ரெபோர்ட் எல்லாம்
வந்துவிட்டது.பார்த்தும் விட்டேன்.நாளை சாயந்திரம்
இருவரும் எங்கள் குவார்டஸ்ஸுக்கு
 வந்து விடுங்களேன் ஒரு காப்பி சாப்பிட்டுவிட்
டு ரிலாக்ஸ்டாக பேசலாம்" என்றார்

எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது
மதுரைக்குப் போனதும் டாக்டரை வீட்டில் சந்தித்து
அவர் சிபாரிசுக் கடிதத்திற்கு இருந்த
 மதிப்பைச் சொல்லி நன்றி சொல்லவேண்டும் என
முடிவெடுத்துக் கொண்டோம்

ஆனால் அந்த டாக்டர் அத்தனை சகஜமாக
அந்நியோன்யமாக இருந்ததற்கான காரணம் இவன்
நோயின் தீவிரத்தினால ஏற்பட்ட இரக்கம்தான் என்பது
மாலையில் அவரைச் சந்தித்துப் பேசிய பின்புதான்
எங்கள் இருவருக்குமே புரிந்தது

(தொடரும் )


Monday, June 10, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (8)

ஆஸ்பத்திரி எனக்கூடப் பாராமல் முன் ஹாலில்
அத்தனைபேர் அமர்ந்திருக்கிருக்கிறார்கள் எனக் கூட
நினைவில் கொள்ளாமல் என் கைகளை அழுத்தப்
பிடித்தபடிகண்கலங்கியபடி என் தோள்களில்
 சாய்ந்தபடி வந்துகொண்டிருந்த கணேசன்,
 வெளியே தன் மனைவிவருவதைப்பார்த்ததும்
 சட்டென நிமிர்ந்து என் பக்கம்திரும்பி
 கண்களையும்  முகத்தையும்அவசரம்அவசரமாகத்
 துடைத்துக் கொண்டான்

பின் என் காதோடு எனக்கு மட்டும் கேட்கும்படியாக
"ரமணி எனக்கு ரொம்பக் குழப்பமாய் இருக்கு
தயவு செய்து டாக்டர் சொன்னதை இப்போ
இவ கிட்டே சொல்லிடாதே என்ன சொல்றது
எப்படிச் சொல்றது என்கிறதைப் பத்தி நான்
யோசிச்சுவைக்கிறேன்.ரிபோர்ட் இன்னமும் வரலை
சாய்ந்திரம் வரச் சொல்லி இருக்கிறார்னு மட்டும்
இப்போது சொல்லிவை.அவ உங்கிட்டேதான் கேட்பா
உன் முகத்தையும் தொடச்சுக்கோ"
என்றான்

அவன் என்னிடம் விஷயத்தைச் சொல்லி முடிக்கவும்
நண்பனின் மனைவி எங்களை நெருங்கவும்
சரியாக இருந்தது

"கோவிலில் அற்புதமான தரிசனம்,எனக்கு அப்போதே
நம்பிக்கை வந்து விட்டது,ஒன்னும் இல்லைதானே
சாதாரண வயிறுவலி தானே "என மடமடவென
அவராகவே எங்களைப் பார்த்து பேச ஆரம்பித்துவிட்டார்

அவரது கண்களில் தெரிந்தா பயத்துடன் கூடிய
கேள்விக் குறியும் உடலில் தெரிந்த படபடப்பும்
அவர் எந்த ஒரு தீய செய்தியையும் கேட்கிற
நிலையில் இல்லை என்பது  தெளிவாகத் தெரிய
நான் என்ன சொல்வது எப்படிச் சொல்வது என
திணறிப்போனேன்.

என் குழப்பத்தை உணர்ந்த கணேசன் சட்டென
சுதாரித்து "நீ நினைக்கிறபடிதான் இருக்கும் விஜி
டாக்டரும் அப்படித்தான் சொல்றார்
ஆனா ரிபோர்ட் இன்னமும் டாக்டர்கிட்டே வரலை
சாயந்திரம் வரச் சொல்றார். வேகமா நடந்து வந்ததாலே
கொஞ்சம் படப்படப்பா இருக்கே,இப்படி
 கொஞ்சம் உட்கார்"என ஆஸ்பத்திரி வாசலில் இருந்த
 பெஞ்சில்மனைவியை உட்காரவைத்து
 தானும் உட்கார்ந்து கொண்டான்

அவன் என்ன நினைக்கிறான் என்பது தெரியாமல்
நான் எதையாவது உளறிக் கொட்டாமல்
இருக்கவேண்டுமே என்கிற பயம் என்னுள்
 வளர வளரமுதலில் இங்க்கிருந்து கிளம்புவதுதான்
 சரியானமுடிவாகப்பட்டது எனக்கு

"சரி நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட்
எடுத்துட்டு அப்படியே ஆட்டோ பிடித்து வீட்டுக்கு
கிளம்புங்க.நானும் இப்படியே  ஆபீஸ் கிளம்பறேன்
நீ மட்டும் சாயந்திரம் நேரே ஆஸ்பத்திரி வந்துரு
நானும் நேரடியா இங்கே வந்திடரேன் " என
இருவர் முகத்தையும் பட்டும்படாமலும் பார்த்துவிட்டு
உள்ளே ரிசெப்ஸன் பெண்ணிடம் டாக்டர் மெடிகல்
ரிபோர்டுடன் கடிதம் தருவதாகச் சொன்ன
 விஷயத்தைச்சொல்லி மாலையில் வந்து
 பெற்றுக் கொள்வதாகச் சொல்லிவிட்டு
 வண்டியை எடுத்து கிளம்புகையில்
வாசலில் கோவில் வீபூதியை கணேசனின்
நெற்றியில் பூசிக்கொண்டிருந்தாள் விஜி

இரண்டு நாள் அலுவலகம் செல்லாததால்
 அலுவலகத்தில்கொஞ்சம் வேலை அதிகம் இருந்தது
,எப்போதும் போலகவனமாக வேலை செய்ய
 இயலாமல் கணேசனின்நினைவும் வர வர
 என்னால் சரியாக எதிலும்
கவனம் செலுத்த இயலவில்லை

மதியம் மூன்று மணி அளவில் போன் செய்த கணேசன்
நாளை மறு நாள் சென்னை செல்வோம் என்றும்
ஒரு வாரம் லீவு சொல்லிவிட்டு வரும்படியும்.
தானும் ஒரு வாரம் லீவு சொல்லிவிட்டதாகவும்
சொல்லிவிட்டு தான் இன்று இரவு என் வீட்டில்
தங்க்கும்படியாக வருவதாகவும் என்னை மட்டும்
அப்படியே ஆஸ்பத்திரியில் ரிபோர்ட் வாஙகிக்கொண்டு
வரும்படியும் சொன்னான்.

அவன் பேசிய விதத்திலிருந்து அவன் குரலில் இருந்த
உறுத்டியைக் கொண்டு அவன் எதையும்
ஏற்றுக் கொள்ளுகிற பக்குவத்திற்கும் இந்த விசயத்தை
எப்படி டீல் செய்வது என்கிற முடிவுக்கு வந்துவிட்டான்
என்பதை நான் புரிந்து கொண்டேன்

நான் என் உயரதிகாரியிடம் கணேசன் என்பதை மட்டும்
எனது சித்தப்பா என மட்டும் மாற்றிச் சொல்லி
அவசியம் சென்னை செல்லவேண்டியதைச் சொல்லி
ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டேன்
அவரும் இன்னும் ஆறு மாதங்க்களில் ஓய்வு பெற
இருப்பதால் அவருடைய பென்ஷன் சம்பந்தமான
பேப்பர்கள் சென்னை உயர் அலுவலகத்தில் இருந்ததால்
அது குறித்தும் விசாரித்து வரும்படியும் சொல்லி
அவசரமில்லை பத்து நாளானும் இருந்து
நல்லவிதமாக பார்த்துவிட்டு வரச் சொல்லி
அனுமதி கொடுத்தார்

நான் மாலையில் அலுவலகம் முடிந்ததும் நேராக
அஆஸ்பத்திரி சென்று மெடிக்கல் ரிபோர்ட் மற்றும்
சிபாரிசுக் கடிதத்தையும் வாங்கிக் கொண்டு
டாக்டரிடமும் நாளை மறு நாள் சென்னை செல்லுகிற
விஷயத்தையும் தெரிவித்துவிட்டு அவசியமானால்
தொடர்பு கொள்வதாக செல் எண்ணையும்
வாங்கிக் கொண்டு வீடு வருகையில் மணி இரவு
ஒன்பதுக்கு மேலாகிவிட்டது

எனது வரவை எதிர்பார்த்து எங்கள் வீட்டு
உட்புற திண்ணையில் உட்கார்ந்திருந்தான் கணேசன்
நனறாகச் சேவிங் செய்து கலர் சட்டை அணிந்து
விபூதி அணிந்து  அவன் அமர்ந்திருந்ததைப்பார்க்க
காலையில் ஆஸ்பத்திரியில் பார்த்த கணேசனா என
எனக்கே ஆச்சரியமாக இருந்தது

அவன் அன்று அப்போது முதல் நடந்து கொண்ட
முறைகள் அதிசயமானதாகவும் வித்தியாசமாகவுமே
பட்ட எனக்கு அது அணையப் போகிற விளக்கின்
பிரகாசம் தான்  என
ஏனோ புரிந்து கொள்ள முடியவில்லை

(தொடரும் )


Saturday, June 8, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (7)

 எங்கள்  வீட்டில் எல்லோரும் ஒரு சிறு அசௌகரியம்
 என்றாலும் குடும்ப டாக்டரைப் போலவே
இந்த டாக்டரைத்தான்  பார்ப்போம் என்பதால் இந்த
டாக்டரின் குணாதியங்கள் எங்களுக்கு அத்துப்படி

அமெரிக்காவில் சில வருடங்கள் இருந்ததாலோ
என்னவோ அவரிடம்  முதன் முதலாக வருகிற
பேஸண்டை அனைத்து டெஸ்டுகளும் எடுத்து
வரச்  சொல்லி ஒரு ஃபைல் தயார்செய்து விடுவார்,
பின்னர்தான் வைத்தியத்தைத் துவங்குவார்

அந்த வகையில்தான் கணேசனுக்கும் செய்துள்ளார்
மற்றபடி பெரிதாக எதுவும் இருக்காது எனத் தான்
நானும் எண்ணி மறு நாள் கணேசனையும்
அழைத்துக் கொண்டு முதல் ஆளாக ஆஸ்பத்திரி
வந்திருந்தேன்

வரவேற்பு அறையில் இருந்த பெண்
என்னைக் கண்டதும் "டாக்டர் இன்று எட்டு
 மணிக்கெல்லாம் வந்துவிட்டார்
உங்கள் மெடிகல் ரிபோர்ட்டுகளையெல்லாம்
 அவர்டேபிளில்தான் உள்ளது,கொஞ்சம்
 வெயிட் பண்ணுங்கள்" என்றார்

கணேசனும் நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி
அதிகப் பட்சம் தனக்கு அல்சர் வேண்டுமானால்
இருக்கலாம்என்கிற அபிப்பிராயத்தில் இருந்ததால்
அவனிடத்தும் அதுபெரிய பரபரப்பில்லை

ஒரு அரை மணி நேரத்தில் டாக்டர் அழைப்பதாக
உள்ளிருந்த நர்ஸ் சொல்ல நாங்கள் இருவரும்
உள்ளே சென்று டாக்டருக்கு எதிராக இருந்த
 இருக்கையில் அமர்ந்தோம்

டாக்டர் சுற்றி வளைக்காமல் நேரடியாகக்
 கணேசனைப் பார்த்து "சொல்வதற்கு மனதிற்கு
 மிகவும்சங்கடமாகத்தான் இருக்கிறது,
கொஞ்சம் மனதைதிடப்படுத்திக் கொள்ளுங்கள் "
என்று சிறிது நிறுத்தி எங்கள் இருவரையும் ஆழமாக
ஊடுருவிப்பார்த்துவிட்டு பின் அவரே  தொடர்ந்தார்

"நேற்று உங்களிடம் விசாரித்து அறிகுறிகளைத்
 தெரிந்து கொண்ட வகையில்
நீங்கள்குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்
எனத் தெரிந்து கொண்டேன்.ஆயினும் இத்தனை
கடுமையாகப் பாதிக்கப் பட்டிருப்பீர்கள் என
நினைக்கவில்லை  "எனச் சொல்லி நிறுத்தவும்
நான் அதிர்ந்து போனேன்

கணேசன் பேயறைந்த பாவனையில் உடல் நடுங்க
என்னைப் பார்த்தான்.நான் வலது கையால் அவன்
உள்ளங்கையை அழுத்திப்பிடித்தபடி டாக்டரைப்
பார்த்தேன்

டாக்டர் கொஞ்சம் கவலைத் தோய்ந்த குரலில்
"மூன்று ஆண்டு காலமாக அது சிறிது சிறிதாக
உள்ளே வளர்ந்து வந்திருக்கிறது,லேசான குறிப்பையும்
அவ்வப்போது காட்டியும் வந்திருக்கிறது.
நீங்களே மருத்துவராகி அது இந்த நோய்தான் என
நீங்களாகவே முடிவு செய்து சுயவைத்தியம் பார்த்து .
நோயை முற்ற வைத்திருக்கிறீர்கள்.

வண்டி ஓடாமல்  போனால்தான்
மெகானிக்கிடம் போகிற மாதிரி , உடல் அதிகம்
தாங்கமுடியாமல் போனால்தான் இப்போது மாதிரி
ஆஸ்பத்திரி வருகிறீர்கள்.படிக்காதவர்கள்தான்
அப்படி இருக்கிறார்கள் என்றால் படித்தவர்களும்
அப்படித்தான் இருக்கிறீர்கள் "என்றார் வருத்தத்துடன்

கணேசனின் மொத்த உடலும் நடுங்குவதும்
லேசாக துவங்கிய விசும்பல் ஒலி கொஞ்சம் கூடத்
துவங்கியதும் என் கண்களும் கலங்கத் துவங்கிவிட்டது

நான் துக்கத்தை அடக்கியபடி "டாக்டர்
இவனுக்கு நிச்சயம் வரச் சந்தர்ப்பமில்லை
அனைத்து விஷயங்களிலும் அத்தனை
சரியாக இருப்பான்என்ன செலவானாலும்
 இன்னொருமுறை டெஸ்ட் எடுத்துப்
பார்த்துவிடலாம டாக்டர்."என்றேன்

"நீங்கள் இப்படியெல்லாம் யோசிப்பீர்கள்
பேசுவீர்கள் எனத் தெரிந்துதான்.கொஞ்சம்
அதிர்ச்சியாக இருந்தாலும் பரவாயில்லையென
நோயின் வீரியம் உங்களுக்குத் தெரியவேண்டும்
என சுற்றி வளைக்காது பேசினேன்

சுத்தபத்தமாக இருப்பதற்கும் மிகச் சரியாக
வாழ்வதற்கும் புற்று நோய்க்கும் சம்பந்தமில்லை
அது செல்லுக்கு நேரும்  கிறுக்குத்தனம்
அதனால் வரும் அதிகப்படியான வளர்ச்சி
இந்த நிலையில் அது குறித்து நான் அதிகம்
விளக்குவதும் கஷ்டம்
நீங்கள் புரிந்து கொள்வதும் கஷ்டம்.

இந்த நிலையில் இந்த  நோய்க்கும் நம்மூரில்
வைத்தியம்பார்க்க போதுமான வசதியும் இல்லை
சிறப்பு வைத்தியர்களும் இல்லை.
உடன் தாமதம் செய்யாமல் சென்னை
அடையார் மருத்துவமனைக்குச் செல்லமுயலுங்கள்
சிறப்பு மருத்துவர் என் நண்பர்தான்
அவருக்கு ஒரு சிபாரிசுக் கடிதமும் தருகிறேன்
இந்த ரிபோர்ட்டையும் உடன் எடுத்துச் செல்லுங்கள்
கூடுமானவரையில் தாமதம் செய்ய வேண்டாம்
ஏனெனில் இந்த நிலையில் இரண்டாண்டுகளுக்கு
முன்பு  பாதிக்கப்பட்டு அடையார் புற்று நோய்
மருத்துவமனைக்குச் சென்றவர் இப்போதும்
சௌக்கியமாக இருக்கிறார் "என நம்பிக்கையூட்டி
முடித்தார்

இதற்கு மேலும் டாக்டரின் நேரத்தை வீணடிக்க
விரும்பாமல் கணேசனின் கைகளைப் பற்றியபடி
மருத்துவமனைக்கு வெளியே வந்தேன்

தன் கணவனுக்கு பெரிதாக எந்த நோயும்
இருக்கக் கூடாது ஒருசாதாரண வயிற்று வலியாகத்தான்
இருக்கவேண்டும் என வேண்டிக் கொள்வதற்காக
பெருமாள் கோவில் போன நண்பனின் மனைவி
கையில் பிரசாதப் பையுடன் ஆட்டோவை விட்டு
இறங்கி எங்களை நோக்கி
வேகமாக எதிரே வந்து கொண்டிருந்தார்

(தொடரும் )


Wednesday, June 5, 2013

எமனோடுவிளையாடி எமனோடுஉறவாடி /6/

கணேசனுக்கு டாக்டர் பிளட் ,யூரின் ,எம் ஆர்.ஐ
ஸ்கேன் என அனைத்து டெஸ்டும் எடுக்கச் சொல்லி
எழுதி இருந்தாலும் பயாப்ஸி டெஸ்ட் எழுதி
இருந்ததற்காக நான் கலக்கம் கொண்டதற்கு
காரணம் இருந்தது.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்
எனது சித்தப்பா ஒருவர் புற்று நோய் கண்டு
இறந்து போனார்.முதலில் அவருக்கு வயிற்று வலி
என்று பல நாள் வைத்தியம் பார்த்தார்கள்
பின் அது சரியாகவில்லை என்று மதுரை
பெரிய ஆஸ்பத்திரியில் வைத்துப் பார்த்ததில்
வயிற்றில் ஒரு கட்டி இருக்கிறது எனச்
சொல்லி அது ஒரு வேளை புற்று நோயாக
இருக்கலாம் எனச் சொல்லி அதை டயக்னஸ் செய்ய
பயாப்ஸி டெஸ்ட் எடுக்கவேண்டும் எனச்
சொன்னார்கள்.

அப்போது அதற்கான வசதி மதுரையில்
மெஷின் ஆஸ்பத்திரியில் மட்டும்தான் இருந்தது.
அப்போது என்னை அவர் கூட துணைக்கு
இருக்கச் சொன்னதால் பயாப்ஸி டெஸ்ட் என்றால்
புற்று நோய் குறித்து அறிவதற்கான டெஸ்ட்
 எனமட்டும்என் மனதில் பதிந்து போய் இருந்தது.
எனக்குஅரைகுறையாக தெரிந்திருப்பது கூட
மருத்துவமனை விவகாரங்கள் எதுவும் கணேசனுக்குத்
தெரியாததால் என் பயம் கூட அவனிடம் இல்லை.
காசு பிடுங்குவதற்காக எல்லா டெஸ்டும்
எடுக்கச் சொல்கிறார்கள் மற்றபடி அதிகப் பட்சம்
தனக்கு அல்ஸர் இருக்கலாம் என்கிற அபிப்பிராயத்தில்
அவன் இருந்தான்

மறு நாளும் நான் அலுவலக்த்திற்கு லீவு
கொடுத்திருந்ததால் நானே காலையில் ஆறு மணிக்கு
கணேசனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று
மாலை வரை உடன் இருப்பது என்றும்
நண்பனின் மனைவி குழந்தைகளை பள்ளிக்கு
அனுப்பும் வேலைகளை முடித்து விட்டு மதியம்
சாப்பாடு இருவருக்கும் சேர்த்து எடுத்துக்
கொண்டுவருவது என்றும் ஏற்பாடு செய்து கொண்டோம்.
கணேசன் அடுத்த வருடம் வீடு கட்டுகிற எண்ணத்தில்
கஷ்டப்பட்டு ஒரு நான்கு லட்சம் ரூபாய்
சேர்த்து வைத்திருந்தபடியால் பணம் குறித்தும்
அவ்வளவாகப் பிரச்சனையில்லை.டெஸ்ட் எல்லாம்
மதியத்திற்குள் முடிந்துவிடும் என நாங்கள்
எதிர்பார்த்ததற்கு மாறாக மாலை வரை நீண்டுவிட்டது

"நாளைக் காலை டெஸ்ட் ரிபோர்ட் எல்லாம்
டாக்டரிடம் சேர்ந்துவிடும்.நாளைக் காலையில்
டாக்டரைச் சந்தியுங்கள் "என லேப் மேனேஜர் சொல்ல
ஆஸ்பத்திரி விட்டு வெளியே வந்தோம்
உண்மையில் ஒரு நாள் உள்ளே இருந்து வந்ததுகூட
ஏதோ பல நாள் நரகத்தில் இருந்து வெளியே வருவது
போலத்தான் இருந்தது

சும்மா இருந்த எனக்கே இவ்வளவு அலுப்பு எனில்
அவனுக்கு அதிகம் இருக்கும் என்பதால் உடன்
எதிரில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு
ஆட்டோ பிடித்து அமரவைத்து

"நாளைக் காலையில் சீக்கிரம்  டாக்டரைப்
பார்க்கும்படியாக டோக்கன் போட்டுவிடுகிறேன்
நீங்கள் இருவரும் நேரடியாக ஆஸ்பத்திரி
வந்து விடுங்கள்.நானும் இருந்து பார்த்துவிட்டு
அப்படியே அலுவலகம் சென்றுவிடுகிறேன்"என்றேன்

நண்பன் சரியெனத் தலையாட்ட நண்பனின்
மனைவியோ "அண்ணே தப்பா நினைச்சுக்காதீங்க
மனசு கொஞ்சம்  சரியில்லை
நாளைக்கு  டாக்டர் இவருக்கு ஒன்னுமில்லை
வெறும் வயித்து வலிதான்னு சொன்னா
திருப்பதி வர்றதாக வேண்டிக்கிட்டு இருக்கேன்
ஆஸ்பத்திரிக்கு  வருவதற்கு முன்னால
எங்க வீட்டுப்பக்கம் உள்ள பெருமாள் கோவிலுக்குப்
போயிட்டுவந்தால் மனசுக்கு கொஞ்சம் தெம்பாயிருக்கும்
ஆகையாலே நாளைக்கும் நீங்களே கூட்டிக்கிட்டு
வந்திருங்க .நான் கோவிலுக்குப் போயிட்டு உங்களுக்கு
முன்னால நான் இங்கே வந்திடறேன் " என்றார்

அவர் சொல்வதும் எனக்கும் சரியெனப்பட்டது
"சரி அப்படியே செய்வோம் " எனச் சொல்லிவிட்டு
நானும் எனது வண்டியில் கிளம்பினேன்

போன ஜென்ம வினையோ அல்லது
இந்த ஜென்மத்தில் அறியாமல் செய்த பெரும்பிழையோ
எது எனத் தெரியவில்லை.

ஆண்டவன் என நண்பனுக்கு எதிராகத்தான் இருந்தான்
என்பது மறு நாள் டாக்டரைப் பார்த்ததும்தான் தெரிந்தது

(தொடரும் )

Tuesday, June 4, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (5)

அன்று இரவு வயிறு வலி கொஞ்சம்
குறைந்திருந்ததாலா  அல்லது பேச்சு சுவாரஸ்யத்தில்
வயிற்று வலியை கணேசன் மறந்திருந்தானா
எனத் தெரியவில்லை.இரவு வெகு நேரம்
நாட்டு நடப்பு மற்றும் அப்போது வெளியாகி
பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த ஒரு புதிய இயக்குநர்
திரைப்படம் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம்
அப்படியே மறு நாள் டாக்டரின் செல்வதற்கான
ஏற்பாடுகளை நான் செய்து விடுவதாகவும் அவன்
ஒன்பது மணிக்கு வீட்டில் கிளம்புவதற்குத் தயாராக
மட்டும் இருக்கும்படியாகச் சொல்லிவிட்டு வந்தேன்

எனது வீடும் கணேசன் வீடும் ஆஸ்பத்திரியும்
இரண்டு கிலோ மீட்டர் வித்தியாசத்தில் வேறு வேறு
திசையில் இருந்தன,நான் காலை எட்டு மணிக்கு
ஆஸ்பத்திரிக்குச் சென்று டோக்கன் போட்டுவிட்டு
(காலையில் நாற்பது மாலையில் ஐம்பது அல்லது
அறுபது நோயாளிகளை மட்டுமே அந்த டாக்டர்
பார்ப்பார்,டோக்கன் போடவில்லையெனில்
பார்ப்பது கடினம் )  அவன் ஹோட்டலில்
சாப்பிடமாட்டான் என்பதால் வீட்டிற்கு வந்து
இட்லி பார்சல் மற்றும் தண்ணீர் பாட்டில்
எடுத்துக் கொண்டு அவன் வீட்டிற்குச் சென்று
அவனை டூவிலரில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரி
வரவும் எங்கள் டோக்கன் நம்பர் வரவும்
சரியாக இருந்தது

டாக்டரிடம் என் நண்பனை அறிமுகம் செய்துவிட்டு
ரூமை விட்டு வெளியேறப்போன என்னை உள்ளேயே
இருக்கும்படிச் சொல்லிவிட்டு அவனை அந்தப்
பரிசோதனை மேஜையில் படுக்கவைத்து
வயிற்றுப்பகுதியை ஒவ்வொரு இடமாக
அழுத்தத் துவங்கினார்,சிறிது நேரம் பல்லைக்
கடித்துக் கொண்டு வலியைப் பொறுத்துக் கொண்டு
வலிக்கிறது  என மட்டும் ஜாடை
காட்டிக் கொண்டிருந்தவன் அடிவயிற்றில் டாக்டர்
அழுத்தத் துவங்கியதும்  வலி பொறுக்காது
சப்தமாக  கத்தத் துவங்கிவிட்டான்.

பின் அவனை அருகில் அமரவைத்து
இரண்டாண்டுகளாக வலி வந்து போகிற விஷயம்
இப்போது சில நாட்களாக அதிகமாக
வலி வருகிற விஷயம்
குரலில் மற்றும் எடையில்  ஏற்பட்டுள்ள மாற்றம்,
ஆறாத புண், உணவுப் பழக்கம் மற்றும்
தூக்கப் பழக்கத்தில்ஏற்பட்டுள்ள
மாறுதல்களையெல்லாம் என்னிடமும்
அவனிடமும் மாறி மாறிக் கேள்வி கேட்டு
குறித்துக் கொண்ட  டாக்டர் முடிவாக......

" நாளைக் காலை வெறும் வயிற்றுடன்
ஆறு மணிக்கெல்லாம் ஆஸ்பத்திரி வந்து
நான் குறிப்பிட்டுள்ள டெஸ்டுகளையெல்லாம் லேபில்
எடுத்துவிடுங்கள் மாலையில் எல்லா ரிபோர்ட்டும்
என் கைக்கு வந்து விடும்.நீங்கள் அவசியம்
நாளை மாலை என்னைப் பாருங்கள்
தாமதப் படுத்தவேண்டாம் " என கொஞ்சம்
அழுத்தமாகச் சொன்னதும்  அந்த டெஸ்டுக்கான
பட்டியலில் "பயாப்ஸி "டெஸ்டும் இருந்ததும்
எனக்குள் லேசான கலக்கத்தை உண்டாக்கிப் போனது

(தொடரும் )

Sunday, June 2, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி ( 4)

நாங்கள் சப்தம் போட்டுச் சிரிப்பதை வினோதமாகப்
பார்த்துக்கொண்டிருந்த மீனாட்சி கொஞ்சம் குரலைத்
தாழ்த்தி "நான் ஏதும் தப்பாகப் பேசிவிட்டேனா ?
என்றார்

"நீ எல்லாம் சரியாகத்தான் பேசினாய்.நாங்கள்
சிரித்ததற்குகாரணம் வேற "என்றான் கணேசன்

"அப்போ இவ்வளவு நேரம் வலின்னு துடிச்சது
நிஜமா பொய்யா "என்றார் சற்று எரிச்சலுடன்

"வலிச்சதும் நிஜம் சந்தோஷமாய் சிரிச்சதும் நிஜம்"
என்று கணேசன் சொன்னதும்  மீனாட்சி சற்று
கோபத்துடன் முறைத்துப்பார்த்துவிட்டு வீட்டிற்கு
உள்ளே போக ,குழந்தைகளும்  எங்கள் இருவரையும்
ஏதோ வினோத ஜந்துக்களைப் பார்ப்பதுபோலப்
பார்த்தபடி  உள்ளே சென்றனர்.

நான் அருகில் இருந்த சேரை இழுத்து அவனருகில்
போட்டு அமர்ந்தபடி "இப்போ சொல்லுடா
உனக்கு என்ன பண்ணுது "என்றேன்

"உனக்குத்தான் தெரியுமே எனக்கு அப்ப அப்ப
உஷ்ணத்தாலே லேசாக வயித்து வலி வர்றதும்
வெந்தயம் மோர் சாப்பிடச் சரியாப் போறதும்,
போன வாரமும் இப்படித்தான் முதல்லே
லேசா வலிக்க ஆரம்பிச்சது ராத்திரி நேரமாக நேரமாக
ரொம்ப அதிகமாயிடுச்சு வெந்தயம் மோர் குடிச்சு
சுடு தண்ணிஒத்தடம் குடுத்தும் எது பண்ணியும்
சரியாகலை. மறு நாள் காலையிலே முதல் வேலையா
மந்தை டாக்டர் கிட்டே போய் வலிக்கு ஊசி போட்டதும்
அவர் குடுத்த மருந்தைச் சாப்பிட்டதும்தான் நின்னது
ஆனா என்னவோ அன்னையிலே இருந்து சரியா
சாப்பிட முடியலை தூக்கமும் இல்லை
சரி வீக்னஸ் சரியாப் போகும்னு பார்த்தா
இப்ப சாயந்திரம் திரும்ப வலிக்க ஆரம்பிச்சுடுச்சு
வாந்தி வேற என்ன செய்யறதுன்னு முழிச்சிக்கிட்டு
இருக்கிறப்பத்தான்நல்ல வேலை நீ வந்தே " என்றான்

இவன் உசிலம்பட்டியில் ஒரு வாரிய அலுவலகத்தில்
அக்கௌண்டெண்டாக வேலைபார்த்து வந்தான்.
அலுவலகத்திற்கு தினமும் வீட்டிலிருந்து டூவீலரில்
ஜங்ஷன் போய் பின் டிரெயின் பிடித்து
அலுவலகம்போய் சீட்டில் பத்து மணிக்கு அமர்ந்தால்
 மதியம்ஒரு  மணிவரை டைட்டாக வேலை இருக்கும்
பின் இரண்டுமணிக்கு சீட்டில் அமர்ந்தால் மாலை
ஆறுமணிவரை வேலை கடினமாக இருக்கும் என்பான்

எல்லோரையும் போல இடையிடையே டீ குடிக்க
காப்பிக் குடிக்க தம்அடிக்க  என எழுந்து செல்லும்
பழக்கம் இல்லாததாலோ என்னவோ அடிக்கடி
உடம்பில் சூடேறி வயிறு வலிக்கும் எனவும் சொல்வான்

அதுபோன்ற சமயங்களில் பகலானால் கடையில்
இள நீர் குடிப்பதும் இரவானால் வீடானால்
பெருங்காயம் கரைத்த மோரோ, வெந்தயம் மோரோ
குடித்தால் சரியாகிப் போகும் எனச் சொல்லியுள்ளான்
இதுவரை உணவுக் கட்டுப்பாட்டையும் தூக்கத்தையும்
மிகச் சரியாகக் கடைபிடிப்பதால்தான் டாக்டரிடம் போக
அவசியம் நேர்வதில்லை என்பதையும் எப்போதும்
பெருமையாகச் சொல்வான்

"இப்பவும் ஒன்னும் பிரச்சனையில்லை
ஹீட் தொந்தரவாகத்தான் இருக்கும்,
இதுவரை என்னைப்போல் நீ அடிக்கடி டாக்டரிடம்
போனவனில்லை.முதன் முதலாகப் போனதாலும்
நானும் லூசுமாதிரி ஏதோ பேசிவிட்டதாலும்
உனக்கு மனசுக்குள்ள ஏற்பட்ட சங்கடத்தால்தான்
இப்ப அதிகமாக வலிப்பது போல இருக்குன்னு
நினைக்கிறேன்.அதனால் உன் மன,என் மன
ஆறுதலுக்காகவாவது நாளை எங்க குடும்ப
டாக்டரிடம் போவோம்

அவர் ரமணா டாக்டர் மாதிரி இல்லை
மிகச் சரியாக டையக்னைஸ் செய்வார்.
நீ இரண்டு நாள் லீவு போடு நானும் போடுகிறேன்
ஒன்றுமில்லை எனத் தெரிந்து மனசு
சரியாகிப்போனாலேஉடம்பும் சரியாகிப் போகும் "
என்றேன்

வலி அதிகமாக இருந்ததாலோ அல்லது
வயது நாற்பதைத் தாண்டி விட்டதால் அவனும்
ஒருமுறை ஒட்டுமொத்த செக்கப் செய்து கொள்வது
நல்லது என நினைத்தானோ என்னவோ அவனும்
இதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டான்
.
இதற்குப் பின்னால் தொடர்ந்த நிகழ்வுகள் குறித்து
மிக லேசாகவேனும் அவனுக்கோ எனக்கோ
ஒரு சிறு குறிப்போ கற்பனையோ ஒரு கனவோ
தோன்றி இருந்தால் கூட நிச்சயம் நோயுடனே
வலியுடனே கூட சில நாட்கள் வாழ்ந்திருந்து
செத்துத் தொலைத்திருக்கலாம் இந்தப் பரிசோதனைச்
சனியனைச் செய்து கொண்டிருக்கவேண்டாம் என
நிச்சயம் முடிவெடுத்திருப்போம்

(தொடரும் )