தோழர் வாசு சுருக்கமாகச் சொன்னாலும்
அழுத்தமாகச் சொன்னது எங்கள் சிந்தனையில்
ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத்தான் செய்தது
பின் நாங்கள் மீண்டும் கூடி நம்மை
எழுத்தாளர்களாகக் காட்டிக் கொள்ள
எழுதுவதை விட நம் எழுத்து
பயன் தரத்தக்கதாக இருக்க எழுதுதலே
சிறப்பு என முடிவுக்கு வந்தோம்.
முன் அட்டைபடம் சிறப்பாக இருந்தால்தான்
புத்தகத்தை கையில் எடுக்கும் ஆர்வம் வரும்
எனக் கருதியதால் முதல் கைப்பிரதிக்கான
அட்டைப்படத்தை ஓவிய ஆசிரியரையே
வரையச் செய்தோம்..அவர் நெற்கதிர்க்கட்டைச்
சும்ந்துவரும் பெண்ணின் படத்தை
அருமையாக வரைந்து கொடுத்தார்
இலக்கியம் ஓர் அறிமுகம் என்ற
கட்டுரையை சேதுப்பாண்டியம் எழுத
ஒரு அற்புதமான சிறுகதையை காண்டீபன் எழுத
நான் பதினாறு வரிகள் வரும்படியாக
எனது முதல் கவிதையை எழுதினேன்
தோழர் வாசு ஊரின் தேவைகள் குறித்து
ஒரு விரிவான கட்டுரை எழுதிக் கொடுத்திருந்தார்
அதில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியை கேட்க
டவுன் பஞ்சாயத்துக்கு வரும் பொது மக்கள்
நின்று கொண்டே கேடக வேண்டிய அவலம்
போக்க உட்கார்ந்து கேட்க சிமெண்ட் இருக்கைகள்
போட்டுத் தரவேண்டும்/ எடுப்புக் கக்கூஸை மாற்றி
கோப்பை பதித்துத் தரவேண்டும் என்பது போன்ற
ஊருக்கான அடிப்படை விஷயங்கள் குறித்து எழுதினார்
(பின்னாளில் இது பொது கோரிக்கைகளாக
அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்பட்டு
நிறைவேற்றப்பட்டது எங்களுக்கு அதிக
மகிழ்வளித்தது)
அனைவரும் எழுதிக் கொடுத்ததை ஒன்று
சேர்த்து கையெழுத்து நன்றாக இருக்கக் கூடிய
இரண்டு மாணவர்களிடம் கொடுத்து எழுதி வாங்கி
பின் அனைத்தையும் வரிசை கிரமமாக அடுக்கி\
முன் பக்கம் ஓவியம் தெரியும்படியாக வண்ண
பிளாஸ்டிக் ஒட்டி..... பைண்ட் செய்து.
இப்படி எல்லாவற்றையும் எல்லோருமாகச்
சேர்ந்து ஏப்ரல் இருபத்தைந்துக்குள் செய்து முடித்து
மே ஒன்று அன்று ஊரில் ஊர்வலம் கொடியேற்றுதல் முதலான நிகழ்வுகள் தோழர் வாசுவுக்கு இருக்கும் என்பதால்
இரண்டாம் தேதி நூலகத்தில் வெளியிட்டோம்
நூலகத்திற்கான பிரதியை தோழர் வாசு
வெளியிட நூலகர் பெற்றுக் கொண்டார்
வெளிச் சுற்றுக்கான பிரதியை நூலகர் வெளியிட
தோழர் வாசு பெற்றுக் கொண்டார்
நாங்கள் அனைவரும் சுற்றி நின்று
கைதட்டி ஆரவாரம் செய்ய எங்கள்
கைப் பிரதிக்கான பெரும் முயற்சி
மிகச் சிறப்பாக அரங்கேறியது..
நூலகத்திற்கான பிரதியை நூலகர்
என் கையில் கொடுத்து ரவுண்ட் சீல்
போடச் சொன்னார்..
நூலகத்திற்கு அப்போதெல்லாம் வார
மாத இதழ்கள் தபாலில் தான் வரும்
நூலகத்திற்கான கடை நிலை ஊழியர்
வயதானவர் என்பதால் பெரும்பாலும்
வரமாட்டார்..அப்படி வருகிற நாட்களில் கூட
தாமதமாகத் தான் வருவார்.
நூலகர் வருகையில் வாயிலில் இருப்பவன்
பெரும்பாலும் நானாகத்தான் இருப்பேன்
அவர் வந்ததும் சாவி வாங்கித் திறந்ததும்
உள்ளே விழுந்து கிடந்த வார மாத இதழ்களின்
கவர் கிழித்து அது நூலகப் புத்தகம் என்பது
தெரியவேண்டும் என்பதற்காக ரவுண்ட்சீல்
முன்பக்க அட்டை மற்றும் இடை இடையே
அடித்து வைப்போம்.பெரும்பாலும்
இதை நான் தான் செய்வேன்,
இப்போது நான் எழுதிய கவிதையைத் தாங்கிய
கைப்பிரதியில் ரவுண்ட் சீல் நானே
அடித்த நொடியில் கிடைத்த மகிழ்ச்சியை
நிச்சயம் சொல்லால் விளக்க முடியாது
முன்பக்கம் பின்பக்கம் அடித்ததோடு என் கவிதை
இருந்த பக்கமும் அடித்து நூலகர் கையில்
கையில் கொடுக்க நடந்தபெருமித நடை
இப்போதும் நினைவில் காலத்தால்
மங்காத ஓவியமாய் மின்னிக் கொண்டுதான் உள்ளது
என்றால் மிகையில்லை
கைப்பிரதியை பெற்றுக் கொண்ட நூலகர்
நான் முழுவதும் படித்து விட்டு என்
விரிவான விமர்சனத்தை பின் பக்கம் காலியாக
விடப்பட்டுள்ள பக்கத்தில் நாளை
பதிவு செய்துவிடுகிறேன். எனச் சொல்ல
சிறிது நேரம் பொது விஷயங்கள் குறித்து
கல்ந்து பேசி விட்டுக் கலைந்தோம்
மறு நாள் அவருடைய விமர்சனத்தில்
என்னுடைய கவிதை குறித்து என்னவாக இருக்கும்
என்கிற ஆர்வம் இரவெல்லாம்
என்னைத் தூங்கவிடவில்லை
( தொடரும் )